| |||
Sunday April 25, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved. | |||
செவ்வாய், ஏப்ரல் 27, 2010
நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்
இணையத்தில் தமிழ்
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன. நூல்களை அடுத்த அடுத்த பக்கங்களுக்குச் சென்று படிப்பது போல இணையப் பக்கங்களைப் புரட்டி நூல்களைப் பார்வையிட முடியும். மேலும் இந்நூலகத்தில் தேடுதல் வசதி உள்ளது. அதாவது தேடுதல் வசதி என்பது சொல் தேடல் என்பதாகும். திருக்குறளில் ஏதாவது ஒரு சொல் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டறியவேண்டுமானால் இத்தளத்திற்குச் சென்று திருக்குறள் பகுதியை அழுத்தி அதன்பின் தேடல் பகுதியில் தேவையான சொல்லை இட்டால் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்கள் அனைத்தும் கிடைக்கும். இப்படியே ஒவ்வொரு நூலிலும் தேடல் வசதி தரப் பெற்றுள்ளது. தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற பெயர் உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம் என்பதாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் http://www.tamilvu.org என்ற முகவரியில் இத்தளம் இயங்கி வருகிறது. இத்தளத்தில் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சொல் வளம் பெற இயலும்.
அடுத்து சென்னை லைப்ரரி என்ற தளம் குறிக்கத்தக்கது ஆகும். சிறுகதைகள், நாவல்கள் முதலியனவற்றைப் படிப்பதற்கு இந்தத்தளம் உதவுகின்றது. குறிப்பாக சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியங்கள் போன்றனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன. கம்பராமாயணம் முழுவதும் இதனுள் கிடைக்கின்றது. பெரும்பாலும் இணையத்தில் தற்போது முல நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. உரை நூல்கள் கிடைப்பதில்லை. கல்கியின் நாவல்கள், புதுமைப்பித்தன் கதைகள், ஜெயகாந்தன் படைப்புகள் போன்றவற்றை இதனுள் பெற இயலும்.
அடுத்துப் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் இணைய தளம் பல அறியப்படாத நூல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இத்தளத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. முன்னூறு தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கின்றன. மேலும் சிற்றிதழ்களின் கண்காட்சியாக பல சிற்றிதழ்கள் பார்வைக்கு உள்ளன. தமிழில் உள்ள குறிக்கத் தக்க இணையதளங்களுக்கான இணைப்பு தரப்பெற்றுள்ளது. இவ்வகையில் மிக முக்கியமான தளமாக இது விளங்குகின்றது.
இதுபோன்று தமிழ் மரபு அறக்கட்டளைhttp://www.tamilheritage.org) , நூலகம்.காம் போன்ற பல தளங்கள் வாயிலாக தமிழ் நூல்களை இணைய நூல்களாகக் காண முடிகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தருவதில் பெரு முயற்சி எடுத்து வருவது குறிக்கத்தக்கது.
சமண சமய நூல்களினைப் பார்வையிட ஜெயின்வோர்ல்டு .காம் என்ற இணையதளம் பயன்படுகிறது.
தமிழ் விக்கிபீடியா என்ற இணையதளம் தமிழின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக உள்ளது. தமிழ்மொழியில் உள்ள தகவல்களைப் பெற இத்தளம் மிக முக்கியமானதாகும். மேலும் இதனுள் இடுகை இடுதலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் திருத்தலாம். அதற்கான வழிமுறைகள் படி நுழைய வேண்டும். இதனை வளப்படுத்தவே தற்போது இளைஞர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பெற்றுள்ளன.
இணையப் பரப்பில் அடுத்து முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடவேண்டும். பிரபல தமிழ நாளிதழ்கள், தமிழ் வார இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது.
இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும். அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும். இவற்றுள் திண்ணை இதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. வார்ப்பு இதழ் கவிதைகளை மட்டுமே தாங்கி வரும் இதழாகும். இதனுடன் கவிதை நூல்களின் விமர்சனங்கள், மற்றும் நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இது தவிர இன்னும் பல இணைய இதழ்கள் தமிழ் இணையப் பரப்பில் உள்ளன.
வரலாறு .காம் என்ற இதழ் திருச்சி அறிஞர் கலைக்கோவன் அவர்களின் மேற்பார்வையில் நடத்தப் பெற்றுவருகின்றது. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் பல செய்திகளை, அரிய புகைப்படங்களுடன் தாங்கி வரும் இணைய இதழ் இதுவாகும். பழைய இதழ்களைக் காணும் வசதியும் இதில் உள்ளது. எனவே இது நல்லதொரு ஆவணமாக விளங்குகின்றது. ஏறக்குறைய ஆயிரம் செய்திகளைத் தொட்டுவிடும் தூரத்தில் இது வளர்ந்து வருகிறது. இது ஒரு மாத இதழாகும்.
செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணைய இதழ்களும் உள்ளன. தட்ஸ் தமிழ்.காம், எம்.எஸ்.என் வெப்தூனியா.காம், யாஹூ தமிழ்.காம் போன்ற தளங்கள் இவ்வகையில் குறிக்கத்தக்கன. இந்நிறுவனங்கள் உலக அளவில் பெருமை பெற்றனவாகும். இவை தமிழிலும் தளங்கள் வைத்திருப்பது தமிழின் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக உள்ளது. இவற்றின் வழி உலகத்தின் உடனடிச் செய்திகளை உடனே தெரிந்து கொள்ளமுடிகின்றது.
தமிழ் இணையப் பரப்பில் தற்போது வலைப்பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுவருகின்றது. கூகிள் என்ற நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை வழங்குகின்றது. இந்த வசதி கூகிளின் மின்னஞ்சலான ஜிமெயில் பெற்றிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜி மெயில் முகவரியைப் பெற்றுள்ள எவரும் பிளாக்கரைத் தொடங்கலாம். எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். பிளாக்கரில் புகைப்படங்கள், அசை படங்கள், படக் காட்சிகள் போன்ற எவற்றையும் சேர்க்க முடியும். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும். பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கான விமர்சனங்களையும் பார்ப்பவர்கள் வழங்கமுடியும். இந்த வசதி மிகச் சிறப்பானதாகும். வளவுபிளாக்ஸ்பாட்.காம், மானிடள்பிளாக்ஸ்பாட்.காம், இட்லிவடைபிளாக்ஸ்பாட்.காம், மலையருவிபிளாக்ஸ்பாட்.காம், தமிழ்க்கடல்பிளக்ஸ்பாட்.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.
இந்த வலைப்பூக்களில் இடம் பெறும் செய்திகளை ஒன்று கூட்டும் அரங்கங்கள் பல உள்ளன. அதாவது ஒருவர் வலைப்பூவில் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அதனை ஒருங்குகூட்டும் ஒரு அமைப்புக்கு அவர் தெரிவித்து விடவேண்டும். அதன்பின் அந்த ஒருங்கு கூட்டும் இணையப்பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் அந்தச் செய்தி தெரியவரும். இதன் முலம் வலைப்பக்கச் செய்திகள் பரவலாக்க முடிகிறது. இந்த ஒருங்கு கூட்டும் இணையப் பக்கங்களில் திரட்டி.காம், தமிழிஷ் .காம், தமிழ்மணம் .காம், தமிழ் வெளி.காம் போன்றன குறிக்கத்தக்கன.
தமிழ் இலக்கியப் பாடல்களைத் தக்க இசையோடு பல இணையதளங்கள் தருகின்றன. இசைத்தமிழை வளர்க்கும் இனிய பணி இதுவாகும். முருகன் குறித்த தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்கவேண்டுமானால் கௌமாரம்.காம் செல்ல வேண்டும். தமிழ் மரபு இசை மாறாமல் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இதில் கேட்டு ரசிக்கலாம். பன்னிரு திருமுறைகளையும் மரபு இசையுடன் தேவாரம்.காம் என்பதில் கேட்டு ரசிக்க முடியும். ஓதுவார்.காம் என்பது தமிழக இசைவாணர்களான புகழ்பெற்ற ஓதுவார்களின் இசைவடிவங்களை இணைத்துத் தரும் தளமாகும். இதுபோன்று ஆழ்வார்பாசுரங்கள் http://www.tamilheritage.org) என்ற தளத்தின் வாயிலாகக் கேட்க முடியும்.
இணையத்தமிழ் வானொலி சேவை இன்னும் குறிக்கத்தக்கதாகும். பி.பி.சி தமிழ்ச்சேவை, வேரித்தாஸ்வானொலி, சக்தி பண்பலை போன்றன இவற்றுள் குறிக்கத்தக்கன. இதனுள் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நாள் தேதி குறிப்பிட்டு வானொலி நிகழ்ச்சிகளைத் திரும்பக் கேட்க இயலும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை உரிய நேரத்தில் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இவற்றில் இல்லை. தேவையான நிகழ்ச்சியை தேவையான போது கேட்டுக் கொள்ளும் வசதி இதனுள் உள்ளது.
