முனைவர் மு.பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, திருவாடானை
திருக்களர் ஆண்டவரின்
சீடர்களாக விளங்கியவர்கள் பலராவர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதுக்கள் இவரின்
சீடர்களாக விளங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் அண்ணாமலை என்பவர் ஆவார். இவர் இளம் வயதிலேயே துறவு கொள்ள விருப்பம் கொண்டவர்.
அவ்விருப்பத்தை மேலும் மேலும் கனிவித்து, உறுதிப் படுத்தி உரிய வயதில் இவர் துறவு கொள்ள
ஆச்சாரியர் ஆணை தந்தார். துறவும் கொண்டு ஆச்சாரியருக்குப்
பின் கோவிலூர் பட்டமும் ஏற்றுச் சிறந்தவர் சீர் வளர் சீர் அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகள்.
இராயவரம் பெற்ற வரம்
இராயவரத்தில் இரணிக்
கோயில் மரபில் தோன்றியவர் அண்ணாமலை ஞான தேசிகர்.
இவரைப் பெற்றவர்கள் நாச்சியப்பர், ஏகம்மை
ஆகியோர் ஆவர். இவர்களுக்கு நெடிது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது. இவரின்
இல்லத்திற்கு வருகை புரிந்து சிவனடியார் ஒருவர் திருவண்ணாமலைக்குச் சென்று, அவரை நாளும்
துதித்தால் புத்திரப் பேறு கிடைக்கும் என்று கூறினார். இதனை ஏற்று நாச்சியப்பரும் ஏகம்மையாரும்
திருவண்ணாமலைக்கு கார்த்திகை நட்சத்திரத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர். திருவிளக்குகள்
ஏற்றி வழிபட்டனர். இறைவன் கருணையால் அழகான ஆண்மகவு பிறந்தது. அண்ணாமலையாரின் கருணையால்
பிறந்த அந்தக் குழந்தைக்கு அண்ணாமலை என்றே பெயர் சூட்டினர்.
தேனிப்பட்டி கொண்ட வரம்
அண்ணாமலை நற்கல்வி கற்றுப் பல கலைகளிலும் தேர்ந்து வந்தார்.
அவரின் உள்ளத்தில் சிவஞானமும் கூடி வளர்ந்து
வந்தது. இவரை தேனிப்பட்டி நகரில் உள்ள அருணாசலம்,
உமையம்மை ஆகியோர் தத்துப் பிள்ளையாக எடுத்துக்கொண்டனர். இவரைத் தத்துப் பிள்ளையாக எடுத்துக்கொண்ட அருணாசலனார்
கோவிலூர் மடத்தில் வேதாந்தப் பாடம் கற்றுவந்தார். இதன் காரணமாக, கோவிலூர் மடத்திற்கு
அடிக்கடி செல்ல வேண்டியவரானார். இவருடன் தத்துப் பிள்ளையான அருணாசலமும் கோவிலூர் சென்று வேதாந்தம் கற்றுவந்தார்.
பர்மாவிற்குப் பலமுறை சென்று செல்வமும் சேர்த்து வந்தார்.
இல்லறமும் துறவறமும்
அண்ணாமலையாருக்குத் திருமண வயது வர திருமண ஏற்பாடுகளை அருணாசலனார் செய்தார்.
அண்ணாமலை தன் தந்தையிடம் திருமண பந்தம் வேண்டாம் என்று தவிர்த்துப் பார்த்தார். ஆனால் இல்லறம் ஏற்று, இல்லத்தில் இருந்து விருந்தோம்பல்
போன்ற பல தர்மங்களைச் செய்து அதன்பின் துறவு நோக்கம் ஏற்பட்டால் துறவிற்குச் செல்லலாம்
என்று சமாதானம் சொல்லி அண்ணாமலைக்கு அரிமழத்தைச் சார்ந்த உமையம்மை என்ற பெண்ணைத் திருமணம்
செய்து வைத்தார்.
இவரின் துறவு எண்ணம் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. சாக்கோட்டை
வீரசேகர உமையாம்பிகையை வணங்குவதும் அங்குள்ள
வேதாந்த மடத்தின் துறவி வீரப்பரை வணங்குவதும்
இவரின் வழக்கமாக இருந்தது. அவரின் வழியாக ஞான நூல்களையும் ஞான அனுபவங்களையும்
பெற்றார்.
இல்லறத்தின் பயனான குழந்தைப் பேறு இவருக்கும் வாய்க்காது
இருந்தது. இதன் காரணமாகவும், உறவினர்களின் ஏற்பாட்டின் படியும் இரமேஸ்வர யாத்திரையை
இவர் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை சென்று ஆலவாய் அண்ணலை இவரும் இவரின் மனைவியார், சுற்றத்தார் வணங்கினர்.
இப்பயணம் முடிந்த நிலையில் தன் மனையாளை ஊருக்கு அழைக்கும்போது அவர் உறவினருடன் வந்தோம்
அவர்களுடனேதான் திரும்ப வேண்டும் என்றார். அவரை உறவினருடன் வரவிடுத்துத் தான் மட்டில்
ஊர் வந்தார். வந்தவருக்கு இல்லறத்தை விட்டு விலகித் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற
எண்ணம் மேலெழுந்தது. தன் வளர்ப்புத் தாயார் கையில் பிச்சை பெற்று துறவு மேற்கொள்ளப்
புறப்பட்டார்.
கோவிலூருக்கு வந்து ஐந்தாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர்
வீரப்ப ஞான தேசிக சுவாமிகளிடம் அடைக்கலம் அடைந்தார்.
உடல் , பொருள், ஆவி அனைத்தையும் சற்குருவிடம் ஒப்படைத்து அங்கேயே உறைவதனார். பலமுறை
அவரிடத்தில் துறவு நிலை பெற வேண்டுகோள் வைத்தும் அது நிறைவேறவில்லை. சீடர் அண்ணாமலைக்குப்
பற்பல ஏவல்களை வழங்கினார். அதனைச் செவ்வையுடன் நிறைவேற்றி அடுத்த பணிக்குக் காத்திருந்தார்
அண்ணாமலையார்.
சற்குரு ஞானவாசிட்டம் தவிர அனைத்து வேதாந்த பாடங்களையும்
இவருக்குக் கற்பித்தருளினார். இவருடன் இவரின் இனிய தோழர் வெள்ளியங்கிரி சுவாமிகளும்
பாடங்களைத் தெளிவுடன் கற்று விவாதித்து வந்தனர். இருவரும் பாடம் சொல்லுவதில் வல்லார்
ஆயினர். இவரின் துறவு எண்ணத்தின் வலிமையை உணர்ந்த
சீர் வளர் சீர் வீரப்ப ஞான தேசிக சுவாமிகள்
இவரைத் திருவையாற்றுக்குச் செல்லக் கட்டளையிட்டு, அவரிடத்தில் துறவாடையைத் தந்து ”தட்சிணாமூர்த்தி
சன்னதியில் துறவு பூணுக ” என்றுரைத்தார். இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த அண்ணாமலையார்
திருவையாற்றுக்குச் சென்று அவ்வண்ணமே செய்து துறவேற்றார். திருவையாற்றைச் சுற்றியுள்ள பல தலங்களைத் தரிசித்து,
மீளவும் கோவிலூர் வந்து சேர்ந்தார்.
இவரிடம் கோவிலூர் மடத்தின் பல பொறுப்புகள் நிர்வகிக்கத் தரப்பெற்றன. இவரின் நன்னிலையை ஏற்று
இவருக்கு ஞானவாசிட்டம் சொல்லத் தொடங்கினார் வீரப்ப சுவாமிகள். ஞானவாசிட்டம் பாடம் கேட்டலின்
நிறைவு நிகழ்வைச் சிறப்பாக நடத்தினார் அண்ணாமலை சுவாமிகள். சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள்,
வளவனூர் மட சுவாமிகள், பொருள்வைத்த சேரி, சுப்பிரமணிய சுவாமிகள் ஆகியோர் இந்நிறைவிற்கு வருகை தந்துச் சிறப்பித்தனர்.
இதுமுதல் இரண்டாம் நிலை பாடம் சொல்லும் ஆசிரியராக அண்ணாமலை சுவாமிகள் ஏற்கப்பட்டார்.
தலயாத்திரை
இதன்பின் இவருக்கு தலயாத்திரை செய்ய குருவருள் ஆணை கிடைத்தது.
அதனைத் தலைமேல் ஏற்று இராமேஸ்வரம், கோகர்ணம்,
சிருங்கேரி, காசி, பிரயாகை, அயோத்தி, மதுரா, பிருந்தாவனம், துவாரகை, குருசேத்திரம்,
ஹரித்துவார், ரிசிகேஷ் , பத்ரிநாத், கேதாரம் போன்ற தலங்களைத் தரிசித்தார். இதனோடு வடமொழியிலும்
அறிவு பெற்று வேதங்களைக் கற்றுவந்தார். இறையருளும் குருவருளும் அழைப்பதாக இவருக்குத்
தோன்ற, கோவிலூருக்கு அண்ணாமலை சுவாமிகள் மீண்டார்.
கோவிலூருக்கு வந்தபின்பு மடத்துப் பணிகளும், ஆசாரியருக்கு
உதவும் பணிகளும் செம்மையுடன் நடந்து வந்தன. இந்நிலையில் திருக்களரில் சீர் வளர் சீர் வீரப்ப
சுவாமிகள் விதேக முக்தி அடைந்தார். அவரின்
சாமதி பிரதிஷ்டையை அண்ணாமலை சுவாமிகள் செய்து வைத்து குருபாதம் பணிந்தார்.
கோவிலூர் மடத்தின் ஆறாம் பட்டம்
இதன்பின் கோவிலூர் மடத்தின் அடுத்த பட்டத்திற்குத் தகுதியானவர்
அண்ணாமலை சுவாமிகளே என்று எல்லோரும் ஏற்க அப்பட்டத்திற்கு உரியவரானார் சீர் வளர் சீர்
அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகள். சுவாமிகள் குருபிரானின்
வழியில் தன் ஞானப் பாதையைத் தொடர்ந்தார்.
அருள்மிகு கொற்றவாளீசர் திருப்பணிகளிலும், மடத்தின் பணிகளிலும் இருந்த சவால்கள் பலவற்றை எதிர்கொண்டு சுவாமிகள்
திறம்பட சேவையாற்றினார். இவர் வேதாந்த பாடம் சொல்வதில் ஈடு இணையற்றவராக விளங்கினார்.
அந்தணர் முதலான அனைத்து குலத்தவர்களும் இவரின் அருள்மொழிகளைக் கேட்டு இவரைச் சரண்புகுந்தனர். இவருடன் ஒன்றாய் இருந்த
வெள்ளியங்கிரி சுவாமிகள் வியந்து போற்றும் வண்ணம் இவர் அருமைப் பாடம் போதித்தார்.
திருநெல்லை அம்மன் பவனி வர நடைபெற்றுவந்த திருத்தேர் பணிகளை முற்றுவித்து அம்மன்
உலா வரச் செய்தார். அருள்மிகு கொற்றவாளீசர்
பள்ளியறையைப் பிரித்து இப்போது இருக்கும் இடத்தில் அழகுடன் நிர்மானித்தார். திருக்களரில்
தன் குருவிற்குச் சிறப்பான ஆலயத்தை கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை
உள்ளடக்கி அக்காத்தில் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் அன்பர்கள் நிதி உதவி கொண்டு உருவாக்கினார். அங்கு
சாதுக்கள் தங்கி இருக்க மடம் கட்டுவித்தார். அருகில் இருக்கும் மருதவன ஆலயத்தினைச்
சீர்படுத்தி குடமுழுக்கு நடக்க உதவினார். இப்பணிகள் தொடர்ந்து நடந்து வர மடத்திற்கு
அருகில் காவிரி ஆற்றுப் பாசனத்தில் பத்தொன்பது வேலி நிலத்தை வாங்கி அதன் வருவாயில் திருக்களர் இறைவனின் நாள் பூசை அறத்தை நடக்க வைத்தார்.
இவரின் வழிபடு தெய்வமான சிதம்பரம் நடராசருக்கு சிதம்பரத்தின்
தனித்துவமான கொஸ்து, மற்றும் நித்திய அன்னப்பாவாடை
அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார். இதற்கு கோவிலூர்
மடம், கல்லல் மெ. ரா. வௌ குடும்பம், காரைக்குடி மெ.செ.ச குடும்பம் ஆகியன வைப்புநிதி
தந்தன. இடையில் தயக்கமாக இருந்து இக்கட்டளை
மீளவும் தற்போது சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகளால் ஏற்படுத்தப்பெற்று நடைபெற்றுவருகிறது.
மடத்தின் செலவுகள் கட்டுக்குள் அடங்கி அதிக அளவில் ஆண்டு
வருமானம் வரச் செய்த பெருமை இவர் காலத்தில் நடந்தது. இவர் காலத்தில் பிரம்ம வித்யா
பிரசாரண சபை நடத்தப்பெற்றது, கோவிலூர் ஆடிப் பூர உற்சவத்தின்போது இந்த சபை கூட்டப்பெற்று
மக்களுக்கும் இச்சபையின் வாயிலாக பிரம்ம ஞானம் கிடைக்க வழி செய்யப்பட்டது. இதற்கு மிகச்
சிறந்த ஞானவான்கள் அழைக்கப்பெற்று அவர்களுக்கு அக்காலத்தில் மிகப்பெரிய சன்மானம் வழங்கப்பெற்றது
வேதாந்த வெற்றிக் கொடி
வேதாந்த அறிவு பெருக்கும்
இச்சபைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. காரைக்குடியில் சில முரண்பட்ட கருத்துகள்
நிலவின. வேதாந்தம் பற்றி விமர்சனம் எழுந்தது.
