சனி, ஜூலை 25, 2009

மேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்



"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து''
என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முருகனின் ஆயுதமாக மட்டும் வேல் கருதப்பட்டிருக்குமாயின் அதற்கென தனி வழிபாட்டு மரபுகள் ஏற்பட்டிருக்க முடியாது . அதற்கு மேலும், அதாவது முருகனே வேலாக, வேலே முருகனாக எண்ணி வழிபடும் மரபு தோன்றிய போது தான் அதற்கென தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. சங்க காலம் தொட்டு வளர்ந்து வந்துள்ள இவ்வழிபாட்டு முறைகளை ஆராய்கின்றபோது சங்ககாலம் தொட்டு இன்று வரை மக்கள் வேலின் பால் தெய்வநம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளமையை உணரமுடிகின்றது.
"வெறியயர்தல்''
சங்ககாலத்தில் `வேல்' வழிபாட்டுச் சடங்குகள் `வெறியயர்தல்' என்ற பெயரில் நிகழந்துள்ளன. அழகும் இளமையும் கொண்ட மகளிர் நலம் குன்றின காலத்து, அவர்களனி பெற்றோர் வேலனை வெறியாட அழைத்துள்ளனர் . இவ்வாறு அவன் வெறியாட அழைக்கப்படும் போது வேலன் கையில் வேல் கொண்டு வருகின்றான். வழிகள் சில சந்திக்கும் இடத்தில் வெய்மணலைப் பரப்பி, செந்நெல் வெண்பொறிகளைத் தூவி, பந்தர் அமைத்து, பூபல பெய்து, பசுந்தழை, காந்தள், பூக்குலைகளைச் சுற்றிக்கட்டி, வேலை மையமாக வேலன் நடுகின்றான். பிறகு முருகன் பெயரை வாழ்த்தி, முருகன் தம்மேல் எழுந்ததாகக் கொண்டு, வேல் எடுத்து ஆடுகின்றான். இவ்வாறு அவன் ஆடுகையில் மணிகள், இயம்பங்கள் ஒலிக்கின்றன. மகளிர் குறிஞ்சி பாட, தூபம் எங்கும் புகைகிறது.
"பொய்யா மரபினூர் முதுவேலன்
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந்தூக்கி
முருகென மொழியுமாயின் ''
என்ற பாடலின் படி வேலன் கழங்கு இட்டு. கணக்கு பார்த்து நடந்தது. நடப்பது, நடக்கப் போவது உரைப்பதும் உண்டு. "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் '' என இவனின் சிறப்பைத் தொல்காப்பியம் (பொருள் :60) குறிப்பிடும். இவ்வாறு வெறியாடும் திறம் குறுந்தொகை, நற்றினை அகநாநூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் உள்ளன.
சிலம்பில் வேலுக்கென தனிக் கோட்டம் அமைக்கப் பெற்றதற்கான சான்று உள்ளது. (9. 1 ) மேலும் இவ்வெறியயர்தல் பற்றி,
`நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்'
(சிலம்பு. குன்றக்குரவை . க. க )
இறைவனை நல்லாய் இது நகையாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்ளை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வரு சென்றாள்'
(சிலம்பு குன்றக் குரவை .
என்றவாறு சிலம்பு பேசுகின்றது. மே
(சிலம்பு குன்றக் குரவை .
என்றவாறு சிலம்பு பேசுகின்றது. மேலும் வேலைப் பாராட்டும் வண்ணமுமாக,
`உரையினி மாதராய் உண்கள் சிவப்ப
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவு நீர் மாகொன்ற வேலேந்தி ஏந்திக்
குரவைத் தொடுத்தொன்று பாடுகம் வா தோழி '
(சிலம்பு குன்றக்குரவை . 6)
என்று புகழந்து பாடி : சூரமா தடிந்த வேல்,
பிணிமுகம் கொண்டவுணர் பீடழியும்
வண்ணம் செய்த வேல், கிரி தடிந்த வேல்
என வேலை மட்டுமே நான்கு பாடல்களில் வாழ்த்துமாறு படைக்கின்றார் இளங்கோவடிகள்.
வேல் பெற்ற வரலாறு
கந்தபுராணம் வேல் பெற்ற வரலாற்றை விரித்துக் கூறி வேலின் பெருமை பேசுகின்றது.
"ஆயதற் பின்னர் ஏவின் முதண்டத்
தைம் பெரும் பூதமும் அடுவது
ஏயபல் உயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர் மேல் விடுக்கினும் அவர் தம்
மாயிரும் திறலும் வரங்களும் சிந்தி,
மன்னுயிர் உண்பது எப்படைக்கும்
நாயகம் ஆவது ஒரு தனிச் சுடர் வேல்
நல்கியே மதலைகைக் கொடுத்தான் ''
(கந்தபுராணம் . விடைபெறுபடலம் 38)
சிவபெருமான் சூரர்களை அழிக்க, முருகனுக்குத் தந்தது வேல். அது எப்படைக்கும் நாயகம் ஆவது என்று கந்தபுராணம் பேசுவது வேலின் தனித்த சிறப்பை முன் வைப்பதாக உள்ளது. மேலும் இற்றைக்காலத்தில் சிக்கல் போன்ற பல திருத்தலங்களில் வேல் வழங்கும் விழா சிறப்புற நடைபெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது,
வேல் குறித்த பக்திப்பனுவல்கள்''
வேல், புராணப்பின்னணி, சங்க இலக்கிய வழிபாட்டுப் பின்னணி பெற்றிருப்பினும், அருணகிரியார் காலத்தில் தான் தனி பெரும் நிலையை அஃதடைகின்றது. வேல் வகுப்பு , வேல் வாங்கு வகுப்பு, வேல்விருத்தம் போன்றன அருணகிரியாரால் `வேலை' முன்னிறுத்தி பாடப்பட்ட பனுவல்கள் ஆகும். இவை காலப்போக்கில், வேலை தனிப்பெருந் தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்த்துகின்றன.
"கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சமுத அங்கருணை வேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே''
(வேல் விருத்தம் . 4)
இப்பாடல் வரிகள் வேல் உணர்வுக்குச் சான்றாகின்றன. மேலும் மெய்ஞ்ஞான நிலைக்கு, `அயனுமாலும் முறையிட அசுரல் கோடி துகளெழ விடு மெய்ஞ் ஞான அயிலோனே (திருப்புகழ் . 317) என வேலை அருணகிரி நாதர் உணர்த்திப் பாடுகின்றார்.
எனவே வேல் இவ்வாறு பல புலவர் களாலும், முருகனுக்கு ஈடான புகழைப் பெருமளவிற்குச் சிறப்பு பெற்றுள்ளது என்ற தெளியமுடிகின்றது.
"வெல்லுகின்ற தன்மை உடையது ஆதலின் வேல் என்ற பெயர் உண்டாயிற்று . அந்தவேல் ஞான சக்தியின் வடிவத்தைப் பெற்றது''
"முருகனுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறுபடைகள் உண்டு. முருகப் பெருமான் திருவுருவத்தையும், அவன்பால் சார்ந்திருக்கும் வேலையும் தரிசிக்கும் போது கவனித்தால், அது அவன் அடியையும் கரத்தையும் தொட்டுக் கொண்டு முடியுமளவும் செல்வதைக் காணலாம் ''
"இலங்கையில் (கதிர்காமம் ) சில கோயில்கள் மலேசியாவில் பத்துமலைக் கோயில், கோலாலம்பூர் கந்தசாமி கோயில் ஆகியவற்றில் வேலே நிறுவப்பெற்று வழிபடப் பெறுதல் முருகனும் வேலும் ஒன்றே என்ற சிந்தனையையும், முருகனுக்குக் கொடுக்கும் மதிப்பையே வேலுக்கும் கொடுத்தார்கள் என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றன.''
என்ற அறிஞர்களின் கருத்துக்களின் படி வேல் தனியொரு தெய்வமாக விளங்கி இக்காலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது என்பதை உணரலாம்.
மேலைச்சிவபுரி வேல் வழிபாடு
சங்ககால வெறியாட்டு நடைமுறை, அதன் பின் எழுந்த வேல் தனித்த தெய்வமாக ஆக்கப் பெற்ற நடைமுறை இரண்டும் இன்னமும் தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் நடைபெற்று வருகின்றன. "பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நெருக்குப்பை, கண்டனூர், காரைக்குடி, தேவக்கோடடை முதலிய இடங்களிலிருந்து , பாதயாத்திரை மேற்கொண்ட செய்தியை காப்புகளுடன் சென்ற செய்தியை கி. பி. 1788 ல் தோன்றிய செப்பேட்டுப் பட்டயங்கள் நன்கு தூளக்குகின்றன'' என்ற கருத்து மேற்சொன்னதற்குச் சான்றாகும்.
இவ்வாறு தைப்பூசத்திற்குச் செல்லும் வேல்களுள் ஒன்றாகச் சிவபுரி வேலும் விளங்குகின்றது.
