திங்கள், ஜனவரி 23, 2006

தமிழ் இணையப்பல்கலைக்கழகம்

தமிழ் இணையப்பல்கலைக்கழகம்

சென்னை தரமணியில் இயங்கும் இந்நிறுவனம் தமிழறிவை உலகம் முழுவதும் வளர்க்கும் செயல்பாடுகளைச் செய்து வருகிறது.
இதன் முகவரி tamilvu .org
இத்தளத்தில் மின் நூலகம் ஒன்று உள்ளது. இதில் ஏறக்குறைய 200 நூல்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு எவ்வித செலவும் இல்லாமல் கிடைக்கிறது. மேலும் இதில் தேடுதல் வசதிகள் உள்ளன. ஒரு ஒரு பக்கமாக நூலைப் பார்க்கத் தேவையில்லை, தேவையான பாடலை பக்கத்தை சொல்லை விரைவில் சென்றடைய முடியும்.

மேலும் மழலைக் கல்வி என்றொரு பகுதி உள்ளது. இதில் குழந்தைகளுக்கான பாடல்கள் கதைகள் பயிற்சிகள் உள்ளன. இதன் மூலம் தமிழ் அறியாக் குழந்தைகள் கூட தமிழ் அறிய முடியும்

இந்தக் கல்வித் திட்டம் பள்ளிக்கல்வி கல்லூரிக்கல்வி முதுகலைக் கல்வி என வளர்ந்து வருகிறது

வெள்ளி, ஜனவரி 20, 2006

"சொல்’’

மு.பழனியப்பன்

தெரியாமல் செய்யும் சின்ன சேட்டைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன, ஸ்ரீராமன் தெரியாமல் செய்த சின்ன சேட்டைதான். வில் வளைக்கும் வயதில், கூனி முதுகில் அவன் விட்ட அம்பு, சொல்லம்பாகி சோகம் தந்தது, நினைக்க, நினைக்க இதுபோல் பல கதைகள் தோன்றும், என்றாலும் இன்று காலையில் என் வாய் தவறி வந்த சொற்களுக்கு வலிமை இருக்குமா என்ன?
சொல்லியிருக்கக் கூடாது, வார்த்தைகள் என்னை அறியாமல் விழுந்துவிட்டன,
அலுவலகத்திற்கு சைக்கிளில் போகும் வழக்கம் என்னுடையது, இந்த சைக்கிள் பயணத்தால் பல பயன்கள் உண்டு, ஒன்று பெட்ரோல் மிச்சம், யாரும் அலுவலகத்தில் கடன் கேட்க இயலாது, கேட்டாலும் "காற்று இல்லை,டியூப் வீக்" என பல பதில்கள் தயார்,
மோட்டார் சைக்கிள் பயணம் என்றால் கடன் கேட்பவர் "பெட்ரோல்தானே போட்டாப்போச்சு " என்று இருக்கிற ரிசர்வையும் உறிஞ்சு விட்டு, ஊர் சுற்றி விட்டு வந்து "இல்ல பாஸ், நேரம் ஆயுடுச்சி, கோபிச்சுக்காதிங்க,, இந்தாங்க பணம்" என்று தந்தும் தராமலும் வழிவார், "அவரிடம் பணம் பெறுவது அவ்வளவு நல்லா இருக்காது" என நாமும் பணத்தை வாங்க மறுப்போம், அடுத்த முறையும் அவர் கூச்சமின்றி வண்டி கேட்டு வந்து நிற்பார், இந்தத் தொல்லைகளுக்குப் பயந்துதான் என் பயணம் சைக்கிள் பயணம்,
மேலும் என் எடையில் குறிப்பிட்ட அளவைக் குறைக்கச் சொல்லி மனைவி தினம் துதி பாடுகிறாள், அவள் எதற்காக எடை குறைக்கக் கூறுகிறாள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விசயம், உங்களுக்குத் தெரிந்து இருந்தால், உங்கள் மனைவியும் துதி பாடுகிறார் என்று அர்த்தம், அந்த எடை குறைப்பு நடவடிக்கையின் ஒரு பங்காகவும் இந்த வெற்றிப் பயணம் தொடர்கிறது,
அலுவலகத்திற்குச் சைக்கிளில் போவது என்பது எளிதான செயல் அன்று, அதுவும் சென்னை போன்ற மா,,,,நகரங்களில் இது சற்று இம்சைக்கு உரிய அல்ப விசயமே, மோட்டார் சைக்கிளில் போகும், நம்மைவிட அழகான பெண்கள் நாம் ஏதோ குறைந்தவர்கள் போல வேகமாகக் கடந்து போவார்கள், அவர்களின் கழுத்தாடை, நமக்கு டா,,டா, சொல்வது போல் இருக்கும், கார் கனவான்கள் நம்மை ஜந்துவாகப் பார்ப்பார்கள், பேருந்துப் பயணிகள் சாய்ந்து தூங்கி நம்மைக் கிண்டல் செய்வார்கள்,
சைக்கிளிலில் போகும் நம்மை ஆட்டோவின் பையிங்,,,, பையிங் ஒலிப்பான் ஓசை மிரளச்செய்யும், சாலையை அடைத்துப்போகும் நகரப் பேருந்து நம்மை கடக்கவும் விடாது, தயங்கி நிற்கவும் விடாது, வளைவுகள் எதிரிகளாகும்,, ஏனெனில் எதிரில் வருபவர் என்ன நினைப்பில் வருகிறார் என்பது நமக்குத் தெரியாதல்லவா?
இத்தனை இன்னல்களுக்கிடையில் மழை வந்தால் இன்னும் தொந்தரவு, வெயில் அடித்தால் மயக்கம் ஆட்கொள்ளும்,, மழை வந்தால் எருமை மாடாக வேண்டும், இப்படி இப்படி கடந்து வந்து அலுவலகம் சேர்ந்தால் நமக்குப் பணப்பட்டுவாடா செய்யும் கணக்குத்துறை உதவியாளர், மாருதி 800 ல் வந்து இறங்கிக் கேட்பார் " சார் லேட்டாகவில்லையே?" என்று,,,, நேரந்தான், அவர் மாமியார் வீடு வாங்கித் தந்த கார் அது, இண்டேன் காஸ்ஸில் தண்ணீராய் ஓடுகிறது,, நமக்கு ஏது பாக்கியம், கார் நிறுத்தக் கூட இடமில்லை,
இராமாயணக் கதை நினைவுக்கு வந்தாலும், சைக்கிள் சோகம் கூறினாலும்,,,,
அந்த வார்த்தைகளை என் மனம் கூறியிருக்கக் கூடாது, எப்படி என் மனம் இத்தகைய வார்த்தைகளைக் கூறியது? அந்த அளவுக்கு அது துன்பப்பட்டதா?
"அவன் பொண்டாட்டி தாலி அறுக்க’’ இது கூறும் அளவிற்கு ஒன்றும் பெரிய தவறு நிகழ்ந்து விடவில்லை,
என்றும் போல் அன்றும் சைக்கிள் சவாரி, அலுவலகம் நோக்கி,,,,சரியாக 20 நிமிடத்தில் அலுவலகம் அடைந்து விடலாம், எனினும் அன்று சோதனை, நான் கிளம்பியதே நேரம் கழித்துத்தான், பத்து நிமிடங்கள் மட்டுமே கையில்,. சாலை முழுவதும் ஊர்திகளின் திக்குமுக்காடல், நேற்று பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர்க் குட்டைகள்
இடம் கிடைத்த இடைவெளியில் நுழைய முற்பட்டேன், வேகமாக முன்னேறினேன், ஊர்திகளும் தடைபட்ட வெள்ளம் திறந்து விட்டதுபோல விரைந்தன, ஒன்றன் பின் ஒன்றாய்ப் போனபின் நிதானம் வந்தது,
இன்னும் பத்து நிமிடங்களில்,,,, அலுவலகக் கட்டிடம் தென்பட்டுவிட்டது, ஐயோ,,,, என் வெள்ளைச்சட்டையில் பேருந்து ஒன்றின் சக்கரத்திலிருந்து புறப்பட்ட சேற்றுநீர்த் தெறிப்புகள்,,,, மெல்ல நுழைந்து பரவி உலகப்படம் வரையப் பெற்றிருந்தது,, ஆஸ்திரேலியா எனது வேட்டியிலும் தெரித்தது,
மனத்திலிருந்து பீறிட்ட சொற்களின் வேகம் "அவன் பொண்டாட்டி தாலி அறுக்க’’
தெரியாமல் செய்யும் சின்ன சேட்டைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன, ஸ்ரீராமன் தெரியாமல் செய்த சின்ன சேட்டைதான். வில் வளைக்கும் வயதில், கூனி முதுகில் அவன் விட்ட அம்பு, சொல்லம்பாகி சோகம் தந்தது, நினைக்க, நினைக்க இதுபோல் பல கதைகள் தோன்றும், என்றாலும் இன்று காலையில் என் வாய் தவறி வந்த சொற்களுக்கு வலிமை இருக்குமா என்ன?
வார்த்தைகளுக்கு வலிமை இருந்து பேருந்து ஓட்டுநர் மனைவி தாலி அறுத்துவிடுவாளோ?, பேருந்து ஓட்டுநர் இறந்தே போவாரோ?
ஒருவேளை அவர் மனைவியை இழந்தவராக இருந்தால்,,,, இந்த சிந்தனை இன்னும் மோசம், கைப்பையில் வைத்திருந்த குடிநீர் கொண்டு சட்டையில் இருந்த உலகப்படத்தை அழித்தேன், சேறு போனது,, ஆனால் தேசங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் மறையவில்லை,
----
முளைத்த பல்

மு. பழனியப்பன்

புத்த பிரானின்
தங்கப் பல்லைத்தடவிப் பார்த்ததைப் போல
அக மகிழ்ந்தாள் மனைவி.
அலுவலகக் கோப்பிற்குள்கிடந்த
என்னைஉசுப்பியதுதொலைபேசியின் முனகல்
மறுமுனையில் மனைவியின் குரல்
பல் முளைத்துவிட்டதாம்குழந்தைக்கு
மகிழ்வின் உடன் நொடியைப் பகிர்ந்து கொள்கிறாள் மனைவி
கேட்டதும்
சிறுமின்னல் எனக்குள்
அலுவலக பொதுப் பேசி
அதனால்மகிழ்ச்சி எல்லோருக்கும் பரவியது
மென்மை உதடுகள்
ஈறு வரம்பில்புதிய பல்லின் சிறுமுனைவந்தும் வராமலும்விரல் வைத்தால் கடிக்க முனைகிறாள்
உள்ளம்வளர்ச்சிக்கு ஏங்குகிறது.
அவசரம்

மு பழனியப்பன்

பரபரப்பான சாலை
முந்துதலில்
பறந்து போன தொப்பி
பேருந்தின்
நெருக்க வேதனையில்
படியில் பயணம்
பறிபோன ஒற்றைக்கால் செருப்பு
அலுவலக வேலை
நேரம் முடிந்ததும்
விரட்டும் இரவுக் காவலாளி
ரயில் வர
பாதி குடித்த டீ
பொதுக் கழிப்பிடம்
அடுத்தவன் தீண்டுதலில்
அதிர்ந்துபோய்
வெளியேறி
வாங்க மறந்த சில்லறை
நேரத்தை மட்டும்
குறை சொன்னால் போதாது
அவசரத்திற்கு
அத்தியாயங்கள் நூறு எழுதலாம்.----
muppalam2003@yahoo.co.in



வேண்டிய உலகம்

மு பழனியப்பன்

1 வயது சிறு குழந்தை
அலுவலக நேரங்கள் தவிர
அவளோடு
உண்ணத் தயாராக்குவது
தயாராவது
உறங்கத் தயாராக்குவது
தயாராவது
வாரம் ஒரு கோவில், தினம் ஒரு ஷாப்பிங்
எனும் தமிழக வாழ்க்கை


காசிக்கு டிராவல்ஸ்ஸில்
பயணம்
போய் வந்ததோடு
இராமேஸ்வரம் முதன் முறையாய்

கோதுமை சப்பாத்தி
வறட்டிட இட்லிக்கு ஏங்கும்

மஞ்சள், குங்குமம், வண்ணப் பட்டாடை
உலவும் இந்திய வாழ்க்கை

குழந்தைகளை விட வேலை பெரிதெனும் கணவன்
கணவனுக்கு உதவவேண்டும் மனைவி
மனைவிக்கு உதவி வேண்டாம்,
ஆண் உலகம் (அல்லது) ஆசிய வாழ்க்கை

அமெரிக்க நண்பன் இமெயில்
இங்கிலாந்து நண்பன் ஐஎஸ்டி போனில்
உள்«ளுர் நண்பன் செல்லில்
விரிகிறது உலக வாழ்க்கை

உள்ளங்கையில் உலகம்
வியப்பாய்த்தான் இருக்கிறது
வேண்டியவர்களின் உலகம்
இரு கவிதைகள்
மு. பழனியப்பன்

விஷயம்

விஷயம் இல்லாதவர்கள் இல்லை,விஷயம் தெரியாதவர்கள் உண்டு,
எழுதத் தெரிவதுபடித்து நினைவில் இருத்துவதுகணக்கு போடுவதுவருமானவரிக்கு ஏற்ப சேமிப்பது
குறைந்த செலவில் அதிக வசதிதேவைக்கு ஏற்ப மனிதர்களின் பழக்கம்வேலையை முடிக்க குழைவு
இப்படிப் பலப்பல விஷயங்கள்இதைத் தெரியாதவர்கள் இருக்கலாம்ஆனால் விஷயம் இல்லாதவர் எவரும் இல்லை
புத்தித் தௌ¤விலும் புத்திக் கூர்மையிலும்வேகம் கூடலாம் குறையலாம்
விஷயம் சொல்லித் தெரிகிற விஷயம் இல்லைசொல்லாமல் அறியப்படுகிற விஷயமும் இல்லைஇரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருப்பது
இது இது விஷயம் எனத்தௌ¤வு பிறக்காமலேவிஷயம் விஷயமாக இருக்கிறது
எனினும் மனிதர்கள் விஷயமாக இருக்கிறார்கள்

--------------------------------------------------------------------------------

வில் + அங்கம் = வில்லங்கம்

வில்லங்கமானஆட்களைப் பற்றிய விபரக்குறிப்பு இது
இவர்கள்அறிமுகமாகும் போதுமிக மென்மையானவர்களாகத் தோன்றக் கூடும்
விபரங்களைச் சேகரிப்பார்கள்
தேவையானவை கிடைக்கும்வரை மௌனம்இவர்களின் மொழியாகும்
பாரட்டுக்களை எதிர்பார்க்க முடியாது
தேவையானவை கிடைக்காவிட்டால்மென்மை வன்மையாகும்விபரங்கள் விபரீதமாகும்மௌனம் வெடித்துச் சிதறும்
ஒவ்வொருவருள்ளும் இவைநிகழலாம்
ஏனென்றால் வில்லங்கம்பழிவாங்கலின் தொடக்கம்
சேதிராயர்

முனைவர் மு. பழனியப்பன்

பன்னிரு திருமுறைகளில் இசைப்பா என்று இசையின் பெயரால் அழைக்கப்பெறும் திருமுறை திருவிசைப்பா ஆகும். இது ஒன்பதாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இதனுடன் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் இணைந்து இத்திருமுறை முழுமை பெறுகின்றது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்களின் பாடல் தொகுப்புகளுக்கு அடுத்தநிலையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு அமைக்கப் பெற்றிருப்பதன் வழியாக இத்திருமுறையின் பெருமையை உணர்ந்து கொள்ள இயலும்.
இந்த ஒன்பதாம் திருமுறை- திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்களால் பாடப்பெற்றதாகும். ஒன்பது அருளாளர்கள்- ஒன்பதாம் திருமுறை என்ற எண் பொருத்தம் கருதியும் இத்தொகுப்பு இவ்வரிசையில் வைக்கப் பெற்றிருக்கலாம்.
மேலும் காந்தாரம், புறநீர்மை, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் ஆகிய தேவாரப்பண்களே இத்திருமுறையிலும் கையாளப் பெற்றுள்ளது. இத்திருமுறையில் சாளரபாணி என்ற பண் மட்டும் புதிதாய் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
இத்தொகுப்பில் 301 பாடல்கள் அடங்;கிய 29 பதிகங்;கள் உள்ளன. திருவிசைப்பாவின் நிறைவுப் பதிகமாக அமைவது சேதிராயர் அருளிய ’சேலுலாம்’’ எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம், தில்லைக் கோயில் இறைவனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. இப்பதிகம் திருவிசைப்பாவின் ’திருக்கடைக்காப்புப் பதிகம்‘என்ற பெருமைக்கும் உரியதுமாகும்.
இப்பதிகம் பத்துப்பாடல்களைக் கொண்டது. அந்தாதி யாப்புடையது, நான்கடிகள் கொண்ட இப்பதிகப் பாடல்கள் இறுதியடியில் ஒரு சீர் குறைந்து வருமாறு பாடப்பெற்றுள்ளன, இவ்வமைப்பு இசைப்பாடலுக்கு உரியது என்பர் இசை வல்லுநர்கள்.
இக்கட்டுரை இப்பதிகத்தை அருளிய சேதிராயர் குறித்தும், அவரின் அருட்பதிகச் சிறப்பு குறித்தும் ஆராய்வதாக உள்ளது.
சேதிராயர்
’’ஏயு மாறு எழில் சேதிபர் கோன் தில்லை
நாயனாரை நயந்துரை செய்தன‘‘
என்ற அடிகள் பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறுகின்றன. இங்கு சேதிராயர் ’சேதிபர்கோன்‘’என விளிக்கப் பெற்றுள்ளார். இதன் வழியாக இவர் அரசர் என்பது தௌ¤வாகின்றது.
’சேதி’’ என்பது குலப்பெயர் ஆகும்.
’’முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில்(லும்) இராசராசசேதிராயன், இராஜேந்திர மலையமான் என்று பட்டம் தரித்தவர்கள் திருக்கோவிறலூர், கிளியூர் ஆகிய நகரங்;களைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சேதிராயர் குறுநிலமன்னராய்ச் சோழரின் கீழ் வாழ்ந்தமை தௌ¤யப்படும். இவர்களுள் திருவிசைப்பாப் பாடியவ்ரும் ஒருவர‘‘(மு. அருணாசலம், திருவிசைப்பா திருப்பல்லண்டு பாவும் பயின்ற நிலையும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974, ப. 126-127) என்ற குறிப்பின்படி சேதிராயரின் மரபுவழி பெறப்படும்.
திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும் சேதி நாட்டைச் சார்ந்தவர் என்ற பெரியபுராணக் குறிப்பு இங்;கு ஒப்புநோக்கத்தக்கது. மேற்கண்டவற்றின் வழியாகச் சேதிராயர் திருக்கோவகரலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சோழமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுநிலமன்னராக அரசாண்டவர் என்பது பெறப்படுகின்றது. இச்சேதிராயர் சைவ சமயம் சார்ந்து, தில்லைப்பதியை வணங்கி, திருமுறை தந்த பெருமைக்குரியவரும் ஆகின்றார்.
சேதிராயரின் பக்திச்சிறப்பு
இவர் தில்லையுள் உள்ள பெருமானைப் பதிகப் பாடல்தோறும் போற்றிப் பரவுகின்றார். அவ்வாறு போற்றிப் பரவும் தில்லைச் செய்திகளைத் தொகுத்துக் காண்கையில், பொது முடிவுகள் சிலவற்றைப் பெறமுடிகின்றது.
’’சேலுலாம் வயல் தில்லை உளீர்’’(1)
’’சேணு தற்பொலி தில்லையுளீர்’’((2)
’’சீரியல் தில்லையாய்ச் சிவனே’’((3)
’’செம்மலோர் பயில் தில்லை உளீர்’’((4)
’’செயலுற்றார் மதில் தில்லை உளீர்’’((5)
’’தில்லை வாதித்தீர் என் மடக் கொடியை’((6)
’’சிறைவண்டார் பொழில் தில்லையுளீர்’’((8)
’’தென்றலார் பொழில் தில்லையுளீர்’’(9)
’’தில்லை நாயனார்’’((10)
இவ்வாறு தில்லையைப் பாடல்தோறும் விளிப்பதன் மூலம் இவர் தில்லையின் மீது கொண்டுள்ள பக்தியை உணரமுடிகின்றது.
தில்லை நகரின் நிலப்பெருமை, நிலத்துள்ளோர் பெருமை, ஈசன் பெருமை ஆகிய மூன்று நிலைகளில் இவர் தில்லையைப் பெருமைபட கண்டுள்ளார்.
’கெண்டை மீன்கள் வாழும் வயல்கள் கொண்டது தில்லை (1), சிறகுகளை அசைத்துத் தேன் உண்ணும் வண்டுகள் நிறைந்த பூங்காக்களை உடையது தில்லை (8), தென்றல் உலாவும் சோலைகளை உடையது தில்லை(9)‘¤ ஆகிய பகுதிகள் தில்லையின் நிலவளத்தைக் கூறுவன.
’வான் முகட்டைத் தொடும் அளவிற்கு மதில்களை உடையது தில்லை(2), நுட்பமான வேலைப்பாடுகள் அமைந்த மாளிகைகளை உடையது தில்லை (5)‘ என்பன தில்லைநகரின் அமைப்பை, அழகைக் கூறுவன.
’பெருமை உடைய சான்றோர்கள் பயில்கின்ற இடம் தில்லை (4), மிக்க சிறப்புடைய தில்லை(6)‘ என்பன- தில்லையில் வாழ்பவரைக் குறிக்கும் அடிகள் ஆகும்.
’தில்லை வாதித்தீர் (6), தில்லைநாயனார்(10)‘ ஆகியன தில்லையில் வீற்றிருக்கும் எம்பெருமானைக் குறித்த பகுதிகளாகும்.
நிலங்களின் அமைப்பு, நகர அமைப்பு, நகர மாந்தர் திறம், நகரத்துள்ள சிவன் திறம் ஆகியனவற்றை ஒரு வழிப்போக்கர் முதன் முதலாகத் தில்லையை ஆர்வம் கொண்டு காணும் நிலையில் சேதிராயர் கண்டு பாடியுள்ளார்.
சேதிராயர் தில்லைப்பதியைக் காணும் விருப்பம் கொண்டு தன் நகரமான திருக்கோவ்லலூர் விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். முதன்முதலாகத் திருக்கோவலூர் விட்டு தில்லைப் பதிக்கு மன்னர் குலத்தவரான சேதிராயர் எழுந்தருளிய சூழலில், அதற்கான அனுமதியை அப்பகுதி மன்னரிடம் பெற்றபின் தில்லைக்குள் நுழைந்திருக்க வேண்டும்.
அவ்வாறு நுழைந்த இவர் அரசர் என்பதால் தில்லை நகர அமைப்பை, மாந்தர் நிலையைக் கண்டு வியந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடுதான் இப்பதிகம் என்பது மேற்கண்ட தில்லை வருணனைகள் வாயிலாக வெளிப்படுகின்றது.
பாடலின் கூற்று
இப்பத்துப்பாடல்களும் செவிலி கூறுவனவாக அருளப்பெற்றுள்ளன. அகப்பாடல் மரபில் தலைவியின் காதல் வருத்தம் கண்ட தோழி -செவிலிக்கும், செவிலி -நற்றாய்க்கும் தலைவியின் காதலை மொழிவது அறத்தொடு நிற்றல் என்னும் துறையாக கொள்ளப்படுகின்றது. அத்துறையில் இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.
தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும் அறத்தொடு நிற்கும்
இம்முறை இப்பதிகத்துள் சற்று மாறுப்படுத்தப் பட்டுள்ளது.
தலைவியின் வருத்தத்தைக் கண்ட செவிலி தானாக முயன்று -அவள்
காதலையும், அவளின் காதலனையும் அறிந்துகொள்கிறாள். அறிந்த அவள்
நற்றாயிடம் சென்று அறத்தொடு நிற்காமல், காதலைத் தந்த தலைவனிடமே சென்று
திருமணம் செய்து கொள்ளக் கூறி வரைவு (திருமணம்) கடாவுகிறாள்.
வரைவு கடாதல் என்னும் தோழியின் செயலை இங்குச் செவிலித்தாய் செய்கிறாள். நற்றாயிடம் அறத்தொடு நிற்க வேண்டிய செவிலித் தாய், அவ்வாறு நிற்காமல் காதலனிடம் சென்று கூறுவதாக -இப்பதிகத்துள் மாற்றமடையச் செய்திருப்பதன் நோக்கம் என்ன? என்று வினா எழுப்பினால்க்ஷ ’சிவனே உயிர்களுக்கு நற்றாய் போன்றவன் அவனே உயிர்களை ஈடேற்றுவான்‘ என்ற பதில் கிட்டும்.
எனவே தலைவனாகவும், நற்றாயாகவும் -இங்;கு உயிர்களுக்கும், ஆன்மாக்களுக்குத் தில்லைச் சிவன் விளங்கும் காரணத்தால் சேதிராயாரால் படைக்கப்பெற்ற செவிலி- இறைவனான தலைவனிடம், நற்றாயிடம் தன் மகளின் (ஆன்மாவின் ) குறையை நேர்கிறாள். சேதிராயர் செவிலியாக விளங்கி இங்கு உயிர்களை உய்விக்கும் வண்ணமாக இப்பதிகம் பாடப்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தகது.
தலைவன், நற்றாய்- தில்லைச்சிவன்
செவிலி - சேதிராயர்
தலைவி - உலகஉயிர்கள் (ஆன்மா)
இவ்வாறு அகத்துறையில் இப்பதிகம் அமைந்து சிறக்கின்றது.

தலைவியின் வருத்தம்
’’தலைவி காதல் மயக்கம் பெற்றள்ளாள்(1), நாணம் உற்றனள்(2), அழுகிறாள் (3), விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆளெனா உம்மையே நினைந்து ஏத்துகிறாள் (4), ஒன்றும் ஆகிலள் (4), அயர்வுற்றாள்(5), அஞ்சலி கூப்பினாள் (5), அந்தோ என்னை உய்யச் செய்ய கொன்றை மாலை தந்து அருள்வாய் (5), மையலுற்றாள்(6), கிளியோடு பேசுவாள்(6), ’என்று முடியும் நீர் செய்த மயக்கம்‘ என அரற்றுவாள் (7), என்னை வாதை செய்யேல் (8), உம்பொருட்டால் ஒன்றும் ஆகிலன் (9) ‘‘ ஆகிய பகுதிகள் தலைவியின் வருத்தம் கூறும் பகுதிகளாக இப்பதிகத்தில் விளங்குகின்றன.
இப்பகுதிகள் தலைவிக்கு உரியன போல் தோன்றிடினும் ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை அடைய- படும் துயரங்கள் இவைஆகும். விம்மி விம்மி அழுதல், அஞ்சலி செய்தல், மயக்கம் பெறல் ஆகியன ஆன்மாவிற்கே உரியன. இதன் மூலம் ஆன்மாவிற்கான குறியீடாக இங்;கு தலைவி காட்டப்பெற்றுள்ளாள் என்பது தௌ¤வாகின்றது.
அகத்துள் புறம்.
அகச்சுவைப்பாடலான இப்பதிகத்துள் ஆண்டவனின் புறச் செயல்கள் காட்டப்பெற்றுள்ளன. இதன் மூலம் அகமும் புறமும் நிறைந்த அழகு மிகு பாக்களாக இப்பதிகப்பாடல்கள் விளங்;குகின்றன. ஆண்டவனின் வீரச் செயல்கள் பின்வருமாறு.
1) ’’வேலையார்விடம் உண்டுகந்தீர் (1)
-(ஆலகாலவிடம் அருந்துதல்)
2) மால்கரி ஈருரித்தெழு போர்வையினீர் (3)
-(யானையின் தோலைப் போர்த்தல்)
3) சேதித்தீர் சிரம் நான்முகனை (6)
- (பிரம்மாவின் தலை ஒன்றைக் கொய்தல்)
4) பகைத்தார் புரம் இடிய செஞ்சிலைக் கால் வளைத்தீர் (7)
- (திரிபுரம் அழிக்க மேருவை வில்லாக்கி
நாணேற்றல்)
5) பன்றிப்பின் ஏசிய மறவனே (6)
-(அர்ச்சுனனுக்குப் பாசுபதமருள பன்றியின்பின்
ஏகுதல்)
6) அருக்கனைப் பல்லிறுத்து (9)
-சூரியனின் பல்லை அறுத்தல்
7) ஆனையைக் கொன்று (9)
-தாருகவன முனிவர்களின் யானையைக் கொல்லல்.
8) காலனைக் கோளிழைத்தீர் (9)
-மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்தல்.
ஆகிய சிவபொருமானின் அட்ட வீரட்ட செயல்களும் இங்கு எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. அகப்பாடலுள் புறச்செய்திகள் கலந்து வருவதிலும் ஓர் அழகு உள்ளது என்பதை இப்பாடல்கள் விளக்குகின்றன.
சிவபெருமானின் திருநாமங்கள்
தில்லைப்பதியில் விளங்கும் பெருமானை அழைத்த சேதிராயர், பொதுவாகவும் அவனது திருநாமங்;களைப் பதிகப் பாடல்களில் தந்துள்ளார்.
மாதோர் கூறன் (6), வண்டார் கொன்றை மார்பன் (6), அறவன் (8),மறவன்(8) ஆகிய பெயர்கள் சேதிராயரால் சிவபெருமானுக்குத் தரப்பெற்ற பெயர்களாகும். இவற்றைத் தலைவி கூறுவதாக சேதிராயர் படைத்துள்ளார்.
இவ்வாறு இப்பதிகம் அகத்துள் புறத்தையும், அகத்துள் பக்தியையும் கலந்து தந்து சிறப்பதாய் உள்ளது. மேலும் இப்பதிகத்தின்வழி இதனை அருளிய சேதிராயர் காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கிச் சிவனிடம் பக்தி செலுத்தும் அன்பர் என்பதும் தௌ¤வாகின்றது.
அவரின் ஓர் அருட்பாடலுடன் இக்கட்டுரை நிறைவு செய்வது பொருத்தமாகும்.
’’அறவனே‘ அன்று பன்றிப் பின்ஏகிய
மறவனே‘ எனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர் எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே’’(பா-9)
நம்பி வந்த வழியில் சேக்கிழார்

முனைவர். மு. பழனியப்பன்.

சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய இரு காப்பியங்களும் தமிழ்மண்ணில், தமிழர் வாழ்வைத், தமிழர்க்குக் கூறுவனவாகத் தமிழரால் படைக்கப்பெற்றவை. இவை தமிழர் வாழ்விற்கும், பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உரைகல்லாக விளங்குவன.
சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம். தமிழின் முதற்காப்பியம்.
புதுமையான இவ்விலக்கியவகையைச் செய்ய முற்பட்டபோது இளங்கோவடிகள், ஒரு திட்டமிடலை தனக்குள் வகுத்துக் கொண்டிருக்கவேண்டும். செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் சிலப்பதிகாரமாக எழுந்துள்ளது. தமிழகத்தின் முப்பகுதிகளையும் களமாக்கிக் கொண்டு, தமிழரின் ஒருங்கிணைப்பாக, தமிழரின் இலக்கியச் செம்மையாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்திற்குக் கூறிய செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் ஆக்கப்படல், தமிழரின் ஒருங்கிணைப்பு, தமிழரின் இலக்கியச் செம்மை ஆகிய அனைத்து கூறுகளும் பெரியபுராணத்திற்குப் பொருந்தும். ஒரு வரியில் சுந்தரர் வடித்ததை, ஒரு பாடலில் நம்பியாண்டார்நம்பி வழி மொழிந்ததை அடிப்படையாகக் கொண்டு, அடியார்தம் வாழ்விடங்களுக்குச் சென்று அவர்கள் பற்றிய வாழ்வைக் கேட்டறிந்துச் சேக்கிழார் செய்துள்ள இக்காப்பியமும் மிகச்சிறந்த திட்டமிடலைத் தன்னுள் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.
சிலப்பதிகாரம் காப்பியத்தலைவர் ஒருவர் குறித்த தனிக்காப்பியம். ஆனால் பெரியபுராணம் ஒருவர் தழுவிய அறுபதிற்கு மேற்பட்டவரை உள்ளடக்கிய காப்பியம். இவ்வேறுபாடு சேக்கிழார் என்னும் படைப்பாளருக்குப் பலவித நெருக்குதல்களைத் தந்திருக்கும். இதன் காரணமாகவே காப்பியத்தலைமை குறித்த கருத்துவேறுபாடுகள் பெரியபுராணத்திற்கு ஏற்பட்டது. ஆனால் சேக்கிழார் தனது திட்டமிட்ட காப்பியப்படைப்புத்திறனாலும், கவிதைநலனாலும் படைப்பாக்கத்தில் தனக்கு நேர்ந்த பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.
தனக்கு முன்னால் நிகழ்ந்த காப்பியப் படைப்பாக்கங்கள், அவற்றின் காப்பியஅமைப்பு, காப்பியமரபு, இராமாயண படைப்பு நிகழ்தல் இவற்றினைக் கருத்தில் கொண்டு, அதே நேரத்தில் தன் பாடுபொருளை ஏற்றத்தாழ்வின்றி பாடவேண்டிய சூழல் சேக்கிழாருக்கு நேர்ந்துள்ளது.
சிலப்பதிகாரத்தின் செவிவழிக்கதையை அரசன் கேட்க, சீத்தலைச்சாத்தன் கேட்க, இளங்கோ கேட்க- உணர்ச்சிமயமாக இருந்தது. அதனால் அப்படைப்பாக்கத்திற்கு உணர்வுமயமான நேரடித்தன்மை உதவியது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒற்றை வரியில் அடையாளம் காட்டப்பெற்ற அடியார்கள், ஒரு பாடலால் அணிசெய்யப் பெற்ற அவர்கள் ஒரு காப்பியப்பகுதியாக மாறவேண்டிய, மாற்றப்படவேண்டிய காப்பிய திட்டமிடல் சேக்கிழாருக்கு வாய்த்தது.
முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றவேண்டும் என்ற நெறி ஒருபுறம், காப்பிய மரபு ஒருபுறம், இரண்டிற்கும் இடையில் அறுபத்துமூவரின் வாழ்வைக் குறைவின்றி வரலாற்று அடிப்படையில் தரவேண்டிய உண்மைத்தன்மை மற்றொரு புறம்- என்ற பல கோணச் சிக்கல்களுக்கு இடையில், ஒருகாப்பியத்தைப் படைத்து- அதனைத் திருமுறைகளில் ஒன்றா¦க, பக்திக்குக் காட்டாகத் தந்துள்ள சேக்கிழார் இதற்காக மிகச் சிறந்த திட்டமிடலைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என்பது உறுதி. அதனை உரசிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொகை, வகை, விரிநூல்
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத்தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம் (பா.எ.146)
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன்(பா.எ.349)
என்பன சேக்கிழாரின் மொழிகள். இவற்றின் மூலம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை அடியொற்றி யாம் காப்பியம் செய்யப் புகுந்தோம் எனச் சேக்கிழார் தௌ¤வாகக் குறிப்பிட்டுவிடுகின்றார். எம்பிரானின் சொந்தங்களான அடியார்கள் வரலாறு சுந்தரரால் சொல்லப்பெற்ற முறையிலேயே என்னால் சொல்லப்பெறுகின்றது எனவும் சேக்கிழார் இப்பாடல்களின்வழி அரிதியிட்டு உரைக்கின்றார்.
ஆனால் சுந்தரரால் குறிப்பிடப்பெறாத செய்திகளைக் கொண்ட பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநகரச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம், நிறைவாக அமைந்துள்ள வெள்ளானைச்சருக்கம், ஆகியன காப்பியத்திற்கு முன்னுரை, முடிவுரைப்பகுதிகளாகச் சேர்க்கப்பெற்றுள்ளன. இவை சேர்க்கப் பெற்றதற்கான காரணங்கள், எடுக்கப் பெற்ற மூலங்கள் எவையென ஆராய வேண்டியுள்ளது.
காப்பிய இலக்கணம் கருதி இவற்றைச் சேக்கிழார் இணைத்துள்ளார் என்பது உறுதி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் முற்ற மொழிவது பெருங்காப்பியம் என்பதால் இங்கு இவை சேர்க்கப் பெற்றுள்ளன என்பது தௌ¤வு. இருப்பினும் சுந்தரர் பாடாத இவற்றை எம்மூலம் கொண்டு, எதன் சான்றாகக் கருதி சேக்கிழார் இணைத்துள்ளார் என்ற வினாவை எழுப்பினால் அதற்குக் கிடைக்கும் விடை திருத்தொண்டர் திருவந்தாதி என்பதாக இருக்கும். பெரியபுராணத்தின் வகை நூலாகக் கருதப்பெறும் இந்நூல் பல வழிகளில் பெரியபுராணக் காப்பியக் கட்டமைப்பிற்கு உதவியுள்ளது. எனவே இவ்விரண்டின் அடிப்படையிலேயே சேக்கிழார், சுந்தரர் சுட்டாத சிலவற்றையும் இணைத்துள்ளார் என்பது உணரப்பெறுகின்றது.
காப்பிய இலக்கணம் கருதியவை
பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, திருநகரச்சிறப்பு முதலானவை காப்பிய இலக்கணமரபு கருதிப் படைக்கப்பெற்றவை. எனினும் அதனுள்ளும் சுந்தரர் சார்புச் செய்திகளே இடம்பெற்றுள்ளன.
திருமலைச்சிறப்பு
இப்பகுதி கயிலை மலையின் பெருமையாக விரிகின்றது. இதனுள் உபமன்னிய முனிவர் தென்திசையில் இருந்து ஒரு ஒளி புறப்பட்டு சிவஉலகம் போவதாகவும், அதுவே நம்பியாரூரர் சிவ இருக்கை சேரும் நிலை என்பதாகவும், அவரால் தென்திசை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இதன்மமூலம் திருமலைச்சிறப்பென்பதும் சுந்தர் சிறப்பெனவே கருதத்தக்கதாக உள்ளது.
திருநாட்டுச்சிறப்பு
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகுஇல் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்த் கூட்டம் நிறைந்துஉறை
குலவு தண்புனல் நாட்டு அணி கூறுவாம் (பா.எ. 50)
எனச் சுந்தரர் பாடிய தொண்டர் கூட்டம் உறையும் சோழநாட்டை நாட்டுச் சிறப்பாகச் சேக்கிழார் பாடியுள்ளார்.
திருநகரச்சிறப்பு
சுந்தரர் பரவையாரை மணந்த இடமும், அடியார் கூட்டம் உறையும் இடமும், திருத்தொண்டத்தொகை பாடிய இடமும் ஆன திருவாரூரைச் சேக்கிழார் திருநகரச் சிறப்பாகக் கண்டுள்ளார்.
இவை காப்பியக் கூறுகள் கருதி பெரியபுராணத்துள் இடம்பெற்றாலும், தொகை நூலான திருத்தொண்டத்தொகை வழி நடக்கும் முறைமை இவற்றுள் உள்ளமை குறிக்கத்தக்கது.
திருத்தொண்டர் திருவந்தாதி வழிப்பட்டவை.
நம்பியாண்டார் நம்பி படைத்த திருத்தொண்டர் திருவந்தாதி- பெரியபுராணத்திற்கு சேக்கிழாரால் வகை நூலாகக் கொள்ளப்பெற்ற சிறப்புடையதாகும். இநநூலிலிருந்துச் சேக்கிழார் காப்பியக் கட்டமைப்பிற்கான பல கூறுகளைப் பெற்றுள்ளார்.
திருத்தொண்டர் திருவந்தாதியில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தாதி வகை மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டு அமைக்கப்பெற வேண்டும். திருத்தொண்டர் திருவந்தாதி குறைவுபட்டுள்ளதே என்று எண்ணினால், நம்பியாண்டார் நம்பி சுந்தரரின் திருத்தொண்டத்தொகை- பதினொரு பாடல்களையும் தம் நூலுக்கு முன்னதாகக் கொண்டு நூறு என்ற எண்ணிக்கையை முழுமைப்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்தால் குறை தேய்ந்து நிறைவு பெறும். இக்குறிப்பு இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்.
சுந்தரர் வாழ்விணைப்பு
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என திருத்தொண்டத் தொகை நேரடியாக அடியார் வணக்கத்தில் தொடங்குகின்றது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியோ
தொண்டத்தொகை வகை பல்க மந்தாதியைச்
சொன்ன மறைக்குல நம்பி பொற்பாதம் துணை தி.தி. பா.எ.1.)
எனத் தொடங்குகின்றது. இப்பாடலில் திருத்தொண்டத்தொகைக்கு வகைநூலான திருத்தொண்டர் திருவந்தாதியைச் செய்த நம்பியாண்டார் நம்பியின் பொற்பாதங்களின் துணை வேண்டப்படுகிறது. அதன்பின் தில்லை வாழ் அந்தணர் பெருமை கூறப் பெற்று நூல் திருத்தொண்டத்தொகை வழி நடக்கின்றது.
தில்லை வாழ் அந்தணர் புராணத்திற்கு முன்னதாக சிலவற்றை இணைத்துக் கொள்ள இப்பாடல் சேக்கிழாருக்குத் துணைபுரிந்துள்ளது. மேலும் திருத்தொண்டத்தொகை, வகை ஆகியன எழுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இவ்விடத்தில் வைத்து அதன்பின் அவை கூறும் அடியார் வாழ்க்கையைக் கூறுவதற்கான முற்கதையைக் கூறிடவும் இப்பாடல் துணையாகியுள்ளது.
தடுத்தாட்கொண்ட புராணம் என்ற பகுதியைச் சேக்கிழார் அமைத்துக்கொண்டு, அதனுள் சுந்தரர் வரலாற்றின் தொடக்கப் பகுதிகளைப் படைத்துள்ளார். தடுத்தாட்கொண்ட புராணம் -திருத்தொண்டத்தொகை பாடுதல் வரையான சுந்தரர் வாழ்வு நிகழ்வுகளை உள்ளடக்கியது என்பது இங்குக் கருதத்தக்கது.
தம்பெருமான் கொடுத்தமொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம்பொருளால் திருத் தொண்டத்தொகையான திருப்பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்
(பா.எ.348)
என்ற பாடல் மேற்கூற்றினுக்குச் சான்றாகும்.
பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் மீண்டும் விரிவு பெறுகின்றன. சுந்தரர் ஏயர்கோனார்க்கும் அடியேன் எனக் குறிப்பிட்டு முடித்துவிட, அதனை விரித்த நம்பியாண்டார் நம்பி திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணி தவிர்ப்பானென்று உடைவாள் உருவி(தி.தி.பா.எ.35) எனப்பாடுகின்றார். இதன்மூலம் ஏயர்கோனுக்குப் பிணி தீர்க்கும் வரலாறு, அதனுடன் தொடர்புபட்ட சுந்தரர் வாழ்வு நிகழ்ச்சிகள் ஆகியன இவ்விடத்தில் காட்டப்பெறுவதற்கு சேக்கிழாருக்குக் களம் கிடைத்தது.
நிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கமும்- நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் நிறைவுப்பாடலை அடியொற்றியதே ஆகும்.
. . . வாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம்
மானவ வாக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்
வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே
(தி.தி.பா.எ.89)
என்ற பாடலின் விரிவே வெள்ளானைச்சருக்கமாகும்.
இவ்வாறு முழுமையான காப்பியமாக பெரியபுராணத்தை அமைத்துக்கொள்ள திருத்தொண்டர் திருவந்தாதி மிகுதியும் சேக்கிழாருக்கு உதவியுள்ளது என்பது தௌ¤வாகின்றது.
சுந்தரர் பெற்றோர்
சுந்தரர்தம் பெற்றோரான இசைஞானியார், சடையனார் ஆகியோர்க்குத் தனித்தனிப்பாடல்களைத் திருத்தொண்டர் திருவந்தாதி அமைத்துள்ளது. அதன்வழிப்பட்டு அவர்களையும் சேக்கிழார் தொண்டர் கூட்டத்துள் அமைத்துக் கொண்டு காப்பியம் செய்துள்ளார். இவர்களுக்குச் சேக்கிழார் ஒவ்வொரு பாடல்களை அமைத்துள்ளமை எண்ணற்குரியது.
சருக்கப் பிரிவினுக்கான அடிப்படை திருத்தொண்டர் திருவந்தாதியின் இறுதியில் திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதற்குறிப்புகள்- மறவாமல் இருப்பதற்காகத் தொகுத்துச் செய்யுள் வடிவில் தரப்பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு.
பணிந்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை, இலைமலிந்த,
அணித்திகழ் மும்மை, திருநின்றா, வம்பறா, வார்கொண்ட சீர்,
இணைத்தநல் பொய்யடிமை, கறைக்கண்டன், கடல் , , , ,
மணித்திகழ் சொற்பத்தர், மன்னிய, சீர்மறை நாவனொடே.
(தி.தி.பா.எ.88)
இதில் இடம்பெற்றுள்ள பாடல் முதற்குறிப்பு அகராதி சேக்கிழாருக்கு, முதற்குறிப்பாக மட்டும் தெரியாமல் அவை சருக்கத்தலைப்புகளாகவும் தெரிந்துள்ளன. சேக்கிழார், சுந்தரர் வழிப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் காட்டியுள்ள அடியார்களை ஒவ்வொரு சருக்கத்தில் அமைத்துக்கொண்டு, சுந்தரர் மொழியையே அதற்குத் தலைப்பாகவும் ஆக்கிக்கொண்டமை அவரின் காப்பியத் திட்டமிடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சுந்தரர் துதிகள்
திருத்தொண்டத்தொகையுள் ளஆருரன் ஆரூரில் அம்மானுக்காளே என ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன்னை உளப்படுத்திப் பாடுகிறார் சுந்தரர். இதன்மமூலம் பதினொரு இடங்களில் சுந்தரர் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பதினொரு வரிகளில் இடம்பெற்றுள்ள சுந்தரர்தம் குறிப்புகளை ஆங்காங்கே விரித்து பதினொரு பாடல்களாக திருத்தொண்டர் திருவந்தாதி வாழ்த்திச் செல்லுகின்றது. இவ்வழியில் விரிவைச் செய்ய வேண்டிய சேக்கிழார் பதினொரு இடங்களில் சுந்தரர் தம் கதையைப் பகுதி பகுதியாகச் சொல்லிச் சென்றிருக்கவேண்டும். இது படிக்கும் வாசகர்க்கு இடையூற்றை ஏற்படுத்தலாம் எனக் கருதி அவ்வவ் இடங்களில் சுந்தரர் துதியாக ஒரு பாடலைச் செய்து அதற்கும் அமைதி கண்டுள்ளார். இதன்மூலம் பெரியபுராணச் சருக்கங்கள் அனைத்தும் (தடுத்தாட்கொண்ட புராணம், வெள்ளாணைச் சருக்கம் நீங்கலாக) சுந்தரர் துதி கொண்டு நிறைவு பெற்றுள்ளன. பெரும்பாலும் காப்பிய உட்பிரிவுகள் கடவுள் வாழ்த்தோடு தொடங்கும். முடிவில் வணக்கங்கள் ஏதுமிராது. ஆனால் பெரியபுராணம் காப்பிய உட்பிரிவின் முடிவில் ஒரு வாழ்த்தோடு முடிவது புதுமையாகும்.
இவ்வாறு சேக்கிழார் தொகை, வகை நூல்களை உளப்படுத்தித் தன் விரி நூலை யாத்துள்ளார். பெரியபுராணத்தைப் பதிப்பிக்க விரும்புவோர் இவையிரண்டிற்கும் முதலிடம் தந்து பின்பு பெரியபுராணத்தைப் பதிப்பித்தால்தான் அப்பதிப்பு முழுமையும், நிறைவும் அடையும். இதனைத் தமிழ்ப்பதிப்பக உலகம் நினைவில் கொள்ளவேண்டும். இவற்றை உள்ளடக்கிய பல பதிப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் குறிக்கத் தக்கது சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பதிப்பு. இனியும் இம்முறை தொடரவேண்டும்.
பேசாநாடகம் பிறந்ததுவே

