புதன், நவம்பர் 05, 2008


வெடிகள் வாங்க‌ வியத்தகு காரணங்க‌ள்

சொந்தங்கள் மடிய

தேசநலன் கருதி

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்

இருந்துப் பற்ற வைக்க

இந்தத் தீபாவளிக்கு

புஸ்வானத்தைக் கட்டாயம் வாங்குங்கள்


சம்சாரம் முகம் கூடத்

தெரியாமல்

மின்சாரம் படுத்தும் பாட்டில்

மத்தாப்பு கொளுத்த மறந்துவிடாதீர்கள்


விலைவாசி ஏறி

பொருளாதாரம் வீழ்ந்து

வாங்குவோர்

சக்தி குறைந்து நிற்கும்

சாட்டையைக் கொளுத்தி வீசுங்கள்

அதுவே சரியான தீர்வு


அணுகுண்டு செய்ய

அனுமதி நமக்கு இல்லை

எனவே நாம் வெடிக்கத் தக்கது

வெங்காய வெடியே

அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்


சரவெடிகள்

மழையில் நனைந்த மனிதச் சங்கிலிகள் போல்

கலைந்தும் கலையாமலும்

மோசம் செய்யலாம்.

தனிவெடியே நல்லது.


புவி வெப்பம் அதிகமாகும்

ஒலி மாசு அதிர்ந்து விடும்

அதனால் புகையில்லா ஊதுவத்தியே

இந்தத் தீபாவளிக்குப் போதும்

புகைந்தால்

அதற்கும் அபராதம் கட்ட நேரிடும்


துப்பாக்கிகள் தேவையில்லை

அவை இலக்(ங்)கை(யை)க்

குறிவைத்து விடலாம்.

சுத்தியல் தேவையில்லை

அது கட்சிச் சின்னம் ஆகிவிட்டது.

பொட்டுவெடிகளைப்

பொசுக்க வெறுங்கல்லே போதும்

கற்காலம் நோக்கி நாம் பயணிக்கிறோம்

என்பதற்கு இதுவே சாட்சி வெடிகளை வாங்க

வியத்தகு காரணங்கள் இவை.
கருத்துரையிடுக