திங்கள், டிசம்பர் 14, 2009

சுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.


ஒவ்வொரு படைப்பும் தன் காலச் சமுகச் சூழலை உளப்படுத்தியே வெளிப்படுகின்றது. படைப்பிலக்கியங்கள் தன் காலத்தின் இலக்கியப் பதிவாக விளங்குவதற்கு இந்தப் பண்பே தலையாய காரணமாக அமைகின்றது. ஒருவரிப் படைப்பானாலும், அல்லது அதைத்தாண்டிச் சிலவரிகள் கொண்ட படைப்பாயினும், சில காண்டங்கள் கொண்ட படைப்பாயினும் இந்தச் சமுக வெளிப்பாட்டுத்தன்மை குறிக்கத்தக்க வலிமையை அவ்வவ்விலக்கிய வடிவத்திற்குத் தந்துவிடுகின்றது.
விரக்தியையும், ஒரு பக்கக் காதலையும் பாடி நிற்பன புதுக்கவிதைகள் என்ற விமர்சனம் பொய்யானது என்பதை புதுக்கவிதைகளும் நிருபித்து வருகின்றன. புதுக்கவிதைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வோரும் நிருபித்து வருகின்றனர்.
தமிழ்ப்புதுக்கவிதைகளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்ற நூலினைக் கண்ணுறும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைத் தொகுதிகளை ஆராய்ந்து அவற்றில் இருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழல் சிந்தனைகளை, விழிப்புணர்வுகளை, சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் கேடுகளை, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய முயற்சிகளைத் தெள்ளிதின் இந்நூல் ஆராய்ந்து எடுத்துரைத்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் முனைவர் மு. அருணாசலம் அவர்கள் கவிதைகளை ஆராய்ந்ததோடு தற்காலத்தில் சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள அரசின் கவனத்தையும் எடுத்துக் கொண்டு நூலை ஆக்கியுள்ளார்.
அரசும் சட்டங்களும் முயன்றாலும் மனித சமுகம் சுற்றுச் சூழலைப் பாழாக்கி வருவதை பல இடங்களில் வருத்தத்தோடு புதுக்கவிதைகள் பதிவு செய்துள்ளன.
ஞானசம்பந்தர் காலத்தில் ஆறாக ஓடிய கூவம் இன்று சாக்கடைச் சகதியாகிவிட்டது. "கூவம் நதிக்கரையில் திருவேர்குளம், இளம்பியன் கோட்டுர் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன. இங்குள்ள சிவன் கோயில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம். ஆலயங்கள் கூறும் இந்தவரலாறு நதியின் நூற்றாண்டு கால தொன்மையை நினைவு படுத்துகிறது..... நதிகளிலியே மிகவும் மாசடைந்த நதிகளில் முதலிடம் கூவத்துக்குத்தான் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று கூறுகிறது '' (பக் 37) என்று சரித்திர பின்னணி முதல் சமகால அறிவியல் பின்னணி வரையான செய்திகளுடன் புதுக்கவிதைகளின் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக் கோணத்தினை இவ்வாய்வு செய்துள்ளது.
மண்ணை/ ஊடுருவிப் / புதுப்பிக்கும்/ மண்புழு/ பாலித்தீன் பை/ ஸ்பரிசத்தில் / மரணமெய்தியது/ (சுகன் பூங்சாலி) என்று பல நிலைகளில் சுற்றுச் சூழல் கேட்டை வலியுறுத்தும் கவிதைகளைக் கண்டு தேடி புதுக்கவிதைகளின் பாடுபொருளுக்கு ஊட்டம் கொடுத்திருக்கிறது இவ்வாய்வு.
காற்று மாசுபாடு, நீர்மாசுபாடு, அணுமாசுபாடு, பாலிதீன் மாசுபாடு போன்ற மாசுக்களின் கொடுமைகளைப் புதுக்கவிதைகள் வழியாகக் கண்டு இவ்வாய்வு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
நகர்மயமாதல், காடுகள் அழிதல், மரங்களின் அழிவு போன்றவற்றால் இந்தப் புவி பெற்றுள்ள வெப்பத்தின் அளவையும், அதனால் ஏற்படும் தீமையையும் கருத்தில் கொண்டு புதுக்கவிதைகள் நோக்கப் பெற்றுள்ளன.
குறிப்பாக அடிப்படையான பல சுற்றுச் சூழல் செய்திகள், இந்திய அரசியல் சட்டங்கள், அரசாங்க நடைமுறைகள் தேர்ந்து எடுத்துத் தரப் பெற்று அதன் வழியில் ஆய்வு சென்றிருப்பது நல்ல முறைமை. ஆய்வின் தரத்தையும், உலகின் தரத்தையும், புதுக்கவிதையின் தரத்தையும் முன்னேற்றும் நல்ல நூல் இதுவாகும்.
(தமிழ்ப் புதுக்கவிதைகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முனைவர் மு. அருணாசலம்., சிவகுரு பதிப்பகம்,7/10 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை12. 2009, விலை. ரு. 200)
--

சனி, டிசம்பர் 05, 2009

ஸ்ரீரங்கத்திற்கு நிகரான புதுவயல் ரெங்கநாதர் கோயில் திருப்பணி

"செய்யோடு காற்று விளையாடி வரும் நகரம் '' என்று கவியரசு கண்ணதாசன் அவர்களால் சிறப்பிக்கப் பெற்ற ஊர் புதுவயல் ஆகும். "செய் '' என்ற சொல்லிற்கு வயல் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வயல்களில் காற்று விளையாடி விளைச்சலைப் பெருக்கும் ஊர் புதுவயல் என்பது இதன் பொருள் ஆகும். "செய்யவள்'' என்ற பெயர் இலக்குமிக்கு உண்டு. அதனால் " செய் '' என்ற சொல்லிற்கு இலக்குமி என்று பொருள் கொண்டு அவள் காற்றுபோல் விடுதலையோடு உலாவரும் ஊர் என்றும் புதுவயலுக்குப் பொருள் கொள்ளலாம்.
இருபொருள்களுமே புதுவயலுக்குப் பொருந்துவாகும். வயல்களில் விலையும் நெல்லை அரசியாக்கிக் காற்றுப்பெட்டிவரை கொண்டு செல்லும் நவீன அரிசி ஆலைகள் பல உள்ள ஊர் இதுவாகும். இதனால் வயலும் பெருகுகிறது. வணிகமும் பெருகிச் செல்வம் செழிக்கிறது. காற்றோடுச் செய்யவள் இவ்வூரில் நிலைத்து நிற்கிறாள். கவிஞர் கண்ணதாசனின் சொல்வாக்கு மிகப் பொருந்துவதாக புதுவயல் விளங்குகிறது.
இவ்வூரில் கைலாசவிநாயகர், மேலப் பெருமாள் கோயில், கீழப் பெருமாள் கோயில், காட்டுச் சிவன் கோயில் என்று பல கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் அனைத்தும் பழமைச் சிறப்பு வாய்ந்தன. இவை அனைத்தும் திருக்குளங்களோடு அமைந்து நீர்வளத்தையும், அருள் வளத்தையும் இவ்வூருக்கு வழங்கி வருவது இன்னும் சிறப்பாகும்.
தற்போது இவ்வூரில் உள்ள கீழப் பெருமாள் கோயில் திருப்பணி நடைபெற்றுவருகிறது. இக்கோயில் ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்து இருப்பதால் மக்கள் இதனைக் கீழப் பெருமாள் கோயில் என்று அழைக்கின்றனர். இது தவிர மேற்குப் புறத்தில் மேலப் பெருமாள் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இது மேற்குப் புறத்தது.
இக்கோயில் பழமை வாய்ந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக இவ்வாலயத்தினை ஐயங்கார் சமுகத்தைச் சார்ந்த பெருமக்கள் கட்டி வணங்கி விழாக்கள் நடத்தி வந்தனர். அவர்கள் வெளியூர்களுக்குச் சென்றபோது இவ்வூரில் உள்ள நகரத்தார் இனம் சார்ந்த முன்று குடும்பத்தார்கள் பொறுப்பில் விட்டுச் சென்றனர். இக்குடும்பத்தார் இதனைச் சிறப்போடு நிர்வகித்து வந்தனர்.
தற்போது இக்கோயிலை புணருதாரணம் செய்துப் புதுப்பிக்க முடிவு செய்து பிரசன்னம் பார்த்தனர். அதன்படி கோயில் திருப்பணிகள் ஆரம்பிக்கப் பெற்று இன்னும் சில மாதங்களில் சம்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.
அறுபது லட்ச ருபாய் செலவிலான மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணிக்கு அடியவர்கள் உதவவேண்டும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ரெங்கநாதன் ஆவார். இறைவி ரெங்கநாயகி ஆவாள். இறைவன் இறைவியின் பெயர் பொருத்தம் சிறப்பிற்குரியது. திருவரங்கத்தில் பள்ளி எழுந்தருளம் அரங்கநாதனை மனதில் கொண்டு அதே பெயரில் இறைவனையும் இறைவியையும் அமைத்துள்ள அடியார்கள் திறம் போற்றத்தக்கது.
இக்கோயிலில் மேலும் இராமர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, தன்வந்திரி சன்னதி, அயக்ரீவர் சன்னதி போன்ற சன்னதிகளும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் ஸ்ரீரங்கத்தில் பெருமைக்குரிய சன்னதிகளாகும். திருவரங்கத்தை அப்படியே புதுவயலுக்குக் கொண்டு வந்துள்ள அடியார்களைப் போற்ற வேண்டும். திருவரங்கத்தில் அருள்புரியும் அதே தன்மையுடன் இங்குள்ள இறைவனும் நிறைவாகக் காட்சிதருகிறான்.
மகாமண்டபம், வாகன மண்டபம் எனப் புதுப் பொலிவோடு விளங்க உள்ள இக்கோயிலுக்கு மெய்யன்பர்கள் நிதியுதவி செய்துப் பெருமாளின் திருவடி பரவி உய்ய அன்போடு வேண்டுகிறோம்.
இக்கோயில் பணிக்காக ஒரு டிரஸ்ட் உருவாக்கப் பெற்றுள்ளது. இதனைத் தக்க நிர்வாகிகள் நிர்வகித்து வருகின்றனர். அன்பர்கள் தங்கள் நிதியை விஆர். ரெங்கநாதன், ஆர்எம். பழனியப்பன், இஎம்சி. பழனியப்பன் என்ற நிர்வாகிகள் குழுவில் உள்ள ஒருவர் பெயரில் காசோலைகளாக அனுப்பினால் திருவருள் தங்களுக்குப் பெருகும்.

நூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.



தமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு விளங்குகின்றது.இப்பதினான்கு நூல்களிலும் இறைவனின் தன்மைகள், ஆன்மாவின் நிலைகள், இறைவனை ஆன்மா அடைய முடியாததற்கான தடைகள் முதலியன பற்றிய செய்திகள் எடுத்துக் காட்டப் பெறுகின்றன.
மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் என்பது சைவ தத்துவங்களில் தலைமேல் வைத்துப் போற்றக் கூடிய அடிப்படை நூல் ஆகும். இது தவிர திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற நூல்கள் இத்தொகுப்பில் அடங்குகின்றன.
தத்துவச் செய்திகள் மிகுந்து காணப்படும் இத்தொகுப்பிற்கு அனைவரும் புரிந்துக் கொள்ளத் தக்கநிலையில் தற்போது எளிய உரைநூல் ஒன்று வந்துள்ளது. முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் இந்நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஒரே தொகுப்பாக வந்துள்ள இந்நூல் ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு பக்கங்களாக விரிந்துள்ளது. கெட்டி அட்டையுடன் நல்ல தாளில் சென்னை உமா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலின் விலை ருபாய் ஐநூறு.
இத்தொகுப்பினுள் ஒவ்வொரு நூலைப்பற்றிய அறிமுகம், ஆசிரியர் அறிமுகம் நூலின் பாடல்கள், அதற்கான பொருள், அப்பாடலின் கடினமான சொற்களுக்குப் பொருள் என்பன அடங்கியுள்ளன. குறிப்பாக பாடல்கள் ஒருவகையான எழுத்துருவிலும், அதற்கான எளிய உரை தடித்த எழுத்துருவிலும், சொற்பொருள் விளக்கம் ஒரு வடிவத்திலும் நூல் முழுவதும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. இது படிப்பவர்க்கு மிக்க துணை செய்கிறது.
இந்நூலில் மிக ரசமான பகுதி என்றால் ஒவ்வொரு நூலைப் பற்றிய அறிமுகமும், அந்நூலாசிரியர் பற்றிய செய்தியுமே ஆகும். எடுத்துக்காட்டிற்குப் பின்வரும் பகுதியைச் சுட்டலாம்.
`இவர் ( கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்) ஒரு நாள் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாக தனக்கு அமைந்த விருதுகளோடு சிவகைமேல் சென்றார். அவ்வாறு செல்லும்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞான சம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைக் கண்டார். கண்டவுடன்
" பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுதல் பாரீர்'' என்றார். அச்சொற்களைக் கேட்ட உமாபதி சிவம் சிவகையில் இருந்து இறங்கி மறைஞான சம்பந்தர் திருவடிகளைத் தொழுதார். மறைஞானசம்பந்தர் சொன்ன தொடருக்குப் பொருள் கேட்டுடத் தெளிந்து அவர்க்கு மாணவர் ஆனார். பட்ட கட்டை என்பது சிவிகையைக் குறிக்க விருது ஆகிய விளக்கைப் பகல் நேரத்திலும் கொண்டு சென்றதால் அதனைப் பகற்குருடு என்பது குறிக்க அமைந்த ஞானாசிரியன் திருவாக்கு உமாபதி சிவத்திற்கு ஞானத்தைத் தந்தது. '' (ப. 791)
இதுபோன்ற பல சுவையான செய்திகள் இதனுள் உள்ளன. உமாபதி சிவம் என்பவர் இப்பதினான்கில் செம்பாதிக்குமேல் எழுதியவர் ஆவார். இவர் ஞானம் பெற்ற வரலாற்றை மேற்பகுதி சுட்டுகிறது.
இந்நூலுள் செய்யுள்களுக்கான உரையினைச் சொல்லும்போதும் எளிமை நடை பின்பற்றப் பெற்றுள்ளமை போற்றத்தக்கது. அதற்கு ஒரு காட்டு பின்வருமாறு.
பல்ஆருயிர் உணரும் பான்மை எனமேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை
என்பது திருவருட்பயன் பகுதியில் வரும் ஒரு குறட்செய்யுள் ஆகும். இதற்குப் பின்வரும் நிலையில் எளிய நடையில் உரை அமைகின்றது.
`அளவில்லாதவனாய் எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மாக்கள் அறிவிக்க அறியும் தன்மைபோல தனக்கு மேலாய் நின்று உணர்த்துகின்ற ஒருவரை இல்லாதவன் எங்கள் இறை ''
இவ்வாறு ஒவ்வொரு தத்துவப் பாடலிற்கும் எளிமையோடு உரை தந்துள்ள இந்நூல் தமிழர்தம் நூலகத்துள்ளும், அகத்துள்ளும் இருக்க வேண்டிய நன்னூல்.
சைவ சித்தாந்த சாத்திரங்கள், முனைவர் பழ. முத்தப்பன் ( உரை ஆசிரியர்) உமாபதிப்பகம், 18/171 பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை1 விலை ருபாய் 500

வெள்ளி, டிசம்பர் 04, 2009

தொடரும் இதழ் 10-11


தொடரும் இதழ் 10-11
செப்டம்பர் 2009 வரையான காலப்பகுதிக்கான தொடரும் இதழ் வெளிவந்திருக்கிறது. போரற்ற வாழ்வே மனித குலத்தின் மாண்பு என்ற முகப்புத் தொடருடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சிறுகதை
பார்த்தல் மகத்தானது கமலநாபன்
கட்டுரைகள்
வெளியீட்டின் பின் வெடிக்கும் வேதனைகள் மதுரை பாரதிபுக் அவுஸ் துரைப்பாண்டி, படிப்பும் பண்பாடும்முனைவர் அ. அறிவு நம்பி சாபவிமோசன யாத்திரை6
அஞ்சலிக் கட்டுரைகள்

நெஞ்சில் நிறைந்த பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியனார் குறித்து முனைவர் இராம. சுந்தரம்
மோதி நினைவுகள் மோதி ராஜகோபல் குறித்து தே. ப. பாலசுப்பிரமண்யன்
கவிதை நூல்கள் விமர்சனம்

கவித்தென்றல் நா. கண்ணனின் கவிராசனின் புவி வாசனை, சித. சிதம்பரத்தின் கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, வேல்.சரவணக்குமாரின் உயிர்வலி ஆகிய முன்று நூல்கள் குறித்த மு. பழனியப்பனின் விமர்சனக் கட்டுரை
திரைப்பட அலசல்

ஆ. சந்திரபோஸ் அவர்களின் மாயண்டிக் குடும்பத்தார் திரைப்படம் குறித்த விமர்சனக் கட்டுரை
கவிதைகள்

பேனா.மனோகரன் இந்தியன் கணேசன் துளசிராமன் அறந்தை க. அஜய்
முகவரி- கண்ணன் அச்சகம், நாடார் பேட்டை, சிங்கம்புணரி 630502