திங்கள், பிப்ரவரி 12, 2018

(விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்)


ஆனந்த யாழை மீட்டிய விபுலாநந்த அடிகளார்.


முனைவர் மு.பழனியப்பன்,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி
திருவாடானை, 623407,
9442913985

       யாழ்நூல் யாத்த பெரும்புலவர் விபுலாநந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம்  இலக்கிய வரலாற்று ஆவணமாகத் தற்போது வெளிவந்துள்ளது. இப்படைப்பினைப் பெருமையுடன் வயல்வெளித்திரைக்களம்  வெளியிட்டுள்ளது. இவ்வாவணப் படத்தின் எழுத்து, எண்ணம், இயக்கம் அத்தனைக்கும் உரியவர் இளம் செம்மொழி அறிஞர் மு. இளங்கோவன் ஆவார்.  இவரது இனிய குரலாலும் ஆவணப்படம் அழுத்தம் பெறுகிறது. 

    இமயம் முதல் குமரி வரை என்ற இந்திய எல்லையை விபுலாநந்த அடிகளாருக்காகச் சற்று மாற்றி அமைக்க வேண்டும். இமயம் முதல் இலங்கைக் காரைதீவு வரை என்பதே அந்த எல்லையின் விரிவாக்கம். அடிகளாரின் வாழ்க்கைப் பயணம் இலக்கியத் தேடல் பயணமாக, கல்வி பரப்பும் பயணமாக, இராமகிருஷ்ண போதனைகளை விளக்கும் பயணமாக இமயம் முதல் இலங்கை வரை நிகழ்ந்துள்ளது. 

இமயம் முதல் இலங்கை வரை என்ற இணைப்பு நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. அரசுகள் மாறலாம். அதிகாரங்கள் வேறுபடலாம். அன்பு ஒன்றே மாறாதது.

அன்பு, தமிழ், எண்ணம் இவற்றால் மக்களினம் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றாகும் நாள் எந்நாளோ? என்ற நினைவில் ஏங்கித் தவிக்கிறபோது நாம் ஒன்றாகி இருக்கிறோம். தமிழ் மொழியால் ஒன்றாகி இருக்கிறோம். விபுலாநந்த அடிகளாரின் நினைவு நாள் இலங்கையில் தமிழ்மொழித் தினமாக இலங்கை அரசால் கொண்டாடப்படுகிறது. இதனை இலங்கையின் மதிப்பு மிகு அமைச்சரே இந்த ஆவணப் படத்தில் பதிவுசெய்துள்ளார். தமிழால் தமிழ்நாட்டையும்,  இலங்கையையும் ஒன்றிணைத்த இசைப் பேரறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவார்.

மண்ணைக் குழைத்து மாசற்ற பொன்னை வடிவமைக்கிறது ஆவணப்படத்தின் முதற்காட்சி. வடிவமற்றுக் கிடந்த மண் பிசைவை மெல்ல வனைந்து, அழகாக்கி அற்புத உருவமாக விபுலாநந்தர் படைக்கப்பெறுகிறார். நேர்த்தியும், பளபளப்பும் எதற்காக என்றால் அவரின் (அந்தச் சிலையின்)  நிறைவான இதழ் நெளியாப் புன்னகைக்காகத்தான். விபுலாநந்தரின் மண்உருவம் இதழ்களில் சிரிப்பளித்து, தமிழைச் சிறக்கச் செய்துவருகிறது. 

நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப்பெரியவரின் வாழ்வை இன்றைக்கு அடையாளப்படுத்துவதில், ஆவணப்படுத்துவதில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்பதை நினைக்கும்பொழுது இதயம் விம்முகின்றது.. நினைத்தமாத்திரத்தில் சென்று வர இலங்கை நெருக்கடியில்லாமலா இருக்கிறது?. அல்லது இமயம் கூப்பிடு தூரத்தில்தான்  இருக்கிறதா?.

நற்சாந்துபட்டி கிராமம், மேலைச்சிவபுரி கிராமம், பேரையூர் கிராமம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், மதுரைத் தமிழ்ச்சங்கம்  என்று விபுலாந்தரின் பாதம் தேடி அலைகிறது ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்கருவி….

            இலங்கையில் காரைதீவு, மட்டக்களப்பு, ஆனைப்பந்தி, ஆரையம்பதி, வாழைச்சேனை, கல்முனை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி என்று எல்லைக்கடவுச் சீட்டு கொண்டு எல்லை கடக்கிறது இந்த ஆவணப்படம். இவ்வளவு சிரமமும் எதற்காக……. எல்லை தாண்டிய தமிழ்வெளியின் வெற்றியைக் காட்டத்தான்.

