ஞாயிறு, டிசம்பர் 09, 2012

அருட்கவி கு.செ. இராமசாமியின் கனல் மணக்கும் பூக்கள்-கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்



முனைவர் மு.பழனியப்பன்


கனல் மணக்கும் பூக்கள்,
அருட்கவி கு.செ. இராமசாமி,
23ஃ15 சிவன்கோயில் தெற்குத் தெரு,
சிவகங்கை,630561,
விலை ரூ. 120, 2012
    கவிதை பூமி சிவகங்கை. எண்ணற்ற கவிதையாளர்களின் இருப்பிடம், பிறப்பிடம், துவங்கிடம் சிவகங்கை. இங்கு அருட்கவி கு.செ. இராமசாமி என்ற பழுத்த தமிழ்ச் சான்றோர்- இசை, சோதிடம், ஆன்மீகம் என்ற பல துறைகளைச் சார்ந்தவர், தனது எண்பதாம் வயதிலும் சிவகங்கையைக் கவிதை பூமியாக்கிக் கொண்டுவருகிறார். எண்ணற்ற கவியரங்குகள், கண்ணதாசனின் நெருக்கம், பாவேந்தரின் பழக்கம், காரைக்குடி அழகப்பா கல்லூரியின் செல்லப்பிள்ளை, வ.சுப. மாணிக்கம் என்ற அறிஞரின் வளர்ப்பு, மன்னார்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை அரசு கல்லூரிகளின் தமிழ்த்துறைத்தலைவர் என்று எண்ணற்ற புகழுக்குச் சொந்தமானவர் இவர். இவரின் இசை செறிந்த பக்திப்பாடல்கள் பழனி பாதயாத்திரை, பாகம்பிரியாள் பாதயத்திரை ஆகியனவற்றை அருள் மெருகேற்றிக் கொண்டுவருகின்றன. பக்தர்களைக் களியாட்டம் போட வைக்கின்றன.
    சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் பழுத்த பழமாக வீற்றிருந்த அவரை அவர் சொற்றொடரில் சொல்வதானால் “தவத்திற்கு ஒருவர், தமிழுக்கு இருவர்” என்ற நிலையில் பல நாள்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  நாங்கள் இருவராக அவரின் அரசுப்பணி நெளிவு சுளிவுகளை, ஐhதகர்களின் மனதை, தமிழ்க்கவிதையின் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் உள்ள அவரின் இல்லம் களமானது. மாடி வைத்த பழங்கால வீடு. மீராவின் வீட்டருகில் என்று சொன்னால் பலருக்குப் புரியும். மாடிக்குத் தற்போது அவசியமே இல்லை. அவருக்கு ஏறமுடியாத உயரத்தில் மாடி இருக்கிறது. நடக்கமுடியாத தூரத்தில் சிவன் கோயில் இருக்கிறது. நினைவில் நிற்கும் செய்திகளுடன் சிறிதளவு உணவுடன், பெருமளவு மருந்துடன், நிறைந்த அருள்உள்ளத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் காத்துக்கிடக்கும் அவரின் தற்போதைய கவிதைத் தொகுப்பு கனல் மணக்கும் ப+க்கள்.
    கடந்தகால, நிகழ்கால, எதிர்காலச் சிந்தனைகளை, மரபு சார்ந்த கவிதைகளாக, புதுக்கவிதைகளாக, கதைக்கவிதைகளாக தந்துள்ள அவரின் படைப்புள்ளம் இளமையாகச் சுடர்விடுகிறது.
    பூக்களை அவர் அனுபவிக்கும் விதம் சுவையானது. நெடியது. பூவின் தொடர்பைத் தமிழின் தொடக்ககாலம் முதல் விரிவான கவிதையாக வடித்துள்ளார். கனல் மணக்கும் பூக்கள் என்ற அக்கவிதையின் தலைப்பே இத்தொகுப்பின் தலைப்பாக உள்ளது. நெடிய கவிதை. உயிர்ப்புள்ள கவிதை. சுவைக்கின்ற கவிதை என்ற அளவில் அக்கவிதையின் ஆளுமை அவரை நம்முன்னால் கவிதை நாற்கலியில் உயரவைக்கின்றது.
    நீர்ப்பூ, நிலப்பூ
    கோட்டுப்பபூ, கொடிப்பூ
    பூக்களில் நான்கு வகை
    அகத்திணை ஐந்துக்கும்
    ஐவேறு மலர்கள்
    புறத்திணை
    ஏழென்றால் ஏழுக்கும் ப+ ஏழு
    அவற்றால் புரிபடும்
    அக்காலப் போர்க்கூறு
    எட்டாவதாய் வரும் திணை வாகை
    வெற்றி
    கிட்டியவனுக்கு அது தலைப்பாகை
    முல்லைப்பூ கற்புக்கு
    வாகைப்பூ வெற்றிக்கு
சங்கப் பூக்களின் மணம் கூறும் நல்ல கவிதை இது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைக்  கூறியுள்ளார் என்று தமிழாசிரியர் சொன்னதும் கபிலர் ஏன் “செஞ்சுரி அடிக்கவில்லை” என்கிறார் மாணவர். கு.செ. இராமசாமி இதோ மாணவர்கள் மொழியில் செஞ்சுரி அடிக்கிறார்.
    குறிஞ்சிப்பாட்டு அகவல்
    அதில்
    தொண்ணூற்றொன்பது மலர்கள்
    நூறாகத் தேவை ஒருமலர்
    அந்த ஒன்று
     தலைவி என்னும் திருமலர்
குறிஞ்சிப்பாட்டின் தலைவியே ஒரு பூ என்றால் அவள் தனக்குச் சூட்டிக்கொண்ட 99 மலர்களும்  பூவிற்குப் ப+ச்சூட்டியது போலல்லவா இருக்கும். அழகான வளமான கற்பனைக்கு இடம் வைக்கிறார் கவிஞர். இந்தக் கவிதை சீதை, கண்ணகி இருவரையும் கனல் மணம் பரப்பும் திருமலர்களாகக் கொண்டுவந்துக் காட்டுகின்றது. இன்னும் இந்தக் கவிதைக்குள் மற்றொரு நுட்பம் இருக்கின்றது.
    பதுமை என்பதால் பாவை
    தினம்
    புதுமை என்பதால் பூவை
என்று இல்லறத் தலைவியைத் தினம் மலரும் புதுமைப் பூவாகக் காண்கிறார் கவிஞர். தினம் தினம் பற்பல பூக்களைத் தேடும் ஆண்வண்டுகளுக்கு தினம், தினம் புதுமைப் பாவை தலைவி என்னும் பூவை என்பதை இந்தக் கவி வரிகள் எடுத்துரைக்கின்றன.
    மேல்நாட்டுக் காதலுக்கும் தியாகம், ரசனை உண்டு என்பதை இத்தொகுதியின் மற்றொரு கவிதை எடுத்துக்காட்டுகின்றது. டெல்லா, ஜிம் என்ற இளந்தம்பதிகள் வறுமையின் பிடியில் சிக்குண்டு அன்பை மட்டுமே அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அந்நேரத்தில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக இருவரும் இருவருக்காக ஏதாவது பரிசுப் பொருள்களை வாங்கத் தனிதனியாக முடிவெடுக்கின்றனர். இவள் தன் நீளமான கூந்தலை விற்று அவனுக்காக கடிகாரச் சங்கிலி வாங்குகிறாள். அவனோ கடிகாரத்தை விற்று அவளுக்குச் சீப்புகள் வாங்குகிறான். இருவரும் கிறிஸ்துமஸ் நாளில் தங்களின் பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் அளிக்கின்றனர். அவன் தந்த சீப்புகளால் இவள் சீவிக்கொள்ள தலையில் நீண்ட முடியில்லை.  இவள் தந்த கடிகாரச் சங்கிலியைத் தன் கையில் கட்ட அவனிடம் கடிகாரமே இல்லை. இந்தச்சூழலில் கவிஞரின் கவிதையடிகள் பிறக்கின்றன.
    கடிகாரம் இல்லை, அதைக் கட்டும் சங்கிலி உண்டு
    கூந்தல் தலையில் இல்லை. அதைக் கோதும் சீப்புகள் உண்டு
    ஒன்றை இழந்தால் ஒன்று, தியாகம் உயர்த்திப் பிடிக்கும் நின்று
 இதுவே காசற்ற காதலின் மேன்மை. அன்புடைய காதலின் அருமை. காட்சிகளின் வழியாக கதையை நடத்திச் செல்லும் கிடைக்காத கவிதைப்பணி கு.செ. இராமசாமியின் கவிதைப்பணி.
    காதலிக்காகக் கண்களை இழக்கிறான் ஒரு காதலன். காதலி கண்ணொளி இல்லாதவள். அவளைக் காதலிக்கிறான் அவன். அவள் “எப்படியாவது கண்ணொளி பெற்றுத் தாருங்கள், உங்களை மணக்கிறேன்” என்கிறாள் அவள். அவனும் படாதபாடு பட்டான். ஆனால் அவளுக்குக் கண்ணொளி கிடைத்த பாடில்லை. நிறைவில் ஒருநாள் அவளுக்கு கண் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அவள் கண்ணொளி பெற்றாள்.
    “அன்பே, உனக்குப் பார்வை அளிக்க
     என்னிரு கண்களை நான்தான் ஈந்தேன்.”
    “மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி
     கண்தந்த உமக்குக் கைகுவிக்கின்றேன்.
     திருடனை மணந்து தெருவில் நின்றாலும்
     குருடனை மணக்க நான் குருடியா இன்னும்?”
மேற்கண்ட உரையாடல்தான் முன்னாள் குருடியான காதலிக்கும், இந்நாள் குருடனான காதலனுக்கும் இடையே நடைபெற்றது. முன்னர் காட்டப் பெற்ற கவிதையில் இருந்த காதலின் தியாகம், பின்னர் உள்ள இக்கவிதையில் இருக்கும் சுயநலத்தின் முகத்திரையைக் கிழிப்பதாக உள்ளது. ஆயிரம் மனித உள்ள வேறுபாடுகள் நிறைந்தது இந்த உலகம் என்பதை இந்த முரண்பாடுகளுடைய கவிதைகள் உணர்த்திநிற்கின்றன.
    காதலும் ஆன்மீகமும் இலக்கியமும் கைகோர்த்து அணிவகுத்து நிற்கும் நல்ல கவிதைத் தொகுதி இது. ஐயப்பன், கிருஷ்ணர், இராமகிருஷ்ணர், குருநானக், ஒஷோ போன்ற பலரின் கருத்துகள் இக்கவிதைத் தொகுதியில் எடுத்தாளப் பெற்றுள்ளன. கவிஞரின் ஆன்மீக ஆற்றல் கொண்டு ஆன்மீகத்தின் தூய வாசலைப் பின்வரும் கவிதை திறக்கின்றது.
    சாமி கனம் ஆசாமிகளின் கனம்
    அழுத்தி நெரிக்க அலங்கார வண்டியை
    இழுத்து வருமே இரண்டு காளைகள்
 
    வழியெல்லாம் அடடா, வாணவேடிக்கை
    கூட்டம் கூட்டமாய்க் கும்பிடுவோர்கள்
    எல்லாம் தமக்கென எண்ணி மாடுகள்
    செம்மாந்து நடக்கும், திமிரோடு பார்க்கும்
என்று சாமியைத் தூக்கிவரும் மாடுகளின் பார்வையை அளக்கும் இக்கவிதை விடிந்தவுடன் அம்மாடுகள் வில்வண்டியில் ப+ட்டப்பட்டு நேற்றை அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கும் சூழலையும் எடுத்துரைக்கின்றது,
    ~~வேகமாய் அதட்டி வீதியில் ஓட்டுவார்
    வீதியில் வானவேடிக்கைகளும்,
    கூடித் திரண்டு கும்பிடுவோரும்
    காணாமல் சற்றே கலங்கி அதன்பின்
    “வேதகோஷம் நாதம் சங்கீதம்
    ஏதும் நமக்காக இல்லை இல்லை
    தலைக்குமேலே நாம் தாங்கி வந்த
    சிலைக்கே அத்தனை சிறப்பும்”
    என்ற தெளிவு வந்தது.
காளைகளின் கௌரவத்தை நேற்றும் இன்றும் கொண்டு அளக்கிறது இக்கவிதை.
    இதுபோன்று ராஜாக்களின் இயல்பினையும் இக்கவிஞர் அளந்து காண்கிறார். ஒரு ராஜா பாதையெல்லாம் முள், கல் இருப்பதைக் கண்டு வீதிகள் எல்லாவற்றையும் தோல் கொண்டு மூடிட உத்தரவு இட்டானாம். அவ்வரசனின் அவையில் இருந்த விகடகவி “ வீதிக்குத் தோல் போடுவதை விட்டுவிடு, பாதத்தைத் தோல் மீது வைக்கத் தைத்துக்கொடு” என்று அறிவுறுத்தினானாம். இதன் காரணமாய்க் கவிஞர் மனித குல வரலாற்றில் செருப்பினை உயர்ந்த கண்டுபிடிப்பாகக் கருதுகிறார்.
    “நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் முயற்சி
    செருப்பைக் கண்டுபிடித்த -இது
    படிவளர்ச்சி”
என்று நெருப்பையும் செருப்பையும் பாடுகிறார் கவிஞர்.
    உடல்வலு குறைவதாலும், நாள்களின் எண்ணிக்கை தேய்வதாலும் வாழ்நாள் நிறைவைக் கவிஞரின் உள்ளம் எண்ணிப் பார்க்கின்றது.
    வீணை மீட்டுவதில் நேரம் கழிகின்றது
    வாசிக்க முடியவில்லை
    சருகு சேர்ப்பதில் பொழுது கழிகின்றது
    தீக்காய முடியவில்லை
    ஆக்குவதி;ல் நாள் கழிந்தது
    அருந்த முடியவில்லை
    சேர்ப்பதில் காலம் கழிந்தது
    செலவழிக்க முடியவில்லை
    சீவிச் சிங்காரித்துப் புறப்பட்டேன்
    தேர் நிலை குத்திவிட்டது
என்ற இந்தக் கவிதை தாகூரின் கீதாஞ்சலியை நினைவுபடுத்துகின்றது. இவரின் நிறைவுக்கால வாழ்வின் சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றது.
    எதையும் சிரிப்பாய்ச் சொல்வது இவரின் இயல்பு. சாகக் கிடக்கும் ஒருவரை இவர் பார்த்துவர ஒருமுறை இவர்  சென்றார். அவரோ ‘நான் சாகப்போகிறேனே’ என்று இவரிடம் கூறியதும்  இவர் அவரைப் பார்த்துச் சொன்னாராம் ‘உனக்குச் சாவே வராது. நீ சிரஞ்சீவி’ என்றாராம். அதற்கு அவர் ‘பிறந்தவரெல்லாம் இறப்பதுதான நியதி’ என்றதும்
    ~~வாழ்ந்தவர் தானே சாவார், நீயோ
    வாழ்ந்ததே இல்லையே? வாழ்ந்தால்தானே
    சாவதற்கு”
 என்றாராம். நகைச்சுவையான வாழ்க்கை இது. பிறருக்கு நடந்தால் நகைச்சுவை. நமக்கு நடந்தால் இழிவு.
    வாழ்வதற்கான, வாழ்ந்தற்கான அறிகுறிகள் என்று பின்வருவனவற்றைக் கவிஞர் பட்டியலிடுகிறார்.
    நல்ல உணவை உண்டதில்லை.
    நல்ல ஆடை உடுத்ததில்லை
    மனையாளுக்கு மல்லிகைப்ப+வோ
    சிறுகளுக்குச் சீனிமிட்டாயோ
    வாங்கிக் கொடுக்கும் வழக்கமில்லை
    எது சொன்னாலும் அதை அவன் கேளான்
    எது நடந்தாலும் அதை அவன் பாரான்
    தெருவில் அழகுத் தேர்வந்தாலும்
    தெப்பம் பார்;க்க ஊர் சென்றாலும்
    சினிமா,சர்க்கஸ், திருமணம், கோவில்,
    ஊர்வலம், கோஷம் ஒன்றையும் மதியான்
    சாதி சனத்தார் சண்டி என்பார்
    அலுவலகத்தில் அமுக்குளி என்பார்
    நண்பர்கள் வடையைக் ரசித்துக் கடிக்க
    சூடான தேநீர் சுழற்றிக் குடிக்க
    பார்த்துப் பார்த்தே இவன் பசியாறிவிடுவான்
    வாங்கவும் மாட்டான் வழங்கவும் மாட்டான்.
    … மனிதனா நடக்கும் மரமா என்ற
    புனித வாக்கிற்குப் பொருத்தமானவன்
    மரத்திலும் கோந்து வடிவதுண்டு
    கல்லிலும் பாசி கப்புவதுண்டு
    வறண்ட பாலையாய் வாழ்ந்தவன்
இத்தனை அடையாளங்களும் வாழாதவனின் அடையாளங்கள். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றில் யாரேனும் இருந்தாலும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் அர்த்தம் இருக்கும். வாழ்வதில் அர்த்தம் இருக்கும். சாவதில் அர்த்தம் இருக்கும்.
    கதைகளையும் நிகழ்வுகளையும் எளிமை கலந்து சொல்லும் எண்பது வயதுக் கவிஞரின் வற்றாத கவியாற்றின் ஒரு சாரல் இது. இன்னும் பற்பல இவரால் படைக்கப் பெற்றிருக்கின்றன. அத்தனையும் படிக்க அவரையும் சந்திக்க வாருங்கள் சிவகங்கைக்கு

1 கருத்து:

Tamil Breaking News சொன்னது…

நல்ல ஒரு தகவல்.
மிக்க நன்றி.