செவ்வாய், டிசம்பர் 08, 2015

முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்னும் நீதி நூல் ஆகும். இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண் செந்துறை சா்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள்.
முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை – தொல்காப்பியர் காலத்தில் நிலையாமை பற்றி வந்த புறத்திணையாகும். தொல்காப்பியத்தின் பிற்கால எல்லையில் தோன்றிய இந்நூலும் காஞ்சியை நிலையாமையை உரைப்பதாகவே கொண்டு அறம் உரைத்துள்ளது. காஞ்சி என்றால் பெண்கள் இடையில் அணியும் ஒருவகை அணிகலனாகும். பல மணிகள் கோர்த்து அவ்வணிகலன் செய்யப்படுவதைப்போல இந்நூலும் ஒரு நூறு மணிகளைக் கோர்த்துப் பாடப்பெற்றுள்ளது, இதனை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க் கிழார் ஆவார். கூடலூர்க் கிழார் என்ற பெயரில் இரு புலவர்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளனர். ஒருவர் இவர். மற்றொருவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். பின்னவரை விட இவர் வேறானவர். கூடலூரில் இருந்துப் பின்னர் மதுரைக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக இவர் மதுரைக் கூடலூர்க் கிழார் எனப்பெற்றுள்ளார். ஒரு தலைப்பின் கீழ்ப் பத்துப்பாடல்கள் என்ற அமைப்பி்ல் நூறு பாடல்களால் செய்யப்பெற்றுள்ளது இந்நூல்.
வாழ்வியல் அறங்களை உரைக்கும் முதுமொழிக்காஞ்சி எளிமையான சொற்களால் உயர்வான இரு அறங்களை ஒற்றை அடியில் காட்டி, ஓர் அறத்தைவிட மற்றது மேம்பட்டது என்ற அமைப்பில் அறங்களின் பெருமைகளை எடுத்துக்காட்டுகின்றது,. இவ்வகையில் பல்வகை அறமுறைக்கும் முக்கியமான நூல் முதுமொழிக்காஞ்சியாகின்றது. இம்முதுமொழிக்காஞ்சி தான் எழுந்த காலத்திற்குத் தேவையான வாழ்வியல் அறங்களை எடுத்தியம்பியுள்ளது என்றாலும் அவ்வறங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவனவாக உள்ளன என்பது கருதத்தக்கது. இன்றைய வாழ்வின் பல சிக்கல்களுக்கு முதுமொழிக்காஞ்சியின் அறநெறிகள் விடை காட்டுகின்றன.
வாழ்க்கையை நெறிப்பட வாழும் இனிய நடைமுறை வாழ்வியல் எனக்கொள்ளலாம். மனித வாழ்வியலை இல்லறம், துறவறம் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறவாதிகளுக்கும், துறவிகளுக்கும் தனித்தனியாக வாழும் முறைகள் இலக்கியங்களால் வகுக்கப்பெற்றுள்ளன. இந்நூலில் இல்லற வாழ்வு சிறக்க நன்னெறிகளைத் தொகுத்து மதுரைக் கூடலூர்க் கிழார் உரைக்கின்றார். தமக்கென வாழாமல் பிறர்க்குரிமையாக வாழ்வது என்பது மனித வாழ்வின் வெற்றியாகும். துறவற நெறிகள் இவ்விலக்கியத்தில் தவ நெறிகளாகக் காட்டப்பெற்றுள்ளன.
‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்’’ (திருக்குறள். 214)
என்று வள்ளுவர் ஒத்துவாழும் வாழ்க்கையே சிறப்பானது என்கிறார். அப்படி ஒத்திசைந்து வாழாதவர்கள் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். எனவே வாழ்க்கை என்பது தானும் பழிப்பில்லாமல் வாழ்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன் சமுதாயத்தையும் வளர்க்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகக் கருதப்படும். அதற்கான நெறிகள் பற்பல நூல்களில் சொல்லப்பெற்றுள்ளன. முதுமொழிக்காஞ்சியில் சொல்லப்பெற்றுள்ள வாழ்வியல் சிந்தனைகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
முதுமொழிக் காஞ்சியும் வாழ்வியல் சிந்தனைகள்
‘‘வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்’’ (தண்டாப்பத்து, 5) என்று வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. இதற்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சூழ்ச்சி என்பதற்கு ஆராய்ச்சி என்று பொருள் எழுதுகிறார்கள். வாழ்வில் செல்வாக்கு வேண்டுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் இவ்வடிக்குச் சொல்லப்பெற்ற பொருளாகும். சூழ்ச்சி என்பதற்குக் கழகத்தமிழ் அகராதி உபாயம். தந்திரம் என்றும் சில பொருள்களைத் தருகின்றது. (ப.483) தண்டான் என்பதற்கு நீங்கான் என்பது அவ்வகராதி தரும் பொருளாகும். இவ்விரு சொற்களையும் இணைத்துப் பொருள் ்கொள்வதானால் வாழ்வில் வெற்றி பெற எண்ணுபவன் தன் செய்ல்களை ஆராய்ந்துச் செய்யவேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.
