செவ்வாய், செப்டம்பர் 20, 2011

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைத்த அகஒட்டு நாவலின் விமர்சனம்


அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.

கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார் மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம். இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.

செல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி தந்தை சின்னசாமி, தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.

செல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.

“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது. இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா, நல்ல தண்ணீர், நல்ல காற்று என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”

என்ற நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.

படிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால் பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.

தனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.

ஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம் இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.

முரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.

“முரளி தங்கியிருந்த ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான். `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.

…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்” என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.

இதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.

இரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.

உறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.

அகவொட்டு என்ற நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டியுள்ளது.

நாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார். தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.

இந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும். தொடரவேண்டும்.

——

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

உலகத் திருக்குறள் பேரவை மாதக்கூட்டம் நவம்பர் 2001






உலகத் திருக்குறள் பேரவை புதுக்கோட்டைக் கிளையின் மாதக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாவலர் பொன் கருப்பையா அவர்களின் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முனைவர் வைர.ந தினகரன், திரு குணசேகரன் ஆகியோர்க முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் முனைவர் சு. கணேசன் அவர்கள் உரையாற்றினார். இவர் தம் உரையில் பேகன், சேக்ஸ்பியர் முதலான ஆங்கில இலக்கியவாதிகள் எவ்வாறு வள்ளுவருடன் ஒத்துப் போகின்றனர் என்பதை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து திரு பாபு ராஜேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார். இவ்விழாவில் புதுக்கோட்டை இலக்கிய அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதன், செப்டம்பர் 14, 2011

குன்றக்குடி ஆதீன குருமுதல்வர் விழா






௧௩.0௯.௨0௧௧ அன்லறு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினகர்த்தரின் குருபூசை விழா நடைபெற்றது. ௪௫ குரு மகா சந்நிதானங்கள் அருளாட்சி புரிந்த இம்மடத்தில் தற்போது ௪௬ ஆவது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்து வருபவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆவார்.
காலை முதல் நடைபெற்ற இவ்விழாவில் பலரது இலக்கிய உரைகளும், பாரட்டுரைகளும் மடத்தின் பெருமையை உணர்த்தின
இரவு ஏழு மணியளவில் தவத்திரு அடிகளார் அருள்பீடத்தில் எழுந்தருள அவரிடம் ஆசி பெற்று குருவருள் பெற்று மகிழ்ந்தனர் மக்கள். அவற்றில் சில காட்சிகள்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

மதுரை புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாளில் விசாரணை அரங்கம் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி


பதிலளி
"இளைய சமுதாயத்தினருக்கு சரியான பாதை தேவை'

First Published : 05 Sep 2011 12:16:21 PM IST


மதுரை, செப். 4: இன்றைய இளைய சமுதாயத்தினரின் நிலை கவலை அளிப்பதாகவும், அவர்கள் சரியான பாதையில் செல்வதற்கான வழிவகையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற விசாரணை அரங்கில் நடுவர் சேதுபதி முடிவை அறிவித்தார்.

மதுரையில் நடைபெறும் 6-வது புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை 2-ம் நாள் நிகழ்ச்சியாக இளைய சமுதாயம் எங்கே போய்கிறது என்ற தலைப்பில் விசாரணை அரங்கம் நடைபெற்றது. இதில், முனைவர் சேதுபதி நடுவராக இருந்தார். இளைய சமுதாயம் சீரழிவுப் பாதையில் செல்கிறது என்ற தலைப்பில் முனைவர் பழனியப்பன் பேசியது: "இன்றைய இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக செல்போன் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் இருக்கின்றனர். பிஞ்சிலேயே வெம்பிப் போனவர்களாக வளர்கின்றனர். வயதுக்கு மீறி உழைக்கிறார்கள், வயதுக்கு மீறி சிந்திக்கிறார்கள். ஆனால், வயதுக்கு மீறி வாழ்வார்களா என்பது தெரியவில்லை. இளைஞரிடையே தற்போது கலாசார வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இளைஞர்களை குறிவைத்தே வெளிநாட்டினர் தற்போது பண்பாட்டை சீரழிக்கும் படையெடுப்பை நடத்தி வருகின்றனர். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் பணியாற்றி, பண்பாட்டையும், மொழியையும் மறந்தவர்களாக வாழ்கிறார்கள் என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முனைவர் குறிஞ்சிவேந்தன் பேசியது: "நூறு இளைஞர்களை என்னிடத்தில் தந்தால் புதிய இந்தியாவைத் தருகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இன்றைக்கு 1,000 இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் ஆனாலும் ஒரு விவேகானந்தர் கிடைப்பாரா? இளைஞர்களை வழிநடத்த தற்போது நல்ல தலைவர்கள் இல்லை. ஆனாலும் இதற்கிடையே தேசபக்தி உணர்வு மிக்கவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இளைஞர் கூட்டத்தினரை வைத்து நாம் முடிவு செய்யலாம். அவர்கள் விதியை மாற்ற வீதியில் திரண்டனர். இன்றைக்கு ரத்த தானம் என்றால் நீண்ட வரிசையில் நிற்பவர்கள் இளைஞர்களே. உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இளைஞர்கள் பங்கே அதிகம். வெளிநாட்டில் வேலை செய்து அந்நியச் செலவாணியை ஈட்டும் சக்தியாக இளைஞர்கள் உள்ளார்கள் என்றார்.

இதையடுத்து, இளைஞர் சரவணப்பாண்டியன், மாணவி முருகலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் பெரியவர்கள். விதிவிலக்கை மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. ஒருசில இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை வைத்து இளைஞர் சமுதாயத்தையே குறை சொல்லக்கூடாது.

அதேபோல், பெற்றோர் நாங்கள் என்னவாக வரவேண்டும் என்று விரும்புவதை சுமையாகக் கருதவில்லை. பல்துறைகளிலும் இளைஞர்களால் சாதிக்க முடியும் என்று தெரிவித்தனர். முடிவில் நடுவர் சேதுபதி பேசுகையில், தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள், இரவு பகல் என்று பார்க்கவிடாமல் இளைஞர்களை சீரழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்கின்றன. செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகளால் ஆள்பட்டுக் கிடக்கிறார்கள். போராடக் கற்றுத் தருவது கல்வி என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது மனப்பாடக் கல்வியே மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகவே மாணவர்கள் உள்ளனர். உறவு முறைகளை அவர்கள் தெரிந்துவைத்திருக்கவில்லை. எப்போதும் கணினி, செல்போன் என்ற உலகத்திலேயே வாழ்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற கல்வி முறை மாறவேண்டும். அதற்கு ஆள்பட்டுள்ள இளைய சமுதாயத்தினரின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இதற்குத் தீர்வு, சம்பாதிப்பதை விட இளைஞர்களுக்கு செலவழிப்பதையும் கற்றுத்தர வேண்டும். பெற்றோரின் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நூல்கள் வெளியீட்டு விழா: முன்னதாக, தேவதச்சனின் "இரண்டு சூரியன்', வா.மு.கோமுவின் "சேகுவாரா வந்திருந்தார்', முனைவர் வெ.மு. ஷாஜகான் கனியின் "திரைப்படக் கலை', "ஈழத்து நாட்டார் பாடல்கள்' தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வரவேற்றார். எழுத்தாளர்கள் மு.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், சுகுமாறன், ந.முருகேச பாண்டியன், எஸ்.அர்ஷியா ஆகியோர் பேசினர். புத்தகங்களின் முதல் பிரதியை சேது.சொக்கலிங்கம், சமயவேல் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மக்கள் கண்காணிப்பகம் சார்பில்...: புத்தகத் திருவிழா 2-ம் நாளில் தமிழகத்தின் மனித உரிமைகள்-2009, உரிமைகள் கொண்டாடுவோம், தமிழகத்தின் மனித உரிமைகள்-2010, சல்வா ஜூடும் புரட்சிகரத் தீர்ப்பு ஆகிய 4 புத்தகங்கள் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன
நன்றி தினமணி

திங்கள், செப்டம்பர் 05, 2011

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைநூல்கள் பற்றிய அறிமுகம் |



கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.

இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.

குறிப்பாக வால்மீகியில் இருந்து கம்பன் மாறுபடும் இடங்கள், கம்பன் எவ்வாறு மாறுபடுகிறான் என்பதை உணர்த்தும் உரையாகவும் இது செய்யப் பெற்றுள்ளது.

மொத்தம் பதினான்கு தொகுதிகளாக விரிந்துள்ள இந்த உரை நூல் தமிழர்க்கு மீண்டும் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.

உரையின் வளமையை உணர பல பக்கங்கள் தேவை என்றாலும் சில பகுதிகளை இக்கட்டுரை தர முற்படுகிறது. சுந்தர காண்டத்திற்கு அதன் பெயர்க் காரணம் தொட்டு அதன் முன்னுரையாக விரிந்துள்ள கீழ் காணும் பகுதி இவ்வுரையின் மேன்மையைத் தொட்டுக் காட்டும்.

இராமாவதாரமாகிய பெருங்காப்பியத்துள் சுந்தர காண்டம் ஐந்தாவது பெரும்பிரிவாகும். இது பதினான்கு படலங்களாகிய சிறுபிரிவில் சற்று ஏறத்தாழ 1350 பாடல்களில் முற்றுப் பெற்று விளங்குவது.

வான்மீகி முனிவர் இயற்றியருளிய வடமொழி இராமாயண சுந்தர காண்டமோ 68 சருக்கங்களில் 2800 சுலோகங்களால் முற்றுப் பெற்றுள்ளது.

…..
சுந்தர காண்டம் என்பது நுவல் பொருள் பற்றி வந்த பெயராகும். அது சுந்தரத்தைக் கூறும் காண்டம் என விரியும். சுந்தரம் அழகு. காண்டம் நூலின் பெரும் பிரிவு.

சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும்.

அறிவுனூன் முறையால் சுந்தரம் என்பது இறைவனிணையடிக் கீழிருந்து இயற்றும் பணியிழந்து பிறவிச்சிறையுழந்து நொந்த உயிர்த்தொகை உய்யும் பொருட்டு இலங்கையுள் அசோகவனத்துச் சிறையிருந்த பேறு தருவிக்குமவளாகிய பிராட்டியின் பெருமையினையும், உயிர்களின் குற்றம் கண்டு அவற்றைக் கைவிடாது காக்கவிரையும் இறைவன் பெருங்கருணையினையும் இறைவனைப் பிரிந்து உலகியலால் வெதும்பிய உயிரை இறைவனிடம் சேர்ப்பிக்கும் ஒரு பெருங்குரவனுடைய மாண்பினையும் உணர்த்தி நிற்கும் என்பர் பெரியோர்.

இனி வடநூலார் முறைப்படி பிரிந்த தலைவனும் தலைவியும் ஆகியோர் நிலை (விப்ரலம்பசிருங்காரம்) பேசுதலானும் அந்நிலை அழகுடையதாகவும் சுவை விளைவிப்பதாகவும் இருத்தலானும் இராமபிரானும் சீதா பிராட்டியுமாகிய இருவரது பிரிவுநிலை பேசும் இக்காண்டம் சுந்தர காண்டமாயிற்று என்பாரும் உளர்.

சுந்தரன் என்பது அநுமன் பெயர்களுள் ஒன்று எனக் கொண்டு அவன் செயல் விரித்தலின் இது சுந்தரகாண்டமாயிற்று என்பர் ஒரு சாரார்.

மற்றும் சிலர் சுந்தரம் என்பது இனிமையைச் சுட்டுவதாகக் கொண்டு, இனிமையாகிய (சுந்தரமாகிய காண்டம்) என்று கூறுவர். இக்கூற்றுள் இனிமைப் பொருட்கு இக்காண்டத்தோடு மட்டும் ஒரு தனிச்சிறப்பான இயைபு புலப்பட்டமையாலும் அவ்வினிமை பிற காண்டங்களுடனும் இயைபுடையதாதற்குத் தடையில்லாமையாலும் இக்கூற்று நுவல் பொருள் பற்றிப் பிற காண்டங்கட்கும் வழங்கும் பொது வழக்கொடு மாறு கொள்ளுதலானும் பொருந்துவதாயில்லை.

எனவே சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள் கொண்டு முற்பட விரித்த விளக்கமே பல்லாற்றானும் இயைபுடையதாகும்.

இவ்வாறு சுந்தர காண்டத்திற்குப் பெயர் விளக்கம் காண இவ்வுரை பெரிதும் முயன்று ஒரு முடிவை இறுதியாக்கியுள்ளது.

மேலும் சுந்தரகாண்டத்தை நாடகப் பாங்குடையது என்று இவ்வுரை எடுத்துரைக்கின்றது. அதாவது நாடகத்திற்கு உரிய ஐந்து பகுதிகளான, முகம், பிரதிமுகம்,கருப்பம், விளைவு, துய்த்தல் என்பன சுந்தர காண்டத்துள் உள்ளன என்று சான்றோடு விளங்கும் இவ்வுரை கம்பனைக் கற்போர் நெஞ்சில் இருத்தச் செய்வதாக நிலைக்கின்றது.

பல்லாயிரம் பக்கங்களில் கம்பனை, இராமனை, தமிழை நிலைநிறுத்தும் இந்த நூல்களை வாங்கித் தமிழ் உலகம் மேன்மையடைய வேண்டும். தமிழகத் தமிழாசிரியர்கள் அனைவரும் வாங்கினாலே பல்கலைக்கழகம் அச்சடித்த பிரதிகள் போதாமல் போய்விடும். கல்லூரிகள், பள்ளிகள் நூலகங்களில் வாங்கிச் சேர்த்தால் இன்னும் பன்னூறு பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். கம்பன் கழகங்கள் முன்வந்து வாங்கினால் இன்னமும் இதன் தேவை அதிகமாகும்.

அயலக, இந்தியத் தமிழர்கள் விரும்பி வாங்குவதற்காக இதன் விலையில் இருபத்தைந்து விழுக்காடு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

ருபாய் ஆறாயிரத்து ஐநூறு விலையுள்ள இந்தப் புத்தகத்தைத் தற்போது இருப்பத்தைந்து விழுக்காடு குறைத்து ருபாய் நான்காயிரத்துஎண்ணூற்று எழுபத்தைந்துக்கு வாங்கிடலாம்.

நூல்களை வாங்கும் திறன் மிக்க அனைவரும் அணுக வேண்டிய முகவரி

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெளியீட்டுத்துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம்.


சித . சிதம்பரம் அவர்களின் பூம்புகார் கவிதைகள் பரப்பும் புதுமணம்

சித. சிதம்பரம், பூம்புகார்க்கவிதைகள், முருகப்பன் பதிப்பகம், பழனியப்ப விலாசம், 48. முத்துராமன் தெரு, முத்துப்பட்டணம், காரைக்குடி, 630001- 2011 ஆகஸ்டு, விலை ரு. 60

கவியரங்கம் என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர் அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில் கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை சேர்த்தன.

ஏறக்குறைய மேடைப் பேச்சின் சாயலுடன் மேடையில் உள்ளோரை, எதிரில் உள்ளோரை அழைத்து அவர்களின் கவனத்தையும் இழுத்து கவிதை படைக்கும் நேர்த்தி மிக்க கலைவடிவம் கவியரங்கமாகும். தமிழைப் பாடுதல், தலைவரைப் பாடுதல், உடன் பாடுவோரைப் பாடுதல், வந்திருந்தோரைப் பாடுதல் என்ற மரபுசார் வடிவமைப்புகளைத் தாண்டித் தலைப்பிற்கேற்ற கவிதை படைத்து, அதனை திறம்பட சொல்லி மகிழ்விக்க வேண்டிய கடப்பாடு கவியரங்கக் கவிஞனுக்கு உண்டு.

இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் நூலை அரங்கேற்றும் மரபு போன்ற நிலைப்பாட்டை உடையது கவியரங்கம் என்ற அமைப்பு. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவுடையார் கோயிலில் அக்கோயிலின் புராணத்தை அரங்கேற்றிய செய்தியை உ.வே.சா தன் என் சரிதம் என்ற தன்னூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கவியர்டங்கக் கவிதைகளுக்கு என்று தனித்த இலட்சணங்களும் உண்டு. எளிமை நடை, சொல் விளையாட்டு, சொற்செட்டு முதாலன பல இலட்சணங்கள் அதற்கு உண்டு. அதில் இருந்து மீறாமல், மீற முடியாமல் கவியரங்கக் கவிதைகள் வளர்ந்து வந்துள்ளன.

புதுக்கவிதையின் நுழைவு அரங்கக் கவிதைகளையும் விட்டுவைக்கவில்லை. புதுக்கவிதை நடையிலேயே தமிழ்ப்புலவர்கள் கவிதைக் கலையை ஆக்கத் துணிந்துவிட்டனர். எப்போதாவது மரபு சார் விருத்தங்களைக் காது குளிரக் கேட்க முடிகிறது. இந்தச் சூழலில் மரபின் தெரிப்புகளுடன் புதுக்கவிதைக் கலப்புடன் வெளிவந்துள்ள ஒரு நூல் பூம்புகார்க் கவிதைகள் என்ற நூலாகும்.

கவிஞர் சித. சிதம்பரம் அவர்கள் படைத்துள்ள இந்த நூல் பூம்புகாரில் தொடர்ந்து அவர் கவியரங்கேறிய காலத்தில் பாடப்பட்டன. பூம்புகாரைத் தொடர்ந்து காரைக்குடி கம்பன் கவியரங்கம் போன்றவற்றில் அவர் பாடிய கவிதைகளும் இதில் காற்றில் கலந்து சென்றுவிடாமல் பதிவாக்கப் பெற்றுள்ளன. பூம்புகார் பற்றியும், பூம்புகாரில் எழுந்த காப்பியமான சிலப்பதிகாரம் பற்றியும் எழுந்த தலைப்புகளில் கவிஞர் படைத்த கவிதைகளின் தோரணம் இந்நூல்.

இதனுள் காவிரியாறு, நெடுஞ்செழியன்,கோவலன் என்ற சிலப்பதிகாரம் சார்ந்த கவிதைகளும், ஒன்று, நான்கு என்று எண் சார்ந்த கவிதைகளும், நகரத்தார் மகன், மாற்றூர் என்ற சமுகம் சார்ந்த கவிதைகளும், கம்பன் இன்று வந்தால் பாட்டாளியாவன் என்ற கவிதையும் காது, நெருப்பு என்ற தலைப்பிலான கவிதைகளும் கலந்து இனிக்கின்றன.

கவியரங்கங்கள் இன்னும் பல வைக்கப் பெற்றால் எத்தனை கவிஞர்கள் தோன்றுவார்கள். எத்தனைக் கவிதைகள் தோன்றும். இனிமேல் வருமா கவியரங்கத்திற்கு ஒரு வசந்த காலம் என்ற எண்ணத்தை இந்தத் தொகுதி ஏற்படுத்தி நிற்கிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பில் தன்னை ஆங்காங்கே கவிஞர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தனையும் உண்மை கலந்து அவர் நிற்கும் இடங்களாகும்.

அடிப்படை வாழ்க்கைக்கும்
அகப்படை வாழ்க்கைக்கும்
தொழில் கூட்டு முதலீடு கடன்
பொருளாதார போதிப்புகள்
புதிய புதிய சாதிப்புகள்
வயிற்றிற்காக மனசை
விற்கமுடியாமல்
வாழ்க்கை முடிய பாதிப்புகள்

முப்பத்திநான்கு வயது
தழும்புகளைத் தாங்கிக் கொண்டு
வரும்புகழை வாங்கிய நேரம்
என் கட்டிலுக்குக் கால் ஒடிந்தது
ஒற்றையானேன்

காதலை நனைந்த நாட்களைத் தாண்டி
காமம் நிறைந்த பொழுதுகளை விரட்டி
பசித்த பொழுதில் தண்ணீர் அருந்தி
சமரசம் புரியாமல் சாகசம் செய்யாமல்
தகுதியாகலே தான் அடைந்த தலைமை நாற்காலி

(பக்.4344)
என்ற கவிதைக்குள் கட்டுண்டு கிடக்கும் அகவாழ்வின் துயரம், அதை ஆற்றிக் கொண்ட விவேகம் இத்தனைக்கும் மேலாயக் கவிதை ஊற்றெடுக்கும் உள்ளம் என்று இவற்றை ரசிக்கையில் படிப்போர் உள்ளம் கவிஞரைத் தொடுகின்றது.

அரங்கக் கவிதைகளைத் தான் புதுக்கவிதைகளாய் வடிப்பது பற்றிக் கவிஞருக்கு ஒரு கவலை வந்திருக்கிறது. மரபு சார் கவிவாணர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கையில் இந்தக் கவலை வரவேண்டிய ஒன்று தான்.

அரசி என்றழைக்கப்படும் கவிவாணர் தலைமையில் பாடப்பட்ட கவிதையில் இதுபற்றிக் கருத்தறிவிக்கிறார் கவிஞர்.

நீங்கள் மாவுத்தன்
மரபு யானையைக் கட்டி வைக்கிறீர்கள்
நானோ ராவுத்தன்
புதுக்கவிதைக் குதிரைக்குப்
பொட்டுவைக்கிறேன் அதையும்
உங்கள் காலைத் தொட்டு வைக்கிறேன் (ப.28)
என்ற நிலையில் புதுக்கவிதையின் புதுவேகத்திற்கு குதிரையை ஒப்புமையாக்கியிருப்பதையும், மரபின் ஓட்டத்திற்கு யானையின் வலிமையையும் அதன் வேகத்தையும் பொருத்தியிருப்பது சரியான வேறுபாடாகின்றது. யானையாய்க் கவிதை அசைந்து வந்தால் என்ன, குதிரையாய்க் கவிதை பறந்து வந்தால் என்ன அதன் அழகிற்கு, அதன் ரசிப்பிற்கு ஏங்கி நிற்கவேண்டும் வாசகன். அந்த ஏக்கத்திற்கும் ரசிப்பிற்கும் உரியனவாக இவரின் கவிதைகள் நிற்கின்றன என்பதில் ஐயமில்லை.

இவரின் கவிதைக்குள் சொற்களின் அடுக்கைச், சொற்களின் பொருள் சேர்க்கையைப், பொருள் மாற்றத்தை நிறைய காணமுடிகிறது. புகார் என்ற சொல்லும், மாற்றூர் என்ற சொல்லும் எப்படியெல்லாம் நின்று பரிணமிக்கறது என்பதைப் பின்வரும் சான்றுகள் காட்டும்.

பூம்புகாரே புராதன நகரே
வெளிப்பகைவர் உட்புகார்
உன் நிலத்தார் வெளிப்புகார்
புகார் என்னும் பெயர்
பூண்ட தன்மையைப்
பண்டைய இலக்கியம்
பறைகள் சாற்றும்

ஆனால்
புகார் என்னும் புகழுடை உன் நாமம்
கடந்த காலத்தில் கறைபட்டுப் போனதே
புகார் மீதும் புகார் வந்ததே (ப.20)

என்ற கவிதை புகார் மீது புகாரை அள்ளி வீசுகின்றது.

கூற்றுதனை மாற்றூர், கொடுமையினை மாற்றூர்
ஏற்றமுன் தீவினையை எரித்தே மாற்றூர்
ஊற்றூரும் நீராகி உயிர்காக்கும் மாற்றூர் (ப.47)

இப்படிச் சொல்லுக்குள்ளே சோதி மிக்க நவகவிதையை எடுத்தியம்பும் இவரின் வரையறைகள் இன்னும் மகிழ்விப்பன.

இவர் மகனுக்குத் தரும் வரையறையாக

மகன் நான்
பெற்றவர்கள் பிரதிநிதி
தந்தைக்கு அந்தாதி
ஆண் எனும் சந்ததி (ப. 61)
என்ற கவிதை அமைகின்றது.

இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று இந்த மகன் கவிதை பெற்றோரின் பேரின்பத்தைப் பாடுகின்றது.

நான் சம்பாதித்தால் அவர்கள்
பெட்டி நிறைகிறது
நான் தளிர்க்கையில் அவர்கள்
பூக்கிறார்கள்
நான் உழைக்கையில் அவர்கள்
வேர்க்கிறார்கள்

என்ற இந்த மகனின் உயர்வும், அதற்கும் பெற்றோர் தரும் மதிப்பும் இருக்கும் குடும்பங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க்கையின் கணக்கைக் கவிஞர் பின்வருமாறு பிரதி எடுக்கிறார்.

கீழ்ப்புள்ளி பூமி
மேற்புள்ளி சாமி
கீழ்ப்புள்ளி உழைப்பு
மேற்புள்ளி சிறப்பு
கீழ்ப்புள்ளி புத்தி
மேற்புள்ளி வெற்றி ( ப. 85)

என்ற வாழ்க்கைக் கணக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காற்புள்ளியாகவே கணக்கெடுக்கிறது. முழுப்புள்ளி எப்போது ஆவோம் என்பதுதான் இந்தக் காற்புள்ளி தரும் எதிர்பார்ப்பு மகத்துவம்.

சில சொற்களுக்குக் கவிஞர் பொருளெழுதி பெருமை கொள்ளுகின்றார்.

காது ஒரு சித்திர வடிவம்
புள்ளி வைக்கா கேள்விக்குறிபோல்
புலப்படும். கேள்வி அதனால்தான் பெறப்படும் (ப. 52)

என்று காதிற்குப் பொருள்தருகிறார் கவிஞர்.

தாய்க்கு அவர் தரும் பாருள் சித்திரா பௌர்ணமி வானத்தில் சிரித்துக் கிடக்கும் சந்தனப் பொய்கை (ப. 57) என்பது படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவது.

தாயையும் தந்தையையும் பற்றிய இன்னொரு கவிதை படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவதாகும்.

நான்குவிழிச் சந்திப்பில் நான் பிறந்தேன்.
வாங்கினாள் தாய் வழங்கினார் தந்தை
தாங்கும் வயிற்றில் தவமாய்க் குடிபுகுந்தேன் (ப.39)
இவ்வாறு இவரின் கவிதைகள் எங்கு தொட்டாலும் சொற்களில் சுவை பிறக்கச் செய்கின்றன.

நகரத்தார் சமுகத்தவர் பற்றிய இவரின் கவிதைப் பதிவு ஒன்று அழியாப் பதிவாக விளங்குகின்றது.

தனவணிகர் பண வணிகர்கள்
முளை இவர்களுக்கு முலதனம்
கணக்கு இவர்களின் கைத்துணை
கருக்கடை இவர்களின் கை நேர்த்தி
அக்கறை இவர்களது ஆயுதம்
அர்ப்பணிப்பு இவர்களின் போர்முறை
இணக்கம் இவர்களின் திட்டம்
ஈட்டலும் பெருக்கலும் சட்டம்
ஈகையும் காத்தலும் உச்சம்
விலாசம் தான் இவர்களுக்கு வெளிச்சம்
(ப. 59)

இக்கவிதையை நகரத்தார்கள் தமக்கான கவிதையாக வரித்துக் காள்ளலாம். சட்டங்களாக எழுதி மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

இத்தனைக் கவிதைகளை எடுத்தியம்ப வைத்த அரங்கங்களுக்கு மிக்க நன்றி. அதனைப் பதிவாக்கிய கவிஞருக்கும் மிக்க நன்றி.

காலக்கணக்கன் கணக்கை முடித்தாலும்
கவிதைக் கனத்தில் காலத்தை முறிப்பேன் (ப. 45)

என்ற இவரின் ஆழமான கவிதை நேசிப்பு வரிகள், சாதிப்பு வரிகள் இன்னும் சாதிக்கும் என்பதற்கு இன்னும் பல நூல்கள் வரும் என்பதே சாட்சி.

எடுத்துக் கொண்ட பொருளை எள் முதல் பனை வரை பார்த்துத் தேறும் கவிதை வடிக்கும் கவிஞரின் வெற்றி மிக்க கவிதைப் படைப்புகளில் இதுவும் ஒன்றாக அமைகின்றது.