மேலைச்சிவபுரி வேல் வரலாற்றுப் பின்னணி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தாலுகா, பொன்னமராவதி 3. கி. மீ தொலைவில் இருப்பது மேலைச்சிவபுரி ஆகும். இஃது சைவம் தமிழ் இரண்டையும் வளர்க்கும் சன்மார்க்கசபை, கணேசர் செந்தமிழக் கல்லூரி இரண்டையும் கொண்டு தமிழுலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. அதனுடன் சுப்பையா கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சக்தி வேலாயுத சுவாமி என்ற வேல் வழிபடு கடவுளாக உள்ளது. இக்கோயில் எழுப்பப்படக் காரணம் சிறப்பிற்குரியதாகும்.
மேலைச்சிவபுரிக்கு அருகில் 2. கி. மீ தொலைவில் உள்ள பிடாரம்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு தலைமுறைகளுக்கு முன்னால் முத்தப்ப செட்டியார் என்பவர் வசித்து வந்தார். இவருடனே , நாடடக்கோட்டை செட்டியார் மரபினர் சிலரும் வசித்துவந்தனர். அப்போது மேலைச்சிவபுரி ஊரார்கள் செட்டியார்கள் இல்லாததால் . முத்தப்ப செட்டியாரை மேலைச்சிவபுரிக்கு அழைத்து வந்தனர்.
முத்தப்பசெட்டியார் சிறந்முருகபக்தர். இவர் வருடம் தோறும் பழனிக்கு மேலைச்சிவப்புரியிலிருந்து, தைமாதம் கார்த்திகை அன்று, காவடிகட்டி பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம், சென்று வந்தபின் தம்வீட்டில் சுக்கிரவாரம் தோறும் முருக பூசனை செய்து திருவிளையாடல்கள் புரிந்து வந்தார். எனவே அவரின் வீடு கோவில் வீடு என்றழைக்கப்பட்டது.
இவரின் திருவிளையாடல் புகழ் பெற்று புதுக்ட்டை மன்னர் தொண்டமான் ராஜா மருதப்பன் அரண்மனை வரை சென்றது. எனவே அரசரும் முத்தப்பச் செட்டியார் இல்லம் வந்து சில அருள் வாக்குகள் கேட்டார். பழனியாண்டவர் அருளால் அவர் சான்ன வாக்குகள் மெய்ம்மையுற , அரசர் செட்டியாருக்கு பொற்சால்வை, மோகரா மாலை, வளைதடி, குத்தீட்டி தந்து வேறென்ன வேண்டும் என்றார். அதற்குச் செட்டியார் தம் கோவில் வீட்டுக்கு ஒரு தாமிர வேல் சாஸ்திரப்படி செய்து தரவேண்டும் என்றார். அரசரும் செய்து தந்து, பழனி அன்னதான மடத்தில் வேலை நிறுத்திப் பூசை செய்யவும் வேண்டிய உத்தரவுகளைச் செய்தார். இவ்வாறு முத்தப்பச் செட்டியார் காவடி கட்டிப் புறப்பட்டு, வேல் எடுத்துச் செல்லும் முறை ஆண்டுதொறும் இன்றுவரை நடைபெற்று வருகின்றது.
மேலைச்சிவபுரியில் உள்ள சுப்பையா கோவில் `வேல்' வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பினும் அது, முருகனுக்கு ஈடான பெருமை பெற்றதாகும். ஒருமுறை புதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் வந்த மருதப்பருக்குப் பிள்ளை இல்லாத குறையை இவ்வேல் போக்கியது என்ற வரலாறும் வழங்கப் பெறுவது இக்கருத்திற்குச் சான்று பயப்பதாகும்.
இவ்வாறு முத்தப்ப செட்டியார் செய்த பணியை, அவரின் பரம்பரையாக வந்த முன்று கரைகாரர்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முரு. ஆறு . ஆறுமுகம் செட்டியார், முருகுமணி, ஆளு. சுப. ஆறுமுகம் , ஆறுமுருகப்பன் , ஆறு, சுப்பபையா, ஆறு. கதிரேசன், ஆறு. அண்ணாமலை, ஆறு. முத்தப்பன், ஆறு . சண்முகம், சுப. முருகப்ப செட்டியார், முரு. பழனியப்பன், முரு. ஆறுமுகம், சுப. பழனியப்பன் , பழ. சுப்பிரமணியன், பழ. முருகப்பன், மு. அண்ணாமலைச் செட்டியார், அண. சுப்பிரமணியம், அண. முத்துராமன், பழ. ஆதிமுலம் போன்றோர் இப்போது இப்பணியைப் புரிந்து வருகின்றனர்.
சுப்பையா கோவில் அமைப்பு:
சுப்பையா கோவில் என்று இக்கோவில் அமைக்கப்பட்டாலும் கோவிலுக்கான முழு அமைப்பையும் பெறவில்லை. ஏனென்றால் இது பங்காளிகள் செய்து கொள்ளும் படைப்பு வீடு. அதாவது ஒரு தெய்வாம்சம் நிரம்பிய வீடாகும். என்றாலும் முன் மண்டபம் , கோபுரம் போன்ற அமைப்புடன் கூடிய உள் மண்டபம் என்ற அமைப்போடு விளங்குகிறது.
உள் மண்டபத்தில் மரக் கேடகத்துள், புதுக்கோட்டை மன்னர் தந்த தாமிரவேல் ஒன்றும், சிறுவேல் ஒன்றும் உள்ளன. இது தவிர, இடும்பன் ஆயுதமான இரும்புத்தடி ஒன்றும் உள்ளது.
இவற்றுள், மன்னர் தந்த வேல் பதினைந்து நாட்கள் பழனி நடையாத்திரையின் போது எடுத்துச் செல்லப்படுகின்றது. சிறுவேல், பெரியவேல் பழனி செல்லும் காலத்தில் கோவில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகின்றது. இச்சிறுவேல் முன்னொரு காலத்தில் பங்குனி உத்திரத்தின் போது குன்றக்குடி கோவிலுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நடைமுறை இப்போது பின்பற்றப் படவில்லை மேலும் இச்சிறுவேல் மன்னர் தந்த வேலுக்கு முன்னதாக முத்தப்பச் செட்டியாரால் பழனிக்குக் கொண்டு செல்லப் பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு செய்தியும் நிலவுகின்றது. இடும்பனுக்கு உள்ள தடிக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியன செய்யப்படுகின்றன. மற்றவை ஏதும் இல்லை.
வழிபாடு :
படைப்பு வீடு என்பதால் மற்ற கோவில்கள் போலத் தினசரி வழிபாடுகள் கட்டாயப் படுத்தப் படவில்லை . வாரந்தோறும் வரும் வெள்ளி, மாதம்தோறும் வரும் கார்த்திகை, தினங்களில் அபிஷேகம் , தீபாராதனை முதலியன செய்யப் படுகின்றன. இவை தவிர நெய்வேத்தியம் போன்றனவும் கட்டாயப் படுத்தப்படவில்லை. விரும்பி எவர் எது தரினும் படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகின்றது.
பொங்கல் தினத்தில் சர்க்கரைப் பொங்கல் வைக்கப் பட்டுப் படையல் செய்யப் படுகின்றது. சிவன் ராத்திரியின போது ஆறுகாலப் பூஜை நடைபெறுகின்றது.
சிறப்பு வழிபாடு:
ஆண்டு தோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, நடையாத்திரை சிறப்புற நடை பெற்று வருகின்றது. நடையாத்திரையை வழி நடத்திச் செல்வது வேலே ஆகும் . எவ்வூரினரும் மேலைச்சிவபுரியைக் கடந்து நடை பயணம் பழனிக்கு மேற்கொள்வாராயின் இக்கோயிலுக்கு வந்து விபூதி பெற்றே செல்வர். எனவே தைப்பூச நடையாத்திரையின் போது சிறப்பு வழிபாடுகள் இயற்றப் படுகின்றன.
பெரிய கார்த்திகை (கார்த்திகை தீபம்) அன்று கோவில் வீட்டு வேல் கொண்டு செல்லும் சாமியாடி மாலையிட்டுக் கொள்கின்றார். தூய விரதம் மேற்கொண்டு அன்று முதல் தினசரி அபிஷேகம் , பஜனை செய்கின்றார். அவருடன் கோவில் வீட்டுப் பங்காளிகள் , ஊர்மக்கள் இணைந்து பக்திப் பாடல்கள் இசைக்கிறார்கள்.
பாதயாத்திரை விழா: தைப்பூசத்திற்கு 5 நாள் முன்னதாக வரும் கார்த்திகை அன்று பாத யாத்திரை தொடங்கப் பெறுகின்றது. அக்கார்த்திகை அன்று, படைப்பு வீடு, கழுவிச் சுத்தம் செய்யப் பெற்று, மாவிலை, விளக்குகள், பூக்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப் பெறுகின்றது. பின்னர் காவடி கட்டுபவர்கள் அங்கு காவடி கட்டுகிறார்கள் சிலர் வீட்டிவிருந்தே காவடியுடன் வந்து இங்கு சேர்கின்றனர். மதியம் அன்னதானம் நடைபெறுகிறது . அன்னதானம் படைப்பு வீட்டைச் சார்ந்த திருமண மண்டபத்தில் , பழனி முருகன் படம் முன்பு படையலிடப்பட்டுப் படைக்கப் படுகின்றது. இரவு நடையாத்திரை தொடங்கப் பெறுகின்றது. வேலை எடுத்துக் கொண்டு சாமியாடிவர , மேளவாத்தியம். கொட்டு, வேட்டு, மணி,அரோகரா கோஷம் முழங்க, அன்றைய கட்டளை பங்காளியர் பரிவட்டம் கொண்ட, வழியனுப்ப வர, ஊர் எல்லை வரை மக்கள் சென்று வழியனுப்புவர் , வேல் முன்னும் காவடிகள் பின்னும் செல்ல நடையாத்திரை தொடக்கம் பெறுகிறது. வழியில் உள்ள பிரான் மலைச் சிவன் கோவிலில் பானக பூஜை , செய்வித்துச் சமுத்திராபட்டியை வேல் அடையும். மாலை வேலுக்கு அபிஷேகம், ஆராதனை , காவடிக்கு அன்னதானப் பூஜை , செய்து பின் குயவபட்டியை வேல் மற்றும் காவடி அடையும், அதன் பின் அதே முறைப்படி அபிஷேக, ஆராதனை, அன்னதானம் தொடர , செம்மடைப்பட்டி அடைவர், பின் முன்முறைகள் தொடர, குழந்தை வடிவேலன் சன்னதியில் பானக்க பூஜை முடிந்து, காலை 7 மணிக்குக் கடுக்காய்பாறை செல்லும்.