‘வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று’’ (அல்ல பத்து,7) என்று தான் வாழாமல் வருந்தி தான் சேர்த்துவைத்தப் பொருளைச் செலவழிக்காமல் வரு்ந்தி வாழும் வாழ்க்கை வாழ்க்கையாகாது. எனவே திருப்தி மிக்க வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்துத் தனக்கு உரியவர்களும் வாழ தன் பொருளைச் செலவழிப்பது என்பதுதான்.
இவ்வாறு வாழ்க்கை பற்றிய நேரடி வரையறைகள் முதுமொழிக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் முதுமொழிக் காஞ்சி மனிதவாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் என்பதில் ஐயமில்லை.
முதுமொழிக்காஞ்சியின் வாழ்வியல் சிந்தனைகளைத் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள், குடும்பம் வாழ்வியல் பற்றிய சிந்தனைகளை, சமுதாய வாழ்வியல் பற்றிய சிந்தனைகள் என்று பகுத்துக்காண முடிகின்றது. அவற்றை நிரல் பட இக்கட்டுரைத் தொகுத்துரைக்கின்றது.
தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
தனிமனித வாழ்வியல் சிந்தனைகள் என்ற நிலையில் தனிமனிதனின் குடிபிறப்பு, கல்வி, அறிவுடைமை, நாண் உடைமை, வாய்மை, ஆளுமை, ஆராய்ச்சி, சொல்வன்மை, நோயற்ற வாழ்வு, மூப்பு, பிறர் துயரத்திற்கு அஞ்சல், தவம் போன்றன முதுமொழிக்காஞ்சியால் காட்டப்பெற்றுள்ளன.
குடிபிறப்பு பற்றிய சிந்தனைகள்
மனிதன் குடிபிறப்பினால் மேன்மை பெறுவதுண்டு. ‘‘பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப’’ (அறிவுப்பத்து.பாடல்.1) என்று ஒரு மனிதனின் மனத்தி்ல் உள்ள ஈரத்தன்மையை, அருள் தன்மையை வைத்து அவனின் குடிப்பிறப்பின் மேன்மையை அறிந்துகொள்ளலாம் என்று முடிகின்றார் முதுமொழிக்காஞ்சி ஆசிரியர்.
‘‘சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப’’ ( அறிவுப் பத்து,6) என்ற முதுமொழிக்காஞ்சியின் தொடர் ஒருவனின் குடிப்பிறப்பினை அவனின் பெருமிதச் செயல்கள் காட்டிநிற்கும் என்று பொருளுரைக்கின்றது.
தனிமனித அடையாளமாக அவனின் குடிபிறப்பு விளங்கினாலும் அது வெளிப்படுவது அவரவர் செயல்களால் என்ற முதுமொழிக் காஞ்சியின் முடிவு இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது.
கல்விச் சிந்தனைகள்
கல்வி என்பது மனிதனுக்கு கிடைக்கக் கூடிய அழியாத மிகப் பெருங்செல்வம் ஆகும். இதனை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் அறிவும், வளமும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. கல்வி என்பதை வாழ்வின் மேன்மைக்கு உதவும் கருவியாக இந்நூலின் ஆசிரியர் கண்டுள்ளார்.
நல்ல குலத்தில் பிறப்பதைக் காட்டிலும் சிறப்பானது கல்வியாகிய மேன்மையைப் பெற்றிருப்பது என்று முன் சொன்ன குடிபிறப்பினையும் கல்விச் சிறப்பு மேம்படுத்தும் என்றுக் குறிக்கின்றது முதுமொழிக்காஞ்சி. குலன் உடைமையின் கற்பு சிறந்தன்று – (சிறந்த பத்து, 7) என்று குலத்தின் சிறப்பை விட கல்விச்சிறப்பு ஒரு மனிதனுக்கு உயர்வைத்தரும் என்கிறார் கூடலூர்க்கிழார்.. கற்பதை விடச் சிறந்தது கற்பாரை வழிபடுதல் என்கிறது மற்றொரு செய்யுளடி. (சிறந்த பத்து. 8)
கற்றவன் ஒருவனின் தரத்தைத் திறத்தை அவனின் அறிவு வெளிப்பாடு வெளிக்காட்டிவிடும்.( கற்றது உடைமை காட்சியின் அறிப(அறிவுப் பத்து, 4) இவ்வடியின் வழியாகக் கல்வியால் அறிவு மேம்படும் என்பது தெரியவருகின்றது.