முனைவர் மு. பழனியப்பன்

1970 ஆம் ஆண்டு பாரதிதாசனாருக்கு, அவரின் பிசிராந்தையார் நாடக நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பெற்றது. கவி ஞரான அவருக்கு கவிதைக்கான பரிசு வழங்கப் பெறாமல், நாடகத்திற்கு ஏன் வழங்கப் பெற்றது என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். பிசிராந்தையார் நாடகம் கவிதை நாடகமாகும். பாரதிதாசனாரின் கவிதை புனைதிறனுக்கும், நாடக ஆற்றலுக்கும் அந்நூல் சான்று பயப்பதால் அவ்விரு திறனுக்காக பாரதிதாசனாருக்கு அப்பரிசினை சாகித்திய அகாடமி வழங்கியுள்ளது என உணரும்போது மேற்கண்ட ஐயம் சற்று விலகலாம்.
இருப்பினும் பாரதிதாசனாரின் கவிதையாற்றல் மக்களிடம் பரவிய அளவிற்கு, நாடகத்திறன் சென்றடையவில்லை. கவிதைகளைப் படைத் த பாரதிதாசனார் அவற்றோடு ஆங்காங்கே நாடகங்களைப் படைப்பதிலும் மிகவும் ஆர்வம் கொண்டு விளங்கியுள்ளார். நல்ல தீர்ப்பு(1944), சௌமியன்(1947), பாரதிதாசன் நாடகங்கள்(1959), பிசிராந்தையார்(1959- தொடக்குதல்), அமைதி, பாண்ழயன் பரிசு திரைப்பட ஆக்கமுயற்சி(1961) எனத்தொடரும் அவரது நாடகப்பணிகள் அவருக்கிருந்த நாடக ஆர்வத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
மேற்கண்ட நாடகப்பட்டியலில் இடம்பெறும் நாடகங்களிலிருந்து அமைதி என்ற நாடகம் முற்றிலும் மாறுபட்டப் புதுமை உடையதாக உள்ளது. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைத்தும் வசனம் பேசாப் பாத்திரங்களாகச் செயலாற்றும் செயல் வீரர்களாகப் படைக்கப் பெற்றுள்ளன. பாரதிதாசனார் இந்நாடகம் குறித்துப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். ??அமைதி என்னும் இச்சிறு நாடகம், நாடகஉறுப்பினர்- நடிகர் எவருக்கும் பேச்சில்லாது நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது... இந்நாடகம் எம்மொழியாராலும் நடத்துவிக்க முடியும், கருத்துக்களும் உலகப்பொதுவானவை.?? என்ற அவரின் கருத்துப்படி இந்நாடகம் இயக்கும் நிலையிலும், கருத்தமைவு நிலையிலும் உலகப் பொதுமை பெற்றே விளங்குகின்றது. மொழி என்ற வட்டத்தைக் கடந்து, உணர்வுகளால் இந்நாடகம் நடைபெறுவதால், அனைத்து மொழியினராலும் உணரத்தக்க வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்நாடகம் நகைச்சுவையுணர்வுடையதாகவும், பொதுவுடைமைக் கருத்துக்களை முன்வைப்பதாகவும், புரட்சி எண்ணங்களை மௌனத்தால் செயல்படுத்துவதாகவும் அமைந்துவிளங்குகின்றது. இவ்வகைச் சிறப்புகளுடன் கதையமைப்பிலும் உயர்ந்து நிற்பதால் பழப்போருக்கு புதுவகை இன்பத்தினைப் பயப்பதாக உள்ளது.
பிண ஊர்வலத்தில் தொடங்கும் இந்நாடகம், கதைநாயகன் பிணமாகும் முடிவினைக் கொண்டுள்ளது. இத னால் நாடகத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அமைதிக்கான பின்புலம் இயல்பாக அமைய வாய்ப்புண்டாகிவிடுகின்றது. முதற்காட்சி -ஆர்பாட்டம், ஆடுதல், பாடுதல் இல்லா பிண ஊர்வலமாக நகர்வதால் நாடகம் அமைதி கொண்டதாய் தொடங்கிவிடுகின்றது. அதனை எதிர்பார்க்கும் வாசகரையும் அது அமைதிப்படுத்தி தனது அமைதிச் சூழலுக்கு கொண்டு வந்துவிடுகின்றது. மேலும் ??நிலையாமை உடைய உலகில் எதுவும் நிலையானதல்ல. அனைத்தும் மாறக் கூடியன,, பொருளை வறியவர்க்கு வழங்காது சேர்த்து வைப்பதால், சுயநலங்கொண்டே வாழ்வதால் பயனொன்றும் இல்லை,, பொதுநலத்திற்கு வாழ்தல் நன்று,, அதனால் வரும் புகழ் மட்டுமே நிலையானது?? என்ற தத்துவ நிலைக்கு பார்வையாளரைக் கொண்டுவருவதற்காகவும் இந்நாடகம் இறப்பு ஊர்வலத்தில் தொடங்கி, இறப்பிலேயே முடிவதாக பாரதிதாசனாரால் அமைக்கப் பெற்றிருக்கவேண்டும்.
மண்ணாங்கட்டியின் பயணம்
மண்ணாங்கட்டியின் பயணமாக நாடகம் அமைகின்றது. தனக்கென மனைவி, மக்கள், குடும்பம் ஏற்படா நிலையில், தன்தாயை இழந்த அவன் ஊரார் உதவியுடன் அவளுக்கு இறுதிக்கடன் செய்கின்றான். அதன்பின் அவ்வீட்டில் தனிமையில் இருக்கப் பிடிக்காது, சில துணிமணிகளுடன், காசுகளுடன் புறப்பட்டு விடுகின்றான்.
தங்குவதற்கு நல்ல வீடில்லா ஓர் ஏழைக்குத் தான் இருந்த வீட்டைக், கடிதம் மூலம் தந்து உதவுகின்றான். சேலை இல்லாக் கிழவியொருத்திக்குத் தன் அம்மாவின் ப?டுச் சேலையைத் தந்து காக்கின்றான். பிள்ளையில்லா குடும்பத்திற்குத் தெருவில் வீசப்பட்ட, அனாதையாக்கப் பெற்ற ஒரு குழந்தையைத் தக்க முறையில் மறைமுகமாகத் தந்து இவன் குழந்தையையும் வாழவைக்கின்றான், குழந்தையற்ற குடும்பத்தையும் மகிழ்வு கொள்ளவைக்கின்றான். உணவில்லா ஏழைகளுக்குக் கோயில் மடப்பள்ளி உணவைப் பகிர்ந்தளிக்கின்றான். இரவில் ஒரு வீட்டிற்குத் திருட வந்த திருடர்களைத் தடுத்து அவ்வீட்டின் பொருட்கள் களவு போகாவண்ணம் காக்கின்றான். மற்றொரு ஊரில் பணத்தைக் குவித்து வைத்துள்ள பண்ணையார் இருவரின் சொத்துக்களுக்கு சேதமூட்டி அதனைச் செப்பமிடச் செய்வதன் மூலம் ஏழைகளுக்கு வாழ்வையும், வேலையையும் பெற்றுத் தருகிறான். பொன், மண், பெண், பதவி போன்ற எவ்வித ஆசைகளும் இல்லா மனிதனாய், மற்றவர்க்கு உதவும் தயாள குணம் மிக்கவனாக இவன் விளங்குகின்றான். பாரதிதாசனார் கண்ட புரட்சிமனிதன் இவனெனக் கொள்வது தகும். இறுதியில் சேதமுண்டாக்கிய நிலையில் காரணமானவன் தானே என்பதைத் ஒப்புக்கொண்டு அதற்கான தண்டனையாகத் தன் உயிரை இழப்¤பவனாக இவன் படைக்கப் பெற்றுள்ளான்.
சிறுகதையல்ல- நாடகம்.
மேற்சொன்ன நாடகக் கதையைச் சிறுகதையமைப்பில் சொல்லியிருப்பினும், சிறுகதையாக அதனை அமைக்காது நாடகமாகப் பாரதிதாசனார் படைத்துள்ளார். வரிக்குவரி பாத்திரச் செயல்முறைகளைக் கூறுவதாலும், பயணக்கதை என்பதால் காட்சிகளை அடிக்கடி மாற்றியமைப்பதாலும் நாடகமாக இதனை அவரால் படைக்க முடிந்துள்ளது.
எடுத்துக்காட்டிற்கு இரண்டாம் காட்சியின் தொடக்கப் பகுதியைச் சுட்டலாம். ??பிணத்தோடு சென்றவர்கள், மண்ணாங்கட்டி உள்ள வீடு நோக்கி வருகிறார்கள். மண்ணாங்கட்டி தன் வீட்டுக் குறட்டில் நின்று கைகூப்ப, பிணத்தோடு சென்று மீண்ட அனைவரும் கை கூப்பிச் செல்லுகின்றனர்.?? என்ற காட்சி வருணனை- பாத்திரங்களின் செயல்பாடுகளை உரைத்து, படக்காட்சி போல நடிப்பவரைச் சுட்டி நிற்பதால் நாடகத்தன்மை பெற்றுவிடுகின்றது. இவ்வமைப்பிலேயே பாரதிதாசனார் இந்நாடகத்தினை நகர்த்திச் சென்றுள்ளார்.
நகைச்சுவை நலம்
பதினாறு பிரிவுகளைக் கொண்ட இந்நாடகம் ஆங்காங்கே நகைச்சுவைப் பண்பினையும் கொண்டு விளங்குகின்றது. இரவுப் பொழுதில் ஒரு வீட்ழல் திருட, திருடர்கள் இருவர் திட்டமிடுகின்றனர். ஒருவன் வீட்டின் வெளியில் நின்று கொள்ள, மற்றொருவன் உள்புகுந்து திருடத் தொடங்குகின்றான். அவ்வீட்டிலுள்ள இரண்டு சன்னல்களின் கம்பிகளையும் வளைத்து, அவர்கள் திருடத் தொடங்குகிறார்கள். உள்ளிருப்பவன் பாத்திர, பண்டங்களை எடுத்துத் தர மற்றவன் வாங்கி வெளியே வைத்துவிடுவது, பின் கொண்டு செல்வது என்பது அவர்களின் ஏற்பாடு. அத்திட்டம் நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது. அந்நேரத்தில் வெளியில் இருப்பவனை, மண்ணாங்கட்டி தன்னை வெளிப்படுத்திக் காடடி அச்சமூட்ட அவன் நடுங்குகின்றான். நழுவிச் செல்லும் அவன்மீது சிறுகல்லை எறிந்து, அவனை மண்ணாங்கட்டி ஓடச் செய்து விடுகின்றான். இதைப் படிக்கும்போதே வாசகர்கள் சிரிக்கும் சூழலுக்கு வந்து விடுகின்றனர். இதன்பின் உள்ளிருப்பவன் பொருள்களை எடுத்துத் தர, வெளியே மண்ணாங்கட்டி வாங்கிக் கொண்டு மற்றொரு சன்னல் வழியாக அதனை உள்வைக்க, திருட்டு தடுக்கப் பெறுகின்றது. கடைசியாக உள்ளிருப்பவன் சோறு, குழம்பு தர, அதை வாங்கிய மண்ணாங்கட்டி சன்னல்
மீதே வைத்துவிட்டு மரமேறிக் கொண்டுவிடுகின்றான். உள்ளிருப்பவன் மெதுவாக வெளியேறி வந்து, தன் துணைவனை அங்குமிங்கும் தேடுகின்றான். காணாது கலக்கமுறும் வேளையில் ஒருகல் அவன் முன் வந்து விழுகின்றது. மற்றொருகல் அவன்மேல் விழுகின்றது. அவன் சோற்றையும், குழம்பையும் அள்ளிக்கொண்டு ஓடுகின்றான். இந்தக்காட்சி நகையுணர்வின் உச்சமாக பாரதிதாசனாரால் அமைக்கப் பெற்றுள்ளது. இக்காட்சித் தொடரை நகையுணர்வுடன், மிக சாமர்த்தியமாக, காரணகாரியத் தொடர்பு குன்றாமல் பாரதிதாசனார் படைத்துள்ளமை எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும்.

புரட்சிக்கருத்துக்கள்.
இந்நாடகத்தில் நகையுணர்வுக்கு அடுத்து புரட்சிக் கருத்துக்களின் வெளிப்பாடு சிறப்பிடம் பெறுவதாக உள்ளது. பெருமாள் கோவில் ஒன்றின் மடைப்பள்ளியில் தயாரிக்கப்பெறும் பண்டங்கள், ஏழைமக்களுக்குச் சென்று சேராது, உண்டு பெருப்பவர்க்குச் சென்றடைகின்றது. இதனைக் கண்ட மண்ணாங்கட்டி, அவ்வுணவைத் தந்திரமாகத் தான் பெற்று உண்டு, ஏழைகளுக்கும் ஈந்தளிக்கின்றான். கடவுள் மறுப்புக் கொள்கையுடையவரான பாரதிதாசனார், கோயில் உணவு ஏழைகளுக்குச் சென்று சேருமானால் அதன் நலம் ஏற்கத்தக்கதே எனக் கருதியுள்ளமை இக்காட்சி மூலம் தெரியவருகின்றது.
மற்றொரு காட்சி மூலம் மண்ணாங்கட்டி பணம் படைத்த பண்ணையாரின் கொழுத்த செல்வத்தை ஏழை மக்களும் பெற்றிட அமைதி வழியில் புரட்சி செய்கின்றான். அவன் ஏழைகளுக்கு எதுவும் தராத பெரிய பண்ணையாருக்குப் பாடம் புகட்ட ஊர் ஏரி யைப் பலர் உதவியுடன் உடைக்கின்றான். ஏரி நீர் புகுந்து, தன்வீட்டை நோக்கி அழிக்க வரும் சூழலில் அதனைச் செப்பனிட பெரிய பண்ணையார் ஊர்மக்களின் உதவியை நாடுகின்றார். இதன்மூலம் ஏழைகள் பிழைத்திட வN கிடைக்கின்றது.
இவ்வேலை முழயும் தருணத்தில் சின்னப் பண்ணையாரின் மாளிகைக்குப் பெரிய பண்ணையார் தீயிட்டு விடுகின்றார். பெரிய பண்ணையாரின் மனைவியைச் சின்னப் பண்ணையார் மோகிக்கும் மோக நாடகம் வெளிப்பட்டுவிடுவதால் இவ்வேற்பாட்டினைப் பெரிய பண்ணையார் செய்து விடுகின்றார். தீயினால் ஏற்பட்ட பேரழிவைப் போக்கிட மீண்டும் ஊர் மக்கள் உதவி நாடப் பெறுகின்றது. இதன்மூலம் மீண்டும் அவ்வேழைகள் வேலை பெறுகின்றனர்.
அதன்பின் இரு பண்ணையார்களுக்கும் இடையிலான பகை வளருகின்றது. பெரிய பண்ணையார் ஏரியை உடைத்தப் பலரைத் தாக்க முயலுகின்றார். அந்நேரத்தில் தானே அச்செயலுக்குக் காரணம் என மண்ணாங்கட்டி குறிப்பு எழுதித் தர அவனை அரசின் காவலர்கள் அடித்துத் துன்புறுத்துகின்றனர். அவன் மீளா வாழ்வெய்துகின்றான். ??ஏழைகள் வா?வில் சமத்துவம் கண்ட அம்மாவீரன் சாதாரண மண்ணாங்கட்டி அல்ல, அவன் பொன்கட்டி. தன்னை உருக்கி, மற்றவர்க்கு அணியாக்கியவன் அவன்.?? என்று அவன்வாழ்வை நாடக இறுதியில் எடுத்துரைக்கின்றார் பாரதிதாசனார்.
அமைதி என்ற தலைப்புக்கேற்ப அமைதியுடன் புரட்சிபுரியும் தீரனாக மண்ணாங்கட்டி இதில் படைக்கப் பெற்றுள்ளான். தன்வாழ்வு மடிந்தாலும் பிறர் வா?வு எழத் தன்னை அவன் உரமாக்கிக் கொண்டுள்ளான். இந்நாடகத்தினைத் திட்டமிட்டு படைத்ததன் மூலம் பாரதிதாசனார் தமி?நாடக உலகில் அழியா இடம் பெறுகின்றார். இவரது நாடக ஆற்றலின் முழுமையை உணரும் போது, சாகித்திய அகாதமி இவரது கவி, நாடக படைப்பாற்றலுக்கு இணைத்துப் பரிசை வழங்கியிருப்பதன் நோக்கம் புலனாகின்றது.
பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்

முனைவர். மு. பழனியப்பன்.

பாவேந்தர் பாரதிதாசன் இசைத்தமிழ்த் தொகுப்புக்களை அவ்வப்போது படைத்துத் தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார். இசையமுது, இளைஞர் இலக்கியம், தேனருவி முதலான படைப்புக்கள் அவரின் தமிழிசைக் கொடைகள் ஆகும்.
தமிழிசை கருதி படைக்கப்பெற்ற பாடல்தொகுப்புக்களுள் ஒன்றான தேனருவி 1956 ஆம் ஆண்டு வெளிவந்தாகும். இக்காலகட்டம் தமிழ் நாட்டின் மிக முக்கியமான காலகட்டமாகும். 1953 ல் மொழிவாரி மாநில அமைப்பில் தெலுங்கு தேசம் உருவானது. இதன்பின் கர்நாடகம், கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் உருவாகத் தொடங்கின. மேலும் திருவிதாங்கூர் பகுதியின் பிடியில் இருந்த சில பகுதிகள் இணைந்து தமிழகத்தின் குமரி மாவட்டம் ஆயின. இச்சூழலில் 1956 ஆம் ஆண்டு இப்போதைய எல்லையுடைய தமிழகம் உருவாக்கப்பட்டது.
மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்தபின், அம்மாநில மக்களுக்கே மாநில உரிமைகள் அனைத்தும் உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. தமிழகத்திலிருந்து பிரிந்தது தெலுங்குதேசம் என்பதால் அம்மாநில மொழியான தெலுங்கு தமிழகத்தில் இசையில் ஏற்றம் பெற்றிருப்பதை பலரும் மறுத்து தமிழிசையை முன்னேற்றத் தலைப்பட்டனர். பாவேந்தரும் தமிழிசைக்காகத் தமிழன்னையிடம் விண்ணப்பம் செய்கின்றார்.
“புகன்றிடும் எனக்கும் கேட்கும் தமிழர்க்கும்
புரியாத் தெலுங்கில் நான் பாடுதல் வேண்டுமாம்
தகுந்தமிழ்¤; தன்னிலோர் தமிழ்மகன் தமிழில்
தமிழ்நாடில் பாடுவதை மறந்திட வேண்டுமாம்
விண்ணப்பம் கேள்; என் தமிழிசையே- தாயே!
விண்ணப்பம் கேள்” (பக். 3)
இப்பாடலடிகளில் தமிழ்நாட்டில் தமிழிசையைக் கொணரும் முயற்சி சுடடிக்காட்டப் பெற்றுள்ளது. இதே காலச்சூழலில், தஞ்சைப் பண்டிதர் மு. ஆபிரகாம், மதுரை நாதசுரமேதை பொன்னுச்சாமிப்பிள்ளை, விபுலானந்தர், இசையணிகலம். எஸ். இராமநாதர், கு. கோதண்டபாணியார் முதலானோர் தமிழிசையை ஆய்ந்து முன்னேற்ற உதவினர். பாவாணரும் தமிழிசைக்கு ஊக்கமூட்டினார். அவர் கர்நாடக இசையைத் தமிழிசையே என மொழிந்தார்.
"கூவும் இனிய குயிலே
குமரிநிலத் தென்னிசையே
மேவு கருநாடகமாய்
மிளிர்கின்றதெனக் கூவா"
(பாவாணர். இசைத்தமிழ்க் கலம்பகம். ப.61)
என்பது பாவாணரின் இசைப்பாடல். இவ்வாறு தமிழிசை காக்கப்படவேண்டிய சூழலில் பாவேந்தர் தேனருவி தொகுப்பைப் படைத்துள்ளார்.
இத்தொகுப்பில் குடும்பப்பெண்களின் துயரம், துயருற்ற மகளிர் என்ற தலைப்பில் சுட்டப்பெற்றுள்ளது. ’’இக்காலம் மகளிரின் எழுச்சிக்காலமாகவும் விளங்கியது. பெண்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் எழுந்தன. கல்வியின் விரிவாக்கமும், சமூக விழிப்பின் விளைவும் மகளிர் நிலையில் மாற்றம் எழத் தூண்டின. மகளிர் கல்விப் பயனைப் பெறும்நிலை சிறிது சிறிதாக விரிவடைந்தது. ஆசிரியைப்பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றிற்குச் செல்வோரின் எண்ணிக்கை பெருகியது. வெளித்தொடர்பும் விரிவடைந்ததுப் பொது வாழ்விலும் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன’’(தமிழக வரலாறும் பண்பாடும். ப. 575) என பாரதிதாசன் வாழ்ந்த காலப் பெண்கள் நிலையை செல்லம் எடுத்துக்காட்டுகின்றார். இக்கருத்தின் அடிப்படையில் பெண்களின் விழிப்புணர்வு காலமாகவும் 1950 காலப்பகுதி விளங்கியுள்ளது என்பது தெரியவருகின்றது. இவ்வாறு விழிப்புணர்வு கொண்ட பெண்கள் கூட்டம் ஒருபுறம் உருவானபோதும் பெண்களின் குடும்பத்துயரங்கள் குறைந்தபாடில்லை. பெண்களின் குடும்பத் துயரங்களை அவர்களாக வெளியிடவும் முயற்சித்தனர். ஆண்படைப்பாளர்கள் சிலரும் தம் படைப்புக்களில் குடும்பப் பெண்களின் துயரத்தை வெளியிட முயற்சித்தனர். அவ்வகையில் பாவேந்தரும் தேனருவி தொகுதியில் பெண்களின் துயரத்தைப் பாடல்கள் வடிவில் பதிவு செய்துள்ளார்.
மேற்சொன்னவற்றால் தேனருவி தொகுப்பு-பெண்ணுரிமை, தமிழின் இசை இனிமை கருதி பாடப்பட்டுள்ளது என்பது தௌ¤வாகின்றது. இதனால் தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் இத்தொகுப்பு பெறும் இடம் சிறப்பிற்குரியதாகின்றது.
பெண்களின் துயரம்.
குடும்பப் பெண்கள், பல துயரங்களை எதிர்கொள்ளுகின்றனர். அவற்றைக் காணும் படைப்பாள உள்ளங்கள் அவர்களுக்காக குரல்தருகின்றன. அத்தை ஒருத்தியிடம் மருமகள் படும்பாட்டை பாவேந்தர் பின்வருமாறு விவரிக்கின்றார்.
’’குற்றம் ஒன்றுமே செய்யாதபோதும்
கூந்தலைப்பற்றி இழுத்தார்- அத்தை
குப்புறத் தள்ளி மிதித்தார்.
முத்தம் கொடுக்க அத்தான் எனைத்தாவும்
முகத்திற் புண்கண்டு துடிக்கும்- அத்தை
அடித்தார் என்றால் என்ன நடக்கும்’’ (ப. 21)
என மருமகள் படும்பாடு பாவேந்தர் கைவண்ணத்தில் துயர்தரும் இசைப்பாடலாக வெளிப்பட்டுள்ளது. இப்பாடலில் மகனின் செயலற்ற போக்கும், மருமகளின் அவலநிலையும், அத்தையின் அடாதசெயலும் கண்முன் கவிதையாய் விரிகின்றன. கணவன் இருக்கும் சூழலிலே மனைவி படும் துயரம் இதுவென்றால், கணவன் இழந்த கைம்பெண்ணின் நிலை யாது என எண்ணிப்பார்க்கத் துயரம் கூடும். அவற்றையும் பாவேந்தர் இசைத்தமிழில் பாடுகின்றார்.
’’ஆடாத அரங்கானேன்
அன்பினில்லை என்பதனால்
சூடாத மலரானேன்.
தமிழற்ற நாடானேன்
தலையற்ற உடலானேன்.
கமழ்வற்ற பொழிலானேன்
காதலன் இல்லாததினால்
சூடாத மலரானேன்.’‘(ப.20)
என்ற பாடலிலும்,
’’காதலர்க்கு நான் வேம்பானேன்
காண அஞ்சுமோர் பாம்பானேன்- நான்
தீதுசிறிதும் செய்தறியேன் இன்று
தீராப்பழியை நான் சுமந்தேன்
அன்பு வாழ்வை மறந்தாரே-
அறத்தின் மேன்மை இகழ்ந்தாரே- இந்தத்
துன்ப வாழ்க்கை எனக்கேனோ-
என் துணைவரை இனி அடைவேனோ’’(ப.20)
என்ற பாடலிலும்
’’மீளா விடைபெற்று
விட்டு மறைந்தீரோ அத்தானே
ஆளான நாள் முதல்
அன்பு மறவாத அத்தானே
தோளோடு நீங்காத
தோளும் பிரிந்ததோ அத்தானே’’ (ப.21)
என்ற பாடலிலும் கணவனை இழந்த மனைவியின் ஓலத்தைக் கேட்கலாம். இப்பாடல்கள் ஒப்பாரியின் சாயலைப்பெற்றுத் தமிழிசையின் வருத்த மெட்டுபாட்டிகு உரியாதாகின்றன.
கணவனை இழந்தப் பெண்களின் அவலநிலையின் உச்சப்பகுதியாக மற்றொருபாடல் அமைகிறது. கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தியை அடைய ஒரு கயவன் முயல்கின்றான். அவனிடம்...
‘‘ஆளில்லாத வேளையில் வந்தீர்
அடுக்காத சொல் அடுக்கு கின்றீர்
தாளமுடியுமா சொல்வீர் நீவிர்
சற்றே வெளியில் செல்வீர் செல்வீர்
ஆளில்லாத. . . . . .
... ... ...
சமயம் சாய்ந்தன சாதி மறைந்தன
சாயா மடமைகள் சாய்ந்தன ஆயினும்
அமையும் மாதர்க்குத் தொல்லை கொடுத்திடும்
ஆடவர் மட்டும் ஒழிய வில்லையே
ஆளில்லாத. . . . . . (ப.22)
என ஒரு பெண் முறைகேட்கிறாள்.
இவளின் நிலைகண்டு பதறிய பாவேந்தர், அடுத்த அடிகளில் அவளுக்கு ஒரு தீர்வைச் சுட்டுகின்றார்.
’’தமி பெண்களின் படை ஒன்று வேண்டும்
தக்கைகள் உள்ளத்தைத் திருத்த வேண்டும்
உமியல்ல மாதர் வலக்கை -தீயர்
உயிரை இடிக்கும் உலக்கை- ஐயா
ஆளில்லாத. . . . . .
(மேலது)
என்ற இத்தீர்வு பெண்களுக்குத் தைரியம் ஊட்டுவதாக உள்ளது. வலக்கை, உலக்கை என அடுக்குமொழியால் பெண்களின் அவலத்திற்கு நல்ல தீர்வைப் பாவேந்தர் முன்வைக்கின்றார். தமிழ்ப்பெண்களின் படை உருவாக்கப் பாடிய பாவேந்தரின் திறம் இற்றைக்கும் தேவையானது.
விதவைப்பெண்கள் விதவைகளாய் இருப்பதால் தானே இத்துயரம் என எண்ணிய பாவேந்தர், அவர்களுககு மறுமணம் நடக்கக் கருத்துரு தருகின்றார்.
’’மறுமணம் புரிவதால் வராதொரு கேடும்
மறுமணமிலாத பெண் கெடுவதும் கூடும்
குறைபாட்டைத் திரைபோட்டு மறைத்திட வேண்டாம்
கூறினேன் நீ இதை எண்ணிட வேண்டும்’’ (ப. 23)
என்ற அவரின் உதவி மொழிகள் பெண்களுக்கு உதவி புரிவன.
இதன்மூலம் தேனருவி தொகுதி, தமிழிசை மேன்மைக்காக, தக்க சூழலில் பாடப்பட்டுள்ளது என்பது தெரியவருகின்றது. மேலும் தமிழிசையின் வருத்த மெய்ப்பாட்டிற்கு இலக்கியம் தர, பெண்களின் வருத்தங்களை முன்வைத்து, துயருற்ற பெண்கள் என்ற பகுதியைப் பாவேந்தர் பாடியுள்ளார் என்பது தௌ¤வு.
தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள்

முனைவர். மு.பழனியப்பன்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, ?? இன்று போய் போர்க்கு நாளை வா?? என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்,??எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75)?? அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது,

Ordnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு ??பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் ?? என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி, இந்த ஆங்கிலச் சொல்லிற்கே ?போர்படைக்கருவிகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கு இப்பெயர் உரியது? என்று ஒரு மின்கலைக்களஞ்சியம் பொருள் தருகின்றது, இவற்றின் அடிப்படையில் படைக்கலச் சாலையரங்கம் அல்லது போர்க்கருவிகளின் தொகுப்பை -இச்சொல் குறிப்பதாகக் கொள்ளமுடிகின்றது, இவ்வகையில் தமிழர்த ம் போர்க்கருவித் தொகுப்பைப் பற்றி எடுத்துரைப்பதாகவும் தமிழர்தம் போர் அறிவியலை வெளியிடுவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது, இதன்மூலம் இன்றைக்கு வளர்ந்துள்ள போர் குறித்த அறிவியல் செய்திகளின் சிந்தனைகள் செயற்பாடுகள் பண்டைக்காலத்திலேயே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது என்பதை நிறுவ இயலும்,

தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,

மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்
?மன்னன் வழித்தே மலர்தலை உலகம்? என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்வியூகம், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்,

??படையும் கொடியும் குடையும் முரசும், நடைநவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய?? (தொல்காப்பியம், பொருளதிகாரம் 616) என்ற நூற்பாவின்வழி மன்னர்க்குரிய புறவடையாளங்கள் பெறப்படுகின்றன, இவற்றுள் படை முன்னணியில் முதலாவதாக உள்ளது, அதனுடன் களிறு, தேர், நடைநவில்புரவி ஆகியன இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது, கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும், இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க்கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும்,

எனவே நாற்படை உடைய அரசன் அடப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்கவேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது,

இந்நால்வகைப் படைகளை மன்னர்கள் பெற்றிருந்தமையைச் சங்க இலக்கியக் குறிப்புகளும் காட்டுகின்றன, நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று (புறநானூறு, 72), வினை நவின்ற பேர்யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலிகுரூஉத்துள் அகல்வானத்து வெயில் கரப்பவும் வாம்கரிய கருந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள்மிகு மறமைந்தர்தோள் முறையான் வீறுமுற்றதாம் (மதுரைக்காஞ்சி 47-54) என்பன மன்னன் நால்வகைப் படையைப் பெற்றிருந்தமையைக் காட்டும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்,

மன்னர் பின்னோர்
மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் ??வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய ??(தொல், பொரு, மரபி, 628) என்ற நூற்பாவின்படி வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிய, வாழ இலக்கணம் பெற்றுள்ளனர், நூற்பாவை கூர்ந்து நோக்கினால் தேர், குதிரை ஏறிப் போர் புரியும் ஏனோர் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர் என்பது தெரியக் கிடைக்கும்,

இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன, அவை பின்வருமாறு,

தமிழரின் முப்போர்க்கருவிகள்
தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும், ??வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள்??(கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176) என்ற குறிப்பும் இக்கருத்தினை அரண் செய்யும்,

இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததி¤லும், சங்கஇலக்கியங்களிலும், அவற்றைத் தொடர்ந்த இலக்கியங்களிலும் காணப்படுகின்றன,

இம்முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன, ?? அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ?? ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்,

மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க ??கரடித்தோலாற் செய்யப்பட்ட?? , ??புலித்தோலாற் செய்யப்பட்ட ?? கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176),

வாள்
தொல்காப்பியத்தில் ?வாளோர் ஆடும் அமலை?(தும்பைத்திணை), ?ஒள்வாள் வீசிய நூழில்?(தும்பைத்திணை), ?வாள்மங்கலம்? (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது, ??போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே??(புறநானூறு 97), ??ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே??(புறநானூறு 312), என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும்,

வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப்பாடல்வழி புலனாகின்றது, ?? கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே??((புறநானூறு 63) என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாவதாகும்,

வேல்
வேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளான், புறம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில் ??பெரும்பகை தாங்கும் வேலினானும்?? என்று வேல் குறிக்கப்பட்டுள்ளது,

ஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும்போது ?கையது வேலே,, காலன புனைகழல்?? (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், ?பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து? (புறநானூறு 99), ?நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் ? (புறநானூறு 302), ?பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து? (புறநானூறு 274), ?திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர?¤(புறநானூறு 88), ?சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென? (புறநானூறு 63)? முதலான குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது,

சிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலால் தெரியவருகிறது,??இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி??(புறநானூறு 279) என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு கருதத்தக்கது,

வில்
வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர், ??கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்?? (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, ??வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9)?? முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன,

இவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது, ??மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது?? (புறநானூறு 98) என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தௌ§வுபடுத்துகிறது,

படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்
சங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர், ??வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே?? (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, ??இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே??(புறநானூறு- 309) என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்,

??இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம்கோமான்,வைந்நுதி
வேலே.??(புறநானூறு, 95)
என்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் காட்டுகிறார்,

தொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது,

பின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன,

இப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் உள்ளது என்ற புகழ்க்குறிப்பு காணப்படுகிறது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர் என்பது தௌ§வாகிறது,

படைவீடு
போரில் வெற்றிபெற்றபின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர், அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க்கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும், முல்லைப்பாட்டில் அப்படி ஒரு படை வீடு அமைக்கப் பெற்றிருந்தது, கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக (முல்லைப் பாட்டு 37-42) என்ற முல்லைப்பாட்டின் பாடலடிகளில் பயன்படா நிலை எய்திய போர்க்கருவிகள் மாற்றுவழியில் தங்கும் பாடிவீட்டின் சுவர்களாக மாற்றப்பட்டுள்ளமை குறிக்கப்பட்டுள்ளது, உடைந்த போர்க்கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றமை மேற்காண் வரிகாளல் தெரிய வருகிறது,

சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன, வில் ஏர் உழவர் பகைகொளினும்(குறள் 872), பிழைத்த வேல் ஏந்தல் இனிது(கு,772) (மேலும் வேல் பற்றிய குறட்பாக்களின் எண்கள், 113,774,775,772,546,550), வாள் ஆண்மை (கு, 614), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்(கு828), தெரிகணை எஃகம்(களவழி 5) என்றவாறு வில் வாள் வேல் ஆகிய படைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்குத் தக்க சான்றுகள் உள்ளன,

குறளில் காட்டப்பெறும் ?தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்?? என்ற தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும், சங்க காலத்தில் நிலவிய போர்த்தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது,

காப்பிய காலத்தில் ?? வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து??(சிலம்பு 5,89) என்று சிலப்பதிகாரத்துள்ளும் வாள் என்ற போர்க் கருவி சொல்லாட்சி பெற்றுள்ளது,

??ஒளிறுவாள் மறவரும், தேரும் மாவும் களிறும் சூழ் தர?? (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது, மேலும் இந்நூலில் ??அம்பு ஏவுறு மஞ்சை, ஆவக்கணைக்கால் காணாயோ அம்புப்புட்டில் (துயிலெழுப்பிய காதை64), காய்வேல் வென்ற கருங்கயல்(உதய குமாரன் அம்பலம் புக்க காதை) என உவமைகள் வாயிலாகவும் இயல்பாகவும் போர்க் கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன,(மன்மதனைக் குறிக்க பல இலக்கியங்களில் வில் பயன்படுத்தப் பட்டுள்ளது)

காப்பியகாலத்தின் பிற்காலத் தொடர்வாகத் தொடர்ந்த கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, இராமாயணத்தில் கம்பர் அம்புகளின் பல்திறன்களை எடுத்துரைக்கிறார், அம்புகளின் வகைகள், அவற்றின் இயல்புகள் குறித்த பல செய்திகள் கம்பரின் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன,

அதே நேரத்தில் இப்போக்கிலிருந்து வில்லி பாரதம் சற்று வேறுபட்டு படைக்கருவிகளின் வியூகங்கள், படைக் குழுக்களின் வியூகங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தருகின்றது,

வில், அம்பு, அம்புப்புட்டில் ஆகியவை அடங்கிய இக்கூட்டுக்கருவி தமிழர் போர்வாழ்வில் பெருத்த வளர்ச்சி அடைந்துள்ளமையை மேற்கண்ட இருகாப்பியங்கள் வழியாக அறிய முடிகின்றது,

கம்பராமாயணத்தில் இடம்பெறும் ?வேலோடு வாள் வில் பயிற்றலின்? (பாலகாண்டம் நகரப்படலம் 12) என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிடுவதாக உள்ளது, மேலும் ?சங்கரன் கொடுத்த வாளும்?, ?அங்கதன் உடைவாள் ஏந்த? ஆகிய கம்பராமாயணப் பாடல்தொடர்கள் வாள் பயன்பாட்டிற்கான அகச்சான்றுகளாகும்,

இவை தவிர வேறு கருவிகளையும் கம்பராமாயண காலத்தில் தமிழர் பயன்படுத்தியுள்ளனர். ??தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால்?? (கும்பகர்ணன் வதைப்படலம் 105) என்ற போர்ப்படை வரிசை காட்டும் பாடலின் மூலம் தமிழர் பயன் படுத்திய பல போர்க்கருவிகள் அறியக் கிடைக்கின்றன,

இராவணன் மூலபலம் என்ற தனது மிக வலிமை வாய்ந்த படைக் குழுமத்தை வைத்திருந்த குறிப்பு ஒரு பாடலில் காட்டப்படுகிறது, ??சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார்.?? (மூலபல வதைப்படலம்,11) இப்பாடலில் மூலபல படைகள் வைத்திருந்த போர்க்கருவிகள் தரப்பெறுகின்றன,

இவைதவிர ?வில்? என்ற போர்க்கருவியை மிகத் திறமை வாய்ந்ததாகக் கம்பர தன் இராமாயணத்துள் காட்டியுள்ளார், இராமனின் வில் எதிரியைத் தாக்கி விட்டு அதன்பின் கடல் சென்று தன்னைத் தூய்மை செய்து கொண்டு மீண்டும் அவனது அம்பராத்தூணியில் வந்து சேரும் பெருமையதாகக் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளது, மேலும் இராமனின் வில் ஏழுமராமரங்களைத் துளைத்தது, வருணனை அழைத்தது,. தாடகை, வாலி, இராவணன் ஆகியோரை அழித்தது போன்ற அருஞ்செயல்களை ஆற்றியதாகவும் இராமாயணக்கதை செல்வதால் வில் என்ற போர்க்கருவி மேலும் சிறப்புடையதாக ஆக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது,

??ஆயிரக் கோடி பல்லம், ஆயிரக் கோடி நாகக்கணை, கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு, கங்கபத்திரம், திங்களின் பாதி கோடி, கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன், பாரையின் தலைய கோடி, தாமரை தலைய வாளி, வச்சிரப்பகழி கோடி, முச்சிரப்பகழி, அஞ்சலி அஞ்சுகோடி?? (நாகபாசப் படலம் 107 முதல் 113 வரையுள்ள பாடல்கள் தரும் போர்க்கருவிகள்) ஆகியவற்றை இந்திரசித் பயன்படுத்தியதாக கம்பர் தெரிவிக்கின்றார், மேலும் அவன் வைத்திருந்த பிரம்மாத்திரம், நாகபாசப்படை ஆகியன மிகத் திறமை வாய்ந்ததாக இராமாயணத்துள் காட்டப்படுகிறது,

இவைதவிர இக்காப்பியத்துள் நேருக்கு நேர் போர் செய்யும் காலத்து ஒரு போர்ப்படைக் கருவிக்குத் தக்க எதிரானதாக மறுபடை ஏவப்படும்போது அவை இரண்டின் செய்களை கம்பர் எடுத்துரைக்கின்றார், இதன்வழி போர்க்கருவிகளின் எதிரெதிர் செயல்பாடுகள் விளக்கம் பெறுகின்றன, கீழே இராம இராவணப்போரின் போது பயன்படுத்தப் பெற்ற போர்க்கருவிகளின் பட்டியல் தரப்பெறுகிறது,
இராவணன் ---- இராமன்
தாமதப்படை சிவன்படை
ஆசுரப்படை அக்கினிப்படை
மயன்படை காந்தர்ப்பம்
தண்டு அம்பு
மாயைக் கணை ஞானக்கணை
சூலம் உங்காரம்
நிருதிப்படை பாதிப்பிறைமுக அம்பு

மேற்காண் பட்டியல்வழி இராவணன் பலவகைப் படைகளைப் பயன்படுத்தியபோதும் இராமன் வில், அம்பு கொண்டே பதில் போர் செய்துள்ளான் என்பது தெரிய வருகிறது, மேலும் உங்காரம் என்ற மூச்கின் மூலம் சூலப்படையைத் தகர்த்துள்ளான் இராமன், எனவே மூச்சும் ஒரு வகை எதிர்கருவியாகச் செயல்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது, பாதிப் பிறைமுக அம்பு என்பது இராமனின் தனிச்சிறப்பு மிக்க அம்பு ஆகும், இது கொண்டே இராவணனின் உயிர் தொலைக்கப் பெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது,

கம்பராமாயணம் மூலமாக அம்பு இணையற்ற இடத்தைத் தமிழரின் போர் வாழ்வில் பெற்றுவிட்டது என்பது தெரியவருகிறது,

இதற்கு அடுத்த நிலையில் வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன, ?தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் (படை எழுச்சிச் சருக்கம் 3), வாளினர், வேலினர், போர் வில்லினர் (கிருட்டிணன் தூதுச் சருக்கம் -190) எனத் தமிழர்தம் முக்கருவிகளையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது, இவைதவிர
??வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன் கழுவர்க்கம்,
அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள், தண்டம்,
இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.

மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின; வான்
புடையே,
தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின; சோரிகள்
சோர்ந்திடவே,
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு
மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில பூங்
கரமே. ??
(கிருட்டிணன் தூதுச் சருக்கம்202 , 203)
என்ற பாடல்களில் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் பட்டியல் தரப்பெற்றுள்ளது, இவை தவிர வில்லிபாரதத்தில் படை அமைப்பு பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு,

போர்நாள்--- கௌரவர்----பாண்டவர்
3---கருட வியூகம்--- சந்திர வியூகம்
6---கிரவுஞ்ச வியூகம்---மகரவியூகம்
7---சகட வியூகம்--- பாம்புவியூகம்
8---சூசிவியூகம்---சகட வியூகம்
9---சருப்பதோபத்திரவியூகம்---பற்ப வியூகம்
11---சகட வியூகம்--- கிரவுஞ்ச வியூகம்
12---மகரவியூகம்--- மண்டல வியூகம்
13---சக்கர வியூகம்---மகர வியூகம்
இப்பட்டியல் வழியாக பாண்டவர் கௌரவர் பயன்படுத்திய படை அமைப்பு முறைகள் தெரியவருகின்றன, படை அமைப்பு முறைகள் நாளுக்கு நாள் மாறுபட்டனவாகவும், ஒருவர் பயன்படுத்திய அமைப்பு முறை மற்றவரால் வேறு ஒரு முறை பயன்படுத்தப்பட்டமை தெரியவருகிறது, சக்கர வியூகம் அபிமன்யூவை அழித்த வியூகம் ஆகும்,

இவ்வாறு பண்டைக்காலத்தில் படைக்கருவிகளாக மட்டும் இருந்த முப்படைக்கருவிகள் பிற்காலத்தில் படை அமைப்புமுறையில் பயன்படுத்தத் தக்க அளவில் வளர்ச்சி பெற்றன என்பது தெரியவருகிறது,

முடிவுகள்
தமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில் வேல் அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன,அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் பெற்றிருந்தனர்,திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர், முற்றிலும் பயனாகாத படைக்கருவிகள் படைவீடுகள் அமைக்கப் பயன்பெற்றுள்ளன,

சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன, தொல்காப்பியத்திலும் பண்டைத்தமிழர் போர்க்கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன, இவற்றின் மூலம் படைக்கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அவற்றின் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளமுடிகின்றது, கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் படைக்கருவிகள் திட்டமிடப்பட்ட அளவில் தேர்ந்த அமைப்பு முறையில் கையாளப்பட்டுள்ளன என்பது தௌ§வாகின்றது,

----பயன் கொண்ட நூல்கள்
சோ, ந, கந்தசாமி, புறத்திணைவாழ்வியல்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1994
இராம, தட்சிணாமூர்த்தி, சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள், தேவிபதிப்பகம், சென்னை,--
தாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை, பச்சைப்பசேல், சென்னை, 2004
மற்றும்
தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்து நூல்கள்
____




கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள்

கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள்
(முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)
முனைவர் மு.பழனியப்பன்

அகம், புறம் என்ற இரு தொல்காப்பியப் பாடுபொருள்கள் தமிழிலக்கியங்களில் தொடர்ந்து கையாளப் பெற்று வருகின்றன. சங்க காலத்துடன் இவ்விரு பாடுபொருள்கள் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த காலப் பகுதிகளில் மேலும் மேலும் அவை வளமும் நலமும் சேரும் வகையில் படைப்பாளர்களால் கையாளப் பெற்று வருகின்றன.

தமிழிலக்கிய வரலாற்றில் அகம் என்ற பாடுபொருள் புறம் என்ற பாடுபொருளைவிட அதிக அளவில் மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இல்லாமல் எடுத்தாளப் பெற்று வந்திருக்கிறது. புறம் என்ற பாடுபொருளில் பற்பல மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு தொல்காப்பிய கால போர்முறைக்கும், தற்கால போர்முறைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதையும், அவற்றை இலக்கியங்கள் பதிவு செய்திருப்பதையும் காட்டலாம். இவ்வடிப்படையில் புறம் என்ற விரிந்த எல்லையை உடைய பாடுபொருள் - அறம், போர் முறை, கொடை, கொடைமடம், சான்றாண்மை போன்ற பல நிலைகளில் வேறுபட்டும், மாறுபட்டும் படைப்பாளர்களால் தமிழ் இலக்கியங்களில் கையாளப் பெற்று வந்திருப்பதை தமிழிலக்கியத் தொடர் வாசிப்பின் மூலம ¤ அறிய இயலும்.

இவ்வடிப்படையில் கம்பராமாயணத்தில் அமைந்துள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. புறத்திணைக் கூறுகள் என்பது இக்கட்டுரையைப் பொறுத்த அளவில் போர்நெறிகள் என்பதாக மட்டும் கொள்ளப் பெறுகின்றது. இக்கட்டுரைக்காக கம்பராமாயணம் - யுத்த காண்டம் - முதற்போர் புரி படலம் மட்டும் எல்லையாகக் கொள்ளப்படுகிறது.

கம்பரின் காலம், கம்பர் படைத்த இராமனின் காலம், கம்பனைக் கற்கும் சுவைஞரின் காலம் என்ற மூன்று வேறுபட்ட கால தளத்தில் கம்பர் கையாண்ட புறத்திணைக் கூறுகளை ஆராய வேண்டிய சூழல் இக்கட்டுரைக்கு அமைகின்றது. இராமாயணச் செய்திகளைச் சங்ககாலப் புலவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்.குப் பல அகச் சான்றுகள் சங்க இலக்கியங்களிலேயே காணப்பெறுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட காலம் கருதிய சிக்கலுக்கு ஓரளவிற்குத் தீர்வு காண இயலும், கம்பர் தன் இராமாயணப் போர்முறையை இராமாயண காலத்துடன் பின் ஒட்டில் ஒட்டுவதான சங்ககால அதாவது தொல்காப்பிய காலப் பின்புலத்தில் அணுகிய §ருக்க வேண்டும் என்று கருத முடிகின்றது.

கம்பர் தம் போர்ச் செய்திகளைத் தொல்காப்பிய அடிப்படையிலேயே வழங்கியுள்ளார் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குவது கம்பராமாயணத்தில் அமைந்துள்ள முதற்போர் புரி படலம் ஆகும், தொல்காப்பியத்திற்கு அடுத்ததாகத் தோன்றிய பன்னிரு படலம் கம்பரின் காலத்திற்கு முன் தோன்றிய புறப்பொருள் நூல் என்ற போதிலும் அந்நூல் செய்திகளைக் கொண்டு கம்பர் தம் போர்காட்சிகளை வகுத்துக் கொண்டிருக்க இயலாது. அதற்குப் பின்வரும் இரு காரணங்கள் உள்ளன, அவை பின்வருமாறு. பன்னிருபாட்டியல் நூல் முழுவதும் கிடைக்கப்பெறாத சூழல் நிலவுவதாலும், ??காப்பியரின் புறத்திணை மரபு தொன்மை மிக்கது என்பதும், பன்னிருபடலம் காட்டும் இலக்கணமரபு பிற்பட்டது என்பதும் தௌ§வு?? ( சோ, ந, கந்தசாமி, புறத்திணை வாழ்வியல், ப, 8) என்ற கருத்தினாலும் கம்பர் பன்னிருபடலத்தின் அடிப்படையில் கம்பராமாயண புறப்பொருள் செய்திகளை ஆக்கியிருக்க இயலாது என்று முடியலாம். புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம் ஆகியன கம்பர் காலத்திற்கு ஏறக்குறைய பிந்தையன என்பதையும் இங்கு கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் கம்பர் தொல்காப்பியத்தையே மூலநூலாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது தௌ§வாகிறது. கால அடிப்படையில் ஏற்கப் பெறும் இக்கருத்து இலக்கிய அடிப்படையில் முதற்போர்புரி படலத்தினை ஆராய்கையில் இன்னும் வலுப்பெறுகிறது.

கம்பராமாயண யுத்த காண்டத்திற்குள் நுழைகையில் கற்பவர் மனதில் ஓர் அடிப்படை கேள்வி எழும். இராமாயணக் கதைப்படி இராமனின் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து போகிறான். இராவணனிடமிருந்துச் சீதையை மீட்க இராமன் எண்ணுகிறான். ஒரு பெண் குறித்து எழுந்த இந்த முரண்பாடு இராமன் இராவணன் ஆகியோர் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு மட்டுமே. தனிப்பட்ட இரு மனிதர்க்குள் நிகழ்ந்த இம்முரண்பாடு பெரிய போராக்கப்பட்டு ஏன் இரு பகுதி வாழ் மக்களையும் இது பாதிப்படையச் செய்ய வேண்டும் என்பதே யுத்த கா;ண்டத்துள் புகும் கற்பவருக்கு ஏற்படும் அடிப்படைக் கேள்வியாகும். இக்கேள்விக்கு உரிய பதில் வெள்ளிடைமலை என்ற போதிலும் காப்பிய ஆசிரியரான கம்பர் இத்தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய போர்க்குரிய காரணமாகக் காட்ட ஏற்ற சூழலை தன் காப்பியத்துள் அமைத்துக் கொண்டுள்ளார்.

போர்க்கான காரணம்
??தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்கண் ஆவியை விடுக??(யுத்த காண்டம்-945) என்று இராவணனிடம் பேசிய அங்கதனின் தூது மொழிகள் முரண்பாடு போராக மாற்றம் பெற்றதற்கான அடையாள மொழிகளாகின்றன. மாறியதற்கான சூழலைத் தருகின்றது, இராவணன் என்ற தனிமனிதன் தனிமனிதனாக மட்டுமில்லாமல் அரக்கர் குலத்திற்குத் தலைமை வகிப்பவனாகவும், இலங்கை நாட்டின் அரசனாகவும் விளங்குவதன் காரணமாக- இராமன் தனிமனிதனாக மட்டுமில்லாமல் அவன் அறத்தின் நாயகனாகவும், குரங்கு இனத்தின் தலைவனாகவும் இருப்பதன் காரணமாக- இரு தனி மனிதர்களுக்கு இடையேயான முரண்பாடு பெரிய போராக இரு பகுத § மக்களுக்கு இடையே உருவெடுக்கிறது.

இத்தனிமனிதர்கள் அடைய விரும்பும் பொருள் அவ்வவ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதோ, இல்லையோ இவ்விருவர் விருப்பத்தினையும் இவ்விரு நாட்டின் மக்களும் ஏற்க வேண்டிய கட்டாய சூழல் உண்டாக்கப்படுகிறது, எனவே தனிமனித முரண்பாடு பெரிய போராக மாற்றம் பெறுகிறது.


எயில்போர்
போர் ஏற்படுத்தப்பட்டுவிட்ட சூழலில் முதன் முதலாக இராமன் அவனது கூட்டத்தினரிடம் எயில் போர் தொடங்கக் கூறுகிறான்.
??இடுமின் பல்மரம் எங்கும் இயங்கு அறத்
தடுமின் போர்க்கு வருக எனச் சாற்றுமின்
கடுமின் இப்பொழுதே கதிர் மீன் செலாக்
கொடிமதில் குடுமித்தலைக் கொள்க என்றான்??(யுத்த, 960)

கடல்கடந்து வந்த வானரப்படைகளின் எதிரில் இலக்கை நகரின் காப்பு மதில் பெரிதாக நிற்கிறது. இராமன் இம்மதிலையும் அதனைச் சுற்றி உள்ள அகழியையும் அழிக்கத் தன் படைகளுக்குக் கட்டளையிடுகிறான். எயில் போர் தொடங்கும் இம்மரபு தொல்காப்பியப் போர் மரபை ஒட்டியதாகும்.எயில் கருதி விளைவிக்கும் போர் உழிஞை என தொல்காப்பியத்தால் அழைக்கப் பெறுகிறது.

??உழிஞைதானே மருதத்துப் புறனே
முமுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைமரபிற்று ஆகும் என்ப??
என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி கோட்டையைக் காத்தலும், கோட்டையை அழித்தலும் உழிஞை எனத் தொல்காப்பியரால் சுட்டப்பெறுள்ளது. தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கண நூல்களில் அரண் முற்றல், அரண் அழித்தல் ஆகியன நொச்சி உழிஞை ஆகிய இருதிணைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. கம்பர் தொல்காப்பிய அடிப்படையிலே அரண் முற்றல் அழித்தல் இரண்டையும் ஒரே காட்சியில்(படலத்தில்) அமைத்துக் கொண்டுள்ளார். இராமனின் சார்புடைய வானரப்படைகள் அரணை அழிக்க முயல்வதும், இராவணனின் சார்புடைய அசுரப்படைகள் அரணைக் காப்பதும் ஒரே காட்சியாகக் கம்பரால் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் தொல்காப்பியர் காட்டும் உழிஞைத் துறைகள் பல கம்பராமாயணத்துள் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.

கொள்ளார்தேயம் குறித்த கொற்றம்
?பூசலே; பிறிது இல்லை ? எனப் புறத்து
ஆசை தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் பறையின் இடம் பற்றிய
வாசல் தோறும் முறையின் வகுத்திரால்?? (யுத்த 958)
என்ற இப்பாடல் இராவணனின் நாட்டை வளைக்க இராமன் குறித்த கொற்றமாகும்.

உள்ளியது முடிக்கும் வேந்தனது ஆற்றல்
நினைத்ததை முடிக்கும் வேந்தனது ஆற்றல் குறித்தது இத்துறையாகும்,
??மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீசிப் பரவையின் மும்முறை
கற்ற கைகளினால் கடி மாநகர்
¤ சுற்றி நின்ற அகழியைத் தூர்த்திரால்?? (யுத்த 956)
என்ற பாடல் வழி நாட்டைப் பெற மதிலைச் சுற்றியுள்ள அகழியைத் தூர்க்க வேண்டும் என்று இராமன் தன் படைகளுக்குக் கட்டளையிடுகிறான். இதன் மூலம் அவன் நாட்டைப் பெற வேண்டும் என்ற இராமனின் எண்ணம் வெளிப்படுகிறது,

தொல் எயிற்று இவர்தல்
??தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடைச்
சீர்த்த பேர் அணை தன்னையும் சிந்தின;
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே?? (யுத்த 970)
என்ற இப்பாடலில் வானரப்படைகள் அகழியைத் தூர்த்து மதிலில் ஏறியமை சுட்டப்பட்டுள்ளது. தொல் எயிற்று இவர்தல் என்பது மதிலின் மீது பகைப்படைகள் பரந்திருத்தலைத் தெரிவிக்கும் துறையாகும்.
தோலது பெருக்கம்
??பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் கல் கொடும் சென்றது அக்கவியின் கடல்?? (யுத்த 976) என்ற அடிகள் இராமனின் படைப்பெருக்கம் காட்டும் அடிகள் ஆகும்..
அகத்தோன் செல்வம்
??வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள எல் கொடும் படையும் கொண்டது இக்கடல்??(யுத்த 976) என்ற பாடலடிகள் அரணின் அகத்து உள்ள இராவணனின் படைச் சிறப்பைக் காட்டும் வரிகளாகும். இதுதவிர குதிரைப்படை (996), யானைப்படை(994), தேர்ப்படை(995), காலாட்படை(997) ஆகியனவும் அரணிலிருந்து வெளிப்பட்ட அழகைக் கம்பர் காட்டுகின்றார். இவை அகத்தோன் செல்வம் என்ற நிலையில் இராவணனின் படைப்பெருக்கத்தைக் காட்டும் பகுதிகளாகும்.
புறத்தோன் அணங்கிய பக்கம்
??சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்
பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் ??(யுத்த 1000)
என்ற பாடலின்வழி புறத்தோர் ஆகிய இராமனின் படைகள் அயர்வுற்றமை காட்டப்பெறுகிறது. இதனைத் தடுக்க சுக்கிரீவன் முனைகின்றான். அவன் ஒரு மராமரத்தை ஏந்தி சேரர்வுற்ற வானரப்படைகளுக்குத் துணையாகப் போர்புரியக் களமிறங்குகிறான்.
திறல்பட ஒருதான் மண்டிய குறுமை
??வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத்
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். ??(யுத்த 1001)
என்ற இப்பாடலில் அழிந்து பட்டு நிற்கும் வானரப்படையைச் சுக்கிரீவன் ஒரு தானாக நின்றமை காட்டப் பெறுகிறது. சுக்கிரீவன் ஒருவன் தானாகக் களமிறங்கிய போதும் அவன் பல பிரதிகளாக அரக்கர் படைஞர் ஒவ்வொருவர் முன்பும் எதிர்த்து ஒவ்வொருவனாக நின்றான் என இத்துறைக்கு சிறப்பு தந்து கம்பர் பாடல் புனைந்துள்ளார்.
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி
இராமனின் படைகள் இராவணனது அரணை அழித்து அக்காவலில் ஈடுபட்டிருந்த படைத்தலைவர்களை அழித்து வெற்றி கண்டது. அப்பகுதி பின்வருமாறு.
?வடக்கு வாயிலில் வச்சிர முட்டியும
குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்
அடக்கரும் வலத்து ஐம்பது வெள்ளமும்
¤ படச் சிதைந்தது நம்படை ?என்றனர்.

?வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தென்திசைப் பெரும் வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச் சுபாரிசன்; போயினார்
இன்று போன இடம் அறியோம் ?என்றார்.

கீழை வாயில் கிளர் நிருதர் படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான்; உயிர் புக்கது விண் என்றார். (யுத்த 1040-42)

இலங்கையின் அரண் அழிந்தது. இராவணனின் வலிமைக்கு அரணாக இருந்த வாயில் காப்பாளர்கள் அனைவரும் இறந்து பட்டனர். இதன்மூலம் இராமன் முதல் வெற்றியைப் பெறுகிறான்,

கம்பர் தமிழ்ப் புறப்பொருள் மரபில் சிறிதும் மாறுபடாமல் இவ்வெயில் போரை தன் இராமணயத்துள் நடத்தியுள்ளார். உழிஞைத் திணையும் அதன் துறைகளும் கம்பரின் காப்பிய வளர்ச்சிக்கு உதவியுள்ளன. இதனைக் கற்கும் சுவைஞர்கள் கம்ப ராமாயணத்தை தமிழ் மரபுக் காப்பியமாகவே அனுபவிக்க இப்புறப்பொருள் செய்திகள் துணைபுரிகின்றன,

தும்பைத்திணை
இராமனால் இராவணனுக்கு எதிராக எயில் போர் தொடங்கப் பெற்று அதில் அவன் முழு வெற்றியும் பெற்றுவிடுகிறான். இச்சூழலில் இராவணன் தன் அரண் பகைவரால் அழிக்கப் பெற்றது அறிந்து துன்பமுற்று, பகைவரின் ஊடுறுவலைத் தடுக்க படையுன் வருகிறான். அவன் தும்பைப் போரைத் துவக்க ஆயத்தமாகின்றான்.

தும்பைப் போர் என்பது ??மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலைஅழிக்கும் சிறப்பிற்று?? என்ற இலக்கணமுடையதாகும். இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.
மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)

இராவணன் போருக்கு தயாராகையில் பலவித அணிகலன்களையும் போர்க்கருவிகளையும் அணிந்து கொள்கிறான். வாள்படை, வானவரிடத்தும் இல்லாத படைகள், கவசம் ஆகியனவற்றை அணிந்த அவன் தும்பை மாலையையும் சூடுகிறான். இதன்மூலம் இராவணன் தும்பைப் போரை தன் பக்கமிருந்து முதன்முதலாகத் தொடங்குகிறான். இப்போருக்குப் பதில் தருபவனாகவே இராமன் இனி செயல்பட வேண்டும்.

இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூடுகிறான், இப்பகுதி வாயிலாக வட நாட்டுச் சார்புடை இராமகாதை தென்நாட்டின் புறப் பொருள் கொள்கைகளை ஏற்பதாகக் கம்பரால் காட்டப்பெற்றுள்ளது. இராமன் தும்பைப்பூ சூடிய பாடல் பின்வருமாறு.

கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)

இராமாயணத்தைப் பொறுத்த வரையில் தும்பைப்போர் தொடங்கப்பட்டுவிட்டது என்றாலும் அப்போரின் வெற்றி தோல்வி உடன் நிகழ்ந்து விடவில்லை, முதற் போரில் தோற்ற இராவணனன் பின்பு தன் மகன், தம்பி ஆகியோரை போர்க்களத்திற்கு அனுப்புகிறான், இதன் காரணமாக போர் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக விளங்குகிறது, இதனால் தும்பைப்போரின் முழுத் துறைகளுக்கான பாடல்களை முதற்போர்புரி படலத்தில் காணமுடியவில்லை. சில துறைகள் மட்டும் கம்பரால் இப்படலத்துள் காட்டப்பெறுகின்றன. இவை பின்வருமாறு.
தானைநிலை, குதிரைநிலை
இராவணன் தும்பைப்போரைத் துவக்கியதும் அவனது தானை, குதிரை ஆகியன போர்க்குத் தயாராகின, அவற்றை உணர்த்தும் துறைகள் தானைநிலை, குதிரைநிலை ஆகியனவாகும், இவற்றுக்கு ஏற்ப கம்பர் பாடல்களைப் படைத்துள்ளார்.

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட
மூரி வல் நெடுந் தானையின் முற்றினான்;
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்.
மேரு மால்வரை என்ன விளங்கினான். (யுத்த 1057)

என்பது தானை நிலைத் துறைக்குரிய பாடலாகும்,

ஆயிரம் பரிபூண்டது; அதிர் குரல்
மா இரும் கடல் போன்றது; வானவர்
தேயம் எங்கும் திரிந்தது; திண்திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது. (யுத்த 1052)

என்பது இராவணன் ஏறிய தேரில் கட்டப்பெற்றிருந்த குதிரை நிலை உரைக்கும் பாடற்பகுதியாகும்,

இராமனும் போர்க்குத் தயாராகித் தன் பக்கத்து வீரர்களுடன் சென்று இணைகின்றான். அப்பாடல் பின்வருமாறு.

ஊழியின் உருத்திரன் உருவு கொண்டு தான்
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரிசிலைத் தம்பி மாப் படைக்
கூழையின் நெற்றி நின்றானை கூடினான். (யுத்த 1075)

இப்பாடல் வழியாக இராமன் பக்கத்துத் தானை நிலை உணரப்பெறுகிறது.
தான் மீண்டு எறிந்த தார்நிலை
தன் தலைவனைப் பகைவர் சூழக் கண்ட படைத்தலைவன் ஒருவன் அரசனைக் காக்கும் பொருட்டு, தன் போர்த்தொழில் விட்டு வந்து அரசனைக் காத்தல் என்பது இத்துறையாகும்.

சுடுகணை படுதலோடும் துளங்கினான்; துளங்கா முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை
உடன் இருந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்கா முன்னர்,
வட திசை வாயில் நின்ற மன்னவன் முன்னன் ஆனான். (யுத்த 1089)

இப்பாடலில் சுக்கிரீவன் இராவணனுடன் போர் செய்து தளர்வடைய, அத்தளர்வில் இருந்து அவனைக் காக்க அனுமன் வருவதாகக் காட்டப் பெறுகிறது.

இருவர் தலைவர் தபுதிப் பக்கம்
இரு பக்கத்துப் படைத்தலைவர்களும் மோதிக்கொள்வது இத்துறையாகும்.

சாய்ந்தது நிருதர் தானை தமர்தலை இடறித் தள்ளுற்று
ஓய்ந்ததும் ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக; அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரிவில்; வெம்பிக்
காய்ந்தது அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந்தீ. (யுத்த1112)

இலக்குவனும் இராவணனும் தம்முள் மோதிக் கொண்ட போர்த்தன்மையை இப்பாடல் சுட்டுகிறது.
ஒருவன் ஒருவனை உடைபுடை புக்கு கூழை தாங்கிய பெருமை
நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன் அனிலன்;
காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;
சூலம் அன்னது ஓர்வாளியால் சோம்பினன், சாம்பன்.(யுத்த1156)
மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,
கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;
சுற்றும் வானரப் பெருங்கடல் தொலைந்தது; தொலையாது
உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான் (யுத்த1156)

இவ்விரு பாடல்களும் வானரப்படைத் தலைவர்கள் கையற்றுப்போன சூழலில் இலக்குவன் போர்களத்திற்குள் இரங்கி வானரப்படையைக் காத்த நிலையை உரைக்கின்றன. இத்துறைக்கு இவ்விருபாடல்களும் உரியனவாகின்றன.
படையறுத்து பாழி கொள்ளும் ஏமம்
படைக் கருவிகளை அழித்து எதிர்பக்கத்துத் தலைவனை வெற்றி கொள்ளுதல் இத்துறையாகும். இராமாயணத்தின் மிகு உயர் பகுதியாகக் கருதப்படும் ?இன்று போய்ப் போர்க்கு நாளை வா? என்ற தொடர் இத்துறைக்கு உரியதாகும். இராமன் இராவணனோடு போர் செய்து இராவணனது படைக்கலன்கள் ஒவ்வொன்றாக அறுத்தான். அவனது மணிமுடி தேர் முதலியனவற்றையும் இராமன் அழித்தான்.
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்
கொன்றல் என்? தனி வெறும் கை நின்றான் ?எனக் கொள்ளா,
?இன்று அவிந்தது போலும், உன் தீமை ?என்று இசையோடு
ஒன்ற வந்தன வாசகம், இனையன உரைத்தான்; (யுத்த 1207)

என தன் பெருமிதத்தை இராவணனுக்கு இராமன் இப்பாடல் வழி உணர்த்துகிறான். தும்பைத்திணையும் அதற்குரிய துறைகளும் இவ்வளவில் முதற்போர்புரிப்படலத்தில் கம்பரால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
இன்னும் இராமாயணப் போர் தொடர்ந்து செல்லும் காப்பியப்போக்கில் கம்பரால் பல இடங்களில் புறத்திணை மரபுகள் பின்பற்றப் பெறுகின்றன. அவை விரிந்த அளவில் ஆராயத் தக்கனவாகும்,
முடிவுகள்
கம்பர் தன் இராமயணத்தில் தொல்காப்பிய புறத்திணை மரபுகளைப் பின்பற்றியுள்ளார்.
முதற்போர் புரிப்படலம் கம்பரின் புறத்திணை மரபுகளைப் பின்பற்றியமைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது,
இப்படலத்தில் தொல்காப்பியம் காட்டும் இலக்கண வரையறைப்படி உழிஞை மற்றும் தும்பைத் திணைகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவற்றின் துறைகளும் பயின்று வருமாறு பாடல்கள் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளன.
இவற்றின் வாயிலாகக் கம்பராமாயணம் தமிழ்மரபு சார் காப்பியமாக விளங்குகின்றது.
____
உதவிய நூல்கள்
கந்தசாமி,சோ.ந..,புறத்திணை வாழ்வியல்,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1994
கோவிந்தன்,கா,., பண்டைத் தமிழர் போர்நெறி, வள்ளுவர் பண்ணை,சென்னை, இரண்டாம் பதிப்பு 1984.
பூவண்ணன், மாணிக்கம்.அ, கம்பராமாயணம், யுத்த காண்டம், முதல்தொகுதி, வர்த்தமாணன் பதிப்பகம், சென்னை, 2004
தமிழ்இணையப்பல்கலைக்கழக இணையதளநூலகம்

Dr. M.Palaniappan.M.A., M.Phil., Ph.d.,
என்பெயர் பழனியப்பன்.
நான் ஒரு ஆய்வாளன்.
பெண்ணியத் திறனாய்வு என்னுடை ஆய்வுக்களம்.
இந்திய விடுதலைக்கு முன் உள்ள பெண் நாவலாசிரியர்கள் குறித்து என்னுடைய பி,எச்,டி ஆய்வை நிகழ்த்தினேன்.
தொடர்ந்து பெண் எழுத்து குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.
வணக்கம்

மானிடள்

இது ஒரு புதுப் பெயர்
மானிடன் என்றே இதனைப் பலர் வாசித்திருப்பீர்கள்
மானிடள் என்று ஒரு புதுச் சொல்லை உருவாக்குவோம்
ஏனென்றால் மொழி ஆண் வசமாய் உள்ளது

அதனை பெண் வாசமாய் மாற்றச் சில முயற்சிகள் மேற்கொள்வோம்