கடுக்காய் பாறையில் வேல் மட்டும் குன்னக்குடி வேலாயுத (வேல்) சுவாமியுடன் இணைந்து பழனி அன்னதான மடம் செல்லும். காவடிக்கும் பாத யாத்திரையினரும் வேல் போனபின் பிரிந்து இடும்பன் குணம் அடைவர். பிறகு தீர்த்தமாடி இடும்பருக்குப் பூஜை செய்து. இடும்பர் மலை தென்பாகத்தில் குன்னக்குடி, மேலைச்சிவபுரிக் காவடிகளுக்கு அன்னதான பூஜை நடைபெறும்.
பழனி அன்னதான மடத்திலிருந்து காவடிகளுக்கு வரவேற்பு தரப்படும்.
அன்னதான மடம் வழிபாடு:
மடத்தில் அன்னதானமட பார்வதி அம்மாள் இரும்பு வேலாயுதம், தேவகோட்டை நகரத்தார் சொர்ணரத்தின வேலாயுதம், குன்றக்குடி மடத்து வெள்ளி வேலாயுதம், மேலைச்சிவபுரி தாமிர வேலாயுதம் ஆகியவை ஆறுகால் சவுக்கையில் ஒன்றாய் வைக்கப்பட்டு புனர்பூசம் முதல் ஐந்து நாட்களுக்கு அபிஷேகம் , பூஜை , ஆராதனை நடைபெறும்.
ஆறாம்நாள் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பழனி தேவஸ்தானத்தில் இந்தத் தொடர் நிகழ்ச்சி காலங்காலாமாய் நிகழ்ந்து வருவதால் இவர்களின் காவடிக்குக் கருவறை சென்று பூஜிக்க தனிச் சிறப்பு அனுமதி அளிக்கப் படுகிறது. பிறகு மலைத்தீபம் ஏழாம் நாள் பார்க்கப்பட்டு, அன்னதான மடத்தில் பரிவட்டம் கட்டும் விழா நடை பெறுகிறது. இதில் முறைகாரர்கள், சாமியாடிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலைச்சிவபுரி நகரத்தார் மட்டும் , பூசத்திற்கு நான்கு நாள் கழித்து ஒரு பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்புடன் செய்கின்றனர். இதற்கும் தனித்த அனுமதி உள்ளது.
இவை முடித்தபின் வேல் திரும்பும் விழா நடைபெறுகிறது. காவடிகளும் வேலுடன் திரும்புகின்றன. காவடி எடுக்க வேண்டிக் கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், காவடிகள் மீண்டும் நடைபயணமாகவே கொண்டுவருவத கட்டயமாக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் , சமுத்திரபெட்டி, ஆகிய இடங்களில் வேல் நிறுத்தம் பெற்று பூஜை கொள்கிறது. பிறகு சாமியாடிச் செட்டியாரிடம் விபூதிப்பிரசாதம், மரியாதை பெற்று, மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள எடுத்தலங்கண்மாய்க்கு வேல் வர, மீண்டும் ஊர் மக்கள் பங்காளிகள் வரவேற்பு நிகழ வேல் தன்னிடம் சார்கிறது.
இவ்வாறு பதினைந்து நாள் திருவிழா சீரும் சிறப்புமாக லட்சம் மக்களைத் தாண்டி நடையாத்திரை விழா சென்று கொண்டுள்ளது. ஏறக்குறைய வேலின் பயணம் 270 கிலோமீட்டர்களாக இருக்கலாம். வேல் போகும் வழியில், பலவித திண்பண்டங்கள், நீர் ,மோர், இளநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வேல் புறப்படும் போதும், வரும் போதும் குறிகளும் கேட்கப்படுவதுண்டு, வேலுக்கு அபிஷேகம் மட்டுமே, அன்னதான பூஜை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவடி கட்ட சில வரையறைகள்
காவடி அழகுற தண்டு இணைக்கப் பட்ட , வெல்வெட் துணிகளால் , மயிலிறகால் அழகு செய்யப்பட்ட சக்கரை வைத்துக் கட்டப் பெறுகின்றது. இச் சக்கரையே பிறகு பழனியில் அபிஷேகப் பொருளாகின்றது. இதற்கென கோவில் வீட்டில் 11ரு தந்து பதிவு பெற வேண்டும். தூய விரதம் பெரிய கார்த்திகையிலிருந்து காக்கப்பட வேண்டும். துக்க வீடு, புலால் வீடு, முதலியன தவிர்க்கப்படுகின்றன. பச்சை நிற வேட்டிகள், மணி மாலைகள் அணியப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே காவடிக்கு உரியவர்கள் . பெண்கள் வீட்ட விலக்கு நேரங்களில் விரதக்காரர்களுக்கு சமைப்பதில்லை. கண்ணில் எதிர்படுவதுமில்லை. காவடி செல்லும் போதும் திரம்பி வரும் போதும் நடையிலேயே வரவேண்டும். குளித்த பின்பே காவடியைத் தொட உரிமை உண்டு . நடுவில் இயற்கை உபாதைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையாயின் மீண்டும் குளிக்க வேண்டும்.
வேல் சாமியாடி தேசிகர்
இவர்கள் ல்லுப்பட்டியிலிருந்து ஒரு காலத்தில் பூஜைக்காக அழைத்து வரப் பெற்றிருக்கின்றனர். ஏறக்குறைய புதலைமுறைகளாக பூஜைபுரிவதுடன் இவர்களே தற்போது வேலையும் சுமந்து நடைபயணம் மேற்கொள்கின்றனர். தகவாளியின் நினைவுக்கு எட்டிய வரை, சுப்பையா 30 வருடம், செம்பு லிங்கம் 30 வருடம், ராமையா 3வருடம் , மாணிக்கம் (தற்போது ) 25 வருடம் வேல் கொண்டு செல்லும் பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மேற்சொன்ன விரதம் பொருந்தும், மேலும் செட்டியார் இனத்தாரிடமிருந்து இவர்கள் எவ்வாற வேல் கொண்டு செல்லும் பணியைப் பெற்றனர் என்பத நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களுக்கென சில கைமாறுகள் செய்யப் பெறுகின்றன. இருப்பினும் நடை யாத்திரையின் போது மக்கள் வழங்கும் தட்சிணை இவர்களுக்கானதாகக் கொள்ளப்படுகின்றது.
வேல் வழிபாட்டில் சிலவரை முறைகள்
வேல் நடையாத்திரை சென்றிருக்கும் போது மங்கல விழாக்கள் நிகழ்த்தப்படுவதில்லை. இறப்பு நிகழ்ந்தால் கொட்டு கொட்டப்படுவதில்லை. வேலின் மேற்புறம் வெள்ளி , தங்க. முருகனின் கழுத்தளவு அங்கி சார்த்தப் பெற்று வருகின்றது. இஃது வேலையே முருகனாக வழிபடும் வழிபாட்டின் பாற்பட்டதாகும்.
மேலும் குழந்தை பிறந்தால் கரும்புகழிகள் கொண்டு தொட்டிச் சீலை வழி தொட்டி கட்டப்படுதல் உண்டு. கொப்பனாபட்டி ஊரார் சிலர் குழந்தை பிறந்ததும் மொட்டைஅடித்துப் பேர் வைக்க இங்கு வருகின்றனர்.
எண்ணெய் தீபம் ஏற்ற, மற்ற செலவுகளுக்கென பங்காளிகள் முறைப்படி ஆண்டாண்டு பணம் தருகின்றனர் . என்றாலும் வரும் வருமானம் குறித்த கணக்கு வழக்ககள் கேட்டுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறாக பழனி ஆண்டவரை, மேலைச்சிவபுரி சார்ந்த மக்கள் வேல் வடிவில் கண்டு வணங்குகின்றனர். வேலே முருகனாக வழிபடும் இம்முறை சங்ககாலந் தொட்ட இன்று வரை நடைபெற்று வந்திருப்பது எண்ண எண்ண இனிப்பதாகும். மேலும் வெறியாடல் முறை போன்ற வழிபாட்டு முறையும் இங்கு சுட்டப்பட்டுள்ளது. முருகவழியாடு இன்றும் பரவலாக, வழக்கில் இருந்து வருவது சிற்ப்பிற்குரிய ஒன்றாகும்.
1. ஔவை. சு. துரை சாமிப்பிள்ளை. (உ. ஆ ) , ஐங்குறுநூறு. அ . ப. க. சிதம்பரம் 1957 , ப. 57 முதல் 77 வரையுள் செய்திகளின் சுருக்கம்.
2. கி. வ. ஜகந்நாதன் , கந்தவேள் கதையமுகம் கந்தவேள் பதிப்பகம். சென்னை. 94 . ப. 183.
3. கி. வ. ஜகந்நாதன் (உரை . ஆ) அநுபூதி விளக்கம் , அமுத நிலையம். சென்ளை . 1967. ப. 53.
4. ப. அருணாசலம். முருகன் வழிபாடு. வேலும் மயிலும் . தமிழ் ஔ இதழ் 11. 197374 பக். 3. 4.
5. டாக்டர். சுப. திண்ணப்பன் (க. ஆ) தைப்பூசம், அருள் மிகு தெண்டாயுதபாணி கோயில் மஹா கும்பாபிஷேக மலர், சிங்கப்பூர், 1996. ப. 53 .
6. சுப்பையா கோவில் பங்காளிகள் மகேஸ்வர பூஜைமலர், சுப்பையா கோவில் வரலாறு . மேலைச்சிவபுரி 1982 பக் இல்லை . (கட்டுரையின் சுருக்கம்)
7. தகவளாளி : செ. பழனியப்பன், வயது . 43. ஆண் மளிகைக் கடை வைத்துள்ளார். வேல் பூஜை செய்யும் குடுபத்தவர்.
muppalam2006@gmail.com

செவ்வாய், ஜூலை 21, 2009

கல்வி தரும் சகலகலாவல்லி மாலை


துயரம் நீங்க வேண்டுமானால் `சுந்தரகாண்டம்' வாசியுங்கள். மகப்பேறு வேண்டுமானால் "கண்காட்டும் நூதலானும்'' என்ற சம்பந்தர் பாடலை பாடுங்கள். செல்வம் பெறவேண்டுமானால் கண்ணதாசன் படைத்த `பொன்மழை' படியுங்கள். கல்வி பெருக வேண்டுமானால் குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையைப் படியுங்கள் என்ற பாராயணமுறை, மரபாக இன்று வரை தமிழகத்தில் பின்பற்றப் பெறுகின்றது.
இறைவனிடம் , இவற்றைத் தந்தருளவேண்டும் என மேற்கண்டபாடல்கள் முறையிடுகின்றன் அதனால் விரும்பிய செல்வங்களைத் தரும் வல்லமையை அப்பாடல்கள் பெற்றுவிடுகின்றன. இவற்றைப் பாடுவதன்முலம் பயனும் கிட்டுகின்றது பக்தியும் மேலோங்குகின்றது. இன்றைக்குக் `கற்றதனால் ஆயபயன்' என்றமுறை, சற்று மாறுபட்டு `பயனுக்காகக் கற்றல்' என்பது நிகழத் தொடங்கிவிட்டது. ஆகவே பயன்கருதி பல பனுவல்கள் பாராயணம் செய்யப்பெறுகின்றன.
`சகலகலாவல்லி மாலை' என்பது பத்துபாடல்கள் கொண்டபதிகம் ஆகும். `இந்துஸ்தானி ' மொழியை அறிந்து கொள்வதற்காக நாமகளை வேண்டி இப்பாடல்களைக் குமரகுருபரர் இயற்றினார். இப்பத்துப்பாடல்களைப் பாடிமுடித்ததும், சரஸ்வதிதேவி அருளால் குமரகுருபரருக்கு கற்காமலே இந்துஸ்தானமொழிப்புலமை வாய்த்தது என்பது கர்ணபரம்பரைக் கதையாகும்.
இப்பத்துப்பாடல்களில் நாமகளிடம் குமரகுருபரர் முறையான, செழுமையான கல்வியைத் தந்தருள வேண்டுகின்றார். கலைகளுக்கு அரசியான சரஸ்வதிதேவியை, சகலகலை வல்லவளாக நமக்கு அவர் அறிமுகப்படுத்தி, அவளிடம் கலைகளைப்பெற நம்மை ஆற்றுப்படுத்துகின்றார். இப்பத்துப்பாடல்களைப் பாடுவதால் கல்வி பெருகுமா?, இப்பாடல்களில் என்ன சொல்லி குமரகுருபரர் வேண்டுகின்றார்? என்ற கேள்விகளுக்கு விடைகாண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
1. வெள்ளையுள்ளம்
சகலகலாவல்லி மாலையில் இடம்பெற்றுள்ள பத்துப்பாடல்களும் படிப்படியாக கல்விவளம் சேர்க்கும் வகையில் இயற்றப் பெற்றுள்ளன. கற்பவனுக்குக் கொலை, களவு, குழப்பம், வஞ்சனை , பொய், கரவு போன்ற குற்றங்கள் அனுகா வெள்ளையுள்ளம் தேவை என முதல்பாடல் எடுத்துரைக்கின்றது.
"வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க, என் வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் தகாதுகொலோ...''(1)
`சரஸ்வதிதேவியே, வெண்தாமரையில் நிற்கும் உன் மெல்லிய பாதங்கள், எந்தன் வெள்ளையுள்ளம் எனும் தாமரையில் நிற்கக் கூடாதா?' என மறைமுகமாக கற்பவரின் வெள்ளையுள்ளம் குறித்து இப்பாடல் எடுத்துரைக்கின்றது. உள்ளத்தூய்மை இருந்தால்தானே கற்கும் கல்வியிலும் தூய்மை இருக்கமுடியும். உள்ளம் தீயதன் வழிப்பட்டால் காப்பியம் முதலானவற்றைப் படிக்கும்போது, தீயவர்களின் செயல்கள் அல்லவா உள்ளத்தில் இடம்பிடிக்கும் அத்தீயவர்கள் சென்ற வழியில் அல்லவா மனம் செல்ல நினைக்கும். எனவே தீயதில்லா உள்ளம் வேண்டும் என குமரகுருபரர் இப்பாடலில் கருதியுள்ளார்.
கற்கவரும் மாணவசமுதாயம் நல்ல உள்ளத்துடன் கல்விநிலையங்களுக்கு வரவேண்டும் என எண்ணும் அவர் வழிப்படி நடந்தால் இற்றைக்கு மாணவ, மாணவியர்க்கு எதிராக நடக்கும் `கேலிச்சிக்கல்கள்' இல்லாமல் போகும் என்பது உறுதி.
2. நாற்பாடல் புனையும் திறம்
வெள்ளையுள்ளத்தில் நாமகள் வந்து நின்றுவிட்டால் எவரும் படிப்பாளராக, படைப்பாளாராக மாறிவிடலாம். படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாணவர்கள் படைக்கும் ஆற்றலைப் பெறவேண்டும் என குமரகுருபரர் நினைக்கின்றார்.
"நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய்...''(2)
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்குவகைத் தமிழ்ப்பாக்கள் புனையும் அளவிற்கு தமிழறிவு பெற வேண்டும் தமிழ் மொழியைக் கற்பது மட்டுமல்லாது, படைக்கவும் திறம் பெற்றிருக்க வேண்டும் என்ற குமரகுருபரரின் தமிழ்க்கல்வி, தமிழ்நாட்டிற்கு என்றைக்கு ஏற்படுமோ? என்ற ஏக்கம் இப்பாடலைப் படிக்கும்போது எற்படுகின்றது. உள்ளத்தூய்மைக்குப்பிறகு, தாய்மொழிக்கல்விக்கு அவர் தந்துள்ள முதன்மைஇடம் இக்கால கல்வியாளர்கள் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். தூய்மையான உள்ளத்தில் தாய்மொழிக்கல்விதான் உடன்புக முடியும் என்பதைக் குமரகுருபரர் உணர்ந்து கொண்டு, மேற்கண்ட கல்வி முறையைக் காட்டியுள்ளார்.
3. செந்தமிழ்க்கடல் குளித்தல்
தமிழில் பாடல் புனையும்திறம் பெறுவதோடு மட்டும் குடரகுருபரரின் எண்ணம் நிறைவு பெறவில்லை. தமிழ் என்பது கடல். அதில் குளித்து,முழ்கி, முத்துக்களை அள்ளி வர அனைவரையும் அவர் வேண்டுகின்றார்.
"அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆதார்ந்து உன் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ...''(3)
என்ற அவரின் தமிழ்கடல் கல்விவிருப்பம் தமிழ்ப்படிப்போருக்கு தேவையான விருப்பமாகும்.
4. பிறதுறைக்கல்வி.
தமிழ்க்கல்வியை முதன்மையாகக் காட்டிய குமரகுருபரர், பிறதுறைக்கல்வியைப் புறக்கணிக்கவில்லை.
"தூக்கும் பனுவலத் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைத்தோய்,
வாக்கும் பெருப் பணித்தருள்வாய், வட நூற்கடலுந்,
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும், தொண்டர்செந் நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே.''(4)
இப்பாடலில் `துறைதோய்ந்த கல்வி' என வருவதால் பல்துறைக்கல்விகளைக் கற்கவும் குமரகுருபரர் வழிகாட்டியுள்ளார். அறிவியல், புவியியல், வரலாறு, கணிதம், வங்கியியல், ஆளுமையியல், கணினியியல் எனப் பல்துறைகளாகக் கல்விஉலகம் தற்போது பரந்து விரிந்து நிற்கின்றது. இவ்வாறு கல்வி வளருமென அப்போதே உணர்ந்திருந்த குமரகுருபரர், அவற்றைக் கற்கவும் வழிகாட்டியுள்ளமை அவரின் எதிர்காலஅறிவிற்குச் சான்றாக உள்ளது. மேலும் இப்பல்துறைக்கல்விகளையும் வழங்குபவள் சகலகலாவல்லி என அவர் இப்பாடலுள் முடிந்துள்ளார்.
வடநூற்கடலும், செழுந்தமிழ்ச் செல்வமும் ஒவ்வொருவருக்கும் கல்வியாகக் கிடைக்கவேண்டும் என்பது இப்பாடலின் வழியாகக் கிடைக்கும் மற்றொரு கருத்தாகும். இவ்வெண்ணம் அவரின் பிறமொழிகாழ்ப்பின்மையை விளங்குவதாக உள்ளது.
`வடநூற்கடலும், தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே' என்ற இவ்வரி இவர் இந்துஸ்தானப் புலமையைக் கலைமகளிடம் இருந்து பெற்றதற்கான அகச்சான்றாக உள்ளது.
5. பண், பரதக்கல்வி
தமிழ்க்கல்வி, பிறதுறைக்கல்வி கற்றுத்தேர்ந்தபின், அதற்கு அடுத்த நிலையில், இசை, நாட்டிய நாடக அறிவு பெற வேண்டும் என மாணவர்களை குமரகுருபரர் வேண்டுகின்றார்.
`பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதெய்தநல்லாய்'(6)
என்ற குமரகுருபரின் கல்வி முறை, `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்லபாட்டு' என பாரதியாலும் பின்பற்றப்பெற்றுள்ளமை இங்கு குறிக்கத்தக்கது. பண், பரதம், நாடகம் முதலானவை மனித உள்ளங்களை மகிழ்விக்கும் அழகுக்கலைகளாகும். இதனைக் கற்பதன்முலம் மனிதமனம் இன்பம் கொள்ளுகின்றது என்பதால் இக்கல்வியையும் கல்விமுறையுள் ஒன்றாகக் காட்டியுள்ளார் குமரகுருபரர். தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள `கற்றலில் இனிமைப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள்' பாட்டும், நடனமும் கலந்தவை என்பது இங்கு எண்ணத்தக்கது.
6. கல்வியும் பயனும்
படிக்கின்ற கல்வி பயன் நல்க வேண்டும். பயன்நல்காக்கல்வி பயனற்றதாகும்.
`பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பால்
எட்டும்படி நின் கடைக்கண்நல்காய்'(7)
என கல்விப்பயன் நல்கத் தேவியைக் குமரகுருபரர் வேண்டுகின்றார். பண், பாட்டு என இசைகல்வி கற்றபின்னால், அவவிசைப்பாடல் தரும் பொருள், அப்பொருள்தரும் பயன் ஆகியனவற்றை உணர்ந்து, அதன்படி நடக்க வேண்டும் என்ற இவரின் கூற்று `கற்றபின் நிற்க அதற்குத்தக' என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கியமாக உள்ளது. மேலும் பாட்டு, பொருள், பயன் அனைத்தும் தருபவள் அவளே என முழுஅடைக்கலாமாக, நாமகளைப் பணிவதாகவும் இப்பாடல் விளங்குகின்றது.
7. அவதானம், விற்பன்னம்
இதுவரை படித்தல், படைத்தல் என்ற கல்விப்படிநிலைகளைக் காட்டிய குமரகுருபரர் எட்டாம் பாடலில் அதற்கடுத்த கல்விப் படிநிலையை எடுத்துரைக்கின்றார். படித்தவற்றைத் தக்க சான்றுகளுடன் சொற்பொழிவாக எடுத்துரைத்தல், சொற்பொழிவாற்றும்பொழுது ஏற்படும் பல்வகை நிகழ்வுகளை அவதானித்தல் முதலானவை முத்தகல்விப்படி நிலைகள் எனக் குமரகுருபரர் கொள்கின்றார்.
சொற்பொழிவாற்றல் என்ற படிநிலைக்கு, மனப்பாடம் செய்தல், ஏற்றஇறக்கத்துடன் பேசுதல், மேற்கோள்களைக்கையாளல், இசையுடன் பாடுதல் போன்ற பல்வகைத்திறமைகள் வேண்டும். அவதானம் எனும் போது, பதின்கவனகம், பதினெனெண் கவனகம் நிகழ்த்தும்போது, முறையே பத்து, பதினெட்டு கவனஈர்ப்பு அறிவு தேவைப்படும். எனவே இவை இரண்டும் செய்ய வல்லார் கற்றாருள் சிறந்தவர் ஆகின்றார். அவரே கற்பிக்க உகந்தவர் என குமரகுருபரர் முடிகின்றார்.
"சொல்விற் பனமும், அவதானமும்,கல்வி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய் ''(8)
என்ற இத்தகுதிகள் உடையவரே ஆசிரியர் ஆகும் நிலைபெறுவர்.
8. மெய்ஞானக்கல்வி
மேற்கூறிய அறியாமை அகற்றும் கல்வியைக் கற்றபின்னர், அதனோடு மட்டும் நின்றுவிடாது, மெஞ்ஞானக்கல்வி பெறவேண்டும் என உயர்வழிகாட்டுகின்றார் குமரகுருபரர்.
`சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன'(9)
என்ற அவரின் கூற்று `வாலறிவனைத் தொழுவதே' கல்வியின்பயன் எனக் காட்டுவதாக உள்ளது. சொல், பொருள் அறிந்தாலும் அதனுளே மறைந்துகிடக்கும் உயிரான மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன ? என அறிய வேண்டுவதே ஒவ்வொருவரின் சிறந்த கல்வி என்ற குமரகுருபரரின் கல்விமுறை, ஆன்மக்கல்வி முறையாகும். மனக்கோணல் நீக்கும் நூற்கல்வியை முதலில் கற்று, அதன்பின் ஆன்மக்கூன் நீக்கும் ஞானக்கல்வி அடையக்கூறும் குமரகுருபரர் கல்விநெறி உயிர்களை உய்வடையச் செய்யும் நன்னெறி என்பதில் ஐயமில்லை.
9. பயன்
இப்பத்துப்பாடல்களைப் படிப்பதால் ஏற்படும் பணனையும், நூற்கல்வி, ஞானக்கல்வி, கற்றுத்தேர்ந்தால் வரும்பயனையும் இறுதிப்பாடலில் குமரகுருபரர் காட்டியுள்ளார். பதிகத்திருக்கடைக்காப்பு முறைப்படி பயன் கூறுவது தேவை என்பதால் இப்பாட்டு இன்றியமையாததாகின்றது.
"மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய் ''(10)
என முழுமைக்கல்வி கற்றவரை, எந்நிலமன்னரும் வணங்கிநிற்பர் எனப் பயன் கூறுகின்றார் குமரகுருபரர்.
இம்மாலையின்முலம் உள்ளத்தூய்மை கொண்டு, தமிழ்க்கல்வி, பிறதுறைக்கல்வி, வடமொழிக்கல்வி தேர்ந்து, பண் நாட்டியம் பயின்று, அவதானம் விற்பன்னம் முதலான அறிவு மிக்குடைச் செயல்களில் ஈடுபட்டு நூற்கல்வி நிறைவுபெறவேண்டும் என்பது தெரியவருகின்றது. இவ்வரிய வழியைக்கூறுவதன் முலம் இப்பாடல்களைப்படிப்பதால், இப்பாடல்கள் வழி நடப்பதால் நூற்கல்வி பெருகும் என்பது தெளிவு மேலும் ஒவ்வொரு பாடலும் கல்வியை வேண்டி கலைமகளிடம் முறையிடுவதாக அமைவதால், வேண்டுதல் இறைவியால் நிவேற்றப்படும் என்பதால் கல்விபெருகும் என்பது உறுதி இப்பதிகத்தைப்பாடிக் குமரகுருபரர் வடமொழி அறிவு பெற்றார் என்பதாலும், சிறுவயதில் அவர் தெய்வத்தன்மையால் பேசும் சக்தி பெற்றார் என்பதாலும், அவரின் சொற்கள் தெய்வத்தன்மை பொருந்தியனவாக இருக்கும் என்பதாலும் இப்பதிகத்தைப் பாராயணம் செய்வோர் கல்விப்பெருமை பெறுவர் என்பதில் ஐயமில்லை.
நூற்கல்வி பெற்ற பின்னால் ஞானக்கல்வி பெறுவது ஒவ்வொரு உயிர்க்கும் தேவையான உய்யும்முறை எனக்காட்டி, அது உடையோர் எவராலும் (மன்னராலும்) மதிக்கப் பெறுவர் என கருதும் குமரகுருபரர் நெறிப்படி அனைத்து உயிர்களும் முழுமைக்கல்வியை நோக்கிப் பயணித்தால் உலகம் நன்மைபெறுவது உறுதி.

வியாழன், ஜூலை 16, 2009

பெண்ணியத்தின் மூன்று நிலைகள்

பெண்ணியம் அதன் துவக்க காலத்தில் இருந்து இற்றைக் காலம் வரை முன்று முக்கிய நிலைகளைக் கடந்து வந்துள்ளது. அவற்றை முதல் அலை, இரண்டாம் அலை, முன்றாம் அலை என்று வகைப்படுத்தி உரைக்கின்றனர் பெண்ணிய வாதிகள்.முதல் அலை பெண்ணியத்தின் துவக்ககால நிலையை இம்முதல் அலை குறிப்பிடுகிறது. இவ்வலை பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் தோற்றம் கண்டது. இது பெண்களின் சமுக மற்றும் சட்டங்கள் இவற்றில் காணப்படும் ஆண் பெண்ணுக்கான ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்து அவற்றைச் சமப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெண்ணியவாதிகளால் கையாளப்பெற்றது. நடுத்தரப் பெண்ணின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணச் சட்டங்கள் போன்றவற்றில் காணப்பட்ட சமமற்றத் தன்மையை எதிர்த்துப் போராடுவதாக இவ்வியக்கம் அக்காலத்தில் அமைந்திருந்தது. இது பணிக்குப் போகும் பெண்களின் இன்னல்கள் குறித்துக் கூட கருத்துத் தெரிவிக்க இயலாத தொடக்க கால பெண்நிலை வாத அடிப்படை வாய்ந்ததாக இவ்வலை இருந்தது. மேலும் இது நவீனத்துவ அடிப்படையில் இவ்வியக்கத்தை நடத்திச் செல்லவில்லை. இத்தகைய பின்னடைவுகள் இருந்த போதும் இதுவும் ஓரளவிற்குத் தான் கொண்ட கொள்கைளில் வெற்றிகண்டது. இதன் முலம் பெண்கள் உயர்கல்வி கற்க இருந்த தடைகள் நீங்கின. பெண்களின் கல்வியில் பல மாற்றங்கள் உருவாக இம்முதல் அலை காரணமாக அமைந்தது. பெண்கள் ஆண்கள் பங்கேற்கும் அனைத்துத் தகுதித்தேர்வுகளிலும் பங்கேற்றுத் தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பெற்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஆயிரத்து எண்ணூற்று எழுபதாம் ஆண்டில் திருமணமான பெண்களின் சொத்துரிமை குறித்த சட்டம் இயற்றப்பட்டது. மேலும் பெண்களுக்கு ஓட்டுரிமையைப் பெற்றுத்தந்தது. மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு போன்றவற்றில் ஓரளவிற்கு பெண்களின் சமத்தன்மை எடுத்துரைக்க வழிகள் செய்யப்பெற்றது. முதல் உலகப்போரின் நிறைவு வரை பெண்ணியத்தின் முதல் அலை எனப்படும் இவ்வெழுச்சி மெல்ல நாடுகள்தோறும் வீச ஆரம்பித்தது.இரண்டாம் அலை முதல் உலகப்போரின் நிறைவில் உலகஅளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக பெண்களின் சமுக வாழ்விலும் பல முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது வாக்கில் பிரான்ஸ், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்ணியக் கூறுகள் அடங்கிய பல நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. இரண்டாம் பாலினமாகத் தள்ளிவைக்கப் பெறும் பெண்கள் அதனின்று முன்னே வர திடமாகச் செயல்பட்டனர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டில் நடத்தப் பெற்ற மிஸ் அமெரிக்கா என்ற அழகிப்போட்டிக்கு எதிராக அமெரிக்காவில் மிகப் பெரிய மறுப்புக் கூட்டங்களும்,பேரணிகளும் நடைபெற்றன. இது குறிக்கத் தக்க விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியது. இவ்வகையில் பல போராட்டங்களை உலக அளவில் பெண்கள் நடத்தி வந்தனர். இக்காலத்தில் பெண்ணியம் கறுப்புப் பெண்ணியம், ஓரினச்சேர்க்கைப் பெண்ணியம், சமுகப் பெண்ணியம் எனப் பலவகைகளில் பிரிவு பட்டு வளரத் தொடங்கியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டில் பிரிட்டனில் போர்டு மகிழ்வுந்து தயாரிப்பகத்தில் நிலவிய ஆண், பெண் ஊதிய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வென்றனர். இதுபோன்று உலகம் முழுவதும் பல நிலைகளில் பல போராட்டங்களைச் செய்ய இவ்வியக்கம் வளர்ந்தது. தனது என்பதே தன் அரசியல் என்ற முழக்கம் ( வாந நசளடியேட ளை டிடவைஉயட) என்ற பதாகை இவ்வியக்கத்தின் முக்கியமான முழக்கமாக இருந்தது. இவ்விரண்டாம் அலை பெண்களுக்கான சமுக வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் இனப் பெருக்கம், விழைவு, கலாச்சாரக் கட்டு என்ற சுழல்வட்டத்தில் பெண்கள் தங்களுடைய சுய வாழ்வை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வலை எடுத்துக் காட்டியது. மேற்கத்திய நாடுகளில் இவ்வலை பெண்களின் நிலை குறித்த விழிப்புணர்வு எண்ணங்களை விதைத்தது. மற்றம் உலகு தழுவிய பெண் விடுதலை முழக்கங்களுக்கு இடமளித்தது.இவ்வகையில் பெண்ணியத்தின் இரண்டாம் அலை செயல்பட்டது.முன்றாம் அலை பெண்ணியத்தின் முன்றாம் அலை தோன்றக் காரணமாக இருந்த பெண் ரெபாக்கா வாக்கர் என்பவள் ஆவார். இவர் அலைஸ் வாக்கர் என்பவரின் குழந்தை ஆவார். மேலும் இவர் குளோரியா ஸ்டினிம் என்பவரால் அவரின் கொள்கை சார் குழந்தையாக வளர்த்தெடுக்கப் பட்டவர். இவர் எழுதிய "நானே முன்றாம் அலை '' ( ஐ யஅ கூந கூசைன றயஎந ) என்ற தலைப்பிட்டு எழுதியக் கட்டுரையே முன்றாம் அலை தோன்றக் காரணமாக இருந்தது. இந்த கட்டுரையின் முலம் இளம் பெண்ணியவாதிகள் ஒருங்கு திரண்டனர். இதன் வழியே தங்களின் வயது, இனம், பால், பிறப்பிடம், பொருளாதார நிலை, விழைவு நிலை, கல்வி நிலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தடைகளை, சமமற்ற தன்மைகளை வெளிப்படுத்தி அவற்றில் தன்னிறைவை அடையச் செய்ய விரும்பும் மாற்றங்களை இவர்கள் தேட ஆரம்பித்தனர். சமுக இயக்கதிற்கான வழியைத் தேடுவதாக இவ்வலை அமைந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றாறில் தோற்றம் பெற்ற இந்தப் பெண்ணிய அலை பெண்ணியத்தின் முழுத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது. இளம் பெண்கள் புற உலகால் பாதிக்கப் பெறும் நிகழ்வுகளுக்கு எதிராக உலகு தழுவிய குரலாக இவ்வமைப்பின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எங்கு இளம் பெண்களுக்கான முன்னேற்றச் செயல்கள் நடத்தப்பெறுகின்றனவோ அங்கெல்லாம் பொருளாதார அடிப்படையிலும் இவ்வமைப்பு உதவி செய்து வருகிறது. இவ்வகையில் பெண்ணிய இயக்கம் முன்று அலைகளாகக் கால நிலையில் பிரிந்து பெண்களை முன்னேற்றி வருகிறது.

வெள்ளி, ஜூலை 10, 2009

மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்





கவிதைகள் படைப்பவர்களின் மனங்களில் உருவாகும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகும். இவ்வெளிப்பாடுகள் படிப்பவர்களின் மனங்களிலும் படிந்து அவர்களை அந்த கவிதை வயத்தில் ஆட்கொள்ளச் செய்யும் பாங்குடையனவாக அமைகின்றபோது கவிஞன் வெற்றிபெறுகின்றான். மரபு, புதியது என்ற வடிவப் பாகுபாடெல்லாம் இந்தக் கவிதை வயத்திற்கு இல்லை. ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும் அந்தக் கவிதை வயம் அமைந்தே கிடக்கின்றது. அதனாலே அது கவிதையாகின்றது. படிப்பவர்களை நெகிழ்விக்கிற இக்கவிதை ஆக்கங்கள் படித்தவர்களை உறுதியாக மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கிவிடுகின்றன.
அந்த வகையில் ஒரு வார காலம் கவிதைகளோடு கைகோர்த்து நடக்கின்ற வாழ்க்கை எனக்கு அமையப் பெற்றது. பாரதியின் வாழ்க்கைப் பதிவுகள், கம்பனடிப்பொடி சா. கணேசனாரின் வாழ்க்கைப் பதிவுகள், இளைஞனின் பார்வையில் தற்கால மக்களின் வாழ்க்கைப் பதிவுகள் என்ற வகையில் முன்று கவிதை ஆக்கங்களை வாசிக்க நேர்ந்தது. அவை பற்றிய கருத்துக்கள் இனி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.



கவிராசனின் புவிவாசனை ( கவித்தென்றல் நா. கண்ணன், கவிராசன் அறக்கட்டளை,36 கவிராசன் இல்லம், புதுநகர், புதுக்கோட்டை, 2008, விலை:50)
பாரதி அன்பர்கள் என்பவர்கள் பாரதியைப் படித்தவர்கள், பாரதியின் பெயரைத் தன்வீட்டுக்கு ஆக்கிக் கொண்டவர்கள், பாரதியின் பெயரைத் தன் பிள்ளைகளுக்குச் சூட்டியவர்கள் போன்றவர்கள் என்றால் அந்த அத்தனைக்கும் ஒரே சாட்சியாக வாழ்ந்து வருபவர் புதுக்கோட்டையைச் சார்ந்த கவித்தென்றல் நா. கண்ணன் அவர்கள்.
சோர்ந்து போன நேரத்தில், வைரமுத்துவின் கவிராசன் கதையைப் படிக்க நேர்ந்த கவிஞர் கண்ணனின் உள்ளத்தில்கவிராசக் கனவுகளை நனவுகளைத் தன் எழுத்தில் எழுதிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும் எண்ணம் தோன்றியிருக்கிறது. அதன்விளைவே இந்தக் கவிதைத்தொகுதி.
எண்பத்துநான்கு பக்கங்களை உள்ளடக்கி, ஐம்பத்துஏழு தலைப்புக்களில் பாரதியின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இத்தொகுதி. கவிதைகளின் வேகத்தில் பாரதியின் காலத்தினை மீண்டும் எண்ணிப்பார்க்கச் செய்கிற அரிய முயற்சி இது.
கவிதைக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் கவிதையையும் அழகாக இணைத்துக் கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் கண்ணன். கவிதைச் சொற்களுக்குள் பொடி(றி) வைத்துப் படைக்கின்ற நேர்த்தி கவிஞர்க்கு கைவந்த கலையாய் இருக்கிறது. இந்தப் பொடிகளின் நெடியில், பொறிகளின் பிடியில் சிக்கிக் கொள்கிற வாசகர் வெளிவர பெரும்பாடாக இருக்கிறது என்பது உண்மை.
பாரதி புதுவைக்கு வந்த நிகழ்வைப் பின்வரும் அடிகள் பொடி வைத்துச் சுட்டுகின்றன. பொறி வைத்துப் படிப்பவரைப் பீடிக்கின்றன.
அரிமுக மாவனவன் அறிமுக மடலுடன்!
தெரிமுக மானவர் தேடுமோர் மனமுடன்!
புதுவை நுழைந்தனன் புதுமை நுழைந்திட!
மதுகை வழியும் மக்களும் விழைந்திட!(பக். 50)
இவ்வரிகளுக்குள் அரிமுகம், அறிமுகம், தெரிமுகம், புதுவை , மதுகை போன்ற சொற்களுக்குள் காணலாகும் இயைபு ஓட்டம் கண்ணன் கவிதையைச் சிறக்கச் செய்கிறது. மதுகை வழியும் மக்கள் என்ற குறிப்பு தற்காலம் சார்ந்தது எனக் கொண்டு இக்கவியடிகளை மீண்டும் படித்தால் இதன் பொருள் இன்னும் பெருகும்.
குவளைக் கண்ணன். பாரதியை நேசித்த நல்ல உள்ளம். கவிஞர் கண்ணன் பாரதியை நேசிக்கும் நல்ல உள்ளத்தார். குவளைக் கண்ணனைப் பாடும் வரிகளில் தானே குவளையாகக் கண்ணன் மாறிவிடுகிறார். பாரதியோடு தானும் வாழ்ந்ததாகக் கற்பனை கொள்ளுகின்றார்.
அன்றுமோர் குவளை! இன்றுமோர் குவளை!
ஆயினும் நாட்டிலோ இரட்டைக் குவளை!
பாட்டிடை யிட்டதும் பார்வையில் பட்டதும்
பாரதி பார்வையில் பட்டவன் யானென! (பக். 51)
என்ற அடிகளின் வழியாக பாரதியோடு யான் வாழ்ந்ததாகக் கவிஞர் கொள்ளும் கற்பனைக்கால உலகம் அவரையும் திருப்திப்படுத்துகிறது. எடுத்துக் கொண்ட பாத்திரத்தையும் திருப்தியுறச் செய்கிறது. இரட்டைக் குவளை என இச்சிறுவரிக்குள் இன்னொரு சமுகசிந்தனைப் பொறி(டி)யையும் தூவிவிடுகின்றது.
இதுபோலவே "தத்துவம் பாரதி தலைக்குள் வந்தது, தன்னை அறியுமோர் தவிப்பும் தந்தது'' என்ற அடிகளில் அரவிந்தரின் நட்பு நயமுடன் தெரிவிக்கப் பெறுகிறது.
கனகலிங்கத்தின் மார்புப் பூணூல் பெறும் கவிதை மாண்பு பின்வருகிறது.
"வாயில் லிங்கமாய் வந்தவனில்லை . . .
நூலும் லிங்கமாய் நோற்றனன் கனகன்.''
என்ற வரிகளில் பிரோமானந்தாவின் பிரேமைப் பொடியின் நெடி வீசுகிறது. மேலும் `நூலும் லிங்கம் கனகன்' என்ற சொற்களின் மாற்றிப் போட்ட (நூல் நோற்ற கனக லிங்கம்) வரிசை இன்னும் அழகு கூட்டுகிறது.
இப்படி இப்படி பற்பல பொடிகளின் காரத்துடன், பொறிகளின் பிடித்தலுடன் கவிதைப் பெருமழையாய் இத்தொகுதி பாரதிக்கு மேலும் வலு சேர்க்கின்றது. ஆங்காங்கே தேவைக்கேற்ப பாரதியின் வரலாற்றை ஒட்டிய நல்லோரின் படங்கள் ஓவியர் ராகவன் கைவண்ணதில் இடம்பெற்றுப் பெருமை கொள்ளுகின்றது. தேடி வரைந்த ஓவியருக்கு நன்றி. அட்டை ஓவியமும் அழகாய் அவரால் வரையப் பெற்றுள்ளது.
கூடவே தன்னோடு இணைந்த , இயைந்த கவிஞர்களின் பார்வையில் பட்ட பாரதி வரிகளைத் தந்திருப்பதன் வாயிலாக தனிக் கவிஞராக கண்ணன் விளங்காமல் கூட்டுக் கவிஞராக இத்தொகுதிக்குள் விளங்குகிறார். அவரின் கவிதைப் பெருவழி பெருகட்டும். இன்னும் கொஞ்சம் இருக்கம் தளரட்டும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, சித. சிதம்பரம், (சிவா பதிப்பகம், 140 பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை, 94. 2009, விலை. 50.00)
கம்பனடிப்பொடியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிடப் பெற்ற கவிதைக் காப்பியம் இந்நூல். தரவுகளைத் தேடி அலைந்துத் தொகுத்து அதன் வேகம் மாறாமல், சுவை குன்றாமல் கவிதை ஆக்கியமைக்காக வெகுவாக இக்கவிஞரைப் பாராட்ட வேண்டும். அடிப்பொடியுடன் வாழ்ந்த, ஏறக்குறைய இருபது அன்பர்களைச் சந்தித்து அவர்கள் வழியாகவும், தானகவும் அறிந்து பெற்றச் செய்திகளை கவிதை வயமாக்கியிருக்கும் கவிஞரின் உழைப்பிற்குத் தக்கப் பரிசுகள் கிடைக்க வேண்டும்.
எண்பத்தெட்டுப் பக்கங்களில் நிகழ்விற்கு ஏற்ற பல்வகைக் கவிவடிவத்துடன் செறித்துச் செய்யப் பெற்றிருக்கிற உணர்வுக் காவியம்/ காப்பியம் இக்கவிதை நூல்.
தன்னிகரில்லாத் தலைவன், இருசுடர் தோற்றம், உலா, விழா எனப்பல காப்பியப் பாவியத் தகுதிகளுடன் இக்கவிதைக் காப்பியம் இலங்குகின்றது. அதனால் இதனைக் காப்பியம் என்றே தமிழுலகம் ஏற்க வேண்டும்.
இந்நூலுள் சிறுச் சிறு செய்திகளுக்குக் கூட அழுத்தம் தரப் பெற்றிருப்பது காப்பியத்தில் இடையே வரும் கிளைக்கதைகள் போன்று சுவை பயப்பதாக உள்ளன. காமராசரை முன்னறிவிப்பு இன்றிச் சந்திக்கப் போன கணேசனார் அனுபவத்தைப் பின்வரும் அடிகள் காட்டுகின்றன.
"திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த காமராசர் வீட்டுக்கு
ஒருமுறை முன்னர் அறிவிப்பின்றி சா. க. சென்றார் காணற்கு
வருவதை அறிந்த காமராசர் வழித்த பாதி முகத்தோடு
வரவேற்றாராம் கணேச அண்ணலை மரியாதை அன்புமனத்தோடு''
(ப. 58)
இரு சான்றோரிடத்திலும் சமமான அணுகுதலோடு இக்கவிதை அடிகளைக் கவிஞர் செய்திருக்கிறார்.
"காந்திச் சதுக்கத் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் தொழிலாளி நெல்லியான் ( ப. 31)'' என்று காரைக்குடியின் விடுதலை வரலாற்றிற்கும் சிம்மாசனம் இட்டுச் சிறுசெய்திகளுக்குத் தக்க இடம் கொடுக்கிறது இக்காப்பியம்.
இக்காப்பித்தில் சா. கணேசனாரின் தலைமறைவு, சிறைவாழ்வு மிக்க நேர்த்தியாக வடிவமைக்கப் பெற்றிருக்கிறது. மையப்பகுதியில் வரும் இப்பகுதி காப்பியத்தின் அழுத்தமிக்கப் பகுதியாகும்.
அட்டுழியங்களின் பட்டியல்கள்/ ஆணவத்தின் உத்தரவுகள்/ சா. கவின் தாயாரும்/ மனைவியும் மக்களும்/ தனித்திருந்த வீட்டில் / மலபார் போலிசார் வழியை / மறித்து நின்றனர்/ சிலுவையைச் சுமந்த மகன்/ சிறுசைச் சுமந்த மருமகள்/ வறுமை அறியாத வாழ்க்கை/ வாரிக் கொடுத்தச் செங்கை/ நாட்டிற்குத்/ தன்மகளை ஈன்ற தாய்/ வீட்டிற்குள் அடைக்கப்பட்ட வேதனை/ புன்னகை தொலைத்த போராளியின் மனைவி/ சின்னஞ்சிறிய செல்லமகள்/ தன்னை அடக்கித் தவமிருந்த தோற்றம்/ தியாகியைத் தெரிகிறது/ தியாகத்தைத் தெரிகிறது/ பின்புலம் என்றேனும் பேசப்படுகிறதா?( ப. 35)
வருத்தக் கோர்வைகளின் பட்டியலாய் கவிதை புதுக்கவிதை வடிவமெடுத்து ஓடுகின்றது. மனதில் வேதனை மறையாமல் நிற்கிறது.
தமிழ்த்தாய்க்குக் கோயில் வடித்து நிற்கும் கணேச அண்ணலின் பக்கத்தில் நின்று அங்குள்ள தமிழ்த்தாய்க்கு வணக்கம் பல சொல்லிக் கவிஞர் தன் தமிழ்த் தாகத்தினைத் தீர்த்துக்கொள்ளுகிறார். தமிழ்த் தாய்க்காகப் பாடப்பட்ட பதிமுன்று விருத்தங்களும் தமிழுக்குக் கிடைத்த விருந்துகள். ஒன்று மட்டும் பின்வருமாறு.
மொழிப்புலத்தின் ஒருமையிலே தொழுது போற்ற
முகம்மதியர் கிறித்தவர்கள், சமணர், இந்து
எழிலான மதம்கடந்த தேவி ஆனாய்!
எந்தமிழர் காரைநகர்க் கணேச மண்ணில்
அழியாத அறுகோணக் கோபுரத்தில்
அய்யன் வள்ளுவன் இளங்கோ கம்பனோடு
மொழியரசி நடுவிருக்க பரிவாரத்தில்
முன்னிருந்து வாழ்த்துகிறாய் முவாத்தாயே! (ப. 76)
கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன. பேச்சாளர்கள் பேசும் மனக்காட்சி விரிகின்றது. இப்பகுதிகளில் கவிஞர் நேரடி சாட்சியாக கம்பன் திருநாளுக்கு அமைந்துள்ளார்.
தற்காலத் தடுமாற்றங்களும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும் கவிஞரின் கருத்து நேர்மை சுட்டிக்காட்டத்தக்கதாகும். கணேசனார் தேர்தல் களம் கண்டபோது சில பின்னடைவுகளைச் செய்யச் சிலர் எண்ணினர். அதுகுறித்தக் கவிதைக் கண்டனம் பின்வருமாறு.
திசையெங்கும் பணம் கொடுத்து வாக்கு வாங்கும்
பணநெறியை இந்தியா கண்டதன்று!
பலமடங்கு கூடியது காணும் இன்று! (ப. 47)
இப்படி இனிய எளிய, தேவையான கவிதைச் செழுமையாய் இக்காப்பியம் அடிப்பொடியின் பெருமைக்கு அணி சேர்க்கின்றது. கவிஞரின் கவி உள்ளம் நம்மைப்போன்று படித்தவர்களால் பெரிதும் பேசப்பட வேண்டும். பேசப்படும்.


உயிர்வலி


வேல். சரவணக்குமார் யாழினி வெள்ளவெட்டான் விடுதிபெருங்களுர் அஞசல்2009
இளைஞனின் பார்வையில் வாழும் மக்களின் பதிவை உயிர்வலி என்ற வேல். சரவணக்குமாரின் தொகுதி எடுத்துக்காட்டுகின்றது.
பல கவிதைகளின் தொகுப்பாக நூற்று எட்டுப் பக்கங்களில் விரிகின்றது இத்தொகுப்பு. இதனுள் கவிஉளம் மிக்க, கவிவளத்தை நோக்கிச் செல்கிற இனிய கவிஞராக வேல். சரவணக்குமார் தெரிகிறார். இவரால் இவரின் ஊரான வெள்ளவெட்டான் விடுதி இலக்கியப் பெருமை பெறுகின்றது.
அஃறிணையை அழைப்பதாய்/ அதட்டவாள் அம்மாள்/ அன்போடு ஓடிவருவார் அப்பா/ இருவரும் பேசிக் கொள்வார்கள்/ வாதம் சூடாக இருக்கும்/ சாப்பிடாமல் கூட படுத்துக் கொள்வார்கள் இருவரும்/ ஆறிப்போன தோசையைத் தின்போம் நானும் தம்பியும்/ விடிந்தபொழுது சூடாகக் காப்பி தருவாள் அனைவருக்கும்/ எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்போம் நானும் தம்பியும்(ப. 47)
என்ற இக்கவிதையின் தலைப்பு காதலர் என்பதாகும். அப்பா, அம்மாவின் சண்டை எதனால் சமாதானம் ஆனது என்பதை அறியாத அண்ணன் தம்பிகளின் எதார்த்த நிலையை இக்கவிதை தெற்றெனப் புலப்படுத்துகிறது.
சுடிதாரின் சோகத்தை சில வரிகள் தெரிவிக்கின்றன. "எப்படிப் பசியாற்ற முடியும்/ மாராப்பு இல்லாத/ சுடிதாரை விலக்கி''(ப. 33) என்ற கவிதைக்குள் ஆணின் தவிப்பை உணரமுடிகின்றது.
"வீச்சமெடுத்த வார்த்தைகளால்/ என் வீட்டாரை இழுக்கும் பொழுதும் சகித்துக் கொள்கிறேன்/ இரவுகளில் கட்டித் தழுவி /நீ புரளும்போது இறந்து விடுகிறேன்'' என்ற வரிகளில் பெண்ணின் வேதனைப் புலப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட இவர்கள் / உயிருடன் இருப்பதே/ இறந்தபொழுதுதான் தெரிகிறது (ப. 76) என்று ஒதுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கிறது ஒரு கவிதை.
தன் அனுபவத்தை தக்க நிலையில் சேமித்துத் தடையின்றி வழங்கியிருக்கிற வேல். சரவணக்குமாருக்கு வாழ்த்துக்கள். எழுதுங்கள்! இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
--
M.Palaniappan
muppalam2006@gmail.com

செவ்வாய், ஜூலை 07, 2009

பாராட்டும் பரிசும்


2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று நடைபெற்ற கம்பன் திருநாள் விழாவில் கம்பன் அடிப்பொடி குறித்து ஒரு வலைப்பூவை உருவாக்கியமைக்காகப் பாராட்டினைப் பெற்றேன் (http://kambanadippodi.blogspot.com/) திருமிகு சக்தி திருநாவுக்கரசு அவர்களும் கம்பன் அடிசூடி திருமிகு பழ. பழநியப்பன் அவர்களும் இணைந்து இருக்கிறார்கள்