‘‘நேராமல் கற்றது கல்வி அன்று’’ (அல்ல பத்து.6) என்ற முதுமொழிக்காஞ்சியின் செய்யுளடி கல்வி கற்பித்த ஆசிரியனுக்கு கல்விக் கற்பித்தமைக்காக கைப்பொருள் கொடுக்கவேண்டும் என்ற நன்முறையைக் காட்டுகின்றது,. அதுமட்டுமல்ல கல்வி வேண்டுபவன் ஆசிரியரை வழிபடவேண்டும் என்று மற்றொரு செய்யுளடி குறிப்பிடுகின்றது. ( கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் (தண்டாப்பத்து.4) என்ற நிலையில் வழிபாடு இயற்றிக் கைப்பொருள் கொடுத்துக் கல்வியைப் பெறவேண்டும் என்று முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
எனவே கல்வி என்பது மனிதருக்கு மிகச்சிறந்த உயர்வைத் தரும் கருவியாகும். அதனை ஆசிரியர் ஒருவரிடம் இருந்துப் பணிந்துக் கற்கவேண்டும் என்கிறது இந்நூல்.
கற்கும் முறைமையையும் இந்நூல் காட்டுகின்றது. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை (சிறந்த பத்து 3) என்ற பாடலடி கற்கும் முறையை விளக்குகின்றது. அதாவது கற்பதை விடக் கற்றவற்றை மறக்காமல் மூளையில் நிறுத்துவது சிறப்பு என்ற இவ்வடி இன்றைய கல்வி முறைக்கும் உகந்ததாகும்.
கற்றுச் சிறந்த மனிதருக்கும், அறிவில் சிறந்த மனிதருக்கும் சமயத்தில் அறிவுச்சோர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒரு மனிதனுக்கு, அறிவு சோர்ந்துபோனால் மற்ற எல்லா நிலையிலும் சோர்வே எஞ்சும் என்று மன இயல்பினை எடுத்துரைக்கின்றது முதுமொழிக்காஞ்சி. ‘அறிவு சோர்வுடைமையின் பிறிது சோர்வும் அறிப’’ (அறிவுப்பத்து, பாடல்எண்.9) என்ற பாடலடி இவ்வுண்மையை விளக்கி நிற்கின்றது.
தனிமனித ஒழுக்கம் பற்றிய சிந்தனைகள்
தனிமனிதன் ஒழுக்கத்துடன் வாழ்ந்தாக வேண்டும். அதுவே அவன் உயிருக்கும் உடலுக்கும் நல்லது. ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை (சிறந்த பத்து, 1) என்ற பாடலடி ஒழுக்கத்தைக் கல்வியினும் மேலானதாகக் காட்டுகின்றது. சிறியவர்கள், அறியாதவர்கள் ஒழுக்கம் மீறினால் அதனால் அவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆனால் சான்றாண்மை வேண்டுவோர் ஒழுக்கம் மீறக்கூடாது. அவ்வாறு சான்றோர் மீறினால் அதனால் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனையே ‘சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்’’ (பழியா பத்து,10) என்று முதுமொழிக்காஞ்சி உரைக்கின்றது.
வாய்மை பற்றிய சிந்தனை
வள்ளுவரால் பெரிதும் வலியுறுத்தப்படும் வாய்மை என்பதை இந்நூலாசிரியரும் வலியுறுத்துகின்றார். ‘வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை’’ (சிறப்புப்பத்து,பாடல்.4) என்ற கவித்தொடர் வள்ளல் தன்மையை விடச் சிறந்தது வாய்மை என்று உரைக்கின்றது. தனிமனிதனின் வாய்மை என்பது அவனுக்கும் பாதுகாப்பினை நல்கும். அவன் சார்ந்த அனைவருக்கும் பாதுகாப்பினைத் தரும். எனவே வாய்மையும் மரபுக் காக்க முதுமொழிக்காஞ்சி மனிதர்களை வேண்டுகின்றது.
நாணுடைமை பற்றிய சிந்தனைகள்
பழி வாராது வாழ்வதே வெற்றிமிக்க வாழ்க்கையாகும். அவ்வாறு பழி வந்தால் அதற்கு நாணுவது மனிதப் பண்பாகும். ‘‘நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று’’(சிறந்த பத்து,6) என்ற இந்நூலின் கவித்தொடர் மனிதர்கள் அழகாய் இருப்பதைவிட மேலானது நாணத்துடன் இருப்பது என்கிறது. நாணமில்லாத வாழ்வு என்பது நாணத்தை விட்டுப் பசிக்காக இழிவானச் செயல்களைச் செய்வதற்குச் சமம். அவ்வாறு உண்பதால் பசியும் அடங்காது. பழியும் விலகாது. ‘‘நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது ’’(துவ்வாப்பத்து, பாடல்எண்.3) என்று மேற்சுட்டிய கருத்தைக் கவிதையாக ஆக்கி நிற்கிறது முதுமொழிக்காஞ்சி
சொல்வன்மை பற்றிய சிந்தனை
தனிமனிதன் தன் கருத்தை எவர்க்கும் பயப்படாது உரைக்கும் ஆன்மை பெற்றிருக்கவேண்டும் என்று முதுமொழிக்காஞ்சி கருதுகின்றது. ‘சொல் சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப’’ (அறிவுப்பத்து .பாடல் எண்.8) என்ற இந்தப் பாடலடி சொல்சோர்வு ஏற்பட்டால் அனைத்திலும் சோர்வு ஏற்பட்டுவிடும் என்கிறது. தற்காலத்தில் வேலைக்கான நேர்காணல்களில் இளைஞர்களின் பேச்சுத் திறமே பரிசோதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொண்டு இவ்வடியின் பெருமையை உணரவேண்டும்.
