

செம்மொழி மத்திய நிறுவனம் நடத்திய சங்ககால மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்ட காட்சிகள்

செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி
தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது.
செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு சிறப்புக் கூறு நடுவுநிலைமை என்பதாகும். இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைப் பண்பை வெளியுலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது.
பட்டினப்பாலை என்ற பத்துப்பாட்டு நூலில் தமிழர்களின் நடுவுநிலை சார்ந்த வணிக முறைமையை மிக்கச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பண்ட மாற்றுமுறையில் வணிகம் நடைபெற்றுள்ளது. கொண்டு வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை தரும் வணிக வழக்கம்தான் ஆரம்பகால வணிக வழக்கமாகும். பிற்காலத்தில்தான் பணம் கொடுத்துப் பொருள் பெறும் முறை தொடங்கியுள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்தில் அகலமான வணிகத் தெருக்கள் இருந்துள்ளன. அத்தெருக்களின் இருபுறங்களிலும் கடைகள் காணப்பெற்றுள்ளன. ஒவ்வொரு கடையின் முன்பகுதியிலும் கொடி தொங்கவிடப்பெற்றிருக்கிறது. அக்கொடி விற்கும் பொருளின் அடையாளத்தை உணர்த்துவதாக இருந்துள்ளன. இக்கடைகளில் பொருள் வாங்குவோரும், பொருள்களைத் தருவோரும் மிகுந்து காணப்பட்டனர். இவர்களிடத்தில் விளைபொருள்களைப் பெறும்போதும், அதற்கேற்ப மாற்றுப் பொருளைத் தரும்போதும் ஒரு நன்முறை பின்பற்றப் பெற்றுள்ளது.
நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
(பட்டினப்பாலை 206211)
என்ற அடிகள் சங்க கால நடுவுநிலை மிக்க வணிக வாழ்க்கை முறையை விளக்கி நிற்கின்றன. உழவர்கள் பயன்படுத்தும் நுகத்தடி எனப்படும் உழுகருவியல் தைக்கப்படும் பகலாணி நடுநிலையாக நிற்பதைப் போல வணிகர்கள் நடுவுநிலை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் பொருள்களையும், பிறர் பொருள்களையும் ஒப்ப நாடி வணிகம் செய்துள்ளனர். பொருள்களைக் கொள்கின்றபோது அதிகமாகக் கொள்ளாமலும், பொருள்களைக் கொடுக்கின்றபோது குறைவுபடாமலும் தம் தொழிலைச் செய்துவந்தனர் என்ற இந்தப் பகுதிகள் சங்க கால நடுநிலைமை மிக்க வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
திருக்குறளும் மற்ற நீதி நூல்களும் நடுவுநிலைமையை ஒப்பற்ற சான்றோர் குணமாக கருதுகின்றன. `நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி' (திருக்குறள் 115) என்கிறது திருக்குறள். வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணும் முறைமை எது எனில் பிறவும் தமபோல் செய்தல் என்று வள்ளுவர் பட்டினப்பாலையின் வழிவந்து வணிகமுறையின் நன்முறையை உரைக்கின்றார். (திருக்குறள் 120)
முடிமுனைதல், மஞ்சள்பூசுதல் போன்றன மனிதர்க்கு அழகல்ல. நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு (நாலடியார் 131) என்று கல்வி கற்றோர்க்கு உரிய அழகாக நடுவுநிலைமை என்பதை நாலடியார் காட்டுகின்றது.
நடுவுநிலை தவறிய பாண்டிய மன்னனின் இறுதியைச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.
தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே(சிலப்பதிகாரம்20,7276)
என்ற பகுதியில் ஒருவன் சொன்ன சொற்களை உண்மை என்று எண்ணி மாற்றார் பக்கத்தைக் காணாது விடடுவிட்ட மன்னனின் அறம் தவறிய நிலை நடுவுநிலையில் பிறழ்ந்த நிலையாகிவிடுகின்றது. நடுவுநிலை தவறாது வணிகம் செய்த வணிகமுறையினரை நடுவுநிலைத் தவறி அரசன் தண்டித்த கதை சிலப்பதிகாரமாகின்றது.
இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் நடுநிலை பற்றிய பல செய்திகள் உள்ளன. இவை தமிழ் மொழியின் நடுவுநிலைத் தன்மைக்குச் சான்றாக நிற்கின்றன. இவை புறம் சார்ந்த நடுவுநிலை என்பதாகக் கொள்ளலாம்.
தொல்காப்பியத்திலும் நடுவுநிலைமைப் பண்பு காணப்படுகிறது. தொல்காப்பியர் காலத்தில் பாலைத்திணை என்ற பெயர் ஏற்படவில்லை. நடுவணது திணை என்றே அதனைத் தொல்காப்பியர் அழைக்கின்றார். பாலை ஏன் நடுவணது திணை என்று அழைக்கப்பட்டது என்பது ஆராயத்தக்கதாகும்.
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
(தொல்காப்பியம் பொருளதிகாரம். 11.)
என்ற தொல்காப்பிய நூற்பாவில் மிகத் தெளிவாக பாலைத் திணையை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் காட்டுகின்றார்.
"காலையும் மாலையும் நன்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி நீரும் நிழலும் இன்றி நிலம் பயன் துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பம் இன்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின் இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நன்பலும் வேனிலும் சிறப்புடைத்தாயிற்று '' என்று நச்சினார்க்கினியர் இதற்குப் பொருள் கொள்ளுவார். அதாவது காலை , மாலை என்ற நாள் பொழுதில் நடுவில் வருவது நன்பகல். அந்த நன்பகலை சிறுபொழுதாகக் கொண்ட பாலை நிலத்தை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் அழைத்திருக்கிறார் என்று நச்சினார்க்கினியார் முடிகின்றார்.
இருப்பினும் இன்பம் துன்பம் என்ற இரண்டில் தலைவனுக்கும் தலைவிக்கும் இன்பத்தைத் தருவது குறிஞ்சி என்ற திணை. மற்ற நான்கு திணைகளிலும் இருத்தல், ஊடல், இரங்கல் என்று துயரத்தின் சாயலே மிக்கு இருக்கின்றது. ஆனால் பாலையில் தலைவன் மட்டும் பிரியலாம். அல்லது தலைவனும் தலைவியும் தம் சொந்தங்களை விட்டுப் பிரியலாம். இந்தச் சூழலில் பிரிதல் என்பதை இன்பத்துள் வைப்பதா, துன்பத்துள் சேர்ப்பதா என்று கருதிப் பார்த்தால் நடுவுநிலைக்குள் தொல்காப்பியர் வைத்தது சரி எனப்படும்.
குறிஞ்சி, முல்லை என்ற இரண்டிலும் தலைவன் வந்துவிட்டான், வருவான் என்ற உறுதி உள்ளது. மருதம், நெய்தல் இவற்றில் தலைவன் திரும்பி வருவானா வாரானா என்ற சந்தேகம் நிலைப்படுகிறது. இவை இரண்டு இரண்டாக பிரிவு பட்டு நிற்கும் நிலையில் பாலை என்பது நடுவணதாக நிற்க வாய்ப்புள்ளது. தலைவன் ஏதோ ஒரு காரணம் கருதி பிரிகின்றான். அந்தக் காரணம் நிறைவேறும் வரை தலைவன் தலைவி இருவரும் காத்திருந்து அதன்பின் அனுபவிக்கப் போகிற இன்பத்தை எண்ணி வாழும் பாலை வாழ்க்கை நடுவணதாகத்தான் இருக்க இயலும். எனவே தமிழர் அக வாழ்விலும் நடுவு நிலை ஆட்சி செய்துள்ளது என்பது தெளிவாகின்றது.
வடமொழியானது மெய்ப்பாடுகள் அதாவது இரசங்கள் ஒன்பது என்று கொள்ளும். நடுவுநிலை அதாவது சாந்தம் என்பதையும் அது ஒரு சுவையாகக் கொள்கின்றது. ஆனால் தொல்காப்பியர் அதனை விடுத்து எண் சுவைகளை மட்டுமே மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றார். இருப்பினும் நடுவுநிலை என்ற மெய்ப்பாட்டை விட்டுவிடாது பிற நிலைக்கலன்கள் என்ற வரிசையில் தருகின்றார். (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11) அகமும் புறமும் சார்ந்த மெய்ப்பாடாக நடுவுநிலை என்ற மெய்ப்பாடு விளங்கி நிற்கிறது.
எனவே தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் அதன் நடுவுநிலை என்பது அகம், புறம், இரண்டிற்கும் பொதுவானது என்ற முன்று நிலைப்பாடுகளைப் பெற்றுள்ளது என்பது உணரத்தக்கதாகும்.
இவ்வாறு நடுவுநிலைப் பண்பு என்பது தமிழர் வாழ்வியலின் சிறப்புப் பொருளாகித் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இப்பெருமை தமிழ்மொழியைச் செம்மொழி வரிசையில் தகுதி பெற வைத்துள்ளது.


செம்மொழித் தமிழின் பொதுமை
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'' (தொல்காப்பியம்640) என்று உலக மொழிகள் எல்லாவற்றுக்கும் உரிய சொல் வடிவ இலக்கணத்தைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார். அதாவது பொருளைப் புலப்படுத்தி நிற்கின்ற அனைத்துச் சொற்களும் சொல் என ஏற்கப்படும் என்ற தொல்காப்பியர் கருத்து உலக மொழிகளுக்கு உரிய இலக்கணத்தை வகுப்பதாக உள்ளது.
மொழிக்கான பொதுமை இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர் உலக உயிர்கள் அனைத்திற்கும் உரிய பொதுத்தன்மையை மற்றொரு இடத்தில் எடுத்துரைக்கிறார்.
`எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வருஉம் மேவற்றாகும்' (1169)
என்பதுவே அப்பகுதியாகும். உயிர்கள் எல்லாமும் உடலின்பத்தால் பிறக்கக் கூடியவை. அவ்வாறு அவை பிறப்பதற்குக் காரணம் உடல் கருதி உயிர்க்கு ஏற்படும் இன்பம். அவ்வின்பம் தானாக ஒவ்வொரு உயிரிடத்திலும் உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் இன்பம் தானாக மேலெழுந்து உயிர் ஆக்கத்தினைத் தருகின்றது. அடிப்படையான இந்த இன்ப நோக்கம் அனைத்து உயிர்களுக்கும் உரியது என்ற தொல்காப்பிய கருத்து உலகப் பொதுமை நோக்கிய அடிப்படைக் கருத்தாகும்.
சங்க இலக்கியப் பாடல்கள் பாடுபொருள் அளவில் அகம், புறம் என்று இரண்டு வகைப்படும். இவற்றில் அகப்பாடல்கள் எனப்படும் காதல் பாடல்களில் இடம் பெறும் மாந்தர்களுக்குப் பெயர் சுட்டக்கூடாது என்பது மரபாகும். இவ்வகையில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டு (வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 256) காதல் பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களுக்குப் பெயர் சுட்டப்படவில்லை. இவ்வாறு இயற்பெயர், சிறப்புப் பெயர் சுட்டாமல் பாடப்படுவதன் நோக்கம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.
`சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் பெறாஅர்'(தொல்காப்பியம்1000) என்பது அகப்பாடல்களுக்கான தொல்காப்பிய நெறியாகும். காதல் பாடல்களில் மாந்தர்களின் பெயர் கூறப்படாமல் விடப்படுவதன் காரணமாக அப்பாடல் தனி ஒரு மனிதனின் அனுபவத்தை மட்டும் சுட்டாமல் படிக்கும் அனைவரின் உள்ளத்திலும் அப்பாடல் தரும் காதல் இன்பம் தனக்கும் உரியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே ஆகும்.
எனவே தமிழன் உலக உயிர்கள் ஒவ்வொன்றின் தனித்த இன்பமான காதல் இன்பத்தை தனிப்பட்ட உணர்வாகப் பாடாமல், உலகப் பொது நிலையில் கொண்டு வைத்துள்ளான் என்பது தெரியவருகிறது. "இயற்பெயர் கூறாது விடின் அச்செய்யுட் செய்தி படித்து மகிழ்தற்கும் எக்காலத்தும் எல்லார்க்கும் உரித்தாகுதற்கும் ஏற்புடையதாகும்'' (ஆ. சிவலிங்கனார், தமிழ் இலக்கண உணர்வுகள் ப. 164) என்று கருத்து மேற்கருத்துக்கு வலு சேர்ப்பதாகும். `அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சியாகிய காதல் பாடல்கள். அவை உலகக் காதலர் அனைவருக்கும் உரியவை. ஒரு தனிப்பட்ட இனத்திற்கோ, மொழியினருக்கோ கூறுப் பெற்றவை அல்ல. உலகினருக்குக் கூறப்பெற்றவை சங்க அகப்பாடல்கள்'' ( ச. வே. சுப்பிரமணியம், சங்கஇலக்கியம், தொகுதி.1, 14) என்ற நிலையில் உலகத்தாருக்கு உரிய பொதுமை இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பது தெளிவாகின்றது.
தனித்த ஒரு தலைவனும் தலைவியும் மட்டும் அனுபவிக்கும் இன்பத்தைப் பாடுகின்ற புலவன் அவர்களின் பெயர்கள் சுட்டாமல் பாடும் பொதுமை நடைமுறையை உலகிற்குத் தமிழ் வழங்கியுள்ளது என்பது உலகிற்குச் சொல்லத்தக்க சிறந்த கருத்தாகும்.
சங்க அகப்பாடல்கள் அனைத்திலும் இப்பெயர் சுட்டா முறை அமைந்துள்ளது. இதன் தொடர்வுகள் இன்னமும் தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சங்க அகப்பாடல்கள் அனைத்தும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது அந்த அந்த மொழி வாசகர்கள் தமிழ் அகப்பாடல்களை அவர்கள் அவர்கள்தம் மொழியில் படிக்கும் நிலை வரும்போது, இந்த அகப்பாடல்கள் உலகப்பொதுமையின் அடையாளங்களாக விளங்கும். ஜெர்மானியர்களும், பிரெஞ்சுநாட்டவரும் இது நமது இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உலக உயிர்களின் இன்பத்தைப் பொதுமைப் படுத்திப் பொதிந்து வைத்துள்ள இலக்கியச் செழுமை கொண்டது தமிழ் என்பது நிலைபெறும்.
நயனும் நண்பும், நாணும்நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடுஅறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே! கம்மென
எதிர்த்த தித்தி ஏர்இள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன்
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே
(நற்றிணை 160- பாடியவர் பெயர் தெரியவில்லை)
என்ற பாடலில் காதலின் பொதுக் கூறு ஒன்று சுட்டப் பெற்றுள்ளது. தலைவன் முதன் முதலாகத் தலைவியைக் காணுகின்றான். அவளைக் காணும்வரை தலைவனின் பண்புகள் சீர்பட இருந்துள்ளன. அதாவது தலைவன் மற்றவரொடு கலந்து பழகும் திறத்தை (நயன்) உடையவனாக இருந்துள்ளான். சுற்றத்தவர்களைப் பேணிக் காப்பவனாக நட்புடையவனாக இருந்துள்ளான் (நண்பு). தீமை செய்வதற்கு வெட்கப்படுபவனாக (நாண்) இருந்துள்ளான். பிறருக்கு உதவும் பயனும் அவனிடம் இருந்துள்ளது. பாடறிந்து ஒழுகும் பண்பும் அவனிடமிருந்துள்ளது. ஆனால் தலைவியின் அழகினைக் கண்டபின்பு அவை யாவற்றையும் இழந்துத் தலைவன் தலைவியின்மேல் கொண்ட காதல் என்ற ஒன்றை மட்டுமே கொண்டு மற்றவற்றை விடுத்து நிற்கின்றானாம்.
ஒரு பெண்ணைக் காணுவதற்கு முன்பு, கண்டபின்பு என்ற இருநிலைகளில் காதலின் தொடக்கப் பகுதியில் நிகழும் மன இயல்பை இப்பாடல் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இப்பாடலில் காட்டப்படும் தலைவியின் அழகு வேண்டுமானால் தமிழ் சார்ந்த வருணனையாக இருக்கலாமே அன்றி இதில் காட்டப்படும் உள்ளத்து உணர்வு பொதுமை இயல்பு என்பதை மறுக்க இயலாது.
காதல் என்ற தனிமனித உணர்வையும் பொதுமை உணர்வாகக் காட்டிய பெருமை சங்க அகப்பாடல்களுக்கு உண்டு என்பது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டிய உன்னத கருத்தாகும்.
புறப்பாடல்களில் அகப்பாடல்கள்போல் இல்லாமல் பெயர், குடி, நில அடையாளங்கள் இருப்பினும் அவற்றில் சமுகப் பொதுமைக் கருத்துக்கள் பல இடம் பெற்றுள்ளன.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிந்தன்றும் இலமே. முனிவின்
இன்னாது என்றலும் இலமே....
... மாட்சியின்
பெரியயோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறநானூறு 192)
என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பொதுமை நோக்கிய இனிமைப் பாடலாகும். பெரியோர் என்று யாரையும் ஏற்றி வைத்துப் போற்றுதல் இல்லை. சிறியவர் என்று இகழ்தலும் இல்லை என்ற கருத்தில் மக்கள் அனைவரும் சமம், அவர்கள் இயல்பு பொதுமை வாய்ந்தது என்பது தெரியவருகிறது. குறிப்பாக பெரியோர், சிறியோர் என்ற இரு நிலைப்பட்டவரைச் சுட்டிக்காட்டிய இப்பாடல் பெரியோரும் அல்லாமல் சிறியோரும் அல்லாமல் இடையில் நிற்போரைக் குறிக்காமல் குறித்துள்ளது. இந்த இனிய பண்பில் பொதுமை உணர்வு மிக்கிருப்பதை உணரமுடிகின்றது.
சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகின்றன. இவற்றின் பொதுமை நோக்கு என்று எண்ணுகின்ற பொழுது திருக்குறள் முன்னணி பெறுகின்றது. உலகப் பொதுமறை என அழைக்கப்படும் இந்நூலின் பொதுத்தன்மை உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (திருக்குறள் 425)
என்ற குறள் உலகின் பொதுமையையும், அறிவாற்றல் பெற்றவர்களின் பொதுமையையும் எடுத்துரைப்பதாக உள்ளது. மலர்தல், கூம்பல் என்பதன் முல விதை கணியன் பூங்குன்றனார் விதைத்த வியத்தல், இகழ்தல் என்பதாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் என்ற நடைமுறையை வள்ளுவர் உலகப் பொதுமையாகக் காணுகின்றார். இவ்வளவில் தொட்ட தொட்ட இடமெல்லாம் வள்ளுவத்துள் பொதுமையைக் காணமுடிகின்றது. இதுபோன்று மற்ற அற நூல்களில் பல பொதுமைக் கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றுள்ள உலகப் பொது அறம் வெளிப்படுத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் முன்பகுதியில் உள்ள வாழ்த்துப் பகுதியும், மணிமேகலை உணர்த்தும் உலகஅறவியும் பொது நோக்கினவேயாகும்.
இவ்வகையில் உலகப் பொதுமை நோக்கிய பல இனிய கருத்துக்கள் தமிழ்ச் செவ்விலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. தேடிச் சேர்க்கின் மிகும் என்பது கருதி இக்கட்டுரையில் அவை தொட்டுக் காட்டப் பெற்றுள்ளன. இந்த பொதுமைச் செய்திகளை உலகோர்க்கு அறிவிப்பது தமிழர்களின் தனித்த கடமையாகும்.

செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்துள்ளது. இதன் முலம் தமிழ் செம்மொழி இலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தகுதிக்கு மேலும் வளம் சேர்க்கச் செம்மொழி இலக்கியங்களில் உள்ளக் கருத்துக்களைக் களஞ்சியங்களாக்கிப் பலரும் எளிதில் பயன் கொள்ளச் செய்ய வேண்டும். இந்த நோக்கத்தினை எட்டுவதற்குரிய சில வழிமுறைகளை இக்கட்டுரைச் சுருக்கம் எடுத்துரைக்கின்றது.
செம்மொழி இலக்கியங்களைப் பற்பல குழுவினர் வலையேற்றம் செய்துள்ளனர். இவற்றுள் சிறந்ததைத் தேர்வு செய்து கொண்டுச் செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கல் என்பது அடிப்படைத் தேவையாகும். அக்களஞ்சியம் பின்வரும் நிலையில் பல்வேறு பகுப்புகளைக் கொண்டதாக அமைந்தால் பெரும்பயன் நல்கும்.
சொற்களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் உள்ள சொற்களைப் பகுப்பாய்வு செய்கின்ற முயற்சியை முதலில் தொடங்க வேண்டும். பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள், உரிச் சொற்கள், இடைச் சொற்கள் முதலான நிலைகளில் முதலில் பகுப்பாய்வு செய்து இந்தச் சொற்களை வகைமை செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக வினைச் சொற்களை முற்று, எச்சம், குறிப்பு, தெரிநிலை போன்ற துணைநிலைகளிலும் பகுப்பாய்வு செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று பெயர்ச் சொற்களையும் காரண, இடுகுறி, விரவு, அஃறிணை, உயர்திணை போன்ற வகைகளிலும் பிரித்துக் கொள்ளவேண்டும். இடைச்சொற்கள், உரிச்சொற்கள் போன்றவற்றையும் அவற்றின் துணைவகைகளுடன் பிரித்து அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நிறைவான செம்மொழி இலக்கிய இலக்கணச் சொற்பட்டியல் கிடைத்துவிடும்.
செம்மொழிக் களத்தில் உள்ள ஒரே இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். (இறையனார் களவியல் அகப் பொருள் பற்றிய செய்திகளை மட்டும் கொண்டது) இதனுடன் மேற்கண்ட சொற் களஞ்சியத்தை ஒப்பிட்டு ஆராய வேண்டும். அப்படி ஆராய்கின்றனபோது இந்த இலக்கியங்களின் காலமும், இந்த இலக்கியத்திற்கான இலக்கணத்தின் காலமும் ஒத்துப்போகும் சூழல் ஏற்படும். அப்படி ஏற்படுகையில் செம்மொழி நூல்களின் காலத்தையும், இலக்கண வரம்புகளின் காலத்தையும் தெளிவு படுத்திட முடியும்.
இந்தச் சொற்பகுதிகளை வைத்துக் கொண்டு இந்தச் சொற்களின் வளர்ச்சி, தேய்வு நிலை போன்றனவற்றை இதற்குப் பின்னுள்ள இலக்கண இலக்கிய நூல்களில் கண்டு கொள்ளவும் முடியும். சொற்களின் கட்டுமானம், சொற்றொடர்களின் அமைப்பு முறை முதலான கொண்டு செம்மொழி இலக்கியங்களின் காலத்தினை உணர்ந்து கொள்ளமுடியும்.
மொழியியல் செய்திகள்
செம்மொழி இலக்கியங்களில் உள்ள மொழியியல் செய்திகளையும் தொகுத்துக் களஞ்சியமாக்க இயலும். செம்மொழி இலக்கியத்தின் சிறப்புக்களுள் ஒன்று அதன் மொழிக் கொள்கை என்பதாகும். அந்த மொழிக் கொள்கை உருவாக்க, உறுதிப்படுத்த இந்தக் களஞ்சியம் உதவும்.
ஆசிரியர் பெயர்க்களஞ்சியம்.
செம்மொழி நூல்களைப் படைத்த ஆசிரியர்கள் பற்றியதானக் குறிப்புகளைத் தரும் ஆசிரியர் பெயர்க் களஞ்சியத்தையும் உருவாக்கிட வேண்டும். இதன் வழி செம்மொழிப்படைப்பாளர்களை இனம் காண முடியும்.
ஊர்ப்பெயர் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்கள் தோன்றிய ஊர்ப் பெயர்கள் தொகுக்கப்பட வேண்டும். இதனோடு புலவர்களின் ஊர்கள், அரசர்களின் ஊர்கள் போன்றனவும் வெளிப்படுத்தப்படலாம். இவ்வாறு வெளிப்படுத்துகையில் அவற்றை இக்காலநிலையில் நிலவியல் கண்ணோட்டத்துடன் இணைய அளவில் வெளிப்படுத்த இயலும். இதன் காரணமாக தமிழர்கள் பரவி இருந்த பகுதிகளை அறிந்து கொள்ள இயலும்.
மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஊர்ப்பெயர்களையும் வகைமை செய்ய வேண்டும். இவற்றையும் வரைபட அளவில் தரவேண்டும். இதன் காரணமாக தமிழர்களின் முந்தைய நிலப்பரப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இயலும்.
முடிந்தால் ஊர்களின் பண்டைக் காலப் பெயர் தற்போது எவ்வாறு மருவியுள்ளது என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தலாம். தற்போதும் அதே ஊர்ப் பெயரைச் சொல்லி அழைக்க அது உதவும்.
உயிர்களின் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைப் படங்களுடன் அறிவியல் தகவல்களுடன் வெளிப்படுத்தும் களஞ்சியங்களை உருவாக்க வேண்டும்.
அறிவியல் செய்திகள்
செம்மொழி இலக்கியங்களில் காணலாகும் அறிவியல் செய்திகள் அதாவது நிலவியல் செய்திகள், வானியல் செய்திகள், பேரிடர் மேலாண்மைச் செய்திகள், இயந்திரவியல் செய்திகள், வேதியியல் செய்திகள், தகவல் தொடர்பு செய்திகள் போன்றவற்றையும் களஞ்சியங்களாக்கித் தரலாம்.
தொடர்களின் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் காணப்படும் புகழ் மிக்கத் தொடர்களைத் தொகுத்து ஒரு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.
அணிக் களஞ்சியம்.
செம்மொழி இலக்கியங்களில் உவமை அணி போன்ற பல அணிகள் பயின்று வந்துள்ளன. இவற்றில் பயின்று வந்துள்ள அணிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு களஞ்சியத்தையும் துணைக் களஞ்சியமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
யாப்புக் களஞ்சியம்
செம்மொழிகளில் பயன்படுத்தப்படும் யாப்பு பற்றிய புள்ளி விவரங்களை அறிய யாப்புக் களஞ்சியம் அவசியமான தேவையாகும். தொல்காப்பியச் செய்யுளியல் நெறிப்படி செம்மொழி இலக்கியங்கள் படைக்கப் பெற்றிருக்கிறதா அல்லது ஏதேனும் மாற்றம் பெற்றுற்ளதா என்பதையும் இதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.
பாடுபொருள் களஞ்சியம்
தொல்காப்பியம் காட்டும் அகம், புறம் பற்றியதான பாடுபொருள் இலக்கணங்கள் எவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் அமைந்துள்ளன என்று கண்டு தெளியும்போது இவற்றின் காலத்தினை அறிந்து கொள்வதில் தெளிவு பிறக்கும். எனவே பாடுபொருள்கள் பற்றிய களஞ்சியங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
திணைத் துறைக் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் திணை, துறைப் பகுப்பு முறை என்ற முறை பயன்படுத்தப்பெற்றுள்ளது. இந்தப் பகுப்பிலும் தொகுப்புனை உருவாக்க வேண்டும். குறிஞ்சி நிலப் பாடல்கள் அனைத்தும் ஒரு பிரிவாக அமைப்பது போன்றதான களஞ்சியங்களை உருவாக்கிட வேண்டும்.
அறக்கருத்துக்கள் அடங்கிய களஞ்சியம்
அறநூல்கள் பெரும் அளவில் செம்மொழி இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இருந்து உலகப் பொதுமையை வலியுறுத்தும் நல்ல அறக் கருத்துக்கள் தொகுக்கப் பெற்று களஞ்சியமாகத் தரப்பெறலாம். இவற்றையும் ஆங்கில மொழியில் பெயர்த்து வெளியிடலாம்.
இசை, நாடகக் குறிப்புகளுக்கான களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்கள் வழித் தெரியவரும் இசைக்கருவிகள், பண், இசை நுணுக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு களஞ்சியமாக்கலாம். இவற்றுள் உள்ள நாடகச் செய்திகள் அனைத்தையும் ஒரு களஞ்சியமாக்கலாம்.
மெய்ப்பாடுகளுக்கான களஞ்சியம்
இலக்கியத்திற்கு உணர்ச்சி முக்கியமான பண்பாகும். இந்த முக்கியமான மெய்ப்பாட்டு பண்புகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக் கொண்டு வந்து ஒரு தொகுப்பாக்கித் தருதல் மிக்கத் தேவையுடையதாகும்.
பண்பாட்டுக் களஞ்சியம்
குறிக்கத்தக்கத் தமிழ்ப்பண்பாடுகள் செம்மொழி இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்துத் தக்க புகைப்படங்களுடன் தருவதாக இந்தப் பண்பாட்டுக் களஞ்சியம் அமையலாம்.
நாகரீகக் களஞ்சியம்
தமிழர் நாகரீகம் பற்றிய பல செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை இக்களஞ்சியம் வெளிக் கொணரல் வேண்டும்.
பழக்க வழக்கக் களஞ்சியம்
தமிழர் தம் பழக்க வழக்கங்கள் போன்றனவற்றைத் தொகுக்க இக்களஞ்சியம் உதவும். குழந்தை பிறந்ததும் செய்யும் சில வழிமுறைகள், இறந்தார்க்குச் செய்யும் வழிமுறைகள் முதலான பல பழக்க வழக்கச் செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த இந்த இழை உதவும்.
வரலாற்றுச் செய்திகளுக்கான களஞ்சியம்
இந்த இணைப்பில் தமிழக வரலாற்றைப் பற்றிய செம்மொழி இலக்கியப் பதிவுகள் இணைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் தக்கச் சான்றுகளுடன் நிறுவும்படியான படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் முதலியன கொண்டு மேலும் சீர்மைப்படுத்தலாம்.
இனக்குழுக் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் பல இனக்குழுக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றைத் தொகுத்துத் தருவது இக்களஞ்சியமாக இருக்கலாம்.
ஆய்வுக்களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்கள் பற்றி இதுவரை நடந்துள்ள ஆய்வுகள், வெளிவந்துள்ள பதிப்புகள், விளக்கப்படுத்தியுள்ள உரைகள், முனைவர் பட்ட ஆய்வுகள், எம். பில் பட்ட ஆய்வுகள் முதலியன தொகுத்து இவ்விணைப்பாக வழங்கப் பெறலாம்.
மொழிபெயர்ப்புக் களஞ்சியம்
இதுவரை வெளிவந்துள்ள செம்மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் அனைத்தும் இப்பகுதியில் கிடைக்கும்படி அமைத்தால் உலகம் யாவையும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளளும்.
செம்மொழி வரலாறு
தமிழ்ச் செம்மொழியாவதற்கு உழைத்த பெருமக்கள் பற்றிய செய்திகள் இவற்றில் கிடைக்கச் செய்யலாம்.
இவ்வாறு பற்பல நிலைகளில் இந்தக் களஞ்சியப் பணிகள் செய்யப் பெறலாம். இவற்றுக்குத் தக்கத் தமிழ் ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் தங்கள் உழைப்பினை நல்க வேண்டும். குறிப்பாக திருப்பச் செய்தல், செய்ததையே செய்தல் என்பதைக் குறைக்க இந்தக் களஞ்சியம் உதவும். மேலும் இந்தக் களஞ்சியத்தை வளப்படுத்த அசைபடங்கள், புகைப்படங்கள், காணொலிகள், பேச்சொலிகள் போன்றன இணைக்கப்படலாம். இதன் வழி ஒப்பற்ற பணித்திட்டம் ஒன்றைச் செயல்படுத்திய பெருமை உலகத்தமிழருக்குக் கிடைக்கும்.