வெள்ளி, அக்டோபர் 12, 2007

நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்



செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். புதுக்கோட்டை சிவகங்கை? இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 96 ஊர்களைத் தங்களின் இருப்பிடமாகக் கொண்ட இவர்கள் தற்போது செட்டிநாட்டில் எழுபத்தைந்து ஊர்களிலும தமிழகம் முழுவதிலும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது மருந்துவணிகம், தாள்வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர். இவர்களின் முறைப்பெயர்கள் அனைத்தும் தமிழடியானவை. அம்முறைப்பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப்பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.
பொதுப்பெயர்கள்
நகரத்தார் மரபு ஆண்களை- செட்டியார் என்றும்; நகரத்தார் என்றும் பெண்களை- ஆச்சி என்றும் பொதுப்பெயரிட்டு பிற குலத்தார் அழைக்கின்றனர். இவர்களுக்குள்ளும் இப்பொதுப்பெயர் நிலவி வருகின்றது. அம்மாள் என்று மற்ற குலங்களில் அழைக்கப்பெறும் பெண்பால் பொதுப்பெயர் இக்குலத்தில் ஆச்சி என அழைக்கப்பெறுவது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது.
செட்டியார், நகரத்தார் என்ற ஆண்பாற்பெயர்கள் அவர்களின் குலம் குறித்தமைந்த பெயர்களாகும். ஆனால் ஆச்சி என்ற பெண்பாற்பெயர் பெண்களுக்கு வழங்கப்பெறுவது வரலாற்றறு அடிப்படையானது ஆகும்.
ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம் மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.
இப்படி வேற்று ஆயத்தில் இருந்து பெற்ற பெண் என்ற குறிப்பை உட்கொண்டு வேற்று ஆயத்தாள் என்ற பெயர் அப்பெண்களுக்கு வழணங்கப்பெற்று ஆச்சி என்று மருவி வந்திருக்கலாம் என்பது ஒருவகை. காலப்போக்கில் மருத நில மக்களான வேளாண் குலத்தவரே முல்லை நிலத்தார் செய்யும் தொழில்களான மாடு வளர்த்தல், பால் தயிர் விற்றல் முதலான தொழில்களைச் செய்து வந்ததால் ஆயர், ஆய்ச்சியர் என்ற முல்லை நிலப்பெயர்கள் மருத நிலத்தார்க்கு வழங்கப்பட அக்குலம் சார் பெண்களைப் பெற்றதனால் நகரத்தார் வேளாளப்பெண்களை ஆச்சி என அழைத்திருக்கவேண்டும். இவ்வாறு நகரத்தார் குலப்பெண்கள் ஆச்சி எனப்பட்டிருக்கலாம் என்பது இன்னொருவகை. எவ்வகையாயினும் ஆச்சி என்ற பொதுப்பெயர் நகரத்தார் இனத்துப் பெண்களுக்கான தனித்த பெயராக வழங்கி வருவது கருதத்தக்கது.
தற்போது ஆச்சி மோர், ஆச்சி சம்பார்பொடி ஆகியன விற்பனைக்கு வருகின்றன. அவைகள் செட்டிநாட்டு சமையல் கருதி தயாரானவை என்பதை மறைமுகமாகக் காட்டிநிற்கின்றன. ஆச்சி வந்தாச்சு என்ற நகரத்தார் குல இதழ் தற்போது வெளிவந்து கொண்டுள்ளது. இவற்றின் வழி ஆச்சி என்றபெயர் பெறும் சிறப்புக்களை உணரமுடியும்.
குடும்பப் பெயர்கள்
இவர்களின் குலத்தில் குடும்பப் பெயர்கள் மிகவும் எளிமையான கட்டமைப்பின; காரண காரியம் மிக்கன; ஒரே அமைப்பின. அவற்றில் சில பெயர்கள் இங்குக் காட்டப் பெற்று அவற்றின் பொதுமைகள் ஆராயப்பெறுகின்றன.
தந்தை- அப்பச்சி எனவும் தாய்- ஆத்தாள் எனவும் அழைக்கப்பெறுகின்றனர். மகன், மகள் பெயர்களில் மாற்றம் இல்லை. மகனின் மனைவி- மகம்மிண்டி(மகன் பெண்டிர்) என அழைக்கப்பெறுகிறhள். பெண்டிர் என்ற சொல் பெண்பெயர்களுக்கான பின்ஒட்டு ஆகும். பெண்டிர் என்றால் பெண் எனப்பொருள்படும் ;. இச்சொல் மரியாதைப்பன்மை கலந்த சொல்லாகும். எனவே பெண்களை மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இக்குலத்தாரிடம் உள்ளது என்பதை உணரமுடிகின்றது. மகளின் கணவர்- மாப்பிள்ளை? மருமகன் எனப்படுகின்றார். இவைபோல பின்வரும் பெயர்களும் காணத்தக்கன.
அண்ணன்- அண்ணன், அண்ணன்மனைவி- அண்ணமிண்டி(அண்ணன் பெண்டிர்), தம்பி- தம்பி, தம்பிமனைவி- தம்பியொண்டி(தம்பி பெண்டிர்), பேரன்-பேரன், பேரன்மனைவி- பேரம்பிண்டி(பேரன்பெண்டிர்), மாமா-அம்மான், மாமாமனைவி- அம்மாம்மிண்டி(அம்மான் பெண்டிர்), அத்தை-அயித்தை? அத்தைமகள்- அயித்தியாண்டி( அத்தையாள்பெண்டிர்), கணவனின்தம்பி,அண்ணன் ஆகியோர்-கொழுந்தனார்- கொழுந்தனாவண்டி(கொழுந்தனார் பெண்டிர்)
என்பன ஒரே அமைப்பின. இவற்றில் பெண்டிர் என்ற சொல் அதன் முன்சொல்லுக்கு ஏற்றhர்போல், மிண்டி, யாண்டி, யொண்டி, மிண்டி ஆகிய ஈறுகளாகப் பேச்சு வழக்கில் திரிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இன்னும் சில குடும்பப் பெயர்கள் வேறு அமைப்பில் உள்ளன. அம்மாவைப் பெற்ற அம்மா- ஆயா எனவும், அப்பாவைப் பெற்ற அம்மா- அப்பத்தா ( அப்பனைப் பெற்ற ஆத்தாள்) எனவும் அழைக்கப் பெறுகின்றனர். அப்பா, அம்மா இருவரையும் பெற்ற தாத்தா- ஐயா என்றே பொதுப்பெயரால் அழைக்கப்பெறுகிறhர்.
மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள் என்பன எதிர் உறவுமுறையினரைக் குறிக்கும் பெயர்களாகும். இவை தவிர மற்றெhரு பெண்ணின் கணவனைக் குறிக்கையில் ஆம்பிடையான் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதும் உண்டு.
கணவனும், மனைவியும் -ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கையில் ஏங்கறேன் என்ற பேச்சு வழக்கு நகரத்தார் மரபில் காணப்படுகிறது. ஏன் என்கிறேன் என்ற சொல்லின் திரிபாக இதனைக் கொள்ளலாம்.
மகனுக்கு அவனின் தந்தைவழி தாத்தா (ஐயா) பெயரிடப்படுகையில், அதனை அவனின் அம்மா(ஆத்தாள் ) அழைப்பது மரியாதைக் குறைவு எனக் கருதி நகரத்தார் பெண்கள் அழைப்பதில்லை. மாறாக தம்பி என்றோ, வேறு ஒரு பெயர் கொண்டோ அழைப்பது முறைமையாக உள்ளது. அதுபோலவே அப்பத்தா பெயரை மகளுக்கு இடுகையில் அதனை அழைப்பதும் மரியாதைக்குறைவு என்பதால் வேறுபெயர் கொண்டோ அல்லது ஆத்தாள் என்றோ அழைப்பதும் முறைமையாகும்.
இதே போல இரண்டாவது மகன், மகள் பிறக்கையில் மாமானார், மாமியார் பெயர் சூட்டப்படுகையில் அதனை அழைப்பது மரியாதைக்குறைவு எனக்கருதுவதால் கணவனும் வேறுபெயர் இட்டு அழைப்பதும் வழக்காக உள்ளது. எனவே நகரத்தார்குல எல்லா பிள்ளைகளுக்கும் இருபெயர்கள் இருப்பது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது. இவ்விருபெயர்களும் திருமண அழைப்பிதழ் முதலாக பதிவு பெற வேண்டிய இடங்களில் பதியப்பெறுகின்றன என்பது குறிக்கத்தக்கது.
அண்ணன் என்ற சொல் நகரத்தார் மக்களிடையே பேச்சு வழக்கில் அதிகம் பயன்படும் சொல்லாகும். வயதில் மூத்த ஆண்களை அண்ணன் என்பது பொதுவழக்காகும். வயதில் குறைந்த ஆண்களை தம்பி என்றழைப்பதும் பொதுவழக்காகும். வயதில் மு்த்த பெண்பிள்ளைகளை ஆச்சி என அழைப்பதும், வயதில் குறைந்த பெண்பிள்ளைகளை தங்கச்சி என்றழைப்பதும் பொதுவழக்கிற்கு உட்பட்டதே ஆகும். இவ்வழக்குகள் செட்டிநாட்டுப்பகுதிகளில் வாழும் பிற இனத்தாரிடத்திலும் காணப்பெறுகின்றன.
மனைவியுடன் பிறந்த ஆண்- மச்சான், மைத்துனன் என அழைக்கப்படுவதும், கணவனுடன் பிறந்த பெண்கள் நாத்தனார் எனப்படுவதும், பிற குலத்தினரால் அழைக்கப்பெறும் பான்மையினவே.
மேலும் முறையினர் பலராக இருக்கும் போது அவர்களை வயது அடிப்படையில் பெரிய, சிறிய என்ற அடைகளுடன் அழைக்கும்முறை இவர்களிடம் காணப்பெறுகின்றது. எடுத்துக்காட்டிற்காக சின்ன (சிறிய) ஆயா, பெரிய ஆயா; சின்ன ஆத்தாள், பெரிய ஆத்தள் முதலியனவற்றைக் காட்டலாம்.
நெருங்கிய உறவினர்
பெரியப்பா, சித்தப்பா போன்ற தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினர்கள் வளவினர் எனப்படுகின்றனர். வளவு என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் அனைவரும் ஒரு வளைவிற்குள் வாழ்ந்தனர் என்ற அடிப்படையில் உருவான வளைவு என்ற சொல்லே பின்னர் வளவு என மருவியது என்பர் . இதனடிப்படையில் தந்தைவழிப்பட்ட நெருங்கிய உறவினரைக் குறிக்கும் சொல் வளவினர் ஆயிற்று.
தாய் வழிப்பட்ட நெருங்கிய உறவினர் தாயபிள்ளைகள் என அழைக்கப் பெறுகின்றனர். பெரும்பான்மை இச்சொல் தாய் வழிப்பட்ட உறவினரைக் குறித்தபோதும்- சிறுபான்மை தந்தை உறவினர்க்கும் உரியதாகின்றது. தாயபிள்ளைகள் என்ற இச்சொல் தூய தமிழ் அடிப்படையில் அமைந்த காரணகாரியமிக்க இணைப்புச்சொல்லாகும். இச்சொல் பங்காளிகள் அல்லாத உறவுமுறையினர்க்குரியதாகும்.
தூரத்து உறவினர்
தூரத்து உறவினர் பங்காளிகள் எனப்படுகின்றனர். இவர்களுள் சில வகைகள் உண்டு. அவை பங்காளிகள், கோயில் பங்காளிகள், ஊர் பங்காளிகள், கூடிக்கொள்கின்ற பங்காளிகள் என்பனவாகும்.
பங்காளிகள்
பங்காளிகள் என்போர் தந்தைவழியில் உறவுமுறையினர் ஆவர். இவர்கள் திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் இக்குலமுறையினரிடம் நடைபெறhது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் பங்காளிகள்
கோயில் பங்காளிகள் என்போர் கோயில் உறவால் உறவினர் ஆவோர் ஆவர். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். இவர்கள் ஒன்பது நகரக்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவனர் ஆவர். அவை இளையாற்றங்குடி, மாற்றூர், நேமம், இரணியூர், பிள்ளையார்பட்டி, இலுப்பைக்குடி, சூரைக்குடி, வைரவன் கோயில், வேலங்குடி என்பனவாகும். இச்சிவன்கோயில்கள் அடிப்படையில் ஒன்பது பிரிவாகியுள்ள இக்குலத்தார், இவர்களுக்கான பூர்வீக ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். பலஊரினர் ஆனாலும் கோயில் அடிப்படையில் இவர்களிடத்தில் உறவு உண்டு. இவ்வுறவே கோயில்பங்காளிகள் என்னும் உறவாகின்றது.
ஊர்பங்காளிகள்
ஓரூர் சார்ந்த நகரத்தார்கள் தம்மை ஓரூர் பங்காளிகள் எனப் பெருமையோடு அழைத்துக்கொள்ளுகின்றனர். வெளியூர்களில் வேலையில் அமர்ந்த நகரத்தார் பெருமக்கள் ஊர் சார்ந்து ஒருமைப்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுகின்றது.
வழி, வழி மரபாக வாழ்ந்த இவ்வூர் இணைப்பு தவிர, வாழும் ஊர்களிலும் இம்முறை தொடர்கின்றது. எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரில் வாழும் பல ஊர் நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து நகரத்தார் சங்கம் என்ற அமைப்பைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ளும்போது அவர்கள் கோயில், மரபு தாண்டி மற்றொரு உறவுமுறைக்குள் நெருக்கமாகின்றனர். இவ்வுறவுமுறையே தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுத் திகழ்கின்றது. நகரத்தரார் சங்கங்கள் மூலமாக உலக அளவில் கூட பல ஊர்களில் நகரத்தார்கள் ஒருங்கிணைகின்றனர். இச்சங்கங்கள் மூலமாக அவர்கள் பல அறப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
இவ்வாறு கூட்டம் கூட்டமாக- வளவு அடியாகவும், கோயிலடியாகவும், மரபூர் அடியாகவும், வாழுமமூர் அடியாகவும் வாழும் முறைமை இச்சமூகத்தாரின் இனக்கட்டுமானத்திற்கு இன உணர்விற்கு எடுத்துக்காட்டாகின்றது. எனினும் இவர்களின் இனஉணர்வு மென்மையானது மேன்மையானது என்பதும் இங்கு எண்ணத்தக்கது.
புள்ளி
புள்ளி என்ற இச்சொல் நகரத்தார் மரபில் மிகவும் பொருளுள்ளது ஆகும். திருமணமான நகரத்தார் ஆண்பிள்ளை ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்பெறுகின்றhர். இதன்பின் இவர் ஊர்ப் பொதுக்காரியங்களுக்கான புள்ளிவரி கட்டவேண்டும். திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் தனிக்குடும்பமாகக் கருதப்பட்டு அவர் பெயருக்கு அழைப்பு தரப்பெறும். அவர் பெயரில் மொய்ப்பணம் பெறப்பெறும். இவ்வகையில் புள்ளி என்பது இவர்கள் குலத்துள் மிகப் பொருளுள்ளதாகின்றது.
புள்ளிக்குரிய ஆண் இறந்த சூழலில், அவரது மனைவி வாழும் நிலையில் அவர் அரைப்புள்ளியாக கருதப்பட்டு அவரிடம் வரிப்பணம் முதலியன அரையளவில் பெறப்பெறுகின்றன. மனைவி இறந்து கணவர் மட்டும் இருக்கும் சூழலில் அவர் ஒரு புள்ளியாகவே கருதப்படுகிறார். சாதி மாற்றி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் இப்புள்ளி என்னும் நிலைக்கு வாரார் என்பது கருதத்தக்கது.
இவ்வாறு நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபினர் தமக்கென தனித்த தமிழ் வழிப்பட்ட காரணகாரியமிக்க இனஉணர்வுடைய முறைப்பெயர்களை அமைத்துக் கொண்டு தம் பண்பாட்டை நாகரீகத்தை குலமரபைக் காத்து வருகின்றனர்.

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

பாரதி காலப் பெண்ணியம்


இந்திய விடுதலை என்னும் காலக்கட்டம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை முற்றிலும் மறுத்து இந்தியர்களே இந்தியர்களை ஆளும் சூழலில் இந்தக் காலக்கட்டம் குறிப்பிடத் தகுந்ததாகின்றது. புதிய இந்தியாவின் விடியல் என்பதாக இந்த விடுதலை அமைந்தது.
புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் பலர் பங்கு கொண்டனர். குறிப்பாக இதழாசிரியர்கள், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் என்ற பல தரப்பினர் விடுதலையை எண்ணித் தம் செயல்களை ஆற்றினர். புதிய இந்தியாவை அவரவர்கள் அவரவர்கள் கோணத்தில் வடிவமைக்க முயன்றனர்.
பாரதியின் வாழ்நாள் காலம் என்பது விடுதலைக்கு முந்தைய நிலையிலேயே முடிவு பெற்று விடுகிறது. பாரதி இக்காலகட்டத்தில் இதழ் ஆசிரியரராக, சமுதாயக் கவிஞராக, அரசியல்வாதியாக விளங்கினார். வரப்போகிற விடுதலைக்கு முன்னறிவிப்புகளை பாரதியார் தம் எழுத்துகளின் மூலம் வெளியிட்டார். வரப்போகிற வலிமையான இந்தியாவை வரவேற்றhர். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே சுதந்திரப் பள்ளுவைப் பாடினார். பாரதி நோக்கில் ஒரு ஒப்பில்லாத சமுதாயமாக விடுதலை பெற்ற இந்திய சமுதாயம் விளங்கியது. எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்ற உன்னதத் தன்மையைப் பாரதியார் தன் விடுதலைக் கனவாகக் கண்டார்.
அவரது கவிதைகளில் உணர்ச்சிகள் மேலோணுங்கி இருந்தன. இதழ்ப்பணிகளில் உண்மைகளை மக்களுக்குச் சொல்லும் ஆர்வம் இருந்தது. அரசியலில் அவர் தீவிரவாதிகள் பக்கம் இருந்தார்.
1882 முதல் 1921 வரை ஆண்டு பாரதியின் காலம் நிகழ்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் முகிழ்க்கத்
தொடங்கியது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலைகவிழத்தொடங்கினர். அடிமை நிலையில் இருந்த பெண்கள் வெளிவரத் தொடங்கினர்." இந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமை நிலையில் இருக்கிறாள். நம்முடைய வீடுகளில்
அறைக்குள் அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளேதான் இருந்தால் என்ன? குடி கெட்டுப் போச்சுது அடிமையைத் தண்ணீர் கொண்டுவரத் தெருவில் விட்டால்தான் என்னட? அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் கைதியாக வைத்திருந்தால்தான் என்ன?. . . நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள். அதில் சந்தேகம் இல்லை." (பெ. தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப. 79. )
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு தாமுதல் என்றனர் அன்றே
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர். நம் தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே(பாரதியார் கவிதைகள்,ப. 415. )
என்ற பாரதியின் கருத்துகள் இந்தியாவில் விடுதலைக்குச் சற்று முந்தைய காலப் பெண்களின் அடிமை நிலையைத் தெற்றென விளக்குவதாகும்.
பெண்களை ஒரு மனித உயிரினமாகக் கூட பாரதியாரின் காலத்தில் கருதச் சமூகம் இடம் தரவில்லை என்பது இன்னும் கொடுமையான செய்தியாகும். ஸ்தீரிகளுக்கு ஜீவன் உண்டு. மனம் உண்டு. புத்தியுண்டு. ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள்
செத்த யந்திரங்கள் அல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவே தான். புறவுறுப்புகளில் மாறுதல். ஆத்மா ஒரே மாதிரி.(பெ. தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப. 83.) என்ற பகுதி பெண்களை ஒரு மனித் உயிரியாக ஏற்கக் கோரும் பகுதியாகும்.
ஆணுக்குச் சமமான உரிமைகளைப் பெண் பெறவிரும்பும் காலக்கட்டமாக பாரதியின் காலக்கட்டம் இருந்துள்ளது.
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி
காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை அற்றிடும் காணீர்
காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
இந்தப் பகுதிகள் சரிசம நிலை குறித்தமைவன. பெண்களின் கற்புக்கு ஈடாக ஆண்களும் கற்பு நிலையில் சமத் தகுதி பெறவேண்டும் என்பது பெண்ணைக் காட்டி ஆணுக்குச் சொல்லும் சம நிலை பாரதி காலத்தில் வலியுறுத்தப் பெற்றுள்ளது.
அறிவு, இல்லறம் ஆகியவற்றில் ஆண் பெற்றுள்ள மதிப்பு மிக்க நிலைக்கு ஈடான சமநிலையைப் பெண் பெறவேண்டும் என்பது அக்காலத்தில் இருந்த கருத்து ஆகும். அறிவு, மனம், இல்லறம் ஆகியவற்றில் சமநிலை பெறவிரும்பும் பெண் உடலளலவில்
ஆணுக்கு அடங்கியே நிற்கவேண்டிய காலகட்டமாக பாரதியின் காலக்கட்டம் இருந்துள்ளது என்பது இவற்றில் இருந்து பெறப்படுகிற மற்றொரு செய்தியாகும்.
பாரதி கற்பு குறித்துத் தன் உரைநடைப் பகுதிகளில் அதிகமாகச் சிந்தித்துள்ளார். ஸ்திரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டும் என்று
எல்லோரும் விரும்புகிறhர்கள். அதிலே கடினம் என்னவென்றால் ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை.
. . . ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும் கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஐனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பட்சம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர
புருக்ஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கட்டத்தில் இருபதினாயிரம் புருக்ஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே குறைந்த பட்சம் இருபதினாயிரம் ஸ்திரீகள் விபச்சாரிகளாக
இருக்கவேண்டியது அவசியமாகிறது(பெ. தூரன்-பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப.94. )என்ற கணக்கு ஆண் விபச்சாரத்தினால் ஏற்படும் பெண்களின் நலமின்மையைச் சுட்டிக்காட்டுவதாகும். அக்காலப் பெண்கள் கேட்ட விடுதலை அல்லது பாரதி விரும்பிய பெண் விடுதலை என்பது ஓழுக்கம் மிக்க விடுதலை என்பதில் ஐயமில்லை. அந்த விடுதலைக்குள் சுதந்திரமான இயக்கம் பெண்களுக்கு
ஏற்படவேண்டும் என்ற எண்ணம் அக்காலத்தில் நிலவியது.
அடிமைத் தேசணங்களில் கூட ஆண் மக்களில் பெரும்பாலோர் அதாவது ரகஸிய போலீஸ் உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் கொண்டவர் தவிர மற்றவர்கள் தம் இக்ஷடப் படி எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம். எங்கும் சஞ்சரிக்கலாம்.தனியாக
சஞ்சாரம் பண்ணக் கூடாது என்ற நியதி கிடையாது. ஆனால் பெண் தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும் உள்ளன. அவற்றில் நமது தேசத்தில் பெரும்பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப் படுகிறேன்.(மேலது. 94)
பெண்ணின் விடுதலை மிக்க இயக்கத் தேவை பற்றிய விழைவு இதனுள் சுட்டப் பெற்றுள்ளது.
இவற்றில் இருந்து சில முடிவுகளுக்கு வரமுடிகின்றது. பாரதியின் காலக்கட்டத்தில் அடிமை நிலையில் பெண் இருந்துள்ளாள். அவள் வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்திற்குச் செல்ல இயலாதவாளாக வீட்டுக்குள்ளே கட்டுப்பட்டிருந்தாள். அவளுக்குக் கற்பு என்பது மிகப் பெரிய எல்லைக் கோடாக இருந்துள்ளது. அதனை அவள் எக்காலத்திலும் மீற இயலாது. மீறக் கூடாது. ஆனால் ஆண்கள் மீறலாம். தன் பெண்களை மட்டும் மீறவிடாமல் காத்துக் கொள்ளலாம். அறிவிலும், இல்லற நடைமுறைகளிலும் அவள் இரண்டாம் நிலையில் இருந்துள்ளாள் என்பன போன்ற செய்திகள் பாரதிகாலத்துப் பெண்களின் நிலையாக இருந்துள்ளது.
இத்தகைய கட்டுப்பாட்டு நிலையைப் பாரதி கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். அவரின் குரல் ஆழமாக பதிவைப் பெற்றுள்ளது. கவிதைகளிலும் கட்டுரைகளிலும் விடுதலை மிக்க புதுமைப் பெண்ணை அவர் வரவேற்றுள்ளார். இவ்வரவேற்பு முன்னேற்றமற்ற நிலையில் இருந்து முன்னேற்ற மிக்க நிலைக்குப் பெண்களை அழைத்துச் செல்வதாக இருந்தது.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோணங்கி வையம் தழைக்குமாம்
பூணு நலத் தோடிணங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணம் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ
இந்த வரவேற்பு பாடல் பெண்கள் கைக் கொண்டு நடக்கவேண்டிய கொள்கைகளை எடுத்துரைக்கின்றது.
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவையென்றhல்
1. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இக்ஷட மில்லாத புருமக்ஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருமக்ஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும்.அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக் கூடாது.
4. பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்குச் சமபாகம் கொடுக்க வேண்டும்.
5. புருமூன் இறந்தபின்பு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
6. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்தீரிகள் யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
7. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருக்ஷர்களுடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிடவேண்டும்.
8. பெண்களுக்கு ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
9. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெறவிரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
10. . . . சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.(பெ.தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு-பக் 95-96)
என்ற பாரதியின் அடிப்படை பெண் விடுதலைக் கூறுகளில் பல இன்னமும் எட்டப் படவில்லை அல்லது நடைமுறைக்கு வரவில்லை என்பது மிகப் பெரிய சோகமே.
விடுதலைக்கு முந்தைய இந்தியப் பெண்களின் நிலை நாட்டு விடுதலை பெற்றாலும் சமூக விடுதலையை நோக்கிப் பயணிக்கும் பெண்களின் நிலை ஆகியவற்றின் தக்க சான்றுகளாகப் பாரதியின் படைப்புகள் விளங்குகின்றன. பாரதி காலக்கட்டம்
பெண்விடுதலையின் முக்கியமான தொடக்கக் காலக்கட்டம் என்பதில் ஐயமில்லை.
பாரதியின் பெண் குறித்த சிந்தனைகள் அவரது படைப்பு மாந்தர்களிடத்திலும் எதிரொலித்துள்ளது. சந்திரகையின் கதையில் இடம் பெற்றுள்ள பின்வரும் பகுதி அதற்கு ஒரு சான்றhகும்.
விசாலாட்சி, விசாலாட்சி, நான் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உயிருடன் இருக்கமாட்டேன். என் பிராணன் போகுமுன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே. முதாலவது நீ விவாகம் செய்து கொள். விதாவ விவாகம் செய்யத் தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால் நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுய நல சாத்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு
தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அணு;கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப் படு. இரண்டாவது நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் சந்திரிகை என்று பெயர் வை.(பெ.தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டுபக் 184-185)என்றாள்.
இப்பகுதியில் பெண்களுக்கான விதாவ விவாகம் பற்றிய செய்திகளும் அதனைச் செய்து கொள்ள அக்காலத்தில் இருந்த வாய்ப்புகளும் காட்டப் பெற்றுள்ளன.
இவ்வாறு பாரதியின் காலக் கட்டம் பெண் விடுதலை முகிழ்த்த கால கட்டமாக விளணங்குகிறது. இந்தத் தொடக்கம் இன்னும் பல தூரம் செல்லவேண்டியுள்ளது. ஆனால் தொடக்கத்தைக் கடக்கவே இன்னும் நூற்றாண்டுகள் ஆகலாம் என்ற நிலையில்
தமிழகப் பெண்ணியம் நிற்கிறது என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.
முடிவுகள்
பாரதிகால பெண்ணியம் என்பது பாரதி வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இருந்து அரசியல், சமூக நிலை குறித்து அமைவதாகும்.
அக்காலக்கட்டத்தில் பெண்கள் அடிமை நிலையில் இருந்தனர்.
அடிமை நிலையில் இருந்து அவர்கள் மாற கல்வியில் ஏற்றம், அறிவினில் ஏற்றம், கற்பினில் திடம், இல்லறத்தில் சமஉரிமை ஆகியன தரப்பெற வேண்டும் என்ற எண்ணம் அக்காலக்கட்டத்தில் நிலவியது.
" பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற பாரதி வரிகள் மெய்ப்பட்டுவிட்டன என்ற போதிலும் பாரதி கண்ட பெண் விடுதலைக் கருத்துகள் முழுமை பட நிறைவேறவில்லை என்பது சோகமான உண்மை.
பயன் கொண்ட நூல்கள்
தூரன்.பெ. பாரதி தமிழ் வசனத் திரட்டு, நேமூனல் புக் டிரஸ்ட் புதுதில்லி, 1978.
பாரதியார், பாரதியார் கவிதைகள், தென்றல் நிலையம், சிதம்பரம், 2006

சொல்லி மாள்வதில்லை

தாத்தா இறந்து பல நாள்கள்
ஆகின்றன
அவர் இறப்பின் துக்கத்தின்
கடைசி நிமிடங்கள் சந்திக்க
இயலாதாயின
அதனால்
அவர் இன்னும் இருப்பதாக மனம் எண்ணுகிறது
அவர் சொல்லித்தந்தது பல நல்ல விசயங்கள் விருந்துக்கு அழைத்துப்போவார்
வேண்டுவன குறைவன பார்த்து விருந்தை
ருசிக்கக் கற்றுத் தந்தார்
இலையில் மிச்சம் மீதி
குறைவின்றி முழுமையாக்கும்
பழக்கம் அவரிடம் இருந்து பெற்றதே

இன்னும் பல நினைவு கூர்வார்
என் அப்பா அவருக்கு மச்சினன் முறை
அதனால் அவரின் சிறு வயதுக் கன்னங்களைக்
கடித்து மகிழ்ந்தது கூறுவார்।

என் அப்பா அவரின் மருமகன் ஆனது
அடுத்த நிகழ்வு

தபால் நிலையத்தில் சண்டை போட்ட
விசயம் சொல்வார்।
வங்கியில் வேலை பார்த்தவர்
இப்போதைய வங்கிப்
பணியாளர்களின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்
சேர்த்து வைக்கப் பழகியவர்
அது தனக்கல்ல என தன்னைச்
சுருக்கிக் கொண்டவர்
மகன்கள் இப்போது பெருக்கிக் கொண்டிருக்கிறhர்கள்
மகளுக்கு ஒன்றும் சேர்க்கவில்லை
என்ற நினைப்பில் உறுதியாய் நின்றவர்
கடைசி காலணுகளில்
தன் துணை இழந்து
உணவிற்கு பிறர் கரம் நோக்க வேண்டிய துயரம் ஆறாது
மனைவியின்
அருமை அப்போது மட்டுமே
உணர்ந்தவர்
இறப்பின் மிச்சங்கள் அவரின்
கைப்பிடி அறுந்துபோன பெட்டியில்
இருந்ததாய் அம்மா சொன்னாள்
வங்கியின் நிரந்தர வைப்புகள் மகன்கள்
பெயரில் கெட்டியாய் சாகும் வரை
காப்பாற்றியது அதுமட்டுமே
இன்னும் இருக்கிறார்
இருபது வருடங்களுக்கு நிரந்தர
வைப்பின் கால அளவு அது வரை உள்ளதே