செவ்வாய், ஏப்ரல் 25, 2006

சந்திப்பு

மனிதர்கள்
சந்திக்க மறுக்கிறார்கள்

வீட்டில்
எல்லோரும் சந்திப்பது
அபூர்வமாகி விட்டது,

அவரவர்க்கு
பணி நேரம்
பகலிலும் இரவிலும்
மாறி மாறி வருகிறது

அப்பாவிடம் நேரடியாக
பேச
வெட்கப்பட்ட மகனால்
தொலைபேசியில்
அரைமணி நேரம் கருத்து
சொல்லமுடிகிறது,

மனைவி ஓர் ஊரில்
கணவன் மற்றொரு ஊரில்
குழந்தை உண்டு அவளுடன்
இனி வேண்டுமா சந்திப்பு

கடன் பெற்றவரை
அவரின் வீடு தேடிவந்தும்
சந்திக்க முடிவதில்லை,

அலுவலகத்தில் உள் இணைப்புகள்
வழியாகவே காரியங்களை
நிகழ்த்திக் கொள்ள முடிகிறது,

பொது இடங்களில் சந்திப்புகள் நாகரீகமற்ற முறையிலேயே அரங்கேறுகின்றன,

சந்திப்புகள் நிகழ்வதே இல்லை
பெரும்பாலும்,

எதற்காகச்
சந்திப்புகளற்ற வாழ்க்கை

முகத்திற்கு முகம்
காண இயலாத வாழ்க்கை

எதைச் சந்திக்க
இவ்வளவு விரைவாய் முன்னேறுகிறது

கைவினை


குடைகளின் திருவிழா
நூலாலும் தாளாலும்
பற்பல வண்ணங்களில்

வாழை மட்டையில்
செருகி
வலம் வரும் தெருவிழா

கடைகளில்
எல்லாம் நிச்சயம் இடம் பிடிக்கும்

5 ரூபாய்,
10 ரூபாய்
கூவி விற்கும் சிறுவர்கள்

பிள்ளையார்
பின்னால் வைத்தபின் அலங்காரம் நிறைவெய்தும்

வீதிக்கு வீதி
கைவினைக் கலைஞர்கள்
எவர் பதிய வைக்கப்போகிறார்
இவர்களின் கலையாற்றலை

வியாழன், ஏப்ரல் 20, 2006

நம்பி வந்த வழியில் சேக்கிழார்



சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய இரு காப்பியங்களும் தமிழ்மண்ணில், தமிழர் வாழ்வைத்,தமிழர்க்குக் கூறுவனவாகத் தமிழரால் படைக்கப்பெற்றவை. இவை தமிழர் வாழ்விற்கும், பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உரைகல்லாக விளங்குவன.
சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம். தமிழின் முதற்காப்பியம்.
புதுமையான இவ்விலக்கியவகையைச் செய்ய முற்பட்டபோது இளங்கோவடிகள், ஒரு திட்டமிடலை தனக்குள் வகுத்துக் கொண்டிருக்கவேண்டும். செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் சிலப்பதிகாரமாக எழுந்துள்ளது. தமிழகத்தின் முப்பகுதிகளையும் களமாக்கிக் கொண்டு, தமிழரின் ஒருங்கிணைப்பாக, தமிழரின் இலக்கியச் செம்மையாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்திற்குக் கூறிய செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் ஆக்கப்படல், தமிழரின் ஒருங்கிணைப்பு, தமிழரின் இலக்கியச் செம்மை ஆகிய அனைத்து கூறுகளும் பெரியபுராணத்திற்குப் பொருந்தும். ஒரு வரியில் சுந்தரர் வடித்ததை, ஒரு பாடலில் நம்பியாண்டார்நம்பி வழி மொழிந்ததை அடிப்படையாகக் கொண்டு, அடியார்தம் வாழ்விடங்களுக்குச் சென்று அவர்கள் பற்றிய வாழ்வைக் கேட்டறிந்துச் சேக்கிழார் செய்துள்ள இக்காப்பியமும் மிகச்சிறந்த திட்டமிடலைத் தன்னுள் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.
சிலப்பதிகாரம் காப்பியத்தலைவர் ஒருவர் குறித்த தனிக்காப்பியம். ஆனால் பெரியபுராணம் ஒருவர் தழுவிய அறுபதிற்கு மேற்பட்டவரை உள்ளடக்கிய காப்பியம். இவ்வேறுபாடு சேக்கிழார் என்னும் படைப்பாளருக்குப் பலவித நெருக்குதல்களைத் தந்திருக்கும். இதன் காரணமாகவே காப்பியத்தலைமை குறித்த கருத்துவேறுபாடுகள் பெரியபுராணத்திற்கு ஏற்பட்டது. ஆனால் சேக்கிழார் தனது திட்டமிட்ட காப்பியப்படைப்புத்திறனாலும், கவிதைநலனாலும் படைப்பாக்கத்தில் தனக்கு நேர்ந்த பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.
தனக்கு முன்னால் நிகழ்ந்த காப்பியப் படைப்பாக்கங்கள், அவற்றின் காப்பியஅமைப்பு, காப்பியமரபு, இராமாயண படைப்பு நிகழ்தல் இவற்றினைக் கருத்தில் கொண்டு, அதே நேரத்தில் தன் பாடுபொருளை ஏற்றத்தாழ்வின்றி பாடவேண்டிய சூழல் சேக்கிழாருக்கு நேர்ந்துள்ளது.
சிலப்பதிகாரத்தின் செவிவழிக்கதையை அரசன் கேட்க, சீத்தலைச்சாத்தன் கேட்க, இளங்கோ கேட்க- உணர்ச்சிமயமாக இருந்தது. அதனால் அப்படைப்பாக்கத்திற்கு உணர்வுமயமான நேரடித்தன்மை உதவியது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒற்றை வரியில் அடையாளம் காட்டப்பெற்ற அடியார்கள், ஒரு பாடலால் அணிசெய்யப் பெற்ற அவர்கள் ஒரு காப்பியப்பகுதியாக மாறவேண்டிய, மாற்றப்படவேண்டிய காப்பிய திட்டமிடல் சேக்கிழாருக்கு வாய்த்தது.
முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றவேண்டும் என்ற நெறி ஒருபுறம், காப்பிய மரபு ஒருபுறம், இரண்டிற்கும் இடையில் அறுபத்துமூவரின் வாழ்வைக் குறைவின்றி வரலாற்று அடிப்படையில் தரவேண்டிய உண்மைத்தன்மை மற்றொரு புறம்- என்ற பல கோணச் சிக்கல்களுக்கு இடையில், ஒருகாப்பியத்தைப் படைத்து- அதனைத் திருமுறைகளில் ஒன்றாீக, பக்திக்குக் காட்டாகத் தந்துள்ள சேக்கிழார் இதற்காக மிகச் சிறந்த திட்டமிடலைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என்பது உறுதி. அதனை உரசிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
தொகை, வகை, விரிநூல்
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத்தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம் (பா.எ.146)
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன்(பா.எ.349)
என்பன சேக்கிழாரின் மொழிகள். இவற்றின் மூலம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை அடியொற்றி யாம் காப்பியம் செய்யப் புகுந்தோம் எனச் சேக்கிழார் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகின்றார். எம்பிரானின் சொந்தங்களான அடியார்கள் வரலாறு சுந்தரரால் சொல்லப்பெற்ற முறையிலேயே என்னால் சொல்லப்பெறுகின்றது எனவும் சேக்கிழார் இப்பாடல்களின்வழி அரிதியிட்டு உரைக்கின்றார்.
ஆனால் சுந்தரரால் குறிப்பிடப்பெறாத செய்திகளைக் கொண்ட பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநகரச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம், நிறைவாக அமைந்துள்ள வெள்ளானைச்சருக்கம், ஆகியன காப்பியத்திற்கு முன்னுரை, முடிவுரைப்பகுதிகளாகச் சேர்க்கப்பெற்றுள்ளன. இவை சேர்க்கப் பெற்றதற்கான காரணங்கள், எடுக்கப் பெற்ற மூலங்கள் எவையென ஆராய வேண்டியுள்ளது.
காப்பிய இலக்கணம் கருதி இவற்றைச் சேக்கிழார் இணைத்துள்ளார் என்பது உறுதி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் முற்ற மொழிவது பெருங்காப்பியம் என்பதால் இங்கு இவை சேர்க்கப் பெற்றுள்ளன என்பது தெளிவு. இருப்பினும் சுந்தரர் பாடாத இவற்றை எம்மூலம் கொண்டு, எதன் சான்றாகக் கருதி சேக்கிழார் இணைத்துள்ளார் என்ற வினாவை எழுப்பினால் அதற்குக் கிடைக்கும் விடை திருத்தொண்டர் திருவந்தாதி என்பதாக இருக்கும். பெரியபுராணத்தின் வகை நூலாகக் கருதப்பெறும் இந்நூல் பல வழிகளில் பெரியபுராணக் காப்பியக் கட்டமைப்பிற்கு உதவியுள்ளது. எனவே இவ்விரண்டின் அடிப்படையிலேயே சேக்கிழார், சுந்தரர் சுட்டாத சிலவற்றையும் இணைத்துள்ளார் என்பது உணரப்பெறுகின்றது.
காப்பிய இலக்கணம் கருதியவை
பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, திருநகரச்சிறப்பு முதலானவை காப்பிய இலக்கணமரபு கருதிப் படைக்கப்பெற்றவை. எனினும் அதனுள்ளும் சுந்தரர் சார்புச் செய்திகளே இடம்பெற்றுள்ளன.
திருமலைச்சிறப்பு
இப்பகுதி கயிலை மலையின் பெருமையாக விரிகின்றது. இதனுள் உபமன்னிய முனிவர் தென்திசையில் இருந்து ஒரு ஒளி புறப்பட்டு சிவஉலகம் போவதாகவும், அதுவே நம்பியாரூரர் சிவ இருக்கை சேரும் நிலை என்பதாகவும், அவரால் தென்திசை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இதன்மமூலம் திருமலைச்சிறப்பென்பதும் சுந்தர் சிறப்பெனவே கருதத்தக்கதாக உள்ளது.
திருநாட்டுச்சிறப்பு
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகுஇல் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்த் கூட்டம் நிறைந்துஉறை
குலவு தண்புனல் நாட்டு அணி கூறுவாம் (பா.எ. 50)
எனச் சுந்தரர் பாடிய தொண்டர் கூட்டம் உறையும் சோழநாட்டை நாட்டுச் சிறப்பாகச் சேக்கிழார் பாடியுள்ளார்.
திருநகரச்சிறப்பு
சுந்தரர் பரவையாரை மணந்த இடமும், அடியார் கூட்டம் உறையும் இடமும், திருத்தொண்டத்தொகை பாடிய இடமும் ஆன திருவாரூரைச் சேக்கிழார் திருநகரச் சிறப்பாகக் கண்டுள்ளார்.
இவை காப்பியக் கூறுகள் கருதி பெரியபுராணத்துள் இடம்பெற்றாலும், தொகை நூலான திருத்தொண்டத்தொகை வழி நடக்கும் முறைமை இவற்றுள் உள்ளமை குறிக்கத்தக்கது.
திருத்தொண்டர் திருவந்தாதி வழிப்பட்டவை.
நம்பியாண்டார் நம்பி படைத்த திருத்தொண்டர் திருவந்தாதி- பெரியபுராணத்திற்கு சேக்கிழாரால் வகை நூலாகக் கொள்ளப்பெற்ற சிறப்புடையதாகும். இநநூலிலிருந்துச் சேக்கிழார் காப்பியக் கட்டமைப்பிற்கான பல கூறுகளைப் பெற்றுள்ளார்.
திருத்தொண்டர் திருவந்தாதியில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தாதி வகை மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டு அமைக்கப்பெற வேண்டும். திருத்தொண்டர் திருவந்தாதி குறைவுபட்டுள்ளதே என்று எண்ணினால், நம்பியாண்டார் நம்பி சுந்தரரின் திருத்தொண்டத்தொகை- பதினொரு பாடல்களையும் தம் நூலுக்கு முன்னதாகக் கொண்டு நூறு என்ற எண்ணிக்கையை முழுமைப்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்தால் குறை தேய்ந்து நிறைவு பெறும். இக்குறிப்பு இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்.
சுந்தரர் வாழ்விணைப்பு
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என திருத்தொண்டத் தொகை நேரடியாக அடியார் வணக்கத்தில் தொடங்குகின்றது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியோ
தொண்டத்தொகை வகை பல்க மந்தாதியைச்
சொன்ன மறைக்குல நம்பி பொற்பாதம் துணை தி.தி. பா.எ.1.)
எனத் தொடங்குகின்றது. இப்பாடலில் திருத்தொண்டத்தொகைக்கு வகைநூலான திருத்தொண்டர் திருவந்தாதியைச் செய்த நம்பியாண்டார் நம்பியின் பொற்பாதங்களின் துணை வேண்டப்படுகிறது. அதன்பின் தில்லை வாழ் அந்தணர் பெருமை கூறப் பெற்று நூல் திருத்தொண்டத்தொகை வழி நடக்கின்றது.
தில்லை வாழ் அந்தணர் புராணத்திற்கு முன்னதாக சிலவற்றை இணைத்துக் கொள்ள இப்பாடல் சேக்கிழாருக்குத் துணைபுரிந்துள்ளது. மேலும் திருத்தொண்டத்தொகை, வகை ஆகியன எழுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இவ்விடத்தில் வைத்து அதன்பின் அவை கூறும் அடியார் வாழ்க்கையைக் கூறுவதற்கான முற்கதையைக் கூறிடவும் இப்பாடல் துணையாகியுள்ளது.
தடுத்தாட்கொண்ட புராணம் என்ற பகுதியைச் சேக்கிழார் அமைத்துக்கொண்டு, அதனுள் சுந்தரர் வரலாற்றின் தொடக்கப் பகுதிகளைப் படைத்துள்ளார். தடுத்தாட்கொண்ட புராணம் -திருத்தொண்டத்தொகை பாடுதல் வரையான சுந்தரர் வாழ்வு நிகழ்வுகளை உள்ளடக்கியது என்பது இங்குக் கருதத்தக்கது.
தம்பெருமான் கொடுத்தமொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம்பொருளால் திருத் தொண்டத்தொகையான திருப்பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்
(பா.எ.348)
என்ற பாடல் மேற்கூற்றினுக்குச் சான்றாகும்.
பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் மீண்டும் விரிவு பெறுகின்றன. சுந்தரர் ஏயர்கோனார்க்கும் அடியேன் எனக் குறிப்பிட்டு முடித்துவிட, அதனை விரித்த நம்பியாண்டார் நம்பி திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணி தவிர்ப்பானென்று உடைவாள் உருவி(தி.தி.பா.எ.35) எனப்பாடுகின்றார். இதன்மூலம் ஏயர்கோனுக்குப் பிணி தீர்க்கும் வரலாறு, அதனுடன் தொடர்புபட்ட சுந்தரர் வாழ்வு நிகழ்ச்சிகள் ஆகியன இவ்விடத்தில் காட்டப்பெறுவதற்கு சேக்கிழாருக்குக் களம் கிடைத்தது.
நிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கமும்- நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் நிறைவுப்பாடலை அடியொற்றியதே ஆகும்.
. . . வாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம்
மானவ வாக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்
வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே
(தி.தி.பா.எ.89)
என்ற பாடலின் விரிவே வெள்ளானைச்சருக்கமாகும்.
இவ்வாறு முழுமையான காப்பியமாக பெரியபுராணத்தை அமைத்துக்கொள்ள திருத்தொண்டர் திருவந்தாதி மிகுதியும் சேக்கிழாருக்கு உதவியுள்ளது என்பது தெளிவாகின்றது.
சுந்தரர் பெற்றோர்
சுந்தரர்தம் பெற்றோரான இசைஞானியார், சடையனார் ஆகியோர்க்குத் தனித்தனிப்பாடல்களைத் திருத்தொண்டர் திருவந்தாதி அமைத்துள்ளது. அதன்வழிப்பட்டு அவர்களையும் சேக்கிழார் தொண்டர் கூட்டத்துள் அமைத்துக் கொண்டு காப்பியம் செய்துள்ளார். இவர்களுக்குச் சேக்கிழார் ஒவ்வொரு பாடல்களை அமைத்துள்ளமை எண்ணற்குரியது.
சருக்கப் பிரிவினுக்கான அடிப்படை திருத்தொண்டர் திருவந்தாதியின் இறுதியில் திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதற்குறிப்புகள்- மறவாமல் இருப்பதற்காகத் தொகுத்துச் செய்யுள் வடிவில் தரப்பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு.
பணிந்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை, இலைமலிந்த,
அணித்திகழ் மும்மை, திருநின்றா, வம்பறா, வார்கொண்ட சீர்,
இணைத்தநல் பொய்யடிமை, கறைக்கண்டன், கடல் , , , ,
மணித்திகழ் சொற்பத்தர், மன்னிய, சீர்மறை நாவனொடே.
(தி.தி.பா.எ.88)
இதில் இடம்பெற்றுள்ள பாடல் முதற்குறிப்பு அகராதி சேக்கிழாருக்கு, முதற்குறிப்பாக மட்டும் தெரியாமல் அவை சருக்கத்தலைப்புகளாகவும் தெரிந்துள்ளன. சேக்கிழார், சுந்தரர் வழிப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் காட்டியுள்ள அடியார்களை ஒவ்வொரு சருக்கத்தில் அமைத்துக்கொண்டு, சுந்தரர் மொழியையே அதற்குத் தலைப்பாகவும் ஆக்கிக்கொண்டமை அவரின் காப்பியத் திட்டமிடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சுந்தரர் துதிகள்
திருத்தொண்டத்தொகையுள் ளஆருரன் ஆரூரில் அம்மானுக்காளே என ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன்னை உளப்படுத்திப் பாடுகிறார் சுந்தரர். இதன்மமூலம் பதினொரு இடங்களில் சுந்தரர் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பதினொரு வரிகளில் இடம்பெற்றுள்ள சுந்தரர்தம் குறிப்புகளை ஆங்காங்கே விரித்து பதினொரு பாடல்களாக திருத்தொண்டர் திருவந்தாதி வாழ்த்திச் செல்லுகின்றது. இவ்வழியில் விரிவைச் செய்ய வேண்டிய சேக்கிழார் பதினொரு இடங்களில் சுந்தரர் தம் கதையைப் பகுதி பகுதியாகச் சொல்லிச் சென்றிருக்கவேண்டும். இது படிக்கும் வாசகர்க்கு இடையூற்றை ஏற்படுத்தலாம் எனக் கருதி அவ்வவ் இடங்களில் சுந்தரர் துதியாக ஒரு பாடலைச் செய்து அதற்கும் அமைதி கண்டுள்ளார். இதன்மூலம் பெரியபுராணச் சருக்கங்கள் அனைத்தும் (தடுத்தாட்கொண்ட புராணம், வெள்ளாணைச் சருக்கம் நீங்கலாக) சுந்தரர் துதி கொண்டு நிறைவு பெற்றுள்ளன. பெரும்பாலும் காப்பிய உட்பிரிவுகள் கடவுள் வாழ்த்தோடு தொடங்கும். முடிவில் வணக்கங்கள் ஏதுமிராது. ஆனால் பெரியபுராணம் காப்பிய உட்பிரிவின் முடிவில் ஒரு வாழ்த்தோடு முடிவது புதுமையாகும்.
இவ்வாறு சேக்கிழார் தொகை, வகை நூல்களை உளப்படுத்தித் தன் விரி நூலை யாத்துள்ளார். பெரியபுராணத்தைப் பதிப்பிக்க விரும்புவோர் இவையிரண்டிற்கும் முதலிடம் தந்து பின்பு பெரியபுராணத்தைப் பதிப்பித்தால்தான் அப்பதிப்பு முழுமையும், நிறைவும் அடையும். இதனைத் தமிழ்ப்பதிப்பக உலகம் நினைவில் கொள்ளவேண்டும். இவற்றை உள்ளடக்கிய பல பதிப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் குறிக்கத் தக்கது சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பதிப்பு. இனியும் இம்முறை தொடரவேண்டும்

பேசாநாடகம் பிறந்ததுவே


1970 ஆம் ஆண்டு பாரதிதாசனாருக்கு, அவரின் பிசிராந்தையார் நாடக நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பெற்றது. கவி ஞரான அவருக்கு கவிதைக்கான பரிசு வழங்கப் பெறாமல், நாடகத்திற்கு ஏன் வழங்கப் பெற்றது என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். பிசிராந்தையார் நாடகம் கவிதை நாடகமாகும். பாரதிதாசனாரின் கவிதை புனைதிறனுக்கும், நாடக ஆற்றலுக்கும் அந்நூல் சான்று பயப்பதால் அவ்விரு திறனுக்காக பாரதிதாசனாருக்கு அப்பரிசினை சாகித்திய அகாடமி வழங்கியுள்ளது என உணரும்போது மேற்கண்ட ஐயம் சற்று விலகலாம்.
இருப்பினும் பாரதிதாசனாரின் கவிதையாற்றல் மக்களிடம் பரவிய அளவிற்கு, நாடகத்திறன் சென்றடையவில்லை. கவிதைகளைப் படைத் த பாரதிதாசனார் அவற்றோடு ஆங்காங்கே நாடகங்களைப் படைப்பதிலும் மிகவும் ஆர்வம் கொண்டு விளங்கியுள்ளார். நல்ல தீர்ப்பு(1944), செளமியன்(1947), பாரதிதாசன் நாடகங்கள்(1959), பிசிராந்தையார்(1959- தொடக்குதல்), அமைதி, பாண்ழயன் பரிசு திரைப்பட ஆக்கமுயற்சி(1961) எனத்தொடரும் அவரது நாடகப்பணிகள் அவருக்கிருந்த நாடக ஆர்வத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
மேற்கண்ட நாடகப்பட்டியலில் இடம்பெறும் நாடகங்களிலிருந்து அமைதி என்ற நாடகம் முற்றிலும் மாறுபட்டப் புதுமை உடையதாக உள்ளது. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைத்தும் வசனம் பேசாப் பாத்திரங்களாகச் செயலாற்றும் செயல் வீரர்களாகப் படைக்கப் பெற்றுள்ளன. பாரதிதாசனார் இந்நாடகம் குறித்துப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். அமைதி என்னும் இச்சிறு நாடகம், நாடகஉறுப்பினர்- நடிகர் எவருக்கும் பேச்சில்லாது நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது... இந்நாடகம் எம்மொழியாராலும் நடத்துவிக்க முடியும், கருத்துக்களும் உலகப்பொதுவானவை. என்ற அவரின் கருத்துப்படி இந்நாடகம் இயக்கும் நிலையிலும், கருத்தமைவு நிலையிலும் உலகப் பொதுமை பெற்றே விளங்குகின்றது. மொழி என்ற வட்டத்தைக் கடந்து, உணர்வுகளால் இந்நாடகம் நடைபெறுவதால், அனைத்து மொழியினராலும் உணரத்தக்க வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்நாடகம் நகைச்சுவையுணர்வுடையதாகவும், பொதுவுடைமைக் கருத்துக்களை முன்வைப்பதாகவும், புரட்சி எண்ணங்களை மெளனத்தால் செயல்படுத்துவதாகவும் அமைந்துவிளங்குகின்றது. இவ்வகைச் சிறப்புகளுடன் கதையமைப்பிலும் உயர்ந்து நிற்பதால் பழப்போருக்கு புதுவகை இன்பத்தினைப் பயப்பதாக உள்ளது.
பிண ஊர்வலத்தில் தொடங்கும் இந்நாடகம், கதைநாயகன் பிணமாகும் முடிவினைக் கொண்டுள்ளது. இத னால் நாடகத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அமைதிக்கான பின்புலம் இயல்பாக அமைய வாய்ப்புண்டாகிவிடுகின்றது. முதற்காட்சி -ஆர்பாட்டம், ஆடுதல், பாடுதல் இல்லா பிண ஊர்வலமாக நகர்வதால் நாடகம் அமைதி கொண்டதாய் தொடங்கிவிடுகின்றது. அதனை எதிர்பார்க்கும் வாசகரையும் அது அமைதிப்படுத்தி தனது அமைதிச் சூழலுக்கு கொண்டு வந்துவிடுகின்றது. மேலும் நிலையாமை உடைய உலகில் எதுவும் நிலையானதல்ல. அனைத்தும் மாறக் கூடியன,, பொருளை வறியவர்க்கு வழங்காது சேர்த்து வைப்பதால், சுயநலங்கொண்டே வாழ்வதால் பயனொன்றும் இல்லை,, பொதுநலத்திற்கு வாழ்தல் நன்று,, அதனால் வரும் புகழ் மட்டுமே நிலையானது என்ற தத்துவ நிலைக்கு பார்வையாளரைக் கொண்டுவருவதற்காகவும் இந்நாடகம் இறப்பு ஊர்வலத்தில் தொடங்கி, இறப்பிலேயே முடிவதாக பாரதிதாசனாரால் அமைக்கப் பெற்றிருக்கவேண்டும்.
மண்ணாங்கட்டியின் பயணம்
மண்ணாங்கட்டியின் பயணமாக நாடகம் அமைகின்றது. தனக்கென மனைவி, மக்கள், குடும்பம் ஏற்படா நிலையில், தன்தாயை இழந்த அவன் ஊரார் உதவியுடன் அவளுக்கு இறுதிக்கடன் செய்கின்றான். அதன்பின் அவ்வீட்டில் தனிமையில் இருக்கப் பிடிக்காது, சில துணிமணிகளுடன், காசுகளுடன் புறப்பட்டு விடுகின்றான்.
தங்குவதற்கு நல்ல வீடில்லா ஓர் ஏழைக்குத் தான் இருந்த வீட்டைக், கடிதம் மூலம் தந்து உதவுகின்றான். சேலை இல்லாக் கிழவியொருத்திக்குத் தன் அம்மாவின் ப டுச் சேலையைத் தந்து காக்கின்றான். பிள்ளையில்லா குடும்பத்திற்குத் தெருவில் வீசப்பட்ட, அனாதையாக்கப் பெற்ற ஒரு குழந்தையைத் தக்க முறையில் மறைமுகமாகத் தந்து இவன் குழந்தையையும் வாழவைக்கின்றான், குழந்தையற்ற குடும்பத்தையும் மகிழ்வு கொள்ளவைக்கின்றான். உணவில்லா ஏழைகளுக்குக் கோயில் மடப்பள்ளி உணவைப் பகிர்ந்தளிக்கின்றான். இரவில் ஒரு வீட்டிற்குத் திருட வந்த திருடர்களைத் தடுத்து அவ்வீட்டின் பொருட்கள் களவு போகாவண்ணம் காக்கின்றான். மற்றொரு ஊரில் பணத்தைக் குவித்து வைத்துள்ள பண்ணையார் இருவரின் சொத்துக்களுக்கு சேதமூட்டி அதனைச் செப்பமிடச் செய்வதன் மூலம் ஏழைகளுக்கு வாழ்வையும், வேலையையும் பெற்றுத் தருகிறான். பொன், மண், பெண், பதவி போன்ற எவ்வித ஆசைகளும் இல்லா மனிதனாய், மற்றவர்க்கு உதவும் தயாள குணம் மிக்கவனாக இவன் விளங்குகின்றான். பாரதிதாசனார் கண்ட புரட்சிமனிதன் இவனெனக் கொள்வது தகும். இறுதியில் சேதமுண்டாக்கிய நிலையில் காரணமானவன் தானே என்பதைத் ஒப்புக்கொண்டு அதற்கான தண்டனையாகத் தன் உயிரை இழப்ிபவனாக இவன் படைக்கப் பெற்றுள்ளான்.
சிறுகதையல்ல- நாடகம்.
மேற்சொன்ன நாடகக் கதையைச் சிறுகதையமைப்பில் சொல்லியிருப்பினும், சிறுகதையாக அதனை அமைக்காது நாடகமாகப் பாரதிதாசனார் படைத்துள்ளார். வரிக்குவரி பாத்திரச் செயல்முறைகளைக் கூறுவதாலும், பயணக்கதை என்பதால் காட்சிகளை அடிக்கடி மாற்றியமைப்பதாலும் நாடகமாக இதனை அவரால் படைக்க முடிந்துள்ளது.
எடுத்துக்காட்டிற்கு இரண்டாம் காட்சியின் தொடக்கப் பகுதியைச் சுட்டலாம். பிணத்தோடு சென்றவர்கள், மண்ணாங்கட்டி உள்ள வீடு நோக்கி வருகிறார்கள். மண்ணாங்கட்டி தன் வீட்டுக் குறட்டில் நின்று கைகூப்ப, பிணத்தோடு சென்று மீண்ட அனைவரும் கை கூப்பிச் செல்லுகின்றனர். என்ற காட்சி வருணனை- பாத்திரங்களின் செயல்பாடுகளை உரைத்து, படக்காட்சி போல நடிப்பவரைச் சுட்டி நிற்பதால் நாடகத்தன்மை பெற்றுவிடுகின்றது. இவ்வமைப்பிலேயே பாரதிதாசனார் இந்நாடகத்தினை நகர்த்திச் சென்றுள்ளார்.
நகைச்சுவை நலம்
பதினாறு பிரிவுகளைக் கொண்ட இந்நாடகம் ஆங்காங்கே நகைச்சுவைப் பண்பினையும் கொண்டு விளங்குகின்றது. இரவுப் பொழுதில் ஒரு வீட்ழல் திருட, திருடர்கள் இருவர் திட்டமிடுகின்றனர். ஒருவன் வீட்டின் வெளியில் நின்று கொள்ள, மற்றொருவன் உள்புகுந்து திருடத் தொடங்குகின்றான். அவ்வீட்டிலுள்ள இரண்டு சன்னல்களின் கம்பிகளையும் வளைத்து, அவர்கள் திருடத் தொடங்குகிறார்கள். உள்ளிருப்பவன் பாத்திர, பண்டங்களை எடுத்துத் தர மற்றவன் வாங்கி வெளியே வைத்துவிடுவது, பின் கொண்டு செல்வது என்பது அவர்களின் ஏற்பாடு. அத்திட்டம் நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது. அந்நேரத்தில் வெளியில் இருப்பவனை, மண்ணாங்கட்டி தன்னை வெளிப்படுத்திக் காடடி அச்சமூட்ட அவன் நடுங்குகின்றான். நழுவிச் செல்லும் அவன்மீது சிறுகல்லை எறிந்து, அவனை மண்ணாங்கட்டி ஓடச் செய்து விடுகின்றான். இதைப் படிக்கும்போதே வாசகர்கள் சிரிக்கும் சூழலுக்கு வந்து விடுகின்றனர். இதன்பின் உள்ளிருப்பவன் பொருள்களை எடுத்துத் தர, வெளியே மண்ணாங்கட்டி வாங்கிக் கொண்டு மற்றொரு சன்னல் வழியாக அதனை உள்வைக்க, திருட்டு தடுக்கப் பெறுகின்றது. கடைசியாக உள்ளிருப்பவன் சோறு, குழம்பு தர, அதை வாங்கிய மண்ணாங்கட்டி சன்னல் மீதே வைத்துவிட்டு மரமேறிக் கொண்டுவிடுகின்றான். உள்ளிருப்பவன் மெதுவாக வெளியேறி வந்து, தன் துணைவனை அங்குமிங்கும் தேடுகின்றான். காணாது கலக்கமுறும் வேளையில் ஒருகல் அவன் முன் வந்து விழுகின்றது. மற்றொருகல் அவன்மேல் விழுகின்றது. அவன் சோற்றையும், குழம்பையும் அள்ளிக்கொண்டு ஓடுகின்றான். இந்தக்காட்சி நகையுணர்வின் உச்சமாக பாரதிதாசனாரால் அமைக்கப் பெற்றுள்ளது. இக்காட்சித் தொடரை நகையுணர்வுடன், மிக சாமர்த்தியமாக, காரணகாரியத் தொடர்பு குன்றாமல் பாரதிதாசனார் படைத்துள்ளமை எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும்.
புரட்சிக்கருத்துக்கள்.
இந்நாடகத்தில் நகையுணர்வுக்கு அடுத்து புரட்சிக் கருத்துக்களின் வெளிப்பாடு சிறப்பிடம் பெறுவதாக உள்ளது. பெருமாள் கோவில் ஒன்றின் மடைப்பள்ளியில் தயாரிக்கப்பெறும் பண்டங்கள், ஏழைமக்களுக்குச் சென்று சேராது, உண்டு பெருப்பவர்க்குச் சென்றடைகின்றது. இதனைக் கண்ட மண்ணாங்கட்டி, அவ்வுணவைத் தந்திரமாகத் தான் பெற்று உண்டு, ஏழைகளுக்கும் ஈந்தளிக்கின்றான். கடவுள் மறுப்புக் கொள்கையுடையவரான பாரதிதாசனார், கோயில் உணவு ஏழைகளுக்குச் சென்று சேருமானால் அதன் நலம் ஏற்கத்தக்கதே எனக் கருதியுள்ளமை இக்காட்சி மூலம் தெரியவருகின்றது.
மற்றொரு காட்சி மூலம் மண்ணாங்கட்டி பணம் படைத்த பண்ணையாரின் கொழுத்த செல்வத்தை ஏழை மக்களும் பெற்றிட அமைதி வழியில் புரட்சி செய்கின்றான். அவன் ஏழைகளுக்கு எதுவும் தராத பெரிய பண்ணையாருக்குப் பாடம் புகட்ட ஊர் ஏரி யைப் பலர் உதவியுடன் உடைக்கின்றான். ஏரி நீர் புகுந்து, தன்வீட்டை நோக்கி அழிக்க வரும் சூழலில் அதனைச் செப்பனிட பெரிய பண்ணையார் ஊர்மக்களின் உதவியை நாடுகின்றார். இதன்மூலம் ஏழைகள் பிழைத்திட வN கிடைக்கின்றது.
இவ்வேலை முழயும் தருணத்தில் சின்னப் பண்ணையாரின் மாளிகைக்குப் பெரிய பண்ணையார் தீயிட்டு விடுகின்றார். பெரிய பண்ணையாரின் மனைவியைச் சின்னப் பண்ணையார் மோகிக்கும் மோக நாடகம் வெளிப்பட்டுவிடுவதால் இவ்வேற்பாட்டினைப் பெரிய பண்ணையார் செய்து விடுகின்றார். தீயினால் ஏற்பட்ட பேரழிவைப் போக்கிட மீண்டும் ஊர் மக்கள் உதவி நாடப் பெறுகின்றது. இதன்மூலம் மீண்டும் அவ்வேழைகள் வேலை பெறுகின்றனர்.
அதன்பின் இரு பண்ணையார்களுக்கும் இடையிலான பகை வளருகின்றது. பெரிய பண்ணையார் ஏரியை உடைத்தப் பலரைத் தாக்க முயலுகின்றார். அந்நேரத்தில் தானே அச்செயலுக்குக் காரணம் என மண்ணாங்கட்டி குறிப்பு எழுதித் தர அவனை அரசின் காவலர்கள் அடித்துத் துன்புறுத்துகின்றனர். அவன் மீளா வாழ்வெய்துகின்றான். ஏழைகள் வா வில் சமத்துவம் கண்ட அம்மாவீரன் சாதாரண மண்ணாங்கட்டி அல்ல, அவன் பொன்கட்டி. தன்னை உருக்கி, மற்றவர்க்கு அணியாக்கியவன் அவன். என்று அவன்வாழ்வை நாடக இறுதியில் எடுத்துரைக்கின்றார் பாரதிதாசனார்.
அமைதி என்ற தலைப்புக்கேற்ப அமைதியுடன் புரட்சிபுரியும் தீரனாக மண்ணாங்கட்டி இதில் படைக்கப் பெற்றுள்ளான். தன்வாழ்வு மடிந்தாலும் பிறர் வா வு எழத் தன்னை அவன் உரமாக்கிக் கொண்டுள்ளான். இந்நாடகத்தினைத் திட்டமிட்டு படைத்ததன் மூலம் பாரதிதாசனார் தமி நாடக உலகில் அழியா இடம் பெறுகின்றார். இவரது நாடக ஆற்றலின் முழுமையை உணரும் போது, சாகித்திய அகாதமி இவரது கவி, நாடக படைப்பாற்றலுக்கு இணைத்துப் பரிசை வழங்கியிருப்பதன் நோக்கம் புலனாகின்றது

பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்



பாவேந்தர் பாரதிதாசன் இசைத்தமிழ்த் தொகுப்புக்களை அவ்வப்போது படைத்துத் தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார். இசையமுது, இளைஞர் இலக்கியம், தேனருவி முதலான படைப்புக்கள் அவரின் தமிழிசைக் கொடைகள் ஆகும்.
தமிழிசை கருதி படைக்கப்பெற்ற பாடல்தொகுப்புக்களுள் ஒன்றான தேனருவி 1956 ஆம் ஆண்டு வெளிவந்தாகும். இக்காலகட்டம் தமிழ் நாட்டின் மிக முக்கியமான காலகட்டமாகும். 1953 ல் மொழிவாரி மாநில அமைப்பில் தெலுங்கு தேசம் உருவானது. இதன்பின் கர்நாடகம், கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் உருவாகத் தொடங்கின. மேலும் திருவிதாங்கூர் பகுதியின் பிடியில் இருந்த சில பகுதிகள் இணைந்து தமிழகத்தின் குமரி மாவட்டம் ஆயின. இச்சூழலில் 1956 ஆம் ஆண்டு இப்போதைய எல்லையுடைய தமிழகம் உருவாக்கப்பட்டது.
மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்தபின், அம்மாநில மக்களுக்கே மாநில உரிமைகள் அனைத்தும் உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. தமிழகத்திலிருந்து பிரிந்தது தெலுங்குதேசம் என்பதால் அம்மாநில மொழியான தெலுங்கு தமிழகத்தில் இசையில் ஏற்றம் பெற்றிருப்பதை பலரும் மறுத்து தமிழிசையை முன்னேற்றத் தலைப்பட்டனர். பாவேந்தரும் தமிழிசைக்காகத் தமிழன்னையிடம் விண்ணப்பம் செய்கின்றார்.
“புகன்றிடும் எனக்கும் கேட்கும் தமிழர்க்கும்
புரியாத் தெலுங்கில் நான் பாடுதல் வேண்டுமாம்
தகுந்தமிழ்ி; தன்னிலோர் தமிழ்மகன் தமிழில்
தமிழ்நாடில் பாடுவதை மறந்திட வேண்டுமாம்
விண்ணப்பம் கேள்; என் தமிழிசையே- தாயே!
விண்ணப்பம் கேள்” (பக். 3)
இப்பாடலடிகளில் தமிழ்நாட்டில் தமிழிசையைக் கொணரும் முயற்சி சுடடிக்காட்டப் பெற்றுள்ளது. இதே காலச்சூழலில், தஞ்சைப் பண்டிதர் மு. ஆபிரகாம், மதுரை நாதசுரமேதை பொன்னுச்சாமிப்பிள்ளை, விபுலானந்தர், இசையணிகலம். எஸ். இராமநாதர், கு. கோதண்டபாணியார் முதலானோர் தமிழிசையை ஆய்ந்து முன்னேற்ற உதவினர். பாவாணரும் தமிழிசைக்கு ஊக்கமூட்டினார். அவர் கர்நாடக இசையைத் தமிழிசையே என மொழிந்தார்.
'கூவும் இனிய குயிலே
குமரிநிலத் தென்னிசையே
மேவு கருநாடகமாய்
மிளிர்கின்றதெனக் கூவா '
(பாவாணர். இசைத்தமிழ்க் கலம்பகம். ப.61)
என்பது பாவாணரின் இசைப்பாடல். இவ்வாறு தமிழிசை காக்கப்படவேண்டிய சூழலில் பாவேந்தர் தேனருவி தொகுப்பைப் படைத்துள்ளார்.
இத்தொகுப்பில் குடும்பப்பெண்களின் துயரம், துயருற்ற மகளிர் என்ற தலைப்பில் சுட்டப்பெற்றுள்ளது. ’’இக்காலம் மகளிரின் எழுச்சிக்காலமாகவும் விளங்கியது. பெண்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் எழுந்தன. கல்வியின் விரிவாக்கமும், சமூக விழிப்பின் விளைவும் மகளிர் நிலையில் மாற்றம் எழத் தூண்டின. மகளிர் கல்விப் பயனைப் பெறும்நிலை சிறிது சிறிதாக விரிவடைந்தது. ஆசிரியைப்பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றிற்குச் செல்வோரின் எண்ணிக்கை பெருகியது. வெளித்தொடர்பும் விரிவடைந்ததுப் பொது வாழ்விலும் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன’’(தமிழக வரலாறும் பண்பாடும். ப. 575) என பாரதிதாசன் வாழ்ந்த காலப் பெண்கள் நிலையை செல்லம் எடுத்துக்காட்டுகின்றார். இக்கருத்தின் அடிப்படையில் பெண்களின் விழிப்புணர்வு காலமாகவும் 1950 காலப்பகுதி விளங்கியுள்ளது என்பது தெரியவருகின்றது. இவ்வாறு விழிப்புணர்வு கொண்ட பெண்கள் கூட்டம் ஒருபுறம் உருவானபோதும் பெண்களின் குடும்பத்துயரங்கள் குறைந்தபாடில்லை. பெண்களின் குடும்பத் துயரங்களை அவர்களாக வெளியிடவும் முயற்சித்தனர். ஆண்படைப்பாளர்கள் சிலரும் தம் படைப்புக்களில் குடும்பப் பெண்களின் துயரத்தை வெளியிட முயற்சித்தனர். அவ்வகையில் பாவேந்தரும் தேனருவி தொகுதியில் பெண்களின் துயரத்தைப் பாடல்கள் வடிவில் பதிவு செய்துள்ளார்.
மேற்சொன்னவற்றால் தேனருவி தொகுப்பு-பெண்ணுரிமை, தமிழின் இசை இனிமை கருதி பாடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதனால் தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் இத்தொகுப்பு பெறும் இடம் சிறப்பிற்குரியதாகின்றது.
பெண்களின் துயரம்.
குடும்பப் பெண்கள், பல துயரங்களை எதிர்கொள்ளுகின்றனர். அவற்றைக் காணும் படைப்பாள உள்ளங்கள் அவர்களுக்காக குரல்தருகின்றன. அத்தை ஒருத்தியிடம் மருமகள் படும்பாட்டை பாவேந்தர் பின்வருமாறு விவரிக்கின்றார்.
’’குற்றம் ஒன்றுமே செய்யாதபோதும்
கூந்தலைப்பற்றி இழுத்தார்- அத்தை
குப்புறத் தள்ளி மிதித்தார்.
முத்தம் கொடுக்க அத்தான் எனைத்தாவும்
முகத்திற் புண்கண்டு துடிக்கும்- அத்தை
அடித்தார் என்றால் என்ன நடக்கும்’’ (ப. 21)
என மருமகள் படும்பாடு பாவேந்தர் கைவண்ணத்தில் துயர்தரும் இசைப்பாடலாக வெளிப்பட்டுள்ளது. இப்பாடலில் மகனின் செயலற்ற போக்கும், மருமகளின் அவலநிலையும், அத்தையின் அடாதசெயலும் கண்முன் கவிதையாய் விரிகின்றன. கணவன் இருக்கும் சூழலிலே மனைவி படும் துயரம் இதுவென்றால், கணவன் இழந்த கைம்பெண்ணின் நிலை யாது என எண்ணிப்பார்க்கத் துயரம் கூடும். அவற்றையும் பாவேந்தர் இசைத்தமிழில் பாடுகின்றார்.
’’ஆடாத அரங்கானேன்
அன்பினில்லை என்பதனால்
சூடாத மலரானேன்.
தமிழற்ற நாடானேன்
தலையற்ற உடலானேன்.
கமழ்வற்ற பொழிலானேன்
காதலன் இல்லாததினால்
சூடாத மலரானேன்.’‘(ப.20)
என்ற பாடலிலும்,
’’காதலர்க்கு நான் வேம்பானேன்
காண அஞ்சுமோர் பாம்பானேன்- நான்
தீதுசிறிதும் செய்தறியேன் இன்று
தீராப்பழியை நான் சுமந்தேன்
அன்பு வாழ்வை மறந்தாரே-
அறத்தின் மேன்மை இகழ்ந்தாரே- இந்தத்
துன்ப வாழ்க்கை எனக்கேனோ-
என் துணைவரை இனி அடைவேனோ’’(ப.20)
என்ற பாடலிலும்
’’மீளா விடைபெற்று
விட்டு மறைந்தீரோ அத்தானே
ஆளான நாள் முதல்
அன்பு மறவாத அத்தானே
தோளோடு நீங்காத
தோளும் பிரிந்ததோ அத்தானே’’ (ப.21)
என்ற பாடலிலும் கணவனை இழந்த மனைவியின் ஓலத்தைக் கேட்கலாம். இப்பாடல்கள் ஒப்பாரியின் சாயலைப்பெற்றுத் தமிழிசையின் வருத்த மெட்டுபாட்டிகு உரியாதாகின்றன.
கணவனை இழந்தப் பெண்களின் அவலநிலையின் உச்சப்பகுதியாக மற்றொருபாடல் அமைகிறது. கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தியை அடைய ஒரு கயவன் முயல்கின்றான். அவனிடம்...
‘‘ஆளில்லாத வேளையில் வந்தீர்
அடுக்காத சொல் அடுக்கு கின்றீர்
தாளமுடியுமா சொல்வீர் நீவிர்
சற்றே வெளியில் செல்வீர் செல்வீர்
ஆளில்லாத. . . . . .
... ... ...
சமயம் சாய்ந்தன சாதி மறைந்தன
சாயா மடமைகள் சாய்ந்தன ஆயினும்
அமையும் மாதர்க்குத் தொல்லை கொடுத்திடும்
ஆடவர் மட்டும் ஒழிய வில்லையே
ஆளில்லாத. . . . . . (ப.22)
என ஒரு பெண் முறைகேட்கிறாள்.
இவளின் நிலைகண்டு பதறிய பாவேந்தர், அடுத்த அடிகளில் அவளுக்கு ஒரு தீர்வைச் சுட்டுகின்றார்.
’’தமி பெண்களின் படை ஒன்று வேண்டும்
தக்கைகள் உள்ளத்தைத் திருத்த வேண்டும்
உமியல்ல மாதர் வலக்கை -தீயர்
உயிரை இடிக்கும் உலக்கை- ஐயா
ஆளில்லாத. . . . . .
(மேலது)
என்ற இத்தீர்வு பெண்களுக்குத் தைரியம் ஊட்டுவதாக உள்ளது. வலக்கை, உலக்கை என அடுக்குமொழியால் பெண்களின் அவலத்திற்கு நல்ல தீர்வைப் பாவேந்தர் முன்வைக்கின்றார். தமிழ்ப்பெண்களின் படை உருவாக்கப் பாடிய பாவேந்தரின் திறம் இற்றைக்கும் தேவையானது.
விதவைப்பெண்கள் விதவைகளாய் இருப்பதால் தானே இத்துயரம் என எண்ணிய பாவேந்தர், அவர்களுககு மறுமணம் நடக்கக் கருத்துரு தருகின்றார்.
’’மறுமணம் புரிவதால் வராதொரு கேடும்
மறுமணமிலாத பெண் கெடுவதும் கூடும்
குறைபாட்டைத் திரைபோட்டு மறைத்திட வேண்டாம்
கூறினேன் நீ இதை எண்ணிட வேண்டும்’’ (ப. 23)
என்ற அவரின் உதவி மொழிகள் பெண்களுக்கு உதவி புரிவன.
இதன்மூலம் தேனருவி தொகுதி, தமிழிசை மேன்மைக்காக, தக்க சூழலில் பாடப்பட்டுள்ளது என்பது தெரியவருகின்றது. மேலும் தமிழிசையின் வருத்த மெய்ப்பாட்டிற்கு இலக்கியம் தர, பெண்களின் வருத்தங்களை முன்வைத்து, துயருற்ற பெண்கள் என்ற பகுதியைப் பாவேந்தர் பாடியுள்ளார் என்பது தெளிவு.
----

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள்




தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,
எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,
இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது,
Ordnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி, இந்த ஆங்கிலச் சொல்லிற்கே போர்படைக்கருவிகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கு இப்பெயர் உரியது என்று ஒரு மின்கலைக்களஞ்சியம் பொருள் தருகின்றது, இவற்றின் அடிப்படையில் படைக்கலச் சாலையரங்கம் அல்லது போர்க்கருவிகளின் தொகுப்பை -இச்சொல் குறிப்பதாகக் கொள்ளமுடிகின்றது, இவ்வகையில் தமிழர்த ம் போர்க்கருவித் தொகுப்பைப் பற்றி எடுத்துரைப்பதாகவும் தமிழர்தம் போர் அறிவியலை வெளியிடுவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது, இதன்மூலம் இன்றைக்கு வளர்ந்துள்ள போர் குறித்த அறிவியல் செய்திகளின் சிந்தனைகள் செயற்பாடுகள் பண்டைக்காலத்திலேயே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது என்பதை நிறுவ இயலும்,
தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,
மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்
மன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்வியூகம், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்,
படையும் கொடியும் குடையும் முரசும், நடைநவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய (தொல்காப்பியம், பொருளதிகாரம் 616) என்ற நூற்பாவின்வழி மன்னர்க்குரிய புறவடையாளங்கள் பெறப்படுகின்றன, இவற்றுள் படை முன்னணியில் முதலாவதாக உள்ளது, அதனுடன் களிறு, தேர், நடைநவில்புரவி ஆகியன இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது, கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும், இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க்கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும்,
எனவே நாற்படை உடைய அரசன் அடப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்கவேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது,
இந்நால்வகைப் படைகளை மன்னர்கள் பெற்றிருந்தமையைச் சங்க இலக்கியக் குறிப்புகளும் காட்டுகின்றன, நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று (புறநானூறு, 72), வினை நவின்ற பேர்யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலிகுரூஉத்துள் அகல்வானத்து வெயில் கரப்பவும் வாம்கரிய கருந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள்மிகு மறமைந்தர்தோள் முறையான் வீறுமுற்றதாம் (மதுரைக்காஞ்சி 47-54) என்பன மன்னன் நால்வகைப் படையைப் பெற்றிருந்தமையைக் காட்டும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்,
மன்னர் பின்னோர்
மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய (தொல், பொரு, மரபி, 628) என்ற நூற்பாவின்படி வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிய, வாழ இலக்கணம் பெற்றுள்ளனர், நூற்பாவை கூர்ந்து நோக்கினால் தேர், குதிரை ஏறிப் போர் புரியும் ஏனோர் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர் என்பது தெரியக் கிடைக்கும்,
இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன, அவை பின்வருமாறு,
தமிழரின் முப்போர்க்கருவிகள்
தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும், வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள் (கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176) என்ற குறிப்பும் இக்கருத்தினை அரண் செய்யும்,
இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும், அவற்றைத் தொடர்ந்த இலக்கியங்களிலும் காணப்படுகின்றன,
இம்முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்,
மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோலாற் செய்யப்பட்ட , புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176),
வாள்
தொல்காப்பியத்தில் வாளோர் ஆடும் அமலை (தும்பைத்திணை), ஒள்வாள் வீசிய நூழில் (தும்பைத்திணை), வாள்மங்கலம் (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது, போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே (புறநானூறு 97), ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறநானூறு 312), என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும்,
வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப்பாடல்வழி புலனாகின்றது, கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே ((புறநானூறு 63) என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாவதாகும்,
வேல்
வேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளான், புறம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில் பெரும்பகை தாங்கும் வேலினானும் என்று வேல் குறிக்கப்பட்டுள்ளது,
ஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும்போது கையது வேலே,, காலன புனைகழல் (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து (புறநானூறு 99), நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் (புறநானூறு 302), பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து (புறநானூறு 274), திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர ி(புறநானூறு 88), சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென (புறநானூறு 63) முதலான குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது,
சிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலால் தெரியவருகிறது, இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடாஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி (புறநானூறு 279) என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு கருதத்தக்கது,
வில்
வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர், கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9) முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன,
இவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது, மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது (புறநானூறு 98) என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தெளுவுபடுத்துகிறது,
படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்
சங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர், வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே (புறநானூறு- 309) என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்,
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம்கோமான்,வைந்நுதி
வேலே. (புறநானூறு, 95)
என்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் காட்டுகிறார்,
தொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது,
பின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன,
இப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் உள்ளது என்ற புகழ்க்குறிப்பு காணப்படுகிறது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர் என்பது தெளுவாகிறது,
படைவீடு
போரில் வெற்றிபெற்றபின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர், அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க்கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும், முல்லைப்பாட்டில் அப்படி ஒரு படை வீடு அமைக்கப் பெற்றிருந்தது, கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக (முல்லைப் பாட்டு 37-42) என்ற முல்லைப்பாட்டின் பாடலடிகளில் பயன்படா நிலை எய்திய போர்க்கருவிகள் மாற்றுவழியில் தங்கும் பாடிவீட்டின் சுவர்களாக மாற்றப்பட்டுள்ளமை குறிக்கப்பட்டுள்ளது, உடைந்த போர்க்கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றமை மேற்காண் வரிகாளல் தெரிய வருகிறது,
சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன, வில் ஏர் உழவர் பகைகொளினும்(குறள் 872), பிழைத்த வேல் ஏந்தல் இனிது(கு,772) (மேலும் வேல் பற்றிய குறட்பாக்களின் எண்கள், 113,774,775,772,546,550), வாள் ஆண்மை (கு, 614), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்(கு828), தெரிகணை எஃகம்(களவழி 5) என்றவாறு வில் வாள் வேல் ஆகிய படைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்குத் தக்க சான்றுகள் உள்ளன,
குறளில் காட்டப்பெறும் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்ற தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும், சங்க காலத்தில் நிலவிய போர்த்தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது,
காப்பிய காலத்தில் வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து (சிலம்பு 5,89) என்று சிலப்பதிகாரத்துள்ளும் வாள் என்ற போர்க் கருவி சொல்லாட்சி பெற்றுள்ளது,
ஒளிறுவாள் மறவரும், தேரும் மாவும் களிறும் சூழ் தர (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது, மேலும் இந்நூலில் அம்பு ஏவுறு மஞ்சை, ஆவக்கணைக்கால் காணாயோ அம்புப்புட்டில் (துயிலெழுப்பிய காதை64), காய்வேல் வென்ற கருங்கயல்(உதய குமாரன் அம்பலம் புக்க காதை) என உவமைகள் வாயிலாகவும் இயல்பாகவும் போர்க் கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன,(மன்மதனைக் குறிக்க பல இலக்கியங்களில் வில் பயன்படுத்தப் பட்டுள்ளது)
காப்பியகாலத்தின் பிற்காலத் தொடர்வாகத் தொடர்ந்த கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, இராமாயணத்தில் கம்பர் அம்புகளின் பல்திறன்களை எடுத்துரைக்கிறார், அம்புகளின் வகைகள், அவற்றின் இயல்புகள் குறித்த பல செய்திகள் கம்பரின் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன,
அதே நேரத்தில் இப்போக்கிலிருந்து வில்லி பாரதம் சற்று வேறுபட்டு படைக்கருவிகளின் வியூகங்கள், படைக் குழுக்களின் வியூகங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தருகின்றது,
வில், அம்பு, அம்புப்புட்டில் ஆகியவை அடங்கிய இக்கூட்டுக்கருவி தமிழர் போர்வாழ்வில் பெருத்த வளர்ச்சி அடைந்துள்ளமையை மேற்கண்ட இருகாப்பியங்கள் வழியாக அறிய முடிகின்றது,
கம்பராமாயணத்தில் இடம்பெறும் வேலோடு வாள் வில் பயிற்றலின் (பாலகாண்டம் நகரப்படலம் 12) என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிடுவதாக உள்ளது, மேலும் சங்கரன் கொடுத்த வாளும் , அங்கதன் உடைவாள் ஏந்த ஆகிய கம்பராமாயணப் பாடல்தொடர்கள் வாள் பயன்பாட்டிற்கான அகச்சான்றுகளாகும்,
இவை தவிர வேறு கருவிகளையும் கம்பராமாயண காலத்தில் தமிழர் பயன்படுத்தியுள்ளனர். தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் (கும்பகர்ணன் வதைப்படலம் 105) என்ற போர்ப்படை வரிசை காட்டும் பாடலின் மூலம் தமிழர் பயன் படுத்திய பல போர்க்கருவிகள் அறியக் கிடைக்கின்றன,
இராவணன் மூலபலம் என்ற தனது மிக வலிமை வாய்ந்த படைக் குழுமத்தை வைத்திருந்த குறிப்பு ஒரு பாடலில் காட்டப்படுகிறது, சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். (மூலபல வதைப்படலம்,11) இப்பாடலில் மூலபல படைகள் வைத்திருந்த போர்க்கருவிகள் தரப்பெறுகின்றன,
இவைதவிர வில் என்ற போர்க்கருவியை மிகத் திறமை வாய்ந்ததாகக் கம்பர தன் இராமாயணத்துள் காட்டியுள்ளார், இராமனின் வில் எதிரியைத் தாக்கி விட்டு அதன்பின் கடல் சென்று தன்னைத் தூய்மை செய்து கொண்டு மீண்டும் அவனது அம்பராத்தூணியில் வந்து சேரும் பெருமையதாகக் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளது, மேலும் இராமனின் வில் ஏழுமராமரங்களைத் துளைத்தது, வருணனை அழைத்தது,. தாடகை, வாலி, இராவணன் ஆகியோரை அழித்தது போன்ற அருஞ்செயல்களை ஆற்றியதாகவும் இராமாயணக்கதை செல்வதால் வில் என்ற போர்க்கருவி மேலும் சிறப்புடையதாக ஆக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது,
ஆயிரக் கோடி பல்லம், ஆயிரக் கோடி நாகக்கணை, கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு, கங்கபத்திரம், திங்களின் பாதி கோடி, கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன், பாரையின் தலைய கோடி, தாமரை தலைய வாளி, வச்சிரப்பகழி கோடி, முச்சிரப்பகழி, அஞ்சலி அஞ்சுகோடி (நாகபாசப் படலம் 107 முதல் 113 வரையுள்ள பாடல்கள் தரும் போர்க்கருவிகள்) ஆகியவற்றை இந்திரசித் பயன்படுத்தியதாக கம்பர் தெரிவிக்கின்றார், மேலும் அவன் வைத்திருந்த பிரம்மாத்திரம், நாகபாசப்படை ஆகியன மிகத் திறமை வாய்ந்ததாக இராமாயணத்துள் காட்டப்படுகிறது,
இவைதவிர இக்காப்பியத்துள் நேருக்கு நேர் போர் செய்யும் காலத்து ஒரு போர்ப்படைக் கருவிக்குத் தக்க எதிரானதாக மறுபடை ஏவப்படும்போது அவை இரண்டின் செய்களை கம்பர் எடுத்துரைக்கின்றார், இதன்வழி போர்க்கருவிகளின் எதிரெதிர் செயல்பாடுகள் விளக்கம் பெறுகின்றன, கீழே இராம இராவணப்போரின் போது பயன்படுத்தப் பெற்ற போர்க்கருவிகளின் பட்டியல் தரப்பெறுகிறது,
இராவணன் ---- இராமன்
தாமதப்படை சிவன்படை
ஆசுரப்படை அக்கினிப்படை
மயன்படை காந்தர்ப்பம்
தண்டு அம்பு
மாயைக் கணை ஞானக்கணை
சூலம் உங்காரம்
நிருதிப்படை பாதிப்பிறைமுக அம்பு
மேற்காண் பட்டியல்வழி இராவணன் பலவகைப் படைகளைப் பயன்படுத்தியபோதும் இராமன் வில், அம்பு கொண்டே பதில் போர் செய்துள்ளான் என்பது தெரிய வருகிறது, மேலும் உங்காரம் என்ற மூச்கின் மூலம் சூலப்படையைத் தகர்த்துள்ளான் இராமன், எனவே மூச்சும் ஒரு வகை எதிர்கருவியாகச் செயல்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது, பாதிப் பிறைமுக அம்பு என்பது இராமனின் தனிச்சிறப்பு மிக்க அம்பு ஆகும், இது கொண்டே இராவணனின் உயிர் தொலைக்கப் பெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது,
கம்பராமாயணம் மூலமாக அம்பு இணையற்ற இடத்தைத் தமிழரின் போர் வாழ்வில் பெற்றுவிட்டது என்பது தெரியவருகிறது,
இதற்கு அடுத்த நிலையில் வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன, தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் (படை எழுச்சிச் சருக்கம் 3), வாளினர், வேலினர், போர் வில்லினர் (கிருட்டிணன் தூதுச் சருக்கம் -190) எனத் தமிழர்தம் முக்கருவிகளையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது, இவைதவிர
வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன் கழுவர்க்கம்,
அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள், தண்டம்,
இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.
மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின; வான்
புடையே,
தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின; சோரிகள்
சோர்ந்திடவே,
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு
மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில பூங்
கரமே.
(கிருட்டிணன் தூதுச் சருக்கம்202 , 203)
என்ற பாடல்களில் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் பட்டியல் தரப்பெற்றுள்ளது, இவை தவிர வில்லிபாரதத்தில் படை அமைப்பு பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு,
போர்நாள்--- கெளரவர்----பாண்டவர்
3---கருட வியூகம்--- சந்திர வியூகம்
6---கிரவுஞ்ச வியூகம்---மகரவியூகம்
7---சகட வியூகம்--- பாம்புவியூகம்
8---சூசிவியூகம்---சகட வியூகம்
9---சருப்பதோபத்திரவியூகம்---பற்ப வியூகம்
11---சகட வியூகம்--- கிரவுஞ்ச வியூகம்
12---மகரவியூகம்--- மண்டல வியூகம்
13---சக்கர வியூகம்---மகர வியூகம்
இப்பட்டியல் வழியாக பாண்டவர் கெளரவர் பயன்படுத்திய படை அமைப்பு முறைகள் தெரியவருகின்றன, படை அமைப்பு முறைகள் நாளுக்கு நாள் மாறுபட்டனவாகவும், ஒருவர் பயன்படுத்திய அமைப்பு முறை மற்றவரால் வேறு ஒரு முறை பயன்படுத்தப்பட்டமை தெரியவருகிறது, சக்கர வியூகம் அபிமன்யூவை அழித்த வியூகம் ஆகும்,
இவ்வாறு பண்டைக்காலத்தில் படைக்கருவிகளாக மட்டும் இருந்த முப்படைக்கருவிகள் பிற்காலத்தில் படை அமைப்புமுறையில் பயன்படுத்தத் தக்க அளவில் வளர்ச்சி பெற்றன என்பது தெரியவருகிறது,
முடிவுகள்
தமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில் வேல் அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன,அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் பெற்றிருந்தனர்,திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர், முற்றிலும் பயனாகாத படைக்கருவிகள் படைவீடுகள் அமைக்கப் பயன்பெற்றுள்ளன,
சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன, தொல்காப்பியத்திலும் பண்டைத்தமிழர் போர்க்கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன, இவற்றின் மூலம் படைக்கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அவற்றின் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளமுடிகின்றது, கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் படைக்கருவிகள் திட்டமிடப்பட்ட அளவில் தேர்ந்த அமைப்பு முறையில் கையாளப்பட்டுள்ளன என்பது தெளுவாகின்றது,
----பயன் கொண்ட நூல்கள்
சோ, ந, கந்தசாமி, புறத்திணைவாழ்வியல்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1994
இராம, தட்சிணாமூர்த்தி, சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள், தேவிபதிப்பகம், சென்னை,--
தாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை, பச்சைப்பசேல், சென்னை, 2004
மற்றும்
தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்து நூல்கள்
____

செவ்வாய், ஏப்ரல் 18, 2006

மண்ணும் மரமும்



பழைய மாளிகை
ஏலத்திற்கு வந்தது

பத்து பன்னிரண்டு
சுத்தத் தேக்குத் தூண்கள்

நான்கு
மிகப் பெரிய கதவுகள்

எதற்கும்
எந்தக் குறைபாடும் வராமல்
லாரியில் ஏற்றப்பட்டன.

உடைந்த மாளிகை
இடிந்த செங்கற்கள்
உதிர்ந்த காரைகள்

ஒரே ஒரு தூண்மட்டும்
உளுத்துப்போய்

ஏலம் எடுத்தவன்
அதனை
எதற்கும் ஆகாது
என்று விட்டுவிட்டான்

உளுத்த மரத்திற்கு
இப்போது உற்சாகம்

நான்தான்
இந்த மாளிகையைத் தாங்கி வந்தேன்
ஏதோ போதாத காலம்
ஏலம் விடப்பட்டு விட்டது

என்னைத்தான்
முதன்முதலாக
இந்த மாளிகையில் நட்டார்கள்

மற்றவர்கள்
எல்லாம் பிறகு வந்தவர்கள்
அவர்கள் எல்லாம்
இப்போது லாரியில்
ஏறிப் போய்விட்டார்கள்

அவர்களிடம்
குறைகள் ஏராளம்
குறையே இல்லாதவன்
நான் மட்டுமே

நான்மட்டுமே
இந்த மாளிகை
வந்த நாள் முதல் இருக்கிறேன்
இனிமேலும் இருப்பேன்

நான் வானத்தையும்
தாங்குவேன்
பூமியையும் தாங்குவேன்

காற்றே
என்னைக் கேட்டுத்தான் இயங்கும்

அதற்கு வழி தெரியாது
என்வழிப்படி தான் அது நடக்கும்

என்னைவிட
உறுதியானவன்
உலகத்தில் இல்லை

என்னைவிட நிறைவானவன்
யாரும் இல்லை

பேசிக் கொண்டிருந்த
உளுத்த மரத்தில் சிறுவன்
ஒருவன்
சிறுநீர் கழித்து
மானபங்கப் படுத்தினான்

அப்போதும் அது பேசியது
முன்னொரு காலத்தில்
இப்படித்தான்
ஒரு சிறுவன் வந்தான்,,

மணிவிழா அழைப்பு


எல்லோருக்கும் வணக்கம்.
என் தந்தையாருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. அனைவரும் அவ்விழாவிற்கு வருகை தரவேண்டும்.

என் தந்தையார் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள்நல்ல பேச்சாளர்
மயிலம், மேலைச்சிவபுரி ஆகிய தமிழ்க் கல்லூரிகளில் பணியாற்றியவர்
தற்போது திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முதல்வராக உள்ளார்.

அவரிடம் படித்த தமிழ் மாணவர்கள் யாராவது இம்மடலைப்பார்த்துத் தொடர்பு கொண்டால் மகிழ்வேன்

திங்கள், ஏப்ரல் 10, 2006

சாலை


சாலை

காட்சி-1

சென்னை மாநகரம்
நிரம்பி வழியும்
சக்கரம் முளைத்த குப்பைத்தொட்டி
குப்பைச் சேகரிப்பு வாகனம்
நாளை
காலை வரும்
இந்தச் சாலையில்
இன்னும் மூன்று இருக்கின்றன

எல்லாவற்றிலும்
பிளாஸ்டிக் பைகளைப்
பொறுக்க வேண்டும்.
தண்ணீர் பட்டவை
படாதவை
மெல்லிதானவை
கடினமானவை
தரம் பிரித்துச் சேர்க்கத் தனிதனிப்பைகள்
தூக்கிச் செல்வதில் சிரமம் இருக்காது

வயதுக்கு மீறிய சுறுசுறுப்பு
வெள்ளை தாடி
மடிந்து கன்னத்தில் விழும்
கண்பள்ளங்கள் குழிவிழுந்து
கண்பந்துகள் துருத்தி நிற்கும்

கைகளில் எது பட்டாலும்
கால்களில் எது ஒட்டினாலும்
கவலையில்லை
இன்றைக்கு
எடை எவ்வளவு
தாராசில் நெருக்கப்படும்வரை நெருடும் நெஞ்சம்

இன்று ரூபாய்
பன்னிரண்டோ பத்தோ
கொண்டுபோய் தந்தால் மருமகள் சோறிடுவதில்
வருத்தம் இருக்காது
கைகள் பரபரக்கின்றன

காட்சி-2

போவோர் வருவோர் தெய்வம்
அவர்களைப் பார்த்தே பொழுது போய்விடும்
வீட்டு வெளி வாசலில்
சிறு நாற்காலி
ஆடாமல் அசையாமல்
அமர்ந்து
தினம் வந்த மனிதர்களைப் பார்த்து
அவர்களின் நிறம் பார்த்து

பென்ஷன் போதும்
நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு

ஊர்ப்பக்கங்களில்
ஏன் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது

காலாற நடக்கலாம்
மூக்காற சுவாசிக்கலாம்
கண்ணாற வானம் பார்க்கலாம்

இருந்தாலும்
பத்தடி பத்தடி
வானத்திற்குள் வாழ்க்கை பழகிக் கிடக்கிறது

போவோம் என்றாலும் முடியாத நிலை
இருப்போம் என்றாலும் முடியாது

மணி ஆறாகி விட்டது
பக்கத்து வீட்டுப் பெண் அலுவலகம் விட்டு வந்தாச்சு
நாளையும் பார்க்க மனிதர்கள் வருவார்கள்
muppalam2003@yahoo.co.in