வெள்ளி, மார்ச் 24, 2006

தோற்றம் நிலக்குப் பொறை


நில்லாமல் சுழல்கின்ற உலகம் ஈதாம்
நீங்காமல் இரவுபகல் வந்து போகும்
பல்வகையாம் உயிரினங்கள் மறையும் தோன்றும்
எண்ணற்ற மாற்றங்கள் ஆகும் போகும்
நல்லவையும் தீயவையும் நிற்கும் மாறும்
நிலையாக எதுவுமில்லை சுழலும் மண்ணில்
நில்லாமை எனும்தத்துவம் ஒன்றே நிற்கும்
நீடுபுகழ் அதனோடு சேர்ந்தே வாழும் 1


கடிகாரக் கால்கள் நிற்காது ஓடும்
கவனமாய்ப் போட்டியிடும் மனித உள்ளம்
அடிமையாய்ப் பணமிருக்கும் இடத்தை நாடும்
ஆனாலும் அரைக்காசு காணா துண்மை
அடிமுடியாய்த் தேடியோடி கிடைக்கும் காசு
அப்படியே குவிக்கமனம் திட்டம் போடும்
முடிவொன்றே இல்லாமல் சேர்க்கும் காசு
முடிவிலா பூதம்காக்கும் புதையல் ஆகும் 2


பெட்டிபெட்டியாய்ப் பணஞ்சேர்த்துப் பயனும் என்ன?
பெருமையால் பிறருக்கு ஈதல் வேண்டும்
வட்டிக்கு வட்டிகூட்டி பயனும் என்ன?
வாழ்க்கைக்கு வசதிபெருக உதவ வேண்டும்
பூட்டுமேலே பூட்டிட்டு பயனும் என்ன?
பிள்ளைகள் வாழ்க்கைக்கு ஆக வேண்டும்
கட்டுக்கட்டாய் பணமிருந்தும் பயனும் என்ன?
கவலையின்றி அனுபவிக்க மனந்தான் வேண்டும் 3


எண்ணியெண்ணிக் காசுகளை முடிந்து வைத்தால்
ஏக்கங்கள் கூடிவிடும் மகிழ்ச்சி ஏது?
கண்போலே சேர்த்திட்ட காசை எல்லாம்
கணக்காகச் செலவழித்தால் இன்பம் உண்டு
மண்வாங்கி மனைகட்ட வசதி சேரும்
மகிழ்வுந்து பயணத்தால் மகிழ்ச்சி கிட்டும்
பெண்மணந்து பிள்ளைபெறப் பேறு உண்டு
பணமிருந்தால் இவையெல்லாம் நமது ஆகும் 4


ஆனிப்பொன் அணிசெய்தால் பூண்பது அழகு
அணைந்தபொருள் அனுபவித்தல் அழகிற் கழகு
இனிப்பென்றால் தந்துண்பது நல்ல இன்பம்
ஈகையே உலகினர்க்கு இன்பத்து ளின்பம்
கனிமரமாய் ஊருக்குள் நிற்றல் மேன்மை
கருதாது அளிப்பது மேன்மைக்கு மேன்மை
தனியாக வாழ்வது யாருக்கும் வன்மை
தளராது ஈதலே வன்மைக்கு வன்மை 5


முப்பாலீந்த முழுப்புலவர் வள்ளுவ ஆசான்
முறையாகச் சொல்லிட்டார் அதனைக் கேளீர்
முப்போதும் பொருள்சேர்த்துத் தானும் உண்ணாது
மகிழ்வாகப் பிறர்க்கும் கொடாத செல்வம்
எப்போதும் அதுநன்றியில் செல்வம்? என்றார்
எளிமையாய் வாழ்ந்தாலும் பிறர்க்குத் தந்துத்
தப்பாது வாழ்ந்திருத்தல் இன்ப வாழ்வாம்
வறுவது பூமிக்கு எடையாம்? ஓரீர். 6
கருத்துரையிடுக