வெள்ளி, ஜூலை 20, 2007

சீதையின் தனிப்புலம்பல்



பெண் சக்தியின் குறியீடு. அவள் உயிரினை பிறப்பிப்பவள். பிறந்த உயிர்களுக்கு நல் உணர்வினை ஊட்டுபவள். அவளிடமிருந்தே நல்ல உலகம் உருவாகிறது. அவளைப் பாராட்டுவதன் மூலம் அறிவதன் மூலம் உலகைப் பாராட்டுகிறோம்; உலகை அறிந்து கொள்கிறோம், மொத்தத்தில் உலகின் உன்னதம் அவள்.
அவள் வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டும் உண்டு என்றாலும் துன்பமே அவளின் வாழ்வின் பெரும்பங்காகிப் போகிறது. உண்மை வாழ்விலும், இலக்கிய வாழ்விலும் துன்பமே பெண்களுக்குப் பெருந்துணையாக இருந்துள்ளது. பெண்ணின் மகிழ்வான கணங்கள் மிகச் சில மட்டுமே.
கண்ணகியின் இன்பம் எத்தனை நொடிகள் என்று கணக்கிட்டு விடமுடியும். மாதவியின் சோகம் எவ்வளவு நெடியது என்பது தெரிந்ததே. மணிமேகலையின் மனக்கவலை மாற்றல் அரிது. ஒளவையின் தனிமை,ஆட்டனத்தியின் காதல், அமராவதியின் தோல்வி, காரைக்காலம்மையின் வாழ்க்கை, ஆண்டாளின் மாலைப் புறக்கணிப்பு முதலான எதிலும் சோகமே பெண்களுக்குத் துணையாகின்றது.
இந்தச் சோகம் கற்போர் கண்ணில், நெஞ்சில், உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்பங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைவிட துன்பங்கள் ஏற்படுத்திய வடுக்கள் ஆறாதவை. அவை நெஞ்சின் ஓரத்தில் என்றும் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும். எத்தனை முறை அழுதாலும் அதற்கு வடிகால் கிடையாது; கிடைக்காது.
பெண்ணுக்கு மட்டும் தான் இப்படியா என்றால் இந்தக் கேள்விக்கு ஆணுக்கும் இப்படியே என்று சொல்லிச் சமப்படுத்திக் கொள்வதில் தடைஇல்லை. துன்பம் நேர்கையில் யாழெடுத்துப்பாட அவனுக்கு ஒருத்தி இருக்கிறாள். அவள் கற்புக்கரசியாக இருக்கலாம். ஆடல் மகளாக இருக்கலாம்.
ஆனால் பெண்ணுக்குத் துன்பம் நேர்கையில் யாழெடுத்துப்பாட எந்த ஆடவன் முன்வருகிறான். அவன் இன்னமும் அவளின் துன்பத்தில் ருசி பார்க்கிறான். துன்பமே துணையாக, துன்பமே வடிவாக வாழும் அவளின் வாழ்வு விடிவை நோக்கிப் பயணிக்க வேண்டும். அந்த விடியலில் ஆணும் ஒளி பெறவேண்டும்.
சீதை. அவளின் அழகு அதிகம். அதை விட அவளின் அறிவு அதிகம். அவளின் காதல், கற்பு இன்னும் இன்னும் அதிகம். இவை எல்லாவற்றையும் விட அவள் அடைந்த துயரம் இன்னும் அதிகம் என்பதுதான் கம்பனைக் கற்போர் கொண்ட முடிவு.
திருமணம் ஆகிறது. கம்பன் கற்பனையில் அது காதல் திருமணம். தொல்காப்பியர் கருதும் அகத்திணை இலக்கணம் மாறாத திருமணம்.
மணவாழ்க்கையைப் பெற்றோர் கலந்து பழகும் முன்னால் அரச பாரம் தயாராய்த் தேர் கொண்டு வருகிறது. தேரில் ஏற இருந்தவன் தடுத்து நிறுத்தப் பட்டான். காட்டுக்குப் போக ராஜகட்டளை வழிவகுத்தது. போகும் முன்னே மனைவியிடம் சொல்லிச் செல்ல வருகிறான்.
பிரிவின் சுடுமோ பெருங்காடு என்று துன்பத்தின் அளவை சரியான துலாக்கோலால் அளந்து பார்க்கிறாள் சீதை. கணவனை விட்டுப் பிரிந்து இருப்பதைவிட காடு கொடுமையானது அல்ல. முடிவெடுத்தாள். மரவுரி தரித்து மாமியார் காட்டிய வழியில் கானகம் போனாள். தேனிலவுக்குச் செல்ல வேண்டியவள் தனிவழியில் பயமுறுத்தும் காட்டுவழியில் கணவனை மட்டுமே துணையாக்கிப் போனாள்.
மான் வழி வந்த சோதனையின் முடிவில் மீளத்துயரம் அவள் வாழ்வில் நிலைத்தது. அசோக வனத்தின் சோகச் சிறையில் கற்புக்கடம் பூண்ட பொற்புடை தெய்வமாக அவள் ஆனாள்.
அவளின் அழகு அவளுக்கு எதிரியானது. அவளது அறிவு அவளின் நிலையை ஊரார் பழித்துக் கூறுவார்களே என அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. அவளின் உணர்வு இராமனின் உருவநலனில் மெலிந்து போனது.
இந்தத் துயரத் தொடர்கதை அவள் வாழ்வில் ஏன் ஏற்பட வேண்டும். துரும்பாய் நினைத்து இரும்பாய் எதிரில் நிற்கும் இராவணக் கொடியோனை அவள் ஏன் ஏச வேண்டும். துன்பமே அவள் வாழ்வில் பெரும்பங்கு என்று சொன்னால் அது உண்மைதானே.
தனியாய்ப் புலம்புகிறாள். அவளின் புலம்பல் கற்போர் நெஞ்சைக் கரைக்கிறது. கற்போர் நெஞ்சம் கல் அல்ல. அது வெல்லக்கட்டியாய் கம்பன் கவிதையைச் சுவைத்துக் கொண்டே வருகிறது. சீதையின் துயரம் கேட்ட அந்த வெல்லக்கட்டியின் உருவம் அழிந்து அது அழத்தொடக்கிறது. கம்பன் அழுகவிதை படைக்கிறhன்.
உருக்காட்டுப் படலத்தில் கற்போர் தன் உருவம் தொலைத்துத் துன்பக்கடலில் மூழ்குகின்றனர்.
ஒன்று என் உயிர் உண்டு,எனின் உண்டு இடர் யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா
(உருக்காட்டுப்படலம் 497)
சீதை துன்பத்தோடே பேசுகிறாள்; என் உயிர் இருக்கிறது. அது இருக்கும் வரை எனக்கும் துன்பம் உண்டு. அந்த உயிர் எப்பொழுது தொலைகிறதோ அப்போதே அந்தத் துன்பமும் தொலைந்து போகும் என்ற பேச்சில் மிஞ்சுவது ஆறாத்துயரமே.
அவள் இன்னும் பேசுகிறாள்; பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன். . . சிறை இருந்தேனை அப்புனிதன் தீண்டுமோ(498) இது இராமனிடம் அவள் வைக்கும் துயர வேண்டுகோள்.
உன்னினர் பிற என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இருங்காலம் வைகினேன்
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் கொலோ(499)
எதோ ஒன்று விரும்பியது; அதற்காக பல முறை என்னிடம் பேசிப்பார்த்தது; அந்த வார்த்தைகள் என்காதில் இன்னும் கோர்த்துக் கொண்டுள்ளன, எனினும் நான் இறந்து போகாமல் இருக்கிறேனே என்னைக் காட்டிலும் கொடிய அரக்கியர் யாராவது உலகில் உண்டா
நல்பிறப்பு உடைமையும் நாணும் நன்று அரோ
கற்புடை மடந்தையர் கதையில்தான் உளோர்
இல் பிரிந்து உய்ந்தவர் என்னின் யாவரே (500)
என்று அவள் புலம்புகிறhள்.
கணவனற்ற இடத்தில் இருக்கும் என் நாணமும் நல்பிறப்பு உடமையும் நன்றானதாட? கற்புக்கரசிகள் என்று கதைகள் கூறும் நிலையில் உள்ள காவியப் பெண்களுக்குக் கூட என்நிலை வந்திருக்காது. கணவனைப் பிரிந்து, உயிரோடு வாழும் என்நிலை இரங்கத்தக்கது.
இவ்வாறு அவள் புலம்புவதைக் கேட்பதற்குக் கூட எதிரில் ஆளில்லை. உறக்கத்தில் அரக்கியர் கிடக்க தனித்துப் புலம்பும் அவளின் நிலையைக் கேட்க அப்போது ஆளில்லை என்றாலும் அவளின் துன்பம் கம்பனைக் கசக்கி அவன் வழியாய் கற்போரையும் கசக்கி கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. கம்பனும் அவனைக் கற்போரும் இந்தத்துயரத்தைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் சீதை. கலக்கம் கொள்ளாதே.
இராம இலக்குவர் வந்து இராவணனை அழிக்கட்டும். அல்லது இராவணனை அழிக்க முடியாமல் போரில் அழிந்தாலும் அழியட்டும். எவ்வாறாயினும் என்மேல் ஏற்பட்ட பழி நான் இருக்கும் வரை என்னைத் தொடரும். என்னைத் தொடர்ந்த அந்த மாற்ற் இயலாப் பழி அவர்களையும் தொடருமே. பழிக்கும் ஊர் குறித்த அவளின் கவலையை மாற்ற முடியுமா. (505)
பெருந்தவம் மடந்தையர் முன்பு பேதையன்
கருந் தனி முகிலினைப் பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனா ( 506)
என்ற அவளின் வருத்தம் என்றைக்கு மாறும்.
கம்பனின் கவிகள் சீதையின் தீர்க்க இயலா வருத்தத்தை அணுஅளவு கூடக் குறைக்காமல் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு பாடலும் வீசும் துன்பப் புயலில் சிக்குண்டு தவிப்பவள் சீதை மட்டுமல்ல. கற்போரும் தான்.
விடிவு அனுமன் வடிவில் வந்து கூவியது. போர் உருவானது. வெற்றி மாறி மாறிப் புகுந்து இராவணனின் தோல்வியில் முடிந்தது. வெற்றி பெற்ற இராமன் துன்புற்ற சீதையைச் சீரோடு கண்டான். அவளின் சீரை ரசித்தான் இல்லை. சிறை இருந்த செவ்வியைப் போற்றினான் இல்லை. தீவலம் செய்தவன் தீயைக் காட்டி அவளை சுடச் சொன்னான். சுட்டிடுமோ தீ.
மாற்றான் வீட்டில் கரியும் உணவும் பூவும் பொலிவும் பெற்றா வாழ்ந்தாள் அவள். என்ன கொடுமை இது. உளம் பதைக்கிறது. உயிர் நொந்து, உள்ளம் நொந்து, அறிவுத் திறம் நின்று நம்பிக்கையின் துணையாய் மட்டும் வாழ்ந்தவளுக்குக் கணவன் தந்த பரிசு போற்றுதற்குரியது. மிக அழகானது.
அவள் தீயில் இறங்கினாள். ஆனால் அவள் இறங்குவதற்கு முன்னால் சொல்லிய சொற்களில் இருந்த உறுதி உலகத்தாருக்கு அவள் தூய்மையானவள், இரங்கத்தக்கவள் என்று உணர்த்தின.
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா
என்றாள்
(மீட்சிப்படலம் 3976)
ஏ தீயே நீ உடலை எரிக்கும் வல்லமை பெற்றவன். ஆனால் உன்னால் மனதை எரிக்க இயலாது. இருந்தாலும் அந்த சக்தியை நான் உனக்குத் தருகிறேன். தவற்றை என் மனம் செய்திருந்தால் என் உடலை அழித்து விடு.
கேட்கக் கூடாத சொற்கள், அல்லது சொல்லக் கூடாத சொற்கள் இவற்றின் காரணமாகக் கூட நான் மாசு பெற்றிருக்கலாம். அவற்றை அழிக்கும் வல்லமை உனக்கு இல்லை. அதனையும் உனக்கு நான் தருகிறேன். அவ்வழியில் சிறு மாசு விழுந்திருந்தாலும் என்னை நீ சுடுக
இச்சொற்களைக் கேட்டதும் மனம் எரிகிறது. உடல் வெம்மைப்படுகிறது. காதுகள் சிவக்கின்றன. கண்கள் கண்ணீர் கோக்கின்றன.
என்ன பாவம் செய்தாள் இவள். உரசிப்பார்த்து மாற்று கூற இவள் தங்கமா? எடைபோட்டு பூச்சி, சொத்தை நீக்கி வாங்க இவள் கத்திக்காயா? கணவனையே எண்ணிக் கானகம் வந்தாள். அவனையே எண்ணி மானும் கேட்டாள். இப்போது தீயின் புகுமுன் அவனை வணங்கி நின்றாள். இவ்வளவு தானே அவள் செய்தது. இதற்கா இத்தனை சோதனை.
இன்னும் பல சீதையர் உளம் வாடுகிறார்கள். உடல் நோகிறார்கள். காதுகளை மூடிக்கொள்கிறhர்கள். இவை எங்கும் என்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
இந்தத் துயர தொடர்கதை போதும் என்று சொல்லி முடிக்க அனுமன் விரைவில் வரட்டும். அவன் நெஞ்சத்தேர் இவர்களுக்கு இருக்கை அமைத்துத் தரட்டும்.

ஞாயிறு, ஜூலை 15, 2007

பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்


தமிழ் இலக்கண வளமும் இலக்கிய நிறைவும் கொண்ட மொழி என்பதைச் சொல்லி சொல்லி பெருமை பூத்துக் கொண்டு இருக்கிறோம்। அது ஒருவகையில் உண்மையே. எனினும் யார் படைத்த இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் படிக்கப் படுகின்றன. திருவள்ளுவர், பாரதியார், கம்பர், இளங்கோ என்ற ஆண்களின் படைப்புகள் மட்டுமே படிக்கப்படுகின்றன. அதிகம் பதிப்பிக்கப் படுகின்றன. காலம் கடந்து பனையோலை வாசிப்புத் தளத்தில் தன் தனிப் பெருமையை நிலை நாட்டி வந்த ஆண்களின் பனுவல்கள் தொடர்ந்து தமிழ் மக்களின் வாசிப்பிற்குக் கிடைத்துவருகின்றன. பதிப்புகள் பல கண்டுள்ளன. இதன் எதிர்மறையாய் சிந்திக்கத் தலைப்பட்டால் பதிப்புகள் காணாமால், வாசிப்போர்க்கு உரிய நிலையில் வாசிப்புக்கு உரிய நூலாக ஆக்கப் பெறhமல் பல நூல்கள் அழிக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள் படைத்த நூல்கள் அனைத்திற்கும் இந்த நிலை பொருந்தும். தமிழின் நீண்ட பழமையில் ஒரு படைப்பு நீண்ட வாசிப்புத் தளதத்தைப் பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க இயலும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செல்லரித்துவிட்ட பனையோலைகளைத் திருப்பித் திருப்பி எழுத அதனை பலமுறை வாசித்து மனனம் செய்த ஒருவராலே அப்பனுவல் அடுத்த இரண்டாண்டு ஆண்டுகளுக்குக் காப்பாற்றப் பெற இயலும். இத்தகைய அரும்பாடுபட்டு காப்பற்றப் படும் பனுவல் தேவைக்குரிய பனுவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தேவையில்லாப் பனுவல்கள் தூக்கி எரியப்படாமலே கேட்பார் இன்றிப் படிப்போர் இன்றி அழிந்து போகும். அதன் அழிவு இரங்கத்தக்கது. இவ்வகையில் பெண்கள் படைத்த இலக்கணங்கள் காக்கைப் பாடினியம், சிறு காக்கைப் பாடினியம் என்ற இரண்டும் ஆகும். சில உரையாசிரியர்களின் மேற்கோள்களால் மட்டுமே இவை தற்போது இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. முழுமையாகக் கிடைக்கப் பெறாத இந்நூல்கள் யாப்பு இலக்கணம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் இந்நூல்கள் தொல்காப்பிய செய்யுளியலுக்குப் பின்னால் யாப்பு இலக்கணமரபை உயர்த்திப் பிடித்தன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது தவிர யாப்பியல் என்ற புதுத் துறையை இவ்விலக்கண நூல்களே முதலில் கொண்டுவந்தன. அதன்பின் வந்த யாப்பெருணங்கலக்காரிகை? யாப்பருங்கலம் முதலியன இதனின்று கிளைத்தவை. ஆனால் இவற்றை வாசிப்புத் தளத்தில் இருந்து அகற்றியவை. இந்த இருநூல்களும் பாடினி என்ற புலவரின் அடைமொழியோடு எண்ணி இணைத்துப் பார்க்கும் போது இன்னும் சில விளக்கணங்களைப் பெறலாம். பாடினி என்பது பாடும் தொழிலை உடைய பெண்ணைக் குறிக்கப் பயன்படும் சொல் ஆகும். பாடும் தொழிலை உடைய பெண்ணால் மட்டுமே பாட்டுக் கட்டும் இலக்கண முறைமையை அறிவிக்க முடியும் என்பது அடிப்படைக் கருத்து. இந்த அடிப்படைக் கருத்தின் அடிப்படையில் யாப்பியல் என்ற தமிழ் இலக்கணத்தின் புது நெறியை இப்பெண்பாற் புலவர்களே உண்டாக்கியுள்ளனர் என்பது மாற்ற இயலா உண்மையாகும். இவற்றின் காலம் குறித்து ஆய்கையில் பின்வரும் ச. வே. சுப்பிரமணியம் கருத்து கருதத்தக்கது. காக்கைப்பாடினியார்- இவருடைய காலம் கி. பி. ஆறhம் நூற்றண்டாகக் கருதலாம் (தமிழ் இலக்கண நூல்கள் ப. 106) சிறு காக்கைப் பாடினியம் காக்கைப்பாடினியத்திற்கு முன்னது என்ற கருத்தும், பின்னது என்ற கருத்தும் நிலவுகிறது. பேராசிரியர் இவரை காக்கைப் பாடினியாருக்கு இளையரான சிறுகாக்கைப் பாடினியார் என்பார். (மேலது மேற்கோள் ப. 114) , சிறு காக்கைப் பாடினியார் தளை என்பதோர் உறுப்பைக் கொண்டிலர் என்பதும் குமரியாறு கடல் கொள்ளப் பட்ட காலத்தில் இருந்தவர் என்றும கூறுகிறார் பேராசிரியர் (மேலது மேற்கோள் ப. 114) இவ்வகையில் மு்த்த இலக்கணநூல்கள் இவை என்பதில ஐயமில்லை. ஏனெனில் இவை யாப்பருணங்கலம் (கி. பி. பத்தாம் நூற்றாண்டு) யாப்பருணங்கலக்காரிகை (கி. பி பத்தாம் நூற்றாண்டு) (இவை இரண்டும் ஒரே புலவரால் இயற்றப் பெற்றவை - அமிர்தசாகரர்) என்பன பத்தாம் நூற்றாண்டளவில் எழுந்தன. இவை எழும் முன் வரை யாப்பியலின் இலக்கண நூல்களாகக் காக்கைப் பாடினியமும்,சிறுகாக்கைப் பாடினியமும் இருந்தன என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பல உரையாசிரியர்கள் இவற்றின் கருத்துக்களை ஒப்பு நோக்கியுள்ளனர், அஃதேல் நேர்பசை நிரைபசை எனக் காக்கைப் பாடினியார் முதலாகிய ஒரு சாராசிரியர் கொண்டிலாலெனின். . . என்பது இளம்பூரணர் உரையாகும். தொல்காப்பிய முழுமைக்கும் உரையெழுதிய இளம்பூரணர் காலத்தில் இவர்களின் நூல்கள் பயன் பாட்டில் இருந்தன என்பது கருதத் தக்கது. மேலும் யாப்பெருங்கலத்தை விருத்திஉரையாகத் தந்தவரும் காக்கைப் பாடினியத்தைச் சுட்டிப் பெருமைப்படுத்தியுள்ளார். நல்யாப்புக் கற்றhர் மதிக்கும் கலை காக்கைப் பாடினியார் (மேலது ப. 105) என்ற நிலையில் சீரும் சிறப்பும் பெற்ற காக்கைப் பாடினியம் எவ்வாறு முழுவதும் அழிக்கப் பெற்றது என்று சிந்திக்க வேண்டியுள்ளது, தற்போது காக்கைப்பாடினியம் வெறும் 89 நூற்பாக்கள் மட்டுமே கிடைக்கும் அளவினதாக உள்ளது. சிறு காக்கைப் பாடினியத்தில் வெறும் 31 நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒருகாலத்தில் புகழப்பெற்ற யாப்பு இலக்கணப் பெண் நூல்கள் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு குறிப்பாக யாப்பருணங்கல நூல்கள் வந்த பிறகு படிக்க ஆளில்லாமல் போயின. வாசகத் தளம் குறைந்து போன காரணத்தாலும் யாப்பு பற்றி வளர் செய்திகளை அறிந்து கொள்ள யாப்பருங்கல நூல்கள் வந்துவிட்ட காரணத்தாலும் இவற்றின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. பெண்களின் யாப்புப் பனுவலை அதாவது இலக்கணத்தை அமைத்துக் கொள்ளத் தகுதி பெற்றிருந்தும் அதனை வாசிக்கும் ஆண்கூட்டம் வாசிக்க முடியாது வெறுப்பு அல்லது புறக்கணிப்பு தருகிறபோது அவை வாழ்விழந்து போவது என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவ்வகையில் பத்தாம் நூற்றாண்டுவரை களத்தில் இருந்த இந்த நூல்கள் அடுத்த பத்து நூற்றhண்டுகளில் தூக்கி எறியப்பட்டதன் பின்னணி என்ன என்பதை உணரல் அவசியம். தற்போது தமிழ் படிக்கும் மாணவர்க்கு யாப்பருங்கலக்காரிகை யாப்பிலக்கணத்திற்காக வைக்கப் படுகிறது. இந்த நூலுக்கு ஏன் காரிகை என்ற பெயர் ஏற்பட்டது என்றால் காரிகையை அதாவது பெண்ணை விளித்து இந்நூல் யாப்பிலக்கணத்தைக் கற்பிக்கிறது. காரிகை- பெண்- பாடினி -இவளுக்கு உரியது யாப்பு இலக்கணம் என்பது மேற்கண்ட இரண்டு பெண் இலக்கண ஆசிரியர்களின் வழியாகக் கிடைக்கும் தெளிவான முடிவு. அவர்களின் நூல்களைப் பின்தள்ள வேண்டும் அதே நேரத்தில் ஆண்களைக் கவர வேண்டும் என்ற நோக்கில் செய்யப் பெற்றது யாப்பருங்கலக்காரிகை எனப் புரிந்து கொள்வதன் மு்லம் இதனுள் செயல்படுத்தப் பெற்றுள்ள ஆணாதிக்க அரசியலை உணர்ந்து கொள்ள இயலும். அதாவது

1. பெண் படைப்பாளர் கண்டறிந்த துறை யாப்புத்துறை
2. அதனை அவர்கள் நன்முறையில் ஆக்கிப் பத்தாம் நூற்றாண்டுவரை செழிக்கச் செய்தனர்.
3. அதன்பின் இந்நூலைத் தொடர்ந்து எழுத முற்பட்ட ஆண் ஒருவர் இந்த இலக்கண நூல்களில் பாடுவோர் என்ற நிலையில் இருந்த பெண்களை கேட்போர் என்ற நிலைக்கு மாற்றியுள்ளார்.
4. இதுவரை கேட்போராக இருந்த ஆண்கள் இங்கு படைப்போராக ஆக்கப்பட்டனர். இப்புறக்கணிப்பின் மு்லம் மிகச் சாதுர்யமாக இங்கு ஆணாதிக்க வாசிப்பு தள அரசியல் மாற்றம் செய்யப் பெற்றுள்ளது.
5. இனி பெண் கேட்பவளாவே இருக்க வைக்கப் படுவாள். ஆண் படைப்பவனாக வைக்கப்படுவான்.
6. பெண்ணுக்கான தனித்த யாப்பிலக்கண உரிமை இதன்மு்லம் தட்டிப் பறிக்கப் பட்டுவிட்டது.
7. மேலும் காரிகையை முன்னிறுத்தி இலக்கணம் செய்வதன் மூலம் ஆண்வாசகர்களைத் திருப்திப் படுத்தவும் முடியும் என்பது சொல்லாமலே பெறப்பெறும் செய்தி. இவ்வகையில் இலக்கணம் இழந்து பெண்இலக்கணவாதிகள் புறம் தள்ளப் பெற்றுள்ளனர். இவ்விலக்கண நூல்களை அரிதின் முயன்று ஓரளவு தந்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும். தொடர்ந்து பெண் இலக்கியங்கள் இலக்கணங்கள் வாசிப்புத்தளத்தில் இருந்து கொண்டிருக்க வேண்டுமானால் அவை விவாதிக்கப் பெறவேண்டும். படிக்கப் பெற வேண்டும். வாசகத் தளத்தைப் பெறவேண்டும்

வெள்ளி, ஜூலை 06, 2007

முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்



தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடகாலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக் கருப் பொருள்களோடு தொடர்புடைய மனித ஒழுக்கம் என்ற நோக்கில் சங்க அக இலக்கியங்கள் செய்யப் பெற்றுள்ளன.
இதன் காரணமாகச் சங்க அக இலக்கியங்களைச் சுற்றுச் சூழல் இலக்கியங்கள் என்றே அழைக்கலாம். தற்கால சுற்றுச் சூழல் அறிவியலாளர்களின் சிந்தனைக்கு அன்றே விதை இட்டவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களைச் சுற்றுப்புறச்சூழல் நோக்கில் ஆராயும் போது புலனாகின்றது.
முல்லைப் பாட்டு காட்டுப்பகுதியை மையமாக வைத்துப் புனையப் பெற்ற இலக்கியமாகும். இதனுள் காட்டு வாழ்க்கையும் நாட்டு வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. எனவே இது சுற்றுச் சூழல் கண்ணோட்டத்தில் நோக்கத் தக்க இலக்கியம் என்பதில் ஐயமில்லை.
காடுகள் அழிந்து வரும் சூழலில் காட்டு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்ற முல்லைப் பாட்டு என்ற இலக்கியத்தைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்வது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு மகிழ்ச்சிதரத் தக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
காட்டுப்பகுதிகள் குறித்த ஆய்வொன்று ஓராண்டுக்கு ஒருலட்சத்து நாற்பத்து நான்காயிரம் எக்டேர் என்ற விகிதத்தில் காடுகள் அழிக்கப் பெற்று வருவதாகக் கூறுகின்றது . எனவே அழிந்து வரும் காட்டுவளத்தை மீட்டெடுக்க இவ்வகை ஆய்வுகள் உதவும்.
சுற்றுச்சூழல் அறிவியல் பல கிளைகளை உடையது. அதாவது பருவமாற்றம் உயிர்ப் பெருக்கம் நிலத்தடிநீர் நிலவளச் சீரழிவு இயற்கை வளங்கள் தேவையற்ற பொருள்களைக் கையாளுதல் காற்று மாசுபாடு ஒலி மாசு ஆகிய பல துறைகளில் சுற்றச் சூழல் அறிவியல் தற்போது செயல்பட்டு வருகின்றது.
இவ்வகையில் இயற்கை வளம் என்ற நிலையில் முல்லைப்பாட்டில் பல இயற்கை வளங்கள் குறிப்பிடப் படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை தாவரணங்கள் விலங்குகள் பறவைகள் போன்றவை ஆகும். இவை கருப்பொருள் என அகமரபில் குறிப்பிடப் படுகின்றன. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள விலணங்குகள் பறவைகள் போன்றன பற்றிய செய்திகள் பின்வருமாறு.
விலங்குகள்
முல்லைப் பாட்டில் பல விலங்குகள் சுட்டப் பெறுகின்றன. அவை அக்காலத்தில் காட்டில் உறைந்த விலங்குகள் ஆகும்.
இரலை மான்
ஆண்மான். திரி மருப்பு இரலை என்றகுறிப்புடன் இம்மான் குறிப்பிடப்படுகிறது. அதாவது முறுக்கு பெற்ற கொம்பினை உடைய மான் என்ற நிலையில் இம்மான் சுட்டப் பெறுகிறது.
திரி மறுப்பு இரலையொடு(அடி 97)
மடமான்
இது இரலை மானோடு சுற்றித் திரியும் பெண்மான் ஆகும். இது பற்றிய குறிப்பும் மேற்கண்ட அடிகளைத் தொடர்ந்து அமைந்துள்ளது.
திரி மறுப்பு இரலையொடு மடமான் உகள(அடி 97)
கன்று
இது முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு ஆகும்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்று
என இது முல்லைப்பாட்டுள் சுட்டப் பெறுகிறது.(அடி 12)
கன்றின் தாயர்
இன்னே வருகுவர் தாயர் என்ற குறிப்புச் சொல்லின் வழியாக கன்றின் தாயான தாய்ப்பசு சுட்டப் படுகிறது.
மா (குதிரை)
நெடுந்தேர் பூண்ட மாவே
என்ற நிறைவுத் தொடர் குறிப்பின் வழி குதிரைகள் முல்லைப் பாட்டில் குறிக்கப் பெற்றுள்ளன.
யானை
யானைகள் கரும்பு நெற்கதிர் அதிமதுரத்தழை ஆகியவற்றைத் தின்னும். அவை தின்னாத போது பாகர்கள் யானைகளை வடமொழி வார்த்தைகள் கூறி பழக்குவர். கவளத்தைத் தின்னச் செய்வர். (அடி 32-36)
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறு கண்யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென
கவை முட் கருவியின் வட மொழி பயிற்றிக்
கல்லா இளைஹர் கவளம் கைப்ப
என்ற இவ்வடிகள் யானையின் இயல்புகளை உணர்த்துவன.
இவ்வாறு சில விலங்கினங்கள் முல்லைப்பாட்டில் காட்டப் பெற்றுள்ளன.
பறவைகள்
முல்லைப்பாட்டில் பறவைகளும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டுக்கு மயில் பற்றிய குறிப்பு இப்பனுவலில் இடம் பெற்றுள்ளது.
மயில்
மயில் தலைவிக்கு உவமையாக வந்துள்ளது. மஞ்ஞை என்று சுட்டப் பெற்றுள்ளது. ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி (அடி84)
வண்டு
யாழ் இசையென வண்டு ஆர்ப்ப ( அடி 8) என்ற குறிப்பின்படி வண்டுகள் முல்லைப்பாட்டுள் சுட்டப் பெற்றுள்ளன என்பது அறியத்தக்கது.
தாவரங்கள்
முல்லைப் பாட்டில் மரங்கள் செடிகள் கொடிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் பின்வருமாறு விரிக்கப் படுகின்றன.
காயாமரம்
இம்மரம் முல்லை நிலத்திற்கு உரியது. இது நுண்ணிய மணலிடத்தில் வளரத்தக்கது. நெருங்கிய இலைகளை உடையது. மலர்கள் அஞ்சனம் போல மலர்ந்தன.
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர(அடி 93)
கொன்றை மரம்
கொன்றை மரம் கொத்து கொத்துக்களாய்ப் பூக்களைத் தரும். முறி இணர் கொன்றைநன் பொன் காலக்கோடல் (அடி 94) என்ற குறிப்பு இதனை விளக்கும்.
பிடவம்
இது செடி வகையினது. இது சேய்மையிலும் மணம் பரப்பும் மலர்களைக் கொண்டது. (அடி 251) இக்குறிப்பு முல்லைப் பாட்டுள் உள்ளது.
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி(அடி 25)
வெண்காந்தள்
வெண்காந்தள் மலர்கள் உள்ளங்கை போல விரியும் (அடி 95) என்ற குறிப்பு வெண் காந்தள் மலர் பற்றியது. இதுவும் செடி வகையினது.
கோடல் குவிமுகை அங்கை அவிழ (அடி 95.)
முல்லை
இது கொடி வகையினது. விரிச்சி கேட்பவர்கள் கோவிலில் அரிசியையும் முல்லைமலர்களையும் கலந்து தூவுதல் மரபு.
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ்அலரி தூஉய்க் கைதொழுது (அடி 9-10) என்ற அடிகள் முல்லைக் கொடி பற்றியனவாகும்.
வள்ளிக் கொடி
முல்லைப் பாட்டுள் வள்ளியம் காடு என்ற நிலையில் இத்தாவரம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு இயற்கை வளங்கள் பற்றிய செய்திகள் முல்லைப் பாட்டுள் இடம் பெற்றுள்ளன.
மழைவளம்
மழை பெய்யும் செய்தி மிகச் சிறப்பாக முல்லைப் பாட்டுள் சொல்லப்பெற்றுள்ளது.
பாடு இமிழ் பனிகடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ் செலவு எழினி
பெரும் பெயர் பொழிந்த (அடி 4-6)
என்ற அடிகளில் மழை பெய்யும் அறிவியல் காட்டப் பெற்றுள்ளது.
அதாவது கடல்நீர் வலப்பக்கமாக ஆவியாகி மேல் நோக்கி வானம் வரை சென்றுப் பின்மழை பொழியும் என்ற அறிவியல் செய்தி அப்போதே முல்லைப்பாட்டுள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளைத் தொகுத்து இக்கட்டுரை வழங்கியது.