திங்கள், மார்ச் 28, 2011

செம்மொழித் தமிழின் தனித்தன்மை

தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என்ற இரண்டு வகையில் முத்த திராவிட மொழியாக விளங்குவதாவும் சிறப்பு பெற்றிருப்பது தமிழாகும். இதன் எழுத்துக்கள், சொற்கள், பாடுபொருள்கள், செய்யுளின் யாப்பு வகைகள் முதலியன தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும். இத்தனிச்சிறப்புகளை எடுத்து மொழிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவதாக தமிழ் ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதம் ஆகிய வடமொழியில் இருந்துத் தனித்தன்மை வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. இதனைத் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்ததாக அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இருப்பினும் வடமொழி தமிழுக்குச் செவிலித் தாய் போன்றது என்று மொழியும் அறிஞர்களும் உண்டு. இவர்களுள் குறிக்கத்தக்கவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். இவர் "தமிழ்மொழியை வடமொழி போஷித்து வந்திருக்கிறதென்பது முன்று வாயில்களால் அறியலாகும். அவை. 1. தமிழிலுள்ள சொற்கள், 2. தமிழ் நூல் விஷயங்கள், 3. தமிழிலக்கிய மரபு என்பனவாம் ( வையாபுரிப்பிள்ளை, வடமொழியும் தமிழும், ஆராய்ச்சிக் களஞ்சியம் தொகுதி. 7. ப. 194) இக்கருத்தின்படி தமிழுக்கும் வடமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது என்றாலும் அதனைக் காட்டிலும் தமிழ் தனித்தன்மையான பல நிலைகளைப் பெற்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக தமிழ் எழுத்து மரபிற்கும், சொல் மரபிற்கும், பொருள் மரபிற்கும், யாப்பு மரபிற்கும் தனிப்பட்ட பல கூறுகள் உண்டு. அவை வடமொழிக்கு அமையாத தனிப்பட்ட கூறுகள் ஆகும். இத்தனிப்பட்ட கூறுகளின் வழி ஆரிய குடும்பத்தைச் சாராத தனித்தன்மை வாய்ந்த திராவிட மொழி தமிழ் என்பது மெய்ப்படும். மேலும் உலக மொழிகளிலும் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது என்பதும் இதன் வழியாக பெறப்படும்.

வடமொழியையும் தமிழையும் ஒன்றாக வைத்துப் பார்த்த நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் பின்வரும் நூற்பாவில் தமிழுக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் எவை எனக் காட்டுகிறார். அதனோடு வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள பொது எழுத்துக்கள் எவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

றனழஎ ஒவ்வும் உயிர்மெய் உயிரளபு

அல்லாச் சார்பும் தமிழ், பிற பொதுவே. (நன்னூல். 150)

இந்நூற்பாவின்படி தமிழ் மொழிக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் " ற, ன, ழ, எ, ஒ '' என்ற ஐந்து எழுத்துக்கள் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் ஆகும். இவற்றோடு பத்து சார்பெழுத்துக்களில் உயிர்மெய், உயிர் அளபெடை தவிர்ந்த மற்ற எட்டு எழுத்துக்களும் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துக்களின் தொகையில் அடங்கும். ஆக எட்டும் ஐந்தும் இணைய பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் ஆகும் என்கிறார் பவணந்தி முனிவர். எஞ்சிய எழுத்துக்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் உரிய பொது எழுத்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை இருபத்தேழு என்பது அவரின் கணக்கீடு ஆகும்.

நன்னூல் ஆசிரியரின் கருத்தின்படி உயிர் 12, மெய் 18, சார்பு எழுத்துக்கள் 10 ஆக நாற்பதாக அமைந்து தமிழ் எழுத்துக்களில் மேற்காட்டிய பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் என்பது உணரத்தக்கதாகும்.

தனித்த இந்தச் சிறப்பு எழுத்துக்கள் உலக மொழிகளை ஒப்பு நோக்கும் போதும் தமிழுக்கே உரிய சிறப்பான எழுத்துக்கள் என்றே கருதத்தக்கனவாகும்.

தமிழின் பாடுபொருள் மரபிற்கும் பல தனித்த கூறுகள் உண்டு. தமிழில் அகம் பாடுதல், புறம் பாடுதல் என்ற இரு மரபுகள் உண்டு. இவற்றுள் அகத்திணை மரபு என்பது தமிழின் தனித்த மரபு ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பாடுபொருள்களைச் சுட்டும் மரபு வடமொழியில் உள்ளது. இதனைச் `சதுர்வர்க்கம் ' என வடமொழியார் குறிப்பர். இருப்பினும் இன்பத்துள் ஒன்றாக தமிழில் அமைக்கப் பெற்றுள்ள அகமரபு என்பது தமிழரின் தனித்த மரபாகும்.

இது குறித்து வ.சுப. மாணிக்கனார் பின்வருமாறு கருத்துரைக்கிறார். " சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார். விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப் பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஒரு அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு. தமிழ் மொழியின் தனி வீற்றினை அயல் மொழியான் உணரவேண்டுமேல் அவனுக்கு முதலில் கற்பிக்க வேண்டும் பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளியிருப்பார்'' (வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 2) என்ற இக்கருத்தின்படி தமிழுக்கு உரிய தனித்த நிலையாக அகம் பாடுதல் என்பது அமைந்துள்ளது என்பது பெறத்தக்கதாகும்.

மேலும் அகத்திணை மரபினை உலக இலக்கிய மரபுகளுள் புதுமை வாய்ந்தது என்றும் அவர் கருதுகிறார். "தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி பெற்றிருக்கும் இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும் பெயராய்ச் சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால் அவ்விலக்கிய வகை அம்மொழியில் அல்லது பிற எம்மொழியிலும் காண்பதற்கு இல்லை என்பதுதானே கருத்துரை. இதனால் உலக மொழிகளுள் தமிழ் மொழியின் தனிச்சிறப்பும், தமிழிலக்கிய வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்'' (மேலது. ப. 23) என்ற இக்கருத்து அகப் பொருள் பற்றிப் பாடும் மரபு உலக மொழிகளுக்கு இடையில் தமிழுக்கான தனித் தன்மை வாய்ந்த மரபு என்பது தெரியவருகிறது.

அகம் பாடுதல், புறம் பாடுதல் என்பனவற்றை திணைப்பகுப்பில் அமைத்திருக்கும் தமிழர் படைப்புத் தன்மை என்பது உலகத்திற்கு புதியது என்று மேலை நாட்டாரும் கருதுகின்றனர்.

"தமிழ்க் கவிதை இயல் வடமொழிக் கவிதை இயலினின்றும் முற்றிலும் மாறுபட்டது. வியப்புக்குரியது. அதனை அறியத் தற்செயலாக வாய்ப்பு கிடைக்கும் மேலை நாட்டினர்க்கு அது இன்ப அதிர்ச்சி ஊட்டும் புதையலாகும். அதில் கவிதை அகமென்றும் புறமென்றும் பகுக்கப் பெற்றுள்ளது. அங்கு ஒரு குறியீட்டுத் திறவுகோலும் மிக மிக மேம்பாடுடைய நிலப்பாகுபாட்டைப் பயன்படுத்தும் உத்தியும் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் வாழும் போலிச் சேதானைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அக்கவிதையியல் இன்றைய நடைமுறைக்கு ஏற்றது. செவ்வியல் சார்ந்த தமிழ்க் கவிதையியல் மேலக் கவிஞர்கள் தரும் வறண்ட வாழ்க்கைத் தத்துவத்திற்கு மருந்தாகி உள்மன இன்பங்களை அதிகரிக்க வல்லது. தமிழில் உள்ள அகத்திணைக் கவிதைகள் சிறுதவறும் இல்லாத பெரிதும் பொருத்தமான உளவியல் அடிப்படை கொண்ட ஓர் அமைப்பிற்குள் இயங்குகின்றன. (மேற்கோள் மார்ட்டின் செய்மர் ஸ்மித், மருதநாயகம், உலக அறிஞர்கள் பார்வையில் செம்மொழித்தமிழ், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், ப. 57) என்ற இந்தக் கருத்து தமிழரின் அகம் பாடும் மரபை உலக இலக்கியங்களில் தனித்தன்மையாகக் காண்கிறது.

எனவே தமிழ் எழுத்தானும், பாடுபொருளானும் தனித்தன்மை வாய்ந்தது என்பது கருதத்தக்கது. ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து இதன் தனித்தன்மையை மெய்ப்பிக்க இந்த இரு கருத்துக்கள் அசைக்க முடியாதனவாகும்.

மற்ற உலக மொழிகளில் இருந்தும் திராவிடக் குடும்பம் சார்ந்த மொழிகள் தனித்த பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன என்பதைக் கமில் சுவலபில் என்ற அறிஞர் எடுத்துரைத்துள்ளார். அவரின் சில கருத்துக்கள் பின்வருமாறு.

திராவிட மொழி அமைப்பு பற்றி அவர் அறிவித்துள்ள அடிப்படைத் தகவல்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளன..

`பெயர் சொற்கள்: திராவிட மொழிகளின் பெயர்கள் பெரிதும் வரையறுக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக பெயர்கள் பால் முடிவுகளை அறிவிக்கும்படியானவையாக இருக்கும். அதனோடு பல்வகை பொருள்முடிவுகளைப் பெறத்தக்க வகையிலான இலக்கணக் கூறுகளை அது நடுவணதாகக் கொண்டிருக்கும் '(.(Kamil v. Zvelebil, Dravidian linguistics – An Introduction,p.19 ) என்று திராவிட மொழிகளின் பெயர்கள் பற்றிய குறிப்புரை தமிழுக்கு மிகவும் பொருந்துவதாகும்.

`வினைச் சொற்கள் : திராவிட மொழிகளின் வினைச் சொற்கள் பற்றிய ஆராய்ந்த டேவிட் டபிள்யு மெகால்பின் என்ற அறிஞர் " வினைச் சொல் என்பது அனைத்துத் திராவிட மொழிகளிலும் அதி முக்கியத்தன்மை கொண்டதாகும். இலக்கண அமைப்பிலும், தொடரியல் அமைப்பிலும் அதற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு '' (மேற்கோள், Kamil v. Zvelebil, Dravidian linguistics – An Introduction,p.28) என்று அறிவித்துள்ள கருத்துரைத் தமிழுக்கு மிகப் பொருந்துவதாகும்.

இவை போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களின் மொழி வரையறைகள் தமிழ் மொழியில் உள்ள சொற்களின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துவனவாகும்.

யாப்பு நிலையிலும் தமிழ் யாப்பு முறை தனித்தன்மை வாய்ந்தது. இதனை மெய்ப்பிக்க வையாபுரிப்பிள்ளையின் பின்வரும் கருத்து உதவும்.

" தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழியிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள இலக்கணமமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா முதலியன தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம். இவைகள் தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும், தொன்று தொட்டு வந்த வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசை இனிமைக்கும் பொருந்துமாறு அமைந்தன. தமிழிற்கே தனியுரிமையென முத்திரையிடப் பெற்று வெளிப்போந்து வீறுற்று உலவின'' ( வையாபுரிப்பிள்ளை, மேலது, ப. 205) என்ற இவ்வாய்வாளரின் கருத்து தமிழுக்கு அமைந்துள்ள தனித்த யாப்பமைதியைப் பற்றியதாகும்.

இவ்வகையில் தமிழ் மொழியின் தனித்த பண்புகள் இவை என உணர்ந்து கொள்ளமுடிகின்றது. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்பினை எடுத்துரைக்கும் பின் வரும் அறிஞர்களின் கருத்துக்களும் தமிழின் தனித்தன்மைக்கு அரண் சேர்ப்பனவாகும்.

தமிழ் இலக்கணத்தின் தனித்தன்மையைப் பொற்கோ பின்வருமாறு குறிக்கின்றார்." உலகிலுள்ள மற்ற மொழியினரும் மற்ற பண்பாட்டினரும் இலக்கணம் என்றால் எழுத்திலக்கணம், சொல்லிணக்கணம், தொடரிலக்கணம் ஆகிய இவற்றைப் பற்றி மட்டுமே கருதுகின்றனர். ஆனால் தமிழ்மரபு இலக்கண எல்லையை இதற்கு மேலும் விரிவு செய்திருக்கிறது.எழுத்து, சொல், தொடர் ஆகியவற்றோடு மொழியில் உள்ள இலக்கியங்களைப் பற்றிய ஆய்வையும் தமிழ்மரபு இலக்கணத்திலேயே அடக்கிக் கொண்டிருக்கிறது. ( பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், ப. 2)

இவ்வகையில் தமிழ் என்னும் மொழிக்கும் , அதனால் மொழியப்பெற்ற இலக்கண இலக்கியங்களுக்கும் தனித்த பல மரபுகள் உள்ளன என்பது தெளிவாகின்றது. இத்தனித்தன்மைகளும் தமிழ் மரபு கட்டிக் காத்துவருகின்றது. இதற்குத் தமிழ் மக்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதும் கருதத்தக்கது.

பயன்கொண்ட நூல்கள்.

1. இளவரசு. சோம., நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004

2. பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், தமிழ் நூலகம், சென்னை, 1989

3. மலர்க்குழு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், தமிழ்நாடு அரசு, 20104.

4. மாணிக்கம். வ.சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2007

5. வையாபுரிப்பிள்ளை, எஸ்., ஆராய்ச்சி தொகுதி, தொகுதி .ஏழு, சென்னை 1998.

6. kamil V. Zvelebil, Dravidian linguistics An introduction, PILC.pondicherry 1997


சனி, மார்ச் 26, 2011

பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்




சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமைக்கும், பிற பெண்பால் புலவராலும் அறியப்பெற்றவர் என்ற பெருமைக்கும் உரியவராக விளங்குபவர் வெள்ளிவீதியார் ஆவார். இவர் பாடியனவாகப் பதிமுன்று பாடல்கள் சங்க இலக்கியப் பகுதியில் கிடைக்கின்றன. அகநானூற்றில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் எட்டு பாடல்களும், நற்றிணையில் முன்று பாடல்களும் ஆக பதிமுன்று பாடல்கள் இவர் பாடியனவாகக் கிடைக்கின்றன.

இவற்றில் நான்கு பாடல்கள் பாலைத்திணை சார்ந்தவை. முன்று பாடல்கள் குறிஞ்சித் திணை சார்ந்தவை. மருதத்திணை, நெய்தல் திணை ஆகியவற்றுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடாத திணை முல்லைத் திணை மட்டுமே ஆகும். இதற்கும் அடிப்படையான காரணம் உண்டு. முல்லைத்திணை பெரும்பாலும் கற்பு வாழ்க்கை சார்ந்தது. இக்கற்பு வாழ்வினைப் பெறாதவர் வெள்ளிவீதியார் என்பதன் காரணமாக இத்திணை விடுக்கப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

இவர் பாடிய பாடல்களில் பலவற்றைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்று துறைக் குறிப்பாளர்கள் துறை வகுத்துள்ளனர். இவர் பாடிய நற்றிணையின் முன்று பாடல்களும் காமம் மிக்கக் கழிபடர் கிளவித் துறை சார்ந்தனவாக உள்ளன. இவரின் காதல் நிறைவேறாமையின் வெளிப்பாடு இவரின் பல பாடல்களிலும் இவர் பற்றி பிறர் பாடிய பாடல் குறிப்புகள் வாயிலாகவும் தெரிய வருகிறது.

இவ்வகைப்பட்ட பாடல்களைப் பாடியுள்ள வெள்ளிவீதியாரின் பாடல்கள் பெண்ணிய உளவியல்படி சிந்திக்கத் தக்கனவாக உள்ளன. இவ்வழியில் சித்திக்கின்றபோது இதுவரை வெள்ளிவீதியார் பாடல்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெற வேண்டியனவாக உள்ளன.


பெண்ணிய உளவியல் ஓர் அறிமுகம்
பெண்ணிய உளவியல் என்பது பெண் மனதை மையமாக வைத்து, அவளின் நடத்தைகளை எடுத்தறிவிப்பது ஆகும். பெண்களாலேயே உணரப்படும் பெண் மன இயல்புகள் பற்றிய கூறுகளை உட்கொண்டிருப்பது பெண்ணிய உளவியல் ஆகும். இது பற்றிய மேரை நாட்டார் விளக்கங்கள் பின்வருமாறு.

"பெண்ணிய உளவியல் என்பது சமுகக்கட்டமைப்பினையும், பால் வேறுபாட்டினையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் உளவியல் அமைப்பாகும். வரலாற்று அடிப்படையில் ஆண்பால் சார்புடைய உளவியலில் பிறந்ததாக இது இருந்தாலும், இந்தக் கூறு ஆண்களின் உளவியல் சிந்தனைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிய உருக்களில் இருந்தும் தனிப்பட்டு பெண்கள் பற்றிய உளவியல் ஆய்வுகளைத் தொடங்குவதாக உள்ளது.

பெண்ணிய உளவில் என்பது பெண்களுக்கான சரிசமமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தனித்த அழுத்தத்தைத் ஏற்படுத்தித் தருகின்றது

மேற்காட்டிய இரண்டு கருத்துக்களும் பெண்ணிய உளவியலின் நோக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள உதவுகின்றன. ஆண் சிந்தனை வயப்பட்ட உளவியல் பகுதியைப் பெண் வழிப்பட்டதாக மாற்ற எழுந்ததுவே பெண்ணிய உளவியல் ஆகும்.

இதனை முதன் முதலாக உருவாக்கிய உளவியலாளர் பிராய்டின் உளவியல் பள்ளியின் வழிவந்த நியோ பிராய்டியன் எனப்படும் காரென் ஹார்னி என்ற பெண்ணியலாளர் ஆவார். இவரே பிராய்டு பெண் உளவியல் பற்றிக் கூறிய அடிப்படைக் கருத்தான ஆண் குறி இழப்புப் பொறாமை என்பதற்கு மாற்றாக வோப் என்வி எனப்படும் கருப்பை இழப்புப் பொறாமை(றடிஅ நஎல) என்பதனைக் கொண்டு வந்தவர்.

அதாவது பெண் குழந்தையானது இளவயதில் தனக்கு ஆண்குறி இல்லையே என்ற எண்ணத்தின் காரணமாகப் பொறாமைப்பட்டு அதன் காரணமாக உளவியல் அடிப்படையில் தயக்கம் பெறுவதாக பிராய்டு கருதினார். ஆனால் பெண்ணியல் உளவியல் அறிஞர்கள் ஆணுக்கும் இழப்பு, பொறமை ஆகியன இருக்கின்றன. அந்தப் பொறாமையின் காரணமாகவே பெண்களை ஆண்கள் அடிமையாக்க முற்படுகிறார்கள் என்று கருத்துரைத்தனர்.

குறிப்பாக ஆணுக்கு மார்பக இழப்புப் பொறாமை, கருப்பை இழப்புப் பொறாமை, பெண்குறி இன்மைப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை போன்ற பல பொறாமைகள் இருப்பதன் காரணமாக அவர்களுக்குள் பாதிப்பு ஏற்படுகின்றது என்று பெண்ணியலாளர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாகப் பெண்களை அவர்கள் அடக்கி வைக்க முற்படுகின்றனர் என்பது இவர்கள் கண்டறிந்த முடிவாகும்.

ஹார்னி கரென் இது பற்றிக் கூடுதல் விளக்கம் தருகிறார். கருப்பை பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகிய சொற்கள் பெண்ணிய உளவியல் சார்புடையனவாகும். இயற்கையாக ஆணுக்குப் பெண் மீது வெளிப்படுத்தமுடியாத அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக அவளது உயிரியல் இயக்கங்களான மகப்பேறு, மகப்பேற்றுக்கான தயாரிப்பு முயற்சிகள், பாலூட்டல் போன்றன குறித்த அச்சங்கள் ஆண்களிடம் ஏற்படாமை கருதி ஒரு புதிர்த்தன்மையை அவை ஆண்களுக்குள் ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பெண்களை அடக்கி வைக்கவும், ஆண்கள் தங்களின் இருப்பை, தங்களின் பெயர்களை முன்வைக்கவும் ஆன செயல்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர். என்ற இக்குறிப்பின் வழியாக பெண்கள் அடக்கப்பட்டதற்கான முக்கியக் கூற்றினைப் பெண்ணிய உளவியல் அறிந்து சொன்னது.

குறிப்பாகப் படைத்தல் என்ற தொழில் உயிரியல் அடிப்படையில் பெண்களின் தனித்த இயல்பாக உள்ளது. இந்த உயிர்ப் படைப்பாற்றல் அவர்களின் இலக்கியப் படைப்பாக்கத் திறனிற்கும் முல காரணியாக உள்ளது.

ஆனால் உயிரியல் அடிப்படையில் வெளித் தோன்றும் வகையில் படைப்புத் தொழிலைச் செய்யும் பெண்களை இலக்கியப் படைப்பாக்கத்தில் ஆண்கள் பின்தள்ளி விடுகின்றனர். ஆண்கள் அதிக அளவில் இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபடுவதும், ஈடுபட்டதும், பெண்களைப் படைப்பாக்கத்தில் இறங்கவிடாமல் புறவேலைகளை அதிகப்படுத்துவதுமான முயற்சிகளும் இப்பின்தள்ளுதலின் அடையாளங்கள் ஆகும்.

மேலும் பெண்கள் உயிர்ப் படைப்பாக்கத்திற்கான தனி வாய்ப்பைப் பெற்றிருப்பதாலும் அவர்களின் படைப்பாக்க முயற்சி அதனுடன் சமப்படுத்தப்பட்டு விடுகிறது. இவ்வகையில் பெண்களின் படைப்பாக்க முயற்சிகளை புரிந்து கொள்ள பெண்ணிய உளவியல் உதவி செய்கின்றனது.

குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் உயிர்ப்படைப்பாக்கத்தினை எட்டாத பெண்களே இலக்கியப் படைப்பாக்கங்களை அதிகம் புனைய முன்வந்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தி, பெருங்கோழியூர் நாய்கன் மகள் நக்கண்ணையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்ற பெண்களின் வாழ்வில் குழந்தைப் பிறப்பு என்பது அறவே இல்லாமல் இருப்பதையும் எண்ணிப் பார்க்கையில் இக்கருத்துச் சரியென மெய்ப்படும்.

வெள்ளிவீதியார் அகவாழ்வில் காதல் தோல்வியைச் சந்தித்தவர் என்பது அவர் குறித்த ஔவையாரின் பதிவு வாயிலாகவும், வெள்ளிவீதியாரின் பதிவு வாயிலாகவும் அறியப் பெறுகின்றன.

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே (அகநானூறு : 147:8)

என்ற ஔவையாரின் அகநானூற்றுப் பாடலின் வாயிலாக வெள்ளிவீதியார் காதலனைத் தேடி அலைந்தமை தெரிய வருகின்றது.

மேலும் வெள்ளிவீதியாரின் பின்வரும் பாடலில் அவர் ஆதிமந்தியைப் போலக் காதலனைத் தேடி அலைந்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது.

ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ
(அகநானூறு 5: 1415)

மேலும் இவரது குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இச்சாயலில் உள்ளது.

நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே( குறுந்தொகை 30)

என்ற இப்பாடலின் வாயிலாக வெள்ளிவீதியாரின் அகவாழ்க்கை பற்றிய செய்திகள் தெரியவருகின்றன.

வெள்ளிவீதியார் தன் அகவாழ்வில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இதற்கு அடிப்படைக் காரணம் தலைவனைச் சேராமையே ஆகும். தலைவன் ஏன் வெள்ளிவீதியாரைச் சந்திக்க மறுத்தான். அவரைத் திருமணம் செய்ய ஏன் மறுத்தான் இதுபோன்ற பல கேள்விகள் இப்பாடல்களின் பின்னணியில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பெண்ணிய உளவியல் அடிப்படையில் பதிலைத் தரவேண்டியுள்ளது. வெள்ளிவீதியார் என்ற பெண் உயிர்ப் படைப்பாக்க இயல்புகளையும், இலக்கியப் படைப்பாக்க இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக அவரிடம் இருக்கும் கூடுதல் தகுதிகள் வெள்ளிவீதியாரால் விரும்பப்பட்ட தலைவனுக்கு ஒரு விதமான ஐயத்தை, அச்சத்தை, அதாவது தனக்கு இப்பெண் அடங்கி நடப்பாளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் காரணமாக அத்தலைவன் இவரை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று முடிய முடிகின்றது. இதற்குப் பல சான்றுகளும் இவர்தம் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. அவை பற்றிச் சிந்திக்கும் களமாக அடுத்த பகுதிகள் அமைகின்றன.

காதலின் முதல் நிலை
தலைவனைக் கண்ட தலைவி ஒருத்தி புன்னகைக்கிறாள். இந்தக் காதல் குறிப்பினை உணர்ந்த தலைவனும் அவளுடன் காதல் கனிகின்றான். சிறிது நாளில் தலைவியின் காதலைப் புறக்கணித்து விடுகிறான். இதன் காரணமாகத் தலைவி வருத்தமடைகிறாள்.

அவள் தலைவனுக்குக் காதல் குறிப்புரைத்த பற்களைப் பார்த்து பற்களே நீங்கள் பாலை நிலத்தின் வழியில் செல்லும் யானையின் தந்தங்கள் கல்லில் பட்டு முனை மழுங்கி அழகொழிந்து காணப்படுவதைப் போல ஆவீர்கள் என்று கூறுகிறாள். மேலும் தலைவனின் காதல் தலைவியின் உள்ளத்துள் பாணர்கள் பச்சை மீன்களைப் பிடித்துச் சுமந்து செல்லும் மண்டை எனப்படும் பாத்திரத்தில் நீங்காது மீன் வாசனை இருப்பதுபோல நீடித்து இருக்கிறது. இது எமக்குப் புலவியைத் தருகிறது. மேலும் தலைவனையும் பெற இயலவில்லை. எம் உயிரும் அழிந்து போகப்போகிறது என்று இப்பாடல் பொருளுணர்த்துகிறது.

இந்த உவமைக் குறிப்பு சற்று நினைக்கத்தக்கதாகும். பெண்களின் உணவறிவை இப்பாடல் எடுத்துரைப்பதாக உள்ளது. இப்பாடல் வழியாக வெள்ளிவீதியாரின் மனநிலையையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

எமக்கும் பெரும்புலவாகி, எம்உயிர் என்பன போன்ற தன்மைப் பன்மைச் சொற்கள் படைப்பாளரையும் உளப்படுத்துவனவாகும். எனவே இங்குக் காட்டப்படும் தலைவி நாடகப் பாங்கில் கற்பனையாகவும், உலகியல் வழக்கில் வெள்ளிவீதியாரைக் குறிப்பதாகவும் உள்ளதை உணரமுடிகின்றது. இப்பாடல் பின்வருமாறு.

சுரம்செல் யானைக் கல்லுறு கோட்டின்
தெற்றென இரீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர் பசுமீன் செறிந்த மண்டைபோல
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெற்றேஎம் இறீஇயர் எம்உயிரே (குறுந்தொகை 169)

காதலின் வளர்ச்சி
சிரிப்பில் மலர்ந்த காதல் இரவுக் குறிச் சந்திப்பில் வளர்ச்சி பெறுகிறது. தலைவன் பல இடர்களைக் கடந்துத் தலைவியைச் சந்திக்க வருகிறான். ஆனால் நிலவு வெளிப்பாடு காரணமாக தலைவியும் தலைவனும் சந்திக்க இயலவில்லை. தலைவி வருத்தம் மிகக் கொள்கிறாள்.

ஆறுகள் மழைநீராலும், தேன் பொழிவாலும் நிறைந்து ஓடுகின்றன. இவற்றில் பாம்புகளும் இழையும். மலைக் குகை ஒன்றில் யானையால் தாக்கப் பெற்ற ஆண்புலி ஒன்று கிடக்க அதனைக் காக்கும் வண்ணமாகப் பெண்புலி குகையின் வாயிலில் தங்கிக் கிடக்கும் வழியாக அந்த வழி உள்ளது. இம்மலை வழியில் தலைவன் வேல் ஒன்றேந்தித் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவனின் சந்திப்பு நிகழாவிட்டால் நான் வாழமாட்டேன். நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுது யான் வாழலேனே:(அகநானூறு 362 : 910) என்ற இப்பாடலடியில் உள்ள யான் என்ற தன்மைக் குறிப்பு கருதத்தக்கது. இது படைப்பாளரின் உளத்தையும் சுட்டுவது என்பது முன்னரே சுட்டப் பெற்றதாகும்.

இச்சூழலில் தலைவனின் காதல் வளம் பெற்றது. என்றபோதும் அது நிறைவடையவில்லை.

தலைவன் இல்லாப் பொழுதுகளில் வருத்த மிகுதி
தலைவனின் அன்பு வயப்பட்ட தலைவி அவனின் அருகாமை வேண்டி நிற்கிறாள். அது கிடைத்த பாடில்லை. அவனுடன் இருந்த மாலைப் பொழுதையும், அவனுடன் இல்லாத மாலைப் பொழுதையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். அணிகூட்டும் மாலையோ அறிவேன், மன்னே மாலை நிலம்பரந்தன்ன புண்கணோடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே ( குறுந்தொகை 386: 46) மகிழ்வான மாலையை அறிந்தவள் தனிமைத் துயரால் வருத்தப்படும் மாலைப் பொழுதை வெறுக்கிறாள்.

இதுபோன்று இரவில் தலைவன் துணையின்றி தலைவி அழுகிறாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டிப் பொருள் தேடிப்பிரிகின்றான். அவன் சென்றதன் காரணமாக அலர் எழுந்தது. இது ஆதிமந்தியின் அல்லலுற்ற நிலையை ஒத்திருந்தது. வானவரம்பனின் படையினர் வரவால் தூங்காது உள்ள ஊர் மக்களைப் போல நானும் உறங்காமல் உள்ளேன் என்று தலைவி கலங்குகிறாள். (அகநானூறு 45)

இவ்வாறு தலைவனின் பிரிவு தலைவியாகிய வெள்ளிவீதியாருக்குத் துன்பத்தைத் தந்துள்ளது. பிரிந்த தலைவன் கடைசிவரை வராது ஒழிந்தான்.

காமவேகம்
வாராது ஒழிந்த தலைவன் தந்த காதல் நோய் தலைவிக்கு காமத்தை விளைவித்தது. இதனைத் தாங்க இயலாது அவள் தவிக்கின்றாள். இந்த அடிப்படையில் வெள்ளிவீதியாரின் பல பாடல்கள் அமைந்துள்ளன. காம வேகத்தை வெளிப்படுத்தும் தன்மை பெண்களுக்குப் பெரும்பாலும் இல்லை என்ற பொதுக் குறிப்பை இப்பாடல்கள் பொய்யாக்குகின்றன.

வெள்ளிவீதியார் பாடல்களில் கூற்று நிலையில் பல தடுமாற்றங்கள் நிலவுகின்றன. பின்வரும் பாடல் தலைவன் கூற்றாகப் பெரும்பாலும் பல உரையாளர்களால் இனம் காணப்பட்டது. அது பிறழ உணரப்பட்டதாகும்.

இடிக்கும் கேளீர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல்போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே
( குறுந்தொகை 58)

இப்பாடல் தலைவன் கூற்றாகப் பலரால் இனம் காணப் பெற்றது. இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொள்ளுதலைவிட தலைவி கூற்றாகக் கொள்ளுதல் பொருத்தமாகவும் வெள்ளிவீதியார் தம் ஏனைய பாடல்களோடு இசைந்தும் அமையும் என்று கருதுகிறார் தாயம்மாள் அறவாணனர். அவரின் கருத்தே கட்டுரையாளருக்கும் ஏற்புடையதாகும்.

இப்பாடலில் தலைவியின் காம வேகம் அதிகரிக்க அதனை இடித்துரைக்கின்றனர் உறவினர்கள். இருப்பினும் அவள் காம வேதனைப்படுகிறாள். காய்ந்த கல் பரப்பில் வைக்கப் பெற்ற வெண்ணெய் வெப்பத்தால் உருகி ஓடும்போது கையில்லாத ஊமண் ஒருவனால் எப்படித் தடுக்க முடியாதோ அதுபோல் காமத்தைத் தலைவியால் தடுக்க இயலவில்லையாம். இவ்வுவமைப் பகுதியில் கையாளப் பெற்றுள்ள வெண்ணெய் உவமை பல வகை ஒப்புமை உடையதாகும்.

பெண்ணின் காமத்தைத் தடுத்து நிறுத்துவதாக நாணம் விளங்குகின்றது. இருப்பினும் அந்நாணமும் தோற்றுப் போய்விடும் அளவிற்குத் தலைவியின் காதல் பெருகுகிறது.

அளிதோ தானே நாணம் நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே இனியே
வான்புங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைத்
தீம்புனல் நெரிதர வீந்து உக்கா அங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதர கைநில்லாதே (குறுந்தொகை 149)

என்ற பாடலில் வெள்ளத்தினைக் கட்டுப் படுத்தும் கரையில் உள்ள கரும்புகளும் மிகு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுபோல காமமானது நாணத்தையும் புறந்தள்ளிக் கொண்டு போய்விடுமோ என்று கலங்குகிறாள் தலைவி. காமத்தின் அளவு கைநில்லாத அளவிற்கு உள்ளதாக இத்தலைவி கருதுகிறாள். ஏறக்குறைய வெள்ளிவீதியாரின் நிலையும் இதுவேயாகும்.

யாமம் உய்யாமை நின்றன்று
காமம் பெரிதே களைஞரோ இலரே
(நற்றிணை 335, 1011)

என்ற பாடலடிகள் யாமப் பொழுதில் பெருகும் காமத்தைப் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. பெண் காமம் பெரிது. அதனை முற்றாகக் களைபவர் யாரும் இல்லை என்பதைக் குறிப்பதாக இப்பாடலடிகள் விளங்குகின்றன.

அன்றில் பறவைகளின் கூச்சல், யாழ் ஒலி போன்றன காம வேதனையை மிகுவிப்பனவாக இப்பாடலில் சுட்டப் படுகின்றன. இப்பாடலிலும் என்புறம் நரலும் என்ற நிலையில் தன்மைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதுவும் வெள்ளிவீதியாரின் அகவாழ்வு வெளிப்பாடு என்பதற்கு இக்குறிப்பு சான்று நல்கும்.

உலகினர் இரவில் நிலவின்பம் தூய்க்கின்றனர். பிரிவால் வாடும் தலைவி மட்டும் அழுது கொண்டு நிற்கிறாள்.

யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு
கனைஇருங் கங்குலும் கண்படை இலனே
அதனால் என்னொடு பொரும்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொரும்கொல் என்அவலம் உறு நெஞ்சே
(நற்றிணை 348:710)

என்ற இப்பாடலில் வளையிழந்து அவலமுறும் தலைவியின் காட்சி இடம் பெறுகிறது. தன்னோடு உலகு பொருந்தாமையையும், உலகோடு தான் பொருந்தாமையையும் தலைவி இப்பாடலில் எடுத்துரைக்கிறாள்.

பெண்ணிய நிலையில் ஆண்மைய உலகிற்கும், பெண்ணுக்கும் உள்ள முரண்பாட்டைத் தெற்றெனக் காட்டுவதாக மேற்கண்ட பாடலின் அடிகள் விளங்குகின்றன.

குருகின் தூது
காதலால் அதன் தோல்வியால் தலைவனை அடையமுடியாத தலைவி தன் துயரத்தைச் சொல்லிடக் குருகினைத் தூதாக அனுப்புகிறாள். உலகத்தோடு பகை வந்துவிட்டபின் அஃறிணைப் பொருள்களை மட்டுமே நம்ப இயலும். அந்த அளவில் இந்தப் பாடல் முக்கியமானதாகும்.

என் ஊருக்கு வந்துபோகும் சிறு வெள்ளாங்குருகே! என்நிலையை என்தலைவனிடம் கூறுக என்பதே இப்பாடலின் பொருள். கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன் இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே (நற்றிணை 70) என்று விளிக்கிறாள் தலைவி.

இவ்வகையில் பல நிலைகளில் துயருற்ற வெள்ளிவீதியாரால் படைக்கப் பெற்ற தலைவியின் பாடல்கள், அல்லது வெள்ளிவீதியார் தம் தன்னனுவப் பாடல்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன.

1. தலைவி காதல் வயப்பட்டுப் பின் காமத்தின் அளவைத் தாங்க முடியாதவளாக உள்ளாள்
2. அவளை மணக்கப் பொருள் தேடிப் போனத் தலைவன் திரும்ப தலைவியை நோக்கி வந்தானில்லை.
3. தலைவியைக் கண்டும், இரவுக் குறியில் தன் காதலை வளப்படுத்தியும் வந்த அவனின் அன்பு இல்லாமையால் தலைவி பெரிதும் வருத்தமுற்றுள்ளாள். உடல் அளவிலும், மனஅளவிலும் அவளின் வருத்தம் அதிகரித்துள்ளது.
4. ஊரும் இதனை அலராக உணர்த்தியது. இதன் காரணமாக ஊரின் மீது தலைவி பகை கொண்டாள். ஊரும் அவள் மீது பகை கொண்டது.
5. இதனைத் தீர்க்க இயலாமல் தலைவி அஃறிணைப் பொருள்களைத் தூதாக விட்டுள்ளாள்
6. வெள்ளிவீதியார் பாடல்களில் பல தன்மைக் குறிப்புகள் காணப்படுவதால் அவை படைப்பாளரின் சொந்த அனுபவ வெளிப்பாடு எனக் கொள்வதில் தவறில்லை.



இவை இப்பாடல்கள் தரும் பொதுக் கருத்துக்கள் ஆகும். இக்கருத்துக்கள் வழியாகத் தலைவன் தலைவியின் காம இயல்பு கண்டும், கேளீர் கண்டும் இது போன்ற பல இடர்பாடுகள் கண்டும் அவளை மணக்க முன்வரவில்லை என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக வெள்ளிவீதியாரின் தலைவி அல்லது வெள்ளிவீதியார் பெரிதும் பாதிக்கப் பெற்றுள்ளாள்/ர். அவன் வராமைக்குக் காரணம் என்ன என்பது தெளிவிக்கப் பட வேண்டும்.

இதற்கு வெள்ளிவீதியார் தரும் பதில் பின்வரும் பாடலாகும். இப்பாடல் பெண்ணிய உளவியல்படியான பெண்குறிப் பொறாமை சார்ந்த பாடலாகும். ஆணுக்குப் பெண்ணின் குறி மீதான சில புதிர்களும், அச்சமும் நிலவின என்பது ஒரு புறம். பெண்களுக்குத் தங்களின் புற அடையாளங்கள் மீதான பெருமைத்தன்மை இருந்துள்ளது என்பது மறுபுறம். இந்த மறுபுறத்தை இப்பாடல் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே.
( குறுந்தொகை, 27)

பசு மாடு பால்தரத் தக்கது. அப்பசுமாட்டின் பால் கலத்திலும் சேர்க்கப்படாது, கன்றுக் குட்டியாலும் உண்ணப்படாது வீணே நிலத்திற்கு செல்வதாகக் கொண்டால் அதனால் யாருக்கும் பயன் விளையாது. அது போல வரிகள் கொண்டு விளங்குகின்ற, மாந்தளிர் போன்ற பரப்பினையும் அழகினையும் உடைய அல்குல் பசலை நோயால் அதன் கவினை அழிந்தது என்பது பாடலின் பொருளாகும்.

பெண்ணிய உளவியல் கருதும் பெண்குறிப் பொறாமை என்பது இதனுள் விளங்குகிறது. பெண்களின் குறி பற்றிய தெளிவான வெளிப்பாடாக இது அமைகிறது. இதனின் அழகு குலைவது பற்றியதான விவரங்கள் இப்பாடலில் அமைந்துள்ளன. பெண்ணுக்குத் தன் உடல் கூற்றின் மேல் ஏற்பட வேண்டிய அழகுணர்ச்சியை இது காட்டுகின்றது.

மேலும் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் புகட்டல் குறித்தும் ஆண்களுக்குப் புதிர் ஏற்பட்டுள்ளது. இப்புதிர்த் தன்மை இப்பாடலில் பால் என்னும் உவமையாக வெளிப்பட்டுள்ளதை உணரவேண்டும். பால் தருவது பசுமாடு. அது பெண் வகைப்பட்டது. அதே சூழல் வாய்ந்த பெண்ணின் வளமையையும் இது குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே பெண்ணியலாளர்கள் கருதும் கருப்பை பொறாமை, தாய்ப்பால் அளிக்கும் பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகியனவற்றைச் சுமந்ததாக இந்தப் பாடல் விளங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

பெரும்பாலும் தற்கால தமிழ்ச் சொல் வழக்குகளில் ஒரு ஆண் மற்றொரு ஆணைத் திட்ட முற்படும்போது தேவையில்லாமல் பெண் அவயங்களைப் பற்றி, குறிப்பாக அவளின் குறி பற்றிய இழி சொற்கள் இடம் பெறுகின்றன. இவை ஆணுக்கு உள்ள பெண் குறி பற்றிய பயத்தைப் புதிரை வெளிப்படுத்துவதே ஆகும்.

இதுபோன்றதொரு அச்சம், அதன் வகையில் தோன்றிய பெண் அடங்குவாளா மாட்டாளா என்ற ஐயம் வெள்ளிவீதியாரைக் காதலித்த தலைவனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். குழந்தையைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், இலக்கியத்தைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், அலரால் உலகால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஆகிய சூழல்களைக் கொண்டவளைத் தனக்குக் கீழ் இருக்கச் செய்வது இயலாத செயல் என்று கருதியே அத்தலைவன் வெள்ளிவீதியாரின் காதலைப் புறக்கணித்திருக்க வேண்டும்.

குறிப்பாக காதல் தோல்வி பெற்ற ஆண்கள் அது பற்றிய சிந்தனையைப் பெரும்பாலும் பலரறிய வெளிப்படுத்துவர். பெண்கள் அப்படிச் செய்வது இல்லை. ஆனால் இங்குக் காதல் தோல்வி ஏற்பட்ட பெண் ஒருத்தி தன்னைப் பற்றி வெளிப்படுத்தியிருப்பது தமிழ்க் களத்தில் புதுமை வாய்ந்ததே ஆகும்.

வெள்ளிவீதியாரின் பாடல்களை பெண்ணிய உளவியல் கண்ணோட்டத்துடன் காணுகையில் இத்தகைய புதிய செய்திகளுக்கு அவை இடம் தருகின்றன என்பது வியப்பளிக்கின்றது.

முடிவுகள்
1. பெண்ணிய உளவியல் நிலையில் ஆண்களுக்குச் சில பொறாமைகள் இயற்கையாகப் பெண்கள் குறித்து அமைந்துள்ளன. பெண்களின் உடல் வெளிப்பாடுகளான, உயிரியல் தோற்றங்களான தாய்மைப்பேறு, பால்கொடுத்தல் போன்றன ஆண்களுக்குப் புரியாத தன்மையை ஏற்படுத்தி நிற்கின்றன.
2. பெண்கள் தன் உடல் பற்றி அவற்றின் இயல்புகள் பற்றிப் பெருமைப் பட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு வெள்ளிவீதியார் பாடல்கள் சான்று பகர்கின்றன.
3. தலைவன் ஒருவன் காதலித்த காதலியைப் புறக்கணிப்பதற்கு அவளின் உடல் குறித்தான புரிதல் இன்மையும், அவளின் அகம் பற்றிய புரிதல் இல்லாமையும், இவை கருதித் தோற்றமும் அச்சமும் காரணமாக அமையலாம்.

பயன் கொண்ட நூல்கள்
1. ஔவை நடராசன், புலமைச் செவ்வியர், தி பார்க்கர் சென்னை 14.
2. சுப்பிரமணியன். ச.வே., சங்கஇலக்கியம், முன்று தொகுதிகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010
3. தாயம்மாள் அறவாணன், மகடுஉ முன்னிலை, பச்சைப் பசேல், சென்னை, 29 2004
4. நாகராசன். வி. (உரையாசிரியர்), குறுந்தொகை, என்சிபிஎச், சென்னை, 2004
5. இணைய தளம்: விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம்.

பட்டி மண்டபம் குறித்த தினமணி செய்தி


பட்டி மண்டபம் குறித்த தினமணி செய்தி

கம்பன் திருநாள் பட்டி மண்டபம்


கம்பன் திருநாள் மூன்றாம் நாளில் நடைபெற்ற பட்டி மண்டபத்தில் கலந்து கொண்ட என் தலைமையிலான அணியினர் நாங்கள் கம்பனைப்பாடாய்ப் படுத்தி எடுத்த பாத்திரம் கைகேயி என்று வாதாடினோம். நண்பர் சேதுபதி, பேராசிரியை கண்ணாத்தாள் ஆகியோரும் உள்ளனர்

ஞாயிறு, மார்ச் 20, 2011

கம்பன் திருநாள் ஊர்வலம்





காரைக்குடி கம்பன் கழகம் மார்ச் 17-2011 முதல் கம்பன் திருநாளைக் கொண்டாடிவருகின்றது. இவ்விழாவில் மாலை 5 மணிக்கு விழாவில் பங்கேற்போர்களை ஊர்வலமாக, குடை, சங்கு, மங்கல இசை முழங்க தமிழ்த்தாய் கோயிலுக்கு அழைத்துச் செல்லுகிற நிகழ்ச்சி நடைபெறச் செய்யப் பெறுகிறது. இவ்வாண்டு தொடங்கிய இப்புது முயற்சி வரவேற்கத் தக்கது.நேற்று நடைபெற்ற பட்டிமண்டப நிகழ்ச்சிகளில் க்லந்து கொண்டோரும் மற்றோரும் தமிழ்த்தாய் கோயிலுக்குச் சென்ற நிகழ்ச்சி புகைப்படமாப் பின்தொடர்கிறது.

செவ்வாய், மார்ச் 15, 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா பட்டிமண்டபக் காட்சி


சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று அதாவது 13.03.2011 அன்று மாலை 6.30 மணி அளவில் தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் கம்பன் விழாவின் இரண்டாம் நிகழ்வான பட்டிமண்டபம் நடைபெற்றது

இதில் நடுவாராக இருந்து திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் இருந்து நடத்தித்தந்தார்கள். இதில் மு. பழனியப்பன், சுமதிஸ்ரீ, அருணன், இரா.இராமசாமி, பாரதி, சிதம்பரம் ஆகியோர் உரையாற்றினர்
வஞ்சனையில் விஞ்சியவர் கூனியா, சூர்ப்பனகையா என்ற தலைப்பில் விஞ்சியது சூர்ப்பனகையே

புதன், மார்ச் 09, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த கம்பராமாயண உரைத்தொகுதிகள் மீண்டும் மறுபதிப்பு ஆகியுள்ளன.


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த கம்பராமாயண உரைத்தொகுதிகள் மீண்டும் மறுபதிப்பு ஆகியுள்ளன. வேண்டுவோர் இந்த இணைப்பினைப் பாருங்கள்

அறந்தாங்கி நண்பர் கவிஞர் அஜயின் கவிதை பின்வருமாறு


ஒரு ஊரையே
அள்ளிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது

இலக்குமன்
கோட்டிற்குக்
கட்டுப்பட்டு

எப்போதாவது
விபத்து
நடக்கும் விபரீதம்

அது கோட்டின்
பிழையன்றி
இரயிலி்ன்
மீறல் அல்ல


க, அஜய் குமார்
அறந்தாங்கி

காரைக்குடி கம்பன் திருநாள்








கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா மார்ச் மாதம் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொள்ளுகின்றனர்.
நிகழ்ச்சி விபரம் வருமாறு
மார்ச் 17 - கம்பன் மணி மண்டபம் காரைக்குடி மாலை 5.30மணி

தலைவர் சிவ சத்தியமூர்த்தி
வரவேற்புரை- கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- உயர் நீதி மன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்கள்
அறக்கட்டளை பொழிவுரை- ச. சிவகாமி - கம்பன் காட்டும் உறவும் நட்பும்
திருமிகு எஸ். என் குப்புசாமி, நா நஞ்சுண்டன் ஆகியோருக்குக் கம்பன் சீர் பரவியப் பெருமை கருதி பாராட்டப் பெறுகிறது.பாராட்டினைச் செய்பவர் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்

கம்பனில் திருமுறைகள் என்ற நூலும் இவ்விழாவில் வெளியிடப் பெறுகிறது. இந்நூலை எழுதியவர் பேராசிரியர் சபா. அருணாசலம் ஆவார்.

18.3.2011 அன்று மாலை 5.30 மணி
கம்பன் மணி மண்டபம்
இவ்விழா தனித்த சிறப்புடையது. அகவிழி (புறவிழிக்குறைவினை அகவிழியால் மாற்றுத் திறனாக்கிக் கொண்டவர்கள்) அறிஞர்கள் அரங்கமாக இது புதுமைபட மிளிர்கிறது. இப்படி ஒரு அரங்கம் தமிழகத்திற்கே புதுமை. முதன்மை. இவ்வரங்கின் தலைமை சென்னை நந்தனம் கல்லூரிப் பேராசிரியர் திரு. ந. சேசாத்திரி அவர்கள்
இவரின் கீழ் கம்பனில் பாத்திரமும், பாத்திறமும் ஓங்கி நிற்பது என்ற பொதுத்தலைப்பில் திரு. மா. உத்திராபதி சுமித்திரையே என்றும், திரு ஆ. நாராணசாமி விசுவாமித்திரரே என்றும் திரு. எம் துரை அவர்கள் குகனிலே என்றும் திரு. கு. கோபாலன் அவர்கள் வீடணனிலே என்றும் திருமதி சே. அன்னப் பூரணி அவர்கள் மண்டோதரியிலே என்றும் வாதிட உள்ளனர்.

19.3.2001 அன்று மாலை 5.30 மணி
கம்பன் மணி மண்டபம்
பட்டி மண்டபம்
நடுவர் கலைமாமணி சோ. சத்தியசீலன் அவர்கள்
பொருள் பாத்திரப் படைப்பில் கம்பனைப் பாடாய்ப்படுத்திய பாத்திரம்

கைகேயியே
திருவாளர்கள் த. இராஜாராம், செல்வி ம. சர்மிளா தேவி, மு. பழனியப்பன், கே. கண்ணாத்தாள்
வாலியே
திருவாளர்கள் அ. அறிவொளி. வீ. பிரபா, இரா. மாது, திருமதி ரேவதி சுப்பிரமணியன்

கும்பகருணனே
திருவாளர்கள் வே. சங்கரநாராயணன், செல்வி எஸ்.விஜி, இரா. இராமசாமி, சுமதிஸ்ரீ

என்ற நிலையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது.

20.3.2011
நாட்டரசன் கோட்டை
மாலை 5.30 மணி
கம்பன் அருட்கோயில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்
வரவேற்புரை கண. சுந்தர்
நயம்மலி நாடக அணி - திரு. அ. அ ஞான சுந்தரத்தரசு
கலைமலி கற்பனை - திரு. சொ. சேதுபதி
இனிமைமலி சொல்லாட்சி திரு. மா. சிதம்பரம்
இறைமலி ஈற்றடி- செல்வி இரா. மணிமேகலை
நன்றியுரை திரு. நா. மெய்யப்பன்
அனைவரும் வருக கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்

செவ்வாய், மார்ச் 08, 2011

காரைக்குடியில் கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டு விழா



காரைக்குடியில் கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டு விழா (2011) வ்ரும் மார்ச் 17ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதுபற்றிய விபரங்கள் படத்தைச் சொடுக்கினால் விரியும்

வியாழன், மார்ச் 03, 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா(மார்ச் ௧௨-௧௩ ) 2011 அழைப்பிதழ்




கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் விழா நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.

12 ஆம் தேதி நிகழ்வுகள்

மாலை ஆறு மணிக்குத் தொடங்கவுள்ள இந்த விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியில் துறைத் தலைவர், மற்றும் மொழிப் புல முதன்மையர் பொறுப்புகளை வகித்து வரும் திரு. பழ. முத்துவீரப்பன் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள். திருமிகு த. அகர முதல்வன் அவர்கள் தொடக்க உரையாற்ற உள்ளார்கள். கம்பனில் இஸ்லாமியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையை திரு. மு. சாயபு மரைக்காயர் அவர்கள் வழங்க உள்ளார்கள்.
வரவேற்புரையை திரு. சீ சௌந்தரராஜன் அவர்கள் வழங்குகிறார். அறிமுகவுரையை கம்பன்அடிசூடி வழங்குகிறார். நன்றியுரைக்க திரு. மு. அ பசீர் அகமது அவர்கள் வருகிறார்கள்.

13 ஆம் தேதி நிகழ்வுகள் மாலை 6 மணி

பட்டி மண்டபம் இன்று நடைபெறுகிறது. திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் நடுவராக விளங்க உள்ளார். பட்டி மண்டபத்தின் தலைப்பு வஞ்சனையில் விஞ்சியவர் யார் என்பதாகும். இதில் கூனியே என்ற தலைப்பில் திருவாளர்கள் சொ. சேதுபதி, சுமதிஸ்ரீ, மு. பழனியப்பன் ஆகியோரும், சூர்ப்பனகையே என்ற தலைப்பில் திருவாளர்கள் இரா. இராமசாமி, பாரதி பாபு, ம. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

விழாவிற்கு அ. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றவும், திரு. மு. ஜானகிராமன் நன்றிஉரைக்கவும் உள்ளனர்.

கம்பன் சீர் பரவும் அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்பி்ற்கு

04364-237573

காரைக்குடி
9445022137


தேரெழுந்தூருக்கு மயிலாடுதுறையில் இருந்துப் பேருந்துகள்செல்லுகின்றன.
கம்பன் பிறந்த இடத்தில் கம்பனைக் கேட்க வாருங்கள்.

செவ்வாய், மார்ச் 01, 2011

Tamil Internet 2011 Conference Announcement

மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்பவேண்டி அறிவிப்பு



உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.



அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும் இசைந்துள்ளார். உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுவார்.



இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் கட்டுரைகளைப் பெற்று அவற்றின் சிறந்த கட்டுரைகளை மாநாட்டில் படைத்திடும் வழிவகைகளைச் செய்வதோடு இம்மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் சிறப்புச் சொற்பொழிவு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும். இம்மாநாட்டின் மையக் கருத்தாக “கணினியினூடே செம்மொழி” என்னும் தலைப்பில் கணினி வழியாகத் தமிழ் மொழி இலக்கியங்களைச் செவ்வனே ஆய்ந்தறியும் வழிவகைகளைப் பற்றிக் கலந்துரையாட முனைந்துள்ளோம்.



இம்மாநாட்டில் கட்டுரைகளைப் படைக்க விரும்புவோர் கணினி வழித் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் வழிவகைள் குறித்தும் கணினி வழித் தமிழ் ஆய்வுகள் குறித்தும் தங்களின் கட்டுரைச் சுருக்கங்களை மார்ச்சு மாதம் 15ஆம் தேதிக்குள் ti2011@infitt.org என்னும் முகவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் தங்களின் பணி நிறுவனங்களினின்று இதற்கான நிதியுதவியை விரைவில் பெறவும் அமெரிக்க நாட்டின் கடவுச் சீட்டினை விரைவில் பெறவும் தங்களின் கட்டுரைச் சுருக்கம் எங்களை அடைந்தவுடன் எங்கள் முடிவுகளை உடனுக்குடன் தங்களுக்குத் தெரிவிக்க முயல்வோம்.



கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் உங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி வேண்டுகிறோம்.



· கணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு: தமிழ் இலக்கியத் தரவை அலசி ஆய்தல், தமிழ் இலக்கியங்களுக்கான தேடுபொறிகளை அமைத்தல், தமிழ் இலக்கியங்களின் காலங்களை அறுதியிடல், இலக்கிய ஆசிரியர்களின் நடையை அறிதல் போன்ற கணினி வழி இலக்கிய ஆய்வு குறித்தான கணினி நிரலிகள்.



· தமிழ்க் கணினி நிரல்கள்: சொற்பகுப்பு நிரலிகள், சொற்திருத்திகள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதிகள் அமைத்தல்.



· திரவுமென்பொருள், தமிழ் குறித்தான நிரலிகள் மற்றும் கணினி செயலாக்கிகள்.



· தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் தர நிர்ணயப்படுத்தல். இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள்.



· இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், தமிழ்த் தேடுபொறிகள்.



· தமிழ் இணையம்: தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா நிரலிகள், செய்திப்பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப்பக்கங்கள், தமிழ் மின்வணிக நிரலிகள்….



· இணையம் மற்றும் கணினி வழி தமிழ்க் கற்றல் மற்றும் கற்பித்தல்



· தமிழ்த் தரவுகள், மின்னகராதிகள், மின்வணிகமுறைகள்.



மேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் தங்களது கட்டுரையைப் படைக்க விரும்புவோர் மார்ச்சு 15ஆம் தேதிக்குள் கட்டுரைச் சுருக்கத்தை எங்களுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களது கட்டுரைகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம். தமிழில் உள்ள கட்டுரைகளைத் தமிழ் ஒருங்குறியில் மட்டும்தான் பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வேறு எழுத்துருக்களில் எழுதினால் தாங்கள் அதை ஏதாவது உரு மாற்றி நிரலி கொண்டு தமிழ் ஒருங்குறிக்கு மாற்றி எங்களுக்கு அனுப்பவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.



மாநாட்டுக் குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வுசெய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரையை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். கட்டுரைகளை மாநாட்டு மலரிலும் குறுவட்டிலும் வெளியிடுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்களை ஏப்ரல் 15ஆம் தேதி 2011க்குள் தொடர்பு கொள்வோம். கட்டுரைகளைப் படைத்தவர்கள் நேரில் மாநாட்டுக்கு வருகை தந்து தங்களது கட்டுரைகளைப் படைக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் வேறு ஒருவர் படைக்க நேரிட்டால், அவர் அக்கட்டுரையின் பொருளடக்கம் நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும்.



ஒன்று அல்லது இரண்டு பக்கக் கட்டுரைச் சுருக்கத்தை மாநாட்டு அலுவலகத்துக்கு ti2011@infitt.org என்ற மின் முகவரிக்கு அனுப்புவதோடு கட்டுரைச் சுருக்கத்தின் ஒரு நகலை ti2011-cpc@infitt.org என்ற முகவரிக்கும் மார்ச்சு மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.



மாநாட்டில் பங்கு பெற விரும்பும் உலகத் தமிழ் கணினி ஆர்வலர்கள் மேல் விவரங்களுக்கு, கீழே குறிப்பிட்டுள்ள தங்கள் பகுதி உத்தமத்தின் செய்தித் தொடர்பாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்.



மலேசியா : இளந்தமிழ், துணைத்தலைவர், உத்தமம் : vice-chair@infitt.org , Elantamil@infitt.org

இந்தியா : ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : antopeter@infitt.org

இலங்கை : மயூரன், செயற்குழு உறுப்பினர் உத்தமம் : mauran@infitt.org

ஐரோப்பா : சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர் உத்தமம் : sivapillai@infitt.org

ஆசுதிரேலியா : முகுந்த், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : Mugunth@infitt.org

சிங்கை : மணியம், செயலர்- இயக்குநர் உத்தமம், ed@infitt,org, maniam@infitt.org

அமெரிக்கா: கவிஅரசன் வா.மு.சே. தலைவர் உத்தமம், chair@infitt.org, kavi@infitt.org

பிறபகுதிகள் : ed@infitt.org, chair@infitt.org



மாநாடு குறித்து உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் மாநாட்டு அலுவலகத்தை ti2011@infitt.org என்ற மின்முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.



சு.மணியம்
செயலர் - இயக்குநர், உத்தமம்

http://www.infitt.org



தமிழ் இணையம் 2011, மாநாட்டு வலைப்பக்கம்:

http://www.infitt.org/ti2011/

http://www.tamilinternetconference.org/





CALL FOR ABSTRACTS – ANNOUNCEMENT PRESS EMABRGO 25.2.11



International Forum for Information Technology (INFITT) is pleased to announce that the next Tamil Internet Conference 2011 (10th in the series) will be held at the University of Pennsylvania, Philadelphia, USA during June 17-19, 2011.



Prof. Harold F. Schiffman, Dr. Vasu Renganathan and Dr. K. Kalyanasundaram have kindly agreed to assist in the organization of the conference as Chairs of the Local Organizing Committee (LOC) and Conference Program Committee (CPC). INFITT Chair Va.Mu.Se. Kaviarasan will serve as Chair of International Organizing Committee (IOC).



The committee (CPC) will deal with paper submission and scheduling of the conference content (invited lectures and submitted papers). The theme of this conference has been proposed as “Classical Tamil in the Digital Medium” aiming to the development of research on computational literary research for Tamil.



We take this opportunity to invite technical papers for presentation at TI2011 on all topics relating Tamil with Computers and/or Internet in general and research on Classical Tamil literary studies with Computers and/or Internet in particular. Please send in your abstracts not later than 15th March 2011. We will try to expedite the acceptance of abstracts and papers as and when we receive them facilitating the international scholars to be able to obtain their visa and funding from their institutions on time.



The following is a collection of topics (non-exclusive) to be addressed at various technical sessions of the Conference.



· Tools for Classical Tamil literary research: Mining the corpus of Tamil literature, building search engines for the retrieval of Tamil literature texts from Sangam to Modern Tamil, research on identification of the chronology of Tamil authors and texts based on any computational analysis of Tamil literature texts.



· Tools for Tamil Computing:Word-processing (Text editor, Spell check, Grammar check, Dictionaries), plugins for browsers, online file convertors, etc.



· Open source software and Tamil Localization of software and OS.



· Standards for various applications and portable devices dealing with Tamil content.



· Tamil enabling in mobile and other hand-held platforms/technologies PDA, iPhone, androids, etc.



· NLP Applications in Tamil: Machine Translation, OCR, Voice recognition, speech synthesis, Search engines, Data mining of Tamil digital resources, etc.



· Tamil Internet: Blogging, Wikipedia, Podcasting, Data-mining of Tamil content in different font encodings, educational portals, Tamil online portals, aggregators, commercial solutions, etc.



· Tamil Content Databases for digital libraries and e-commerce.



Those who would like to make an oral presentation should submit a brief abstract at the conference gateway on or before 15th March 2011. Papers may be presented in English, Tamil or bilingual (Tamil-English) format.



As with the earlier conferences, all submissions must be in electronic form. For papers with content in Tamil or bilingual, please use Unicode encoding. Papers presented in any other encodings are liable for automatic rejection.



Conference Program Committee will review all submissions and select papers for presentation at various technical sessions. As in the past, extended abstracts (max 4 pages) of all accepted papers for the conference will be published in the Conference Book and also in electronic form in a CD/DVD.



Authors whose papers have been selected for presentation at the conference will be informed by 15th April 2011. Organizers of the conference assume that submission of a paper for possible presentation at TI2011 implies attendance at the conference and presentation in person by at least one author of the paper. Proxy presentation by third parties may be permitted at extreme circumstances, but the presenter needs to be familiar with the work and should be able to answer questions where possible.



One or two page abstracts of papers for presentation are to be sent to the INFITT conference secretariat’s email ti2011@infitt.org with a copy to ti2011-cpc@infitt.org. Conference Program Committee will send a prompt confirmation of the receipt of the abstract.





For further details you can also contact any of the following country representatives



Malaysia: ElanTamil, Vice-Chair, INFITT: vice-chair@infitt.org , Elantamil@infitt.org

India: Anto Peter, Member Executive Committee, INFITT: antopeter@infitt.org

SriLanka: Mauran, Member Executive Committee, INFITT: mauran@infitt.org

Europe: SivaPillai, Member Executive Committee, INFITT: sivapillai@infitt.org

Australia: Mugunth, Member Executive Committee, INFITT : Mugunth@infitt.org

Singapore : Maniam, Executive Director, INFITT: ed@infitt,org, maniam@infitt.org

America : Va.Mu.Se. Kaviarasan, Chair, INFITT: chair@infitt.org, kavi@infitt.org

Other Regions: ed@infitt.org, chair@infitt.org



If you have any questions, please feel free to contact the conference secretariat at its email id ti2011@infitt.org.


S. Maniam

Executive Director, INFITT

http://www.infitt.org



URL for the TI 2011 conference website:

http://www.infitt.org/ti2011/

http://www.tamilinternetconference.org/



இணைப்பு – அ

தமிழ் இணையம் – 2011 நிகழ்ச்சிகள் குழு

1.

முனைவர் கு. கல்யாணசுந்தரம்,சுவிட்சர்லாந்து – தலைவர்
2.

பேராசிரியர். தெய்வசுந்தரம், இந்தியா
3.

பேராசிரியர் ஏ.ஜி. இராமகிருஷ்ணன், இந்தியா
4.

கணிஞர் மணி.மணிவண்ணன், இந்தியா
5.

முனவைர் பத்ரி சேஷாத்திரி, இந்தியா
6.

முனைவர் ழான் லூக் செவ்வியார், பிரான்சு
7.

பேராசிரியர் இரா. செல்வகுமார், கனடா
8.

முனைவர் சீதாலட்சுமி, சிங்கப்பூர்
9.

திருவாளர். சிவா பிள்ளை, இங்கிலாந்து.



Annexure – A

TI 2011 Conference Program Committee:



1.

Dr. K. Kalyanasundaram Switzerland – Chair
2.

Prof. N. Deivasundaram, India
3.

Prof. A.G. Ramakrishnan, India
4.

Mr. Mani Manivannan , India
5.

Dr. Badri Seshadri, India
6.

Dr. Jean-Luc Chevillard, France
7.

Prof. C.R. Selvakumar, California
8.

Dr. Seetha Lakshmi, Singapore
9.

Mr. Siva Pillai, United Kingdom





இணைப்பு – ஆ

தமிழ் இணையம் – 2011 உள்ளூர்க் குழு



1.

முனைவர் வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம் – தலைவர்
2.

முனைவர். ஹெரால்டு ஷிஃப்மென், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம் – இணைத் தலைவர்.
3.

சங்கரன் இராதகிருஷ்ணன், டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஆஸ்டின்.
4.

முனைவர் அரசு செல்லையா, மேரிலாந்து.
5.

இராமச்சந்திரன் சிவகுமார், பென்சில்வேனியா.
6.

முனைவர் முத்துமணி கருப்பையா பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்.
7.

முனைவர் சொர்ணம் சங்கர், மேரிலாந்து.
8.

சோமலே. சோமசுந்தரம், பென்சில்வேனியா.
9.

குமார் குமரப்பன், கலிஃபோர்னியா.
10.

ஜோடி சாவேஸ், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்.



Annexure –B

TI 2011 – Local Organizing committee



1.

Dr. Vasu Renganathan, University of Pennsylvania – Chair
2.

Prof. Harold F. Schiffman ,University of Pennsylvania – CoChair
3.

Sankaran Radhakrishnan,University of Texas, Austin
4.

Dr. Arasu Chellaiah, Maryland
5.

Ramachandran Sivakumar, Blue Bell, Pennsylvania
6.

Dr.Muthumani Karuppiah,University of Pennsylvania
7.

Dr. SornamSankar,Maryland
8.

Somalay Somasundaram, Avondale, Pennsylvania
9.

Kumar Kumarappan, California
10.

Jody Chavez, University of Pennsylvania