இதனை மறுக்க முனைந்தார் சுவாமிகள். பலரும் இது வேண்டாத செயல். நிந்தை தானாக அழியும்
என்று சொன்ன நிலையிலும் சுவாமிகள் இதற்கு மறுப்பு செய்தாக வேண்டும் என்ற கருத்தினைக்
கொண்டார்.
சங்கரரின் ஆசி இருக்க, கவலை கொள்ளாது, காரைக்குடி விஜயதசமி மண்டபத்தில் மகா விராட் சபை என்ற ஒரு சபையைச் சீர் வளர் சீர்
அண்ணாமலை தேசிக சுவாமிகள் கூட்டினார். இதற்கு
சாதுக்கள், சாஸ்திரிகள், சுப்பைய ஞான தேசிகர் போன்றோர் வந்திருந்து வேதாந்த
வெற்றி விளக்கம் தந்தனர். இந்நாளில் சுவாமிகள் வேதாந்தத்திற்கு எதிர் கருத்துகள் சொல்வோரையும்
வரவேற்றார். மேலும் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களை வரச் சொன்னார் . எதிர்ப்பாளர்
எவரும் வரவில்லை. நிறைவு நாளில் ஜகத்குரு ஆதி
சங்கரரின் திருவுருவப் படத்தை அலங்கரித்துக் காரைக்குடி நகர் முழுவதும் உலா வரச்செய்து
வேதாந்த வெற்றிக் கொடியை நாட்டினார்.
இச்சமயத்தில் சிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள்,
நரசிம்ம் பாரதி சுவாமிகள் ஆகியோர்தம் சாமாதி ஆலயக் குடமுழுக்குவிழாவிற்கு அவர்கள் அழைத்ததன் பேரில் சீர்வளர் சீர் அண்ணாமலை
தேசிக சுவாமிகள் அடியார்கள், சீடர்கள் பலருடன்
சென்று வந்தார். இக்கோயில்களுக்கு நாகாபரணம்,
குவளை, தங்கத்தில் கல் இழைத்த உததிராக்க மகர கண்டிகை, ஆபரணங்கள் அளித்து மகிழ்ந்தார்.
மேலும் இவ்வாலயத்தில் நித்திய பூசைக்கு வைப்புநிதி தந்தார்.
அச்சகம் வைத்து அருள்நூல்கள் வழங்கியமை
வேதாந்த நூல்களைத் திருத்தமுடன் வெளியிட வேண்டும் என்று எண்ணிய
சுவாமிகள் இதற்காக ஓர் அச்சகத்தைக் கோவிலூரில் ஏற்படுத்தினார். இதன்வழி பல நூல்கள்
வெளிவந்தன. வீர. சுப்பையா சுவாமிகள், வீர. காசிகாநந்த சுவாமிகள், சி.சுப்பையா சுவாமிகள்
போன்றோர் பல நூல்களை எழுதி இதன்வழி வெளியிட வாய்ப்பு கிடைத்தது.
நிறைவு
இவ்வாறு சுவாமிகளின் அருளாட்சி எட்டு ஆண்டுகள் சிறப்புடன்
நடந்துவந்தது. அவர்களுக்குத் தனது முத்திக் காலம் தோன்ற தம்மிடம் பாடம் கேட்டுவந்த மகாதேவ சுவாமிகளை அழைத்து, அவரிடம் தன் படுக்கையில்
இருந்த எலும்பிச்சம்பழத்தைத் தந்து ‘‘கோவிலூர்
மடாலயத்தில இனி குருமூர்த்தமாக இருந்து, நடத்தி வரவேண்டியது” என்று கூறி அருளினார்.
சீர் வளர் சீர் அண்ணாமலை
ஞான தேசிக சுவாமிகள், 1919 ஆம் ஆண்டு
தமிழுக்கு, சித்தார்த்தி ஆண்டு வைகாசி மாதம் எட்டாம் நாள் பரிபூரணம் அடைந்தார். இவரின் அருட்கோயில் கோவிலூர் மடத்தினில் உள்ளே அமைந்துள்ளது.
அதனைத் தரிசித்து அன்பர்கள் நலம் பெறுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக