ஞாயிறு, ஜூலை 23, 2006

மனதை மயக்கும் மலைக்கோயில்


"பேரிரைச்சல் பெருவாழ்வு' வாழும் அனைவரும் தனிமையான நிம்மதியான ஓர் இடம் கிடைக்காதா என ஏங்குவது உண்டு. அவர்களுக்கான இடம்தான் மலையக் கோயில்.

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் நச்சாந்துபட்டி என்ற ஊரின் முடிவில் உள்ளது. ஒரு மலை, அந்த மலையின் மேலும், அதன் அடிவாரத்திலும் சில கோயில்கள், அதனைச் சுற்றிச் சில கட்டடங்கள் இடிந்தும் இடியாமலும்... மக்கள் பேருக்குக் கூட இங்கு குடும்பம் குடும்பமாக வசிக்கவில்லை. அதனால்தான் இது தனிமையான ஊர். உலகத் தனிமையை இங்கு அனுபவிக்கலாம்.

மலையின் முன்புறத்தில் ஒரு குடைவரைக் கோயில். அந்தக் கோயிலில் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். அவர் மலையைக் குடைந்து அறை போன்ற அமைப்பில் வைக்கப்பெற்றுள்ளார். மலை அகலமாகக் குடையப்பெற்று அதன் ஒரு நீளத்தில் பெருமான் இருக்க எதிர்புறத்தில் மலையில் புடைப்புச் சிற்பமாகப் பிள்ளையார் இருக்கிறார். இவர் ஏறக்குறைய பிள்ளையார்பட்டி விநாயகர் போல உயர அமைப்பு உடையவர். ஆனால் இவருக்கு ஐந்து கரங்கள் உண்டு. சிவனுக்கும் பிள்ளையாருக்கும் இடைப்பட்ட இடத்தில் நந்தியில் எம்பெருமான் வீற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் ஒரு முனீஸ்வரர் சிலை உள்ளது. இவர் காவல் தெய்வமாக வணங்கப் பெறுகிறார். நீண்ட சடை முடி தாடியுடன், கையில் தண்டத்தோடு காட்சியளிக்கிறது, இவர் உருவம். இவர் மிகச் சக்தி வாய்ந்தவராக இந்த வட்டாரத்தில் வணங்கப் பெறுகிறார். பெயர் அறியப்படாத ஒரு முனிவரின் சிலையே இங்கு முனீஸ்வரர் சிலை என்றழைக்கப் படுகிறது. இந்த அமைப்பு முழுவதும் மலையின் குடைவரையாக உள்ளது.


இந்தக் குடைவரையை அடுத்து முன்னோக்கிய ஒரு கல்மண்டபம் உள்ளது. கருவறையைத் தொடர்ந்து இருக்கும் இந்த மண்டபம் இறைவர்க்குரிய வாகனங்கள் வைக்க பக்தர்கள் வணங்க உதவுகிறது. அடுத்து வெளிப்புற மண்டபம் உள்ளது. இதன் விதானத்தில் அற்புதமான பழைய ஓவியங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மூன்று: 1. கிருஷ்ணன் வெண்ணெய் உண்ணும் ஓவியம். 2 சிவனை வணங்கும் பார்வதியின் தவக்கோலம். 3 பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் பக்கத்தில் இளையபெருமாள்.
இவை மூன்றும் மிக அருமையானவை. இதில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை இராமன் என்று கொள்ளலாம். ஏனெனில் அவர் அருகில் தேவி துணை இல்லை. மாறாக இளையபெருமாள் இலக்குவன் வீற்றிருக்கிறார். அதோடு அவர்கள் வனவாசத்தில் இருக்கிறார்கள் என்பதை ஓவியத்தின் சுற்றுச் சூழல் விளக்குகிறது. குளம், கானகம் இவற்றைக் கருத்தில் கொண்டு ஓவியத்தை அணுகினால் இது விளங்கும்.


இதன் பிறகு வலமும் இடமும் இரு சன்னதிகள் காணப்படுகின்றன. இவற்றில் தற்காலிகமாக சில சிலைகள் வைக்கப்பெற்றுள்ளன. தட்சிணாமூர்த்தி, அய்யனார் போன்ற தெய்வங்கள் அவற்றில் சில. வலப்புறம் உள்ள ஒரு சிறு பகுதியில் ஒரு சிவலிங்கம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ அங்கு சிவலிங்கம் என்பதாக இந்தக் கோயில் அமைந்துள்ளது.

வெளிச்சுற்றில் அம்மன் சன்னதி, பிள்ளையார், முருகன், கறுப்பர் கோயில்கள் தனித்தனியாக பிற்காலத்தில் எழுப்பப்பட்டுள்ளன. மலையைச் சுற்றி வந்தால் மற்றொரு இடத்தில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. சற்று விசாலமான அறை அதற்குள் சிவலிங்கம் வாயில்படி என்று எவ்வித மாற்றமும் இல்லாமல் பழைய காலத்தில் இருந்தது இருந்தபடியே உள்ளது. உள்ளபடியேயான ஒரு குடைவரைக்கோயிலை நாம் தரிசிக்க முடிகிறது. இதன் பக்கங்களில் பல குகை மாடங்கள் அவற்றில் சிவ லிங்கங்கள், இதன் ஒரு புறச் சுவரில் பழையகால கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இதன் எழுத்து வடிவம் இதுவரை கிடைக்காத ஒன்று எனக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த எழுத்து வடிவத்தைக் கொண்டு இந்தக் குகைக்கோயில்களை மிகப் பழமைவாய்ந்தன என்று அவர்கள் கருதுகிறார்கள். இவை அனைத்தும் தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளன.

பெரும்பாலும் சமணர்கள் குடைந்த குகைக்கோயில்களில் வேறு கடவுளர்களை வைத்து வழிபட்ட மற்ற இடங்களில் இருந்து இவ்விடம் வேறுபடுகிறது. இங்குள்ள குகை மாடங்களில் சிவனே புடைப்புச் சிற்பமாக வீற்றிருப்பது இதற்கு ஓர் அரிய சான்று.

இதன் வெளிப்புறத்தில் ஒரு நந்தி தற்போது காணப்படுகிறது. மலையைச் சுற்றி வர தக்க நல்ல வழி உண்டு. தற்போது பெüர்ணமி கிரிவலம் இங்கு நடைபெறுகிறது. மேலும் இதன் சுற்றில் இரண்டு சுனைகள் உண்டு. இதனால் எம்பெருமான் குளுமையில் வீற்றிருக்கிறார்.


மலையின் மேலே பிற்காலத்தில் ஒரு முருகன் கோயில் நற்சாந்துப்பட்டி சார்ந்த நகரத்தார் ஒருவரால் அமைக்கப்பெற்றுள்ளது. முருகன் -வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இக்கோயிலைச் சுற்றி பெரிய மண்டபம் உள்ளது. இடும்பன் சன்னதி, ஒரு சுனை இவையும் அங்கு உண்டு. அருணகிரிநாதர் இந்த முருகனைப் பாடிப் பரவி உள்ளார். இந்த முருகனுக்கு தைப்பூசம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர். இங்குள்ள மடங்களில் எல்லாம் அப்போது அன்னதானம் நடைபெறும் . இந்த ஊரின் விழாக்கோலம் அன்று ஒரு நாள் மட்டுமே. நமக்கு நாம் செல்லும் நாள் விழாநாள். புதுக்கோட்டையின் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத் தளம் இந்த இடம்.

மு.பழனியப்பன்

ஞாயிறு, ஜூலை 16, 2006

பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு


பெண்களுக்கான இடம் எது? என்ற இந்தக் கேள்வியை அரசியல், ஆட்சியியல், சமூகவியல் இலக்கியவியல் என எல்லா மட்டங்களிலும் எழுப்பிக் கொள்ளலாம். இதற்கான விடை பெண்களுக்கான இடம் எங்கும் இல்லை என்பதுதான். அரசியலில் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காட்டிற்கே ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆட்சியியலில் பெண்களுக்குக் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டிற்கு மேல் இல்லை. அந்த ஒதுக்கீட்டிற்குள்ளும் ஆண்சார்பு இல்லாமல் இயங்க இயலாது. சமூகத்தில் பெண்களுக்கு இரண்டாம் இடம். அலுவலகம், வீடு போன்ற சமூக நிறுவனங்களில் பெண்களுக்கு ஏனோ தானோ என்ற அளவில் மட்டுமே இடம் உண்டு. அறிவில் பணித்திறனில் எள்ளளவும் குறையாத பெண்ணினத்திற்கு ஏன் இந்த இடமில்லா நிலை.

இந்தக் கேள்வியின் தேவை தற்போது பெண்களுக்குள்ளேயே எழுப்பப்பட்டு வருகிறது. பெண்களுக்கான இடம், வெளி, தளம், இருப்பு எங்கும் இல்லை என்பதைப் பெண்கள் உணர்ந்தும் உணர்த்தியும் வருகிறார்கள். இவர்களது பேச்சில் எழுத்தில் இந்த இடம் பற்றிய கேள்விகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தத் தொடக்கம் பெண்களுக்கான முழு சுதந்திரமான இடத்தைப் பெற்றுத்தரும் போராட்டமாக வளர்¢ந்து வேர்விடும். அந்த முழு சுதந்திரமான இடத்தைப் பெண்கள் பெற்று மேலும் செல்வார்கள் என்பதற்கான திருப்புமுனை இந்த இருபத்தோராம் நூற்றாண்டு என்பதில் ஐயமில்லை.

‘பறத்தல் அதன் சுதந்திரம் ’ என்ற தலைப்பில் (கிருஷாங்கினி (தொ. ஆ) ,காவ்யா, சென்னை, 2001) வெளிவந்துள்ள ஐம்பத்து இரண்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு இவ்வழிப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பாகும். இதில் இடம் பெற்றுள்ள பல கவிதைகளில் பெண்கள் தங்களுக்கான இடம் எங்கும் இல்லை என்பதைக் கவிதையின் பாடுபொருளாகவும், உருவகமாகவும், படிமமாகவும், கோஷமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனது டைரி எனக்கானதாய் இல்லை
எனது டைரி முகவரிகளை விழுங்கியபடி நௌ¤கிறது
எனது டைரிக்குள் உபதேசங்கள் அநேகம்
யாருக்கும் தொந்திரவற்றதாய் சின்னதாய்
ஒரு புலம்பல்
மனித துயரங்களின் தாடகத்திற்குள்
எனது துயரம் வந்துவிழ நான் என்ன செய்வது?
எனக்கான முகவரியை எனது டைரியில் காணோம்
(எனது டைரி, சுகந்தி சுப்பிரமணியன், ப,104)

என்ற கவிதை தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக் கொண்டிருக்கவேண்டிய ஒரு பெண்ணின் நாட்குறிப்பில் (டைரி) அவளின் முகவரியே இல்லாமல்போன இடமற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
யாரவது மீட்டுத் தாருங்கள்
மீட்டுத்தாருங்கள் என் வெள்ளைத் தாட்களை
. . .
மையிருந்தால் கோலின்றி கோலிருந்தால்
வெளிச்சமின்றி
இறைத்துப் பறக்க விட்ட
என் வெள்ளைத் தாட்களை (யௌவனம், மாலதி, ப. 165)
என்ற கவிதையில் தாளின்றி, மையின்றி, கோலின்றி, வெளிச்சமின்றி ஒன்றிருந்தால் ஒன்றின்¢றித் தவிக்கும் பெண்களின் படைப்பனுபத்தை உணரமுடிகின்றது. இந்தக் கவிதையின் பின்பகுதி

மையுண்டு ஒளியுண்டு
படைத்துவிட இதயமுண்டு
எனக்கு என் தாள்கள் வேண்டும்
என்று முடிகிறது. தற்போது எல்லாம் இருந்தபோதும் எழுதுவதற்கான தாள் (இடம்) பறந்து போய்விட்டதை இந்தக் கவிதை ஏமாற்றத்துடன் தெரிவிக்கிறது.

பாலம் என்ற படிமத்தை மற்றொரு பெண்கவிஞர் கட்டுகிறார்.
என் நேற்றைய கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது
வெகுநாள் வருந்தி
வியர்வை சிந்தி
கல்லுடைத்து
வெய்யிலில் வெந்து
பரிர்ந்து கொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
. . .
மீண்டும் அதைக் கட்ட
எனக்குக் காலம் இல்லை
காலம் இல்லை என்றால் கனவேது?
கனவு இல்லை என்றால்¢ ஆக்கமேது?
(நேற்றைய கனவு, திரிசடை, ப. 124)

என்ற இந்தக் கவிதை கூறும் பாலம் எது என்று தேடினால் அது அனுபவத்திற்கும் படைப்புக்குமான பாலம் என்பது தெரியவரும். அந்தப் பாலம் நிஜத்தில்கூட இடியவில்லை. கனவில் தகர்ந்துபோனது. கனவில் அழியும் பாலம் எவ்வகையில் கட்டப்பட்டு இருக்கும் என்பதைக் கவனித்தால் கனவு நனவு எதிலும் பெண்களுக்கான இடம் இல்லை என்பது புலனாகும். கனவுப்பாலத்தைக் கட்டக்கூட காலம் கடந்து போய் விட்ட சூழலில் பெண்ணின் இடம் பறிபோய்விட்டதை இந்தக் கவிதை தௌ¤வாக உரைக்கிறது.

படைப்பு என்ற கனவில் இடம் இல்லை என்பது ஒருபுறம், வீடு என்ற சமூக இருப்பிலும்கூட பெண்களுக்கு இடமில்லை என்பது இன்னும் பெரிய வருத்தம் இதனைச் சில கவிதைகள் வருத்தத்தோடு பதிவு செய்துள்ளன.

உம் வீடுகள்தாம் இங்கே
சிறைக் கூடங்கள் அறிவீர்
உங்கள் பத்தினிகள் எல்லாம் அங்கே
சுதந்திர அடிமைகள்
(சுதந்திர அடிமைகள், வித்யா, ப. 194)
நடக்கும் திசையெலாம்
முட்ட நேர்கிற சுவர்கள்
சிலை போலென்னை
இறுக்குகிற சுவர்கள்
நானொரு சமாதியுள்
நிறுத்தி வைக்கப்பட்டு
(வீ¢டு, பிருந்தா , ப. 154)

இந்தக் கவிதைகளில் வீடு சிறைக் கூடமாகவும், சமாதியாகவும் குறிப்பிடப் பட்டுள்ளதைக் காணுகையில் பெண்கள் வீடு என்னும் சமூக அமைப்பில் பெற்றுள்ள இடம் தெரிய வருகிறது. பெண்கள் சுய உணர்வின்றி விடுதலையின்றி சவமாய்¢¢க் கிடப்பதற்கான இடம் வீடு என்பது பெண்கள் தரும் கருத்து.

இருந்தாலும் பெண்களுக்கு பழைய வீடு இனிமை தருவதாய் இருந்திருக்கின்றது. அது தாய்வீடு. அந்த வீட்டின் அழகு, விடுதலை, வாசம் என்றைக்கும் பெண்களின் நினைவில் வாழ்கிறது.

முற்றிலுமாக
தன் அடையாளமிழந்து
நொறுங்கிக் கிடக்கிறது
முன்பு நானிருந்த
என் பூர்வீக வீடு
இன்று
நானங்கு இல்லையெனினும்
அது என்னோடு தானிருந்தது
. . .
முதல் தீட்டில் பயந்திருந்த
என்னோடிருந்த சுவரும கூட
சரி¢ந்து கிடக்கிறது
ஏனைய தன் ரகசியங்களோடு
(என் பூர்வீக வீடு, சல்மா, ப. 91)

சல்மாவின் கவிதையில் பூர்வீக வீட்டில் இன்னும் ரகசியங்கள் மிச்சம் இருப்பதை உணரமுடிகிறது. அந்த வீட்டின் அழிவில் இருக்கும் இனிமை கலந்த சோகம் தற்போது வாழும் வீட்டின் இருப்பில் இல்லை என்பதும் தெரிய வரும் கூடுதல் செய்தி.

நகரத்தில் கைவிடப்பட்ட எனது வீட்டுக்குப்
பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புகிறேன்
வழியெல்லாம் மறந்து போக
காலத்தின் நிறங்களை இழந்த
நத்தை ஓடு ஒன்று
என் நினைவின் குறுக்கே
அடைத்துக் கொண்டு கிடக்கிறது
(பச்சை நகரம், மாலதி மைத்ரி, ப.162)

என்ற இந்தக் கவிதையில் நத்தை ஓடு பெண்ணின் பழைய வீட்டின் குறியீடாக உள்ளது. நத்தையின் ஓடு நத்தைக்கான தனித்த விடுதலையான வீடு. அது குறித்து அந்தக் குறிப்பிட்ட நத்தை மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த நத்தை ஓட்டைப்போல தான் பெற்றிருந்த பழைய வீட்டின் ஞபாத்தை இந்தக் கவிஞர் இந்தக் கவிதையில் பதிய வைத்துள்ளார்.
கருவறை வாசனை என்பதாகத் தாயின் மனத்தை கனிமொழி கருணாநிதி கவிதையில் வரைகிறார்.

அவளின் கருவறை மனத்தை
அள்ளி அள்ளி என்
வீடெங்கும் தௌ¤த்து
சுருண்டு படுத்துத் தூங்கிப்போகவேண்டும்
(கருவறை வாசனை, கனிமொழி கருணாநிதி, ப. 75)

இந்தக் கவிதையில் கருவறை மனம் உள்ள வீடு பழைய வீடு, அதனைத் தௌக்க வேண்டிய வீடு வேறொரு வீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

இவ்வகையில் பழைய தாய் வீடு தனக்கான இடம் என்பதாகப் பெண்கள் உணர்ந்துள்ளார்கள். அந்த வீட்டைப் பெண்கள் இழந்து விட்டார்கள். பெண்களுக்கான இடம் அப்போதே தொலையத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாகிறது. அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடருகின்றன.

தமிழ்ச் சூழலில் அல்லது இந்ததியச் சூழலில் உள்ள பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற பெண்களுக்கான சமூக இரட்டை இருப்புநிலை இந்த ஏக்கத்தின் முதற்காரணம் என்பது தௌ¤வு. தாய் என்பவளை தன் இனமாக நோக்கும் மகளின் பிணைப்பு, கட்டாயமாகப் பிரிக்கப்படும்போது மகளின் மனதுள் ஏற்படும் இழப்பு பெரிய பாதிப்பை அவளின் படைப்பு மனத்தில் ஏற்படுத்துகிறது. அந்த ஏக்கம் அந்த ஏமாற்றம் பெண்களின் படைப்பு மனத்தில் கனன்று கொண்டுள்ளது என்பதற்கு மேற்சொன்ன கவிதைகள் சான்றாகின்றன. இந்த படைப்பு மன இடமின்மை அவளுக்கான இடமின்மையாக எல்லாத் துறையி¢லும் நீடிக்கிறது.

திங்கள், ஜூலை 10, 2006

போட்டி- மரணம்

மரணம்
சம்பவிக்கும் நேரத்தைத் தவிர
வேறு ஒன்றும் முன்னேற்பாடுஇல்லாதது

கடிதங்கள்
இதனைத் தெரிவிக்கின்றன
தாமதமாக

அழுகைகள்
விளம்பரப் படுத்துகின்றன
இதனை

சுமக்கின்றவண்டிகள்
அடையாளங்களாகின்றன
வருபவர்களுக்கு

இழப்பின் வலி
மரணத்தின் அடுத்த நிமிடத்தில்
மறந்து போகிறது

ஏற்பாடுகளுக்கு
பணத்தை
எண்ணிப் பார்க்கிறது
சுற்றம்

நாள் போனால்
நாற்றம் வீசும்
பக்கத்து வீட்டுக்காரர்களின்
மனிதாபிமானம்

அமெரிக்க பாசம்
வரும் வரை
காத்திருக்கிறது கூட்டம்

எதுவும் இல்லாமல்
போகப் போகிறது வாழ்க்கை

கழுவி விட்டார்கள்
வீட்டையும் மரணத்தையும் சேர்த்து

அடுத்த மரணத்தின்போது கலவரப்படும் மனது
http://www.thenkoodu.com/contestants.php -

செய்தி ஓடை என்றால் என்ன

நண்பர்களே
வணக்கம்
அது என்ன செய்தி ஓடை?
அல்லது RSS?
அது இருந்தால் மட்டுமே தமிழ் மணம் ‘வலைப்பூக்களை ஏற்குமாமே?
அது இல்லாததால் என் வலைப்பூவைக்
கழற்றி விட்டது தமிழ் மணம்
தெரிந்தவர்கள் கூறுங்கள்
தெரியாதவர்கள் அறிந்து கொள்கிறோம்

மேலும் வலைப்பூ மையங்களின் முகவரிகள் இருந்தால் தெரிவியுங்கள்
நன்றி

வியாழன், ஜூலை 06, 2006

நகர்வு













இடம் விட்டு நகர்வதாய் முடிவாகிவிட்டது
எல்லாம் உறுதி

எவர் வந்தும் எங்களைத் தடுத்துவிட முடியாது மகிழ்வோடு நாங்கள் கிளம்புகிறோம்

வரும்போது பெரிதாய் எண்ணி வந்தோம்
போகும்போது பெரிதாய் எண்ணி
வந்திருக்கத் தேவையில்லை
என்று தோன்றுகிறது

வாழ்க்கையின் ஒரு காட்சி
இது இது நிறைவுக் காட்சியுமல்ல
தொடக்கக் காட்சியுமல்ல
இடைவேளைக் காட்சி அவ்வளவுதான்

வந்தோம்
ஆனால் செய்ததெல்லாம் நன்மை
அது மட்டும் உறுதி

இதனால்
இருப்பவர்களைக் குறை கூற முடியாது
அவர்களின் இருப்பின்படி இருக்க வேண்டிய கட்டாயம்

சரி நாங்கள் கிளம்பிவிட்டோம்

புதன், ஜூலை 05, 2006

i am in pudukkottai

hai
i am in pudukkottai
i joined as a lecturer in h.h the rajahs college
i will activate my writtings in this blog very soon
thank u