இதுதவிர தமிழ்த் திரை இசைப் பாடல்களைக்கேட்க பல தளங்கள் உள்ளன. தேனிசை. காம், ஓசை.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. இவ்வாறு இசைத்தமிழ் பல நிலைகளில் முன்னேறி இணையத்துக்குள் ஆட்சி செலுத்தி வருகின்றது.
இதுதவிர குழந்தைகள் கற்பதற்கான தமிழ்ப் பாடத் தளங்கள் பல உள்ளன. குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் இதற்குப் பெரிதும் உதவுகின்றது. மழலைக் கல்வி முதல் இளங்கலைக் கல்வி வரை அனைத்து நாட்டுத் தமிழரும் கற்கும் வண்ணம் ஒலி, ஒளிக் காட்சிகளுடன் பாடங்கள் இதனுள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் இணைய வகுப்பறை சேவையும் இதனுள் தொடங்கப் பட்டுள்ளது. இதன் வழியாக வகுப்பறைத் தோற்றத்தினை வீட்டில் அமர்ந்து பெற இயலும். இணையவழித் தேர்வுகளும் இதன் வழியாக நடத்தப்படுகின்றன.
மழலைகள்.காம் என்ற தளமும் குழந்தைகளுக்கான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்று பல தளங்கள் தமிழைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தன் பாடநூல்களை இணையத்தில் இட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாட நூல்களை உலகத்தமிழர் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்ட பாட நூலைத் தன் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் தமிழறிவை வளர்க்க இயலும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் இணையத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இதுதவிர நகைச்சுவைப் பக்கங்களும் உள்ளன. அப்புசாமி. காம் என்ற தளம் பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நடத்தப்படுகிறது. இவரின் கைவண்ணத்தில் எழுந்த நகைச் சித்திரங்களை இவற்றில் வாசிக்க முடியும். இதுபோன்று தனிநபர் இணையப் பக்கங்களும் தமிழில் அதிகமாக வாசிக்கப் பெறுகின்றன. எழுத்தாளர்களான ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் தனக்கான இணையப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். இதனுள் வாசகர்களுடனான உரையாடலையும் அவர்கள் நிகழ்த்துகின்றனர்.
சமையல் குறிப்புகள், ஜோதிடக் குறிப்புகள் போன்றவற்றைத் தமிழில் தரும் தளங்களும் உள்ளன.
ஞாயிறு, ஏப்ரல் 25, 2010
நகரத்தார் படைப்புகள்
பேருரையாளர் ,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை
muppalam2006@gmail.com
நகரத்தார் குலத்தில் படைப்புகள் என்பது ஒரு வழிபாட்டு முறையாகும். இவ்வழிபாட்டுமுறை பெரும்பாலும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகள் காரணமாக உயிர் நீத்த சுமங்கலிப் பெண்களின் நினைவாகக் கொண்டாடப்படுவதாகும். இப்படைப்பு குடும்ப அளவிலும், குடி அளவிலும், பங்காளிகள் அளவிலும், ஊர் அளவிலும் கொண்டாடப்படுதல் உண்டு. சில ஆண்தெய்வங்களுக்கும் படைப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக மாத்தூர் பிரிவினர் அதிக அளவில் படைப்பு முறைகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர வயிரவன் கோயில் சார்ந்தோர் அடைக்காத்தாள் படைப்பு என்பதைக் கொண்டாடுகின்றனர். இதுதவிர பள்ளத்தூர் அழகன் செட்டியார் படைப்பு, அலவாக் கோட்டை நாச்சாத்தாள் படைப்பு போன்றன குறிக்கத்தக்கன. இப்படைப்புகள் நடைபெற வீடுகளும் உள்ளன. இவற்றைப் படைப்பு வீடுகள் என்பர். இப்படைப்பு வீடுகளில் சுத்தம் என்பது நூற்றுக்குநூறு அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக படைக்கும் படைப்பு தவிர சொந்த முறையில் திருமணம் கருதிப் படைக்கும் படைப்புகளும் உண்டு. இப்படைப்பு வீடுகளில் ஏலம் போடுதல் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த ஏலத்தில் எடுக்கப்படும் பொருள்கள் மங்கலம் அருளும் என்ற நம்பிக்கை நடைமுறை இன்றும் தொடர்கிறது.
இத்தகைய படைப்பு முறைகளைப் பற்றிய ஆராய்வது நகரத்தார் குலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும். இவ்வாய்விற்குப் பலரது செய்தி உதவிகள் தேவை. அத்தோடு பெரிய நகரத்தார் சங்க அமைப்புகள் நிதி உதவி செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட அளவில் பொருளாதார உதவி கிடைத்தால் இதனை ஆராய்ந்துப் புத்தக அளவில் ஏறக்குறைய ஆயிரம் பக்கங்களுக்குள் வெளியிட முடியும். தக்க படங்கள், பேட்டிகள், படைப்பு நடக்கும் நாளன்று சென்று தகவல் சேகரித்தல் என்பதற்கு இந்நிதி உதவி பயன்படும்.
சனி, ஏப்ரல் 03, 2010
பகை போக்கும் பச்சைமயில்வாகனன்

மனித வாழ்க்கை புதிரானது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எவராலும்
அனுமானிக்க முடியாது. அடுத்த நிமிடம் இது நடக்கும் என எண்ணினால் அது
எண்ணியபடியே முடியலாம். அல்லது அதற்கு மாறாக எதிராக முடியலாம்.
முடியாமலே போகலாம். இவ்வளவு புதிர்த் தன்மை வாய்ந்த வாழ்வில் எதிர்கால
நிலையில் பயமின்றி வாழ ஒரு நம்பிக்கை தேவைப்படுகின்றது. இந்த
நம்பிக்கையைப் பக்தியின் வழியாக பெறலாம் என சமயவாதிகள்
வழிகாட்டுகின்றனர். நடப்பதெல்லாம் அவன் செயல் என்று எண்ணிவிட்டால்
நடப்பனவற்றைப் பற்றிய கவலை மனிதரை அணுகாமல் சென்றுவிடும்.
நம்பிக்கை மிக்க பக்தி சார்ந்த மனித வாழ்வில் அவ்வப்போது சோதனைகள்
எதிர்கொள்கின்றன. வேதனைகள் வந்து சூழ்கின்றன. எதிரிகள் நேரம் பார்த்து
வதைக்கத் தயாராக இருக்கிறார்கள். இவற்றைக் கடக்க பக்தி எனும் உணர்வில்,
இறைவன் காப்பான் என்ற நம்பிக்கையில் மிக்க உறுதியாக இருந்து நாள்களை
நகர்த்த வேண்டி இருக்கிறது.
இறைவன் வருவானா, வந்து காப்பானா என்ற சந்தேகத்திற்குத் துளியும் இடம்
இல்லாமல் இறைவன் வருவான், வந்து காப்பான் என்ற சத்தியத்தை இக்காலத்தில்
நல்லோர் பெற்றாக வேண்டும். இதற்குப் பல பக்தியாளர்கள் சான்று. அவர்களின்
வாழ்க்கை வரலாறு சான்று. அவர்களின் தெய்வப் பனுவல்கள் சான்று.
வேலும், மயிலும் வேதனையில் உள்ளோர்க்கு உதவிக்கரம் நீட்ட வரும். கலியுக
தெய்வம் கந்தன் வேதனைப்படும் பக்த உள்ளங்களை நாடி வருவான்.
வந்திருக்கிறான். இவனே எதிரிகளின் வலுவை அழிக்க உரம் தருபவன். இவனிடம்
கொள்ளும் பக்தி பயத்தை நீக்கும். யாமிருக்க பயமேன் என எங்கும் பயமின்மையை
அன்பருக்குத் தந்து இவனின் அருள் நீங்காது நிற்கும். பகை விலக உடன்
அணையவேண்டிய தெய்வம் முருகப் பெருமான். பகைகடியும் பெருந்தகை பச்சைமயில்
வாகனன்தான்.
அன்புடைய, பக்தியுடைய நல்லார்க்கு எதிரிகள் இருப்பார்களா? என்ற கேள்வி
எழலாம். அன்பே வயமாகி விட்டால் எதிரிகள் கூட நண்பர்கள்தானே. இருப்பினும்
நல்லோர்க்கும், அன்பானவர்களுக்கும் பல பகைகள், எதிரிகள் தோன்றலாம் எனக்
குமரகுருபரசுவாமிகள் காட்டுகின்றார்.
"பல்கோடி சன்மப்பகையும் மவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடற்
பூதமும் தீ நீரும் பொருபடையும் தீதகலா
எவ்விடமும் துட்டமும் மிருகமும் முதலாம் எவையும்
எவ்விடம் வந்தெமை எதிர்ந்தாலும் அவ்விடத்தில்
பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டுத் திண்தோளும்
... எந்தத் திசையும் எதிர் தோன்ற''
(கந்தர்கலிவெண்பா 111116)
1.சன்மப்பகை, 2. விக்கினம் (இடைஞ்சல்) 3. பிணி 4. பாதகம்
(நம்பிக்கெடுத்தல்) 5. செய்வினை 6. பாம்பு 7. பிசாசு 8. பூதம், 9. தீயால்
ஏற்படும் அழிவு 10. நீரால் ஏற்படும் அழிவு 11. படைக்கலன் கொண்டவர்கள் 13.
துன்பம், 14. விலங்குகள் ஆகிய இவற்றால் நல்லவர்க்கும் பகைமை தோன்றலாம்.
அவர்கள் அதனைப் பகையாகக் கொள்ளாவிட்டாலும் எதிர் தரப்பார் அன்புள்ள
பக்தியாளர்களை எதிரியாகக் கருதுவர்.
இந்தச் சூழலில் முருகப் பெருமானை வேண்டினால் அப்பெருமான் எத்திசையும்,
எவ்விடமும் கருதாமல் உடன் வந்துத் தோன்றி அத்தீமையை அழிப்பான் எனக்
குமரகுருபரசாமிகள் அரிதியிட்டு உரைக்கின்றார். இதனையே அவர் கந்தர்
கலிவெண்பாவில் வேண்டுகோளாகவும் வைக்கின்றார்.
அருணகிரிநாதர் இன்னும் பல பகைகளில் இருந்துக் மனிதரைக் காப்பவன்
முருகன் என அருளுகின்றார்.
நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்துத் தோன்றிடினே
(கந்தர் அலங்காரம் 38)
இப்பாடலில் நாள் கருதியும், முன் செய்து வினை காரணமாகவும், நம்மை
நடத்தும் கோள்கள் குறித்தும், எமன் பொருட்டும் வரும் தீமைகளை
முருகப்பெருமானின் அழகான பாதங்களைச் சரணடைந்தால் தீர்த்துக் கொள்ளலாம்
என்கிறார் அருணகிரிநாதர். குமரேசர் இருதாளும் நெஞ்சத்தில் தோன்றுதல்
வேண்டும். இது மட்டும் நடந்து விட்டால் வாழ்வில் எப்பகையும் இருக்காது.
பகை விலகப் பாம்பன் சுவாமிகள் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இதற்குப் பகைகடிதல் என்றே பெயர் தரப் பெற்றுள்ளது. அதிகமான இன்னல்களை
எதிரிகள் வாயிலாகப் பெறும் பக்தர்கள் இப்பதிகத்தைத் தினம் ஓதினால்
எதிரிகள் அழிவர் என்பது மாறாத நம்பிக்கை ஆகும்.
திருவளர் சுடர் உருவே சிவை கரம் அமர் உருவே
அருமறை புகழ் உருவே அறவர்கள் தொழும் உருவே
இருள் தபும் ஔ உருவே என நினை எனது எதிரே
குருகுகன் முதல் மயிலே கொணர்தி உன் இறைவனையே
(பகை கடிதல்)
என்றவாறு பாடப்படும் இப்பதிகம் எதிரிகளை அழிக்க முருகப் பெருமானை உடன்
கொண்டு வர மயிலை வேண்டுவதாகப் பாடப் பெற்றுள்ளது.
தீமைகளை அழிக்கக் கந்தன் எனப் பேர் புனைந்து குழந்தையாக நல்லோரைக்
காக்க வந்தவன் முருகப் பெருமான். இவன் பாலாகனாயினும் வயதாலும்,
அனுபவத்தாலும், வீரத்தாலும், தவத்தாலும் சிறந்தஆனால் கொடுமை மிக்க
சூரபதுமனை வென்றவன். இவன் எதிரிகளை அழிக்க, அருள பன்னிரண்டு கைகளும்
அறுமுகமாகவும் தோன்றும் இயல்பினன். இவ்வாறே வருகை புரிந்து சூரபதுமனின்
அருளினான். இந்த நிகழ்வு மேலும் நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளது.
மானிட வாழ்வு பெற்றுள்ள இவ்வுலக உயிர்களுக்கும் பகையால் ஏற்படும்
துயரத்தை மாற்ற பச்சைமயில்வாகனன் அன்றி வேறுயார் துணையாக முடியும்.