தனிமனித ஆளுமை குறித்த சிந்தனை
தனிமனிதன் தன்னைத் தானே ஆளும் வல்லமை பெற்றிருக்கவேண்டும். தன்னை வேண்டிய இடத்தில் அடக்கிக்கொள்ளவும், பெருக்கிக்கொள்ளவும் தனிமனிதனுக்கு ஆளுமை தேவைப்படுகின்றது. இதனைச் ‘‘சீருடை ஆண்மை செய்கையின் அறிப’’ (அறிவுப்பத்து பாடல்எண். 10) என்று முதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கின்றது. இதில் இடம்பெற்றுள்ள சீருடை இப்போது பள்ளி, அலுவலகங்களுக்கு அணியும் நாளுடைக்குப் பெயராகிவிட்டது. ஆனால் இங்குச் சீரான ஆண்மையை அவர்தம் செயல்திறன் கொண்டு மதிப்பிடலாம் என்று சீரமைக்கப்பெற்ற பொருள் நிலையில் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
ஆராய்ச்சி பற்றிய சிந்தனை
‘ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப’’ (அறிவுப்பத்து.5) என்ற கவிதையடி எதிரே வர உள்ளதை அறிந்து அதற்கேற்ப தனிமனிதன் செயல்பட்டால் ஏற்றம் கிடைக்கும் என்பதை உணர்த்துகின்றது. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிரவருவதோர் நோய் என்ற குறள் நெறி இங்கு ஒப்பிடத்தக்கது. ஆராய்ச்சி மனநிலையுடன் தனிமனிதர்கள் செயல்படவேண்டும் என்கிறது இக்கவிதை.
பிறர் வருத்தத்திற்கு அஞ்சுதல்
மற்றவர் கண்ணில் நீர் வழிந்தால் தன் நெஞ்சில் உதிரம் சொட்டும் நிலை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவேண்டும். அதுவே மனிதநேய நிலையாகும். ‘‘காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்’ (சிறந்த பத்து, பாடல்எண்.2) என்று இதனைக் குறிக்கின்றது முதுமொழிக்காஞ்சி. ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்துவதைவிட ஒருவருக்கு ஏற்பட்ட துன்பத்தைக்கண்டு அதற்காக வருந்துவதே மேலானது என்கிறது முதுமொழிக் காஞ்சியடி.
நோயற்ற வாழ்வு பற்றிய சிந்தனைகள்
மனித குலம் நோயற்று நீண்டகாலம் வாழவேண்டும். நோயுற்றால் அது செல்வத்தை, நிம்மதியை அழித்துவிடும். அளவு மிகுந்த உண்டி உண்போர்க்கு நோய் உறுதி என்கிறது முதுமொழிக்காஞ்சி. ‘‘உண்டி மெய்யோர்க்கு உறுபிணி எளிது’’ (எளிய பத்து,7) என்பது அப்பாடலடியாகும்.
நோயுற்றவன் எவ்வளவு இன்பம் பெற்றாலும் அதில் அவன் இன்பம் அடைய இயலாது. எனவே நோய் வராமல் காக்கவேண்டும் என்கிறது முதுமொழிக்காஞ்சி. ‘பிணிகிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று’’ (நல்கூர்ந்த பத்து, பாடல்எண்.4) என்பது மேற்கருத்தைக் காட்டும் பாடலடியாகும்.
‘‘இளமையின் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை’’ (சிறந்த பத்து, பாடல்எண்.5) என்ற இப்பாடலடி மெய்ப்பிணி இல்லாமல் வாழும் நிலை இளமை உடையோர் வாழ்வினை விடச் சிறந்ததாக அமையும் என்கிறது.


மூப்பு பற்றி சிந்தனை
இளமை நிலையில்லாமையால் மூப்பு உயிர்களை வந்தடைகின்றது. மூப்பின் காலத்தில் பிறர் உதவி பெரிதும் தேவைப்படும். ‘‘இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது’(துவ்வாப் பத்து, பாடல்எண்.9) என்ற பாடலடி மூப்பின் கொடுமையை எடுத்துரைப்பதாக உள்ளது. பாம்புடன் வாழும் வாழ்க்கை கதம் எனப்படும் வாழ்க்கையாகும். அவ்வாழ்வைவிடக் கொடுமையானது மூப்புடைய வாழ்வு என்று முடிகின்றது முதுமொழிக்காஞ்சி.
இவ்வாறு தனித்தனியாக ஆங்காங்கே தனிமனித ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லிவந்த முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் தனிமனிதனின் வாழ்வியலை ஒரே பத்தாக பொய்ப் பத்தில் எடுத்துரைத்துள்ளார். இதில் காட்டப்படும் பொய்கள் அணுகாமல் ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது அம்மனிதனை வெற்றி மிக்க வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுவிடும்..இவ்வகையில் தனிமனிதன் தவிர்க்க வேண்டிய பொய்களைப் பின்வருமாறு காட்டுகின்றது முதுமொழிக்காஞ்சி.
தனிமனிதன் தவிர்க்க வேண்டிய பொய்கள்
  1. பெருங்சீரோன் தன் வெகுளியின்மைபொய்-(பொய்ப்பத்து. பாடல்எண்.2) பெருஞ்செல்வனிடத்தில் கோபம் இருக்கும். அது இல்லை என்பது பொய்யாகும். ஆனாலும் பெருஞ்செல்வன் வெகுளாமல் இருப்பது நல்லது என்கிறது முதுமொழிக்காஞ்சி.
  2. கள்ளுண்போர் சோர்வி்ன்மை பொய்( பாடல்எண்.3) கள்ளுண்பவர்கள் சோர்வில்லாமல் இருப்பது என்பது பொய். இதன்வழி கள்ளுண்ணாமல் தனிமனிதன் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றது முதுமொழிக்காஞ்சி.
  3. காலம் அ்றியாதோன் கையுறல் பொய். (பாடல்எண்.4) செயலாற்ற வேண்டிய காலத்தை அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அது வெற்றி பெறாது. ஆகவே காலமறிந்துச் செயல்படவேண்டும் என்கிறது முதுமொழிக்காஞ்சி.
  4. மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்( பாடல்எண்.5) என்ற கவிதை எதிரில் நடக்க இருப்பதை எண்ணித் தனிமனிதன் செயல்படவேண்டும் என்ற விழைவினை மறுதலையாக விளக்கி நிற்கின்றது.
  5. உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல்(பாடல்எண்.6) என்ற கவிதையில் சோம்பல் உடையவன் வெற்றி பெற இயலாது எனத் தெரிவிக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு பலநிலைகளில் தனிமனிதன் விளக்கம் பெற மேன்மை பெற பல அரிய கருத்துகளை அள்ளிவழங்குகின்றது முதுமொழிக்காஞ்சி.

தவவாழ்க்கை பற்றிய சிந்தனைகள்
தனிமனிதன் தன் மூப்பிற்கு முன்னால் தவம் இயற்றி அமைதி நிலையை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கவேண்டும் என்கிறது முதுமொழிக்காஞ்சி. அழியாது உலகில் நிலைபெற எண்ணுபவன் தவத்தைத் தவிர்க்கமாட்டான் என்பதை ‘நிற்றல் வேண்டுவோன் தவம்செயல் தண்டான்’’( தண்டாப்பத்து, பாடல் எண்.4) என்று, குறிப்பிடுகின்றது இந்நூல். தவநிலை என்பது தனிமனிதன் தன் விருப்பின்படி ஆற்றுவது என்பதால் அது தனிமனித வாழ்வியலாகக் கொள்ளதத்கதாகும்.
குடும்ப வாழ்வியல் சிந்தனைகள்
தனிமனிதன் என்பவன் தனிஅலகு. அவன் தன் வாழ்வில் ஒரு பெண்ணை மணந்துக் குடும்பம் என்ற அமைப்பினுள் நுழைகிறான். இவனைத் திருமணம் செய்துகொண்ட அவளும் இல்லறத்தில் நுழைகிறாள். இதன்பின் குடும்பம் குழந்தைகளால் கலகலப்பு பெறுகின்றது. இவ்வகையில் தனிமனிதனின் வாழ்க்கை விரிவுபெறுகின்றது. இவ்விரிவின் உறுப்பினர்களான மனைவி, மக்கள் பற்றிய கருத்துரைகளும் முதுமொழிக்காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.
மனைவி
மனைமாட்சியே ஒரு குடும்பத்தின் மங்கலமாகும். தன்னையும் காத்து, தற்கொண்டானையும் காத்து, தகைசார்ந்த சொற்காத்துச் சோர்விலாது வாழ்பவள் மனைவி ஆவாள். கணவனின் சொல் கேட்டு நடப்பவளை நல்ல மனைவி என்கிறது முதுமொழிக்காஞ்சி. ‘நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்’’ (அல்லபத்து,பாடல்எண்.1) என்று மனைவிக்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. தலைவனின் திறம் அறிந்து ஒழுகுபவளே தாரம் ஆவாள். ‘‘தாரம் மாணாதது வாழ்க்கை அன்று’’ (அல்ல பத்து,பாடல் எண்.2) என்று மனைவி மாட்சி உடையவளாக இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை ஆகாது என்று மேலும் மனைவிக்கு இலக்கணம் உரைக்கிறது முதுமொழிக்காஞ்சி.
மக்கள்
இல்லறத்தின் பயன் நன்மக்களைப் பெறுதலே ஆகும். மக்களைப் பெறாத காமக் கூட்டம் நல்லது அன்று என்கிறது முதுமொழிக்காஞ்சி. ‘‘வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை’’ (இல்லை பத்து, பாடல்எண்.3) என்ற தொடர் காமக்கூட்டத்தின் பயனை அறிவிக்கின்றது. மக்கட்பேறு போதும் என்ற நிலையில் காமம் தூய்ப்பதை நிறுத்திவிடவேண்டும் என்ற அறிவுரையும் இதன் பின்னால் மறைந்துள்ளது. ‘‘மக்கள் பேற்றின் பெரும்பேறு இல்லை’’ (இல்லை பத்து.பாடல்எண்.1) என்று மக்கள் பெருமையைப் பேசுகின்றது முதுமொழிக்காஞ்சி.
இவ்வாறு குடும்பம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகள் முதுமொழிக்காஞ்சியில் இடம்பெற்றுள்ளன.
சமுதாய வாழ்வியல் பற்றிய சிந்தனைகள்
தனிமனிதன் குடும்பமாகின்றான். பல குடும்பங்கள் இணைந்து சமுதாயமாகின்றன. ஏற்றத்தாழ்வின்றித் தனிமனிதர்கள் பலரும் இயைந்து வாழும் வாழ்க்கை முறை சமுதாயம் ஆகின்றது. இச்சமுதாயத்தில் தனிமனிதனுடன் , குடும்பத்துடன் தொடர்புகொள்ளும் சமுதாய உறுப்பினர்களாக, நண்பர்கள், வறியவர்கள், செல்வர்கள், வள்ளல்கள், புகழுடையோர், எதிரிகள் போன்ற பலரைக் காண நேர்கிறது.. இவர்களின் கடமைகள் பலவற்றை முதுமொழிக்காஞ்சி எடுத்துரைத்துச் சமுதாய வாழ்வியல் நெறிகளை எடுத்துரைக்கின்றது,
வறியவர்கள்
வறுமை வரும் வழியை முதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கின்றது. ஆசையே வறுமைக்குக் காரணம் என்கிறது இந்நூல். ‘நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை’ (இல்லை பத்து, பாடல்எண். 7) என்பது அப்பாடலடியாகும். ஆசையை அழித்துவிட்டால் வறுமை வாராது என்பது இந்நூல் தரும் முடிவாகும்.
‘இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை’’ என்று வறுமைக்கு மேலும் விளக்கம் தருகிறது முதுமொழைிக்காஞ்சி. இரந்து உண்பதைப்போல் இழிவு வேறெதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும். வறுமை வராமல் தடுப்பதும், வறுமை வந்தால் செம்மை காப்பதும் வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை இப்பாடலடிகள் காட்டுகின்றன.
செல்வர்கள்
சமுதாயத்தின் மேற்படியில் புகழோடும் வளத்தோடும் இருப்பவர்கள் செல்வர்கள். ஆவர். இவர்களின் இயல்புகளையும் முதுமொழிக்காஞ்சி எடுத்துக்காட்டுகின்றது. செல்வர்கள் தம் செல்வத்தைப் பெருக்க முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அதே நேரத்தில் தங்களின் புகழ் பரவவும் பல கொடைச்செயல்களைச் செய்து வருவார்கள்.. இதுவே செல்வர்களின் இயல்பாகும். இதனை ‘வீங்கல் வேண்டுவோன் பல் புகழ் தண்டான்’’ (தண்டாப்பத்து, 2) என்று முதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கின்றது. செல்வத்தையும், புகழையும் மிகுதியாக வேண்டுபவர்கள் முயற்சியையும் உழைப்பையும் வருத்தத்தையும் கருதமாட்டார்கள். ‘‘மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்’’ (தண்டாப்பத்து, பாடல் எண். 6) என்று இக்கருத்தைக் கவிதையாக முதுமொழிக்காஞ்சியில் காணமுடிகின்றது.
செல்வம் சேமிக்கும் வழியையும் அதனைப் பாதுகாக்கும் வழியையும் முதுமொழிக்காஞ்சி காட்டுகின்றது. ‘முற்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று’’ (சிறந்த பத்து. பாடல்எண். 10) என்ற பாடலின்படி செல்வம் பெருகி வளரவேண்டும். ஆனால் இருக்கும் செல்வம் குன்றிவிடக்கூடாது என்கிறார் கூடலூர்கிழார்.
செல்வர்கள் தம் செல்வத்தைத் தாமே தனியாக வைத்திருப்பது, அனுபவிப்பது அழகல்ல என்கிறது மற்றொரு பாடலடி. ‘‘தான் ஒரீஇ இன்புறல் தனிமையின் துவ்வாது’’ (துவ்வா பத்து, பாடல்எண்.10) என்பதில் இக்கருத்து பொதிந்துள்ளது.செல்வத்தின் பயனே ஈதலாகும். மற்றவர்களுக்கு அளித்து வாழும் வாழ்வே செல்வ வாழ்வின் பயனாகின்றது.
மேலும் செல்வர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. பழிப்புடன் வரும் செல்வம் நல்லதல்ல. அது வறுமையை விடக் கொடியது என்பது அதன் கருத்தாகும். ‘‘பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது’’( துவ்வாப்பத்து, பாடல்எண்.1) என்பது அப்பொருளுக்கான பாடலடியாகும்.
இவ்வகையில் செல்வர்களின் வாழ்க்கை நடைமுறைகளைத் தொகுத்துச் சிறுச் சிறு தொடர்களில் எடுத்துரைத்துள்ளது முதுமொழிக்காஞ்சி.
வள்ளல்கள்
வள்ளன்மை குறி்த்தும் வள்ளல்கள் குறித்தும் அவர்கள் சமுதாயத்தைக் காக்கும் தன்மை குறித்தும் பல செய்திகளை முதுமொழிக்காஞ்சி தெரிவிக்கின்றது. ஒருவர் வள்ளல் என்பதை அவரின் ஈரப்பண்பே, அதாவது மற்றவர்களுக்கு அருளும் பண்பே அறிவித்துவிடும் என்பதை ‘ஈரம் உடைமை ஈகையின் அறிப’’ (அறிவுப்பத்து,பாடல்எண்.2) என்று குறிக்கின்றது இந்நூல்.      ‘‘இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை’’ (இல்லாப் பத்து. பாடல்எண்.10) என்று ஈதலறம் பேசுகின்றது இந்நூல்.
அறத்தோடு கொடுப்பதே கொடை, அறமில்லா நிலையில் அளிப்பது கொடையாகாது, விருப்பம் இல்லாது ஒன்றைக் கொடுத்தலும் கொடை ஆகாது பொய்யாகக் கொடுப்பது போல் நடிப்பதும் கொடையாகாது. அதாவது கொடுத்த் பொருளை தந்துவிட்டுப் பிறகு வாங்கிக்கொள்வது பொன்ற செயல்கள் கொடையாகாது என்று போலிக்கொடைகளை விலக்குகிறது முதுமொழிக்காஞ்சி நூல். அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று (அல்ல பத்து, பாடல்எண். 8), பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது(துவ்வா பத்து, பாடல்எண்.4), பொய் வேளாண்மை புலமையின் துவ்வாது (துவ்வா பத்து, பாடல்எண். 6) என்று இவற்றை இலக்கியமாக்குகின்றது முதுமொழிக்காஞ்சி.
பொருளை வழங்கி வள்ளலாகாதவன் புகழ்மாலை பெற முடியாது என்று வள்ளல்தன்மையால் புகழ் கிடைக்கும். அப்புகழ் நிலையானது என்று குறிக்கிறது இந்நூல். ‘சோராக்கையன் சொன்மாலை அல்லன்’’(அல்ல பத்து, பாடல்எண்.4) என்று இதற்கான பாடலடி முதுமொழிக்காஞ்சியில் தரப்பெற்றுள்ளது.
இவ்வாறு கொடையாளர்கள் பெரும் புகழையும், கொடையின் தன்மையையும் இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
நண்பர்கள்
சமுதாயத்தின் முக்கியமான இடம் நண்பர்களுக்கு உண்டு. அவர்களே தனிமனிதனுக்குச் சார்பாளர்களா விளங்கி அவனை மகிழ்விலும், துயரத்திலும் காப்பாற்றுபவர்கள் ஆவர். இந்நட்பினரைப் பற்றிய பல நீதிகளை முதுமொழிக் காஞ்சி எடுத்துரைத்துள்ளது.
‘‘ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று’’ (அல்ல பத்து, பாடல்எண்.3) என்று அன்பும் அருளும் கொண்ட நட்பே நட்பு என்று பெயர்பெறும் என்று நட்பிற்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. நல்ல நட்பினை நண்பர்கள் ஆற்றும் எதி்ர்பார்ப்பு கருதாத உதவிகளாலும், தான் நண்பர்களுக்குச் செய்யும் உதவிகளாலும் அறியலாம். ‘சோரா நல் நட்பு உதவியின் அறிப’’ ( அறிவுப்பத்து, பாடல் எண்.3) என்று நட்பிற்கான அளவுகோலைக் காட்டுகின்றது முதுமொழிக்காஞ்சி.
நட்பி்ல்லாமல் ஒருவரிடத்தில் சென்று உதவிகளைக் கேட்பது என்பது பயன் தராது என்ற கருத்தை ‘‘நட்பில் வழிச்சேறல் நல்கூர்ந்தன்று’’ (நல்கூர்ந்த பத்து,பாடல்எண்.10) என்று அறிவிக்கின்றது முதுமொழிக்காஞ்சி.
ஒற்றுமைப்படுத்தல் என்ற பண்பில்லாத நெஞ்சத்தை உடையவன் நண்பன் அல்லன். தன்னோடு ஒன்று பட்டு வாழ்பவனே நண்பன் ஆவான். அவ்வாறு எப்போதும் வேறுபட்டு நிற்பவனிடம் நட்பு கொள்ள இயலாது. ‘‘நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்’’ (அல்லபத்து, பாடல் எண்.5) என்று இக்கருத்தைப் பாடலாக்கியுள்ளது முதுமொழிக்காஞ்சி.
எதிரிகள்
எதிரிகளின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை விடத் தன்னை வலிமையாக்கிக்கொள்ள முயல்வது சிறப்பானது என்று எதிரிகளை வெல்ல வழிகாட்டுகின்றது முதுமொழிக்காஞ்சி. ‘‘செற்றாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று’’ என்ற முதுமொழிக்காஞ்சி அடி எதிரிகளைத் தோற்றோடச் செய்யும் மந்திரமாகும்.
இவ்வாறு சமுதாயத்தின் பல தரப்பட்ட மனிதர்களை இனம் காட்டி, அவர்களின் பண்பு காட்டி நல்லறம் காட்டுகின்றது முதுமொழிக்காஞ்சி.
தொகுப்புரை
       முதுமொழிக்காஞ்சி என்ற நீதிநூல் நல்லறங்களைக் காட்டும் நூறு பாவடிகளைக் கொண்ட சிறுநூல் ஆகும். இதனை இயற்றியவர் மதுரை கூடலூர்க்கிழார் ஆவார். இந்நூலில் வாழ்வியல் குறித்தான பல நல்லறக் கருத்துகள் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. இவ்வாழ்வியல் கருத்துகளைத் தனிமனித வாழ்வியல் கருத்துகள், குடும்ப வாழ்வியல் கருத்துகள், சமுதாய வாழ்வியல் கருத்துகள் என்று மூவகைப்படுத்த முடிகின்றது. இம்முத்தரப்பும் முன்னேற பல அரிய கருத்துகளை முதுமொழிக்காஞ்சி வழங்கியுள்ளது.
தனிமனித வாழ்வியலில் தனிமனிதனுக்குக் குடிப்பிறப்பால் வரும் பெருமை, கல்வியால் வரும் சிறப்பு, தனிமனித ஆளுமையால் பெறும் பெருமை, ஒழுக்கம், வாய்மை, நாணுடைமை, கண்ணோட்டம், சொல்வன்மை ஆகிய பண்புகளால் மேம்பாடு அடையும் போக்கு ஆகியன காட்டப்பெற்றுள்ளன. நிறைவில் தவநிலை மேற்கொண்டுத் தனிமனிதன் தன் மனதிற்கு நிறைநிலையைத் தரவேண்டும் என்கிறது முதுமொழிக்காஞ்சி.
குடும்ப வாழ்வியலைப் பொறுத்தவரை மனைவி கணவன் சொல்படி நடக்கவேண்டும். மாண்புடையவளாக அவள் அமையவேண்டும் என்ற கட்டளைகளை முதுமொழிக்காஞ்சி காட்டுகின்றது. மேலும் குழந்தைப்பேறே குடும்பத்தின் வெற்றி என்றும் இந்நூல் சுட்டுகின்றது. குழந்தைப்பேற்றுக்காக மட்டும் காமக் கூட்டம் ஏற்கப்படுகின்றது.
சமுதாய வாழ்வியல் என்ற நிலையில் எதிரிகள், நண்பர்கள், வள்ளல்கள், செல்வர்கள், வறியவர்கள் போன்ற பல தரப்பினரின் இயல்புகளை முதுமொழிக்காஞ்சி எடுத்துக்காட்டுகின்றது.
முதுமொழிக்காஞ்சி காலத்தில் அதனால் வலியுறுத்தப்பட்ட அறங்கள், வாழ்வியல் சிந்தனைகள் இற்றைக் காலத்திற்கும் தேவைப்படுவனவாக விளங்குகின்றன. இவ்வறங்கள் எதிர்காலத்திற்கும் உரியனவாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. மனித குலம் நன்முறையில் வாழ இவ்வறங்கள் நல்ல கைவிளக்கு என்பதில் ஐயமில்லை.
பயன் கொண்ட நூல்கள்
பதிப்புக்குழு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்(மூலமும் தெளிவுரையும்), தமிழ் நிலையம், சென்னை, 2007
சுப்பிரமணியம்.ச.வே.(ப.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,2007

கருத்துகள் இல்லை: