திங்கள், மார்ச் 26, 2012

நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து

ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் தடுத்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்தியத் தத்துவங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிதான் உயிர் பற்றிய ஒருமைச் சிந்தனையாகும். மண்ணுலகில் பிறக்கின்ற எல்லாமும் உயிர் பெற்றிருக்கும் என்றும், அந்த உயிர் அனைத்துப் பிறவிகளிலும் ஒரே தன்மையது என்றும், பிறவிகள் அனைத்தும் பிறவாமை ஆகிய பேரின்ப நிலையை அடைய முயல்கின்றன என்று காட்டி இந்தியத் தத்துவங்கள் பாகுபாடின்மைக்கான விதையை விதைக்கின்றன. இதன்முலம் ஒரே நிலைப்பட்ட உயிர் பற்றிய தத்தவக் கருத்தை இந்திய தத்துவங்கள் வளர்த்தெடுக்க முயன்றன.
சமண சமயமும் உயிர் பற்றிய பல தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. சமண சமயத்தின் அடிப்படைக் கருத்துக்களை எடுத்துக் கொண்டுப் படைக்கப்படும் தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் உயிர் என்பதை உணர்த்தி அதன் ஓர்மை அடிப்படையில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒரே இயல்பினவாகக் கருதும் நன்முறைக்கு இட்டுச் செல்கின்றன. எனவே பாகுபாடு என்பது மறைந்து அனைத்து உயிர்களும் ஒரே திறத்தன என்னும் பொதுமை கிடைத்து விடுகின்றது. இதற்குள் இந்திய ஒருமைப்பாடும் செழித்தோங்குகின்றது. உலகமே கண்டு வியக்கின்ற இந்த ஒற்றுமைத் தன்மை இந்தியத் தத்துவப் போக்கின் வெற்றியாகின்றது.
நீலகேசி ஐஞ்சிறுக்காப்பியங்களுள் ஒன்றாகும். இது குண்டலகேசி என்ற பெருங்காப்பியத்தில் வலியுறுத்தப்படும் பௌத்த மதக் கருத்துகளுக்கு எதிர்நிலையில் நின்று அக்கருத்துகளின் வலுவின்மையை எடுத்துரைப்பதற்காக செய்யப் பெற்றுள்ளது. இதனை யாத்தவர் பெயர் தெரியவில்லை.
நீலி என்ற பேயின் தீத்தன்மையைப் போக்கி அதனை வழிப்படுத்தி, முனிச்சந்திர பட்டாரகன் என்ற துறவி சமணசமயக் கருத்துக்களை அப்பேய்க்கு அறிவிக்கும் நிலைப்பட்டதாக இக்காப்பியம் செய்யப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நீலகேசி புதுப்பிறவி பெற்று அப்பிறவியில் சமணசமயக் கருத்துகளைக் கற்றுத் தெளிந்து, அவற்றை எல்லா இடங்களிலும் வெற்றி பெறச் செய்துப் பரப்பினாள் என்பது இக்காப்பியத்தின் நிலைக்களனாகும்.
எனவே சமண சமயம் சார்ந்த காப்பியமாக நீலகேசி விளங்குகின்றது. இந்த நீலகேசிக் காப்பியத்தில் உயிர் பற்றிய கருத்துக்களை முனிச்சந்திர பட்டாரகன் என்ற துறவி தருமவுரைச் சருக்கத்தில் அறிவிக்கிறார். இக்கருத்துகள் உயிர்களாகப் பிறந்த அத்தனைக்கும் பொதுவான தன்மையனவாக அமைகின்றன. உயிர் பற்றிய சமண சமயத்தின் கருத்துக்களை இப்பகுதி வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவை பற்றிய செய்திகளைத் தொகுத்து உயிர் ஓர்மையை இக்கட்டுரை உணர்த்தி நிற்கின்றது.
“பிறப்பு என்பது வேதனை பெரிதுடைத்து” என்று நீலகேசி உரைத்து அதில் இருந்து விடுதலை பெற துறவியிடம் வழி கேட்கின்றாள். துறவி பிறவியைப் பற்றியும், அப்பிறவியில் பிறக்கும் பிணிகள் பற்றியும், அந்தப் பிணிகளை அழிக்கும் மருந்து பற்றியும் உனக்கு நான் உரைக்கின்றேன் என்று கூறி உயிர் பற்றிய செய்திகளைக் கூறத் தொடங்குகின்றார். இவ்வாறு இக்காப்பியத்தில் உயிர் ஓர்மை பற்றிய சிந்தனைகள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
உயிர்களில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு வகைகளை நீலகேசி எடுத்துரைக்கின்றது. நரகர் என்போர் இருளிருள், இருள், புகை, சேறு, மணல், பரல், மணி என்ற ஏழு வகைப்பட்ட உலகில் அழுந்திக் கிடக்கிறவர்கள். இவர்கள் முன்று காற்று வளையங்களால் இயங்கக் கூடியவர்கள். விலங்குகள் நிலங்களில் நிலைந்து நிற்பன, இயங்குவன என்று இருவகைப்படுவனவாகும். இவை ஐயறிவுயிர் என்று பாகுபடுத்தப்படுகின்றன. இவை பல காலின, எட்டில் இருந்து இரண்டு இரண்டாக கால்களைக் குறைவாகப் பெற்றன, தவழ்வன, ஊர்வன, பறப்பன என்று கடல் அளவினைவிட அளவில் பெரிய பரப்பின. மக்கள் என்போர் போகம் பெற்றோர், தீவில் வாழ்வோர், கோமான், குற்றம் நிரம்பியோர், தவந்தலை நின்றும் தவத்தின் பயனை அடையார் என்று ஐவகைப் பட்டோர் ஆவர். தேவர் என்போர் பவணர், வியந்தரர், சோதிடர், கற்பர், வேமானியர் என்று ஐவகைப்படுவர்.
இந்நால்வகையினரும் தத்தம் பிறப்பில் பெறும் துயரங்களும் நன்மைகளும் அடுத்தடுத்து நீலகேசியில் எடுத்துரைக்கப் பெறுகின்றது. நரகர் என்போர் உயிரினங்களைக் கொன்றதற்காக நெருப்பில் வீசப்படுவர் என்பது போன்றதான பல துயரங்கள் விவரிக்கப்படுகின்றன. விலங்குகள் ஒன்றினைக் கண்டு ஒன்று பயப்படும். மக்களுக்கு வரும் துன்பம் அடக்கமில்லாதவர்க்கு வரும் துன்பம், அனைவருக்கும் வருந்துன்பம் என்று இருவகைப்படும். தேவர்கட்குத் துன்பமில்லை.
இத்துயரங்களில் இருந்து விடுபட வேண்டுமானல் அதற்கு ஒரே வழி முக்கூட்டு மருத்தினைக் கைக்கொள்ளல் வேண்டும் என்ற பதிலை நீலகேசி தருகின்றது.
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரியதிரி யோக மருந்திவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்தபிணி யுள்பிற வார்பெரி தின்பமுற்றே
( நீலகேசி தருமவுரைச்சருக்கம், பாடல் எண். 116)
என்ற பாடல் முக்கூட்டு மருந்து என்ற ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. இந்தத் திரியோக மருந்தினைக் கைக் கொண்ட உயிர்கள் பிறவாமை என்ற பேரின்பத்தைப் பெறுகின்றன என்ற தெளிவினைத் தரும உரையாக நீலகேசி தருகின்றது.
இப்பாடலில் சுட்டப்படும் ஓர்தல் என்பது நன்ஞானம் எனப்படும். தெளிவு என்பது நற்காட்சியாகும். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கம் ஆகும். இவை பற்றிய சிறு விளக்கங்கள் பின்வருமாறு.
நன்ஞானம்
` ஊனத்தை இன்றி உயிர் ஆகியஉள் பொருள்கள்தான் நற்கு உணர்தல்’ ஞானம் எனப் பெறும். உயிர் பற்றிய அறிவே நன்ஞானம் என்படுகின்றது. இந்த உயிர் பற்றி அறிந்து கொள்ள அளவைகள் உள்ளன. இந்த அளவைகள் காட்சி, காட்சியல்லாதது என இருவகைப்படும். காட்சி என்பது ஐவகைப்பட்டது. பொறிக்காட்சி, மானதக் காட்சி, அவதிஞானக் காட்சி, மனப்பரியாய ஞானக் காட்சி, கேவல ஞானக் காட்சி என்பன அவையாகும். காட்சியில் அளவை என்பதும் ஐவகைப்படும். அவை நினைவு, மீட்டுணர்வு, ஊகம், அநுமானம், முனிவர் மொழிந்த ஆகம மெய்மொழி என்பனவாகும். இவ்வளவைகளோடு வைப்பு, நயன், புகுவாயில் என்பன குறித்து அறிதலும், ஒப்பற்ற குணமும், மார்க்கணையையும் பெறலும் ஆகியவற்றால் நன்ஞானம் பெறலாம் என்கிறது நீலகேசி.
நற்காட்சி
கடவுள், ஆகமம், பொருள், அளவை, நிகழ்ச்சி, இலிங்கம், சாரித்திரம், பலம் என்ற எட்டுப் பொருள்களையும் மனத்துள் வைத்து, மீட்சி இல்லாததாய் உந்திய இன்ப வெள்ளத்தை பெறும் வேட்கையே நற்காட்சி ஆகும். இக்காட்சியைப் பெறுவதற்குத் தடையாக உலகமுடம், பாசண்டி முடம், தேவமுடம் என்ற முன்று முடங்கள் அமைகின்றன. இவற்றில் இருந்துத் தப்பி அன்பு, அச்சம், ஆசை ஆகியன கடந்து, போலித்துறவினையும், போலி தத்ததுவங்களையும் விலக்கி, எட்டுவகைப்பட்ட செருக்குகளில் இருந்து நீங்குதலே நற்காட்சி பெற்றார் இயல்பு ஆகும். ஐயுறாமை, வேட்கையுறாமை, உவர்ப்புறாமை,மயங்காமை, செய்குற்றம் நீக்கல், திரிந்தாரை நிறுத்தல், காதலுடைமையும், அறங்காட்டலும் என்ற எட்டும் நற்காட்சியின் உறுப்புகள் ஆகும். இவை கைகூடின் நற்காட்சி கிட்டும்.
நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் என்பது அருகக் கடவுள் திருவாய் மலர்ந்தருளிய மெய்மைகளை உணர்தலில் தொடங்குகின்றது. மேலும் நற்காட்சி, நன்ஞானம் ஆகியனவற்றோடு ஒருவன் இரண்டறக் கலந்து, அருகசிந்தனையை ஏற்படுத்திக் கொண்டு, இவை என்றும் உள்ளத்தில் இருந்து நீங்காமல் ஒழுகுகின்றவன் நல்லொழுக்கம் பெற்றவனாகின்றான். துறவொழுக்கம் பேணுதல், அடங்குதல், பொறுமை முதலிய நல்லறங்களைப் பெற்றிருத்தல், நல்ல நினைவுகளை நினைத்தல், இரு வகைப்பட்ட தவங்களைத் தாங்குதல், உற்றநோய் நோன்றல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தின் இலக்கணம் ஆகும்.
நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய முன்றும் பிறவிப் பிணியைத் தேய்க்கின்ற முக்கூட்டு மருந்தாகும். இம்மருந்தினை உண்பதால் ஏற்படும் பயன்கள் பின்வருமாறு.
யோகம் இவற்றை உடனுண்ட உயிர்களெல்லாம்
மாக விசும்பினவர் தம்மொடு மன்னரும்மாய்
போக நுகர்ந்து பொருந்தா வினைபுல்ல லின்றி
ஏகநல் லின்ப மியைந்தால்இழ வில்லை நல்லாய்
( நீலகேசி தருமவுரைச்சருக்கம், பாடல் எண்.126)
ஏக நல்லின்பம் என்ற நிலையை உயிர் அடையவேண்டும் என்பதற்கான தேடலாக இப்பகுதி நீலகேசியில் அமைக்கப் பெற்றுள்ளது. ஏக நல்லின்பம் என்ற ஒன்றே உலக உயிர்களுக்கான ஓர்மைச் சிந்தனையாகும். இந்த ஓர்மையை அடையச் செய்யும் நன்முறையைக் காட்டுவதாக நீலகேசி விளங்குகின்றது.

சனி, மார்ச் 24, 2012

காரைக்குடி கம்பன் விழா 2012

குகாரைக்குடியில் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற உள்ளது். ஏப்ரல் மாதம் 3,4,5 ஆகிய நாள்களில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும் 6 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளது.

கலந்து கொள்வோர்
3.4.2012 - செவ்வாய்- 5.30 மணி
திரு நாஞ்சில் நாடன், முனைவர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மற்றும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நூல் வெளியீடு- தெ. ஞான சுந்தரம் அவர்கள் படைத்த கம்பர் போற்றிய கவிஞர்

4.4.2012 புதன் மாலை 5.30மணி
இயற்றமிழ் அரங்கில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன், இசைத்தமிழ் அரங்கில் செல்வி வர்ஷா புவனேஸ்வரி அவர்களின் இராமாயண இசை உரை, நாடகத் தமிழ் அரங்கில் நர்த்தகி நட்ராஜ் அவர்களின் இராமாயணம் நாட்டியம்

5.4.2012 வியாழன் மாலை 5.30 மணி
பேரா ந. விஜயசுந்தரி அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்
தலைப்பு - அரசியில் மதிநுட்பம் பெரிதும் கைவரப் பெற்றவர் கைகேயியே, அனுமனே, வீடணனே என்ற தலைப்பில் மகளிர் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது

6.4.2012வெள்ளி மாலை 5.30 மணி
கம்பன் அருட்கோயில் நாட்டரசன்கோட்டை
கலந்து கொள்வோர் பேரா. கே . கண்ணாத்தாள், பேரா வள்ளி சொக்கலிங்கம், திரு பழ. பாஸ்கரன், திரு. பால சீனிவாசன்

அனைவரும் வருக
 கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்



அழைப்பு பார்வைக்கு உள்ளது வருக. 

திங்கள், மார்ச் 19, 2012

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்


சி. இளஞ்சேரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் பள்ளி
தமிழ்ப்பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்

கிராம சமுதாயம் என்பது இயற்கையோடு இயைந்த சமுதாயமாகவும், மனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் குறைவில்லாத சமுதாயமாகவும் விளங்குவதாக இலக்குமி குமாரன் ஞானதிரவியம் தன் படைப்புகளில் கண்டுள்ளார்.
இளமைக்காலத்தில் இவருக்குக் கிராம வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இதன்காரணமாக தன் இளமைக்கால கிராம வாழ்க்கை நினைவுகளை அவர் தன் படைப்புகளில் அசைபோட்டுப் பார்க்கிறார்.
“காட்டுத்தரிசில் ஆட்டை மடக்கிவிட்டு
நாவல், இலந்தை, பலா, ஈச்சை, கலாக்காய், பாலா
எனக் காட்டுப்பழம் சுவைக்க
இரண்டுகால் குரங்காக
கொண்டல் தோறும் குடியிருக்க வேண்டும்
…குதிரிடுக்கில் கோட்டை மீதில்
அடைந்திருக்கும் கோழி பிடித்துக்
குடப்பில் அடைக்கையில்
அடைக்கப்பிடித்தாலும், அடிக்கப் பிடித்தாலும்
அதே கத்தல்தான் சனியன்…
என்ற அப்பாவின் அலுப்பு கேட்டு/
முருங்கைக்காய் போட்டுவைத்த
கருவாட்டுக் குழம்பில்
நல்லெண்ணெய் ஊற்றி
நாலுவாய்த் தின்றுப்பின் நாய்க்கும் போட்டு
… ஆட்டுப்பால் காப்பி குடித்து
வீட்டுப்பாடம் எழுதி”
(இலக்குமி குமாரன் ஞானதிரவியம், நிலாப்பேச்சு, ப. 78)
என்ற கவிதையில் அவர் தன் இளமைக்கால கிராம் வாழ்க்கை முறையை எண்ணிப்பார்க்கின்றார்.
இக்கவிதையில் கிராமத்துக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும், அம்முறையில் உள்ள இயல்பான தன்மையையும் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் கண்டெடுத்துத் தந்துள்ளார்.
அதுபோல கிராமங்களில் கதை பேசிக் கழியும் மகிழ்வான இரவுகள் பற்றியும் அவர் ஒரு கவிதை வடித்துள்ளார். `நிலாப்பேச்சு’ என்ற தொகுப்பின் தலைப்பே இப்பேச்சின் சிறப்பு கருதி எழுதப் பெற்ற கவிதையின் தலைப்பில் இருந்துப் பெறப்பட்டதாக உள்ளது. அக்கவிதையின் சில பகுதிகள் பின்வருமாறு.
“எல்லோருமாய் உண்டபின்பு
கீற்றெடுத்து வாசலில் போடடுக் கொண்டு
நிலாப்பேச்சுக்கு அமர்வோம்.
…சிரிப்பான கதைகள்,
கட்டுமனை நெருக்கடிகள்/
மூன்று மாத தொடர் வெயில்
பெண்களுக்கான விலை
கொடுங்கோடையிலொருமுறை சித்திரை மழையில்
கோட்டவத்து வயல் காடுகளில்
விறால் வெட்டியது
திருவிழாக்கள்
திருவிழாக்களுக்குச் சேர்ந்து போதல்என
சோகம் உரித்தெறிந்த அசல் ஆனந்தப் பேச்சுகள்…
இளநீத் தண்ணிச் சிரிப்புகள்…
நிலவினின்றும் மனதினின்றும் குதூகலம் ஏகமாய்ப் பொழியும்..
”( இலக்குமி குமாரன் ஞானதிரவியம், நிலாப்பேச்சு, ப.74)
என்ற கவிதையில் நிலாக் கால இரவுகளில் கிராமத்து நடைமுறை மகிழ்வு கலந்து விளங்கும் என்று காட்டப் பெற்றுள்ளது.
கிராமத்துச் சூழலை விட்டு நீங்கிப் போகவேண்டிய கட்டாயத்திற்கு இவர் படைத்த `அகஒட்டு’ நாவலின் கதைப் பாத்திரமான செல்வம் முயலுகின்றபோது தான் வாழ்ந்த கிராமத்து வாழ்வை பற்றி அதன் இனிமையைப் பற்றி அசைபோட்டுப் பார்ப்பதுபோல் பல பகுதிகளை அமைத்துள்ளார். அவற்றில் சிறு பகுதி பின்வருமாறு.
” செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப்போகிற உணர்வு வந்து படுத்தியது. இந்த ஆடு மாடுகள், தோப்பு தொரவுகள் அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டு வீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா, பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக் கிடக்கும் வரப்புகள், நீந்திக் குளித்தாடிய குளங்கள்,அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா… நல்ல காற்று.. நல்ல தண்ணீர் என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போகவேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்கு பத்திருபது முறை யோசனை வந்தது” ( இலக்குமி குமாரன் ஞானதிரவியம், அகஒட்டு, ப.125) என்ற தயக்கமன செல்வத்தின் சொற்களில் கிரமத்து வாழ்வின் மீதான ஈர்ப்பு மிகுந்திருப்பதை உணர முடிகின்றது.
குறிப்பாக நல்ல தண்ணீர், நல்ல காற்று முதலானவற்றை நல்கும் சுற்றுச்சூழல் உடையது கிராம வாழ்வு என்பதை இப்பகுதி எடுத்துரைக்கின்றது. இதன்வழியாக கிராமத்துச் சூழலின் இனிமை, தனிமை, மென்மை, மேன்மை முதலானவற்றை உணரமுடிகின்றது. இதுபோன்று இனிமையான கிராமத்துச் சூழலை இலக்கியமாக்குவதில் தேர்ந்த படைப்புத் தன்மை பெற்றவராக இலக்குமி ஞானதிரவியம் விளங்குகிறார்.

ஆரோவில்லில் திருக்குறள் பயிலரங்கம்

பாண்டிச்சேரியின் அருகில் உள்ள ஆரோவில் உலகமையத்தில் திருக்குறள் பயிலரங்கம் மார்ச் 25 ஆம் நாள் 2012 ஆம் ஆண்டு நடைபெறஉள்ளது. அதன் அழைப்பிதழ் இதனுடன். அனைவரும் வருக.

சனி, மார்ச் 17, 2012

































புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாக் காட்சிகள்
12.3.2012 அன்று நடைபெற்ற தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை நகரமே விழாக் கோலம் பூண்டது. பால் காவடிகள், பறவைக் காவடிகள், அன்னதானம், கடைகள், விளையாட்டுகள் எனக் கொண்டாடப் பெற்ற விழாக் காட்சிகள் இவை.

செவ்வாய், மார்ச் 13, 2012

ஆரோவில்லில் மக்கள் கருத்தரங்கம் -௨௫.௩.௨0௧௨



ஆரோவில்லில் மக்கள் கருத்தரங்கம் உலகப் பொது மறை நமது வாழ்வின் வழிகாட்டி என்ற தலைப்பில் நிகழஉள்ளது. அழைப்பிதழ் பார்வைக்கு உள்ளது அனைவரும் வருக.

திங்கள், மார்ச் 12, 2012

இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்



பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை அறியச் செய்யும். அனுபவிக்காததை அனுபவிக்கச் செய்யும்.
பக்தி என்பதன் அடிப்படையை மக்களிடத்தில் உணர்த்தவேண்டிய காலக்கட்டம் இது. மக்களைப் பயபக்தியில் ஈடுபடுத்தும் வன்மையான காலக்கட்டம் இது. மக்களை அவர்களின் அறியாமையைக் காட்டிப் பயமுறுத்திக் கடவுளைக் காசாக்கி வணக்க வைக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பக்தியின் உண்மையை, நன்மையை, அதன் அன்புருவை வெளிக்காட்ட வேண்டிய பல பணிகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.
முரட்டு பக்தியாக உடலை வருத்தும் குழுக்கூட்டம் ஒருபுறம். திரட்டு பக்தியாக மக்கள் திரளைக் கூடச் செய்யும் கூட்ட பக்தி ஒருபக்கம். களிப்புகளுக்கு இடம் தந்து ஆடல், பாடல், கரகாட்டத்துடன் இயங்கும் களிப்பு பக்தி ஒருபுறம். கவலை பக்தி ஒருபுறம். காக்க வேண்டும் என்ற காவல் பக்தி ஒருபுறம். இவ்வகை நடப்புகளை உடைய ஆரவார பக்தியில் அமைதி பக்தி, ஆன்ம பக்தி காணாமல்போய்க் கொண்டிருக்கிறது. இச்சூழலில் உண்மையான, நன்மையான, இனிமையான பக்தியின் பாங்கினை துறைதோறும், துறைதோறும் துணைக்கருவிகள் பல கொண்டு அறிவிக்கவேண்டி இருக்கிறது.
காலம் காலமாக அறிவின் ஆற்றல் பெருகி வந்தாலும் அறியவேண்டியனவாகவே உயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த உயிர்களுக்குப் பக்தி வழியில் பகவானை அடைந்த பேரின்பவாதிகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உயிர்களின் அறியாமை களைந்துபோகும். இவ்வினிய முயற்சியில் திட்டமிட்டு திடமுடன் இறங்கி இருக்கும் அருளடியார் இராமநாதன் பழனியப்பன் அவர்களின் இனிய நூலான திருச்செந்தூரின் கடலோரத்தில் நூலைக் காணும், படிக்கும், ருசிக்கும், துதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முருகனைச்,சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைக் கடம்பனை அணுஅணுவாக ரசித்து உலகமெல்லாம் அவனடியில் கிடப்பதை எடுத்துரைக்கும் அருள் அனுபவ நூல் திருச்செந்தூரின் கடலோரத்தில் என்ற நூலாகும்.
வடமொழியில் ஆதி சங்கர மாமுனிவர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தின் அருமையான அருள் தமிழ்ப் பதிப்பு திருச்செந்தூரின் கடலோரத்தில். சங்கரர் தனக்கு ஏற்பட்ட நோவு நீங்க ஜெயந்திபுரம் என்ற திருச்செந்தூருக்கு வருகை தந்துப் பாடிய அருள் பாடல்கள் முப்பத்து முன்றின் இனிய சர்க்கரைப் பிழிவு இந்த நூல். முருகப் பெருமான் காலடியில் கிடந்த கரும்பாம்பு நீங்கியதாகச் சங்கரருக்கு இப்புஜங்கம் பாடும்போது கிடைத்த அருள் அனுபவம் அவரின் நோவைத் தீர்த்தது. முப்பத்து மூன்று என்ற எண்ணிக்ககை முப்பத்து மூன்று கோடி தேவர்கள் என்ற எண்ணிக்கையின் உள்ளடக்கக் குறியீடு ஆகும்.
இந்த நூலின் அமைந்திருக்கும் சிறப்புகள் பற்பல. உரைநடை வளமும், காட்சி நயமும், கவிதை வளமும், எளிமையும், இனிமையும் அருளும், அனுபவமும் முற்றி முதிர்ந்திருந்து இந்நூலை அணி செய்கின்றன. இணையதளம் முதல் இனியவன் கோயில் கொண்டிருக்கும் அனைத்துத் தலங்கள் பற்றிய உண்மைத் தகவல்களுடன் நேர்த்தியான கட்டுமானம், ஓவியங்கள், படங்கள் என்று வீட்டின் சூழலைக் கூட கோயிலாக மாற்றிவிடும் வலிமை பொருந்தியது இந்நூல்.
முருகப் பெருமானின் திருச்செந்தூர் பற்றியும், தலப் பெருமை, தலநூல்கள் என அனைத்தையும் தந்து எண்ணூறு பக்கங்களுக்கு விரிகிறது இந்நூல். முன்னதாக அறிமுக இயலில் முக்தி அனுபவம், முருக வரலாற்றின் சிறப்பு, உலக முருகன் கோயில்கள், ஞானவான்களாம் அருணகிரிநாதர், இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், சங்கரர் அருள் வரலாறு முதலிய தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன.
படங்களும் சித்திரங்களும் கலந்து நிற்கும் இந்நூலில் ஆங்காங்கே வண்ணமிட்டுக் கட்டம் கட்டி முக்கியமான தகவல்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. இதனைக் கண்ணூற்றாலே பல அறியாச் சிக்கல்கள் அழிந்து போகின்றன. அறியச் செய்கின்றன.
இரண்டாம் பகுதியான புஜங்க இயலில் சுப்பிரமணிய புஜங்கத்தின் வடமொழி, தமிழ் வடிவம் , விரிவான உரை முதலிய எடுத்துரைக்கப் பெறுகின்றன.
மூன்றாம் பகுதி இணைப்பாக முருகப் பெருமானின் அருள் வெள்ளத்தைப் பாடிப் பரவும் பக்திப் பனுவல்கள் இணைக்கப் பெற்றுள்ளன.
இம்மூன்று நிலைகளில் அமைந்துள்ள இந்நூல் சுப்பிரமணிய புஜங்கத்தின் புகழை இனிது நிலை நிறுத்துகிறது. புஜங்கம் என்பது தோளால் நகரும் முறைமை என்று பொருள். பாம்பின் நகர்ச்சி போன்ற ஓசையுடன் இது வடமொழியில் பாடப் பெற்றுள்ளது. தமிழ் வடிவில் கவிதை நடைக்கு ஒட்டிய இந்த இசை இணையும் முறை பின்பற்றப் பெற்றுள்ளது. எனவே இது புஜங்கம் என்று பெயர் பெற்றது.
மச்சக் காவடி, சர்ப்ப காவடி பற்றி சரியான தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. சர்ப்பகாவடி என்பது பாம்பினைப் பச்சை மண்பாத்திரத்தில் கொண்டு வந்துத் திருச்செந்தூர் சீரலைவாய்ப் பகுதியில் விட்டுவிடுதல் என்ற முறைமை கொண்டது என்ற செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மச்சக் காவடி என்பது திருச்செந்தூரில் கிடைத்த மீனை மூன்று கூறிட்டு மஞ்சள் நீரில், மஞ்சள் துணிமுடப்பட்டு கொண்டுவருவது என்றும், இம்மீனை கடலில் விட்டால் இறந்தமீன் துள்ளித் திரியும் என்றும் தரும் கருத்து இறையிருப்பை உணர்த்துவதாக உள்ளது.
இதுபோன்ற பல புதிய தகவல்களுடன் இந்த நூல் அமைந்து சிறக்கிறது.
தீராத வியாதிகளான வலிப்பு, தீமைமிகு காசம்
குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்ப்புண்
புற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம்,
இன்னபிற நோய்கள் அனைத்தும்
தாரகனை வதம் செய்தவனே
பன்னீர் இலையில் மடித்த உன் திருநீற்றைப்
பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடுமே(25)
என்ற புஜங்கப் பகுதி திருச்செந்தூரின் இடப் பெருமைக்கும், சொல் பெருமைக்கும், பொருள் பெருமைக்கும் சான்றாக அமைவது ஆகும். இது போன்று முப்பத்து முன்று வடமொழிப் பாடல்களுக்கும் இனிய தமிழாக்கம் ஆசிரியரால் தரப் பெற்றுள்ளது. இப்பாடல்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கம், பொருள் விளக்கம், இட விளக்கம், வரலாறு விளக்கம் என்று விளக்கங்களின் வரிமை இந்நூலை விரிதாக்கி படிப்பவரின் பாராட்டைப் பெறுகின்றது. இன்னும் படிக்கலாம் என்பது போன்ற ஆசிரியரின் இனிய நடை புத்தக உலகில் புதிய நடை முறைமையைக் கொண்டுவந்துச் சேர்த்துள்ளது.
இந்நூலின் ஒவ்வொரு பகுதி எழுதப்படும்போது அதற்கு தொடர்புடைய பல அருளனுபவங்கள் ஆசிரியருக்குக் கிடைத்துள்ளன. மலேசிய நாடு சார்ந்து தண்ணீர் மலை முருகனுக்கு தேங்காய்கள் உடைப்பதை ஓருமுறை கண்ட இவருக்கு பல முறை முருகனையும் அவள் அருள் வெள்ளத்தையும் காண எண்ணம் சென்று கொண்டே இருக்கிறதாம். மேலும் சங்கரரின் பிறந்த இடமான காலடியைப் பற்றி இவர் எழுத முற்பட்டபோது அந்தக் காலடிக்கு இவர் காலடி வைக்கவேண்டிய சிறப்பு நிகழ்ந்துள்ளது.
தண்ணீர் மலை முருகன் வரும்போது தேங்காய்கள் உடைக்கின்ற நிகழ்ச்சி இவருக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தந்துள்ளது. அதாவது தேங்காயின் இளநீர் கொண்டு தண்ணீர் மலையான் வரும் வழி முழுவதும் கழுவப் படுவதாக ஆசிரியர் வரைகிறார். இவ்வாறு அருள் அனுபவம் கலந்து இந்நூல் செய்யப் பெற்றுள்ளது.
நகரத்தார்களின் இனிய முருக பக்தியும், அவர்கள் அயல் நாடுகளுக்குச் செல்கையில் பழனியாண்டவனை வழிபட்டதிறமும், அன்னதான மடம் ஏற்படுத்திய அறக் கொடையும், பழனி பாதயாத்திரை பற்றிய வரலாற்று ஆவணங்களும் இந்நூலின் சக்தியைப் பெரிதும் கூட்டுகின்றன.
முருகப் பெருமான் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அளவில் நல்ல அருமையான வடிவில் அழகன் முருகனுக்கு பல்லாண்டு பாடும் சிறப்பான நூல் இது.
நம்மைப்போன்றோர் கரங்களில் இருந்தால் நமக்கு பயம் அணுகாது. படபடப்பு அணுகாது. துணை இதுவே ஆகும். இந்நூல் கொண்டு சங்கரர் என்ற குருவை இனம் காண முடியும். அவரின் அத்வைத தத்துவத்தை அறிந்து கொள்ளமுடியும். அதன் வழி நடக்க முடியும். முருகனின் பாதத் துளிகளைத் தலைமேல் கொள்ளமுடியும். வடமொழியை வணங்க இயலும். தமிழால் வாழ்த்த இயலும். புராணம் கற்கலாம். புனிதம் கற்கலாம். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்கள் தரக்கூடிய கிட்டக் கூடிய கிடைத்தற்கரிய பொக்கிஷம் இந்நூல்.
என்றும் இதுபோன்ற பல நல்ல பணிகளை ஆசிரியர் செய்ய கந்தக்கடவுள் அருள் துணை கூட்டும்.
நூல் விபரம்
விற்பனை உரிமை. பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25. பீட்டர்ஸ் சாலை, சென்னை, 14
நூலின் விலை ரு 600
ஆசிரியர் முகவரி இராமநாதன் பழனியப்பன், ஸ்ரீ புவனேஸ்வரி, 3362ஏஎக்ஸ் 11ஆவது மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, செனனை 40, 04426211194

திங்கள், மார்ச் 05, 2012

மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்

கருப்பையன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,(பகுதிநேரம்)
மா. மன்னர்கல்லூரி,
புதுக்கோட்டை.

தமிழ்க்கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றொரு வகைமை மகாகவி பாரதியாரில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளாலாம். மக்கள் விரும்பும் மெட்டில், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எளிய இனிய முறையில் படைத்தளிப்பது என்பதே மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளின் இயல்பாகும்.

அரசர்களை, இறைவுருவங்களை முன்வைத்துப் புனையப்பெற்ற கற்பனை படைப்புகளை, சிற்றிலக்கிய மரபுகளை சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பாட மறுமலர்ச்சிக் கவிதைகள் தோன்றின. பாரதியில் இருந்துத் தொடங்கும் இக்கவிதைகள் புதுக்கவிதையின் எழுச்சியாகக் கருதப்படும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபது வரை தமிழ் இலக்கியப் பரப்பில் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்து வந்தன.

பாரதியாரைத் தொடர்ந்து அவரின் கவிதை மரபுகளைப் பின்பற்றிச் செல்வோராக பாரதிதாசன், வாணிதாசன், சுரதா போன்ற பாரதி பரம்பரையினர் இக்காலப்பகுதியில் குறிக்கத்தக்கவர்கள். இவர்களுடன் தொடர்ந்து இக்கவிதை உலகிற்குச் செழுமை சேர்த்தவர்கள் தமிழ்ஒளி, சௌந்தரா கைலாசம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் போன்ற பலர் ஆவர். இவர்களுள் ஒருவர் குறிக்கத்தக்கவர் முருகு சுந்தரம் என்ற கவிஞர் ஆவார்.

இவர் பிறந்த நாள் 26.12.1929 என்பதாகும். இவரின் பெற்றோர் முருகேசன், பாவாய் ஆகியோர் ஆவர். இவரின் சொந்தஊர் திருச்செங்கோடு ஆகும்.

இவர் புலவர் கல்வித் தகுதி பெற்றவர். கல்வியியலில் இளநிலையையும் முடித்துள்ளார். இவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக, தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இவரின் படைப்புகள் பின்வருமாறு.
இவர் தன் முதல் கவிதையை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு படைத்தளித்துள்ளார். தொடர்ந்து பல கவிதைகளையும் கவிதைத் தொகுப்புகளையும் அளித்துள்ளார்.

இவரின் படைப்பாற்றலைப் பின்வருமாறு பாலா மதிப்பிடுகிறார். ” கவிஞர் முருகு சுந்தரம் மரபிலும் புதுமையிலும் கைகோத்துக் கொண்டவர். கவிதையில் கதை சொல்லும் கவிதைப்பேரழகு இவருக்கு சிறப்பாய்க் கைவந்திருக்கிறது. காவியங்கள் அதிகம் காணப்படாத குறையைப் போக்கியவர். “சோம்பல் முறிக்கும் சொற்களைக் களைந்துவிட்டு அர்த்தப் படிமங்களாக அணிவகுக்கப்பட்ட அழகு நடையில் முன்னேறும் கதைக்கவிதை புனைவதில் புகழ் உச்சியில் நிற்கின்றவர்” என்ற மதிப்பீடு இவரின் கவிதைத் திறனை வெளிப்படுத்துவதாகும்.

