புதன், ஜூலை 22, 2015

நெடுவினையை நீராக்கும் நீறு!

ஆன்மிகம்
இந்து சமயம்



குமரேச சதகம் என்ற நூல் புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் என்ற கிராமத்தை அடுத்துள்ள குமரமலையில் வீற்றிருக்கும் குமரேசக் கடவுளை முன்வைத்துப் பாடப் பெற்ற சதக நூலாகும். இச்சதக நூலை இயற்றியவர் குருபாததாசர் ஆவார். இந்நுல் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பழமையை உடையது என்று அறிஞர்கள் கருத்துகின்றனர். குருபாததாசர் முருகப் பெருமானை முன்வைத்து உலகியல் சார்ந்த நூறு பாடல்களை இந்நூலுள் பாடியுள்ளார். இந்நூல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகும். இதனுள் குறிக்கப்படும் நெறிகள் அனைவருக்கும் பொதுவான நெறிகளாக விளங்குகின்றன.

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலானவர்களின் குலஇயல்புகளை எடுத்துரைப்பதாகத் தொடங்கும் இந்நூல், இலக்குமி வாழும் இடங்கள், மூதேவி வாழுமிடங்கள், நற்புலவர் இயல்பு, தீப்புலவர் இயல்பு போன்ற பல கருத்துகளைத் தொகுத்தளிப்பதாக உள்ளது. பொதுக்கருத்துகளை உள்ளடக்கிப் பாடும் இந்நூல் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் "மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே '' என்ற மகுடத்தை கொண்டு அமைவதாகப் பாடப் பெற்றுள்ளது.


திருமகள் வந்தமர்ந்தால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் உயர்வுகளை இந்நூல் மிக அழகாக எடுத்துரைக்கின்றது. ஒருவருக்கு திருமகள் பார்வை ஏற்பட்டால் சிறப்பு உண்டாகும். செல்லும் பாதை எல்லாம் அவர் வழி போகும் பெரும்பாதையாகும். செல்லாத வார்த்தை எல்லாம் செல்லுபடியாகும். செல்வம் ஆறுபோல வந்து சேரும். மதியாதவர்கள் கூட மதிப்பர். சாதிதனில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் உண்டாகும். பகையாளி உறவாவான். பேச்சினில் பிழைவராது. வரும் என்று நினைத்த பொருள் வந்து சேரும். வல்லமைகள் மிக உண்டாகும் என்று திருமகள் வரவால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியல் இடுகிறது இந்நூல். இப்பாடலில் இடம்பெற்றுள்ள அத்தனைக் கருத்துக்களும் அனைவருக்கும் பொருந்தும்படியான பொதுமைத்தன்மை வாய்ந்தனவாகும். இக்கருத்துகள் அன்றும் இன்றும் என்றும் பொருந்தக் கூடியவை. இத்தகைய நிலையில் சொற்சிறப்பும், பொருள் சிறப்பும், கவிதைச் சிறப்பும் வாய்ந்த சதக நூலாக இந்நூல் விளங்குகின்றது.

இந்நூலில் இருபாடல்கள் திருநீறு பற்றி இடம் பெற்றுள்ளன. திருநீற்றை வழங்கும் முறை பற்றியும், திருநீற்றை அணியும் முறைபற்றியும் ஆன பல செய்திகளை இவ்விருபாடல்கள் தருகின்றன. இவ்விருபாடல்களும் சைவ வாழ்வு வாழும் எளிய மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு விளங்குகின்றன.



பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
பருத்ததிண் ணையிலிருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் முன்றாலும் வாங்கினும்
திகழ்தம் பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநர கென்பர்கண்டாய்
வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. (87)

என்ற இந்தப் பாடல் திருநீறு வழங்குவது பற்றியும் பெறுவது பற்றியும் தெளிவுபடுத்துகின்றது.

1. திருநீற்றைக் குதிரை, சிவிகை, உயர் பலகை, திண்ணை முதலியவற்றில் அமர்ந்து கொண்டு பெறுதல் கூடாது.

2. திருநீறு வழங்குபவர் கீழ்நிற்க, பெறுபவர் மேலாக நிற்கவும் கூடாது. வழங்குபவர் மேல் நிலையிலும், பெறுபவர் கீழ்நிலையிலும் நின்று பெறுதல் சிறப்பாகும்.

3. ஒருகை கொண்டு திருநீறு பெறக்கூடாது. இருகைகளாலும் பெறவேண்டும். மூன்று விரல்களைப் பயன்படுத்தி வாங்குதல் கூடாது.

4. அரிய பாதையில் நடக்கின்றபோது, அசுத்தநிலத்தில் இருக்கின்றபோது திருநீற்றைப் பெறவும் கூடாது. சூடவும் கூடாது.

5. முக்கியமான குறிப்பு ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் அதனை வேண்டாது மறுக்கவும் கூடாது.

- இவ்வகையில் தவறுகளை நீக்கித் திருநீறு பெறவேண்டும். தவறுகளுடன் பெற்றால் நரகம் செல்ல நேரிடும் என்று எச்சரிக்கின்றது குமரேச சதகம்.


திருநீற்றைச் சூடிடுவதற்கு சில முறைமைகள் உண்டு. அதனைப் பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதுஒழுக
நித்தம் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
சத்தியும் சிவனுமென்னலாம்
மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. (88)

1. சிவ சிவ என்று சொல்லி திருநீற்றைப் பணிந்துப் பக்தியோடு பெற்றிட வேண்டும்.

2. நீற்றினைக் கையால் எடுத்து, தரையில் அது சிந்திவிடாதபடி விரல்களால் நெற்றியில் அழுந்தும்படி பூசவேண்டும்.

- இவ்வாறு பூசினால் நெடிய வினைகள் பூசியவரை அணுகாது. உடல் பரிசுத்தமாகும். இவர்களிடத்தில் நிமலன் நீங்காமல் இறைவியோடு முகத்தில் குடியிருப்பான். அகத்தில் அவன் நடனமாடுவான். இந்நீற்றினை அணிவதால் மனசஞ்சலம் ஏற்படாது. இச்செய்திகள் மேற்பாடலில் எடுத்துரைக்கப் பெறுகின்றன.

நாளும் திருநீறு வாங்குகையில் இந்நெறிமுறையைக் கடைபிடித்து அன்பர்கள் திருநீற்றின் பெருமை குன்றாமல் காக்கவேண்டும். சூடவேண்டும். போற்றவேண்டும். மந்திரமாவது நீறு என்ற சம்பந்தர் வாக்கு மெய்ப்பட குமரேச சதகமும் முயன்றுள்ளது.

சிவபெருமான் தனக்கான அனைத்துப் பொருள்களையும் தான் மட்டும் கொள்ளாது தன்னைச் சார்வோரான அடியார்களும் அப்பொருள்களை அனுபவிக்க அருளும் பெருங்கொடையாளன். எனவே சிவன் அவனே திருநீற்றை அணிந்து குருவின் வசம் அளித்து மக்கள் அனைவருக்கும் சென்றுசேரும் நடைமுறையில் திருநீற்றைப் படைத்தளித்துள்ளான். இந்நடைமுறையை வெற்றிகரமாகச் செய்து நலமுடன், பலமுடன் பக்தியுடன் வாழ்வோம்.

*****
நன்றி - முத்துக்கமலம்

கருத்துகள் இல்லை: