ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவை விழா




இன்று (19.09.2010)உலகத்திருக்குறள் பேரவையின் முப்பெரும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் நல்லாசிரியர் சிவாஜி தலைமையேற்றார். இதில் வால்ட் விட்மன் கவிதை உலகம் பற்றி லியோ ஜோசப் அவர்களும், திருக்குறள் புதிய சிந்தனைகள் பற்றி ஜெகந்நாதன் அவர்களும், பாரதி பற்றி தங்கம்மூர்த்தி அவர்களும் உரையாற்றினர். மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற திரு கஸ்தூரி நாதன் அவர்களும், திரு சுப்பிரமணியன் அவர்களும் பாராட்டப் பெற்றனர். மேலும் இவ்விழாவில் திலகவதியார் ஆதீனகர்த்தர் அவர்களும் கலந்து கொண்டுச் சிறப்பி்த்தார்கள்

பாரியின் மகள் ஒருத்தியே


சங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்து பாடிய பாடல்கள் அதிகமாக இல்லை என்றே கருதலாம். இருவர் இணைந்து பாடியதாக ஒரு பாடல் குறிப்பிடப்படுகிறது. பாரி மகளிர் பாடிய புறநானூற்றின் 112 ஆம் பாடல் இவ்வகையில் அமைந்ததாகும். இருப்பினும் இந்தப்பாடல் இருவரால் பாடப் பெற்றதா என்ற கேள்வி சிந்தனைக்கு உரியதே ஆகும்.


பாரி குறித்தும், பாரி மகளிர் குறித்தும் அறிந்து கொள்ள புறநானூற்றில் மட்டும் இருபத்தேழுக்கு மேற்பட்ட பாடல்கள் கிடைக்கின்றன. கபிலர், ஒளவையார், பரணர், மறோகத்து நப்பசலையார் போன்ற பல புலவர்கள் பாரி குறித்தும், பாரி மகளிர் குறித்தும் பாடல்களைப் பாடியுள்ளனர். இவற்றில் இருந்துக் கிடைக்கப்பெறும் பாரி மற்றும் பாரி மகளிர் பற்றிய செய்திகள் பல இலக்கியங்களின் பாடுபொருளுக்கு ஆளாகியுள்ளன.


பழமொழி, புறப்பொருள் வெண்;பாமாலை, சுந்தர மூர்த்தி தேவாரம், தஞ்சைவாணன் கோவை, திருப்புகழ், வில்லிபாரதம், அண்ணாமலையார் சதகம், தமிழ் நாவலர் சரிதை, நந்திக்கலம்பகம் போன்ற பல பனுவல்களில் பாரி, பாரி மகளிர் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் தொல்காப்பியச் செய்யுளியல் பேராசிரியர் உரையிலும், யாப்பெருங்கல விருத்தி, யாப்பெருங்கலக்காரிகை போன்றவற்றின் மேற்கோள் பாடல்களிலும், கல்வெட்டுச் செய்திகளிலும் பாரி, பாரி மகளிர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. ( ரா. ராகவய்யங்கார், பாரிகாதை, பக் 485-487) ரா. ராகவய்யங்காரின் பாரிகாதை மேற்காட்டிய செய்திகளின் அடிப்படையில் புனையப்பெற்ற காப்பியம் ஒன்றும் உருவாகியுள்ளது. (1937) இந்த அளவிற்கு ஆழமும் அழுத்தமும் உடையதாக பாரி என்ற அடிக்கருத்து தமிழ் இலக்கிய உலகில் எடுத்தாளப் பெற்றுள்ளது.


பாரி வள்ளல் பறம்பு மலையை மையமாகக் கொண்டு ஆண்ட வள்ளல் ஆவார். முல்லைக் கொடி பற்றிப்படரத் தன் தேரையே கொழு கொம்பாக ஆக்கித் தந்த வள்ளல் இவர் ஆவார். இவருக்கும் தமிழகப் பெரு வேந்தர்களான மூவேந்தர்களுக்கும் பகை மூண்டிட இதன் காரணமாக போரில் பாரிவள்ளல் உயிர் நீத்தார். பாரியின் இறப்பிற்கு வஞ்சனையும் காரணம் என்று கூறுவர். பாரி இறந்தபின் அவரின் மக்கள் இருவர் அங்கவை, சங்கவை என்போர் காப்போர் இன்றி வருந்தியமையால் பாரியின் நண்பரான கபிலர் என்னும் புலவர் இவர்களைக் காத்துவந்தார். பின்னாளில் இவர்களுக்கு மணம் முடிக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டார். குறுநில மன்னர்களான விச்சிக்கோன், இருங்கோவேள் போன்றாரிடம் சென்று இம்மக்களைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்தபோது இம்மன்னர்கள் மூவேந்தரின் பகை ஏற்படும் என்பது கருதி மறுத்துவிட்டனர். பாரி மகளிரின் ஏழ்மை நிலை கருதி மணக்க மறுத்தனர் என்ற கருத்தும் உண்டு. பின்பு கபிலர் இம்மகளிரை அந்தணர்கள்பால் இருத்திவிட்டுப் பொருள் தேடச் சென்று சேரமன்னனிடம் பொருளும், வளம் மிக்க ஊர்களும் பெற்று வந்து இப்பெண்களை கடையெழு வள்ளல்களில் ஒருவரான திருக்கோவலூர் மன்னன் காரியின் மகன்கள் இருவருக்கும் தந்து நின்றதாகச் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறியமுடிகின்றது.


சங்கப்பாடல்களுக்குப் பின் தோன்றிய தனிப்பாடல்கள் வாயிலாக பாரி பற்றியும் பாரி மகளிர் பற்றியும் பல செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஓளவையார் இம்மகளிர் பற்றிப் பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இம்மகளிர் வறுமையுற்றபோதும் நீலச் சிற்றாடையை ஒளவைக்கு வழங்கிய காரணத்தால் ஒளவை இவர்களிடம் மிக்க அன்பு ப+ண்டு இவர்களின் திருமணத்திற்கு உதவியதாக வரலாறு நீள்கிறது. இதன் தொடர்வாக மூவேந்தரையும் அழைக்கத் திருமண ஓலை எழுத விநாயகர் வந்ததாகவும், வந்தோர்க்கு நெய், பால் முதலியன தடையின்றிக் கிடைப்பதற்காக பெண்ணை ஆற்றில் பால், நெய் ஆறாக ஓடச்செய்ததாகவும், திருமணத்திற்கு மூவேந்தர்களும் வந்தபோது பந்தலி;ல் கிடந்த பனந்துண்டத்தை வளரச் செய்ததாகவும் பல செய்திகள் கிடைக்கின்றன. இவ்வகையில் பாரிமகளிர் மணம் பெற்ற வரலாறு நிறைவுபெறுகிறது.


இவ்வரலாற்றின் தொடக்கமாக அமைவதும், பாரி மகளிரின் திறம் உரைப்பதாக அமைவதும் அவர்கள் பாடிய புறநானூற்றுப் பாடல் ஆகும். இப்பாடலைப் பாடியவர்கள் இருவர் என்பதாக அனைத்து உரையாசிரியர்களும் பாரிமகளிர் என்று குறிப்பிட்டுள்ளனர். பாரிமகளிர் இருவரா என்பது ஐயத்திற்கு உரியதாகும்.


இருவர் என்பதனைக் காட்டுவதாக கபிலர் பாடல்கள் அமைகின்றன.


இவர் யார் என்குவையாயின் இவரே

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈந்த செல்லா நல்இசை

படுமணி யானை பறம்பின் கோமான்

நெடுமாப் பாரிமகளிர் (புறநானூறு 201)

என்று கபிலர் இருங்கோவேளிடம் அறிமுகம் செய்கின்றார். இப்பாடலில் உள்ள மயக்கம் இவர் என்பது ஒருமையா, பன்மையா என்பதுதான். மேலும் இப்பாடலில் வந்துள்ள பாரிமகளிர் என்பது பன்மையால் வந்தது அல்ல என்று கொண்டால் ஒருவரா, இருவரா என்ற ஐயம் மேலும் வலுப்பெறும்.



விச்சிக் கோனிடத்தில் அறிமுகம் செய்கையிலும் கபிலர்

. . .நெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த

பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் (புறநானூறு 200)


என்ற பாடலிலும் மகளிர் என்பது காட்டப் பெற்றுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் எல்லாம் பாரிமகளிர் என்ற பன்மை இடம் பெறவில்லை.


காரிக்கு இருமகன்கள் இருப்பதாகக் கொண்டாலும், அதில் ஒருவன் பெயர் மட்டுமே அறியத்தக்கதாக உள்ளது. திருக்கண்ணன் என்பது அவன் பெயராகும். மேலும் வறுமை காரணமாக ஒரு இரவலன் வந்தபோது பாரியின் மகள் ஒருத்தி அவனுக்கு அரிசி இல்லாத நிலையில் பொன்னை உலையில் இட்டுப் படைத்தாள் என்ற ஒரு தனிப்பாடலும் உள்ளது. இவற்றைப் பார்க்கையில் பாரி மகளிர் ஒருவரா, இருவரா என்ற கேள்வி மேலும் வலுப்பெறுகிறது. இது ஆராயத்தக்கது.


பாடலை எழுதியவரின் பெயரை ஏன் பாரி மகளிர் என்று குறிப்பிடவேண்டும். பெண்ணிய ஆய்வாளர்கள் ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர். அதாவது ~~ நீ யார் || என்பதே அக்கேள்வியாகும். இதற்குப் பதிலாக அனைத்துப் பெண்களும் சொல்வது மணமாகத பெண்ணாக இருந்தால் ~~ நான் இன்னாரின் மகள்|| என்பதும், மணமான பெண்ணாக இருந்தால் ~~ நான் இன்னாரின் மனைவி|| என்றும் பதில் கூறுவர். இருப்பினும் இது சரியான பதில் இல்லை. கேட்கப் பெற்ற கேள்வி வேறு. கிடைத்த பதில் வேறு. நீ யாருடைய பெண் என்றோ, நீ யாருடைய மனைவி என்றோ கேள்வி எழுப்பப்படவில்லை. ஆனால் இக்கேள்விகளுக்கான பதில்தான் அளிக்கப் பெற்றுள்ளது. சரி மீண்டும் இந்தக்கேள்வியை எழுப்பினாள் இதற்கு என்ன பதில் சொல்லமுடியும். பதி;ல் வெறுமைதான். ஆண்கள் போல கண்களும் காதுகளும், அறிவும் எல்லாமும் படைத்துள்ள பெண்களால் இந்தக் கேள்விக்கு உரிய பதிலை அளிக்க முடியாத சூழல் உள்ளது. ஆணிடம் இதே கேள்வியைக் கேட்டால் நான் ஒரு படைப்பாளர், நான் ஒரு தொழிலதிபர், நான் ஓர் ஆசிரியர், நான் ஓர் அரசியல்வாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளமுடிகின்றது. ஆனால் ஆண் அளவிற்கு வளர்ந்துவிட்ட நிலையிலும் பெண் என்பவள் ஆண் சார்புபடவே அறிமுகப் படுத்தப் படுகிறாள் என்பதை எண்ணும்போது அவளின் காட்சி, கேள்வி, அறிவு அனைத்தும் பயனற்றதாகி நிற்கின்றன என்பதே உண்மை. இந்த வெறுமையைப் போக்க பெண்களும் முன்னேற வேண்டும் என்று பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். ( இந்தியாவில் நான் யார் என்ற கேள்வி அனைத்து உயிர்களுக்குமான கேள்வியாகி அந்தக் கேள்வியின் பதில் அடையாளமில்லாத ஒன்றாகக் கொள்ளப் பெற்றிருப்பதும் தத்துவநிலைப்பட்டதாக உள்ளது. இதைத்தாண்டி ஆணிற்கு உள்ள அடையாளம் கூட பெண்ணிற்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்)



புறாநானூற்றின் 112 ஆம் பாடலைப் பாடியவர் என்ற குறிப்பிற்குப் பாரி மகளிர் எனப் பதிவு செய்யப் பெற்றிருக்கிறது. நீ யார் என்ற கேள்வியின் வெறுமைப் பதிலை இந்த இடத்தில் உணர முடிகின்றது. இயற்பெயர் உள்ள புலவர்களுக்கு இயற்பெயரை வைத்துத் தொகுத்தப் புறாநானூற்றுத் தொகுப்பில் இந்தப் பாடலைத் தொகுக்கும்போது மட்டும் ஏன் இயற்பெயர் தரப்பெறவில்லை. இயற்பெயர் தந்திருக்கப்படின் பாடியவர் ஒருவரா இருவரா என்று அறியப் பெற்றிருக்க முடியும். மேலும் முன்னர் சுட்டியதுபோல பெண்ணை இன்னாரின் மகள் என ஏன் அறிவிக்க வேண்டும். அவளுக்கு என்று ஏதும் அடையாளமில்லையா என்ற கேள்வியின் ஆழம் அதிகமானதாகும்.


இத்தனைச் சிந்தனைகளுக்கும் களமாக உள்ள பாரிமகளிர் பாடிய பாடல் பின்வருமாறு.


அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்: யாம் எந்தையும் இலமே (புறநானூறு 112)


பாடியோர் : பாரிமகளிர்.

திணை : பொதுவியல்

துறை : கையறுநிலை

இப்பாடலில் இடம் பெற்றுள்ள யாம், எந்தை, எம், ஏம் ஆகிய சொற்கள் பன்மை நிலைப்பட்டனவாகத் தோன்றுகின்றன.


பெண்ணெழுத்துத் திறனாய்வின்படி பெண்எழுத்தின் தனித்தன்மையாக பெண்ணியலாளர்கள் கருதுவது பெண்கள் எழுதுகையில் பெரும்பாலும் பன்மை நிலைப்பட்டே எழுதுவர் என்பதாகும். ரோஜர் ஷைஸ் என்பவர் பெண்களின் எழுத்தில் அதிகஅளவிலான மறுப்புத் தன்மை, மறுபெயர் சார்ந்த பொருத்தம், பன்மை, படர்க்கை இடத்தில் பயன்படும் ஒருமைக்கான முடிவுப் பொருத்தத்தை பொருத்திக்கொள்ளல், உடமைத்தன்மை ஆகியனவற்றைக் கொண்டிருக்கும் எனக் கண்டறிந்துள்ளார். இந்தச் செய்திக்கு முற்றிலும் பொருந்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


மேலும் பெண்கள் அதிக அளவில் காப்பு மொழிகளைப் பயன்படுத்துவர் என்பதும் பெண்எழுத்துத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றன.

எந்தை - என்பதை என் தந்தை என்றும் பகுக்கலாம். எம் தந்தை என்றும் பகுக்க லாம். இந்நிலையில் எம் தந்தை (ஆதன் தந்தை -ஆந்தை, ப+தன் தந்தை - ப+ந்தை தொல்காப்பியம் - மெய்யீற்றுப் புணரியல்) என்று பகுத்தால் அது பன்மை வயப்பட்ட பெண் எழுத்து நிலைக்குச் சான்றாகும். அவ்வாறு கொண்டால் இப்பாடலை எழுதியர் ஒருவர் என்று முடிய இயலும். (எம் தந்தை என்று உரையாசிரியர்கள் பிரித்துக் கொண்டாலும் எம் என்பதனைப் பன்மை சார்ந்ததாகக் கருதி பாரி மகளிர் இருவர் என மொழிந்துள்ளனர்) பின் வந்துள்ள யாம் என்பதும் இவ்வகைப் பட்டதே ஆகும். இங்கும் பெண் எழுத்தின் இயல்பின்படி பெண் பன்மை சார்ந்து எழுதப் பெற்ற பண்பு இதுவாகும். . ஆனால் இதனைப் பன்மையாகக் கருதி அங்கவை சங்கவை என்று கற்பனைப் பாத்திரங்களைத் தமிழ் உலகம் கற்பித்துள்ளது. அங்கவை என்பது ஒரு பெண்ணாக இருக்க அந்தப்பெண்ணின் சாயலில் இன்னொரு பெண்ணை உருவாக்கிக் கொள்ள சங்கவை பிறந்திருக்க வேண்டும். லவன் குசன் பிறப்பு போல இது அமைந்திருக்க வாய்ப்புண்டு.


மேலும் இலமே என்று படைத்திருப்பதால் மறுப்புத் தன்மை கொண்டபதிவின் சான்றும் இப்பாடலில் கிடைக்கின்றது. . பாரி மகள் ஒருத்தியாக இருந்து அவள் பன்மை சார்புபட இந்தப்பாடலை பாடியிருந்திக்க முடியும். மேலும் சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தும் ஒருவர் பாடிய பாடலாக இருக்கின்ற சூழலில் இந்தப் பாடலும் ஒருவர் பாடியதாக இருந்திருக்க வேண்டும் என்று முடிவதில் தவறில்லை. பின்னாளில் மலையமான் மகன் ஒருவனுக்கு மணம் முடித்ததை உறுதி செய்யும்போது இதுவும் உறுதிபெற்றுவிடுகிறது.


மேலும் குன்றும் கொண்டார் எந்தையும் இலமே என்ற அடியில் வேந்தர்களைப் பழிக்காமலும் குன்று போனதைப் பற்றிய வருத்தமின்மையும் பதிவாகியுள்ளது. நாடு இருக்கும் வரைக்கும் மகிழ்ச்சி, இல்லாதநிலையில் அதைப்பற்றி வருந்துவதை விட தந்தையை இழந்தமையே பெரிய வருத்தமே அவளுக்கு இருந்துள்ளது. அதுவே பாடலில் பதிவாக்கப் பெற்றுள்ளது.


இந்நிலையில் மிகச் சிறந்த பெண் எழுத்துக்கான காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது என்பது கருதத்தக்கது. இதில் இயல்பான ஒரு பெண்ணின் வருத்தமும், இழப்பும் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

புது நூல்


என் புது நூல் ஒன்று வெளிவந்துள்ளது.
பெண்ணியக் கட்டுரைகள் 20 சேர்ந்து வந்துள்ளன.
இவற்றில் பெண்ணிய அணுகுமுறையை அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது
இதன் தலைப்பு
மகாராணியின் அலுவலக வழி


விலை ரு. 60
என்சிபிஎச் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை வாங்கிப் பயன் கொள்ள வேண்டுகிறேன்.

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

கண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்

ஆய்வுமாணவர்- ஜி.பி.முருகானந்தம்


தமிழ்த்திரையுலகில் கவியரசாகவும், அரசியல் களத்தில் அதற்கு எதிர்நிலையிலுமாக வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் தோன்றி உலகத் தமிழ்நெஞ்சங்களில் தம் கவிதைகளாலும் திரைஇசைப் பாடல்களாலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது ஷசுயசரிதை| அவர் குறித்த பன்முகப்பதிவாக உள்ளது. அவற்றுளிருந்து அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கான நோக்கம், பயண அனுபவம், கண்ட, கேட்ட சம்பவங்கள், இந்தியாவுடன் அவற்றை ஒப்புநோக்கும் தன்மை ஆகியன குறித்தக் கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


வெளிநாட்டுப் பயண நோக்கம்

வெளிநாடுகளுக்கு பயணம் கொண்ட காலமென்பது ஏறத்தாழ திரையுலகின் உச்சத்திலும், அரசியல் களத்தில் எச்சத்திலுமாக இருந்த காலகட்டம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இக்கால கட்டத்தில் நிறைந்த வருவாய் இருந்தது என்றபோதும் அது தனக்கோ, தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கோ பயன்படுவதற்குப் பதிலாக கடனுக்காகவும், கவலையை மறக்க மது, மாதுயென விரையமானதாகவுமே தமது சுயசரிதையில் குறித்துள்ளதும் எண்ணத்தக்கது. எனவே இதிலிருந்து மீட்சிபெறும் நோக்கம் தான் தமது வெளிநாட்டுப்பயணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


கண்ணாதசன் ஆசை கொண்ட தேசங்கள்; சென்ற தேசங்கள்;

உலகத்திலேயே அவன் பார்க்க விரும்பிய நாடுகள் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனே~pயா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா ஆகியவையே1.


சோவியத் யூனியன்

கண்ணதாசனின் நண்பர் மோகன் குமாரமங்கலம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கண்ணதாசனும் இசையமைப்பாளர் விஸ்வநாதனும் சோவியத் யூனியனுக்குச் சென்றனர். அவ்வனுபவத்தை ஷஆப்கானிஸ்தான் விமானமான ஹரியானா-ஆப்கானிஸ்தான் ஏர்லைன்ஸில் புறப்பட வேண்டும். காபூலில் ஒரு நாள் தங்கி, பிறகு சோவியத் விமானத்தில் போகவேண்டும் என்றார்கள். இதுதான் காபூலா! இந்தியாவைத் திணறடித்த கஜினி முகமதுவும், கோரிமுகமதுவும் இங்கிருந்தா புறப்பட்டார்கள்? ஒரே வறுமையின் ஏகபோகம்; எங்கு பார்த்தாலும் பழுப்புநிற மணற்காடு; பச்சைப்பசேல் என்று அங்கு கிடைக்கும் கீரை இந்தியாவில் கிடைத்தால் மாமிசமே தேவையில்லை; கீரைமட்டுமா? மாமிச வகைகளிலும் கைபர் ஹோட்டல் தயாரிப்பு போல் இந்தியாவில் எங்கும் காண முடியாது. காபூலிலேயே ஒரு பிரமாண்டமான ஏரிக்கரைக்குப் பிராமண நண்பர்கள் அவர்களைக் கூட்டிச் சென்றார்கள். மனிதக் கூட்டமே இல்லாத அந்த ஏரிக்கரை எவ்வளவு அழகாக இருந்தது தெரியுமா? அன்று இரவு ஏழு மணிக்கு காபூல் நகரத்துக் கடைத் தெருவைப் பார்வையிட்டார்கள். நூற்றுக்கு அறுபது சதவிகிதம் இந்தியாவில் செய்யப்பட்ட பொருள்களே அங்கு விற்பனை ஆகின்றன.


இரவு அதே ஹரியானா – ஆப்கான் விமானத்தில் ஏறி உட்கார்ந்தார்கள். விமானம் பறந்துவிட்டது. காலை ஏழு மணிக்கு துர்க்மினிஸ்தான் தலைநகரான அஸ்காபாத்தில் விமானம் இறங்கிற்று.


சோவியத் யூனியனில் துர்க்மேனியா ஓர் அழகான மாநிலம், பன்னிரெண்டு மாதங்களும் பெங்க@ரைப்போல் சீஸன். குளிர்ந்த காற்றும் மஞ்சள் வெயிலும் அற்புதம். ஒவ்வொரு வீட்டுப் பந்தலிலும் கேட்பாரில்லாமல் பழுத்துக்கிடக்கும் திராட்சைக்கு விலையில்லை. சோவியத் யூனியனில் பண்ணைமட்டுமல்ல் பண்ணையாளும் வெற்றி பெற்றிருக்கிறான். அவனது வீட்டுக்குள் டெலிவி~ன் என்ன, ரத்தினக் கம்பளம் என்ன, பதப்பெட்டி என்ன, அவனுக்குச் சொந்தமாகச் தரப்பட்டிருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில் அவன் விருப்பம்போல் பயிரிடப்பட்டிருப்பது என்ன, அவன் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் என்ன, ஆடை அணிமணிகள் என்ன,2 கண்டக்டர் இல்லாத பஸ், கள்ளத்தனம் இல்லாத பிரயாணிகள். மாஸ்கோவிலிருந்து திரும்பும்போது ஜெர்மனி வழியாக ஒரு விமானம் வருகிறது. அவனிடம் அதற்கான டிக்கெட் இல்லை. ஆகவே, டில்லி வந்து இறங்கினான்|3 – எனக் குறிப்பிடுகின்றார்.


இவ்வனுபவத்திலிருந்து சிலவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. காபூலைப் பற்றி கண்ணதாசன் கஜினிமுகமது, கோரிமுகமது ஆகியோரை நினைவு கூர்பவர்; அதன் வறுமையை ஷஎங்கும் ஒரே வறுமையின் ஏகபோகம்; எங்கு பார்த்தாலும் பழுப்புநிற மணற்காடு| என்பவர் அடுத்த வரியிலேயே அதன் செழுமையைக் குறிப்பிடுகையில் ஷபச்சைப் பசேல் என்று அங்கு கிடைக்கும் கீரை இந்தியாவில் கிடைத்தால் மாமிசம் தேவையில்லை; மாமிச வகைகளிலும் கைபர் ஹோட்டல் தயாரிப்பு இந்தியாவில் எங்கும் காண முடியாது| என்கிறார். இந்தியா, காபூல் ஓப்பீட்டு நோக்கில் கூறும் இச்செய்தியில் ஒரு பக்கம் ஏகமான வறுமையும் மறுபக்கம் செல்வச் செழிப்புமாக இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவைப் போலவே காபூலும். அதே வேளையில் இந்தியாவைக் கொள்ளை கொண்டு சென்ற கஜினி, கோரி ஆகியோருக்குப் பின்னும் காபூல் சந்தைகளில் விற்கப்படும் இந்தியத் தயாரிப்புக்கள் இரு நாட்டுக்குமான பகை மறைந்த வாணிபத்தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும், காபூலில் மருந்துக்குக்கூட பெண்களைக் காண்பது அரிதெனவும் நினைவு கூர்கிறார்.

சோவியத்யூனியன் துர்க்மேனியாவைப் பற்றி அதன் அழகைப், பெருமையைச் சுட்டிவருபவர் அங்கே உள்ள பண்ணை; பண்ணையாள் ஆகியோரின் உன்னதமான வெற்றியை, பொதுவுடைமை சமூகத்தின் சிறப்பை வியந்து பாராட்டியிருப்பதையும் காண முடிகிறது. அதற்குள் நம் தேசத்தில் அப்படி இல்லையே என்கிற குறையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஷகண்டக்டர் இல்லாத பஸ்|; ஷகள்ளத்தனம் இல்லாத பிரயாணிகள்| இவ்வரிகளில் மக்கள் தம் தேசத்தின் சொத்தைக் களவு கொள்ளவோ, ஏமாற்றவோ மாட்டார்கள் என்பதும், அவர்களின் தேசப்பற்றும், தனது கண்ணைத் தானே ஒருவன் திருடவவோ, அழிக்கவோ எண்ணுவானோ என எண்ணத்தோன்றுகிறது.


மலேசியா, தாய்லாந்து

ஷமலேசியாவில் போய் இறங்கி அந்த மண்ணை மிதித்ததும் இந்த நாட்டினுடைய அழகு இந்தியாவுக்கு வரவில்லை என்று முதல் குறை தோன்றிற்று. உள்ளே போகப் போக, ஒவ்வொருவரையும் பார்க்க, பார்க்க| இந்த நாட்டினுடைய ஒற்றுமை இந்தியாவுக்கு வரவில்லையே| என்று தோன்றுகிறது. சாமான்கள் வாங்க, ஷஅடடே! இந்த நாணயம் இந்தியாவில் இல்லையே! ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிடும்போது, ஷஅடடா! இந்த உணவும் சுவையும் இந்தியாவில் இல்லையே என்ற குறை தட்டுப்பட்டதே தவிர, இதைவிட இந்தியா தேவலை என்ற உணர்வு ஏற்படவில்லை| என்பவர் அந்நாட்டின் வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தையும், அங்கு உள்ள கோயில்கள் மாரியம்மன், தண்டபாணி ஆகியன குறித்தும் சொல்பவர், தண்டபாணிக்கு கோயில்கள் எண்ணிக்கை அதிகம், அதற்குக் காரணம் குடும்பத்தைப் பிரிந்து சென்று வாழ்பவர்களின் மனஓட்டத்தின் பிரதிலிப்போ! எனவும் உளவியல் சார்ந்த தம் கருத்தைக் பதிவுசெய்கிறார்.


தாய்லாந்தின் கிராமமான ஹட்ஜய்க்கு போனது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும். பினாங்கிலிருந்து அலோஸ்டார் சென்று, அங்கிருந்து புறப்பட்டுப் போனால் தாய்லாந்துக்குள்ளே போகப்போக ஏதோ இந்தியாவிலே தஞ்சாவூர்குள்ளே போவதாக தோன்றிற்று. அந்தப் பக்கமெல்லாம் ஒரே நெற்களஞ்சியங்கள். சுமார் ஒண்ணரை மணிநேரத்தில் ஹட்ஜை பிடித்து விட்டார்கள். வெளிநாட்டு செலாவணி சம்பாதிப்பதற்காகத் தாய்லாந்து அரசாங்கம் செய்திருந்த ஏற்பாடு. எல்லா வகையான வசதிகளையும் அவர்கள் உண்டாக்கியிருந்தார்கள். மாமிச வகைகள், மது வகைகள், பெண்ணினங்கள் - எதுவானாலும் சட்டபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். தான் தாய்லாந்தில் சந்தித்தப் பெண்களை ஷதாய்லாந்து கிளிகள்| என்றே அவன் ஒரு கவிதை எழுதினான். தாய்லாந்து வறுமையிலும் இல்லை; பணக்காரத் தன்மையிலும் இல்லை; நடுத்தர தன்மையில் ஒரு நாணயம் இருந்தது|4 - என எழுதுகிறார்.


மேற்காணும் நாடுகளில் பயணம் மேற்கொண்ட அனுபவங்களை கண்ணதாசன் எழுதியவைகளிலிருந்து நோக்கும் தேடலும் கண்டுகொள்ள முடிகிறது. யாதெனில் முன்பே கூறியதுபோல் தான் திரைத்துரையில் உச்சத்திலிருந்தும் பயன்கொள்ள முடியாத ஏமாளித்தனமான வாழ்க்கை; அரசியல் களத்தில் தான் வஞ்சிக்கப்பட்டதன் மன இறுக்கம், மன அழுத்தம் ஆகியவற்றின் விடுதலை அல்லது குறைந்தபட்சம் மனமாற்றம் ஆகியவற்றைத் தேடியே வெளிநாடுகளுக்குச் சென்றதால் தன் மனம் அவ்வவ்நாடுகளின் பெண்களையும் மது வகைகளையும் உணவு வகைகளையும் முதன்மை கொண்டு ரசிக்கும் கண்ணதாசன், தன்னை வஞ்சித்த அரசியல் களம் அந்நாடுகளில் மக்களின் வாழ்நிலைகளை எப்படி வைத்துள்ளது எனும் தேடலும் அத்தேடலில் இந்திய ஒப்பீடும் வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாட்டில் துர்க்மேனியா, மலேசியா, தாய்லாந்து மூன்றிலுமே இந்தியாவைவிடவும் மக்களின் வாழ்க்கை வளமானதாகவும், நேர்மைமிக்கதாகவும் இருப்பதாகச் சுட்டியுள்ளார். குறிப்பாக சோவியத் யூனியனின் பண்ணைமுறை இந்தியாவைப் போல் தொடமுடியாத ஏற்றதாழ்வு உடையதாக இல்லை; மாறாக எல்லா செல்வங்களும் எல்லோரிடமும் இருக்கும் சமதர்மப் பொதுவுடைமை வாழ்க்கை இருப்பதை வியந்து பாராட்டியுள்ளார்.


பார்வை நூல்கள்

1. கண்ணதாசனின் வனவாசம்

2. கண்ணதாசனின் மனவாசம்

மேற்கோள்

1. கண்ணதாசனின் மனவாசம், பக்.214-226

2. மேலது, பக்.153-164

3. மேலது, பக்.170-171

4. மேலது, பக்.214-226




Copyright:thinnai.com 




Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.