ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

பகவத் கீதையில் ஏழு கேள்விகள்


13. பட்டனார் பகவத்கீதையில் ஏழு கேள்விகள்

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இறை சிந்தனைக் கருத்துகள் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. இறை சிந்தனையின்றித் தமிழ் இலக்கியங்களை அறிவது முழுப்புரிதலைத் தராது என்ற அளவில் இறை சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. இவ்வகை இலக்கியங்கள் ஒருபுறம் என்றாலும் இறை சிந்தனைகளை முழுவதும் தாங்கிய பக்தி இலக்கியங்கள் மற்றொரு புறத்தில் வளர்ந்து வந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தினைப் பக்தி இலக்கிய காலம் என்று குறிக்கும் அளவிற்கு முழுமையும் இறைசிந்தனையை விதைக்கும் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இதன் தொடர்ச்சியாய் சமயம் சார்ந்த தத்துவ நூல்களும் எழுந்தன. சைவத்திற்குச் சிந்தாந்த நூல்கள் என்றால், வைணவத்திற்கு வேதாந்த நூல்கள் விளைந்தன. இவற்றின் எதிர்நிலையில் நின்ற சமண, பௌத்த நூல்களும் இறை சிந்தனையை முன்வைத்தே அதன் மெய்ம்மையை ஆராயத் தலைப்பட்டன. இவ்வகையில் இறை சிந்தனைப் பாங்கு தமிழ் இலக்கியங்களில் பெரும் பங்கு வகித்து வருகின்றது.

இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை போன்றவற்றை வைணவம் சார் இறை செய்திகள் கொண்டனவாகக் கருத இயலும். கம்பரும், வில்லிப்புத்தூராரும் முறையே தம் காப்பியங்களான கம்பராமாயணத்திலும், பாரதத்திலும் வைணவ சமயக் கருத்துகளை, வேதாந்தக் கருத்துகளை விரித்துச் சென்றுள்ளனர். பகவத் கீதை தமிழில் தனிப்பட எழுதப்படவில்லை என்ற குறை பெருங்குறையாக விளங்கியது. இருப்பினும், இராமாயண மகாபாரத அளவிற்கு தமிழ் சார் கவிதை ஆக்கமாக பகவத் கீதை அமையாதது நிரப்பமுடியாத வெற்றிடமடாக இருந்து வந்தது. இதனை நிரப்பப் பல சான்றோர்கள் முயன்றனர். பட்டனார் என்பவர் வேதாந்த அடிப்படையில் பகவத் கீதை ஒன்றைப் பதிமூன்றாம் நூற்றாண்டில் படைத்துள்ளார். இவரின் முழுப்பெயர் சேமநகர் ஆயனார் பட்டனார் என்பதாகும். இவர் படைத்த பகவத்கீதை “பரமார்த்த தரிசனம்” என்று அழைக்கப்பெறுகிறது. இந்தப் பரமார்த்த தரிசனம் மூல மொழியான வடமொழி பகவத் கீதையின் அத்தியாயங்களை, கருத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது,

“விண்ணியல் மொழியினால் வியாதன் கூறிய
புண்ணிய கதையைநீ புகல்வது என்எனில்
எண்ணிய வகைபிறிது இல்லை யாரும்இந்
நுண்ணிய பொருளிலே நுழைய வேண்டியே” (3)

வியாச முனிவர் அருளிச் செய்த பகவத்கீதையை வடமொழியில் இருந்துத் தமிழ் மொழிக்கு நான் தருவதற்குக் காரணம் யாவரும் இறை தத்துவத்தின் நுண்ணிய பொருளை அறிந்து, வீடு பேறு அடைவதற்காகத்தான் என்று இப்பாடலில் பட்டனார் குறிக்கிறார்.


இவ்வகையில் வீடுபேற்றை அனைவரும் அடையும் வகையில் தமிழில் தரப்பெற்ற முதல் பகவத் கீதை நூல் இதுவேயாகும். இது பதினெட்டு அத்தியாயங்களை உடையதாகும்.

1. அருச்சுணன் சோக அத்தியாயம்

2. சாங்கிய யோக அத்தியாயம்

3. கர்ம யோக அத்தியாயம்

4. சம்பிரதாய அத்தியாயம்

5. ஞான கர்ம அத்தியாயம்

6.யோக அத்தியாயம்

7. மாயா ரூப அத்தியாயம்

8. எழுவகை வினா உரைத்த அத்தியாயம்

9. மாயா விகார அத்தியாயம்

10. விபூதி யோக அத்தியாயம்

11. விசுவரூப அத்தியாயம்

12. பக்தி யோக அத்தியாயம்

13. சேத்ர சேத்ரக்ஞ விபாக யோக அத்தியாயம்

14. குணாதீத அத்தியாயம்

15. பிரபஞ்ச அத்தியாயம்

16. தேவாசுர சம்பத்து: விபாக யோக அத்தியாயம்

17. குணவிகார அத்தியாயம்

18. சஞ்சேப அத்தியாயம்

ஆகியன அப்பதினெட்டு அத்தியாயங்கள் ஆகும்.


பரமார்த்த தரிசனமாகிய இந்தப் பகவத் கீதையானது உடல், உயிர் ஆகியவற்றின் தன்மை பற்றி அறிவிக்கும் நிலையில் பின்வரும் பாடல் அமைகிறது.

"பொன்றுவது உடம்புஅதனுள் நின்றபொருள் பொன்றாது
என்றும்ஓர் இயற்கையொடு நிற்கும்இயல் பைக்கேள்
முன்தொடர் மகப்பருவம் விட்டு இளமை மூப்போடு
ஒன்றும் உடல் ஆயினும் உயிர்க்கு இயல்பு அது அன்றால்” (14)

என்ற பாடலில் உடல் உயிர் இயல்பு தெளிவுபட உரைக்கப்படுகிறது. உடம்பானது அழியும். ஆனால் அதனுள் நின்ற ஆன்மா அழியாது. உடல் தன் மகப்பருவத்தைத் தாண்டி, இளமை, முதுமை அடைந்து இறக்கும். ஆனால் உயிரின் இயல்பு அதுவன்று. அதற்கு மகப்பருவம், இளமை, முதுமை கிடையாது. அழியாத உயிர் மற்றொரு உடலைப் பெறும்.

இப்பாடலில் எளிய சொற்களால் இனிய மொழியால் உயிர் தத்துவத்தை விளக்கி நிற்கிறார் பட்டனார். இது பட்டனாரின் கவிதையாக்கத்திற்குத் தரப்பட்ட சிறு சான்று மட்டுமே. அவரின் பாடல்கள் தத்துவங்களை எளிமைப்படுத்தித் தமிழில் தருவதில் முன்னிலை வகிக்கின்றன. இவர் பகவத் கீதையின் மூலத்தைக் கற்றவர் என்பதும் அவரின் படைப்பினால் தெரியவருகிறது.

பட்டனாரின் பகவத் கீதையில் மூல நூலில் உள்ளதன் அடிப்படையில் ஏழு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அவ்வேழு கேள்விகளைக் கேட்பவன் அருச்சுணன். அவற்றிக்குப் பதில் அளிப்பவர் கண்ணன். இம்முறையில் இக்கேள்விகள் எட்டாம் அத்தியாத்தில் எழுப்பப் பெற்றுள்ளன. இவ்வேழு கேள்விகளும் அடிப்படையில் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய கேள்விகளாகும். பதில்களும் ஆகும்.

ஏழு கேள்விகள்

1. பிரம்மம் என்றால் என்ன?

2. அத்தியாத்மம் எது?

3. விதிக்கின்ற கர்மம் என்பது எது?

4. அதிபூதம் எனப்படுவது யாது?

5. அதிதெய்வம் எது?

6. அதிஎச்சம் தேகத்தில் உள்ள தன்மை எப்படி?

7. தேகம் மரணம் அடையும்போது உம்மை உள்ளபடி அறியும் வழி யாது?

என்ற அடிப்படையான கேள்விகள் ஏழினை முன்வைக்கிறான் அர்ச்சுணன். இவை அனைத்திற்கும் கண்ணபிரான் பதில் அளிக்கிறார். அவர் அளிக்கும் பதில் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.


பிரம்மம்

பிரம்மம் என்றால் என்ன என்ற முதல் கேள்விக்கு

"அரியது அழியாமை அது அனைத்தினும் உரைக்கில் பெரியது மொழிந்த பிரமம் பிறவும் நீகேள்” (8, 3) 

என்று பதில் தருகிறார் கண்ணபிரான்.

பிரம்மத்தின் இயல்பினைச் சொல்லுவது என்பது சொல்லுக்குள் அடங்காதது. அது அரிதானது. ஞானம், அஞ்ஞானம், கால தேச வர்த்தமானங்கள் மற்றும் பிறவற்றால் அழிவைப் பெறாதது பிரம்மம் எனப்படுகிறது. இது உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மேலானது.

இவ்வாறு பிரம்மத்தின் இயல்பினைக் கண்ணபிரான் உரைக்கிறார்.


அத்தியாத்மம்

"அந்தக் கரணங்களில் நின்ற அறிவு அத்தியாத்மம் ஆவதுதான்” (8. 4) 

என்று அத்தியாத்மத்திற்குப் பொருள் சொல்கிறார் கண்ணபிரான். பிரம்மத்தின் உருவம் எல்லா உருவங்களில் கலந்து உள்ள தன்மையை அறிந்து கொள்வது அத்தியாத்மம் ஆகும். இது ஆன்மாவிற்கான இலக்கணம் ஆகும்.

கர்மம்

உயிர்களை, உலகங்களைப், பிறவிகளை உருவாக்கும் பிரம்மத்தின் செயல்பாடுகள் கருமம் எனப்படுகிறது.

"இந்தப் பிறவி தனை ஆக்கும் யாகம் - கருமம் என்பதுதான் “ (8-4) 

என்கிறது பட்டனார் கீதை.

அதிபூதம்

அழியக் கூடிய உடம்பு முதலான பொருள்கள் அதிபூதம் எனப்படும். அழியக் கூடிய உடம்பின் மீதான அபிமானமும் அதிபூதம் எனப்படுகிறது.

"நந்தற்கு அமைந்த உடம்பு அதனை நான் என்கின்றது அதிபூதம்” (8-4) 

என்று இதனை உரைக்கிறது பட்டனார் கீதை

அதி தெய்வம்

உடம்பின் உள் ஆன்மாவாகிய புருடன் இருக்கிறான் என்பதை அறிவது அதிதெய்வம் எனப்படும். இதனைப் பட்டனார் கீதை

"பந்தப்படும் இவ்உடற்கு அமைந்த புருடன் தெய்வம் எனப்படுவான்” (8-4) 

என்கிறது.

அதியக்ஞம்

"எஞ்சுதலை இல் அதி எச்சம் ஆகின்றேன் நான்” (8-5) 

என்பது அதியக்ஞத்தின் விளக்கம் ஆகும். உடம்பின் உள் உள்ள ஆன்மாவில் இறைவன் நின்று நடத்துகிறான் என்று அறிவது அதியக்ஞம் ஆகின்றது.


கடவுளை அறியும் வழி

மரணம் அடையும் நேரத்தில் கடவுளை அடையத் தேடுகிறது ஆன்மா. அதன் இயல்பினைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

“இறக்குங்கால்
நெஞ்சுகவரும் நெறிகள் எலாம் அடைத்து நினை யப்படுவதுநான்
அஞ்சுபுலனும் பொறி ஐந்தும் அடக்கி அறிவு என்பாலதாய்த்
துஞ்சும் அவர்கள் எனை அடைவர்” (8-5)

என்ற பாடலடிகளில் மரணத்தை நெருங்கும் உயிரின் இயல்பினைத் தெளிவாக உணர்த்துகிறார் பட்டனார்.

மரணத் தருவாயில் ஐந்து புலன்கள், ஐந்து பொறிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாகக் குறைகின்றன. அறிவு மட்டுமே நிற்கிறது. இதுவரை அடங்காத அடங்க மறுத்த பொறிகள், புலன்கள் அடங்கி நிற்கும் அருமையான பொழுது இது. இப்பொழுதில் அறிவு ஒன்று மட்டுமே நிற்கிறது. அந்த அறிவு என்பால் நின்றால் அதுவே எனை அடையும் வழியாகும். இவ்வகையில் இறைவனை அடையும் வழியினை ஏழு கேள்விகள் வழியாகத் தெளிவுபடுத்துகிறது பட்டனார் கீதை. இவை அனைத்தும் அப்படியே மூலநூலிலும் உள்ளன என்பது கருதத்தக்கது.

இவ்வாறு வீட்டு நிலை பெற்ற சான்றாளராக பட்டனார் சங்கர பகவற்பாதரைக் காட்டுகிறார்.

“ஆற்று இயல் வழுவிய புலன்கள் ஐந்தையும்
பாற்றிய சங்கர பகவற் பாதன் என்று
ஏற்றிய பெயரினன் அருளினால்யான்
சாற்றினன் இப்பெரும் தரும நூலையே” (18-70)

என்று இக்கீதையின் நிறைவுப்பாடல் அமைகிறது. வேதநெறியில் இருந்து வழுவிட வைத்த புலன்கள் ஐந்தையும் வென்றிட்ட சங்கர பகவற்பாதன் அருளினால் இந்தத் தரும நூலை நான் செய்தேன் என்று குறிக்கிறார் பட்டனார். சங்கரர் இறைவனை அடைந்தவர் என்ற நிலையில் புலனின்ப நுகர்வுகளை நீக்கி ஆண்டவன்பால் சிந்தனை, அறிவு அனைத்தையும் தேக்கும் அனைவரும் ஆண்டவனை அடைய இயலும் என்பதை உணரமுடிகின்றது,

கருத்துகள் இல்லை: