நகரத்தார்களின்
வருங்கால சமுதாயமான இளைஞர்கள் தற்போது பொறியாளர்களாக, மென்பொருள் வல்லுநர்களாக உருவாகி
வருகிறார்கள்.நகரத்தார்களின் பரம்பரைத் தொழிலான
வட்டித்தொழில், வணிகத் தொழில் மற்ற இனக்குழுவினரின் ஆதிக்கத்தால் குறைவுபட்டுக்கொண்டே
வருகிறது. இதுபோல கலைத்துறையிலும் நகரத்தார்களின் எண்ணிக்கை அருகியே வருகிறது. பேச்சு,
எழுத்து, நாடகம், திரைத்துறை போன்றவற்றில் மிகுதியாக இருந்த நகரத்தார்கள் தற்காலத்தில்
குறைந்த அளவிலேயே இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் கலைஞர்கள், எழுத்தாளர்கள்
தங்களின் குழந்தைகளை தங்கள் பாதைக்கு வரச்சொல்லுவதில்லை. அக்குழந்தைகள் விரும்பும்
பாதைகளுக்கு அக்குழந்தைகளை அனுப்பிவிடுகிறார்கள்.
எழுத்துத்துறையில் நம்பிக்கைக்குரிய நகரத்தார்களாகக்
கண்ணதாசன், தமிழ்வாணன் போன்ற பிரபலங்கள் இருந்தும் தற்போது படைப்புத் துறை மிக வெற்றிடமாகவே
இருக்கிறது. இக்குறையைப் போக்குபவர்களில் ஒருவர் எஸ்பி, வீஆர். சுப்பையா அவர்கள். செட்டிநாட்டு
மண்வாசனைக் கதைகள் பலவற்றை எழுதி மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ள அவர்கள் எழுதிய சிறுகதைத்
தொகுப்பான அப்பச்சி சொன்ன கதைகளை அவர் கைகளால் பெற்றுப் படிக்கும் பெருவாய்ப்பினைத்
தற்போது கோவை சென்றிருந்தபோது பெற்றேன்.
அவர் அப்பா சொன்ன கதைகள், அவரே புனைந்த கதைகள்
என்று பலவும் குழுமிய கதைத்தொகுப்பு அத்தொகுப்பு. இதில் உள்ள பல கதைகள் அளவில் சிறிதானலும்
சிந்தனையில் பெரியவை. குமுதம் வாசகராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் எஸ்….வீஆர். சுப்பையா
அவர்கள் குமுதம் இதழ்போலவே மாற்றி யோசித்துப் பல புதிய உத்திமுறைகளைக் கையாண்டு நிகழ்வுகளைக்
கதையாக்கி உள்ளார்.
கதை எழுதும்போதே பலப் பல சிந்தனைகள் அக்கதை நிகழ்வுகளுடன்
ஒட்டி அவருக்கு நினைவிற்கு வருகின்றது. அவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வாசகருடன்
தனக்கு ஒரு நீண்ட உறவை அவர் ஏற்படுத்திக்கொள்கிறார்.
கதைகள் நிகழ்வுக் கோர்வைகளாக படிக்க இன்பம் தருவனவாக
உள்ளன. பிள்ளைமார்களின் கதைகள், நகரத்தார்களின் கதைகள் , மற்ற இனத்தாரின் கதைகள் என்று
பல சமுதாயம் சார்ந்த கதைகளாக இக்கதைகள் விளங்குகின்றன.
சாமார்த்தியமான பேச்சு என்ற தலைப்பில் அமைந்த
கதை நகரத்தார் மரபின் சின்னமான கழுத்திரு (கழுத்துரு) பற்றி அமைகிறது. குறிப்பாக திருமணத்தின்போது
கழுத்திருவை பிற இடங்களில் இருந்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்ற நடைமுறையை முன்வைத்து
இயங்கும் கதை இது. வெள்ளிக்கிழமை என்பதால் திருமணத்தில் கட்டி விட்டுத் தந்துவிடுவதாகச்
சொல்லி வாங்கி வந்தக் கழுத்துருவை நாளைக்குத் தருவதாகச் சொல்லும் செய்திக்கு ‘‘நாலு
மெத்தை போடுங்கள். எங்களுக்கு இரவு பலகாரம் ஏற்பாடு செய்யுங்கள். இரவு இங்குத் தங்கி
காலையில் கழுத்திருவைத் தந்ததும் வாங்கிக்கொண்டு போகிறோம்’’ என்ற பதில் சாமார்த்திய
பேச்சாக அமைகிறது. இந்தப் பதிலைக் கேட்டதும் மறுப்பு சொல்லாமால் வெள்ளிக்கிழமை என்றாலும்
கழுத்திருவைத் தந்துவிடுவது நல்லது என்ற முடிவிற்கு வருகிறார் இக்கதையின் தலைவர். நகரத்தார்களில் கொடாக் கண்டர்களும், விடாக்கண்டர்களும்
இருக்கிறார்கள் என்பதே இக்கதை சொல்லவரும் செய்தி.
