ஞாயிறு, மார்ச் 29, 2009

பிரியாவிடை



மங்கலமாய் வாழப்போகும்

உனக்கு நான்

என்ன சொல்லி வழியனுப்ப!


அறிவுரை கூறவா?

ஆசி நல்கவா?

பிரியாவிடை தரவா?

போய் வா மகளே போய் வா!

இந்த ஒவ்வொரு சொல்லுக்குள்ளும்

என் உண்மை அன்பு

அழுத்தமாய்க் கிடக்கிறது


போய் வா மகளே போய் வா!


ஒப்புக்குச் சொல்லவில்லை மகளே

நீ பிறந்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.

பிள்ளையில்லை என்ற

பெரும்பழி தீர்க்கப் பிறந்தவள் நீ


மகளே உன்னைப் பெற்றதால்

இப்போதும் மகிழ்கிறேன்


உன் சிரிப்புகள்

உன் மழலைகள்

உன் பரிசுகள் நம் வீட்டு வெற்றிடங்களை

விரட்டி அழித்தன


அடிக்கு ஒருதரம்

உன்பேரைச் சொல்லி

அழைப்பேன் மகளே

இனி வருவதற்கு

யார் இருக்கிறார்கள்


என்னை விடவும்

என்னைப் பற்றி நன்கு அறிந்தவள் நீ


சின்னவயது முதலே

எங்கள் சண்டைகளுக்குச்

சமாதானத் தூது நடந்தவள் நீ


இனி எங்களின் சண்டைகள் கூட

ரசமற்றுப்போகும்


வளர்ந்துவிட்டாய் நீ

காலத்தின் பயணத்தில்

வெகுவிரைவாய் வளர்ந்துவிட்டாய் நீ


பேர் பார்த்து

ஊர் பார்த்து

மற்றொரு வீட்டுக்கு

உன்னை

ஒட்டு மொத்த மகிழ்வோடு

நாங்கள் அனுப்பி வைக்கிறோம்


போய் வா மகளே போய் வா!


நேரங்கிடைக்கும் போதெல்லாம்

எங்கள் நினைவு தோன்றும் போதெல்லாம்

வந்து போ மகளே! வந்து போ!

உன் மகிழ்வுகளை எங்களுடன்

கலந்து கொள்ள வந்து போ மகளே! வந்துபோ!


இவ்வளவு சொல்லியும் இன்னும் மீதமிருக்கின்றன

என் உணர்வுகள் எழுத்துக்கள் போதாது மகளே

போய் வா மகளே! போய் வா!

திங்கள், மார்ச் 16, 2009

எங்கள் கல்லூரி வாழ்வின் பதினெட்டாம் ஆண்டுக் கொண்டாட்டம்.


ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் கழித்து நாங்கள் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வந்தது. சிவன் ராத்திரி அன்று தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போன்றோர் விழா கொண்டாடுவதற்காக ஒருநாள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் ஏறக்குறைய ஆசிரியர் வேலையில்தான் இருக்கிறோம் என்பதால் அந்த நாளே நாங்கள் சந்திக்கும் நாளாக அமைந்தது.
1988 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை நாங்கள் ஒன்றாய் ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பில் படித்தவர்கள். கல்லூரி என்றால் நாங்கள் படிக்கும்போது ஒன்றும் பெரிய கட்டிடமாக அது இருக்காது. நான்கு அறைகள், அதுபோக ஒரு நூலகம், இரு சிறு அறைகள். அவற்றில் அலுவலர்கள், முதல்வர் போன்றோர் இருந்தனர். இவ்வளவே எங்கள் கல்லூரியின் அக்கால வசதி.
இருந்தபோதிலும் அந்தக் கல்லூரியிலும் அமைதியாக, உள்ளன்போடு நாங்கள் பழகிப் படித்தோம் என்பதை இந்தப் பதினெட்டு ஆண்டுகள் கழித்துச் சந்தித்த சந்திப்பு காட்டியது.
ஆண்கள், பெண்களாக மொத்தம் நாற்பது பேர் நாங்கள் படித்திருப்போம். அந்த நாற்பதில் ஏறக்குறைய இருபத்தைந்து பேர்களுக்கு அரசாங்க அளவில் வேலைகள் கிடைத்திருக்கின்றன. மான அடிப்படையிலும், மன அடிப்படையிலும், பண அடிப்படையிலும் இப்பணிகள் கிடைத்திருக்கின்றன. இது ஓரளவிற்கு நிறைவைத் தந்தது. என்றாலும் வேலை கிடைக்காமல் இருக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுள் உறுத்தியது.
இன்னமும் நாங்கள் படித்த கல்லூரி, படிப்பு பற்றிச் சொல்லாமல் இருப்பது நியாயமில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில்தான் நாங்கள் தமிழ்ப் பட்டப்படிப்பைப் படித்தோம். அதன்பின் பல்வேறு கல்லூரிகளில் படித்து இருந்தாலும் இதுவே எங்களின் தாய்ப்படிப்பாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது இக்கல்லூரியின் பெயரும் கணேசர் கலை அறிவியல் கல்லூரி என மாறிவிட்டது. ஓரளவிற்குக் கட்டிடங்களும் பெருகிவிட்டன.
கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி இவற்றில் உள்ள மாணவர்களுக்கும் எங்களுக்கும் பெருத்த வேறுபாடு அப்போது இருந்தது. அப்போதே இது எங்களுக்குத் தெரிந்தும் இருந்தது. தமிழ் படிக்கிற மாணவர்கள் மரபோடு இருக்கவேண்டும் என்ற பின்னணிக்கு இக்கல்லூரிச் சூழலும் காரணமாகி விட்டது. கிராமப்புறமும் எங்களை திசை திருப்பாமல் இருந்திருக்கிறது.
ஆனால் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கல்லூரிக்கு வந்த எங்களுக்குப் புதிய அனுபவங்கள் பல. பேருந்தினில் இருந்து முன்னரே இறங்கி அந்த ஊரின் பிரதான கடைவீதியில் கால்பதித்து நாங்கள் டீ குடித்த, கடன் சொன்ன கடைகள் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டோம். இருந்தன. அவற்றிலும் நாங்கள் படித்த போது இருந்த ஆட்களே வயதாகிப் போயிருந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரிந்தது. எங்களை அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.
மெல்ல நடந்து கல்லூரி வாசலை அடைந்து எங்கள் உறவை கல்லூரியில் உள்ள பழைய அலுவலர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் புதுப்பித்துக் கொண்டோம். புதியவர்களுடன் பழகிக் கொண்டோம். "ஏன் வந்தீர்கள் '' என்று கேட்காதவர்கள் பாக்கி இல்லை. "ஒன்றாய்ச் சேர வந்தோம் '' என்ற எங்களின் பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் இந்தச் சந்திப்பிற்குள் ஏதோ அரசியல் இருப்பதாய் அவர்களுக்குப் பட்டது.
மாரியப்பன் இவர்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். வள்ளியப்பன், சுப்பையா இவர்கள் இந்தக் கூட்டத்தின் உள்ளூர் அமைப்பாளர்கள். மற்றபடி படித்தவுடனே வேலைக்குப்போன சுந்தரவடிவேல் பதினாறு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று எங்களுக்கு எல்லாம் சீனியராகிவிட்டிருந்தார். இவரே எல்லாரையும்விட மிக சந்தோசத்தில் இருந்தவர். அடுத்து எங்களை நினைவுபடுத்தி கவிதை எழுதிவந்த பெருமாள், படிப்புத் திறனும் பண்பும் கொண்ட சேவியர், நெடிய உயரமுடைய செல்வ குமார், எங்களில் சிவப்பு நிறத்தை அதிகம் கொண்ட கூடலூர் சரவணன், கரிகாலன் போன்றோர் சந்திக்கக் கூட்டம் சிறப்பானது.
செல்போன்களில் புகைப்படங்களைப் பதிந்து கொண்டோம். என்னோடு வந்தவர்கள் அனைவரும் ஏறக்குறைய கல்லூரி ஹாஸ்டலில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் அங்குச் செல்ல வேண்டும் என்று சொன்னபோது அங்கு போக அனுமதி பெறவேண்டி இருந்தது. ஏனெனில் அது இப்போது மகளிர் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஹாஸ்டலே இல்லை. அப்படித் தங்கிப் படிக்கும் மாணவர்கள் யாரும் இங்கு இப்போது வருவதில்லை என்ற செய்தி வியப்பாக இருந்தது. அந்த ஹாஸ்டலில் நண்பர்கள் சென்று அவரவர்கள் எப்படி எப்படி உடகார்ந்து இருப்பார்கள், படுத்துக் கிடப்பார்கள், இயற்கையோடு எப்படி ஒன்றாகிக் கிடப்பார்கள் என்பதை எல்லாம் அவர்கள் நடித்துக் காட்டினார்கள். அவர்களின் அக்கால உடுப்பான ஒரு சிறு துண்டு, வெற்றுடம்பு என்ற எளிமைத் தோற்றம் இந்தக் காட்சிகளைச் சொல்லிச் சொல்லி அவர்கள் மகிழ்ந்தார்கள்.
அந்த ஹாஸ்டலில் சமைத்த சமையல்காரர் தற்போது காலமாகிவிட்ட செய்தியை நண்பர்கள் துன்பத்துடன் பகிர்ந்து கொண்டனர். அதுபோல எம் நண்பர்களில் ஒருவனான சின்ன மெய்யப்பன் இறந்து போன செய்தியும் வருத்தத்தைத் தந்தது.
மெல்லக் கழன்று சுற்றுப் புறத்தை நோக்கினோம். சில வீடுகள் புதிதாக இருந்தன.நாங்கள் படித்த போது கன்றாக இருந்த ஆலமரம் விழுது விட்டிருந்தது. பக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உருவாகி இருந்தது. கல்லூரிக்கு எதிராக இருந்த வேப்பமரங்கள் அந்த காலத்தில் மாணவிகளைப் பார்க்கும் மைதானம். அந்த இடத்தில் சற்று உட்கார்ந்து பழைய ஞாபகங்களில் நண்பர்கள் வளைய வந்தனர்.
இருப்பினும் மாணவர்கள் ஹாஸ்டல் மாணவர்கள் கைவிட்டுப்போனதில் நண்பர்களுக்கு எல்லாம் வருத்தம். அதுபோல எங்களுடன் படித்த தோழிகள் இந்தச் சந்திப்பிற்கு ஒருவர் கூட வராதது பெருத்த வருத்தத்தை அளித்தது உண்மைதான். வருந்தி வருந்தி அழைத்தும் கூட அவர்களில் ஒருவர் கூட வராதது பெரிய இழப்பாய் எல்லோருக்கும் பட்டது. அடுத்த முறை சந்திக்க வைப்போம் என வள்ளியப்பன் உறுதி கொண்டார். அவரே மாணவிகளிடம் அக்காலத்தில் மிக சகசமாய்ப் பழகியவர்.
அதுபோல இந்தக் கூட்டத்தில் மிக மிக கலகலப்பைத் தந்த செய்தி "கல்லூரியில் படிக்கும்போது ஒழுக்கமாய் இருந்தவனெல்லாம் இப்ப மாறிட்டான். அப்ப மாறி இருந்தவனெல்லாம் ஒழுங்காயிட்டான்.'' என்ற விமர்சனம்தான். இதுதான் மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவம்.
இந்தக் கூட்டம் முடிந்து நான் புதுக்கோட்டைக்கு வந்த பிறகு காவல் துறையில் பணியாற்றும் குமார சங்கர் கேட்ட " ஏண்டா என்னை விட்டுட்டு கூடிட்டிங்களே'' என்ற கேள்வி மனதிற்குள் ஏதோ செய்தது.
அந்தக் கல்லூரிக்கு வயது நூறாகி விட்டதாம். நூற்றாண்டு விழாவினை நன்றாகக் கொண்டாட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. எங்களின் பதினெட்டு ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் இந்தச் சந்திப்பு நாள் திருப்தியை அளித்ததில் ஆச்சர்யமில்லை.


வெள்ளி, மார்ச் 13, 2009

திருக்குறளில் ஊழியல்



திருக்குறளில் அதிகம் விவாதத்திற்கு உரிய களமாக விளங்குவது ஊழியல் என்ற பகுதியாகும். கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுள் ஏற்புக் கொள்கை ஆகிய இருவேறுபட்ட கருத்துச் சார்புடையவர்கள் இவ்வதிகாரம் தரும் கருத்து விவாதங்களில் பங்கு கொண்டு ஒருவருக்கு ஒருவர் நேர் மாற்றான கருத்துக்களைத் தந்துள்ளமை இதன் புதிர்த் தன்மைக்கு மேலும் சிறப்பளிக்கின்றது. இதற்கு உரை தந்த உரையாசிரியர்கள் வழுவிட முடியாத நிலையில் தான் கடவுள் ஏற்புக் கொள்கை உடையவரா அல்லது மறுப்புக் கொள்கை உடையவரா என்பதை அறிவித்திட வேண்டிய சிக்கலை ஏற்படுத்தும் பகுதியாகவும் இது உள்ளது.
ஊழியல் அதிகாரத்துச் செய்திகளை விட உரையாசிரியர்களின் கருத்துக்கள் அதிகம் ஆராயத்தக்கனவாக உள்ளன. ஊழியல் பற்றிய செய்திகளையும், அதன் புதிர்த் தன்மைகளையும், அது குறித்து உரையாளர்கள் கொண்டிருந்த நோக்குகளையும் ஒருங்கிணைத்தே ஊழியல் என்ற பகுதியை நோக்கவேண்டி உள்ளது. இந்த இயலைப் புரிந்து கொள்ள நுண்ணிய நூல் பல இருப்பினும் உண்மை அறிவே தேவைப்படுகின்றது.
ஊழ் என்ற ஓர் அதிகாரம் மட்டுமே ஊழியல் என்ற உட்பிரிப்பில் வைக்கப் பெற்றுள்ளது. திருக்குறளின் முப்பத்தெட்டாம் அதிகாரமாக ஊழ் அமைக்கப் பெற்றுள்ளது. இது அறத்துப்பால் முடிவு பெறும் சூழலில் பொருட்பாலுக்கு முன்னதாக அமைக்கப் பெற்றுள்ளது. காமத்துப்பால் இதனைத் தொடர்ந்து வருகிறது. அறத்தினால் விளையும் பயன் பொருளும், இன்பமும் என்பதால் இந்த இயல் இவ்விடத்தில் வைக்கப் பெற்றுள்ளது என்பது அனைவரும் ஏற்கும் காரணம் ஆகும். இங்குப் பயன் என்பது வினைப்பயனைக் குறிப்பது ஆகும். அதாவது ஊழ் ஆகும்.
கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம், அறிவு முதல் வாதம் என்ற முன்று அடிப்படை வாதங்கள் தமிழத்தின் இலக்கிய அரசியல் பின்னணியில் இதுவரை இருந்து வந்திருக்கின்றன. கருத்து முதல் வாதம் என்பது கடவுளை முதலாக வைத்து ஆராயும் பின்னணி பெற்றது. தமிழ் இலக்கியப் பரப்பில் மிக நெடும் பரப்பு இதன் அடிப்படை வாய்ந்ததே ஆகும். பொருள் முதல்வாதம் என்பது பொதுவுடைமைச் சிந்தனையின் விளைவால் தமிழகத்தில் தோன்றியது. அறிவு முதல் வாதம் என்பது பெரியாரியக் கொள்கைகளின் சார்பால் தமிழகத்திற்குக் கிடைத்த ஒரு வழியாகும். இம்முன்று அடிப்படைகளில் கருத்து முதல் வாதத்தினரும், அறிவு முதல் வாதத்தினரும் ஊழியல் பற்றிய விவாதங்களில் பெரிதும் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். பொதுவுடைமைச் சார்புடைய உரைப்பகுதி திருக்குறளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் மட்டுமே அமைந்தன (எஸ். இராமகிருஷ்ணன் அவர்களின் உரை இவ்வகைப்பட்டது. இவ்வடிப்படையில் ஊழியலை வள்ளுவர் படைத்தமைக்கான தேவை என்ன என்பதை ஆராய வேண்டி இருக்கிறது.
ஊழும் இறைச்சார்புடையோரும்
இறைவனை வணங்குவோர், இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் ஊழ் என்பதனை இறைச் சார்புடையதாகவே எண்ணுகின்றனர். பெரும்பாலான பழைய உரையாசிரியர்கள் அனைவரும் இக்கருத்துடனே உரை கண்டுள்ளனர். பரிமேலழகர், காலிங்கர், பரிதியார் முதலான உரையாசிரியர்கள் இறைநம்பிக்கையின் பாற்பட்டே உரை கண்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் நெருக்கத்தில் இருக்கும் தற்போதைய சூழலில் திருக்குறளுக்கு உரைகண்டவர்கள் என்ற நிலையில் கடவுள் ஏற்புக் கருத்துச் சார்புடைய உரையாசிரியர்களைத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும்.
"உயிர், பொறி புலன்களால் செய்யும் செயல், செயல்களின் விளைவாகிய ஊழ், அவரவர் செயலின் பயனை ஊழை அனுபவிக்க வேண்டுமென்ற நியதி, எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் இறைவன், இந்த நான்கினையும் ஆராய்தலே தெளிவு'' (குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை,தொகுதி.2. ப. 258) என்ற நிலையில் இறைவனை முன்வைத்து அவனின் வழிகாட்டுதலால் நடக்கும் நியதிக்கு ஊழ் எனப் பொருள் கொள்ளுகின்றனர் இறைச்சார்பாளர்கள்.
வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)
என்ற குறளுக்கு உரை வகுக்கப் புகுந்த அறவாணன் "வாழ்க்கையை வகுத்த தெய்வம் (ஊழ்) வகுத்திருந்தால் ஒழிய ஒருவர் கோடிஅளவு பொருள்களைச் சேர்த்து வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க முடியாது'' (க. ப. அறவாணனின் திருக்குறள் உரை.ப. 377) என்று தெய்வச் சார்புடைய உரையைக் காணுகின்றார்.
தெய்வத்தின் சார்பில் சென்ற காலத்தில் உயிர்கள் செய்த வினையின் பயனாக இக்காலத்தில் அனுபவிக்கும் நன்மை, தீமைகள் ஊழ் எனப்படுகின்றது என்று பல உரையாசிரியர்கள் மேற்கண்டோரைத் தொடர்ந்து கடவுள் ஏற்புக் கருத்துடன் ஊழியலுக்கு விளக்கம் தந்துள்ளனர்.
ஊழும் இறை மறுப்பாளர்களும்
`ஊழினை இறைவன் தரும் பயன்' என்ற கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டு உரை ஆக்கியவர்களின் வரிசையில் நிற்போரை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்க இயலும். ஊழ் என்பதற்கு இவர் இயற்கை நிலை எனப் பொருள் கொள்ளுகின்றார். ஊழ் என்பதற்கு உலக முறை எனப் பொருள் கொள்ளுகின்றார் வ. சுப. மாணிக்கனார், இயற்கை நியதி எனப் பொருள் கொள்ளுகின்றார் ச.வே.சுப்பிரமணியன். இவ்வரிசையில் குழந்தை, சிற்பி போன்றோரும் அடங்குவர்.
வகுத்தான் எனத் தொடங்கும் முன்காட்டிய குறளுக்குப் பின்வருமாறு இம்முவரும் பொருள் கொள்ளுகின்றனர். "வகுத்த முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிட்டால் கோடிப் பொருள் குவித்தாலும் அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.'' என்பது கலைஞர் உரை.`அமைத்தவன் அமைத்த நெறிப்படி அல்லது கோடி தொகுப்பினும் நுகருதல் இயலாது' என்பது வ.சுப. மாணிக்கனார் கருத்து. " பொருள்களை ஈட்டுதல் என்பது ஒன்று. அவற்றைப் பயன் கொள்ளல் என்பது மற்றொன்று. ஈட்டிய பொருள்கள் பயன்படாமலும் போகலாம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது பழமொழி'' என்பது ச.வே. சுப்பிரமணியனாரின் உரை. இவ்வுரைகளைத் தொகுத்துக் காண்கையில் விதி, வினைப்பயன், தெய்வம் முதலியன பின்தள்ளப் பெற்று இயற்கையின் விளைவாக ஊழ் காட்டப் பெற்றுள்ளமையை அறியமுடிகின்றது.
இவ்வாறு அடிப்படையில் வேறுபட்ட ஒன்றுக்கு ஒன்று முரணான இரு கருத்துக் களன்கள் உருவாக ஊழியல் என்ற அதிகாரம் இன்று வரை இருந்து வருகிறது என்பது உணரத்தக்கது. உரையாளர்கள் தம் கருத்துரைகளில் மாறுபட்டாலும் அவர்கள் தம் இலக்கிய உறவில் வேறுபாடு கொள்ளாது இருப்பது நயத்தக்க நாகரீகம் ஆகும்.
வள்ளுவர் ஊழின் வலி அறிந்தவர் என்றாலும் அவர் அதனையும் வெற்றி கொள்ள இயலும் என்ற கருத்தில் நிலைத்து நிற்கிறார். இதனை இவரின் ஊக்கமுடைமை, ஆள்வினைஉடைமை ஆகிய அதிகாரங்களில் அமைந்த ஊழ் எதிர்ப்புக் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. ஊழையும் உப்பக்கம் காணுதல், தெய்வத்தான்ஆகாது எனினும் முயற்சி கூலிதரும் ஆகிய குறள்களில் தன் முயற்சியால் மனிதன் முன்னேற வேண்டும் என்று வள்ளுவர் விரும்பியுள்ள விழைவு தெரியவருகிறது.
"அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாகச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களையே விளக்கிச் செல்கின்றார். எனவே ஊழ் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெறச் செய்யப் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ஆசீவகமாக உருப் பெற்றிருக்க வேண்டும்'' என்று ஆசீவத்தின் தோற்றத்திற்கு வள்ளுவக் கருத்துக்கள் காரணமாக இருந்திருக்கும் வாய்ப்பினை நெடுஞ்செழியன் எடுத்துக்காட்டுகின்றார். (தமிழ்க்காவல் இணையதளம்) வள்ளுவர் ஊழினை மனித சமுதாயத்தினை முடக்கும் வன்மையுடையதாக ஆக்காது அதனை வெல்லும் ஆற்றலை மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கையாண்டுள்ளார் என்ற கருத்தினை மேற்காட்டிய மேற்கோளின்வழி பெற முடிகின்றது.
ஊழியல் தரும் கருத்துக்கள்
ஊழ் இருவகைப்படும். அது ஆக்கம் தரும் ஆகூழ், கேடுகளைத் தரும் போகூழ் என்பனவாகும். ஆகூழால் முயற்சி, கைப்பொருள் முதலியன பெருகும். போகூழால் சோம்பல் உருவாகும்(1). நல்லனவெல்லாம் தீய முடிவுகளைத் தரலாம். தீயனவெல்லாம் நல்ல முடிவுகளைத் தரலாம். இது ஊழின் புதிர்த்தன்மை(5). விரும்பிக் காத்தாலும் ஊழால் செல்ல வேண்டிய பொருள்கள் நிற்காது. இருக்க வேண்டிய பொருள்கள் போகாது(6). வகுத்தான் வகுத்த வழிப்படியே தான் வாழ்க்கை செல்லும். அவன் வழிப்படி அல்லாது மிகுந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அனுபவிக்க இயலாது(7). வறுமை உடையவர்கள் பொருள்களைப் பெற ஆசைப்படாது துறவு வாழக்கையை நாடிப் போவர். இவ்வாறு விட்டுவிலகிப் போவதற்கும் ஊழ் காரணமாக அமையவேண்டும்(8). நல்லன நடக்கும் போதெல்லாம் நன்மை என்று மகிழ்ந்து அனுபவிப்பவர்கள் தீமை நடக்கையில் அதனை ஏற்காது அவற்றைக் களைய நினைப்பது ஏன் எனத் தெரியவில்லை(9). ஊழினை விட வலிமையானது எதுவும் இல்லை. அது மற்ற எல்லாவற்றையும் விட முந்தி வரக்கூடியதாகும்(10).
மேற்கண்ட ஏழு குறள்கள் ஓரளவிற்குக் குழப்பம் இல்லாமல் பொருள்களைத் தருவன. எஞ்சியுள்ள முன்று குறள்களில் பல்வேறு குழப்பங்கள் மண்டிக் கிடக்கின்றன.
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவு அகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை (2)
நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் (3)
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. (4)
இம்முன்று குறள்களிலும் அறிவு, செல்வம் இரண்டுக்கும் இடையே நடைபெறும் போட்டியை முன்வைத்து வள்ளுவர் சில கருத்துக்களைச் சொல்லியுள்ளார்.
இழவூழ் எனப்படும் போகூழ் பேதமை தந்து நிற்பதாகும். ஆகல் ஊழ் என்னும் ஆகூழ் அறிவை விட (அகற்றி) செல்வத்தை வளத்தை அதிகம் தந்து நிற்கும்.(2)
நூல்கள் தரும் அறிவை விட உண்மை அறிவு வலிமை வாய்ந்தது. செல்வம் காரணமாக அறிவற்றவர்கள் அறிவைப் பெற நுண்ணிய நூல்கள் பல கற்றாலும் உண்மை அறிவு என்பது உயிர்களுடன் ஒட்டி நிற்பது. அதற்கு இணையாக வருவிக்கப் பெற்ற அறிவு நிற்காது(3).
அறிவு உலகம், பொருள் உலகம் இவை இரண்டும் வேறு வேறானவை. பொருள் உலகத்தை ஆகூழால் கொண்டு வரமுடியும். அறிவு சார்ந்த உலகத்தை அதனால் கொண்டு வரவேமுடியாது. எனவே ஊழ் என்பதற்கும் அறிவு என்பதற்கும் நேர் முரண் உண்டு. ஊழையும் உப்பக்கம் காணும் திறம் உண்மை அறிவு, ஊக்கம் பெற்றவர்களிடத்தில் உண்டு. அவர்கள் வெற்றி பெறுவார்கள். எனினும் இருவேறுபட்ட அறிவுசார், அறிவற்ற, செல்வம் சார், செல்வமற்ற உலகம் என்ற இரு நிலையில் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
மேற்கண்ட முன்று குறள்கள் பெருத்த உரை மாறுபாடுகளைக் கொண்டு விளங்குவன. இவற்றிற்கான விளக்கங்கள் உரையாசிரியர்கள் தம் தரத்திற்கு ஏற்ப வேறுபட்டு பொருள் கொள்ளப்படுகின்றன. கட்டுரையாசிரியர் இவற்றை கருத்து முதல் வாதம், அறிவு முதல் வாதம் முதலான இற்றைக்கால நோக்கங்களின்படி அணுகியுள்ளார். இதன்முலம் தற்கால உலகையும், மக்களையும் பிரித்து இனம் காண முடியும். செல்வம் சேர்ப்போர் அதனையே குறிக்கோளாக இயங்கியும், எழுந்தும், சுருங்கியும், தேய்ந்தும் வருகின்றனர். அறிஞர்கள் அறிவினை மையமிட்டு செல்வத்தைப் புறந்தள்ளி தன் வழி நடந்து செல்லுகின்றனர். இக்கருத்து வள்ளுவர் காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. தற்போதும் உள்ளது. இனியும் இம்முரண் அழியாது நிற்கும் என்பதில் ஐயமில்லை.
--

வெள்ளி, மார்ச் 06, 2009

இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்



இன்றைய நாளில் மொழிப் பாடங்களுக்கு மதிப்பும், வலுவும், செழுமையும் சேர்க்க வேண்டிய இன்றியமையாமை நிலவி வருகின்றது. அறிவியல்துறைசார் கல்வித் துறைகளின் பரப்பும், வளர்ச்சியும், ஆராய்ச்சிகளும் மனிதத்தேவைகளை எளிதாக்கி நிறைவேற்றி வரும் சூழலில் அவையே மாணவ சமுதாயத்தினரால் அதிகம் விரும்பிக் கற்கக் கூடியனவாக உள்ளன. அறிவியல் துறைகளில் தற்போது ஏற்பட்டுள்ள இற்றைநாள் தேவைக்கேற்ப பாடப்பகுதிகளை அமைத்துக்கொள்ளுதல் என்ற நிலையை மொழிப்பாடங்களுக்கும் ஏற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
இதற்காக மரபு சார்ந்த பாடப்பகுதிகளை விடுத்து முற்றிலும் புதிதான பாடங்களை மட்டும் படிக்கத் தருவது என்ற நிலைக்குச் சென்றுவிடவும் முடியாது. பழையன கழிதல் புதியன புகுதல் வழுவல என்ற நிலையில் பழைய இலக்கிய இன்பங்களைப் புறந்தள்ளிப் போட்டுவிட இயலாது. புதுமை மட்டுமே மொழியின் பெருமைக்கு அடித்தளமாகவும் இருந்துவிட முடியாது.
பழைய பாடங்களைப் புதிய நவீன வெளியீட்டுக் வாயில்கள் முலம் தருவதால் பழமையைப் போற்றவும் முடியும். புதுமையை வரவேற்கவும் முடியும். இவ்வகையில் தற்போதைய நிலையில் இணையம் மொழிப்பாடத் தேவைகளை அள்ளித்தரும் அமுத சுரபியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
குறிப்பாகத் தமிழ் மொழியைக் கற்பிக்கப் பல வசதி வாய்ப்புகள் தற்போது இணையப் பரப்பில் கிடைத்து வருகின்றன. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்ப் பரப்பையும் சுவைத்து அதன்வழி மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடங்களை நடத்திக் கொள்ள பெருவாய்ப்புக் காத்துக்கிடக்கின்றது. பல்வேறு வகைப்பட்ட இணையதளங்கள் தமிழ் மொழிக்கு வளமை சேர்த்து வருகின்றன. அவை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இயல் தமிழ்
இயல் தமிழ் என்ற பகுப்பில் தமிழின் பழமையான இலக்கண இலக்கியங்கள் தற்போது இணையத்தில் எழுத்துவடிவில் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய இலக்கணங்கள் பற்றிய அறிமுகச் செய்திகள், கட்டுரைகள் போன்றனவும் இணைய தளங்களில் கிடைக்கின்றன. இவ்வகையில் பழைய அரிதான இலக்கண இலக்கியங்களை கைச்சுட்டுக்குள் அடக்கி உடன் கிடைக்கச் செய்யும் இணையதளங்கள் பல உள்ளன.
குறிப்பாகத் திருக்குறள் பற்றி அறிந்து கொள்ள பல இணையதளங்கள் உள்ளன. இவற்றில் பொருளும், வார்த்தைத் தேடல்களும், மொழிபெயர்ப்புகளும் சேர்ந்துக் கிடைப்பது குறிக்கத்தக்கது ஆகும். குறிக்கத்தக்க சில இணையதளங்கள் பின்வருமாறு.
http://chittarkottai.com/thirukural/search.php இத்தளத்தில் திருக்குறளில் இடம் பெற்றுள்ள சொற்களின் அடிப்படையில் தேடுதலை நிகழ்த்த முடியும். திருக்குறள் முழுமையும் தனித்த பாடமாக வைக்கப் பெற்றுள்ள மாணவர்களுக்கு இத்தளம் மிகச் சிறப்பான பலன்களைத் தரும்.
http://www.thirukkural.com இத்தளம் திருக்குறளுக்கு கலைஞர், மு.வ. போன்றோர் உரைகளைத் தருகின்றது. மேலும் ஆங்கில ஆக்கங்களையும் இணைத்து இது தருகின்றது.
இவை போன்ற பல தளங்கள் திருக்குறளுக்குக் கிடைக்கின்றன. தேடுதல் அடிப்படையில் இவற்றைத் தொகுத்தால் இம்முயற்சி பெருகும். எவ்வாறு திருக்குறள் பதிப்பு அளவிலும், பரவுதல் அளவிலும் மற்ற தமிழ் நூல்களை விட முன்னணி பெற்றுள்ளதோ அதுபோல இணைய தள அளவிலும் அதிக அளவினைப் பெற்றுத்திகழ்கின்றது. திருக்குறளை இசையோடு வழங்குகின்ற தளங்கள் பலவும் உள்ளன.
இது போன்று தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றையும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்;( http://www.tamilvu.org)> மதுரைத்திட்டம் ((http://www.project madurai.org), சென்னை லைப்ரரி (http://www.chennailiberary.com) போன்ற இணைய தளங்களில் பெற முடிகின்றது. சென்னை லைப்ரரியில் நாவல்கள், சிறுகதைகள் போன்றனவற்றையும் பெற முடிகின்றது.
இவ்வகையில் உடனுக்கு உடன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அவற்றின் முலபாடம், உரை இவற்றுடன் பெற்றுக் கொள்ளும் இவ்வசதி வழியாக மாணவர்களுக்கு முல பாடத்தைப் பார்க்கச் செய்ய இயலும். உரைகளை ஒப்பிட்டு நோக்க இயலும்.
பொள்ளச்சியில் உள்ள சிற்றிதழ் சேகரிப்பாளர் திருமிகு நசன் அவர்கள் தமிழம். காம் என்ற இணையதளத்தை நிறுவியுள்ளார். தமிழ் மொழிக்குச் சீரிய முறையில் தொண்டாற்றி வருகின்ற தளங்களில் இது குறிக்கத்தக்கதாகும். இத்தளத்தில் இருநூற்று எழுபத்தாறு தமிழறிஞர்களின் புகைப்படங்கள் அடங்கியுள்ளன. பெரும்பான்மையான தமிழறிஞர்கள் இற்றைக் காலத்திற்கு முன்னான முன்னூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்த பெரியார்கள் என்பதும் குறிக்கத்தக்கது.
இத்தளத்தின் வாயிலாக இதழியல் படிக்கின்ற மாணவர்கள் சிற்றிதழ்களை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் பல வசதிகள் இதனுள் உள்ளன.
தனி நபர்களும் தங்களின் இணையதளங்கள் வழி தமிழ்க்கல்விக்குத் தொண்டாற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டிற்கு ஒன்று காட்ட இயலும். கடையம் என்ற ஊரில் தற்போது வாழ்ந்துவரும் ஒருவரின் வலைப்பூ குறிக்கத்தக்கதாகும். http://barathikannammablogspot.com என்ற இணைய தளம் பாரதியார் வாழ்ந்த கடையப்பகுதிகளைக் கண்முன் விரிக்கின்றது.
தமிழ் நேசன் என்ற வலை தளம் தமிழ்ப் பண்பாடு, தமிழர் இலக்கியம் குறித்த பல்வேறு தகவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தந்து கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. மதுரை தீப்பற்றிய காட்சியை ஓர் ஓவியரின் கற்பனைப் படைப்பில் விளைந்த நிலையை இத்தளம் தந்துள்ளது சிறப்பிற்குரியது. இத்தளத்தைப் பார்த்துவிட்டுப் பாட ஆசிரியர்கள் பாடம் நடத்துவது நல்லது எனக் கூறும் அளவிற்கு இதனுள் பல செய்திகள் அடைந்து கிடக்கின்றன.
இதுபோன்றே அறிமுகச் செய்திகளை வழங்கும் விக்கிப்பீடியா(http://ta.wikipedia.org) என்ற தளமும் கவனிக்கத்தக்கது. இதுதற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. சில செய்திகள் இவற்றில் சுருங்கிய அளவில் உள்ளன. இதனை மேம்படுத்த இதனைப் பார்ப்பவர்களையும் அழைக்கும் தளமாக இதனுள் உள்ளது.
நூலகம் என்றொரு தளம் தினம் ஒரு நூலை இணையத்தில் ஏற்றி வருகின்றது. இத்தளம் இலங்கைத் தமிழ் நூலாசிரியர்களின் நூல்களை இணைய மயமாக்குவதன் வாயிலாக இலங்கைத் தமிழ் சார்ந்தத் திறனாய்வாளர்களை, படைப்பாளர்களைப் பற்றியும் அவர்களின் ஆக்கங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது. (www. noolagam.net)
சொற்பொருள் தெரிவிக்கும் அகராதிகள் பலவும் இணையதளங்களில் கிடைக்கின்றன. இதற்கு ஓர் காட்டாக விளங்குவது http//dsal.uchicaco.edu என்ற தளமாகும். இத்தளத்தில் ரோமன் ஆங்கில முறையில் அமைந்த ஒலிபெயர்ப்பு நிலையில் சொற்களை உள்ளிட்டுப் பொருள் பெற இயலும்.
மேலும் தனிநபர் வலை தளங்களில் குறிக்கத்தக்கனவாக இக்கால எழுத்தாளர்களின் தளங்கள் விளங்குகின்றன. மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் உயிருடன் இருக்கும் காலத்தில் இத்தகைய தனிநபர் வலைதளமாக தன் தளத்தை உருவாக்கிப் பல வாசகர்களுடன் தொடர்பு கொண்டார். தற்போது எஸ். இராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோரின் இணையதளங்கள் இவற்றில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
பல்சுவை தரும் இணையதளங்கள் பல தமிழில் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குக் காட்டாக அப்புசாமி . காம் என்பது அமைகிறது. இதனுள் பல்சுவை நிரம்பிய பல பக்கங்களைக் காணமுடிகிறது.பாக்கியம் ராமசாமி என்பவரின் கற்பனைப்பாத்திரமான அப்புசாமி சீதாப்பாட்டி இருவரும் இதழியல் உலகால் அதிகம் உணரப் பெற்றவர்கள். இவர்களை இணையத்தில் சந்திக்க இந்தத்தளம் வாய்ப்பளிக்கிறது.
மழலைகள். காம் என்பது குழந்தைகளுக்கான பல தகவல்களை உள்ளடக்கி உள்ளது. குழந்தைகளே வலைதலங்களை உருவாக்கும் மகத்தான முயற்சிக்கு இது வழிகோலுகின்றது.
செம்மொழித்தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் ((ciil.classicaltamil.org) மைசூரில் உள்ள இந்திய நடுவண் அரசின் மொழி நிறுவனம் செம்மொழிக்காக ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் வழியாக ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. மேலும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்றன இசைவடிவமாகக் கிடைக்கின்றன. இவை மாணவர்களுக்குப் பெருத்த பயன் அளிப்பனவாகும்.
இவ்வகையில் இயல்தமிழின் ஆற்றலுக்கு இணையம் சிறப்போடு தன்னால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றது. இதன் வழியே சென்றால் தமிழின் பெருமையும் தகைமையும் கூடும் என்பதில் ஐயமில்லை.
இசைத்தமிழ்
தமிழிசை என்பது தற்போது தேய்ந்து வரும் சூழலாக உள்ளது. இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழிசை இணையதளங்கள் விளங்குகின்றன. குறிப்பாக சைவத் திருமுறைகள் கற்பிக்கும்போது இத்தளங்கள் மிகவும் உதவுகின்றன. ஆசிரியருக்குப் பாடத் தெரியவில்லை என்ற குறையை இவை போக்குகின்றன. மேலும் மாணவர்களுக்கு உண்மையான தமிழிசையின் மாண்புகளை இவை அறிவிக்கின்றன.
தமிழ்ச்சங்கம்.பிளாக்ஸ்பாட். காம் இசைத்தமிழ்ப் பற்றிய பல தகவல்களை அளிப்பதாக உள்ளது. ஓதுவார்.காம் என்ற தளம் பல திருமுறை ஓதுவார்களின் பாடல்களைத் தக்கப் பின்னணி இசையுடன் வழங்கி வருகின்றது. இது கௌமாரம். காம் என்ற இணையதளத்தின் இணைப்பில் உருவானதாகும். கௌமாரம்.காம் என்ற தளம் மிக்கப் பயனுடையது. கந்தன் குறித்தப் பனுவல்கள் அனைத்தும் இதனுள் கிடைக்கின்றன. இசைவடிவம், எழுத்து வடிவம், காட்சி வடிவம் எனப் பல இதன் வழியில் கிடைக்கின்றன.
முதுசொம்இசையரங்கு என்ற தளம் தமிழிசைப்பாடல்கள் கொண்ட இணையதளங்களின் பெயர்களைத் தரும் தொகுப்புத் தளமாக விளங்குகிறது.
தமிழிசை மும்முர்த்திகள், அருணாசல கவிராயர் போன்றோரின் பாடல்களை ஒலிபரப்பும் தளங்கள் கூட உள்ளன.
இதுதவிர தற்போது திரைஇசைப்பாடல்களும் பாடப்பகுதிகளா அமைந்துவருகின்றன. அவ்வகையில் திரையிசைப்பாடல்களைக் கேட்க ஓசை.காம், தேனிசை.காம் போன்றன உள்ளன. இத்தளங்கள் வழியாக பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், சுரதா பாடல்கள் போன்றவற்றைப் பதிவிறக்கம் செய்து ஒலிபரப்ப இயலும்.
இவற்றின் அடிப்படையில் இணைய வானொலி ஒன்றைப் புதியதாக மாணவர்கள் கூட உருவாக்க முடியும்.
இவை தவிர நாட்டுப்புற இசை, பக்தி இசை, பாரதியார்பாடல்கள் போன்றனவற்றைத் தரும் இணையதளங்களும் உள்ளன.
இவ்வாறு இசைத்தமிழ் மேன்மைபட பல இணையதளங்கள் உதவி வருகின்றன.
நாடகத்தமிழ்
தமிழ் இலக்கிய வரலாற்றில் எவ்வாறு தமிழநாடகத்தின் இடம் சுருங்கிக்கிடக்கிறதோ அதுபோலவே இணைய உலகத்திலும் இதன் பக்கங்கள் குறைவாகவே உள்ளன. இதன் இடத்தைக் குறும்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. குறும்படங்கள் தமிழில் அதிகமாக வெளிவரத்தொடங்கியுள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த சேமிப்புக் கூடமாக தமிழ்ஸ்டுடியோ.காம் விளங்குகின்றது. கூத்தரங்கம் என்ற ஒரு தளம் இலங்கையின் நாடக முயற்சிகளை வெளியுலகிற்கு அளிக்கின்றது.
கௌமாரத்தில் கந்தபுராணக் காட்சிகள் காட்டப் பெறுகின்றன. இவை நாடகப்பாங்கிற்கு உதவுகின்றன. தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் ஓரளவிற்கு பிளாஷ் பிளேயரில் ஓடக்கூடிய அசைபடங்களை உருவாக்கிப் பாடம் சொல்லும் முயற்சியைக் கையாண்டு வருகின்றது. சிலப்பதிகாரம் இவற்றுள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
இவ்வாறு பல நிலைகளில் தமிழ் இணையதளங்கள் தமிழ்க்கற்பிப்பு முயற்சிக்கு உறுதுணையாக நின்று விளங்கி வருகின்றன. இவற்றின் பெருக்கம் தமிழ்ப் படிப்போரை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
முடிவுகள்
முத்தமிழைப் பரப்பும் வகையில் இணையத் தளங்கள் பல செயல்பட்டு வருகின்றன.
தனிமனித உழைப்பு, நிறுவன உழைப்பு என்ற இரு நிலையிலும் இச்செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இயல் தமிழைப் பொறுத்தவரையில் இதற்கே முத்தமிழில் மிக முக்கிய இடம் இருக்கின்றது. வளர்ச்சியிலும் இதுவே இணைய நிலையில் சிறப்பிடம் பெறுகிறது.
நூலகங்கள், தேடும் வசதிகள் போன்றன கொண்ட இயல்தமிழ்ச்சேவை தமிழ் மாணவர்களுக்குப் பயன்மிக்கது.
இசைத்தமிழில் பெரும்பாலும் சைவம் சார்ந்த பாடல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மற்ற சமயங்கள் குறித்த இசைப்பக்கங்கள் வரவேண்டும்.
கௌமாரம் . காம் குறிக்கத்தக்க பணியை இசைத்தமிழுக்குச் செய்துவருகிறது.
நாடகத்தமிழுக்கு ஓரளவிற்கே பங்களிப்பை இணையப்பக்கங்கள் செய்துவருகின்றன.
* manidalblogspot.com, muppalam2006@gmail.com.
--