மயில்வாகனன், பிரபோத சைதன்யர், விபுலாநந்தர்………. இந்த முப்பெயருக்குள்தான் ஒரு பேரறிஞனின் வாழ்வு ஒளிவீசுகிறது. இலங்கையில் பிறந்த மயில்வாகனன், சென்னை இராமகிருஷ்ணமடத்தில் பிரபோத சைதன்யராக துறவுப்பாடம் கற்றுப் பின்னாளில் விபுலாநந்தர் என்ற துறவியாகிறார். இந்தத் துறவி துறக்காத ஒன்று தமிழ். மறக்காத ஒன்று தமிழ். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியன இவரின் வரவால் பெருமை பெற்றன. சென்னைப் பல்கலைக்கழகம் இவரின் பேச்சால் பொலிவுற்றது. சிவானந்த வித்யாலயம் இவர் பெயர் சொல்லி இன்னமும் இலங்கையில் கல்விப் பேரொளி பாய்ச்சுகிறது. இதனுடன் இணைந்த இருபத்தேழு கல்விநிலையங்களில் விபுலாநந்தரின் உயிர் வாசம் செய்கிறது. 

நற்சாந்துபட்டி ராம,பெரி,பெரி  சிதம்பரம் செட்டியாரின் உதவியால் யாழ்நூல் அரங்கேற்றம் திருக்கொள்ளம்பூதூரில் நடக்கிறது. இதனைக் காட்டும் ஆவணப் படக் காட்சியின் சிறப்பு எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. திருக்கொள்ளம்பூதூரில் விபுலாநந்தர் யாழ்நூல் அரங்கேற்றம் செய்யும் புகைப்படம் காட்டப்படுகிறது.  அதன்பின் அந்நூல் இசையை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் என்று நகரும் ஒளிப்படக்கருவி அவ்விழாவில் கலந்துகொண்டவர்களைக் குறியீடு ஒன்றின் வழியாகக் காட்டுகிறது.  

திருக்கொளம்புதூர் திருக்கோயிலின் இராசகோபுரம், கருவறைக் கோபுரம் இவற்றில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர்கின்றன. அதே நேரம் இக்காட்சியின் மறுபாதியில் விழாவிற்கு வந்த அறிஞர்கள் ஒவ்வொருவரின் படமும் அரங்கேறுகிறது. உவப்பத் தலை கூடுதல் புலவர் தொழில். புறாக்களின் தொழிலும் அதுதானே. 

கோபுரங்களில் புறாக்கள் நின்றது இயல்பா?, அல்லது திட்டமிட்டச் செயல்பாடா?, அல்லது குறியீடா?. ஆவணப்படத்தைப் பார்த்தால்தான் இந்த வினாவிற்கு உங்களால் விடைசொல்ல இயலும்.

புறாக்கள் ஒருபுறம் ஒன்று கூட, புலவர்கள் ஒருபுறம் யாழ்நூல் நலம் பெற அதனை ஏற்று உலகிற்குச் சொல்ல வருகின்றனர். புறாக்களுடன் புலவர்களை ஒருங்கிணைத்துக் காட்டிய காட்சி ஊடகத்தின் வெற்றி.  யார் யாருக்காகக் காத்திருந்து கடமையாற்றினர் என்பது புரியாத புதிர்.  புறாக்கள் வாழ்க. இலக்கியப் புறாக்கள் வாழ்க. அவை மணிப்புறாக்கள். மாமணிப்புறாக்கள். என்றும் தமிழ் வாழ உழைத்த புறாக்கள்.

றோசல்லா மாளிகை. அதுவே தமிழ் இசையின் இன்னிசை மாளிகை. அந்த மாளிகையில் யாழ் நூலுக்காகத் தவமிருந்தார் விபுலாநந்தர். அந்தத் தவச்சாலையைக் காணாத கண்ணும் கண்ணா? கண்டு கொள்ளுங்கள்.

தமிழறியும் தற்காலப் பிள்ளைகள் அனைவரும் இந்த ஆவணப் படத்தைக் கண்டே ஆகவேண்டும். சென்ற நூற்றாண்டின் பழுதிலாத் திறமுடைய சான்றோரும், தற்கால நூற்றாண்டின் தரமிகு தமிழறிஞர்களும் விபுலாநந்தர் என்ற மையப் புள்ளியில் ஒருங்கிணைந்து தமிழிசையின் புகழைத் தரணி புகழத்தருகின்றனர்.  இந்தக் காலப்பெட்டகம் சான்றோர்தம் காட்சிப் பெட்டகமாக விளங்குகிறது.  இவர்களை நேரடியாகச் சந்திக்காத பலர் இந்த ஆவணப்படத்தில் இவர்களைச் சந்திக்கலாம். அவர்களின் மொழி கேட்டு இன்புறலாம். 