தன் அனுபவமாக சுப்பையா அவர்கள் எழுதியுள்ள பர்மா
பற்றிய கதை இத்தொகுப்பில் முக்கியமான கதை. நகரத்தார்கள் பர்மாவில் வாழ்ந்த செல்வ மிகு
வாழ்க்கையின் சில பகுதிகளை இக்கதை சொல்கிறது. இதனைப் படிக்கும்போதே பர்மாவில் நகரத்தார்கள்
இழந்த சொத்துகளின் சோகம் மனத்தை வருத்துகிறது.
நகரத்தார்களின் மேலாண்மைக்கு வந்த சோதனையும், இந்திய அரசாங்கம் அதற்காக எந்த தீர்வையும்
காணமால் விட்டுவிட்ட அரசியல் சிக்கலையும் மையமி்ட்டு எழுதப்பெற்ற கதை இது. பர்மாவில்
சொத்து வைத்திருந்த நகரத்தார்களின் கண்ணீர் சாட்சியாக இக்கதை விளங்குகிறது. கதையின்
பெயர் ‘எது பெரிய இழப்பு’ என்பது. ஆமாம் பர்மாவில் விட்டு வந்த சொத்துகள் மிகப்பெரிய
இழப்பு.
காசின் அருமை என்ற தலைப்பில் அமைந்த கதையும் நகரத்தார்களின்
வருங்காலம் படிக்க வேண்டிய மிக முக்கியமான கதை.
இத்தொகுப்பில் மிகச் சிறிய கதையாக அமைவது இக்கட்டான
சூழ்நிலை என்ற கதை. ஆனால் மிக நுட்பமான கதை. மருத்துவர்கள் அதிகம் இல்லாத இந்தியா பற்றிய
கதை. நாட்டுமருத்துவரான தன் மாமனாரிடம் தன் தொடைப்பகுதியில் வந்த கட்டியைக் காட்டவும்
முடியாமல், அதன் வலியைப் பொறுக்கவும் முடியாமல் தவிக்கும் மருமகளின் இக்கட்டினைக் காட்டும்
கதை.
சுப்பையா அவர்கள் நல்ல கதை சொல்லியாகவும் விளங்குகிறார்.
கதை சொல்லி என்றால் பழைய நாட்டுப்புறக் கதைகளைக்
கேட்போர் வியக்கும்படி சொல்லும் முறையாகும். அது சுப்பையா அவர்களுக்கு கைவந்த கலையாக
விளங்குகிறது. மேலும் அவரின் சொந்தக் கதைகளும் அவரின் படைப்புத்திறத்திற்குச் சான்றாக
விளங்குகின்றன.
இன்னும் பல கதைகளை அவர் வழங்கவேண்டும். ஒரே ஒரு
வேண்டுகோள். குமுதம் இதழின் எழுத்துச் சாயல் சற்று அதிகமாக எழுத்தில் உள்ளது. அது தவறல்ல.
அது உங்கள் சொந்த எழுத்தில் ஆளுமை செலுத்துவதைத் தவிர்த்து தங்களின் உண்மைச் சொருபத்தை
எழுத்தில் வடியுங்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. சமுதாயப்பணி
தேவகோட்டை பற்றிய நல்ல வலைதளத்தை நடத்தி வருகிறீர்கள்.
பல தகவல்களை நான் தேவகோட்டைக்கு வந்தபோது மற்றவரிடம் கேட்காமல் இத்தளம் மூலம் தெரிந்துகொண்டேன்.
உங்களை நேரில் பார்த்தமைக்கும், தங்களின் பழக்கம் கிடைத்தமைக்கும் மிக்க நன்றிகள்.
நூல் பற்றிய விபரம்
எஸ்வி, வீஆர். சுப்பையா, அப்பச்சி சொன்ன கதைகள், உமையாள் பதிப்பகம், 37 எஸ்.என். டி லே அவுட், நான்காம் வீதி, டாடாபாத், கோயமுத்தூர், 641012 (94443056624)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக