வெள்ளி, ஏப்ரல் 27, 2007

கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்


பெண்ணெழுத்துக்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. பெண் பெண்ணாகவே படித்து, சித்தித்து, எழுதுபவளாக இருந்தால் அந்த பெண்ணெழுத்தில் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் தனித்தன்மையை இற்றைக் காலத்தில் உணரமுடியும். அவ்வகையில் தனித்த முத்திரை உடையது மீனாட்சி கவிதைகள்.

கவிதை, அதன் உட்பொருள், வெளிக் கட்டமைப்பு, அதன் பாத்திரப் பேச்சு என எல்லாவற்றிலும் முழுக்க முழுவதுமாய் ஒரு பெண்ணாய் நிறைந்திருக்கிறார் மீனாட்சி. ''நானே பாரதி, என் காலத்தின் கவிச் சக்கரவர்த்தினி'' ( ப.109) என்ற கவித்தொடரில் பாரதியைத் தரிசிப்பதை விட ''பா + ரதி = பாரதி'' என்பதாவே கவிச்சக்கரவர்த்தினி மீனாட்சியை அடையாளம் காணவேண்டும். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்திற்குத் தக்கவர் யார் என்ற காலகால போட்டியில் கவிச்சக்கரவர்த்தினியைக் காணவேண்டிய காட்ட வேண்டிய போட்டியைத் துவக்கி வைக்கிறார் மீனாட்சி. கவிச்சக்கரவர்த்தினி என்ற சொல்லாட்சிக்குள் ஒளிந்திருக்கும் ஏக்கம்/ உயர்ச்சி ஆண்களின் நோக்கத்¢தில் ஆணவமாக உயர்வு நவிற்சியாகத் தோன்றலாம். பல எழுதிய ஒளவை, தன்னை எழுதிய ஆண்டாள், சிவனை எழுதிய காரைக்காலம்மை இவர்களுக்குக் கிட்டாத கவிச்சக்கரவர்த்தினி பெருமை இனிமேல் யாருக்கு? என்ற போக்கில் பின்தள்ளப்படும் பெண்படைப்புகள் - தன்னை தன் குலத்துத்தோன்றிய படைப்பாளர்களை வைத்தே காலை வாரிவிடும் மேம்போக்கு இவற்றுக்கெல்லாம் சவால் விடுகிறது இந்த ஒற்றைத் தொடர்.

''ஒரு விதை முளைக்கு முன்னே
கவிதைபோல்
கருப்பையில் தூங்குகிறது'' (ப,118)
''நானொன்றும் கூமுட்டையில்லை
ஜீவரசத்தைக் குடித்து
ரசனையுள்ள கருவைத் தாங்கியிருக்கிறேன் ''(பட்டுப்பூச்சி ராசி, ப, 26)
''மண்ணின் அடிவயிற்றில்
அண்டத்தின் துளியாக ஆலவிதை
தாய்க்குருதி உணவாக'' ( மறுபயணம் 181)

என எல்லாக் கவிதைகளிலும் தாய்மை, கருப்பை, கரு இவற்றின் சாயலை கருவாக வளர்க்கிறார்¢ மீனாட்சி. இவற்றுக்கு என்ன காரணம். '' பெண்மொழி முழுக்கவும் தாயன்பு, சக்தி நிலை தொடர்புடையது. வீரியமாக, நளினமாக, நாணம் கலந்து அத்தனை வலிகளுடன் அவள் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது'' (நான் ஏன் எழுதுகிறேன் பேட்டி ப,208) என்ற அவரின் கருத்துதான் காரணம். பிறப்பித்தல் என்ற ஒன்று, கருப்பை என்ற ஒன்று பெண்ணின் தனித்துவம். அதன் அழகு, அமைப்பு, அனுபவம் இதை வெளிப்படுத்த வேண்டிய படைப்பு வெளி பெண்ணினது. அந்தப் படைப்பு வெளிக்கு வேலி போட்டு தனக்கான சொத்தாய் பெண் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் என்ற படைப்பு நோக்கம் மீனாட்சியினுடையது. அந்த நோக்கம் அவரின் கவிதைகளில் வெளிப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

சொற்களின் இடைவெளி
கவிதைகளுக்குள் வாசகன் புகுந்து தேடினால் உண்மைக் கருப்பொருள் புலப்படுகிறது. விரிவு கொள்கிறது. ஆனால் கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இடைவெளி வைத்து அதனுள் வாசகனைப் புகச் செய்தால் ஒரு கவிதையைப் புரிந்து கொள்ளவே ஒரு நாளாகும். பல நாள் கருவைச் சேமித்து எழுதும் படைப்பாளியின் படைப்பைச் சற்று நேரத்தில் வாசித்துவிட்டுத் தூக்கிப் போட்டுவிடலாமா? அதனை அணுஅணுவாய் ரசித்து ருசித்து உள் நுழைந்து உண்மைப் பொருளை அறிந்து கொள்ள வாசகனைத் தூண்டும் ஒரு கருவியாக மீனாட்சி தன் கவிதைகளை தரப்படுத்தியுள்ளார். இது அவரின் பலம்.

அதே நேரத்தில் இந்த சொல் இடைவெளிகள் பொருள் தொடர்பற்று சொல் தொடர்பற்றுத் தோன்றுகின்றன. இந்த மாயத்தோற்றத்தின் பின்னணி என்ன என்று சிந்தனை தொடரந்தால் அதற்கு ஒரு காரணம் புலப்படும். சாதாரணமாகப் பலர் முன்னிலையில் பெண்கள் சொல்ல வரும் கருத்தில் அவர்கள் நடையில் அவ்வப்போது தடை ஏற்படும். அந்தத் தடை தொடர்பற்ற பொருள்களை, சொற்களைத் தோற்றுவிக்கும். இந்தப் பெண்ணியல்பு மீனாட்சி கவிதைகளில் காணக்கிடக்கிறது. இந்தத் தடைப்பேச்சுக்கு இங்கு இருக்கும் சமூக அழுத்தம் காரணம். அதன் காரணமாக பெண் தன் கருத்துகளைத் தொடரபற்றுத் தெரிவிக்க வேண்டியவளாகிறாள்.

''அவள்தான் வெளியேற
அவளே தடையாகி
அவலத் துடிப்பு
மென்குரலில் வெளியழைப்பு
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா'' (ப. 18)

எழினி என்ற தலைப்பில் இடம் பெறுகிறது இக்கவிதை. சொற்களை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று இணையாது. பொருள் தொடராது. திரைச்சீலை காற்றில் படபடக்கிறது. இதனை பெண்ணின் வீட்டுச்சிறையோடு கவிஞை ஒப்பிடுகிறார். அவள் + தான் + வெளியேற என்ற தொடரமைப்பில் ''தான் '' என்ற சொல்லை இடைவெளி கொடுத்துப் படித்துப் பாருங்கள். இடைவெளி தராமல் உச்சரித்துப் பாருங்கள். இரண்டுக்கும் பெருத்த பொருள் வேற்றுமை உண்டாகும். சொல்லுக்கு சொல் இடைவெளி என்ற புதிய போக்கு மீனாட்சியிலிருந்து தொடங்குகிறது. அடுத்த வரிகளைச் சற்றுச் சிந்திப்போம். அவலத்துடிப்பு யாருக்கு- திரைச்சீலைக்கா, அல்லது ...............-? வெளியழைப்பு - யார் அழைப்பது - யார் தடுப்பது - ஆணா - பெண்ணா....... கழுத்து முடிச்சு இந்த சொல்லில் இருந்து கவிதை புரிபட ஆரம்பமாகிறது. திரைச்சீலையின் பெண்ணின் குறியீடு. வெளியில் வர விடாமல் சன்னல் கம்பிகள் தடுக்கின்றன. வெளிவரச்சொல்லி காற்று அழைக்கிறது. திரைச்சீரை பறக்காமல் இருக்க அதன் அகலத்தைக் குறைத்து முடிச்சிடப் பட்டுள்ளது. அந்த திரைச்சீரை வெளி¢யில் வரமுடியாது. அதுபோல பெண்ணும். அவள் வர எண்ணினாலும் அவளால் வர இயலாது. கழுத்து முடிச்சு கடைசி வரை அவளுக்கு பற்றுக்கோடாகுமா. இவ்வாறு கவிதையின் சொல் இடைவெளிக்குள் புகுந்து உலாவ இடம் தருகிறது மீனாட்சி கவிதைகள்.

திரைச்சீலையை ஏன் அவள் என்று உருவகப் படுத்தவேண்டும். எழுதுவது பெண். அதனால் அவள் எழுதும் அனைத்திலும்¢ அவளே நிறைந்திருப்பாள்,
''என்ன பிண்டமோ?
என்னவாம் சுகக்குறைவு?
தயங்காமல் போ
விண்ணில் எகிறாமல்
நீரில் மிதக்காமல்
மண்ணின் இருட்சுரங்க ஆழத்தில்
புதையுண்டால் மௌனம் பேசலாம் ''(மண்ணே சுகம் 12)

பிண்டம், சுகக் குறைவு (சுகப்பிரசவம் இதற்கு மட்டுமே சுக என்ற சொல்லைத் தற்போது தமிழ் மக்கள் பயன்படுத்துகின்றனர்) இவையெல்லாம் பெண்ணடிப்படை வாய்ந்த சொல்லாடல்கள்.

இந்தக் கவிதையின் முதல் மூன்று வரிகளுக்குள் நிறைய இடைவெளி உண்டு. இதனுள் புகுந்து பல காத தூரம் பணிக்க முடியும். மண்ணில் புதைந்து போய் அழியும் மரண வாழ்வில் மௌனம் பேச இந்தக் கவிதை அழைக்கிறது. யாரோடு புதைந்தவன் மௌனம் பேசப்போகிறனான். யார் அவனைத் தன் உள் இருத்திக் கொள்வது என்ற இந்தக் கேள்விகளுக்கு இந்தக் கவிதையின் பின்பகுதி விளக்கம் அளிக்கிறது.

''உன்னை நீயே தின்னலாம்
சுயம்புவாகலாம்
கன்னிமையைத் தாய்க்கே கொடுத்திடலாம்'' (மேலது)

கன்னிமை என்ற இந்த சொல்லட்சி தரும் விளக்கம் என்ன? ஓர் பிண்டம் அழிவதன் மூலம் அதாவது அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்காமல் கருவிலேயே பிண்டமாக இயற்கையாக (செயற்கையாக அழிக்கப்படுவதன் மூலம்) அழிவதன் மூலம் தாய் தாய்மை என்னும் சுமையை அடையாமல் அவள் கன்னித் தன்மை பாதுகாக்கப் பட்டுவிடலாம். கன்னிமை அதற்கு எதிரானதா தாய்மை? தாய்மை சுகமா? அல்லது பெண்ணின் இழப்பா? அல்லது ஆணின் ஆக்கிரமிப்பா-? எது சரி? கன்னிமைதான் பெண்ணின் உண்மை அடையானமா? இத்தனை கேள்விகளுக்கு இந்தக் கவிவரிகள் இடம் தருகின்றன. சொல்களின் இடைவெளி தமிழ்ப் பெண் கவிதையின் உண்மை அடையாளம். சமூகக் காரணங்களால் பாதிக்கப்படும் தமிழப் பெண் தன்கவிதைகளில் இடைவெளிகளை அதிகம் விட்டுச் செல்கிறாள். அவை நிறையப் பேசும் வலிமையின.

அக்னி சாட்சியாய் முதன் முறை ஒரு பெண்ணை மணந்தவன் அதனை மறைத்து மற்றொரு திருமணத்தை ஏற்கிறான். அவனது திருமணத்திற்கும் அக்னி சாட்சியாகிறது. சாட்சியாகும் அக்னியை கேலி செய்கிறது பின்வரும் கவிதை. அதன் சொல் இடைவெளிகள் உணரத்தக்கன.

''இன்றைய அவளின் அவனோ
வேற்றோர் ஊரில்
மாற்றான் பெண்ணை
அக்னிசாட்சியாய் மறுமுறை தொட்டு
என்ன அக்னி?
காலால் மிதிபடும்
மொட்டினைத் தூவும்
சிகரெட் துண்டு
எச்சில் பட்டு
எறிபடும் குப்பை'' (ஒரு தலை அக்கினி ப,121)

கவிதையின் தலைப்பே இடைவெளி மிக்கது. ஒரு தலை பட்சமானதா அக்னி. அல்லது அது பிரிவுகள் அற்று ஒரே ஜூவாலை உடையதா... காலால் மிதிபடும், மொட்டினைத் தூவும், சிகரெட் துண்டு, எச்சில்பட்டு எறிபடும் குப்பை இந்த வரிகள் பொருள் தொடர்பை உடைய வரிகள் அதாவது சிகரெட் நெருப்பை வர்ணிக்கும் வரிகள் என்றாலும் அவை ஒன்றுக் கொன்று இடைவெளி தரப்பட்டே அமைக்கப் பட்டுள்ளன.

எனவே பெண்கவிதைகளுக்க இடைவெளிகளே வலிமை என்பது தௌ¤வாகின்றது.

பெண்கள் பாத்திரங்களாக
மீனாட்சியின் கவிதைகளில் பெண்கள் பாத்திரங்களாக அடர்த்தியாகக் கையாளப் பெற்றுள்ளனர். இது பெண்ணெழுத்தின் தன்மை.
பேருந்தில் பயணிக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து பிழைக்கும் பெண்களின் அவலம்

''பார்வைகளையே கைகளாக்கி
கைகளே கொடுக்குகளாய்ச்
சகபிரயாணிகள் சுமந்திருப்பதை
காலங்கடந்தே
நாங்கள் பார்த்தோம்''(நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப் பெண்கள், ப.102)
என்ற கவிதையில் வெளிப்படுகிறது. இதில் பேருந்து நெரிசலில் பெண்களைத் தொட்டு தடவும் ஆண்களை காலங்கடந்தே பெண்கள் உண்ர்ந்து கொண்ட அவலம் உணர்த்தப்படுகிறது. இந்த அனுபவம் ஏற்பட்ட பின்னரே பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இது குறித்து ஒரு பெண்ணுக்கு எந்தவித முன்னறிவிப்பை எவரும் தருவதில்¢லை. பட்ட பின்ன பாதுகாப்பு என்ற இந்த சூழலை ஒவ்வொரு பெண்ணும் கடந்தே வருகிறாள் என்ற சோகம் இந்தக் கவிதைக்குள் கிடக்கிறது.

இரு சகோதரிகள். அவர்களின் வாழ்வை படம் பிடிக்கிறது ஒருகவிதை.

''அம்மையின்
சுகப்பிரசவத்தில்
வெளிவந்த நானோ பஞ்சு
ஆயுதம் மோதப்
பிறந்தவளோ இரும்பு'' (உடன் பிறந்தவள் ப, 16)

முதல்பிரசவம் சுகப்பிரசவம். இரண்டாவது சிசேரியன். இந்த நிதழ்வில் ஏற்பட்ட வலி, வேதனை, தாயின் உணர்வு , இரண்டும் பெண்ணாய்ப் போனதில் சமுகத்தின் கண்ணோட்டம் இவையெல்லாம் இந்தக் கவிதையின் பின்புலங்கள். பிறந்தவர்கள் கவிதையில் வளர்கிறார்கள். ஒருத்தி மணம் முடித்து நோய் வாய்ப் படுகிறாள். மற்றொருத்தி கைம்பெண்ணாகித் தவிக்கிறாள். இதனைக் கவிதையின் நிறைவுக் காட்சி பின்வருமாறு கூறுகிறது,

எனக்கு மங்கலக் குறுவாழ்வு
அவளுக்கோ
அமங்கலப் பேராயுள்
தியாக முனைக் குத்தல்
தந்த பரிசில் (மேலது)

இந்தக் கவிதையிலும் இடைவெளிகள் அதிகம் உண்டு. அதைவிட இதில் பாத்திரப்படைப்பு அதி முக்கியமானது. தாய், மூத்தவள், இளையவள் இவர்களைப் படைக்கும் பெண் படைப்பாளி என்ற வட்டம் ஒன்றுக்குள் ஒன்றாக தனக்குள் தானாக பிரிக்கமுடியாததாக விளங்கி மேன்மை பெறுகிறது. படிப்பரைவயும் பெண் உலகமாக்கிக் கொள்கிறது.

மற்றொரு கவிதையில் ஆண் பாத்திரப்படைப்பு வருகிறது. அதிலும் மறைமுகமாக பெண் இடம்பெறுகிறாள் என்றாலும் ஆணின் படைப்பு விமர்சிக்கப்படுகிறது. அது பின்வருமாறு.

அவன் காதல்
நாயில் ஆரம்பித்து
நாயில் முடிந்தது.
கொஞ்சல்
கடி
வெறி
மாமிசம்
தெருப் பொறுக்கல்
ஊர் சுற்றல்
கழுத்துப்பட்டை
காசுவில்¢லை
பதிவு எண்
ஊசிகள் குட்டிகள்
குரைப்பு
அப்புறமென்ன
காதலாவது
கத்தரிக்காயாவது?( சத்தான காதல் ப. 129)

இந்தக் கவிதையில் காதல்திருமணத்தின் அவலம் அதன் கவர்ச்சி விமர்சிக்கப் படுகிறது. பதிவு எண், ஊசிகள், குட்டிகள் இந்த வரிகளில் பெண்ணின் பாத்திரப்படைப்பு மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் பிள்ளைகள் பெற்றெடுக்கும் எந்திரமாக பெண் கருதப்படுவதைத் தௌ¤வாக்கியிருக்கிறது இந்தக் கவிதை.

மொத்ததில் மீனாட்சியின் கவிதைகள் கவிச்சக்கரவர்த்தினிக் கவிதைகள்தான். இது கவிதைகளின் அளவால் கணக்கிடப்பட்டதல்ல. தரத்தால் அளந்தறியப்பட்டதல்ல. தமி¢ழ்ப் பெண்க் கவிதைப் பரம்பரையினை இடையீடு படாமல் காத்துவருவதாலும், அளவாலும், தரத்தாலும் தான்.

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

காரைக்கால் அம்மையார் பின்தள்ளப் பெற்றதன் சூழலும் அதில் உள்ள ஆணாதிக்க அரசியலும்



தமிழில் பக்தி இலக்கியங்கள் வாசிக்கப் பயன்படுவதைவிட அதிகம் பூசிக்கப் படுகின்றன. அவற்றுக்கென ஒரு வைப்புமுறை தற்போது ஏற்கப் பெற்றுள்ளது. இந்த வைப்புமுறையை ஏற்படுத்தியவராக ஏற்கப் பெறுபவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

இதனை உறுதிப்படுத்துவது திருமுறை கண்ட புராணம் ஆகும். இதனை இயற்றியவர் உமாபதிசிவம் ஆவார். இவரது கருத்துப்படி நம்பியாண்டார் நம்பியே பின்வருமாறு திருமுறைகளை வரிசைப்படுத்தினார் என்பது உறுதியாகின்றது.சம்பந்தர்(1,2,3), அப்பர்( 4,5,6), சுந்தரர்(7), மாணிக்கவாசகர்(8), ஒன்பதின்மர்(9), திருமூலர் (10), பன்னிருவர் (11) என்பது நம்பியாண்டார் நம்பி வைத்த வைப்புமுறை ஆகும். இதன்பின் பெரியபுராணம் 12ம் திருமுறையாக வைக்கப்பெற்றது.

மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும்
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்தூயமனு எழுகோடி என்பதுன்னி
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந்தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே
( திருமுறை கண்டபுராணம் 24 )

ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள் (திருமுறை கண்டபுராணம் 26)

மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார் (திருமுறை கண்டபுராணம் 28)

இம்மூன்று பாடல்களும் திருமுறை வைப்புமுறை குறித்ததமைந்தனவாகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரைவிடக் காலத்தால் முந்தியவராகக் கருதத் தக்கவர் காரைக்கால் அம்மையார் ஆவார். எனினும் அவரது பனுவல் பதினொன்றாம் திருமுறையுள் வைக்கப் பெற்றுள்ளது. பதிகம் என்ற முறைமையை திருமுறைகளுக்கு உரியதாக்கிய பெருமைக்கு உரியவர் என்பது அனைவராலும் கருதத்தக்கது. அது போல திருமுறையுள் அதிகமாகப் பயன்படுத்தப் பெற்றுள்ள நட்டபாடையை முதன்முதலில் கையாண்டவரும் இவரே. அதனால் இவர் திராவிட இசையின் தாயாகக் கருதப் பெறுகிறார்.
இவ்வளவு பெருமை வாய்ந்த காரைக்காலம்மையார் பாடல்கள் பதினோராம் திருமுறையில் அடக்கப் பெற்றதன் நோக்கம் என்ன எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

நம்பியாண்டார் இத்திருமுறைகளை வரிசைப்படுத்தினார் என்பதற்கு அவரது பாடல்களில் தெளிவான அகச்சான்றுகள் இல்லை. சில மறைமுகமானக் குறிப்புகள் உள்ளன. அவர் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் குறித்தப் பல பனுவல்களைப் பாடியுள்ளார்.அவற்றுள் இக்குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

அவை பின்வருமாறு
1, நம்பியாண்டார் நம்பியின் பாடல்கள் அவரால் தொகுக்கப் பெற்றதாகக் கருதப்படும் பதினோராம் திருமுறையின் நிறைவில் அமைக்கப் பெற்றுள்ளன.

2,நகரம் கெடப்பண்டு திண்சேர் மிசை நின்று நான்மறைகள்
பகர்அம் கழலவ னைப்பதினாறாயிரம் பதிகம்
மகரம் கிளர்கடல் வையந் துயரகெட மொழிந்த
நிகரங் கிலகலிக் காழிப் பிரான் என்பர் நீள்நிலத்தே (ஆளுடைய பிள்ளையார் அந்தாதி 15)
இப்பாடலில் சம்பந்தர் பதினாயிரம் பதிகங்கள் பாடியுள்ளதாக இவர் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு அவர்க்கு முன்னதாகவே சம்பந்தர் பாடல்கள் தொகுக்கப் பெற்று வழக்கில் இருந்தது என்பதை உணர்த்துகிறது. இதன் வழியே அத்தொகுப்பை அப்படியே இவர் ஏற்று சம்பந்தருக்கு முதலிடம் தந்து முறைப்படுத்தியிருக்க முடியும் என் எண்ண முடிகின்றது.

3,பதிகமே எழுநூறு பகருமா கவியோகி
பரசு நாவரசான பரமாகரணவீசன் (திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை 8)
இவ்வடிகள் நாவுக்கரசரின் பதிக எண்ணிக்கையைக் குறிப்பன. இதன்வழியாக நம்பியாண்டார் நம்பி காலத்தில் அப்பர் சம்பந்தர் பதிகங்கள் வழக்கில் இருந்தமை தெரியவருகிறது.

4, சுந்தரரின் திருத்தொண்டத் தொகை இவரால் பின்பற்றப் பெற்று திருத் தொண்டர் திருவந்தாதியாக வளர்க்கப் பெற்றது.
தேவார மூவரை வணங்கிவரும் வழக்கம் இவர்காலத்தில் இருந்தமைக்கு இவை சான்றுகளாகும்.

இக்குறிப்புகள் வழியாக திருமுறை மூவர் என்ற நிலை பெருவழக்காக நம்பி காலத்தில் இருந்தமையை உணரமுடிகின்றது.
இந்த வழக்கின்படி இம்மூவரை முன்னதாக நம்பி வைத்ததற்கு இம்மரபு காரணமாகும். இதன்பின் திருவாசகம், ஒன்பதாந் திருமுறை, திருமந்திரம் ஆகியன ஏதோ ஒரு தொடர்பு கருதி தொடர்ந்துள்ளன. இருப்பினும் பதினொன்றாம் திருமுறை சற்று வேறுபாடானது. பல காலங்களில் எழுந்தப் பனுவல்கள் இங்குத் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன. சங்க நூலாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படையும், நம்பியாண்டார் நம்பி பாடிய பனுவல்களும் இங்குத் தொகுக்கப் பெற்றுள்ளன.
சித்தி தரும் இறை மொழிந்த திருமுகபா சுரமுதலாம்
உய்த்தபதி கங்களையும் ஒருமுறையாச் செய்க எனத் பத்தி தருதிருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்(திருமுறை கண்டபுராணம் 27)
என்பது இத்திருமுறை தொகுக்கப் பெற்றதன் காரணம் ஆகும். எனவே பதினொன்றாம் திருமுறை பல காலகட்டங்களில் எழுந்த திருப்பாடல்களின் தொகுப்பு என்பது அறியத் தக்கது. இது சிவபெருமான் தந்த திருமுகப்பாசுரம் என்ற பகுதியை முன்னதாக வைத்துத் தொகுக்கப் பெற்றுள்ளது. முருகன் குறித்த பாடல்களும் இதில் இணைவு பெற்றுள்ளமை இதன் நெகிழ் தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

திருமுகப்பாசுரத்தின் அடுத்து அமைவது காரைக்கால் அம்மையாரின் பாடல்கள். இவர் சுந்தரரால் திருத்தொண்டத் தொகையுள் அப்பருக்கும் சம்பந்தருக்கும் முன்பே காட்டப் பெற்றிருப்பவர் என்பது இங்குக் கருதத்தக்கது. இவரது பாடல்கள் மூத்த திருப்பதிகம் என்றழைக்கப் பெறும் பெருமையின. இவ்வாறு இருக்கையில் இவர் பின்தள்ளப் பெற்றிருப்பதன் காரணம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

திருமுறை வைப்புமுறையில் பின்பற்றப் பெற்றுள்ள சில பொது முறைமைகள் இறைவனைப் பற்றிஅதிகம் பாடினோர்க்கு முன்னிடம் தரப் பெற்றுள்ளது என்பது முழுக்க உண்மையாகும். பொதுத் தத்துவம் பாடிய மந்திரம் இதனால் பின்தள்ளப் பெற்றிருக்கலாம்.

இறைவனால் அதிக நிகழ்வுகளில் ஆட்கொள்ளப் பெற்றவர்களுக்கு முன்னிடம்தரப்பெற்றுள்ளது.

ஆண்களுக்கு முன்னிடம் தரப் பெற்றுள்ளது. பதினோராம் திருமுறையில் திருமுகப் பாசுரம் என்ற இறைவன் பாடிய பகுதி இதன்வழி காரைக்காலம்மையாரின் பதிகங்களுக்கு முன் இடம்பெற்றுள்மை இங்குக் கவனிக்கத் தக்கது. பஞ்சபுராணம் பாடும் மரபு சைவக் கோயில்களில் உண்டு. அவற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருப்பல்லாண்டு (9ம் திருமுறை) ஆகியன மட்டுமே இன்று வரை பாடப் பெற்றுவருகின்றன.இம்மரபில் காரைக்காலம்மையார் பாடல் இடம்பெறாதது கவனிக்கத்தக்கது.

நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் காரைக்காலம்மையாரின் பாடல்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லாமல்
இருப்பதும் இங்குக் கவனிக்கத் தக்கது. திருவந்தாதி எழுதும் வரை அளவில் கூட நம்பியாண்டார் நம்பிக்கு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் கிடைத்தல என்றுகூட முடியலாம். பின் வந்த சேக்கிழார் அம்மையார் பனுவல்கள் குறித்த செய்திகளைக் குறிக்க நல்ல வேளையாக பதினோராம் திருமுறையில் அவை தொகுக்கப் பெற்றுவிட்டன.

முன்னவர், இசை வல்லுநர், தெய்வச்சிறப்பினர் என எல்லாம் இருந்தும் பத்தோடு பதினொன்றாக அம்மையாரின் பாடல்கள் கருதப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதை மிகத் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.

வெண்பா யாப்பில் அமைந்தவை அற்புதத் திருவந்தாதி. சங்க காலத்திற்குப் பின் நீதி இலக்கிய காலத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தியது வெண்பாதான். வெண்பா எழுதுவதுக் கடினம் என்ற சூழலில் அந்தாதி நிலையில் இவர் செய்துள்ள இப்படைப்பு மூத்தது,புதுமையானது என்றால் அது மிகையாகாது.
இறைவனால் ஆட்கொள்ளப் பெறுதல், பாடல் புனைதல், கயிலாயம் வரை யாத்திரை மேற்கொள்ளல் என்ற பல நிலைகளில் மற்ற திருமுறை ஆசிரியர்களிடம் காணலாகும் அனைத்துப் பண்புகளையும் பெற்றுள்ள இவர் அனைவருக்கும் முன்னதாக இடம் பெற வேண்டியவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவ்வளவில் முன்னிடம் பெறவேண்டிய இவரைப் பின்தள்ளியிருப்பதன் ஒரே நோக்கம் அவர் மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு முரண்பட்டவர் என்ற ஒன்றே அன்றி வேறில்லை. இவரின் வாழ்வு தரும் செய்தி பெண்கள் தனித்து வாழஇயலும் என்பதைக் காட்டுவது. இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இவரை முன்மாதிரியாகக் கொண்டால் அதன்மூலம் தமக்கான முன்வாய்ப்புகளை ஆண் உலகம் இழக்க வேண்டி வரலாம் என்ற தயக்கமே இவரின் பின்தள்ளலுக்குக் காரணம். இது கருதியே இவரின் பாடல்கள் பஞ்சபுராணப் பாடல்மரபில் இணைக்கப்படுவது இல்லை.
நன்றி திண்ணை 20,04,2007

வெள்ளி, ஏப்ரல் 13, 2007

வலைப்பூ இலக்கியத்தின் வளமை

இணையம் தகவல்களின் சரணாலயம் என்ற நிலையில் மிகக் குறிப்பிடத்தக்க இடத்தைத் தற்காலத்தில் பெற்றுவருகிறது. இணையதளம், இணையச் சந்திப்பு, இணையக் கடிதம், இணையப் படங்கள், இணைய திரைப்படம், இணையக் குறும் படம், இணைய இதழ், இணைய அகராதி, இணைய நூலகம், இணையக் கல்வி, இணைய விளையாட்டு, இணைய வணிகம், இணையச் சுற்றுலா, இணைய வரைபடம், இணைய நட்பு, இணையக் காதல், இணைய வங்கி, இணைய அலுவலகம் என்று எல்லாத் துறைகளுடனும் இரண்டற கலந்து விட்ட ஒரு காலம் இக்காலம். இத்தகைய அத்தனை வசதிகளையும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும் ஓரளவ குறைந்த பணச்செலவில் பெற முடிகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி.
இணையத்தைப் பயன் கொள்ளுதல் என்பது ஒருமுறை. அம்முறையின் வளர்ச்சி ஒவ்வெரு இணையப் பயனாளியும் இணைய நிர்வாகியாக மாறுவது என்பதுதான். இணைய நிர்வாகியாக மாறி இணையதளம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்துதல் என்பது சற்று கடினமான செயல். அதற்கென ஒரு பெயரைப் பதிவ செய்து அதை நிர்வகிக்கப் பணம் கொடுத்து அதில் இடம் பெற வேண்டிய செய்திகளை அவ்வப்போது தயாரித்து, வடிவமைத்து அதன்பின் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணங்களை ஏற்று மேலும் அதனை வளப்படுத்துதல் என்பதை வெற்றிரமாகச் செயல்படுத்துதல் என்பது ஒரு சாதனையாகும்.
இந்த இணைய தளத்தை விளம்பரங்கள் முலமாக அல்லது நண்பர்களின் தொடர்பகள் முலமாக பரவலாக்கம் செய்தல், தேடு பொறிகளுக்கு தயாரிக்கப் பெற்ற இணையதளத்தை வழங்குதல் என்பது இன்னும் பெரிய கலை. இதற்குப் பல நிறுவனங்கள் இலவசமாக இணைய தளம் அமைக்க வசதி செய்து தந்தன. அவ்வசதிகளைப் பயன் படுத்தி இணைய தளம் ஆரம்பித்து அவற்றில் செய்திகளைப் படங்களை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இணைய இணைப்பில் ஏதேனும் தகராறு தோன்ற மீண்டும் முதலில் இருந்து வரவேண்டும். எனவே வலையேற்றம் செய்வது என்பது மிகக் கடினமான செயல். அதைவிடக் கடினமான செயல் வலையேற்றம் செய்தவற்றில் தவறு நேர்ந்தாலோ அல்லது மாற்றி அமைக்க நேர்ந்தாலோ அவ்வ மாற்றங்களை உடன் செய்வது என்பது ஏறக்குறைய இயலாத ஒன்று.
இச்சூழலில் ஒரு இணையப் பக்கம் வெற்றிகரமாக நடத்த, அவற்றில் செய்திகளை நினைத்த நேரத்தில் வலையேற்றம் செய்ய, வலையேற்றியவற்றை உடன் நிறுத்த, வலையேற்றப் பெற்ற செய்திகளுக்கு பின்னூட்டம் என்ற நிலையில் பிரதிபலிப்புகளைப் பெற ஒரு அருமையான வசதி தற்போது கிடைத்துள்ளது. இதற்குப் பெயர் வலைப்பூ என்பதாகும். இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு மனிதருக்கு எத்தனை வலைப் பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவற்றிற்கான பின்னூட்டங்களை அவர் தன் மின்னஞ்சல் முகவரியில் பெறலாம். அப்பின்னூட்டங்களும் அவ்வலைப் பக்கத்திலேயே தெரியும். மேலும் ஒரு செய்தியை வலைப்பக்கத்தில் வலையேற்றி விட்டால் அச்செய்தி நிரந்ததரமாக சேமிக்கப் பெற்றுவிடும். தேவையான போது அவற்றை எவரும் பார்க்க இயலும். அவற்றில் உள்ள செய்திகளைச் சொல், தொடர், தலைப்பு வாரியாகத் தேடிப் பெறமுடியும். கணினியில் சேமித்து வைக்கப்பெற்ற கோப்பு அழிந்து போனாலும் வலைப்பூவில் உள்ள பதிவ வழியாக மீண்டும் அந்தச் செய்தியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. அது மட்டும் இல்லை. என் சொந்தக் கணினி என் சொந்த ஊரிலேயே இருக்க அதில் உள்ள கோப்புகளில் தேவையானவற்றை வலைப் பூவில் பதிவு செய்துவிட்டால் எந்நேரத்திலும் எவர் கணினியிலும் இணைய இணைப்ப பெற்றவுடனேயே பெற்றுவிடமுடியும்.

வலைப்பூ வசதியை வழங்கும் நிறுவனங்கள்
வலைப்பூ வசதியைத் தற்போது பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. ஒருகாலத்தில் இதில் இணைந்தபின் இந்த வசதி பணமயமாக்கப்படுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐயம் இல்லை என்ற அளவிற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கத் தயாராகி விட்டன. குறிப்பாக கூகிள் நிறுவனத்தின் தொடர்பில் பிளாக்கர் என்ற தொடுப்பின் வழியாக ஒவ்வெருவரும் ஒரு வலைப்பூவைப் பெறமுடியும்.

யாகூ, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

வலைப்பூ வடிவமைப்பு
வலைப்பூ வடிவமைப்பில் ஏற்றப்படும் வலைச்செய்திக்கு அதிக இடம் முக்கியஇடம் தரப்படும்.

அதன்பின் இதனை ஏற்படுத்தியவர் பற்றிய குறிப்பு ஓரிருவரிகளில் தரப்பெற்றிருக்கும். அத்தொடர்பை அழுத்தி ஏற்படுத்தியவரின் தகவல்களை அதிகமாகப் பெறஇயலும்.

மேலும் வலைச் செய்திகளைப் பார்க்கும் வண்ணம் ஆவணக் காப்பகத் தொடுப்பு ஒன்றும் இருக்கும். இத வார வாரியாகத் தலைப்ப வாரியாக, அடுக்கிக் கொள்ளவம் வசதி உண்டு.

வலைச்செய்திகளுக்கு வரும் பின்னூட்டங்களை அதன் அடிப்பக்கத்தில் காமாண்ட்ஸ் என்ற நிலையில் அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் திறந்து வந்தப் பின்னூட்டங்களுக்குத் தக்கவகையில் ஏற்படுத்தியவர் பதிலும் வழங்கலாம்.

யாகூ, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

மேலும் இவ்வலைப்பூவில் பாடல்கள் ஒலிபரப்படலாம். குறும் படங்களைக் காட்சிப்படுத்தலாம். புகைப்படங்களை இணைக்கலாம். அசை படங்களை இணைக்கலாம். வலைப்பூவைத் திறந்ததும் பூமாரி பொழியச் செய்யலாம். ஓடும் வகையில் செய்திகளை ஓடவிடலாம். தற்போது எந்தக் குறிப்பிட்ட நாட்டவர் அக்குறிப்பிட்ட வலைப்பூவைப் பார்த்துக் கொண்டுள்ளார் என்பதனை அறியலாம். எத்தனை பேர்கள் இவ்வலைப்பூவைப் பார்க்கின்றனர் என்ற எண்ணிக்கையை அறியலாம். இவையெல்லாம் கூடுதல் முயற்சிகள்.
மேற்வுறியவை குறிப்பிட்ட ஒருவர் ஏற்படுத்திய வலைப்பூவில் அவர் பெறும் தகவல்கள். அவ்வலைப்பூ முலம் மற்றவலைப் பூக்களைத் தொடர்பு கொள்ள இயலும். அதற்கான தொடுப்பகள் லிங்ஸ் என்ற அமைப்பில் பெறலாம். குறிப்பிடத்தக்க ஒருவரின் முகவரியை மற்றவர்கள் இதில் தந்து அவர் பக்கத்திற்குச் செல்லச் செய்யலாம். இவைதவிர இந்தத் தொடுப்பில் தினம் பார்க்கவிரும்பம் ஏற்பாட்டாளரின் விருப்ப தளங்களை வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இதன் முலம் வேறுபக்கங்களுக்கு இதன்வழியே சென்று சேர இயலும்

இதற்கு அடுத்த நிலையில் வலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் ஏற்பாட்டாளரின் அனுமதியோடு விளம்பரங்களை இணைக்க ஒரு இடத்தை வைத்துள்ளன. அவ்விடம் அதற்கான வாடகை போன்றன வலைப் பூவை வழங்கும் நிறுவனங்களுக்குச் சென்று சேரும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே வலைப்பூக்களை இலவசமாக அளிக்கப் பெற்று வருகின்றன.

வலைப்பூ முகவரி
வலைப்பூவின் முகவரி விருப்பத் தேர்விற்கு உரியது. அவரவர் சுய விருப்பம் கருதி அவரவர் அவரவர் வலைப்பூவிற்குத் தமிழிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயே அல்லது அவரவர் மொழியிலேயே வைத்துக் கொண்டு அம்மொழியிலேயே தெரியவும் செய்யலாம். அப்பெயருக்குப் பின்னால் வழங்கும் நிறுவனத்தின் பெயர் அமையும். அதன்பின் வகைமை அமையும். எடுத்துக்காட்டிற்கு manidal blogspot.com என்பது கட்டுரையாளரின் வலைப்பூ முகவரி. இதனடிப்படையிலேயே எல்லா வலைப்பூக்களும் முகவரியைப் பெறுகின்றன.

வலைப்பூ வடிவமைக்க உதவி
வலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் வலைப்பூவினை வடிவமைத்துக் கொள்ள அதற்கேற்ற கருவிகளையும் வழங்குகின்றன. இக்கருவிகளைக் கொண்டு முன்று படிநிலைகளில் ஒரு வலைப்பூவை வடிவமைத்துவிடலாம். ஒரே பக்கம் தான் வலைப்பூ. இது அதன் வலிமையும் கொடுமையும் கூட. எனவே அந்த ஒரே பக்கம் அழகாக இருந்தால் மட்டுமே வாசிப்பவரைக் கவரும். அதே நேரத்தில் அது ஏற்பாட்டாளரின் சுவைக்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும். இவ்வகையில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். இல்லையானால் வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். மாறிக் கொள்ளலாம்.

வலைப்பூவில் வலையேற்றம் செய்ய வழிகள்

பிறரது வலைப்பூவை யார் வேண்டுமானலும் பார்க்கலாம். ஆனால் யார் வேண்டுமானாலும் மற்றொருவர் வலைப்பூவுக்குள் நுழைந்து வலையேற்றம் செய்துவிட முடியாது. வலைப்பூ ஏற்படுத்தியவரே தன் வலைப்பூவுக்குள் நுழைந்து வலையேற்றம் செய்யமுடியும். அவருக்கு என ஒதுக்கப் பெற்றுள்ள கடவுச் சொல்லைப் பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட வலைப்பூ வலையேற்ற உதவும் பகுதிக்குள் நுழையவேண்டும். அங்கு புதிய செய்தியை ஏற்றும் வசதி, ஏற்றிய செய்தியை அழிக்கும் வசதி, செய்திக்கு வண்ணம் பூச, படம் சேர்க்க, எழுத்துகளை பட்டை தீட்ட, சாய்க்க, உருவ ஒழுங்கு செய்ய எனப்பல கருவிகள் இருக்கும். அவற்றை இணைத்து ஒரு செய்தியை வலையேற்றம் செய்க என்ற தொடர்பை அபுத்தினால் வலையேற்றிவிடலாம். வலையேற்றிய அழகை ஏற்பாட்டாளரே பார்த்து ரசிக்கலாம்.

வலைப்பூவின் வரலாறு
வலைப்பூ என்பதன் ஆங்கில முலம் பிளாக் என்பதாகும். இதன்முலம் வெப்பிளாக் என்பதாகும். இதுவே சுருங்கி பிளாக் ஆனது. 1994ல் பிளாக்கை உருவாக்கிய சஸ்டின் ஹால் என்பவர் பிளாக்கின் தோற்றக்காரணர்களுள் முன்நிற்பவர் ஆவார். அதன்பின் பல முயற்சிகள் தொடர்ந்துள்ளன. ஆக்ஸ்போர்டு அகராதி வெப் பிளாக், வெப்பிளாக்கர் ஆகிய சொற்களை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன் சொற்குழுமங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

பிளாக்கிற்கான ஏற்பாட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் இவான் வில்லியம்ஸ், மற்றம் மெக்ஹாரிக்கான்ஸ் ஆவர். இவர்களின் குழமமான பைரா லாப்ஸ் என்பதுதான் முதன்முதலில் பிளாக்கர் என்பதை உருவாக்கியது. இவ்வசதி பின்னால் கூகிள் நிறுவனத்தால் காப்புரிமை செய்யப் பெற்று அந்நிறுவனத்திற்கு ஆக்கப் பெற்றுவிட்டது.

தமிழில் வலைப்பூ
தமிழில் ஒருங்குறி முறை என்ற எழுத்துவடிவ முறை அறிமுகமானது மிகப் பெரிய உதவியாக வலைப்பூ ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்துவிட்டது. ஏறக்குறைய முதன் முதல் தமிழ்ப்பதிவு என்பது எது எனக் கண்டறியமுடியாத ஆதி அந்தமில்லா இலக்கிய வரலாற்றுச் சூழலே இதற்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் பதிவகள் வேகம் பெற்று விட்டன என்பது மட்டும் உறுதி.

வலைப்பூ ஏற்பாட்டாளர்களின் தகுதிகள்
வயது, கல்வி, மொழி, இனம், பால், பெயர் என எவ்வகையிலும் கட்டுப்பாடு தேவையில்லா கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதனுள் நுழையலாம். தமிழ் படிக்க வலையேற்றத் தெரிந்தால் போதும்.

வலைப்பூக்களின் அரங்கம்
வலைப்பூவில் செய்தியை வலையேற்றம் செய்தாகிவிட்டது. அதனை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது. அதற்கெனத் தொடங்கப் பெற்றவைதான் அரங்கம் என்ற அமைப்பகள். இவற்றில் உறுப்பினர்களாக இணையவேண்டும்.

ஒவ்வெரு வலையேற்றமும் வலைப்பூவில் நிகழ்த்தியபின் இவ்வரங்கங்களில் தேவையான இடத்தில் வலைப்பூ முகவரியைத் தந்து அற்றைநாள் முன்னேற்றத்தை ஏற்க எனக் கட்டளையிட்டால் வலைப்பூ அரங்கத்தின் பொருளடக்கம் போன்ற பக்கத்தில் இரண்டுவரிகளில் அச்செய்தி தெரிய ஆரம்பிக்கும். அதன்பின் மேலும் என்ற தொடர்பை அழுத்தினால் வலைப்பூவின் பக்கத்திற்கே சென்று சேரலாம்.

இவ்வசதியை வழங்குவதில் தமிழில் குறிக்கத்தக்கவை இரண்டு. ஒன்று தேன்வகூடு, மற்றொன்று தமிழ்மணம் இவற்றில் தமிழ்மணம் தனக்குத் தரப்பெற்ற வலைப்பூ வலையேற்றச் செய்திகளை வகைமை செய்து பூங்கா என்ற வலைப்பூ அரங்க இதழாக மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது. இது மீள்வாசிப்பக்கு மேலும் உதவகிறது. இவை ஒரு வரையறை வைத்துள்ளன. கவர்ச்சி, பாலியல் செய்திகள் படங்கள் ஆகியன இடம் பெறும் தளங்களைத் தவிர்த்தலை முக்கியமாகக் கொண்டுள்ளன. இது ஒரு இன்றியமையாத நல்ல செய்தி

வலைப்பூ இலக்கியம்
எல்லா வலைப்பூக்களும் இலக்கியச் செய்திகளைக் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை, அனுபவம், கவிதை, கதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை, கடிதம் இவை போன்ற வடிவங்களில் இலக்கியம் வலைப்பூக்களில் பரவிக்கிடக்கின்றது. தமிழ்மணம் வலைப்பூஅரங்கம் வலையேற்றச் செய்திகளை இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல்நயம் என்ற பலபிரிவுகளில் செய்திகளைத் தொகுக்கிறது. இதனை வகைப்படுத்தும் முறை ஏற்பாட்டாளரைச் சார்ந்தது என்றாலும் அதனைச் செய்ய அவர் மறந்துவிட்டால் படிப்பவர் அதனை வகைப்படுத்த இயலும்.

வலைப்பூ இலக்கியங்களுக்கு என்று தனித்த நடை கிடையாது. தணிக்கை கிடையாது. அவரவர் போக்கில் அவரவர் எழுதலாம். எழுதப்படும் செய்திகளைப் பின்னூட்டத்திற்கு அளிக்கும்போது மட்டுமே அச்செய்திகளின் உண்மை பொய்மை தெரியவரும். அப்படி உண்மைக்கு மாறான செய்திகள் வழங்கப் பெற்றிருந்தாலும் அது குறித்து மன்னிப்ப வேண்ட அவசியமில்லை. கட்டற்ற இலக்கிய வகையாக இது விளங்குகிறது.

அதே நேரத்தில் இதன் வசாகர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஓரளவு தமிழறிவு, அதைவிட அதிக அளவு கணினி அறிவு என்ற நிலையில்தான் பல வாசகர்கள் அமைந்துள்ளனர். வலைப்பூ ஏற்பாட்டாளர்களும் அமைந்துள்ளனர். இவர்களில் தேர்ந்த இலக்கிய விமர்சகர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அவ்வப்போது இதன் நடை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இருப்பினும் வலைப்பூ இலக்கியம் எவ்விதக் கட்டுப்பாடும் அற்ற இலக்கியவகையாகும். தமிழறிவு மிகுந்தவர்கள் இதனுள் அதிகம் இடம் பெறல் வேண்டும். அதன் காரணமாக இவ்வகை மேலும் உயர்வு பெறும்.
திலகபாமா முதல் மாலன் வரை பெரும்பான்மை எழுத்தாளர்கள் இவ்வலைப்பூ வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் வலைப்பூ அரங்கங்கள் இலக்கியத்திற்கென தனியே வரவேண்டும். மேலும் ஆய்வக் கட்டுரைகளின் அரங்கம் என்பதாக பதியநிலையில் மற்றொரு அரங்கமும் துவக்கப் பெறலாம். இதற்குக் கணினி அறிவு சார்ந்தவரகள் உதவலாம்.

மேலும் இவ்வலைப்பூ இலக்கியங்கள் பெரும் மீள்பிரதி செய்யப் பெறுவனவாகவே உள்ளன. இணைய இதழ்கள் அல்லது வெகுஜன இதழ்களில் வெளியான படைப்புகள் பல மீள்வாசிப்பக்கு இங்கு வருகின்றன. அப்படி வருகின்ற நிலையில் அதன் வெளிவந்த செய்திகளைத் தருவது தேவையானதாகும்.

வலைப்பூ இலக்கியம் எல்லா இலக்கிய வகை போன்று அமைந்திருந்தாலும் இது உடனுக்கு உடன் பலரால் பார்வையிடப் பெற்று அவர்களின் மௌனத்தின் மீதோ அல்லது விமர்சனத்தின்மீதோ பின்னூட்டங்களைப் பெறுகிறது என்பதுதான் இதன் வலிமை. இப்பின்னூட்டங்கள் உண்மையான பெயரில் இடம் பெறலாம். அல்லது போலி மறைபெயரில் பின்னூட்டத்தைத் தரலாம். இதனை ஏற்பதோ மறுப்பதோ ஏற்பட்டாளரின் கடமையாகும்.

மேலும் பெண்களுக்கு உரிய இடமும் வலைப்பூவில் உண்டு. தோழி .காம் என்ற இதழ் பெண்களுக்கான தனித்த வலைப்பூக்களை வழங்கிவருகிறது. இவைதவிர இலக்கிய வலைப்பூக்கள் பல உள்ளன.

இவற்றை இணைத்துப் பார்க்கும்போது வலைப்பூ இலக்கியம் என்பது தற்போது வளர்ந்து வருகிறது என்பது தெரியவருகிறது. மேலும் இதற்கான விடுதலை மற்ற ஊடகங்களில் இருந்து மாறுபட்டது.

இவ்வாறு தனித்த நிலையில் வலைப்பூவக்கென எழுதப்படாமல் இணைய இதழ் போன்ற எதற்கோ எழுதியவை இங்கு ஒருங்கிணைக்கப் படுகின்றன என்பது இதன் தரத்தைச் சற்றுக் குறைக்கிறது.

இலக்கியம், ஆய்வக்கட்டுரை அடங்கிய தனித்தனி வலைப்பூ அரங்கங்கள் தோன்றிடின் சிறப்பாய் இருக்கும்.

இவ்வழிகாட்டுதல்கள் எதிர்காலக் கணினித் தமிழ் உலகத்தின் வளமை கருதி இங்குப் பகிர்ந்து கொள்ளப் பெறுகின்றன.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

இல்லாத வேலை

வேலைப்பளு அதிகம்
என்பதில்
பெருமை இல்லை
சோர்வே தட்டுகிறது

வேலைகள்
பல வழிகளில் வரலாம்

சந்தேகம் கேட்க
நண்பர் தொலைபேசியில் அழைக்கலாம்

அலுவலகப் பணிகள்
இல்லம் வரலாம்

மற்றவர்க்காக நாம் செய்வதாக
ஒத்துக் கொண்டபணிகள்
பயந்து ஓடச் செய்யலாம்

பிறர்க்காக
நாம் வேலைகளைச் செய்கையில்
நமக்கான வேலையை யார் . . .

எனக்கான
கவிதையை நான் எப்போது எழுதுவது

எனக்கான
புகைபப்டத்தை நான் எப்போது எடுத்துக்கொள்வது

எனக்கான வேலை
எதுவும் இல்லையோ

வெள்ளி, ஏப்ரல் 06, 2007

ஓருரன்



`யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்பது உலக வாசகம். உலகில் உள்ள எந்த ஊரும் நாம் சென்று சேர்ந்தால் நமது ஊராகும். உலகில் உள்ள அனைத்து மனிதரும் நம் உறவினர் ஆவர். உலக மக்களை உறவினராக்கும் இந்த சங்க இலக்கிய நெறி தமிழரின் பண்பாட்டு நெறியாகும்.
இதன் மறுதலை `அனைவரும் ஓருரில்! அனைவரும் ஓருர் மக்கள்!' என்பதாகும். அதாவது உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே ஊரில் வாழ்கையில் ஊர் பெரிதாகும். ஊருக்குள் உலகம் அடங்கிவிடும். ஊரின் எல்லை விரிந்து கொண்டே போய் ஓருரர் என்ற சிந்தனை ஏற்பட்டு உலகம் என்ற வேறுபட்ட ழல் நீங்கிவிடும்.
இந்த சிந்தனை வெற்றி பெற முடியுமா மனித குலம் ஏன் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறது. ஓரிடத்தில் தோன்றிய அல்லது பல்வேறு இடங்களில் தோன்றிய மக்கள் ஏன் ஓரிடத்தில் குவியவில்லை. அவரவர் வாய்ப்பக்கு ஏற்றார்போல அப்பா ஓருரில், அம்மா ஓருரில், மகன் ஒரு நாட்டில், மருமகள் வேறு நாட்டில், உறவினர் வேற்று கண்டத்தில், உறவினர் அல்லாதார் பக்கத்துவீட்டில், பக்கத்து நாட்டில், பக்கத்துத் தீவில், பக்கத்து கிரகத்தில் இவரை எல்லாம் ஒருசேரக் காண்பது அவ்வளவ எளிதான செயலா.. அப்படி ஒரே இடத்தில் குவியும் போது இட நெருக்கடி, பண நெருக்கடி, வசதி நெருக்கடி ஏற்படாதா... இப்படிப் பல சிக்கல்களுக்கு ஓருர் என்ற சிந்தனை வழிவகுக்கும்.
ஓருருக்கே இப்படிப் பலசிக்கல்கள் இருக்கையில் ஒருவரே உலகத் தலைவர் என்பதை ஏற்பதில் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படக் வுடும். அத்தலைவர் எவ்வூரில் இருப்பார்.. அவர் சார்பாக மற்ற ஊர்களில் தலைமை ஏற்பவர் யாவர்..
தமிழ்ச் சைவ மரப `எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !' என்று சிவனைப் போற்றுகின்றது. இத்தொடர்வழி எந்நாட்டவர்க்கும் உரியவர் சிவபெருமான். அப்படியானால் அச்சிவபெருமான் எவ்வூரினர்.. எல்லா ஊரும் அவர் ஊரா.. அல்லது அவர் இருக்கும் ஊர் எல்லாருக்கும் ஊரா?
கைலாயம் தொடங்கி கேதாரம் பெருகி திருப்பத்தூரிலும் அவன் உறைகிறான் என்றால் அவனின் உண்மையான ஊர் எது.. பல கோயில்கள், தேவாரத்தலங்கள், பீடங்கள் எல்லாவற்றிலும் அவன் உறைகிறான் என்றால் அவனை எங்கு சென்று முபுமையாய்க் காண்பது..
ஒரு கடவள் என்ற நிலையில் எல்லாக் கோயில்களிலும் இருப்பவர் சிவன் என்ற போதிலும் ஒவ்வெரு ஊரிலும் ஒவ்வெரு வடிவம், ஒவ்வெரு தத்துவம்.. பலசமயம், பலகடவள், பலவழிபாடு என்ற ழலில் பல கோயில் என்பது இன்னும் வேறுபாடுகளைப் பல்கிப் பெருகிடச் செய்யும். இவற்றை ஒருங்கு படுத்தி உள்ளொளி பெருக்கிட வழி என்ன..
இதுவரை ஏற்பட்ட கேள்விகளுக்கு பெரியபராணம் பதில் அளிக்கின்றது.
"நிலவம் எண்இல் தலங்களும், நீடுஔ
இலகு தண் தளிர் ஆக, எபுந்தது ஓர்
உலகம் என்னும் ஔமணி வல்லி மேல்
மலரும் வெண்மலர் போல்வது அம்மால் வரை''
(பெரியபராம் 13)
உலகம் என்பது ஒரு உயிருள்ள பூங்கொடி. அந்தப் பூங்கொடியின் தளிர்கள் உலகில் உள்ள சிவ ஆலயங்கள். அந்தத் தளிர்களின் ழலில் நடு நாயகமாக வெள்ளை மலராக வெள்ளிப்பனி மலையான கயிலாய மலை அமைந்துள்ளது என்பது இப்பாடலின் பொருள்.
உலகம் என்ற ஒன்றை இங்குச் சேக்கிழார் ஒரே கொடியாகக் கொண்டிருப்பது உலகை ஒன்றாக்கிச் சுருக்கும் ஓருர்ச்சிந்தனை. அதில் ஆங்காங்கே விளைந்த தளிர்களாக பலநாடுகளில் உள்ள சிவாலயங்கள் உள்ளன. அந்தக் கொடியின் முடியாக விளங்குவது கயிலாயமலை. அடிமுடி உடைய ஒரு கொடி என்ற நிலையில் சிவபெருமானை ஓருரினராக ஓர் மலையராக இப்பாடல் காண்கினறது. அதே நேரத்தில் மற்ற சிவாலயங்களுக்கும் தக்க இடம் தந்துள்ள இந்தச் சேக்கிழாரின் கற்பனை வியப்பினது.
பக்திப் பரட்சி செய்த திருநாவக்கரசர் இந்த ஓருர்ச் சிந்தனையை மேலும் வளப்படுத்தியுள்ளார். ஓருரை இன்னும் நெருக்கமாக்கி ஒரே வீட்டினராகக் கொண்டு பாடல்பாடியுள்ளார்.
"அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்படைய மாமனும் மாமியும் நீ
ஒப்படைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவம் உய்ப்பனவம் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!''
தந்தை, தாய், தலைவன், மாமன், மாமி, பெண், பொருள், குலம், சுற்றம் அனைத்தும் சிவபெருமான் ஒருவரே என்ற நிலையைப் பெற்றுவிட்டால் உலகம், நாடு, ஊர் ஆகியன வேறுவேறாக முடியாது. ஒருவீடாக, ஆண்டவன் குடியிருக்கும் வீடாக அதில் அவன் அடியார் அனைவரும் ஒரே சொந்தமாக நெருக்கடி இன்றிக் குடியிருக்க முடியும் என்ற ஓரில்லச் சிந்தனை இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.
துய்ப்பன, உய்ப்பன, தோற்றுதல், காத்தல், நெஞ்சத்துள் நிற்றல் அனைத்துச் செயல்களிலும் இறைவனே நிற்க எச்செயலும் நம் செயலாகாமல் அவன் செயலாகும். பொன், மணி, முத்து எவையும் நம் சொத்தாகாமல் அவன் சொத்தாகும். எல்லாவற்றுக்கும் மேல் அவனே தலைவன், இறைவன் என்ற நிலை கிட்டும்.
ஏறு ஊர்ந்த செல்வனான அச்சிவபெருமான் உலகம் முபுவதும் அவ்வேற்றில் ஏறி பவனி வந்தாலும் அவன் வீடு ஒரே வீடுதான். உலகிலேயே பெரிய வீடு. ஒரே ஊர்தான். உலகிலேயே பெரிய ஊர். ஒரே சொந்தம்தான். உலகிலேயே பெரிய சொந்தம். அது சிவவீடு, அது சிவனூர். அது சிவத் தொண்டர்.
இந்நிலையில் சிவத்தொண்டர்கள் அனைவரும் ஓர் இல்லத்தாராய், ஓருரினராய், ஓர் உறவினராய் ஆவர். அவர்தம் தலைவர் எந்நாட்டவர்க்கும் இறைவரான சிவபெருமான் என்பது இல்லமொழி.