ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்



தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல புதிய பணிகளைத் தற்போது தொடங்கி வருகிறது. அவற்றுள் பாட நூல்களை சமச்சீர் கல்விமுறையில் உருவாக்கி வருவது முக்கியமான பணியாகும். மேலும் பாட நூல்களை இணைய வடிவமைப்பில் வழங்கி வருவது குறிக்கத்தக்க ஒன்றாகும்.

சமச்சீர் கல்வி முறையில் உருவாக்கப் பெற்ற ஆறாம் வகுப்பிற்கு உரிய தமிழ்ப் பாட நூல் பற்றிய மதிப்பீட்டை இக்கட்டுரை செய்ய முன்வருகின்றது.

நூற்று முப்பது பக்கங்கள் கொண்ட இந்தப் பாட நூல் பாரதி கனவு கண்டது போல பல வண்ணங்களுடன், பிள்ளைக்களைக் கவரும் வண்ணம் தயாரிக்க முயன்றுள்ளது. இருப்பினும் வண்ணக் கலவைகள் அதிகம் கலக்கப் பெற்றிருக்கலாம். பக்க ஓரங்களில் அதிகமாக மர வண்ணமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. சில பக்கங்கள் அந்தந்த பாடத்தின் பின்னணியைப் பெற்றிருக்கின்றன. (எடுத்துக்காட்டிற்கு பறவைகள் பலவிதம் என்ற உரைநடைப் பகுதியைச் சுட்டலாம்) இம்முறையைப் பின்பற்றியிருந்தால் வளமாக இருந்திருக்கும்.

இத் தமிழ்ப் புத்தகத்தின் இயல்கள் செய்யுள், உரைநடைப் பகுதிகள் என இரண்டும் கலந்து உருவாக்கப் பெற்றிருப்பது புதுமையான முயற்சியின் தொடக்கம். ஏனெனில் செய்யுள் பகுதி தனியாக முன்னாலும் அதன் பின்னால் உரைநடைப் பகுதி என்பதாகவும் அமைக்கப் பெற்றிருந்த முறை இதில் மாற்றம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் செய்யுள், உரைநடை, துணைப்பாடம் என்று பகுதிகள் பக்கத்தலைப்பிட்டுக் காட்டியிருப்பதும் நல்ல முறைமையே. இவற்றோடு இயல் முடிவில் வகுப்பறைத் திறன்கள் என வகுத்து பயிற்சிகளைத் தந்திருப்பதும் நல்ல முறைமையே. வகுப்பறைத் திறன்களில் பேசுதல்,எழுதுதல், படைத்தல், கலந்துரையாடல், குழுச் செய்கை முதலான பல பயிற்சிகளை ஆக்கித் தந்திருப்பது நிறைவாக உள்ளது. பாடத் தேர்வை விட இதற்கு அதிக நேரமும், உழைப்பும் பாடக்குழுவினருக்குத் தேவைப்பட்டிருக்கும் என்பது இவற்றைக் காண்கையில் தெரியவருகிறது.

இயல்களின் முடிவில் இலக்கணம் தரப்பெற்றுள்ளது. இலக்கணப்பகுதிகளில் வண்ணங்கள், படங்கள் இடம் பெறாமல் வெறும் அச்சுவடிவமாக இருப்பது என்பது பெருங்குறை. இது தனியாக பாடக்குழுவினரின் ஒரு பகுதியினரால் செய்யப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாடத் தேர்வு பெற்ற பின் இலக்கண இணைப்பைச் சேர்த்திருக்க வேண்டும். இதன் காரணமாக இலக்கணப் பகுதிகள் பாடப் பகுதிகளுக்குப் பின் பற்றப் பட்ட வண்ணக்கலவை நிலைக்கு வந்து சேரவில்லை என்பது தெரிகிறது.

மேலும் இலக்கணப் பகுதிகளின் தொடர்பிலும் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக நெடில்,குறில் பாடநூலின் முதலில் அறிமுகமாகிறது. அவற்றிற்கான மாத்திரை அளவுகள் பாட நூலின் நிறைவில் வருமாறு அமைக்கப் பெற்றுள்ளன. இந்த இடைவெளி, இதுபோன்ற முறை மாற்றங்கள் வருங்காலத்தில் சரி செய்யப்படும் என்று நம்புவோம்.

குறிப்பாக இப்பாடநூலில் மிகத் தெளிவாகக் கூறவேண்டுமானால் தமிழ்த்தாத்தா உ.வே.சா மற்றும் கல்லிலே கலை வண்ணம் போன்ற உரைநடைப் பாடங்கள் மிக்கச் சிறப்புடையனவாக உள்ளன. இவற்றிற்காக உழைத்துள்ள பாடக் குழுவினருக்கு நன்றி. இது போன்று மற்ற பாடங்களும் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவை அத்தனைச் சிறப்புடன் இல்லை. குறிப்பாக இளமையில் பெரியார் கேட்ட கேள்வி, தேசியம் காத்த செம்மல் போன்றவற்றில் பல புகைப்படங்களை அளிதத்திருக்கலாம். அந்த வாய்ப்பினைப் பாடக் குழு நழுவவிட்டுவிட்டது என்றே கூறலாம்.

கதைப் பகுதிகளைப் பொறுத்தவரை அவை இரண்டு நிலைகளில் அமைந்துள்ளன. அதாவது துணைப்பாடம், மற்றும் முதன்மைப் பாடம் என்ற நிலையில் அவை இடம் பெற்றுள்ளன. எது பெரிய உண்மை, வணக்கம் ஐயா ஆகிய கதைகள் ஆழமில்லாமல் கொண்டு கூட்டி முடிக்கப் பட்ட கதைகள் போல உள்ளன. தெனாலி ராமன் கதைகளில் பல இருக்கையில் தங்கமாம்பழமும் சூட்டுக் கோலும் கதை நகைச்சுவையைத் தந்தாலும் அவ்வளவு பொருத்தமான இந்தப் புத்தகத்தில் இல்லை. நல்ல கதை என்றால் கடைசி வரை நம்பிக்கை என்ற கதை மட்டுமே. வீரச் சிறுவன் கதை கூட அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. இன்னும் நல்ல உயிர்ப்புள்ள நகைச்சுவை மிளிர்கின்ற கதைகளைப் பாடத்திட்டக் குழு எடுத்திருக்கலாம்.

செய்யுள் பகுதிகளில் அதிகம் அறியப்படாத பல பாடல்கள் ஏற்கப் பெற்றிருப்பது சிறப்பு. இருப்பினும் நாய்க்கால், ஈக்கால் போன்ற பாடல்கள் நாகரீகமானதாகத் தெரியவில்லை. அப்துல் ரகுமான் கவிதையான தாகம் என்பதைக் கூடச் சிறப்பாச் சொல்ல இயலவில்லை. புதுக்கவிதையில் நெடிய நல்ல கவிதை ஒன்றைத் தந்திருக்கலாம். இதே நிலைதான் பட்டுக் கோட்டை, பாவேந்தர் பாடல்களுக்கும். வேறு நல்ல பாடல்களைக் குழு எடுத்திருக்கலாம். ஒரே நல்ல பாடல் என்றால் அது தாராபாரதி எழுதிய திண்ணையை இடித்துத் தெருவாக்கு என்பதுதான்.

குறிப்பாகச் செய்யுள் பகுதியில் ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு பகுதிகளில் ஒரு சீர்மை இல்லை என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும். சில பாடல்களுக்கு ஆசிரியர் குறிப்பு இல்லை. சில பாடல்களுக்கு நூல் குறிப்பு இல்லை. அல்லது இரண்டும் ஒரே எல்லையில் இருக்கும். இப்படிப்பட்ட குழப்பங்களைத் தீர்த்திருக்கலாம்.

சமச்சீர் பாட நூலா?

ஆறாம் வகுப்பிற்கு வைக்கப் பெற்றிருக்கும் இந்தப் பாட நூல் சமச்சீரானதுதானா என்ற ஐயம் பாட நூலைப் படித்து முடித்து வைக்கும்போது எழுகின்றது. குறிப்பாக ஔவையார் பாடல் ஒன்றை இப்பாட நூல் கொண்டுள்ளது.

நாடாகு ஒன்றோ (பக்கம் 67) எனத் தொடங்கும் அப்பாடலைப் படிக்கும்போதே அதன் சொல்பிரிப்புத் தன்மை சற்று நகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தெலுங்கைப் படிப்பதுபோன்ற ஒரு அனுபவத்தை இப்பாடல் தொனிக்கச் செய்கிறது. நாடா கொன்றோ என்ற தொடரைப் பிரித்த போது நாடுஆகு ஒன்றோ என்றாவது முழுமையாப் பிரித்திருக்க வேண்டும். பாதி பிரித்தும் பாதி பிரிக்காமலும் தமிழை வேற்றுமொழியாக்கியிருப்பது நகைப்பினை ஏற்படுத்துகிறது.

அதற்கு வரையப் பெற்ற பொருளும் நகைப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது. நாடு (மருதநிலம்), காடு ( முல்லை நிலம்), அவல் (பள்ளம் நெய்தல் ), மிசை (மேடு குறிஞ்சி) என்று பாலை நிலம் தோன்றுவதற்கு முன்னால் தொல்காப்பிய நெறிப்படி விளங்கும் இப்பாடலுக்குப் பொருள் சொல்லியிருப்பது பொருந்தாததாக உள்ளது.

" நிலமே நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நல்லதாக இருக்கிறாய். நிலமே நீ வாழ்க'' என்பது பாட நூல் தரும் பொருளாகும்.

பாடலில் உள்ள எவ்வழி நல்லவர் ஆடவர் என்பதற்கு ஆண்கள் என்ற நேர்பொருளைக் கொண்டு இவ்வுரை விளக்கம் செய்யப் பெற்றுள்ளது.

ஆடவர் என்பதற்கு சொற்பொருள் தரும் பொழுது இதே பாடப் புத்தகத்தில் "ஆடவர் ஆண்கள், இங்கு மனிதர்களைப் பொதுவாகக் குறித்தது'' என்று விளக்கம் தரப் பெற்றுள்ளது.

இப்பாடலுக்கு ஆண்கள் என்று பொருள் விளக்கம் கொள்ளுவதா, அல்லது மனிதர்கள் என்று கொள்ளுவதா அல்லது ஆளுமை உடையவர்கள் எனக் கொள்ளுவதா என்ற கேள்வியை எழுப்பினால் இப்புத்தகம் சமச் சீர் புத்தகமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஆடு என்பதற்கு வெற்றி என்ற பொருளைக் கழகத் தமிழ் அகராதி தருகின்றது. ஆளுமை உடையவர்கள் என்று பொருள் கொள்ளுவதும் சரியாக இருக்கலாம். தற்காலச் சூழலில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமானமாய் அனைத்துத் தரப்பிலும் வெற்றியுடன் இயங்கும் நிலையில் இப்பாடல் அல்லது இப்பாடலுக்கு வழங்கப் பெற்றுள்ள பொருள் ஆண்சார்புடையதாக இருக்கையில் இந்நூலை எவ்வாறு சமச்சீர் உடையது என்று ஏற்றுக் கொள்ள இயலும்.

மேலும் நான்மணிக் கடிகைப் பாடலான மனைக்கு விளக்கம் மடவாள் (பக்கம் 30) என்ற பாடலிலும் இதே நிலை உள்ளது. மடவார் என்பது முலபாடமாகும். அது இங்கு மடவாள் எனத் திரிக்கப் பெற்றுள்ளது. இதனைக் காணுகையில் இல்லிருந்து மட்டுமே பணி செய்ய வேண்டியது பெண்களின் கடமை என்பதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதன் காரணமாக பெண்களுக்க உரிய இடத்தை இப்பாட நூல் தரவில்லையோ என்ற ஐயம் தோன்றுகிறது. கடைசி வரை நம்பிக்கை, சாதனைப் பெண்மணி மேடம் கியுரி, மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் போன்றவற்றிலும் முறையே நோய் வந்தமையால் இரங்கத்தக்கநிலை, கணவனின் சார்புடன் வாழும் கியுரி,அப்பாவின் ஆளுமையை வெளிப்படுத்தும் மகளுக்கான கடிதம் என்பதான முறையில் பெண்களின் இருப்பு வைக்கப் பெற்றிருப்பதையும் காணுகையில் இப்பாட நூலின் சமச் சீர் தன்மை பாலின அடிப்படையில் ஆண் ஆதிக்க வயப்பட்டே கிடக்கிறது என்பது முற்றிலும் உண்மையாகிறது.

மேலும் இப்பாட நூலில் பாரதியின் செந்தமிழ்நாடு சேர்க்கப் பெற்றிருக்கிறது என்றாலும் அது துருத்திக் கொண்டு உள்ளதாகவே படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அடுத்துத் தமிழை மேலும் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலை வேண்டியதில்லை. மேலும் மனோன்மணீயத்தில் காலம் காலமாகச் சொல்லி வரும் அடிகள் மாற்றம் இந்நூலிலும் தொடர்கிறது. அது மாறாது போலும். முன் அட்டை இன்னும் சற்று நன்றாக வடிவமைக்கப் பெற்றிருக்கலாம்.

இதுதவிர நாட்டுப் புர (ற)ச் சிக்கலும் இப்பாட நூலுக்கு இருக்கிறது. ஆயிரம் சொன்னாலும் இதுவரைத் தமிழ்ச் சூழலில் பயன்படுத்தப் பட்ட வழக்கு நாட்டுப்புறம் என்பதை மறுக்க இயலாது.

இவ்வகையில் தொடர்ந்து செய்யப்படும் சமச்சீர் கல்வித்திட்டப் பாட நூல்கள் இன்னும் கவனமுடன் தயாரிக்கப் பட வேண்டும் என்பது தமிழர்கள் அனைவ ரின் நல்விழைவு ஆகும்.மேலும் இவை இணைய வடிவாகப் பல்லூடக முறையிலும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் ஏற்கப்பட வேண்டும்

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

சமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரின் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்

தற்போது சமுகத் தளங்கள் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றன. இவற்றின் முலம் நண்பர்களை, பின்பற்றுநர்களை உருவாக்கி சமுக ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இத்தளங்களின் வரவால் இணையதளத்தை நிர்வகித்தல், வலைப் பூக்களை நிர்வகித்தல் போன்ற நிகழ்வுகள் பின்தள்ளப் பெற்று இணையத்தின் கருத்துப் பரிமாற்றம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.


இந்த அடுத்த கட்ட வளர்ச்சி மொழி சார்ந்த, விருப்பம் சார்ந்த குழுக்களை உருவாக்கிக் கொள்ளமுடிகின்றது. இந்தக் குழுக்கள் வாயிலாக ஓருணர்வுபட்டோரை ஒருங்கிணைக்க முடியும்.


குழு மின்னஞ்சலின் பரிமாண வளர்ச்சிதான் தற்போது டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் வருகையாகும். இதற்கு முன் ஹை. 5 போன்ற தளங்கள் இதே அடிப்படையில் நண்பர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்துவந்தன. தற்போது நண்பர்களைப் பரிமாரிக்கொள்ளும் வசதியைக் கூடுதலாக இவை தருகின்றன. இவற்றின் வளர்ச்சி, இவற்றைப் பயன்படுத்துவோரின் உளவியல் போன்றனவையும் கணக்கில் கொள்ளப்பெற்றால் இவற்றின் வருகையில் நிகழ்ந்த மாற்றங்களை அறிந்து கொள்ளமுடியும்.


டிவிட்டர் ஓர் அறிமுகம்

நூற்று நாற்பது எழுத்துக்களில் எழுதப்படும் ஒரு செய்திச்சேவை டிவிட்டர் ஆகும். தமிழில் இதனைக் குறுஞ்செய்தி என்று கொள்ளுகின்றனர். சிட்டுக் குருவியின் படத்தோடு அறிமுகமாகும் இந்த டிவிட்டர் என்ற அமைப்பு மைக்ரோ வலைப்பதிவுச்சேவையாகும்.


இதன்முலம் செய்தியை அனுப்பவும், செய்தியைப் பெறவும் முடியும். மேலும் அபேசிகளின் வழியாகவும் இந்தக் குறுஞ்செய்திகளைப் பெற இயலும்.


அடிப்படையில் ஒரே கேள்வியில் இந்த டிவிட்டர் இயங்குகிறது. அதாவது இந்த நொடியில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் அந்த அடிப்படை கேள்வி. இந்தக் கேள்வியின் தாக்கத்தில் எழுத்தப்படும் செய்திகளை குறிப்பிட்டச் சிலருக்கு மட்டுமோ அல்லது அனைத்துத் தொடர்பாளர்களுக்கும் அனுப்ப இயலும். அவர்கள் இதில் பதிலளக்க வாய்ப்புண்டு.


இதுதவிர படங்கள், படக்காட்சிகள் போன்றனவற்றைக் கூட அனுப்ப இயலும். இதனுள் இணைப்பிழையை இட்டு அதன்வழியாக இணையதளத்திற்கு, வலைப் பூவிற்கு வரச்செய்யலாம்.


மொத்தத்தில் இந்த குறுஞ்செய்தியை அனுப்புவோர் நிலையில இருந்து ஆய்வு செய்தால் பின்வரும் காரணங்களுக்காக இது அனுப்பப்படுவதாக வகைப்படுத்தியுள்ளனர்.


செய்திகள், ஸ்பேம், சுயவெளிப்பாடு, அர்த்தமில்லாத எழுத்துக்கள், முக்கியச் செய்திகள் என்ற வகைகளில் டிவிட்டரில் செய்திகள் பரிமாறப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அர்த்தமில்லாத செய்திகள் அதிகம் இடம் பெறுவதால் இந்த டிவிட்டரின் பயன்பாடு மலினப்படுத்தப் பெற்றுள்ளது.


மேலும் டிவிட்டரைப் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் பலரும் இதனைப் பயன்படுத்தி வருவதால் இதன்மதிப்பு உயர்ந்து வருகிறது.


டிவிட்டரைப் பயன்படுத்துவதில் மொழித்தடைகள் ஏதும் இல்லை என்பது வரவேற்பிற்குரியது. நீங்கள் தமிழில் அச்சிட்டு தமிழிலேயே பதிலைப் பெறலாம் என்பது பெரும் வசதியாகும். இருப்பினும் டிவிட்டர தளம் ஆங்கில வடிவமைப்பினது என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய செய்தியாகும்.


டிவிட்டரில் புரபைல் என்ற பகுதியில் டிவிட்டருக்கு உரியவரின் புகைப்படம், அவர் பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருப்பதும் ஒரு நல்ல செய்தி. இங்குப் பெரும்பாலும் உண்மைத்தகவல்களை வெளியிடும் போக்கு பதிவர்களிடம் காணப்படுகிறது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் டிவிட்டரின் பயன்பாடு நாகரீகத்தோடு செயல்பட்டுவருகிறது என்பதும் ஒத்துக் கொள்ளத்தக்க ஒன்றாகும்.


தமிழக அளவில் டிவிட்டர் பயன்பாடு என்பது மெல்ல மேம்பட்டு வருகிறது. இருப்பினும் இலங்கைத் தமிழர்தம் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது.


அவர்களின் அரசியல், தாய்மண்தாகம் போன்றவற்றின் எழுச்சிச் செய்திகளின் களமாகத் தற்போது டிவிட்டர் விளங்கி வருகிறது. இந்தச் சூழலில் இலங்கைத் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்துக் கொள்ள டிவிட்டர் களம் உதவி வருகிறது.


இவற்றைத் தாண்டி தமிழ்ச்சமுகம் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து டிவிட்டர் பதிவர்கள் சிந்திக்க வேண்டும். இதுபோன்று டிவிட்டர் தமிழ்ச்செய்திகளை ஒருங்கிணைக்கும் அக்ரிகேட்டர் களங்களும் தேவை.


அதிக அளவில் செய்திகளைச் சுமந்து வரும் டிவிட்டர்களைக் காண்பதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திட அவற்றை பொருளடிப்படையில் பிரித்துக் கொள்ளும் வகையில் தனித்த தலைப்புகளை அளிக்கும் வாய்ப்பினை டிவிட்டர் வழங்கலாம்.


பேஸ்புக்

டிவிட்டருக்கு இணையான போட்டியாக விளங்குவது பேஸ்புக் ஆகும். இதுவும் ஒரு சமுதாய இணைப்புக்களமாகும். ஒரு மனிதனின் வாழ்வில் பிற நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்புடைய தளமாக இத்தளம் விளங்குகிறது.


டிவிட்டரில் இல்லாத பல வசதிகளை உடையதாக இது விளங்குகிறது. இதற்கும் செய்தி அளவின் வரையறை உண்டு. அதிக அளவிலான செய்திகளை இவை ஏற்பதில்லை. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முறையில் இதுவும் செயல்படுகிறது.


இதனுள் புரபைல் பாட்ஜ், லைக் பாட்ஜ், போட்டோ பாட்ஜ், பேஜ் பாட்ஜ், பைண்ட் பிரண்ட்ஸ் போன்ற அமைப்புகள் உள்ளன. தன்விபரக்குறிப்புகளை அறிய புரபைல் பாட்ஜ் பயன்படுகிறது. விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள லைக் பாட்ஜ் பயன்படுகிறது. போட்டோ பாட்ஜ் என்பது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. பேஜ பாட்ஜ் என்பது பக்கங்களை அறிமுகப்படுத்த உதவுகின்றது. இதுதவிர நண்பர்களைத் தேடும் வசதியும் இதனுள் உள்ளது.


பேஸ் புக் அமைப்பினைப் பொறுத்தவரை நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தும் வசதியை அது செய்துகொண்டே இருக்கின்றது. குறிப்பிட்ட இடத்தில் பேஸ் புக்கில் இணைந்தவர்களை அது அறிமுகம் செய்து கொண்டிருப்பதால் அவர்களுடன் தொடர்புகளை உருகாக்கிக் கொள்ளமுடிகின்றது. தன் விருப்பக் கடிதங்களை அளித்தால் அவர்கள் அதனை ஏற்றால் அவர்களும் நாமும் ஒரு கட்டுக்குள் வந்துவிடமுடியும். நம் நண்பர்களும் அவரின் நண்பர்களும் இணைந்து கொள்ளமுடியும். மேலும் ஒரு நண்பரின் தளத்தினை ஒரு சொடுக்கில் அடைந்து விடுகிற வசதியையும் இது தருகிறது.


பேஸ்புக்கிற்குள் ஒரு குழுவைக் கூட உருவாக்கிக் கொள்ள இயலும். இந்தக் குழு குழுவாகவே தனித்து இயங்கமுடியும்.


பொதுத்தன்மைகள்

டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றின் வருகை தனிமனித மின்னஞ்சல் தொடர்புகளை சமுகத் தொடர்புகளாக வளர்ச்சியடையச் செய்துள்ளன.


பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை என்பது இவையிரண்டிற்கும் மிகத் தேவையானதாகும்.


பின்பற்றுபவர்களின் வாயிலாக ஒரு ஊரிலோயோ அல்லது ஒரு நாட்டிலேயே உள்ளவர்கள் ஒருங்கிணைய இயலும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.

ஒரு நகரத்திற்குள் உள்ளவர்கள் இந்தச் செய்திகள் வாயிலாக அவரவர் இடத்திற்கு வருகின்றபோது அவரவரின் முகவரிகளை, இட வழிகாட்டுதல்களைக் கூட இவற்றின் வாயிலாகப் பெற இயலும்.


இவை அஞ்சல் போல செயல்படுவதால இணைப்பு இல்லாத நேரங்களிலும் இவை அனுப்பப்பட்ட செய்திகளாகக் கணக்கில் கொள்ளப்பட்டு இணைப்பு வந்தவுடன் சேரவேண்டியவருக்குச் சென்று சேர்கின்றன.


மேலும் இவற்றின் தகவல்களை எளிதாக கணினி இணைப்பு தவிர்ந்த நிலையில் அலைபேசிகளின் வழியாகப் பெற இயலும்.


இதுபோன்ற பல காரணங்களால் தமிழ் சமுகத்தினர் இந்த வசதியைப் பெற்று சமுதாய நிலையில் ஒன்றிணைய இயலும்.


உளவியல் அடிப்படையில் சமுகத்தளங்கள்

பெரும்பாலோனோர் சுய தகவல்களை உண்மை நிலையிலேயே அளிப்பதன் வாயிலாக இந்தத்தளங்களில் நாகதரீகத்தன்மை பேணப்பெற்று வருகின்றது.


எந்த நிலையிலும் இதன் வாயிலாகத் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்போது சுயவிபரம், சுயபுகைப்படம் ஆகியன அடையாளங்களாக அறிவிக்கப்படுவதால் உண்மைத்தன்மையுடன் இதன் பதிவர்கள் விளங்கவேண்டி இருக்கிறது.


பின்பற்றுநர்களின் மன அளவையும் புரிந்து கொண்டுப் பதிவர்கள் செயல்பட வேண்டி உள்ளது. இணையதளங்களை நிர்வகிப்பதில் இத்தகைய நிலை தேவையில்லை.


குறிப்பாக இதனைப் பயன்படுத்துவோர் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதை விட தன் கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றனர்.


ஆண், பெண் பாலின அடிப்படையில் பின்தொடர்வாளர்கள் பெண்களின் பக்கங்களில் அதிகமாக இருப்பதைக் காணமுடிகின்றது.


தேவையற்ற செய்திகளை அதிக அளவில் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக அவர்களின் வெறுமைத் தன்மை வெளிப்பட்டு விடுகின்றது. நேரக்கழிப்பிற்கான நிலையில் டிவிட்டரை, பேஸ்புக்கைப் பயன்படுத்தினாலும், அதனைத் தெளிவாக டிவிட்டர் செய்திகள், பேஸ் புக் செய்திகள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.


பிரபலமானவர்களின் கருத்துக்களை உடன் அறிந்து கொள்வதன் வாயிலாக மிகக் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுவதற்குக் கூட இதனுள் வாய்ப்புகள் உள்ளன.


இவ்வளவில் மேற்கண்ட சமுகத்தளங்களில் இணைவது என்பது மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலையில் செயல்பட வேண்டி உள்ளது என்பது மட்டும் உறுதி. அதனை நிர்வகிப்பது இன்னும் கடுமையானது என்பதும் உண்மை.


தனிமனிதரின் உளம் சார்ந்த அரசியல், சார்புடைய அரசியல், சாதியச்சூழல் போன்றன கூட இத்தளங்களின் வாயிலாக வெளிப்பட்டுவிடலாம்.


இணைய நிலையில் பேஸ்புக் தமிழ்த்தளத்தை உருவாக்கி வருவதாக அறியமுடிகிறது.அம்முயற்சி வெற்றி பெறவேண்டும். டிவிட்டரும் தமிழ்த்தளத்தை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

காப்பியங்களில் திருப்பு முனைகள்




தமிழன்னையின் அணிகலன்களாகக் காப்பியங்கள் விளங்குகின்றன. தமிழன்னையின் காற்சிலம்பாக சிலப்பதிகாரமும், இடையணியாக மணிமேகலையும், கழுத்தணியாகச் சீவக சிந்தாமணியும், வளையாக வளையாபதியும், காதொளிரும் குண்டலமாக குண்டலகேசியும் விளங்குகின்றன. இவைதவிர தமிழன்னை அணியும் மாலையாக தேம்பாவணி அமைகின்றது. இவ்வகையில் காப்பியங்களால் பெரிதும் வளம் பெற்றுத்திகழ்கிறாள் தமிழன்னை.


இக்காப்பியங்கள் நேரிய நெறிகளையும், கற்போருக்கு அரிய அறிவுரைகளையும் வழங்குவதோடுப் படிப்போருக்குப் பல்வகைச் சுவைகளையும் இணைத்தே வழங்குகின்றன. குறிப்பாக காப்பியக் களங்களில் உள்ள திருப்புமுனைகள் கற்போரைக் காப்பியத்தின் மீதுள்ள ஆர்வத்தை மிகுவிக்கின்றன. அடுத்து நிகழப்போவது என்ன என்பதை அறியச் செய்ய, அதன் முலம் கற்பவரை வியப்பில் ஆழ்த்த அவை காத்ததுக் கொண்டிருக்கின்றன.


சிலப்பதிகாரத்தில் சொற்களை எண்ணிப் எண்ணிப் பேசுகின்ற கண்ணகி மதுரையில் தன் கணவனுக்குத் தீமை நேர்ந்தபோது நேராகச் சென்று மன்னனிடம் நீதி கேட்கிறாள். இந்த முறைமை, நேர்மை அவளுக்கு எப்படி வாய்த்தது. அதிகம் பேசாத அவள் மன்னன் அவையில் மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்கும் நடைமுறைக்கு மாறியது எப்படி. இந்த மாற்றம் சாதாரணமாக உடனே நிகழ்ந்து விட முடியுமா.


மதுரை மாநகரத்திற்குள் கோவலன் சிலம்பினை விற்கச் செல்லுகிறான். கண்ணகி அவனை வழியனுப்பி விட்டு ஆயர் குலத்தாருடன் அமர்ந்திருக்கிறாள். ஆயர் மக்கள் வாழ்வில் அன்று பல தீக்குறிகள் ஏற்படுகின்றன. குடங்களில் இட்ட பால் உறையவில்லை. காளைமாடுகளின் கண்களில் கண்ணீர் வழிகிறது. வெண்ணெய் உருக்க முற்பட்டபோது அது உருகாது அப்படியே இருக்கிறது. அங்குமிங்கும் அலையும் ஆட்டுக்குட்டிகள் ஆடாது அசையாது நிற்கின்றன. இத்தீக்குறிகளைக் கண்டு ஆயர் குலத்தினர் அஞ்சி நிற்கின்றனர்.


மனம் மயங்கிப் போய் இருந்த அவர்களைத் தேற்றி மாதரி கவலைப் படாதீர்கள்.... நாம் அனைவரும் ஆயர் பாடியில் பலராமனுடன் கண்ணன் ஆடிய பாலசரிதை நாடகங்களை ஆடுவோம.... இதனால் துன்பம் தீரும் என்று கூறுகிறாள்.


அனைத்துப் பெண்களும் நாடகமாடத் தயாராகின்றனர். நின்ற பெண்களுள் எழுவரைத் தேர்ந்து அவர்களுக்குப் பெயர்கள் இடப் படுகின்றன. அவர்கள் காளைகளை வளர்ப்பவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். ஒருபெண் கண்ணனாக மாறுகிறாள். அவளுக்குத் துளசி மாலை சூட்டப்படுகிறது. ஆட்டம் தொடங்குகிறது.


அரக்கர்கள் கண்ணனை அழிக்கக் கன்றுக்குட்டியாகவும், மரங்களாகவும் வந்து நின்றனர். அவற்றைக் கண்ணன் அழித்தான்.


கடலைக் கடந்து அமுதம் ஏற்பட நல்லோர் வாழக் கண்ணன் உதவினான்.


பெண்கள் நீராடியபோது அவர்களின் ஆடைகளைக் கவர்ந்தான் மாயவன். அவர்களுள் ஒருத்திக் கண்ணனை மிகவும் நேசித்தாள். நப்பின்னை என்று பெயர் பெற்ற அவள் கண்ணனின் அருகிலும், பலராமனின் அருகிலும் சென்று சென்று கண்ணனின் அழகினைப் பருகினாள். இவர்கள் அனைவரும் கூத்தாடினர். அதுபோல் நாமும் ஆடுவோம். அவன் புகழ்பாடுவோம் என்று அவர்கள் பாடி ஆடினர்.


சோ அரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேகவன் சீர் கேளாத செவி என்ன செவியே?

மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை,நூற்றுவர் நாற்றிசையும் போற்றப்

படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை ஏந்தாத நாவென்ன நாவே?


என்றெல்லாம் நாட்டிய நாடகத்தை நடத்தி அந்த ஆயர் பெண்கள் தங்களுக்கு வந்த தீமையைப் போக்க முயன்றனர்.


இந்த ஆடலை, நிகழ்த்துக் கலையை ஆடாமல் அசையாமல் கண்ணகி கண்டு கொண்டிருக்கிறாள். கண்ணன் அரக்கர்களை அழித்தது, இராவணனை அழித்தது, பஞ்சவர்கள் நலம் பெற தூது நடந்தது இவற்றையெல்லாம் காட்சியாகக் கண்ட கண்ணகி நெஞ்சினில் தீமையை அழிக்க வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.


இந்நேரத்தில் ஒரு பெண் கோவலனுக்கு இழைக்கப் பெற்ற தீமை குறித்து ஓடி வந்து சொல்லுகிறாள். இதனைக் கேட்ட கண்ணகி மயக்குமுற்றக் கலங்குகிறாள். என்கணவனே என் கணவனே என்று கதறி அழுகிறாள். இனி நான் என்ன செய்வேன் என்று குமுறுகிறாள்.


கணவனை இழந்த பெண்கள் கைம்மை நோன்பு நோற்று வாழ்வதைப் போல மன்னவன் தவறிழைப்ப நான் துயருற்று வாழ்வதா?


கணவனை இழந்தபின் பாவங்களைத் தொலைக்க புண்ணிய தீரத்தம் ஆடும் மகளிர் போல் நான் ஆவேனா? மன்னவர் தவறிழைப்ப அறம் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவேனோ?


கணவர் இறந்தால் அவரின் உடல் தீயில்முழ்க கவலையே உருவான மகளிர் போல நான் வாழ்வேனா. மன்னவன் தவறிழைப்ப இம்மையில் பழி கொண்டு, மறுமையிலும் வாழ்வின்றி நான் வாழ்வேனா?


குரவை ஆடிய மகளிரே! கேளுங்கள்! என் கணவன் கள்வனா? காய்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா? என்று கலங்கி மொழிகிறாள் கண்ணகி.


அப்போது ஒரு குரல் உன் கணவன் கள்வன் அல்லன். இந்த ஊரைப் பெருந்தீ உண்ணப் போகிறது என்று கூறியது.


கண்ணகி அறத்தினை முன்னிறுத்தி மன்னவனை நீதிக் கேட்கப் புறப்படச் செய்வதற்கு ஆயர் மகளிர் ஆடிய ஆடல்கள் காரணமாக இருந்தன. கண்ணகிக்கு இவர்களின் ஆட்டம் நீதி கேட்க, நியாயத்தை நிலை நிறுத்த உதவியுள்ளது. மிகப் பெரிய திருப்பு முனையை இந்த ஆய்ச்சியர் குரவை சிலப்பதிகாரத்தில் நிகழ்த்தியுள்ளது.


மணிமேகலைக் காப்பியத்திலும் ஒரு திருப்புமுனை அதன் போக்கில் மாற்றத்தினை உண்டாக்கிவிடுகிறது. ஆடல் மகளாக வாழவேண்டிய மணிமேகலையை அறத்தின் செல்வியாக மாற்றிவிடுகிறது.


மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவினுக்கு அழைத்துப்போகிறது. அப்போது அங்கு மணிமேகலை தன் பழைய பிறவி பற்றி அறிந்து கொள்ளுகிறாள். முன்னாளில் இராகுலனும் இலக்குமியாகவும் வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் அசோக குமரனாகவும், மணிமேகலையாகவும் தோன்றியிருத்தலை அவள் அறிகிறாள். தன் மீது மோகம் தோன்ற இப்பழைய தொடர்பே காரணம் என மணிமேகலை அறிந்து கொள்கிறாள்.


தற்போது மணிமேகலையின் முன் முன்று வாழ்க்கைகள் நிற்கின்றன. ஒன்று பழைய பிறவியின் தொடர்வாக காதலை ஏற்று இல்லறம் மேற்கொள்வதா? அல்லது ஆடல் மகளாக தன் வாழ்வினைத் தொடர்வதா? அல்லது அறத்தின் செல்வியாக துறவிலேயே நிற்பதா? என்ற இந்த முன்று வழிகளில் அவள் துறவின் தூய்மை கருதி அறவாழ்வினை மேற்கொள்ளத் துணிகிறாள்.


இந்த வாழ்விற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமுதசுரபி அவள் கரங்களுக்குக் கிடைக்கிறது. தீவதிலகை என்ற புத்தபிரானின் பாதபீடிகையைக் காத்துவரும் பெண்ணின் முலமாக மணிமேகலை அமுதசுரபியைப் பற்றி அறிந்து கொள்ளுகிறாள்.


கோமுகி என்னும் பொய்கை நம்முன் உள்ளது. இப்பொய்கையில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தின்போது அமுதுசுரபி என்ற பாத்திரம் தோன்றும். ஒருகாலத்தில் ஆபுத்திரன் கையில் இருந்த இப்பாத்திரம் அக்காலத்தில் அன்னமளிக்கும் அறத்தைத் திறமுடன் செய்தது. ஆனால் தற்போது இது பெறுவார் யாருமில்லை. மணிமேகலையே நீ இப்பாத்திரத்தைத் தற்போது பெற்று உலகிற்கு உணவளிப்பாய் என்று அவள் கூறினாள்.


இதனைக் கேட்டதும் தான் கொண்ட துறவு வாழ்வில் அறம் மேலும் கூடுவதற்கான வாய்ப்பாக இந்த வாய்ப்பினை மணிமேகலைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தாள். புத்தபீடிகையை வணங்கிப் புத்தபிரானைப் பலவாறு போற்றிப் பொய்கையில் கிடைத்த அமுதசுரபிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அறக்கட்டளையை தீவதிலகை உணர்த்துகிறாள்.


மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்

கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்

(பாத்திரம் பெற்ற காதை 9599)

இவ்வகையில் பசிபோக்கும் உயிர்ப்பணியை மணிமேகலை ஏற்றுக் கொள்ள இந்தத் திருப்புமுனை உதவியுள்ளது.


சீவகனின் வாழ்வில் அவன் தன் ஆசிரியனைக் கண்டபோது


அவன் வாழ்வில் ஒரு திருப்புமுனை நேர்கிறது.

தெருமந்து மயங்கி வீழ்ந்தான் திருமலர்க்கண்ணி

மாரமுங் குழையச் சோரச் சொரிமலர்த்தாரும் பூணு

நீயெனப் பேச லோடும் பெரியவன் யாவனென்ன

பிறப்பினைத் தேற்றியாங்கக் கரியவன் கன்னற் கன்று


என்று இதனைச் சீவக சிந்தாமணி செய்யுள் குறிப்பிடும். யானைப்பசி நோயில் இருந்த சீவகனின் ஆசிரியர் நந்தட்டன் சீவகனைக் கண்டதும் அவரின் நோய் நீக்கப் பெறுகிறார். மாணவரைக் கண்டால் அந்த காலத்தில் வயிற்றவலி நீங்கியிருக்கிறது. இதன்பின் ஆசிரியர் சீவகனின் வரலாற்றை அவனறியும்படி எடுத்துரைக்கிறார். இதனைக்கேட்ட சீவகன் இது யார் வரலாறு என்றதும், உன் வரலாறு என ஆசிரியர் சொன்னதும் மயக்கமடைகிறான். பின் தெளிவு பெற்று ஆசிரியரின் வழிகாட்டலுடன் தன் பழைய நிலையை அடைவதற்கு உரிய வழிவகைகளைக் கண்டுப் பின் அவற்றின் வழி நடந்து வெற்றி பெறுகிறான்.


வளையாபதி , குண்டலகேசி ஆகிய நூல்கள் முழுமையும் கிடைக்கவில்லை. மேற்கோள்களாகக் கையாளப்பெற்ற சில பாடல்களே தற்போது கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு இவற்றின் திருப்புமுனை பற்றி அறியவேண்டி இருக்கிறது.


நவகோடி நாராயணன் என்பவன் வளையாபதியின் காப்பியத்தலைவனாகக் கருதப்படுகிறான். இவன் முன் ஒரு பெண்ணை மணம் புரிந்தான். பின்பு மற்றொரு பெண்ணை இவன் மணம் முடிக்கிறான். இப்பெண் தாழ்வான குலத்தவள். இவளை இவன் மணந்தமையால் தன் குலத்தாரால் இவன் இகழப்படுகிறான். இச்சூழலில் இரண்டாம் மனைவியின் மகன் தன் தந்தையையும் தாயையும் இணைத்து வைத்து வெற்றி பெறுகிறான். இதுவே இக்காப்பியத்தின் கதையாகும்.


இக்காப்பியத்தில் இணைவிழைச்சு என்ற பகுதியில் சில பாடல்கள் அமைந்துள்ளன. அதில் பின்வரும் பாடல் ஒன்று.


சுன்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்

ஆன்றாங்கு அமைந்த குரவர்மொழி கோடலீயார்

வான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர் காமன்

தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயினக்கால்


அதாவது மிக்க காமத்து இயல்பால் சான்றோர் பழிப்பு ஏற்படும். மேலும் சுற்றம் இழந்து தனிப்படுவர். ஆசிரியர்களும் தூற்றுவர். வான் போன்று வளர்ந்து இருந்த புகழ் கூடக் கெடும் என்று காட்டும் இப்பாடல் வளையாபதியின் திருப்பு முனைப்பாடலாகக் கருதத்தக்கது.


சத்துவான் என்பவன்தான் குண்டலகேசிக் காப்பியத்தின் தலைவனாகக் கொள்ளப் பெறுகிறான். தலைவியாகக் குண்டகேசி அமைகிறாள். கள்வனான சத்துவனைக் காதலித்துக் கரம்பிடிக்கும் குண்டலகேசி அவனாலேயே அழிக்கப்படும் சூழல் வந்துற்றபோது அவனை இறப்பினுக்கு ஆளாக்கி சதி செய்வார்க்குச் சதி செய்கிறாள். இந்தப் பின்னணியில் பின்வரும் ஒரு பாடல் குண்டலகேசியில் அமைகிறது. இப்பாடலைக் குண்டலகேசியின் திருப்புமுனைப்பாடலாகக் கொள்ளலாம்.

சூவரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்தும்

துரித்தலாகா வகையாற்கொலை சூழ்த்த பின்னும்

பூரித்தல் வாடுதலென்று இவற்றாற் பொலி வின்றிநின்றான்

பாரித்த தெல்லாம் வினையின்பயனென்ன வல்லான்

(குண்டலகேசி 19)

இப்பாடலில் குண்டலகேசியின் கணவன் குற்றம் சாட்டப்பெற்று நின்ற நிலை எடுத்துரைக்கப்படுகிறது. இவன் வினைப்பயன் காரணமாகவே தனக்கு சிறைசெய்தல், உயிர் துறக்க வைத்தல் போன்றன நடைபெறுகின்றன என்பது உணர்ந்து அவன் கலங்காமல் நின்றான் என்பதுபோல இப்பாடலுக்குப் பொருள் கொள்ள இடம் உள்ளது. குண்டலகேசிக்குச் சத்துவானிடம் காதல் பிறந்திட இதுவே காரணம் என்பதால் இப்பாடல் திருப்புமுனைப்பாடலாகின்றது.


இவ்வாறு காப்பியத்தின் கட்டமைப்பில் உயரிய இடத்தைக் காப்பியத்திருப்பு முனைகள் பெற்று நிற்கின்றன. இவற்றின் போக்கால் காப்பியங்களுக்கு சுவைத்தன்மை கூடுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் கண்ட இந்தத் திருப்புமுனைப்போக்கு மற்ற காப்பியங்களிலும் காணத்தக்கது. இவற்றைக் காணுவதன் முலம் காப்பிய உலகம் செழுமை பெறும்.

ஞாயிறு, அக்டோபர் 03, 2010

சங்கத் தேய்வு இலக்கியம் - திணைமாலை நூற்றைம்பது.



திணைமாலை நூற்றைம்பது என்னும் அக நூல் சங்க இலக்கியச் சார்புடன் படைக்கப் பெற்றுள்ளது. இதன் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அகம், புறம் என்ற பாடுபொருள் கடந்து பல பாடுபொருள்கள் வந்ததன்பின் சங்க இலக்கிய மரபைப் போற்றும் வகையில் இந்நூல் பாடப் பெற்றுள்ளது.

முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்

கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்

இணைமாலை ஈடிலா இன்தமிழால் யாத்த

திணைமாலை கைவரத் தேர்ந்து

என்னும் பாயிரப் பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று களவியல் கொள்கையை நிறுத்த இந்நூல் யாக்கப் பெற்றுள்ளது. ~~முனிந்தார் முனிவொழிய || என்பதனால் சங்கக் காதல் மரபு, களவுக் கொள்கை சிலரால் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தில் மறுத்துரைக்கப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. மறுத்துரைத்தவர்களும் ஏற்கும் வண்ணம் களவினை நிறுத்தப் பாடியது திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலாகும்.

குறிப்பாக ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை போன்ற நூல்கள் சங்க இலக்கிய அடிப்படை வாய்ந்தவையே. இருப்பினும் திணைக்குப் பதினான்கு பாடல்கள் என்ற நிலையில் பாடப்பட்டது ஐந்திணை ஐம்பது ஆகும். திணைக்குப் பத்துப்பாடல்கள் வீதம் பாடப்பட்டது ஐந்திணை ஐம்பது என்பதாகும். இதுபோன்றதே திணைமொழி ஐம்பது என்பதும் ஆகும். திணைமாலை நூற்றைம்பது என்பது திணைக்கு முப்பது பாடல்கள் என்ற நிலையில் பாடப்பட்டது ஆகும். கைந்நிலை என்பதும் நாற்பது பாடல்கள் கொண்ட தொகுப்புநூலாகும். இவ்வடிப்படையில் காணுகின்றபோது திணைக்கு இத்தனைப்பாடல்கள் என்ற நிலையில் வரையறுத்து எழுதப் பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. மேலும் அகப்பாடல்களின் எண்ணிக்கை குறுகிய அளவுடையது என்பதும் தெரியவருகிறது. மொத்தத்தில் எழுபது, ஐம்பது, ஐம்பது, நூற்றைம்பது, நாற்பது என்ற நிலையில் முன்னூற்று அறுபது பாடல்கள் மட்டுமே அகச்சார்புடைய பாடல்களாக பதினெண் கீழ்க்கணக்கு என்ற பகுப்பில் அமைந்துள்ளமை பாடல்கள் குறைவுபட்டுள்ளமையை எடுத்துரைப்பதாகும். மேலும் புறம் என்ற நிலையில் களவழி நாற்பது என்ற நாற்பது பாடல்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே இவ்வெல்லையில் கிடைக்கின்றது.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்கையில் நாடக வழக்கு, உலகியில் வழக்கு என்ற நிலையில் நாடக வழக்கு அடிப்படை வாய்ந்தது சங்க அக, புற மரபு. உலகியல் வழக்கு சார்ந்தது பதினெண் கீழ்க்கணக்கு காலம். எனவே உலகியலைப் பாடும் போக்கு சங்கப் பிற்காலத்தில் ஏற்பட்டதால் நாடக வழக்குப் புறம் தள்ளப் பெற்றுள்ளது என முடியலாம்.

எனவே எண்ணிக்கை அளவில் மிகக்குறைவானதாகவே அகப்பாடல்கள் இக்காலத்தில் இருந்துள்ளமை தெரியவருகிறது. சங்க அகப்பாடல்களுக்கு இருந்த மதிப்பு குறைவுபட்டிருப்பதை இச்செய்தி தெளிவுபடுத்துகின்றது. மேலும் திருக்குறள், நாலடியார், கைந்நிலை போன்றவற்றில் அகம் பாடும் மரபு இருந்துள்ளது. இவற்றை நோக்குமிடத்து இவை பாடல் பொருளில் குறைவுபட்ட நிலையிலேயே உள்ளன என்பதும் கருதத்தக்கது.

இதனால் சங்க அக மரபினை மீட்டெடுக்கும் முயற்சிக்காகத் திணைமாலை நூற்றைம்பது என்பது எழுதப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. சங்கப் பாடல் மரபிற்கும் இக்கால அகப்பாடல் மரபிற்கும் பெருத்த வேறுபாடு என்பது யாப்பு வடிவமே ஆகும். சங்க மரபில் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன அகம் பாடுதற்கு உரியனவாக இருந்தன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தில் வெண்பா இந்த இடத்தைப் பெற்றுள்ளது.

மேற்பாடலில் அமைந்துள்ள கணிந்தார் என்ற குறிப்பு கணிமேதாவியார் என்பவர் எழுதியது இந்நூல் என்பதை நிறுத்துவதாகும். இவர் ஏலாதி என்னும் நூலையும் எழுதியவர் ஆவார். இவர் மதுரையில் வாழ்ந்த தமிழாசிரியர் மாக்காயனார் என்பவரிடம் தமிழ் பயின்றவர் ஆவார். இவர் மதுரையைச் சார்ந்தவர் என்பதும், வைணவ கதைகளையும், நெறிமுறைகளையும் உணர்ந்தவர் இவர் என்பதும் இவரின் திணைமாலை நூற்றைம்பது வழியாகத் தெரியவருகின்றது.

குறிஞ்சி (31 பாடல்கள்), நெய்தல் (31 பாடல்கள்), பாலை(முப்பது பாடல்கள்), முல்லை(31 பாடல்கள்), மருதம்(முப்பது பாடல்கள்) என்ற நிலையில் பாடப்பட்ட இந்நூலில் மொத்தம் நூற்றைம்பத்து மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. திணை வரையறுக்கப் பெற்றது போலவே இப்பாடல்களுக்குச் சங்க இலக்கிய வழியில் துறைகளும் வகுக்கப் பெற்றுள்ளன.

இப்பாடல்களில் உரிப்பொருள் வரையறை சரிவரப் பின்பற்றப்படவில்லை. இரவுக்குறி மறுத்தல் என்பதாகக் குறிஞ்சிப் பாடல்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. நெய்தல் பாடல்கள் இரங்கல் என்ற உரிப்பொருளைத் தாண்டி கூட்டம் என்ற குறிஞ்சிப் பொருளையே பெரிதும் பெற்றுள்ளன. பாலைப் பாடல்கள் ஓரளவிற்கு உரிப்பொருள் எல்லையைக் கடக்கவில்லை. மருதப் பாடல்கள் பெரும்பாலும் பரத்தையர் பிரிவு பற்றியனவாகவே கற்பு சார்புடையனவாகவே காட்சி தருகின்றன. முல்லைப் பாடல்கள் பருவ வரவு குறித்து அதிகம் பாடியுள்ளன. இவ்வளவி;ல் இவற்றின் உரிப்பொருள் நிலை அமைந்துள்ளது.

இலக்கியச் சுவையளவில் சொற்செட்டும், கற்பனை நயமும் கருதத்தக்கன. இவ்வகையில் நீதி நூல்களின் காலத்தில் களவு, கற்பு நெறியை மீட்டெடுக்கும் முயற்சியை வெற்றிகரமாக திணைமாலை நூற்றைம்பது செய்துள்ளது என்பது பாராட்டுதற்கு உரியது.

இந்நூலில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று தமர் குறித்து அஞ்சுவதாகத் தலைவி கூற்றாகப் பாடப் பெற்றுள்ளது.

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நாட

கோள்வேங்கை பொற்கொடியார் என்ஐயன்மார்- கோள்வேங்கை

அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்கு

என்னைக்கு நாளை எளிது ( 19)

இப்பாடலில் புலி போன்ற தமர் எதிர்ந்தால், புலி போன்ற தலைவனும் எதிர்வான். இதன் காரணமாகப் போர் ஏற்படும் என்ற அச்சத்தினால் தலைவி தலைவன் தந்த கையுறையை மறுக்கின்றாள். இதன் வழியே களவிற்கு அக்காலத்தில் இருந்த எதிர்த்தன்மை தெரியவருகின்றது.

பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது

இரவுவரின் ஏதமும் அன்ன - புகஅரிய

தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே

ஏழை நுளையர் மகள் ( 59)

என்ற நெய்தல் பாடலில் பகற்குறி, இரவுக்குறி இரண்டையும் மறுத்துத் தோழி உடனே திருமணம் புரிந்து கொள்ளத் தலைவனை வற்புறுத்துகின்றாள். நெய்தலின் இரங்குதல் உரிப்பொருள் கடந்து, வரைவு கடாவும் போக்கில் இப்பாடல் பாடப் பெற்றுள்ளது.

பாலைப்பாடல் ஒன்றில் நயத்தக்க நாகரீகப் பாங்கு எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவெல்

எண்ணிய எண்ணம் எளிதரோ - எண்ணிய

வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் கண்டாளாம்

தண்சுடர் அன்னாளைத் தான். ( 89)

சூரியன் போன்ற தலைவனை நான் கண்டேன். சந்திரன் போன்ற தலைவியை இவள் பார்த்தாளாம். இவர்களை அடைய வேண்டுமானால் விரைந்து செல்க என்று கூறும்பொழுது தலைவன், தன் தலைவி அன்றி வேறொருவரைப் பாரான், தலைவி தன் தலைவன் அன்றி வேறொருவரைப் பாராள் என்ற நாகரீகத் தன்மை வெளிப்பட்டு நிற்பதை உணரமுடிகின்றது.

முல்லை நிலத்தலைவி ஒருத்தி தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். அவள் கொடிகளுடனும், பூக்களுடனும் உரையாடும் உரையாடல் பின்வருமாறு.

குருந்தே கொடிமுல்லாய் கொன்றாய் தளவே

முருந்தேய் எயிறொடுதார் ப+ப்பித்து - இருந்தே

அரும்பு ஈர் முலையாள் அணிகுழல் தாழ் வேய்த்தோள்

பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து (116)

இப்பாடல் கவிஞர் வாணிதாசனின் காவியத்திற்குப் பெயர் தந்துள்ளது (கொடிமுல்லை). கம்பன் படைத்த இராமனின் பருவம் கண்டு இரங்குதலுக்கு வழிவகுத்துள்ளது. தலைவியின் உடலில் பீர்க்கம்ப+ ப+த்ததாம் . மலர்களைக் கண்டுத் தலைவி இரங்கியதால் இப்ப+க்கள் தலைவியின் உடலிலும் ப+க்களைப் ப+க்கச் செய்துவிட்டதாம்.

மருதத்தலைவி ஒருத்தி பாணனைப் பின்வருமாறு வைகின்றாள்.

பாலையாழ் பாண்மகனே பண்டுநின் நாயகற்கு

மாலையாழ் ஒதி வருடாயோ- காலையாழ்

செய்யும் இடமறியாய் சேந்தா நின் பொய்ம்மொழிக்கு

நையும் இடமறிந்து நாடு. (133)

பாணன் தலைவன் பரத்தையுடன் கூடியபோது மாலைப் பண்ணைப்பாடி அவர்களை மகிழ்வித்தான். பின்பு தலைவியின் ஊடலைத் தீர்க்கக் காலையில் யாழ் மீட்ட வந்துற்றான். ஆனால் அவனின் பண் தலைவியால் மறுத்துரைக்கப்பட்டு வாயில் மறுக்கப்பட்டது. இது வெல்லும் இடமறிந்து செல்க எனத் தலைவி கூறுவதாகப் பாடல் பாடப்பெற்றுள்ளது. இப்பாடலில் யாழ் பாலையாழ் எனப்பட்டுள்ளமை கருததக்கது. இவ்வகையில் திணை மயக்கமாகப் பல செய்திகள் திணைமாலை நூற்றைம்பதில் இடம் பெற்றுள்ளமை தெரியவருகிறது. குறிப்பாக உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெருமே என்ற நிலை கூட நிலைப்படுத்தப்படாமல் அவையும் மாறி அமையும் போக்கு திணைமாலை நூற்றைம்பதில் காணப்படுகிறது. சங்க மரபுகள் சங்கம் மருவிய காலமான பதினெண் கீழக்கணக்குக் காலத்தில் பின்பற்றப் பெற்றாலும் அவை சங்க காலத்தின் அளவிற்கு முற்றிலுமாக இடம் பெறவில்லை என்றே முடியமுடிகின்றது.

கலித்தொகை போல நூற்றைம்பது பாடல்களைக் கொண்டு இது பாடப் பெற்றாலும் அனைத்துத் திணைகளும் ஒருவராலே பாடப்படுதல், வெண்பா யாப்பில் அமைதல், உரிப்பொருள் மயக்கம் போன்றவற்றால் சங்கத் தேய்வு இலக்கியமாக திணைமாலை நூற்றைம்பதினைக் கொள்ளமுடிகின்றது.