இந்த ஆவணப்படத்தில் கலை நேர்த்தியும் கொட்டிக் கிடக்கிறது. அழகான பாடல் வரிகளுக்கு அசைந்தாடும் பரத நாட்டியப் பெண்கள்- நாயனாருக்குப் பிடித்த மலர் எதுவெனத் தேடுகிறார்கள். வெள்ளை நிற மல்லிகையா? இல்லை, நெய்தலா? இல்லை. உத்தமனார் வேண்டுவது உள்ளக்கமலம். இந்தப்பாடலின் பொருள்தான் விபுலாந்தருக்கு மிகவும் பிடித்த பொருள். அப்பொருளை மெய்பொருளாக்கி இவ்வாவணப்படம் சிறப்பூட்டுகிறது. 

யாழ்நூல் -  இதுவே விபுலாநந்தர் தனித்தன்மை மிக்க தலைமைப் பணி. தமிழரின் இசைக்கலைக்குச் சான்று சொல்லும் நற்பணி. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் இசைக்குறிப்புகள் சிலவற்றை வைத்துக்கொண்டு, தமிழரின் இசைக்கலையைத் தேடித்திரிந்த அந்த பாட்டுப்புலவனின் சேகரிப்பு கணம் செந்தமிழுக்கு உரம். இந்தக் கணத்தை அளவு குறையாமல் காட்டுகிறது மு.இளங்கோவன் உருவாக்கியுள்ள ஆவணப்படம். யாழ்நூலின் பக்கங்களை நாம் தொட்டுப் பார்க்க அனுமதிக்கிறது இந்த ஆவணப்படம். 

அடிகளாருடன் பழகியவர்களை அணுகி, அவரன்பினைப் பதிவுசெய்கிறது ஆவணப்படம். இந்தப் படத்தின் பதிவுகள் வெறும் பதிவுகளல்ல. காலச்சக்கரத்தைப் புரட்டிச் சரியாக உண்மையைத் தமிழன்பை வெளிப்படுத்தும் பத்திரப் பதிவுகள். எத்தனைக் காலம் காத்திருந்து இந்த இனிய படம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால்! அதுவே இதற்கு நாம் செய்யும் நன்றி. இந்தப் படம் உருவாக்கப்பட்டபோது உயிருடன் இருந்த சிலர் இப்படம் வெளிவரும் நேரத்தில் இயற்கை எய்திவிட்டனர் என்றால் அவர்கள் உயிருடன் இருக்கும் நேரத்தில்  செய்யப்பட்ட  இந்தப் பதிவின் நிலைப்பாடு எத்தகைய  பெருமைக்கு உரியது என்பது தெரியவரும்.

யாழ்நூல், யாழ் என்ற இசைக்கருவியைத் தமிழர்க்கு மீட்டுத்தந்தது. யாழ் போலவே அடிகளாரின் வாழ்வும் நோயால் சுற்றி வளைக்கப்பட்டது. நோயின் வருத்தம், காலத்தின் எல்லை அவரைக் கற்சிறைக்குள் அமைதிப்படுத்தியது. எழுதிய விரல்கள் எழுதாமல் நிற்கின்றன. ஒரே ஒரு பன்னீர் பூ மட்டும் அவரின் கல்லறையில் அழுது கொண்டு கிடப்பதாய் ஆவணப்படம் சுட்டிச் செல்கிறது.

உத்தமனார் வேண்டிய உள்ளக் கமலம் அவரின் உள்ளம்.  மண்ணில் இருந்து தோன்றிய உருவம் மண்ணுக்குள் அமைதியாகிறது. ஆவணக் காட்சி என்னும் ஒரு பூவால் தன்னை அர்ப்பணிக்கிறது இந்த ஆவணப்படம்.

இசையும், படத்தொகுப்பும், காட்சி மாற்றங்களும் ஆவணப்படத்தைத் திரைப்படத் தரத்திற்கு முன்னேற்றியுள்ளது. விபுலாநந்த அடிகளார் மறைவுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய "ஆங்கிலமும் ஆரியமும்" எனத்தொடங்கும் வெண்பா வரிகள் கலைமாமணி கா.இராசமாணிக்கனார் குரலில் இதயத்தைப் பிழிந்தெடுக்கும் சோக வரிகளாக இந்த ஆவணப்படத்தில் ஒலிக்கின்றன.

நூறாண்டு கடந்தும் தமிழ் அறிஞர்களை நினைவு கூறும் ஆவணப்படத்தின் நற்செயலுக்குத் தமிழர்கள் நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும். உலகத் தமிழர்கள் நன்றி சொல்லி வருகிறார்கள். நாமும் நம் நன்றியைச் சொல்வோம். 

நன்றி சொல்ல  செம்மொழி இளம் அறிஞர்  திருமிகு முனைவர் மு. இளங்கோவன் அவர்களின்  செல்பேசி. 9442029053


கருத்துகள் இல்லை: