திங்கள், நவம்பர் 15, 2010

ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குருவின் பெருவழிப்பாதை




மனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி மிஞ்சி நிற்கின்றன. இந்தக் கவலைகள் முற்றிலும் நீங்கி இளைப்பாற இடம் கிடைத்தால் அதுவே நிம்மதிப் பெருவாழ்வாகின்றது.

படிப்பு பாதியும், வேலை மீதியும் ஆகி நம் வாழ்வு பயனற்றுக் கழிந்திட, தளர்ந்தபோதில் ஞானம் நோக்கிப் புறப்பட்டு ஆகப் போவது என்ன? இளங்காலத்திலேயே ஆசையற்று, அன்புற்று, குருபாதம் தேடி அடையப் பெற்றால் அதைவிட ஆனந்தம் வேறென்ன இருக்க முடியும். இந்தப்பேற்றைவிட உறுதியான நற்பேறு வேறு என்னவாக இருக்க முடியும். சற்குருவின் சிந்தனை நன்மை பயக்கும். வாழ்வில் புதுப் பொலிவைத் தரும். அதன் தொடர்பு பெருக பெருக மற்றைய கவலை தரும் தொடர்கள் கழிந்து அற்றுப்போகும். இந்நிலை எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தேடினும் கிடைக்கப்பெறாத வரப்பெறாத பெருஞ்செல்வம் அது என்பதில் ஐயமில்லை.

முன்னோர்கள் இளையோர்களை இந்த வழி நடத்தவேண்டும். இளமை வாழ்வில் நலம் பெருக நல்ல வழி இதுவே ஆகும். இதுவே ஞானம் பெருக்கும் பெருவழியாகும்.

ஸ்ரீஅகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய சுத்த அத்வைத போத கீதம் என்ற நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஓர் உண்மையைக் காட்டுகின்றன. கடவுள் ஒருவரே. அவரே உலகப் பொருள்கள் அனைத்துள்ளும் நிரம்பி இருக்கிறார் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன. கடவுள் உணர்வை இப்பாடல்கள் மிகுவிக்கின்றன. குரு பற்றிய தெளிவைத் தருகின்றன. அதன் உள்பொருளை விரிவினை எண்ண எண்ண இனிக்கின்றது. இத்தகைய ஞானப்பாடல்களில் ஒருபாடல் மனித வாழ்வினை மிகச் சரியாக எடைபோடுகிறது.

மானிட வாழ்வின் தீர்மானம் என்ற தலைப்பின் கீழ் அமைந்த அப்பாடல் மனித வாழ்வினை மதிப்பீடு செய்து நல்வழி காட்டுகிறது.

நான் நானென்றதுமென்ன கொடுமை நம்பி

தானென்ற தாய் தந்தைக்கு ஆனார் அடிமை

என்று மனித வாழ்வின் தொடக்கத்தில் இருந்து இப்பாடல் தொடங்குகிறது. நான் நான் என்று பெருமை பேசித்திரியும் மானிடர்கள் தன் உடம்பினை, உடல் உறுப்புகளை வைத்தே தற்பெருமை பேசித்திரிகின்றனர். ஆனால் அவர்களின் உடம்பு அவர்களுக்குச் சொந்தமானதன்று. தாய், தந்தையின் வயப்பட்டு வந்த பொருள் அது என்று ஆணவத்தின் நிலை அறுத்து பிறப்பின் நிலையினை இவ்வடி சுட்டுகிறது.

மனித வாழ்வில் பொன் பொருள் சேர்க்கும் ஆசையை அடுத்த அடிகள் சாடுகின்றன.

விரும்பினார் வீடு என்றும்காடுமனைவி வேண்டினார் வேதனை

தூண்டினார் மாடு பொருந்தினார் மக்களினோடு

பொன்பூஷணம் வேணுமென்று ஆசையில் நாடி

வருந்துறார் வாழ்க்கை திண்டாடி

என்ற அடிகளில் நிலையற்ற பொருள்களின் மீது மனிதன் கொண்டுள்ள நீங்காத ஆசை வீண் என்று காட்டப்படுகிறது. பணம், பதவி, பொருள், போகம் எனத்திரியும் இக்கால உலகிற்கு நிலையாமையை எடுத்துக்காட்டும் இனிய அடிகள் இவை.

இதுமட்டும் இல்லாது இறைச் சிந்தனை இல்லாது மனிதக்கூட்டம் அலைவதும் வருந்துதவதற்கு உரியது என்று இப்பாடல் எடுத்துரைக்கிறது.

மதிகெட்டுப் போனதெவ்வாறு தோற்றும்

நிதியுற்றுக் கடவுளை நீங்கள் நினையாது

சதிசெய்யும் மனிதர் கூட்டம்

தன்னைத் தான் அறியாததனாலே திண்டாட்டம்

சதி செய்யும் நோயினாலே வாட்டம்

என்றைக்கும் சதிசெய்வது மனிதத் தொழிலாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் புதிய செய்தி அல்ல என்ற புறநானூற்று வாசகம் இன்றும் ஏற்புடையதாக உள்ளது. சதி செய்து தான் வாழ நினைக்கும் இழிந்த குணம் பெற்ற மனிதரை இந்த அடிகள் வெறுக்கின்றன. அவர்களின் சதி செயல் மற்றவரை வதைக்கும். சதி செய்தோருக்கு நோய் சதி செய்யும் என்ற வார்த்தை சத்தியமான வார்த்தையாகும். சதி செய்யாது மனிதரை வாழ வைக்கும் சத்திய வரிகள் இவை.

மேலும் கடவுளை நினையாத மதிகெட்ட கூட்டத்தையும் இந்த அடிகள் வெறுக்கின்றன. கடவுள் குறித்த முட, பலி வழிபாட்டையும் இந்தப்பாடல் சாடுகின்றது.

செப்புக்கல்லுக்கு உயிர் கொன்று மாமிச ஊட்டம்

இட்டார் நோய் தீரவுமில்லை இதனாலே

கடவுளை யேசுவார் தொல்லை

என்ற பகுதியில் கடவுளுக்காகச் செய்யப்படும் பலி வழிபாட்டால் பயன் இல்லை என்பதும் உணர்த்தப்படுகிறது. இந்தப் போலி வாழ்க்கை தீர வேண்டும். உண்மை வாழ்வை மனிதன் வாழவேண்டும். அதற்கு என்ன வழி என்பதையும் இந்தப்பாடல் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. எது உண்மை வழிபாடு என்பதற்கும் இந்தப் பாடல் விடை சொல்லுகின்றது.

"அகமும் புறமும் பரிசுத்தம் குருநாதர்

அருள்மொழி நேசி நீ நித்தம்

பொறுமையாய் உயிர்களில் அன்பும் உண்மை

இரக்கமும் சத்தியமும் தன் நலங்கெட்டு

தத்துவமென்பதை விட்டு உண்மைக்

கடவுளை தன்னுள்ளே காணஆசைப்பட்டு

நித்தியம் நீடுழி மோட்சம் கிட்டும்''

இவ்வடிகளில் காட்டப் பெற்றுள்ள வாழ்வே உண்மை வாழ்வு. மனிதர்கள் ஞானமரநிழலில் இளைப்பாறிக் களைப்பாற்றும் வாழ்வு. உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாக ஆக்கிக் கொண்டு குருநாதரின் அருள்மொழிகளை நேசிக்கவேண்டும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும், உண்மையான இரக்கத்தையும் செலுத்துதல் வேண்டும். தன் நலத்தைக் குறைக்கவேண்டும். தத்துவங்களைத் தேடி அலைவதை நிறுத்திவிட்டு கடவுளைத் தன்னுள்ளே காணும் பெறும் பேறு பெற வேண்டும். அதுவே மோட்சம் எனப்படும் என்று தெளிவான மானிடர்க்குத் தேவையான வழியினைச் சற்குரு இவ்வடிகளின் வழியாகக் காட்டுகிறார்.

வழிகள் இருக்கின்றன. வழிகாட்டிகளும் இருக்கின்றார். தேடிச் செல்லும் சங்கத்தாரும் இருக்கின்றார். அந்தச் சங்கத்தில் நாம் இணைந்துச் செயல்படும் நாளும் மனமும்தான் ஞானத்தேடலுக்குத் தேவை.

திங்கள், நவம்பர் 01, 2010

செம்மொழிகளில் தமிழ்



உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் பெருமை தரக் கூடிய மகிழ்ச்சியான செய்தி. உலக அரங்கில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் தன்னிகரற்ற பெருமை இதுவாகும். இந்தப் பெருமை பல நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டும். தற்போது கிடைத்திருப்பது ஓரளவிற்கு மனநிறைவை தமிழ் மக்களிடமும், தமிழ் அறிஞர்களிடமும் ஏற்படுத்தியுள்ளது.

உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம், தமிழ் ஆகிய எட்டு மொழிகள் கொள்ளப்படுகின்றன.

கிரேக்க மொழி பாரம்பரியம் மிக்க மொழியாகும். இந்தமொழியின் வரிவடிவம் கி. மு. 700 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இம்மொழியில் உள்ள இலக்கிய வளங்கள் அதிகம். ஹோமர் எழுதிய இலியது, ஒடிசி ஆகிய மாகாப்பியங்களும், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் தத்துவ நூல்களும் இம்மொழியின் பெருமையை உலக அளவில் நிலைநிறுத்தி வருகின்றன.

சமஸ்கிருதம் இந்தியவின் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். இந்த மொழியில் கி. மு. 1500 முதல் கி. மு. 2000வரை வேதங்கள் தோன்றின. இதற்கடுத்து இராமயண மகாபாரத இதிகாசங்கள் தோன்றின. இதனைத் தொடர்ந்து முப்பத்தாறு வகைப் புராணங்கள், தந்திர நூல்கள், காவியங்கள் போன்ற எழுந்தன. பாணினி படைத்த அஸ்டத்தியாதி ஒப்பற்ற இலக்கண, மொழிக் கூறுடைய நூலாக அமைந்தது. காளிதாசரின் காவியங்கள், கௌடில்யர் அர்த்தசாஸ்திரம் போன்றனவும் தனித்த இலக்கியச் சிறப்பினை இம்மொழிக்கு அளித்தன. மார்க்ஸ் முல்லர், கெல் புரூக் போன்ற அயல்நாட்டவர்கள் வடமொழியின் சிறப்பினை மொழிபெயர்ப்புகளின் வாயிலாக உலக அளவிற்கு எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக இந்திய மொழிகளில் வடமொழி செம்மொழி வரிசையில் முன்பாகவே இடம் பெற முடிந்தது.

இலத்தீன் மொழி இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளுக்கு அடித்தளமாக இருந்துவருகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இம்மொழி இலக்கியங்கள் சிறப்படைந்திருந்தன. இம்மொழியில் புகழ்பெற்ற கவிஞர் வெர்ஜில் படைத்த இனீட் என்னும் காவியம் உலகப் புகழ் வாய்ந்தது. இம்மொழியில் சிசிரோ, சேலஸ்ட், டெசிட்டஸ், செனகா போன்ற தத்துவ அறிஞர்களின் படைப்புகளும் குறிக்கத்தக்கன. கி. பி பதினெட்டாம் நூற்றாண்டுவரை இம்மொழி இலக்கியங்கள் சிறப்பு பெற்றிருந்தன.

பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்குகிறது. இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் கணித எண்கள் பாரசீக மொழி வழங்கிய கொடையாகும். உமர் கய்யாம் என்ற உலகப் புகழ் பெற்ற கவிஞரின் கவிதைகள் இம்மொழிக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

அரபு மொழியின் எழுத்துவடிவம் கி. மு. 328 ஆம் ஆண்டில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. குர்ஆன் இம்மொழியில் எழுதப் பெற்றதாகும். கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் இதன் செம்மொழி இலக்கியக் காலம் தொடங்கியது. மொழியியல், வரலாறு, புவியியல் போன்ற துறை சார்ந்த பல நூல்கள் இம்மொழியில் எழுந்துள்ளன.

எபிரேயம் கி. மு. 1200 முதல் பழமை பெற்று விளங்கும் மொழியாகும். இம்மொழியில் எழுதப் பெற்ற கிறித்துவ சமயச் சார்புடைய நூல்கள் இம்மொழிக்குச் செம்மொழித் தகுதியைத தந்தன. இம்மொழயின் செம்மொழி நிலை கி. பி. 12 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இது இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழியாக விளங்குகின்றது.

சீன மொழியும் பண்டைய மொழியாகும். கி. மு. 600 ஆண்டளவில் வாழ்ந்த கன்பஸ்ரீசியஸ் என்பவரின் தத்தவப் படைப்புகள் இம்மொழியில் குறிக்கத்தக்கனவாகும். லாவுட்ஸ் என்பவர் தாவ் என்னும் நெறியில் நின்று பல படைப்புகளைப் படைத்தளித்தார். கன்பஸ்ரீசியஸ் கி. மு. 600 வரையுள்ள இலக்கியங்களைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக அளித்துள்ளார். ஐந்தாவதாக அமைந்த அவரின் படைப்பான தென்றலும் வாடையும் குறிக்கத் தக்க படைப்பாக விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து கதை பொதி பாடல்கள், இசைப்பாடல்கள் பல எழுந்தன.

இம்மொழிகளின் வளங்களைக் காணும் பொழுது அவற்றின் தொன்மையும், இலக்கியச் சிறப்பும், தொடர்ச்சியான இலக்கிய வளமையும் இம்மொழிகளுக்குச் செம்மொழி நிலையை வழங்கியுள்ளன என்பது தெரியவருகிறது. இதே வரிசையில் தமிழும் இடம் பெறுவது என்பது தகைமை உடையதே ஆகும்.

இதற்கு அடுத்த நிலையில் இந்தியத் துணைக்கண்டத்தில் செம்மொழிகளாக பின்வருவரும் மொழிகள் கொள்ளப் பெற்றுள்ளன. வடமொழி, பாரசீகம், அரபு, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இவ்வகையில் இந்திய அரசால் செம்மொழியாக ஏற்கப் பெற்றனவாகும். இதன் வரிசையில் தமிழும் தற்பொழுது இணைந்துள்ளது.

பாலி, பிராகிருதம் போன்றன இந்திய அரசால் ஏற்கப் பெற்றுள்ள உலகச் செம்மொழிகள் பட்டியலில் இல்லாத செம்மொழிகள் ஆகும். அவை பற்றிய செய்திகளும் அறிந்து கொள்ளப் பெற வேண்டியனவாகும்.

பாலி மொழி கி. மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பேச்சு மொழியாக அமைந்து கி. மு. முதல் நூற்றாண்டில் எழுத்து வகை இலக்கிய வளமையைப் பெற்றது. பௌத்த சார்புடைய மொழியாக இது விளங்கியது. தம்மபதம், புத்தர் ஜாதகக் கதைகள், திரிபிடகம் போன்றன இம்மொழியில் எழுந்தவையாகும். தாய்லாந்து, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில இம் மொழி பரவியுள்ளமையால் இதனை உலகச் செம்மொழியாக அறிவிக்கக் கோரிக்கை இருந்து கொண்டுள்ளது.

பிராகிருதமும் இந்தியாவின் தொன்மையான மொழிகளுள் ஒன்று. இவ்வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது. இந்திய அரசின் வாயிலாக இந்தியச் செம்மொழிகளின் மொழிஅறி ஞர்கள் அவ்வப்பொழுது பாராட்டப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழறிஞர்களுக்கு ஊக்கமும், உணர்வும் ஏற்பட இந்திய அரசு அளித்துள்ள செம்மொழித் தகுதி உதவிடும் என்பதில் ஐயமில்லை.

இருப்பினும் யுனெஸ்கோ என்னும் உலக அமைப்பு நிறுவனம் தமிழின் செம்மொழித் தகுதியினை இன்னும் ஏற்காமல இருக்கிறது. இதனையும் ஏற்கச் செய்யும் காலம் வரும். உலக அளவில் தமிழை எடுத்துச் செல்லவும், தமிழில் உலக இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் பெருவாய்ப்பு அமைய இந்தச் செம்மொழித்தகுதி உதவிடும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தக்க நிலையில் எடுத்துக் கொண்டு தமிழ் நிலைக்கச் செய்ய தமிழர்கள் அனைவரும் முயல்வோம்.