வியாழன், ஏப்ரல் 20, 2006

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள்




தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,
எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,
இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது,
Ordnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி, இந்த ஆங்கிலச் சொல்லிற்கே போர்படைக்கருவிகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கு இப்பெயர் உரியது என்று ஒரு மின்கலைக்களஞ்சியம் பொருள் தருகின்றது, இவற்றின் அடிப்படையில் படைக்கலச் சாலையரங்கம் அல்லது போர்க்கருவிகளின் தொகுப்பை -இச்சொல் குறிப்பதாகக் கொள்ளமுடிகின்றது, இவ்வகையில் தமிழர்த ம் போர்க்கருவித் தொகுப்பைப் பற்றி எடுத்துரைப்பதாகவும் தமிழர்தம் போர் அறிவியலை வெளியிடுவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது, இதன்மூலம் இன்றைக்கு வளர்ந்துள்ள போர் குறித்த அறிவியல் செய்திகளின் சிந்தனைகள் செயற்பாடுகள் பண்டைக்காலத்திலேயே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது என்பதை நிறுவ இயலும்,
தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,
மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்
மன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்வியூகம், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்,
படையும் கொடியும் குடையும் முரசும், நடைநவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய (தொல்காப்பியம், பொருளதிகாரம் 616) என்ற நூற்பாவின்வழி மன்னர்க்குரிய புறவடையாளங்கள் பெறப்படுகின்றன, இவற்றுள் படை முன்னணியில் முதலாவதாக உள்ளது, அதனுடன் களிறு, தேர், நடைநவில்புரவி ஆகியன இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது, கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும், இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க்கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும்,
எனவே நாற்படை உடைய அரசன் அடப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்கவேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது,
இந்நால்வகைப் படைகளை மன்னர்கள் பெற்றிருந்தமையைச் சங்க இலக்கியக் குறிப்புகளும் காட்டுகின்றன, நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று (புறநானூறு, 72), வினை நவின்ற பேர்யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலிகுரூஉத்துள் அகல்வானத்து வெயில் கரப்பவும் வாம்கரிய கருந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள்மிகு மறமைந்தர்தோள் முறையான் வீறுமுற்றதாம் (மதுரைக்காஞ்சி 47-54) என்பன மன்னன் நால்வகைப் படையைப் பெற்றிருந்தமையைக் காட்டும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்,
மன்னர் பின்னோர்
மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய (தொல், பொரு, மரபி, 628) என்ற நூற்பாவின்படி வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிய, வாழ இலக்கணம் பெற்றுள்ளனர், நூற்பாவை கூர்ந்து நோக்கினால் தேர், குதிரை ஏறிப் போர் புரியும் ஏனோர் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர் என்பது தெரியக் கிடைக்கும்,
இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன, அவை பின்வருமாறு,
தமிழரின் முப்போர்க்கருவிகள்
தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும், வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள் (கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176) என்ற குறிப்பும் இக்கருத்தினை அரண் செய்யும்,
இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும், அவற்றைத் தொடர்ந்த இலக்கியங்களிலும் காணப்படுகின்றன,
இம்முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்,
மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோலாற் செய்யப்பட்ட , புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176),
வாள்
தொல்காப்பியத்தில் வாளோர் ஆடும் அமலை (தும்பைத்திணை), ஒள்வாள் வீசிய நூழில் (தும்பைத்திணை), வாள்மங்கலம் (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது, போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே (புறநானூறு 97), ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறநானூறு 312), என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும்,
வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப்பாடல்வழி புலனாகின்றது, கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே ((புறநானூறு 63) என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாவதாகும்,
வேல்
வேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளான், புறம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில் பெரும்பகை தாங்கும் வேலினானும் என்று வேல் குறிக்கப்பட்டுள்ளது,
ஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும்போது கையது வேலே,, காலன புனைகழல் (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து (புறநானூறு 99), நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் (புறநானூறு 302), பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து (புறநானூறு 274), திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர ி(புறநானூறு 88), சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென (புறநானூறு 63) முதலான குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது,
சிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலால் தெரியவருகிறது, இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடாஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி (புறநானூறு 279) என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு கருதத்தக்கது,
வில்
வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர், கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9) முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன,
இவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது, மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது (புறநானூறு 98) என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தெளுவுபடுத்துகிறது,
படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்
சங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர், வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே (புறநானூறு- 309) என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்,
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம்கோமான்,வைந்நுதி
வேலே. (புறநானூறு, 95)
என்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் காட்டுகிறார்,
தொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது,
பின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன,
இப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் உள்ளது என்ற புகழ்க்குறிப்பு காணப்படுகிறது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர் என்பது தெளுவாகிறது,
படைவீடு
போரில் வெற்றிபெற்றபின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர், அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க்கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும், முல்லைப்பாட்டில் அப்படி ஒரு படை வீடு அமைக்கப் பெற்றிருந்தது, கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக (முல்லைப் பாட்டு 37-42) என்ற முல்லைப்பாட்டின் பாடலடிகளில் பயன்படா நிலை எய்திய போர்க்கருவிகள் மாற்றுவழியில் தங்கும் பாடிவீட்டின் சுவர்களாக மாற்றப்பட்டுள்ளமை குறிக்கப்பட்டுள்ளது, உடைந்த போர்க்கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றமை மேற்காண் வரிகாளல் தெரிய வருகிறது,
சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன, வில் ஏர் உழவர் பகைகொளினும்(குறள் 872), பிழைத்த வேல் ஏந்தல் இனிது(கு,772) (மேலும் வேல் பற்றிய குறட்பாக்களின் எண்கள், 113,774,775,772,546,550), வாள் ஆண்மை (கு, 614), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்(கு828), தெரிகணை எஃகம்(களவழி 5) என்றவாறு வில் வாள் வேல் ஆகிய படைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்குத் தக்க சான்றுகள் உள்ளன,
குறளில் காட்டப்பெறும் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்ற தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும், சங்க காலத்தில் நிலவிய போர்த்தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது,
காப்பிய காலத்தில் வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து (சிலம்பு 5,89) என்று சிலப்பதிகாரத்துள்ளும் வாள் என்ற போர்க் கருவி சொல்லாட்சி பெற்றுள்ளது,
ஒளிறுவாள் மறவரும், தேரும் மாவும் களிறும் சூழ் தர (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது, மேலும் இந்நூலில் அம்பு ஏவுறு மஞ்சை, ஆவக்கணைக்கால் காணாயோ அம்புப்புட்டில் (துயிலெழுப்பிய காதை64), காய்வேல் வென்ற கருங்கயல்(உதய குமாரன் அம்பலம் புக்க காதை) என உவமைகள் வாயிலாகவும் இயல்பாகவும் போர்க் கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன,(மன்மதனைக் குறிக்க பல இலக்கியங்களில் வில் பயன்படுத்தப் பட்டுள்ளது)
காப்பியகாலத்தின் பிற்காலத் தொடர்வாகத் தொடர்ந்த கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, இராமாயணத்தில் கம்பர் அம்புகளின் பல்திறன்களை எடுத்துரைக்கிறார், அம்புகளின் வகைகள், அவற்றின் இயல்புகள் குறித்த பல செய்திகள் கம்பரின் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன,
அதே நேரத்தில் இப்போக்கிலிருந்து வில்லி பாரதம் சற்று வேறுபட்டு படைக்கருவிகளின் வியூகங்கள், படைக் குழுக்களின் வியூகங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தருகின்றது,
வில், அம்பு, அம்புப்புட்டில் ஆகியவை அடங்கிய இக்கூட்டுக்கருவி தமிழர் போர்வாழ்வில் பெருத்த வளர்ச்சி அடைந்துள்ளமையை மேற்கண்ட இருகாப்பியங்கள் வழியாக அறிய முடிகின்றது,
கம்பராமாயணத்தில் இடம்பெறும் வேலோடு வாள் வில் பயிற்றலின் (பாலகாண்டம் நகரப்படலம் 12) என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிடுவதாக உள்ளது, மேலும் சங்கரன் கொடுத்த வாளும் , அங்கதன் உடைவாள் ஏந்த ஆகிய கம்பராமாயணப் பாடல்தொடர்கள் வாள் பயன்பாட்டிற்கான அகச்சான்றுகளாகும்,
இவை தவிர வேறு கருவிகளையும் கம்பராமாயண காலத்தில் தமிழர் பயன்படுத்தியுள்ளனர். தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் (கும்பகர்ணன் வதைப்படலம் 105) என்ற போர்ப்படை வரிசை காட்டும் பாடலின் மூலம் தமிழர் பயன் படுத்திய பல போர்க்கருவிகள் அறியக் கிடைக்கின்றன,
இராவணன் மூலபலம் என்ற தனது மிக வலிமை வாய்ந்த படைக் குழுமத்தை வைத்திருந்த குறிப்பு ஒரு பாடலில் காட்டப்படுகிறது, சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். (மூலபல வதைப்படலம்,11) இப்பாடலில் மூலபல படைகள் வைத்திருந்த போர்க்கருவிகள் தரப்பெறுகின்றன,
இவைதவிர வில் என்ற போர்க்கருவியை மிகத் திறமை வாய்ந்ததாகக் கம்பர தன் இராமாயணத்துள் காட்டியுள்ளார், இராமனின் வில் எதிரியைத் தாக்கி விட்டு அதன்பின் கடல் சென்று தன்னைத் தூய்மை செய்து கொண்டு மீண்டும் அவனது அம்பராத்தூணியில் வந்து சேரும் பெருமையதாகக் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளது, மேலும் இராமனின் வில் ஏழுமராமரங்களைத் துளைத்தது, வருணனை அழைத்தது,. தாடகை, வாலி, இராவணன் ஆகியோரை அழித்தது போன்ற அருஞ்செயல்களை ஆற்றியதாகவும் இராமாயணக்கதை செல்வதால் வில் என்ற போர்க்கருவி மேலும் சிறப்புடையதாக ஆக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது,
ஆயிரக் கோடி பல்லம், ஆயிரக் கோடி நாகக்கணை, கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு, கங்கபத்திரம், திங்களின் பாதி கோடி, கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன், பாரையின் தலைய கோடி, தாமரை தலைய வாளி, வச்சிரப்பகழி கோடி, முச்சிரப்பகழி, அஞ்சலி அஞ்சுகோடி (நாகபாசப் படலம் 107 முதல் 113 வரையுள்ள பாடல்கள் தரும் போர்க்கருவிகள்) ஆகியவற்றை இந்திரசித் பயன்படுத்தியதாக கம்பர் தெரிவிக்கின்றார், மேலும் அவன் வைத்திருந்த பிரம்மாத்திரம், நாகபாசப்படை ஆகியன மிகத் திறமை வாய்ந்ததாக இராமாயணத்துள் காட்டப்படுகிறது,
இவைதவிர இக்காப்பியத்துள் நேருக்கு நேர் போர் செய்யும் காலத்து ஒரு போர்ப்படைக் கருவிக்குத் தக்க எதிரானதாக மறுபடை ஏவப்படும்போது அவை இரண்டின் செய்களை கம்பர் எடுத்துரைக்கின்றார், இதன்வழி போர்க்கருவிகளின் எதிரெதிர் செயல்பாடுகள் விளக்கம் பெறுகின்றன, கீழே இராம இராவணப்போரின் போது பயன்படுத்தப் பெற்ற போர்க்கருவிகளின் பட்டியல் தரப்பெறுகிறது,
இராவணன் ---- இராமன்
தாமதப்படை சிவன்படை
ஆசுரப்படை அக்கினிப்படை
மயன்படை காந்தர்ப்பம்
தண்டு அம்பு
மாயைக் கணை ஞானக்கணை
சூலம் உங்காரம்
நிருதிப்படை பாதிப்பிறைமுக அம்பு
மேற்காண் பட்டியல்வழி இராவணன் பலவகைப் படைகளைப் பயன்படுத்தியபோதும் இராமன் வில், அம்பு கொண்டே பதில் போர் செய்துள்ளான் என்பது தெரிய வருகிறது, மேலும் உங்காரம் என்ற மூச்கின் மூலம் சூலப்படையைத் தகர்த்துள்ளான் இராமன், எனவே மூச்சும் ஒரு வகை எதிர்கருவியாகச் செயல்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது, பாதிப் பிறைமுக அம்பு என்பது இராமனின் தனிச்சிறப்பு மிக்க அம்பு ஆகும், இது கொண்டே இராவணனின் உயிர் தொலைக்கப் பெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது,
கம்பராமாயணம் மூலமாக அம்பு இணையற்ற இடத்தைத் தமிழரின் போர் வாழ்வில் பெற்றுவிட்டது என்பது தெரியவருகிறது,
இதற்கு அடுத்த நிலையில் வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன, தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் (படை எழுச்சிச் சருக்கம் 3), வாளினர், வேலினர், போர் வில்லினர் (கிருட்டிணன் தூதுச் சருக்கம் -190) எனத் தமிழர்தம் முக்கருவிகளையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது, இவைதவிர
வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன் கழுவர்க்கம்,
அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள், தண்டம்,
இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.
மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின; வான்
புடையே,
தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின; சோரிகள்
சோர்ந்திடவே,
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு
மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில பூங்
கரமே.
(கிருட்டிணன் தூதுச் சருக்கம்202 , 203)
என்ற பாடல்களில் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் பட்டியல் தரப்பெற்றுள்ளது, இவை தவிர வில்லிபாரதத்தில் படை அமைப்பு பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு,
போர்நாள்--- கெளரவர்----பாண்டவர்
3---கருட வியூகம்--- சந்திர வியூகம்
6---கிரவுஞ்ச வியூகம்---மகரவியூகம்
7---சகட வியூகம்--- பாம்புவியூகம்
8---சூசிவியூகம்---சகட வியூகம்
9---சருப்பதோபத்திரவியூகம்---பற்ப வியூகம்
11---சகட வியூகம்--- கிரவுஞ்ச வியூகம்
12---மகரவியூகம்--- மண்டல வியூகம்
13---சக்கர வியூகம்---மகர வியூகம்
இப்பட்டியல் வழியாக பாண்டவர் கெளரவர் பயன்படுத்திய படை அமைப்பு முறைகள் தெரியவருகின்றன, படை அமைப்பு முறைகள் நாளுக்கு நாள் மாறுபட்டனவாகவும், ஒருவர் பயன்படுத்திய அமைப்பு முறை மற்றவரால் வேறு ஒரு முறை பயன்படுத்தப்பட்டமை தெரியவருகிறது, சக்கர வியூகம் அபிமன்யூவை அழித்த வியூகம் ஆகும்,
இவ்வாறு பண்டைக்காலத்தில் படைக்கருவிகளாக மட்டும் இருந்த முப்படைக்கருவிகள் பிற்காலத்தில் படை அமைப்புமுறையில் பயன்படுத்தத் தக்க அளவில் வளர்ச்சி பெற்றன என்பது தெரியவருகிறது,
முடிவுகள்
தமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில் வேல் அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன,அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் பெற்றிருந்தனர்,திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர், முற்றிலும் பயனாகாத படைக்கருவிகள் படைவீடுகள் அமைக்கப் பயன்பெற்றுள்ளன,
சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன, தொல்காப்பியத்திலும் பண்டைத்தமிழர் போர்க்கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன, இவற்றின் மூலம் படைக்கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அவற்றின் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளமுடிகின்றது, கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் படைக்கருவிகள் திட்டமிடப்பட்ட அளவில் தேர்ந்த அமைப்பு முறையில் கையாளப்பட்டுள்ளன என்பது தெளுவாகின்றது,
----பயன் கொண்ட நூல்கள்
சோ, ந, கந்தசாமி, புறத்திணைவாழ்வியல்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1994
இராம, தட்சிணாமூர்த்தி, சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள், தேவிபதிப்பகம், சென்னை,--
தாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை, பச்சைப்பசேல், சென்னை, 2004
மற்றும்
தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்து நூல்கள்
____

2 கருத்துகள்:

palaniappan சொன்னது…

thank u for ur comment

PRASANTH MANOHARAN சொன்னது…

this is very nice and we should be proud to be a tamilian