இவர் பெற்ற பரிசுகள் பலவாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டில் பனித்துளிகள் என்ற இவரின் கவிதைத் தொகுப்பிற்கு தமிழக் அரசின் சிறந்த நூலிற்கான தமிழ வளர்ச்சிக் கழகப் பரிசு வழங்கப் பெற்றுள்ளது. ஆயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு இவரின் கவிதைத் திறனைப் பாராட்டி தமிழக அரசு `பாரதிதாசன் ‘ விருதினை வழங்கியது.

இவை தவிர பல இலக்கிய அமைப்புகளும் இவரின் படைப்புத் திறனைப் பாராட்டியுள்ளன. திருக்குறள் பேரவை அமைப்பு ஈரோட்டில் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் முனிசாமி அவர்கள் முன்னிலையில் இவருக்குப் `பாட்டுச்சிற்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1994ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டில் வெளியான சிறந்த தமிழ்க்காப்பியங்கள் பத்தனுள் இவருடைய பனித்துளிகள் என்ற காப்பியமும் ஒன்று எனக் கோயில்பட்டி திருக்குறள் பேரவை பாராட்டிப் பரிசு வழங்கியது.

1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரைச் சார்ந்த இலக்கியப் பாசறை என்ற அமைப்பு இவருடைய கவிதை நாடகமான எரி நட்சத்திரத்துக்குப் பாராட்டுப் பரிசினையும், இவருக்குப் பாவேந்தர் விருதினையும் வழங்கிச் சிறப்பித்தது.

1999 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பாவேந்தர் பாசறை என்ற அமைப்பு “பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

இவரின் படைப்புகள் பின்வருமாறு.
கவிதைப் படைப்புகள்
கடைத்திறப்பு,
பனித்துளிகள்,
சந்தனப்பேழை,
தீர்த்தக்கரையினிலே,
எரிநட்சத்திரம்,
வெள்ளை யானை,
இளைஞர் இலக்கியம்,
பாட்டும் பதையும்,
அண்ணல் இயேசு,
பாரதி பிறந்தார்
முதலியனவாகும்.

உரை நூல்கள்
மறத்தை மகளிர் பாரும் போரும்,
வள்ளுவர் வழியில் காந்தியம்,
காந்தியின் வாழ்க்கையிலே,
கென்னடி வீர வரலாறு,
தமிழகத்தில் குறிஞ்சிவளம்,
நாட்டுக்கொரு நல்லவர்,
பாவேந்தர் நினைவுகள்,
அரும்புகள் மொட்டுகள் மலர்கள்,
குயில்கூவிக் கொணருக்கும்,
புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்,
மலரும் மஞ்சமும்,
குயில்களும் இளவேனில் காலமும்,
பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்,
புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்,
சுரதா ஓர் ஒப்பாய்வு
பாவேந்தர் படைப்பில் அங்கதம்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வகைகளான மரபுக்கவிதை, காப்பியம், உரைநடை நூல்கள் போன்றவற்றைப் படைத்தளித்துக் குறிக்கத்தக்க பாராட்டுகளை, பரிசுகளைப் பெற்றவராக முருகுசுந்தரம் விளங்குகின்றார்.

சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை

தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை ஒரு தழுவலாகவும், வேறுமொழி இலக்கியச் சாயல் உள்ளதாகவோ அவர் படைத்துக்காட்டாமல் சுயம்புத் தன்மை மிக்கதாக தன் படைப்பினை உருவாக்கியிருப்பது கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இலக்கிய வகைகளை முதன் முதலாகப் படைத்துக் கொள்ளும் படைப்பாளருக்கும் பற்பல விடுதலைகள் இருப்பதுபோன்றே பற்பல இடைஞ்சல்களும் உண்டு. விடுதலைகள், இடைஞ்சல்கள் இவற்றைத் தாண்டி முழுமைமிக்கப் படைப்பாக, அனைத்துப் பார்வைகளுக்கும், போக்குகளுக்கும், பிற்கால உலகினர்க்கும் இடமளிக்கின்ற உயிர்ப்பு மிக்கக் களமாக தன் படைப்பினை காலகாலத்திற்கும், நிலைநிறுத்திவிடுகிற படைப்பாளனின் தன்மை நினைந்து நினைந்து போற்றுதற்குரியது.

அவ்வகையில் சிலப்பதிகாரம் தமிழ்ப்பரப்பில் முதல் காப்பியம் என்றாலும் அது முழுமை பெற்ற காப்பியமாக முதிர்ச்சி பெற்ற காப்பியமாக அள்ள அள்ளக் குறையாத சுவையமைப்பு, கட்டமைப்பு உடையதாக விளங்கி நிற்கின்றது. ஒன்றே செய்தாலும் அதனை நன்றே செய்து என்றைக்கும் படைப்புலகில் தன்னிகரற்று விளங்குகின்றதன்மை உடையவராக இளங்கோவடிகள் எக்காலத்தும் உணரப்படுவார்.

இவரின் சிலப்பதிகாரத்தில் காட்சிக் கலைகள் குறித்த செய்திகளை இக்கட்டுரை வழங்கி நிற்கிறது.

காட்சிக்கலைகள் ஒரு அறிமுகம்
விஷூவல் ஆர்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் உணரப்படுகிற இந்தக் காட்சிக் கலைகள் தற்போது அதிக அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடகம், தொலைக்காட்சி நிகழ்வுகள், திரைப்படம் போன்ற மேடை சார்ந்த கலைகள், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற ஆடல்கலைகள் போன்ற பதிவு செய்து திருத்தப்பட்ட, பதிவு செய்யப்படாத, திருத்தப்படாத குழு சார்ந்து இயங்கும் அனைத்து வடிவங்களையும் காட்சிக்கலைக்குள் கொண்டு வர இயலும் என்றாலும் தனி மனித படைப்புகள் காட்சிக் கலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பாக விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், முகப்பு அட்டைகள் (டுயடெநள), செயற்கைப் பூக்கள், தாவரங்கள், துணிகள் மற்றும் சில பொருள்களில் செய்யப்படும் கலைவேலைப்பாடுகள், வரைபடங்கள், நிலவரைபடங்கள், கேலிச்சித்திரங்கள், உருவாக்கப் பெற்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணமற்ற ஓவியங்கள், வண்ண ஓவியங்கள், கலை வடிவம் கொண்ட வாழ்த்து அட்டைகள், நகை வடிவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், ஊசித் தையல்கள், தரைக்கற்களில் வரையப்படும் ஓவியம் சார்ந்த மாதிரிகள், கணினியால் வரையப்பெற்ற மாதிரிகள், புகைப்படங்கள், குறிப்பேடுகளுக்கு போடப்படும் முன் அட்டை மாதிரிகள், சிலைகள், கண்ணாடி மற்றும் மண் போன்றவற்றால் ஆன பொருள்களின் மீது வரையப்பெறும் கலைவடிவங்கள், பல முறை வரைவதற்காக உறுதியான பொருள்களால் ஏற்படுத்தப் பெற்ற மாதிரிகள், பொருள்களின் வடிவம், கட்டடங்களின் வடிவம் போன்றன கருதி வரையப் பெறுகின்ற வரைபட மாதிரிகள் போன்ற பலவும் தனிமனித காட்சிக் கலைகள் ஆகும்.

குழுக் காட்சிக்கலைகளைவிட இந்தத் தனிமனிதக் காட்சிக்கலைகள் தற்போது உலகஅளவில் பதிவு பெறத்தக்கனவாக, ஒருவரின் உரிமைக்கு உரியனவாக பதிப்புரிமை செய்யப் பெறுகின்றன. உலக அளவில் இதற்கான சட்டம் வரையப் பெற்றுள்ளது. ஊடிலசபைவ சுநபளைவசயவடி கடிச றடிசமள டிக வாந ஏளைரயட _சவ என்ற சட்டம் தற்போது உலக அளவில் ஏற்படுத்தப் பெற்றுள்ளது. 1989க்குப் பின் இந்தச் சட்டம் அனைத்து நிலைகளிலும் ஒரு காப்புறுதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதற்குப்பின் படைக்கப் பெற்ற அனைத்தும் இந்தக் காப்புறுதிச் சட்டத்திற்கு உரியவை ஆகின்றன. இதன்படி ஒருவருக்குச் சொந்தமான கலைப்படைப்பு, மிகப் பெரிய அளவில் ஒரு வெளியீடாக வெளிப்படுத்தப்படுகிற நிலையில் காப்புறுதியை உறுதி செய்து அந்தப் படைப்பாளருக்கு உரிய பங்குத் தொகை அளிக்கப்படவேண்டும்.

சிலப்பதிகாரமும் காட்சிக்கலையும்
சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் அனைத்துக் கலைப் பொருட்களும் காட்சிக்கலை சார்ந்தவை என்பது தற்போது புரியவரும். சிலப்பதிகாரம் என்ற பெயரே காட்சி கலை சார்ந்துதான் வைக்கப் பெற்றுள்ளது. சிலம்பு என்ற அணியின் கலைவடிவம், அதன் உள்ளிடு பொருள் ஆகியன ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. சிலம்பின் காட்சி ஒற்றுமை ஒரே தன்மையதாக இருந்தாலும் உள்ளிடு பொருளின் வேறுபாடுதான் சிலம்பின் வேறுபாடு, காட்சி நுணுக்கமாக அமைந்து விடுகின்றது.

“நற்றிரம் படராக் கொற்கை வேந்தே
என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே எனத்
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகென தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணிக் கால்ச்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய் முதல் தெரித்தது மணியே மணி கண்டு
தாழ்ந்த குடையன்”
(வழக்குரை காதை 6673)

என்ற பகுதியில் சிலம்பின் அடையாளங்கள் அக்காலத்திலேயே ஒரு வரையறைக்கு உட்பட்டுச் செய்யப் பெற்றுள்ளன என்பதை உணர முடிகின்றனது. கண்ணகியின் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது. பாண்டிய மன்னனின் சிலம்பு கொற்கை முத்துக்களை உடையது.

கண்ணகி பாண்டிய அரசனின் சிலம்பைப் பார்த்தவள் இல்லை. இருப்பினும் பாண்டிய அரசர்களின் அணிகலன் முறைகளை அறிந்து கொண்டவளாக இருக்கிறாள். கொல்லனால் கண்டறியப்படாத நுணுக்கமான அணி வேறுபாடு வணிக மரபினர்க்குத் தெரிந்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் உலகம் சார்ந்த வணிகத்தைச் செய்தவர்கள். அந்தஅந்தக் கலாச்சாரத்தின் மண்ணின் வாசனையை அறிந்தவர்கள்.

காட்சிக் கலைக்குச் சிலம்புகளே அடிப்படையாக விளங்குகின்றன. கண்ணகி உடைத்தது எந்த சிலம்பு என்பதில் வேறுபாடு இருக்கலாமே தவிர இந்தக் காட்சிப் பிழைகளில் தவறு உள்ளது என்பதில் வேறுபாடு அறிஞர்களிடத்தில் இல்லை.

மாதவி எழுதிய அகமடல்கள் உருவாக்கப் பட்ட முறைமையும் தனித்துவமானது.

முதல்மடல் மலர்களின் கூட்டுச்சேர்க்கையால் உருவானது. கொண்டு சென்றவள் மாதவியின் தோழியான வயந்தமாலை. அம்மடல் தாழம்பூவின் மடலில், சுற்றிலும் பல்வகைப் பூக்கள் பொருத்தப்பட்டு, செம்பஞ்சுக் குழம்பு மையாகவும், பித்திகையின் மொட்டு எழுத்தாணியாகவும் கொண்டு எழுதப் பெற்றுள்ளது.
“மாதவியோலை மலர்க்கையின் நீட்ட
உடன் உறை காலத் துரைந்த நெய்வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணரத்திக்
காட்டியது ஆதலின் கைவிடல் ஈயான்”
(புறஞ்சேரி இறுத்த காதை, 8184)

மாதவி தனிப்பட எழுதிய அவளின் சொந்தத் தயாரிப்பு இந்த மடல். இந்தச் சொந்தத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிப்பன மண் முத்திரையும், தலைமுடியும். இவை இரண்டும் மாதவியின் நினைவினை, அவளின் வாத்தினைக் கோவலனுக்கு உணர்த்தின. ஆனால் இவற்றைப் பிரித்த கோவலன் இவற்றை விடுத்தே தன் பெற்றோருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும். காட்சிக் கலைக்குரிய கலைச் சின்னங்களாக மண்பொறியும், மாதவியின் தலைமுடியும் விளங்கியிருக்கின்றன. அவற்றைத் தனக்கானதாக எடுத்துக் கொண்ட கோவலன் மடலின் செய்தியைத் தன் பெற்றோருக்கு அளித்து விடுகிறான்.

மிக்க நுணுக்கமான இடங்களில் நுணுக்கமான செய்தி வேறுபாடுகளைப் படைத்துக் காட்டுவதில் காட்சி நிலைக் கவிஞராக இளங்கோவடிகள் விளங்குகின்றார்.

இவரின் முன்று காண்டங்களிலும் காட்சிக் கலை நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப்பெறுகின்றன. புகார் காண்டத்தில் இடம்பெறும் நாடுகாண் காதை, மதுரைக் காண்டத்தில் இடம்பெறும் காடு காண் காதை, ஊர்காண் காதை, வஞ்சிக் காண்டத்தில் இடம்பெறும் காட்சிக் காதை போன்றன காட்சிக்கலை சார்ந்தன. இவற்றின் பெயர் அமைப்பிலேயே காட்சிகள் இருப்பது தெளிவு.

நாடுகாண் காதையில் கவுந்தியடிகளின் காட்சி முதன்மை பெறுகிறது. காடுகாண் காதை, ஊர்காண் காதையில் கோவலனின் காட்சி முதன்மை பெறுகிறது. காட்சிக்காதையில் மலைமக்களின் காட்சி முதன்மைப் படுத்தப்படுகிறது. இவர்களின் கண்களின் வழியாக இளங்கோவடிகள் காட்சிகளைக் காப்பியத்தில் நிகழ்த்துகிறார்.

நாடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
கோவலனும் கண்ணகியும் நாட்டினை விட்டுப் புறப்பட எண்ணுகின்றனர். இந்தத் துயரமான சூழ்நிலையில் இந்தக் கதை மாந்தர்களின் சித்திரப்பு மிகச் சிறந்த அவலக் காட்சியாக காப்பியத்தில் விரிகின்றது.

” வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்க
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துறப்ப
ஏழகத்தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத்திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீணொடு வாயில நெடுங்கடை கழிந்தாங்கு
அணிகிளர் அரவம் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலசெயாக கழிந்து ”
(நாடுகாண் காதை, 110)
கோவலன் புறப்படுகிறான். கதை செய்யும் படைப்பாளனுக்கு அவன் இனி திரும்பப்போவதில் என்பது தெரிந்துவிட்டது. அவன்மேல் படைப்பாளர் இரக்கம் கொள்கிறார்.

வெண்மதி நீங்க, கடைநாள் போன்றன கோவலன் திரும்பான் என்பதற்கான குறிச்சொற்கள். மேலும் ஆடு, கவரிமான், அன்னம் என்ற முன்றும் செல்லப்போகின்ற முவரின் குறியீடுகள். ஆடாகக் கோவலனை,கவரிமானாக கவுந்தி (கவரி)யை, அன்னமாகக் கண்ணகியை நினைந்து காணலாம்.

ஊரை விட்டுப்போகிறவர்கள் காலைப் பொழுதில் கிளம்புகிறார்கள். ஊரில் சொல்லிச் செல்ல இயலாது. அதனால் கோயில்களுக்குப் போவார்போல கைகளில் அதிக சுமையின்றிச் செல்கின்றனர். இருக்கின்ற ஒரே பொருள் இணையான சிலம்புகள். அவை கண்ணகியின் கால்களில் பாதுகாப்புடன் இருக்கின்றன. வேறெதும் கொண்டுபோக இயலாத சூழலில் திருமால் கோயில், புத்த விகாரம், சமணர் கோயில் அனைத்தும் தொழுது செல்லும் இந்த ஆதரவற்ற நிலையை வருத்தத்துடன் படைப்பாளர் படைக்கின்றார்.

வீட்டைவிடடுவிட்டுச் செல்கிறவர்கள் படும் பாட்டை “நீணொடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு” என்ற அடிகள் உணர்த்துகின்றன. கோவலனின் வீடு பெரிய நிலைக்கதவுகளை உடையதாம். அதற்கேற்ற நிலையில் அதற்குத் தாழ் உண்டு. இந்தக் கதவினைச் சாத்திக் கொள்ளவும், தாழ் போட்டுக் கொள்ளவும் கூட யாருமில்லாத மாளிகை அந்த மாளிகை.

துணைக்கு கவுந்தியும் பயணப்படுகிறார். மதுரையில் உள்ள சமணப் பள்ளிகளைக் கண்டு தரிசிக்க இவர்களுடன் வருகிறார். அவர் வழிநடையில் ஏற்படும் துயரங்களை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்ற சூழலில் அவர்கள் நடக்கின்றனர்.

அப்போது நாட்டில் நடைபெறும் பல்வகை ஒலிகளைக் கொண்டு நாட்டின் நிலைப்பாட்டை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

கம்புள் கோழியும், கனைகுரல் நாரையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக் குரல் பரந்த ஓதையும்
( நாடுகாண் காதை 116119)
என்பன பறவைகள் எழுப்பிய ஓசைகள். இதுதவிர எருமைகளின் செயல்பாடுகள், பயிர்த்தொழில் செய்பவரின் செயல்பாடுகள் எனக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காட்சிப்பிழையாகத் தோன்றும் காட்சி ஒன்றும் இங்கு இடம் பெறுகிறது. வம்பப்பரத்தை, வருமொழியாளன் என்ற இரு பாத்திரங்கள் காட்சிப்பிழைக்கு உள்ளாகின்றன. இவர்கள் கவுந்தியடிகளிடம் “யார் இவர்கள்” என்று கோவலன், கண்ணகியைக் கேட்க அவரோ “மக்கள் காணீர்” என்று உரைக்கின்றார்.

உடன் வயின்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ என்ற சந்தேகம் கேள்வி கேட்டவர்களுக்கு வருகின்றது. கண்ணகியும் கோவலனும் உடன்பிறப்புகள் என்ற நிலையைத் தாண்டி அன்பொழுக நடந்து கொண்டுள்ளனர் என்பதை இந்தக் காட்சிப்பிழை எடுத்துரைக்கின்றது. இதனைக் கேட்ட கண்ணகி உள்ளம் நடுங்க கேள்வி கேட்டவர்கள் முதுநரிகளாக மாறும் சாபக்காட்சி அங்கு அரங்கேறுகிறது.

காடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
பூம்புகார் விட்டு திருச்சியை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள். காவிரியின் போக்கிலேயே இவர்கள் நடந்து வருவதால் யாரிடமும் செல்லும் இடம் பற்றி விசாரிக்க வேண்டி வரவில்லை. இவர்கள் முவரும் திருவரங்கம் அடைந்துப் பின் உறையூர் வருகின்றனர்.

உறையூரைத் தாண்டி வரும்போது மாங்காட்டு மறையவன் எதிர்ப்படுகிறான். இவனிடம் மதுரை செல்லும் வழி யாது என்று வினவுகின்றபோது இவன் இவர்களின் வருகைக்காக இரங்குகிறான். வேனில் காலத்தில் காரிகையை அழைத்துவருவது குறித்துக் கவலைப்படுகிறான். அப்போதுதான் பாலை என்ற நிலத்தின் இயல்பு தமிழுலகிற்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்”
(காடுகாண்காதை 6466)

படிமம் என்ற காட்சி சார்பான உத்திமுறை தமிழுக்கு அறிமுகமான இடமும் இதுவே. இரங்கிப் பேசிய இவன் முன்று வழிகளைச் சுட்டுகிறான்.

முதலாவதாக இவன் அடையாளம் காட்டுவது கொடும்பாளுர், நெடுங்குளம் என்ற இரண்டு இடமாகும். இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மதுரை முன்று நிலையில் செல்லலாம் என்பது இவனது கருத்து.

“கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்”
(காடு காண் காதை, 71- 73)
என்ற இவ்வடிகளில் சூலம் போன்று முவழிகள் தோன்றும் என்று மாங்காட்டு மறையவன் கூறுகின்றார்.

முவழிகளில் முதல்வழி வலப்புற வழியாகும். இது சிறுமலை வழியாக மதுரைக்குப் போகும் பாதை. இரண்டாவது அழகர் மலை என்ற திருமாலிருஞ்சோலை வழியாக இடப்புறமாக மதுரைக்குச் செல்லும் வழி. இவை இரண்டிற்கும் இடையில் காடுகள் சூழந்த இடைவழி ஒன்றுண்டு. இதில் செல்வதும் நல்லதே. இதில் சென்றால் ஒரு அணங்கை எதிர் கொள்ளவேண்டும் என்று பல செய்திகளை மாங்காட்டு மறையவன் எடுத்துரைக்கிறான்.

வலப்புற வழியின் காட்சித்தன்மை
இவ்வழியில் ஓமை, வெண்கடம்பு, முங்கில் போன்ற நீரற்றுச் சுருங்கிக்கிடக்கும். நீர் இல்லாத காடு, எயினர் குடியிருப்பு முதலானவற்றை இவ்வழியில் காண இயலும். அடுத்துச் சிறுமலை தோன்றும். இம்மலைப் பழங்கள் அன்றும்,இன்றும் சிறப்பிற்குரிய பழங்களாகும்.

“வாழையும்,கமுகும், தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை”
(காடுகாண்காதை 8385)
என்ற இக்காட்சி இன்னமும் மெய்யாக உள்ளது. சிலப்பதிகார எச்ச மிச்சங்கள் அழிந்த இந்த காலச் சூழலில் அவர் காட்டிய இயற்கைக்காட்சிகள் இன்னம் மிச்சம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறுமலையின் வலப்புறமாகச் சென்றால் மதுரையை அடையலாம் என்ற இந்தக் குறிப்பு வரைபடக் காட்சிகலைக்குச் சான்று.

இடப்புற வழியின் காட்சித்தன்மை
இடப்புறவழி திருமாலிருஞ்சோலை வழியாகும். இவ்வழி மருத நிலம் சார்ந்த பல பகுதிகளை உடையது. இவ்வழியில் செல்லும்போது புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் முன்று பொய்கைகள் காணப்பெறும். இவை ஒவ்வொன்றில் முழ்கினால் ஒவ்வொரு பலன் கிட்டும். பின் சிலம்பாறு தோன்றும். இந்த ஆற்றைத் தொடர்ந்தால் இயக்கமாது தோன்றுவாள். அவளின் வினாக்களுக்கு பதில் இறுத்துப் பின் திருமாலிருஞ்சோலை அடையலாம். எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து திருமாலிடம் அடைக்கலம் பெறலாம் என்று இந்த வழி பற்றிய செய்திகள் அறிவிக்கப் பெறுகின்றன.

இவற்றில் முன்று குளங்கள் பெயரில் கூட இன்று இல்லை. சிலம்பாறு என்ற பெயர் அழகர்கோயில் தீர்த்தங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. தற்காலத்தில் அழைக்கப் பெறும் நூபுர கங்கை என்ற தீர்த்தம் சிலம்பாறு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு இவ்வழி இளங்கோவடிகள் சொன்ன இயற்கைக் காட்சிகள் பொருந்திய நிலையில் உள்ளது.

இடைவழி
குறிக்கத்தக்க எவ்வித அடையாளங்களும் இல்லாத காட்டுவழியாக இது அமைகின்றது. இவ்வழியில் கானுறை தெய்வம் ஒன்று எதிர்ப்படும் என்று இவ்வந்தணன் குறிப்பிடுகிறான். இவ்வழியிலேயே செல்ல முவரும் ஒருப்படுகின்றனர்.

இக்கானுறை தெய்வம் வழியிடையீடு செய்துக் கோவலனை வெருட்டியபோதும் அவன் கொற்றவை வழிபாட்டின் துணையால் அத்தெய்வத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்.பின்னர் இவர்கள் ஒரு காளி கோயிலின் பக்கத்தில் இளைப்பாறுகின்றனர்.
இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்தமிழ்ப்பாவை, செய்தவக் கொழுந்து
ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
(வேட்டுவ வரி 4749)
என்ற இந்தப் புகழ்மொழிகளைச் சாலினி உரைக்கின்றாள். இதில் மணி என்ற சொல் பின்னால் நிகழ உள்ள சிலம்பின் மணிகள் பற்றிய குறிப்பு என்பது நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக இங்குக் கண்ணகியை மட்டும் வாழ்த்துவதால் அது உலகிலிருந்து எழக்கூடிய திருமாமணி என்பதால் மற்ற இருவரும் இறப்பை நாடப் போகின்றனர் என்பதும் அவர்களை இத்தெய்வம் ஏறிய பாரட்டவில்லை என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஊர்காண்காதை
காடு, நகரம், நாடு, உலகம் என்று தன் காட்சிக்கண்களை விரித்துக் கொண்டே போகின்றார் இளங்கோவடிகள். நாட்டையும், காட்டையும் காட்டியவர் இப்போது ஊராக மதுரை மாநகரத்தைக் காட்ட ஊர்காண் காதையைச் செய்கிறார்.

இதில் கோவலன் கண்களில் புகுந்து மதுரைக் காட்சிகளைப் பதியவைக்கிறார். மதுரை மாநகர கோட்டைக்குள் நுழைந்து வணிக வீதிகளைப் பார்வையிடுகிறான் கோவலன்.

கடிமதில் வாயில் காவலில் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்காங்கு
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந்து அன்ன மதில்
( ஊர்காண்காதை, 6668 )
என்ற இந்த அடிகளில் மதுரை மாநகரின் காப்புகை மிக்க கடிமதில் எடுத்துக்காட்டப் பெறுகின்றது. அருங்கலச் செப்பு என்ற இந்தச் சொல்லாக்கம் அருமையான அணிகலன்களை வைக்கும் பாதுகாப்பு அறை என்ற பொருளில் கையாளப் பெற்றுள்ளது. கலை வண்ணம் காட்சி வண்ணம் சிறந்த இந்தத் தொடர் பின்னாளில் நூல் பெயராக வளர்ந்தது என்பதும் இளங்கோவிற்குப் பெருமை அளிக்கத்தக்க கூறாகவே உள்ளது.

இதன்பின் மகளிர் விளையாட்டு, பருவ வருணனை போன்ற காப்பியப் பண்புகளுக்கு இளங்கோவடிகள் இடம் தருகின்றார். மதுரை நகரின் பருவ வருணனை இங்கு இடம் பெற்றுச் சிறக்கிறது. இதில் காட்டப் பெறும் வருணனைகளும் காட்சித் திறம் சார்ந்தவை என்றாலும் கட்டுரையின் விரிவஞ்சி இவை சுட்டுதலாக மட்டும் அமைகின்றன.

இதன்பின் அரசர், செல்வர் பயிலும் காமக்கிழத்தியர் பகுதிகளுக்குச் சென்றான் கோவலன். தொடர்ந்து எண்ணெண் கலைஞர்கள் வீதி, அங்காடி வீதி, நவரத்தின வீதி, பொன்மிகு கடைவீதி, துணிக்கடைவீதி, கூல வணிக வீதி முதலான பல வீதிகளைப் பார்வையிடுகிறான்.

எண்ணெண் கலைஞர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் கற்றுத் தேர்ந்த கூத்தியர்கள் வாழும் பகுதியாகும். முடியரசு ஒடுங்கும் கடிமண வாழ்க்கை என்று இளங்கோவால் குறிக்கப்படுகிறது. கூத்தியர் வீட்டுக்கு வந்திருப்பவர் யார் என்று யாராலும் அறியப்பட முடியா அளவிற்குக் காப்பு மிகுந்த நிலையில் இக்கலைஞர்கள் வீடுகள் அமைக்கப் பெற்றிருந்தன.

சிலப்பதிகார காலத்தில் பல வகைகள் சார்ந்த தங்கம் இருந்துள்ளது. “சாதருபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ” என்ற நான்குவகையின அவற்றில் குறிக்கத்தக்கனவாகும்.

அதுபோல் துணியில் கலைநயம் மிக்க படைப்புகள் அக்காலத்தில் இருந்துள்ளன. “நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாது பன்னூறு அடுக்கத்து நறுமடி சிறந்த அறுவை வீதி” என்று துணிக்கடை வீதியின் சிறப்பு குறிக்கப்படுகிறது. நூல், மயிரிழை, பட்டு முதலானவற்றில் இழையடுக்கு தெரியாத வண்ணம் துணிகள் நெய்யப்பட்டு அக்காலத்தில் இருந்துள்ளன. இவை வகை தெரியாமல் பல நூறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி வீதியைக் கோவலன் கண்டான்.

இவ்வாறு கடைகள், கலைகள் பற்றிய காட்சி வருணனை காட்சியியலின் பாற்பட்டதே ஆகும்.

காட்சிக் காதையும் காட்சிச்சிறப்பும்
காட்சிக்காதையில் முக்கியத்துவம் பெறுவது கண்ணகி வானுலகு சென்ற காட்சியேயாகும். மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் மலைவாழ் குறவர் இனமக்கள் தாங்கள் கண்டதாகக் கூறிய காட்சிகளைக் கேட்டறிகிறான்.

“ஏழ்பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானகம் போற்ற வானகம் பெற்றனள்
எந்நாட்டவர்கொல்? யார்மகள் கொல்லோ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூறு ஆயிரத் தாண்டு வாழியர் என
மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த”
( காட்சிக்காதை, 5865)
என்பது குறவர்கள் கண்ட காட்சிச் செய்தியாகும். இச்செய்தியில் மார்பகம் இழந்து, தனித்துயர் எய்திய பெண் ஒருத்தி வானகம் புக்கதை அவர்கள் கண்டுள்ளனர். இந்தக் காட்சி புதுமை செறிந்தது. இக்காட்சியின் வியப்பே கண்ணகிக்குக் கோயில் காணச் செய்த விதையாகும்.

பின்பு சாத்தனார் ” கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப்பனள் போல் தன்னாட்டாங்கண் தனிமையில் செல்லாள் நின்னாட்டு அகவையின் அடைந்தனள் நங்கை” என்று துயருற்ற கண்ணகி அவள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லாது உன்நாட்டிற்கு வந்துள்ளாள் என்று இக்காட்சியின் நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் கூறி முடிக்கிறார்.

இதுகேட்ட மன்னன் அரசவாழ்வின் நிலையாத்தன்மையை வெளிப்படுத்துகிறான். “மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லென” உணருகிறான். அல்லது இளங்கோவடிகள் உணர்த்துகிறார். இதன் தொடர்வாக சேரமாதேவியிடம் “உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்த இச்சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?’ எனச் சேரன் வினவுகின்றான்.

சேரமாதேவி “காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து அத்திறம் நிற்கநம் அகனாடு அடைந்தஇப் பத்தினித் தெய்வத்தைப பரசல் வேண்டுமென” தன் விருப்பத்தை எடுத்துரைக்கிறாள்.

இந்தக் காட்சியே இமயம்வரை சென்று சேரனை வெற்றி பெற வைக்கின்றது. கண்ணகியை இறைவியாகக் காண்கின்றது. உலகம் போற்ற உயர்த்துகின்றது. “எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நன்னாள் செய்த நாளணி வேள்வியில் வந்தீக ” என்று மன்னர்கள் இறைஞ்ச “தந்தேன் வரமென்று ” கண்ணகி தெய்வவாக்கு அருளுகிறாள்.

இவ்வகையில் காட்சிக்கலையின் சிறப்பு தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் துலங்குவதாகச் சிலப்பதிகாரம் படைக்கப் பெற்றுள்ளது.

முடிவுகள்

1. காட்சிக்கலை என்பது நுண்ணிய படைப்பாற்றல் கலை சார்ந்தது.தற்போது இக்கலை ஆவணப்படுத்தப் பெற்று பதிப்புரிமையை உலக அளவில் பெற்று உயர்ந்துள்ளது.

2. இவ்வாறு இக்கலை வளர்வதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே காட்சிக்கலையைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் நேர்த்தியுடன் படைத்துள்ளார்.

3. சிலப்பதிகாரம் என்பதே அழகாகச் செய்யப் பெற்ற இரு இணைச் சிலம்புகளின் குழப்பத்தால் ஏற்பட்டது. உள்ளிருக்கும் பொருளை நுண்ணிதின் வேறுபடுத்தி கலைப் பொருள்களின் காட்சி வடிவு மிகப் பெரும் சாட்சியாக ஏற்கப்பட்டிருக்கிறது.

4. மாதவியின் மடல்கள் காட்சி வடிவம் சார்ந்தவை. அவற்றில் தனித்த மாதவிகோவலன் இருவருக்கான காட்சிப் பொருள்கள் இருந்துள்ளன. இவை அடையாளக் குறிகள் ஆகும்.

5. இளங்கோவடிகள் காட்சியளவையை ஊர், காடு, நாடு, உலகு என்று வளர்த்தெடுத்துள்ளார்.இவற்றிற்கு ஊர்காண்காதை, காடுகாண் காதை, நாடுகாண்காதை, காட்சிக் காதை போன்ற சான்றுகளாகும்.

6. நாடுகாண் காதை வருத்தக்காட்சியாக புனையப் பெற்றுள்ளது. கோவலன், கண்ணகி, கவுந்தி முவரும் புகார் திரும்பப்போவதில்லை என்ற சோகம் இளங்கோவடிகளால் உணரப்பெற்றிருக்கிறது. ஆனால் பாத்திரங்கள் உணர்ந்து கொள்ளாமல் விதிப்படி தன் பயணத்தைத் தொடருகின்றனர். வருத்தத்தோடு தன் காட்சிகளை எடுத்துக் கொண்டு இளங்கோவடிகளும் பின்செல்லுகின்றார்.

7. காடுகாண் காதையில் முவகை வழிகள் விளக்கப்படுகின்றன. அவற்றில் சுட்டப்படுகின்றன இயற்கை இன்னமும் அழியாமல் இருப்பது கோவலன் உள்ளிட்ட முவர் நடந்த பாதைக்குக் காட்சியாக உள்ளது.

8. ஊர்காண்காதையில் மதுரை என்ற ஊரின் கலைவடிவக் காட்சிகள் விளக்கப்படுகின்றன. கடைவீதி வருணனை காட்சியியலின் முன்னுரையாகின்றது.

9. காட்சிக்காதையில் குறவர்கள் கண்ட காட்சி கண்ணகியை உயர்த்துகிறது. இமயத்தை எட்டுகிறது. இலங்கைக்குச் செல்ல உறுதியாகின்றது.

10. காட்சிகளின் வல்லமை நுணுக்கமாகப் பற்பல இடங்களில் சிலப்பதிகாரத்தில் கையாளப் பெற்றுள்ள போக்கு சிலப்பதிகாரத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

வெள்ளி, மார்ச் 02, 2012

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவுக் கூட்டமாக கம்பன் மாதக் கூட்டம்


3.3.2012 அன்று மாலை ஆறுமணியளவில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவுக் கூட்டமாக கம்பன் மாதக் கூட்டம் நடைபெறுகின்றது.

இதில் விருத்தாசலம் அரசு கல்லூரி விரிவுரையாளர் ப. வேலாயுத ராஜா அவர்கள் குழந்தைக் கம்பன் என்ற தலைப்பிலும், புதுக்கோட்டை புலவர் அரங்க நெடுமாறன் அவர்கள் இராமர் கதைத் தாலாட்டு என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது.