ஞாயிறு, டிசம்பர் 31, 2006

பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை




சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல். இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்சௌ¢ளையாரால் பாடப் பெற்றது என்பது கருதி இத்தொகை நூலுக்கு மேலும் ஒரு பெருமை உண்டு. ஒன்பது ஆண்பால் புலவர்களின் வரிசையில் ஒரு பெண்பால் புலவர் இடம்பெற்றுள்ளார். இவர் பாடிய பத்துப்பாடல்களால் மகிழ்ந்த சேரன் இவரைத் தன் அவையில் அவைக்களப் புலவராக அமைத்துக் கொண்டான். மேலும் ஒன்பது கால் பொன்னும் பரிசாகத் தந்துள்ளான் என்ற குறிப்புகள் வழியாகப் பெண்பால் புலவர் ஒருவர் ஆண்பால் புலவர்களுக்கு ஈடான நிலையில் சங்க காலத்தி¢ல் அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்து விளங்கினார் என்பதற்குச் சரியான சான்று இவர் ஆவார்.
அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்தவள் பெண் என்பது ஆண்களுக்கு ஈடான நிலை தரும் என்றாலும்¢ அவள் தன் படைப்பு மொழியை, முயற்சியை ஆண்களுக்குச் சமமாக அல்லது ஆண்களை அடியொற்றிச் செய்து கொள்ளவில்லை என்பது பெண்ணின் படைப்பினை ஆராயும் பொழுது தெரியவருகிறது. அவள் ஆணால் உருவாக்கப் பெற்ற மொழியை அதன் அமைப்பைத் தனக்கு ஏற்ற வகையில் தன் நடையில் மாற்றி அமைத்துக் கொண்டு படைக்கத் தொடங்கினாள். மொழி என்னும் கட்டமைப்பிற்குள் தனக்குச் சாதகமான ஓர் இடத்தை அவள் பெற்றுக் கொண்டு அவள் செயல்பட்டாள். இதன்மூலம் அவள் தன்னையும் தனித்து வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது. தன்ஒத்த பாலினரின் இயல்பையும் அவளால் படைக்க முடிந்தது. இந்த வேறுபாடு கருதி¢ தன் பாலினருடன் அவள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடிந்திருக்கிறது. இதன் காரணமாக அவளின் படைப்பு மொழியில் பல நுன்மையான வேறுபாடுகள் எழுந்தன.
மேற்சொன்ன ஆறாம் பத்து இதற்குச் சிறந்த காட்டு. இதில் உள்ள பத்துப் பாடல்களிலும் காக்கைப் பாடினி நச்சௌ¢ளை என்ற பெண் தன்கருத்தை தனக்குச் சாதகமான ஆண் வயப்படாத பெண் மொழியில் எடு¢த்துரைத்துள்ளார். அவரின் மொழி பயன்பாடு மற்ற ஏழு அல்லது கிடைக்காத பத்துக்கள் இரண்டையும் சேர்த்து ஒன்பது பத்துக்கள் பாடிய ஆண்பால் புலவர்களின் படைப்பு அமைதியில் இருந்து வேறுபட்டு அமைகிறது.
ஆயிரத்து ஐநூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டிலேயே பெண் மொழி ஆளுமை ஆணின் மொழியாளுமையில் இருந்து வேறுபட்டது என்பது உலக அளவில் கண்டறியப் பட்ட போதிலும் அதனை மெய்ப்பிக்கும் சான்றுகளுக்கான முயற்சி தொடங்கப் படவில்லை. ஆனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டில் ராபின் லாக்ஆப், அன்னி பாடைன், ரூத் பெர்ன்டு, நான்சி கான்கிளின் (Robin Lakoff, Anne Bodine, Ruth Brend, and Nancy Conklin) என்போர் இ¢ம்முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பெண்கள் பயன்படுத்திய அமெரிக்க ஆங்கில பெண் மொழியில் உள்ள தனித்தன்மைகளை எடுத்துக் காட்டினர்.
அது மெல்ல வளர்ந்து உலக மொழிகளில் உள்ள பெண்தன்மைக் கூறுகளின் பொதுமையை ஆராயத் தொடங்கியது. ''மொழியில் பால் வேறுபாடு என்பது உலகுதழுவிய ஒன்று'' என்ற கொள்கை ("Sex differentiation in language is universal . . .") இதன்வழி உருவானது. இதன் வளர்ச்சி நிலை பெண் மொழி என்பதற்கான வரையறையைத் தந்தது. மொழியில் பாலினக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இதன்பின் பெண் மொழி உணர்ப்பட்டது(''If, then, one uses the term loosely to cover those gender-preferred features, there is a "women's language.")
இவ்வடிப்படையில் உணரத் தொடங்கப் பட்ட பெண்மொழி உலகின் அனைத்து மொழிகளிலும் உணரப்பட ஆய்வுகள் தொடங்கின. அவ்வகையில் பெண்மொழி என்பது தமிழுலகிலும் உணரப் பட வேண்டிய ஒன்றே.
பதிற்றுப் பத்து இவ்வகையில் ஆராயப் படத் தக்க ஒன்று. ஏனெனில் இத்தொகுப்பில்¢ ஆண் படைப்பும் அமைந்துள்ளது. பெண்படைப்பும் அமைந்துள்ளது. இவையிரண்டிற்கும் ஒரே பின்புலம். ஒரே கொள்கை. ஒரே எல்லை என்ற பல ஒற்றுமைக் கூறுகள் கிடைத்திருப்பது ஆண்மொழியையும் பெண் மொழியையும் உற்று நோக்கி ஆராய உதவுகிறது.
காக்கைப் பாடினியின் பெண்மொழிக் கூற்றிற்கு முதலில் சான்று காண்போம்.
''இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புண்கண் அஞ்சும்''
(காக்கைப் பாடினி 2ம் பத்து ஏழாம் பாடல் வரிகள் 10-15)
இப்பாடலடிகளில் கவனிக்கத் தக்கவை இருகூறுகள். 1. மகளிர் 2. வளங்கெழு குடைச்சூல்
மகளிர்
இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரைப் பெற்று நல்வளம் பயந்தவர்கள். ஆன்ற அறிவினர். நல்ல புகழினர். ஒள்ளிய நெற்றியை உடையோர். புலவியின் காரணமாக கண்கள் கோபத்தை வெளிப்படுத்தும். இக்கருத்துகளில் புதல்வர் யாருக்கு நல்வளம் பயக்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சிந்திக்கத் தக்கது. ''கணவன் உவப்பப் புதல்வர் பயந்து'' (மதுரைக் காஞ்சி 600) என்பது மாங்குடி மருதனாரின் கூற்று. கணவன் மகிழ்வு கொள்வதற்காக மகனைப் பெற்றாள் என்பது ஆணின் கூற்று. தனக்குத் துணையாகும் தன்மை உடைய மகனைப் பெற்றவள் என்பது பெண்மொழி. ஆண்மொழிக்கும் பெண் மொழிக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு இதுதான். பெண் தன் சொற்களுக்குள் அன்பை வைக்கிறாள். ஆண் தன் சொற்களுக்குள் காமத்தை வைக்கிறான். கணவனின் உவப்ப எதற்காக-? என்ற சிந்தனையை மேம்படுத்திப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.
வளங்கெழு குடைச் சூல்
இதற்கு உரையாசிரியர்கள் தருகிற விளக்கம் ''வளமை பொருந்திய சிலம்பையும், அடக்ககத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் உடைய'' ( ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை) என்பதாகும். வளங்கெழு கடைச் சூல் என்ற தொடரை ஏன் சிலம்பிற்குக் காட்டவேண்டும். உள்புறம் துளை வருமாறு கடையப் பட்ட சிலம்பை அணிந்த பெண் என்ற இந்த இந்த உரைக்குறிப்பு சிலம்பு கழி நோன்பை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி விடும்.
இதற்கு நேர் பொருளை உரையாசிரியர் தந்திருக்கலாம். அதாவது வளமை மிகுந்த உள்புறம் குடைவு பெற்ற கருப்பையை உடைய- அதன்வழியாக வளமை மிக்க மகனைப் பெற்றுத் தந்த மகளிர் என்ற பொருளில் பெண் படைத்துள்ளாள். இதனை உரையிட்ட ஆண்உலகம் செய்த மாற்றம் சிலம்பு என்பது.
பெண்ணின் வளமை கருப்பை கொண்டிருப்பது. அதனுள் மகவைத் தாங்குவது. அந்த மகவனுபவத்தை அவள் அவள் சொற்களில்தான் கூறமுடியும் என்பதற்க மேற்காண் வரிகள் சான்று.
இவளின் துனித்த கண் என்பது இதே பத்தின் இரண்டாம் பாடலில் ஆடல் மகளிர்பால் ஈடுபட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அவனின் மனைவி ஊடல் கொண்டமையால் கூறப்பட்டதாகும். அந்த கண்களை விட இரவலர் நோயுடைய கண்ணிற்கு இவன் அஞ்சுவான். பெண் தனக்குரிய இடத்தை முன் கண்ணில் பெற்றாள். எனவே பின்கண் இயல்பாய் எவ்விதப் புனைவும் தேவையாகாமல் வந்தது.
இவ்வாறு வரிக்கு வரி பெண் பெண்மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறாள். அதை அக்கண் நோக்கினால் அன்றி கிட்டாது.
ஆண் சொல்லிற்கும் பெண் சொல்லிற்கும் உள்ள ஒரு சிறு வேறுபாட்டை இப்பகுதி கொண்டே விளக்கலாம்.
விறலியை அழைக்க வேண்டும். அவளைப் பரிசு பெற ஆற்றுப் படுத்த வேண்டும். அவ்வகையில் காக்கைப் பாடினி '' ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் '' என்றழைக்கிறார்( 6ம்¢ பத்து, எட்டாம் பாடல், அடி 1)
குமட்டூர் கண்ணனார் அழைக்கும் வகை பின்வருமாறு ''உண்மின் கள்ளே, அடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே, வருநர்க்கு வரையாது பொலங்கலந் தௌ¤ர்ப்ப இருள் வணரொலிவரும் புரியவிழைம்பால் ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே'' (2ம் பத்து எட்டாம் பாடல் 1-6)
விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் அழைக்கிறார் காக்கைப் பாடினி. ஆடும் அவளை தன் வீட்டு ஏவல்காரியாய்ப் பார்க்கிறது குமட்டூர் கண்ணனார் பாடல். சமையல் காரியாய் சமைத்துப் போட வைக்கிறது.
காக்கைப் பாடினியைப் பொறுத்தவரையில் அவளும் விறலி அல்லது பாடினி என்ற வகைப் பெண்களுடன் ஒருவள் தான். குமட்டூராருக்கு அவள் ஒரு கற்பனைப் பாத்திரம். அவள் உணர்வோடு உயிரோடு அவர் ஒன்றுதல் இயலாது. எனவே அக் கற்பனைப் பாத்திரத்தை எதையும் செய்யக் கூறலாம். மாடு கன்று மேய்க்கச் சொல்லலாம். வீடு கூட்டச் சொல்லலாம்.
இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே போக நல்லகளம் பதிற்றுப்பத்து. இக்கட்டுரை வழி சில மட்டுமே காட்டப் பெற்றன. பல உள்ளன. அவை இனிவரும் ஆய்வுகளில் இடம்பெறும்.
muppalam2006@gmail.com

வெள்ளி, டிசம்பர் 22, 2006

ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம்.


ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)
மு. பழனியப்பன். எம்.ஏ., எம்.ஃபில்.,
சம்பந்தப்பெருமான் சீர்காழியில் உறையும் போதெல்லாம் அத்தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவர் தனது தாய்வீடாகிய சீர்காழிப் பதியில், விளங்கும் இறைவனையும், இறைவியையும் தம் பனுவல்களால் பாடுகின்றபோது ஒவ்வொரு பதிகத்திற்கும், ஒவ்வொரு சிறப்பை ஏற்றிப்பாடியுள்ளார். இதனால் சீர்காழிப் பதிகங்கள் மற்ற பதிகங்களிலிருந்து வேறுபட்டு அமைவனவாக உள்ளன. யாப்புநிலையாலும், சித்திரக்கவிமுறையாலும், பொருள்கோள் அமைப்பாலும் சீர்காழிப்பாடல்களை அவர் வேறுபடுத்தியுள்ளார். இதனால் புதியன படைக்கும் அவரது முயற்சிக்குச் சீர்காழிப் பதிகங்கள் களமாக அமைந்து விடுகின்றன.
தாய்வீடு எனச் சீர்காழி சுட்டப்பெற்றிருப்பதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று சம்பந்தப் பெருமானின் பிறந்தஊர் அது; அதாவது அவரைப் பெற்றதாய் வாழுமூர் அதுவன்றி ஞானப்பால் அருத்திய தாய் உறையுமூர் மற்றது. எனவே அவ்வூரின் மீது கொண்ட காதலால், மீண்டும் மீண்டும் அவ்வூரைப்பற்றிப்பாடும் சூழல் ஏற்பட்டபோது, படிப்போருக்குச் சுவை கூட்டும் பாங்கு கருதி பதிகங்களைப் பல்வகை அமைப்பால் வேறுபடுத்தி அவர் பாடமுற்பட்டுள்ளார் என முடியலாம்.
சீர்ழியும் அதன் திருப்பெயர்களும்
பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், சிரபுரம், புறவம், சண்பைநகர், சீகாழி, கொச்சைவயம், பூந்தாராய், கழுமலம் ஆகிய பெயர்களை உடையதாகச் சீர்காழி விளங்குகின்றது. இப்பெயர்க்கான காரணங்கள் பின்வருமாறு
1. பிரமபுரம் - பிரமன் பூசித்த காரணத்தால் ஏற்பட்ட பெயர்.
2. வேணுபுரம் -சூரபதுமனுக்கஞ்சி இந்திரன் பூசித்தபோது
இறைவர் வேணுவாய் (மூங்கிலாய்) முளைத்தெழுந்தமையால் பெற்ற பெயர்.
3. புகலி - சூரபதுமனால் வந்த துன்பம் பொறுக்கவாற்றாது
முருகப் பெருமானைத் தந்தருளும்படி
தவங்கிடந்த தேவர்கள் புகலடைந்ததனாற் பெற்ற பெயர்.
4. வெங்குரு - அசுரகுரு சுக்கிரன், பூசித்துத் தேவகுருவுக்கு
இணையானநிலை பெற்றமை கருதி வந்த பெயர்.
5. தோணிபுரம் - உலகமெல்லாம் அமிழ்ந்தபோது பிரணவமாகிய
தோணியாக மிதந்து, சிவபெருமான் அம்மையுடன்
எழுந்தருளப் பெற்றதால் இப்பெயர் பெற்றது.
6. பூந்தாராய் - பூமியைக் கொம்பால் தரித்த திருமால்அப்பாவம்
போக வழிபட்டமையானும், இரணியாக்கனை
வெல்ல பன்றி உருவம் பெற்ற திருமால்
அப்பாவம் போக்க வழிபட்டமையானும்
இப்பெயர் ஏற்பட்டது.
7. சிரபுரம். தேவருடன் அமுதுண்ண கலந்துவிட்ட,
அசுரனைச் சூரியன் சட்டுவத்தால் வெட்ட
அவனது தலை பூசித்தமை கருதி எழுந்த பெயர்.
8. புறவம் சிபிச்சக்கரவர்த்தியிடம் புறாவாக வந்த
தீக்கடவுள் சோதித்த பாவம் போக்க,
வழிபட்டமையான் ஏற்பட்ட பெயர்.
9.சண்பை கபில முனிவர் சாபத்தால் தம் குலத்தினன்
வயிற்றுதித்த பிள்ளையாகிய இரும்புலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிட
சண்பைப் புல்லாக முளைக்க, அவற்றையே ஆயுதமாகக் கொண்டு போர்செய்து, யாதவ குமாரர் மடிய அப்பழி போகும்படி கண்ணன் வழிபட்டமையான் ஏற்பட்ட பெயர்.
10. வளர்காழி - காளிதன் என்ற பாம்பும், நடனத்தில் தோற்ற
காளியும் பூசித்தமையான் போந்த பெயர்.
11.கொச்சைவயம் பராசரர், மச்சகந்தியைப் புணர்ந்ததனால்
ஏற்பட்ட நாற்றத்தையும் இழிவையும்
போக்கிக்கொள்ள வழிபட்டமையான் ஏற்பட்ட பெயர்.
12.கழுமலம் உரோமமுனிவர் ஞானோபதேசம் பெற்று
உலகஉயிர்களின் மலங்களைப் போக்கும் நிலை
எய்தினமையான் இப்பெயர் ஏற்பட்டது.
இவ்வாறு பன்னிருபெயர்களை உடையதாய் சீர்காழி விளங்குகிறது. கட்டுரைக்கு உரிய பகுதியில் எட்டுப் பதிகங்கள் சீர்காழி சார்ந்தனவாகவும், இரண்டு மட்டும் வேறு பதிகள் பாற்பட்டனவாகவும் அமைந்துள்ளன. எட்டுப் பதிகங்களில், பிரம்மபுரம் எனப்பெயரிவ் மூன்றும், கழுமலம் என்ற பெயரில் இரண்டும், சண்பைநகர், புறவம், வெங்குரு பெயரில் ஒவ்வொன்றும் பாடப்பெற்றுள்ளன. இவையெட்டும் ஒரேதலம் குறித்தமைவன என்றாலும் ஒவ்வொன்றுக்கும் இடையே பல வேறுபாடுகள் காணப்பெறுவதால் புதுமை பெறுகின்றன.
1. பிரம்மபுரப் பதிகங்கள்.
பிரம்மபுரம் சார்ந்தனவாக மூன்று பதிகங்கள் அமைந்துள்ளமையால் பெருமை கருதி அவை முதலில் ஆராயப்பெறுகின்றன.
1.1. திருச்சக்கரமாற்று. (74) (2ம் திருமுறை . பதிகஎண்209)
விளங்கிய சீர் எனத் தொடங்கும் பதிகம் மேற்கண்ட பன்னிரு பெயர்களையும் பாடல்கள் தோறும், சக்கரம்போல் மாற்றி மாற்றிச், சுழற்றிச் சுழற்றி இசைக்கும் முறையில் பாடப்பெற்றுள்ளது. முதற்பாடலில் சம்பந்தப்பெருமான் பிரமபுரத்தில் துவங்கி, கழுமலத்தில் சக்கரமாற்றாக ஊர்ப்பெயர்களை அமைத்துள்ளார். முதற்பாடல் பின்வருமாறு.
விளங்கியசீர்ப் பிரனூர், வேணுபுரம்,புகலி,வெங்குரு,மேற்சோலை
விளங்கவரும் தோணிபுரம்,பூந்தாராய்,சிரபுரம்,வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பை,கமழ் காழி,வயங்கொச்சை மலம்என்றின்ன
இரண்டாம் பாடல் கழுமலம் எனத் தொடங்கி, தோணிபுரம் என முடிகின்றது. மூன்றாம் பாடல் தோணிபுரத்தில் தொடங்கி, வெங்குரு என முடிகின்றது. அடுத்தபாடல் வெங்குருவில் தொடங்கி சண்பையில்; முடிய, இதற்கடுத்த பாடல் சண்பையில் தொடங்கி புறவத்தில் முடிய இவ்வாறு ஒருபாடலின் இறுதி ஊர்ப்பெயர் அடுத்த பாடலின் தொடக்கமாக அமைந்து சக்கரச் சுழற்சி பெற்று சக்கரமாற்று என்ற புதுவகை அமைப்பு கொண்டதாக இப்பதிகம் விளங்குகின்றது.
மேலும் இப்பதிகம் வாயிலாக சிவபெருமானின் சிறப்புமிக்க ஊர்களுள் ஒன்றாகச் சீர்காழியை சம்பந்தப் பெருமான் எடுத்துக்காட்டியுள்ளார். இப்பதிகம் முதல்பாடலில் பிரமனூர் எனத் துவங்குவதால் பிரம்மபுரம் தலமாகக் குறிக்கப் பெற்றுள்ளது.
1.2. கோமூத்திரி அந்தாதி ( 77) (2ம் திருமுறை . பதிகஎண்.210 )
அந்தம் ஆதியாக நடப்பது அந்தாதி எனப்படும். கோமூத்திரி என்பது பசுவின் பாய்ச்சல் கருதிய சித்ரகவியாகும். இதற்குக் காட்டாக இப்பதிகத்தில் ஒருசில சொற்களைக் காணஇயலுகின்றது.
தெரித்தபுகழ் என்ற மேலடியும், விரித்தபுகழ் என்ற கீழடியும் ஒன்றோடொன்று முதல்எழுத்து தவிர்ந்து மற்ற எழுத்துக்களால் ஒரே அமைப்பினவாக இருப்பதனால் நேர்முறையிலும், சாய்முறையிலும் தொடர்புடையனவாகக் காணப்பெறுகின்றன. இவ்வமைப்பில் முழுப்பாடலையும் பாடுவது கோமூத்திரி (கோ- பசு, மூத்திரி- மூத்திரப் பாய்ச்சல்) என்னும் சித்திரக்கவியாகும்.
இங்குச் சம்பந்தப் பெருமான் அந்தாதித் தொடையைக் கோமூத்திரியின் அமைப்பில் கையாளுவதால் இப்பதிகம் இப்பெயர் பெறுகின்றது. எவ்வாறெனின் கருதுமூரே என முதற்பாடல் முடிகின்றது. அடுத்தபாடல் ஊரே என ஆரம்பிக்காது கருத்துடைய என்று தொடங்குகின்றது. இவ்வாறே ஒவ்வொரு பாடலும் ஊரே என முடிய, அதன் முன் சீரே அடுத்த பாடலின் தொடக்கமாக உள்ளது. இப்பாய்ச்சல் கோமூத்திரியாகக் கொள்ளப்பெற்று, இப்பதிகம் அவ்வந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளது எனல் பொருந்தும். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் பன்னிரண்டு பெயர்களும் முன்னர் சக்கரமாற்றில் சொல்லப்பெற்றது போலவே அடுக்கிக் கூறப்பெற்றுள்ளன. முதல்பாடல் பிரம்மபுரத்தில் தொடங்கி, கழுமலத்தில் முடிவதாக உள்ளது. எனவே பிரம்மபுரம் தலமாகக் குறிக்கப்பெற்றுள்ளது. அடுத்த பாடல் கழுமலத்தில் தொடங்கி சண்பை எனமுடிகிறது. இதன்பின்னர் வரும்பாடல்களும் முன்னர் கண்ட ஊர்ப்பெயரந்தாதி முறையிலேயே பாடப்பட்டிருப்பது எண்ணத்தக்கது,
1.3. பல்பெயர்பத்து (78) (1ம் திருமுறை . பதிகஎண். 63)
இப்பதிகம் சீர்காழிக்குரிய பல பெயர்களை, அதாவது பன்னிரு பெயர்களைக், கொண்டு முடியும் காரணத்தால் பல்பெயர்பத்து என வழங்கப் பெறுகின்றது. பிரமபுரத்தானே என முதற்பாடல் முடிவதால் இப்பதிகமும் பிரம்மபுரம் சார்ந்ததாக அமைகின்றது. இப்பதிகம் மற்ற பதிகங்களின் எண்ணிக்கை அளவான பதினொன்றில் இருந்து மிகுந்து, பன்னிருபாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஏனெனில் பன்னிரு பெயர்களும் அமையவேண்டும் என்ற எண்ணம் கருதி சம்பந்தப்பெருமான், இப்பதிகத்தை நீட்டிப் பாடியுள்ளார். பன்னிரண்டாவது பாடல் திருக்கடைக்காப்புப் பாடலாக அமையினும் அதில் கழுமலம் என்ற பெயர் குறிப்பிடப்பெறுவதன்மூலம் முன்னர் காட்டிய ஊர் வைப்புமுறை இங்குப் பின்பற்றப் பெற்றுள்ளது என்பது தௌ¤வு. இப்பதிகத்துள், பிரம்மபுரம் தொடங்கி கழுமலம் வரையான பெயர்களுக்கான காரணங்களைச் சம்பந்தப் பெருமான் பாடல்தோறும் ஏற்றிப் பாடியுள்ளமை கருதத்தக்கது. எனவே பதிகத்தை தேவை கருதி நீட்டிப்பாடும் புதுமைநிலையை இங்குக் காரணம் கருதி சம்பந்தப் பெருமான் அமைத்துள்ளமையை உணர முடிகின்றது.
பிரம்மபுரம் சார்ந்த இம்மூன்று பதிகங்களை அடியொற்றி சில பொது முடிவுகளுக்கு வர இயலுகின்றது.
1. பன்னிருபெயர்களைச் சிறப்பிப்பது என்பது இம்மூன்று பதிகங்களின் கருத்துப் புலப்பாடாக உள்ளது.
2. பதிகத்தின் இறுதிப்பாடலான திருக்கடைக்காப்புப் பாடலில் சக்கர சீர், எனச் சக்கரமாற்றைக் குறிப்பிட்டும், முடக்கு மாவின் பாய்ச்சல் எனக் கோமூத்திரி அந்தாதியை உரைத்தும் பல்பெயர் பத்தும் வல்லார் எனப் பல்பெயர்பத்தினைச் சுட்டியும், பதிகத்தின் புதுமையமைப்பு முறையினைச் சம்பந்தப்பெருமான் எடுத்தியம்பியுள்ளமை கவனிக்கத்தக்கது.
3. முதல்பாடல் பிரம்மபுரம் எனத் துவங்கப்பெறுவதால் இப்பதிகங்கள் மூன்றும் பிரம்மபுரம் எனக்கொண்டு தொகுக்கப் பெற்றுள்ளன.
4. சக்கரமாற்றிலும், கோமூத்திரி அந்தாதியிலும் முதல்பாடலில் பிரம்மபுரம் துவங்கி கழுமலம் ஈறான கட்டுரையில் முன்காட்டப்பெற்ற முறைமை பின்பற்றப் பெற்றுள்ளது. அடுத்த பாடல்கள் ஊர்ப்பெயரந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன.
சேக்கிழாரும் சம்பந்தப் பெருமானின் பிறப்பினைப் பாடுகையில், சீர்காழியின் பெருமையினைச் சுட்டும்பொழுது இப்பன்னிரு பெயர்களையும் முன் காட்டிய முறையிலேயே, அதாவது பிரமபுரம் துவங்கி கழுமலம் ஈறாகப் பாடியிருப்பது குறிக்கத்தக்கது. இவ்வமைப்புமுறை பிரம்மன் துவக்கிய பிறப்புநிலையைக் கழுவும் ஊராகச் சீர்காழி விளங்குகின்றது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது. பிரம்மபுரம் சார்ந்த இப்பதிகங்கள் பன்னிருபெயர்களையும், பல்வகையான் சுட்டுவதால் தனிச்சிறப்புடையனவாக விளங்குகின்றன.
2. கழுமலப் பதிகங்கள்.
கழுமலம் என்ற பெயர்சுட்டி இருபதிகங்கள் அமைந்துள்ளன. இவையிரண்டும் பொருட்சிறப்பு வாய்ந்தனவாக விளங்குகின்றன.
2.1 திருவடிப்பெருமை ( 73) ( 1ம் திருமுறை . பதிகஎண். 19)
பிறையணிபடர்சடை எனத் துவங்கும் இப்பதிகத்துள், திருகழுமல இறைவனின் அடிகளை வணங்க மலம் அகலும் என்று உறுதியாகச் சம்பந்தப் பெருமான் காட்டியுள்ளார். எனவே இப்பதிகம் திருவடிப்பெருமை பேசும் பொருட் சிறப்புடையதாக விளங்குகின்றது.
இப்பதிகத்துள் நலமலிகழல் (1,2), இறைவனதடி (3, 10) அதிர்கழல்கள் (4), புலியதளுடையினன் அடியிணை (6), அதிருறுகழலடி (7), அடிசரண் (8), கனலுருவினன் அடியிணை (9) சிவனடி (11) என இறைவனது திருவடி சிறப்பிக்கப் பெற்றுள்ளது. திருக்கடைக்காப்பில் சிவனடி எனக்குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடியிணை தொழ வருவினையெனும் உரைபொடிபட வுறு துயர்கெட, உயர் உலகு எய்தலொரு தலைமையே (6) என்ற அடிகளின் வழி வரும் வினைகளை பொடியாக்கும் பெருமை பெற்றவன் சீர்காழி இறைவன் என்பது புலனாகின்றது. வினைகளைப் பொடியாக்கும் வலிமை கொண்டனவாக, சிவனதடி உள்ளது என இப்பதிகத்தின் வாயிலாக வாழும் உயிர்களுக்குச் சம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகின்றார்.
2. 2 திருக்குணச்சிறப்பு ( 76) ( 1ம் திருமுறை . பதிகஎண். 126)
பந்தந்தால் எனத்தொடங்கும் மற்றொரு திருக்கழுமலப் பதிகத்தில், சிவனது திருக்குணச்சிறப்பு விதந்தோதப் பெற்றுள்ளது. உயிர்களுக்கு வரும் அனைத்துத் துன்பங்களையும் தான் ஏற்றுக் கொள்ளும் பெருங்குணம் வாய்ந்தவனாகக் கழுமலப்பெருமான் விளங்குகின்றான். தாரகன் உடலை, அவன் எதிரிலேயே வெட்டி வீழ்த்திய, ஊழித்தீயைப் போன்ற கோபமுடைய காளியின் வெகுளி உலக உயிர்களிடம் செல்லாவண்ணம் காத்த பெருமான் கழுமலத்தான்(5), சலந்தரன், திரிபுராதிகள் முதலியோரை வென்று ஆண் யானை வடிவுகொண்ட சிவபெருமான், பெண்யானையாகிய உமையம்மையோடு கூடிட, கோபம் தணிந்து, யானைமுகக்கடவுளை தந்திட்ட பெருமான் கழுமலத்தான், அன்பாகிய விதையை இட்டு, புலன் வழி பொருந்தாது, பகையாறையும் கடிந்து, முக்திக்கு இடையூறாகிய சாத்வீக, இராஜ, தாமங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி அந்தக்கரணம் ஒரு நெறிப்பட, மெய்ப்பொருளைத் தியானிப்போரை, சிவமாகச் செய்யும் குணமுடையோன் கழுமலத்தோன் (7), உலகத்தார்க்கு ஏதம் செய்திட்ட இராவணனை மலர் போன்ற திருவடியின் விரல் ஒன்றால் ஊன்றி ஆணவம் அழித்து, அவனையும், உலகையும் காத்த வள்ளல் கழுமலத்தான் (8), அடிமுடி தேடியும் அகப்பாடது வேறு உருகொண்டவன் கழுமலத்தான் (9), சமணரும், பௌத்தரும் போல்வோர் அறியா குணத்தான் இவன் (10) என இப்பெருமானது குணங்களைச் சம்பந்தப் பெருமான் வகைமை செய்துள்ளார். மேலும் திருக்கடைக் காப்பில், இக்குணத்தானை, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசையியல் பா கொண்டு பாடிட அதாவது இருபத்தோரு பண் முறையால் பாடிட திருமகள் சேர்வாள் எனக்காட்டியிருப்பதன் மூலம் பண்வகையால் புதுமைசெய்துள்ளமை தெரியவருகின்றது. இதன்மூலம் அக்காலத்தில் விளங்கியப் பண்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என முடியலாம்.
கழுமலம் சார்ந்த இவ்விரு பதிகங்களைக் கொண்டுப் பின்வரும் முடிவுகளுக்கு வரமுடிகின்றது.
1) இவை முதற் தொகுதியுள் இடம் பெற்றுள்ளமையால் பொருள் வகையான் மட்டும் சிறப்புப் பெறுகின்றன. திரும்பத் திரும்பச் சீர்காழியைச் சிறப்பிக்கும் போதுதான் வேறுபடுத்திப் புதுமைப்படுத்தி பாட வேண்டிய சூழல் சம்பந்தப்பெருமானுக்கு இருந்துள்ளது. முதற்தொகுதியில் இவை இடம் பெற்றுள்ளமையால் வடிவ வேறுபாடு கொள்ளாது பொருள் சிறப்பிப்பனவாக உள்ளன.
2) இருப்பினும் கழுமலத்தின் இரண்டாவது பதிகமாகக் கட்டுரையில் கொள்ளப்பட்ட பதிகம் பண் வகைமைகூறி புதுமை பெறுகின்றது.
3) மொத்தத்தில் கழுமலம், என்பது மலங்களைக், குணங்களைக் கழுவும் தலம் என்னும் கருத்து இருபதிகங்களின் வாயிலாகத் தெரியவரும் உண்மையாகும்.
3. வெங்குரு திருமுக்கால் (75) ( 3ம் திருமுறை . பதிகஎண். 352)
திருமுக்கால் என்கிற புதுவகை யாப்பு முறையினைப் பலபதிகங்களில் சம்பந்தப் பெருமான் கையாளுகின்றார். முதலடி நான்குசீர்களாலும், அடுத்தவடி மூன்று சீர்களானும், மூன்றாமடி நான்கு சீர்களானும், நான்காமடி மூன்று சீர்களானும் அமைவது இம்முக்காலாகும். அதிலும் இரண்டமடியின் சொற்களை மூன்றாமடி பெற்று- நான்காவதாக ஒரு புதியசீர் பெற்று அமையும் முறையில் சம்பந்தப்பெருமான் இதனை அமைத்துள்ளார். இவரின் புதிய யாப்பு முறையாக இதனைக் கருதலாம். வெங்குரு மேவிய இறைவனை விண்ணவர் எனத் தொடங்கி பதிகத்தால் வாழ்த்தியுள்ளார்.
விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல்லார் இடரிலரே(1)
இம்முக்கால் பதிகத்தில் பதினொன்றாம் பாடல் கிடைக்கவில்லை. இராவணன், மால் அயன், பிறசமயத்தார் குறிப்புகளும் இதனுள் இடம்பெற வேண்டிய எட்டு, ஒன்பது , பத்து எண்ணுடைப் பாடல்களில் இடம்பெறாததும், வேறு எவ்விடத்தும் இடம்பெறாததும் குறிக்கத்தக்கது. இப்பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் முதலடி முடிவாக வெங்குருமேவிய என்ற தொடரைக் கொண்டு விளங்குகின்றன. இரண்டாமடி இறைவனைப் பாராட்டி விளிப்பதாகவும், மூன்றாமடி விளித்த பாராட்டிற்குரிய இறைவனை வணங்குவதாகவும், நான்காமடி அதனால் ஏற்படும் பயனை உரைப்பதாகவவும் உள்ளது. இதனால் பயனுரைக்கும் பதினோராம், திருக்கடைக்காப்பு பாடல் தேவைப் பாடாது நின்றிருக்க வாய்ப்புண்டு. பதிகத்தின் பொருள் முடிவு, பயன்நிலை கூறல் முதலியன கருதி அதனை நீட்டிப்பாடவும், குறைத்துப் பாடவும் சம்பந்தப் பெருமான் முயன்றுள்ளார் என்பது இப்பதிக வழி தெரியவருகின்றது,
4. திருச்சண்பைநகர்ங பல்வகைப் பொருள்கோள் கொண்ட பதிகம்( 3)ங
( 1ம் திருமுறை . பதிகஎண். 333)
அந்தமது எனத் தொடங்கும் திருச்சண்பைநகர் பதிகம் ஒவ்வொரு பொருள்கோளை, ஒவ்வொரு பாடலிலும் கொண்ட புதுமை நிலையில் பாடப்பெற்றுள்ளது. அதனால் இப்பதிகம் எல்லாப் பொருள் கோளும் முற்றப்பாடியதாகக் கொள்ளப் பெறுகின்றது.
எடுத்துக் காட்டிற்குச் சிலபொருள்கோள்களை இங்கு விளக்குவது ஏற்புடையதாக அமையும் என்பதால் பின்வரும் பாடல்கள் விளக்கம் பெறுகின்றன.
4. 1 தாப்பிசைப் பொருள்கோள்
தாம்பு- இசை= தாப்பிசை
- ஊசல் கயிறு போல் ஒரு சொல், தான் இருந்த இடத்தே இருந்து முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ள ஏதுவாயின் அது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும். இப் பொருள் கோள் முறையில் பின்வரும் பாடலைச் சம்பந்தப் பெருமான் பாடியுள்ளார்.
விண் பொய்த னான்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொயத னால்வளமிலா தொழியினும் தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறுநிலை யானபதிதான்
சண்பைநக ராசனடி தாழுமடி யார்தமது தன்மையகவே. (7)
இப்பாடலில் இடம்பெறும் உண்பகர என்னும் சொல் அடியவர்களுக்கு உணவுதர என்ற பொருளில் முன்னும், பின்னும் இயைந்துப் பொருள் கூட்டுகின்றது.
மேகம் பொய்த்ததனால் மழை விழாது ஒழிந்தாலும், நிலம் வறண்டதனால் வளம் இன்றிப் போனாலும், அடியவர்களுக்கு உணவு தரும், தமது கொடையின் வழுவாதவர்கள் வாழுமூர் சண்பைநகர்
நெடிய உலகத்தில், பல ஊழி வந்த போதும் அழியாத நகராக விளங்கும் சண்பை நகரில்,அடியவர்களுக்கு உணவு தர, அதனால் அவர்கள் அங்குள்ள சிவனடிகளை, தாழ்ந்து வணங்குவதில் மாற்றம் கொள்ளார்.
இவ்விரு பொருள்நிலையால் இப்பாடலில் தாப்பிசை பொருள்கோள் அமைந்துள்ளது எனக் காட்டலாம்.
4.2.அடிமறிமாற்றுப் பொருள்கோள்
பதிகத்தின் ஒன்பதாம் பாடல் அடிமறிமாற்றுப் பொருள்கோள் முறையில் அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் யாதானும் ஓரடியை, யாதானும் ஓரிடத்து மாற்றினும் பொருள் மாறுபடாதிருப்பது, பொருளிசை மாறாதது அடிமறிமாற்று எனப்படும். இம்முறையில்
நீலவரை போலநிகழ் கேழல்உரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலுமின வேலுமன் கண்ணியொடு நண்ணுபதி சூழ் புறவுஎலாம்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பை நகரே
என்ற பாடல் பொருளிசை மாறா அடிமறிமாற்று பொருள்கோள் கொண்டதாக அமைகின்றது. இதன் பொருளை
1) நீல மலை போன்ற பன்றி வடிவம் தாங்கிய திருமாலும், பெரிய
அன்னவடிவம் தாங்கிய நான்முகனும் காண நேரிய உருவம் ஆனவன்
2) திருமாலும் , தாமரைமலரானும் அறியாமல் வளர்ந்த தீயின் உருவமானவன்
3) மீன், வேல் வடிவொத்த கண்ணாளொடு வாழுபவன் இடம் புறவம்.
4) நெற்பயிர்கள் செழித்த கோலைகளில், குயில், கிளி, இன்னும் பலபறவைகள் தங்கியிருக்கும் சண்பை நகர் உறைபவன்
என வரியடிப்படையில் கொண்டோமானால், இவ்வரிகளை எங்கு மாற்றி வைத்து நோக்கினும், பொருள் மாறுபடாது விளங்கும் புதுமை தெரியவரும்.
4.3 அளைமறிபாப்புப் பொருள்கோள்
புற்றினுள் தலைமுதலாக உட்சென்று உடன் மடிந்து உடலோடும், வாலோடும் ஒட்டி மேல் வரும் பாம்பு போல, ஈற்று நின்ற மொழி இடையிலும், முதலிலும் சென்று இயைத்துப் பொருள் தருவதால் இப்பொருள் கோள் அளைமறி பாப்புப் (பாம்பு) பொருள் கோள் எனப்படும்.
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்
சாரின்முர றெண்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே(11)
என்ற பாடலில் வரும் இறுதியடி மற்ற அடிகளோடு இயைய
3); பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஹhனசம் பந்தனுரைசெய - சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியேஸ்ராஸ்ரா
2) சாரின்முர றெண்கடல் விசும்புற முழணு;கொலிகொள் சண்பைநகர்மேற - சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியேஸ்ராஸ்ரா
1) வாரின்மலி கொணு;கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்- சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியேஸ்ராஸ்ரா
என மூவடிக்கும் சிவலோக நெறிகாட்டி உய்வித்தமையான் இது அளைமறியாப்பு பொருள்கோள் ஆயிற்று.
இவை தவிர ஆற்றுநீர்ப்பொருள்கோளாகச் சில பாடல்களும் அமைந்தள்ளன. இதன் காரணமாக, பொருள்கோள்கள் பலவற்றையும் ஒன்றாகத் தொடுத்து, மாலையாக ஒரு பதிகத்துள் பாடிய, பெருமை, புதுமை சம்பந்தப் பெருமானுக்கன்றி வேறு ஒருவருக்கும் தமிழுலகில் இல்லை.
5. திருப்புறவம்அடியார் பெருமை ( 71) ( 3ம் திருமுறை . பதிகஎண். 342)
பெண்ணியல் உருவினர் எனத் தொடங்கும் இப்பதிகத்துள் அடியவர் தம் பெருமையினை எடுத்துரைத்துப் பொருள் சிறப்பு தருகின்றார் சம்பந்தப்பெருமான்.
சொல்நய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையார் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறவருள் இனருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே(6)
என்ற பதிகத்தின் ஆறாம் பாடலில் அடியவர் தம் உண்மை நிலையினைச் சம்பந்தப்பெருமான் விவரித்துக் கண்டுள்ளார். அடியவரின் இலக்கண முரைக்கும் இப்பாடலைத் தற்காலத்தில் உலகறியச் செய்யவேண்டியது பெருந்தேவையாகும்.
1)அடியவர்கள் சொல் நயமுடையவர்கள்.
2) இனியபொருள்கள் அடங்கியத் தோத்திர மொழிகளைக் கூறுபவர்கள்.
3) வேதம் முதலிய நூல்கள் கருதிச் சொல்லிய பணிகளைப் புரிவோர்.
4) பின்னையர் - பெரியோர்க்குப்பின் நின்று பணிபுரிவோர்
5) நடு உணர் நண்மையர்.
இத்தொடருக்கு இருவகையால் பொருள் கொள்ளலாம். அவை
1) நமசிவாய என்ற இக சுகம் அருளும் பஞ்சாட்சரத்தில் நடுவில் உள்ள பதியின் தன்மையை அறியப் பெற்றவர்கள்.
2) வேதத்தின் நடுவில் பிரதிபதிக்கப்படும் பொருள் சிவனேயென்ற தன்மையை உணரும் பெருமையார்.
என்பனவாகும்.
6) முன்னை முதல் வினைகளாகிய, ஆணவம், மாயை, கன்மம் என்ற மூன்றில் முதலாவதாகிய ஆணவம் அற- அருள் பெற்ற பெருமையார்.
எனக் கூறும் சொல்- முன்னோர் போற்றல்- நமசிவாய மொழிதல்- ஆணவம் அறுதல்- என்ற படிநிலை முறைமை வியக்கத்தக்க அளவில், உயிர்களைத் தக்க வழிப்படுத்தும் நிலையில் அமைக்கப் பெற்றுள்ளமை உலகினர் அனைவரும் அறியத்தக்க வாழ்முறையாகும்.
6. திருக்கண்ணார்கோயில். பழிபோக்கும்பதிகம் (79) ( 1 ம் திருமுறை . பதிகஎண். 101)
இப்பதிகம் கண்ணார் கோயில் விளங்கும் இறைவனைத் திங்கள், பாம்பு கங்கை அணிந்தவன்(1) மண்ணியாறு பாயும் சோலை வாழ்பவன்(2), பூதம் ஏத்த இரவில் நடம் செய்பவன் (3), காட்டானை உரித்தணிந்தவன் சனகாதியருக்கு உபதேசித்தவன்(4), திருமாலால் வழிபடப் பெற்றவன்(5), விடமுண்டவன்(7), இராவணனுக்கு வாளும் தேரும் தந்தவன்(8), மால், அயன் நோக்கத் தீயுருவானவன் (9) என காணுகின்றது.
மேலும் இவனை வணங்கக் கைதொழுவோர்கட்கு இடர் பாவம் நண்ணா (1), நண்ணவல்லோர்கட்கு இல்லை நமன் பால் நடலையே(6), பத்தும்வல்லார் மேற்பழி போமே(11) போன்ற பயன்கள் கிடைக்கும் என்கிறார் சம்பந்தப் பெருமான். இவ்வாறு பயன்கருதி பெருமைமிக்கதாக இப்பதிகம் விளங்குகின்றது.
7. திருக்கடை முடி-கடைமுடி சிவனடி( 1ம் திருமுறை . பதிகஎண். 111)
உயிர்கள் சென்றடை கடைமுடி- சிவனடி எனக்காட்டுவதாக இப்பதிகம் பாடப்பெற்றுள்ளது. திருக்கடைமுடி என்ற தலத்தின் சிறப்புகள் பலவாறு பதிகப்பாடல்கள் அனைத்திலும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் என உலகேத்துங் கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியேஸ்ராஸ்ரா
என இறைவனது தன்மையினை, பதிகத்தின் ஐந்தாவது பாடல் உணர்த்துகின்றது. மேலும் இப்பாடல்களின் அடிகள் அனைத்தும் எதுகைத்தொடை ஒன்றிவருவனவாகத் தொடுக்கப்பெற்றுள்ளமை குறிக்கத்தக்கது. இதன் மூலம் தொடை நலத்துடன் பாடும் பாங்கும் சம்பந்தப் பெருமானிடம் காணப்பெறுகின்றது என்பதும் தெரியவருகின்றது.
இவ்வாறு கட்டுரைப் பகுதியல் விளங்கும் பத்துப் பதிகங்களிலும், ஒவ்வோர் சிறப்பினைக் காட்டிப் படிப்பவரின் உள்ளத்தில் கவியொளியும், உள்ளொளியும் பரவச்செய்து, சம்பந்தப் பெருமான் பெருமை கொண்டுள்ளார். அவரது ஞானவழி தமிழுக்கு அணி, பொருள்கோள், யாப்பு ஆகிய பல நிலைகளில் புதுமை; சேர்ப்பதாக உள்ளது

திங்கள், டிசம்பர் 18, 2006

வேலைக் காளான்கள்

வேலைகள் அதிகமாகிவிட்டன
ஒரு குழந்தை
மற்றொரு குழந்தை
இந்த குழந்தை மாற்றி
அந்தக் குழந்தையின் தேவைகள்

அலுவலக கொடுக்குகளில்
தொக்கியிருக்கும் வேலைக் காளான்கள்
பிடுங்குவதற்கு நேரம் ஆகாதென்றாலும்
காளான்கள் மழைக்காலத்தில் மலியும்

குடியிருக்கும் வீட்டில்
மாடி வீட்டுக்காரரின்
அட்டகாசத்தில் நாமே பார்க்க
நாளுக்கு நாள் வேலைகள்

சொந்த வேலை
பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது

பாங்கில் பணம் எடுக்க
எல்ஐசியில் பணம் கட்ட
டெலிபோன் பில் கரண்ட்பில்
மாதத்தவணைகள் செலுத்த
என வேலைகள் அதிகமாகி விட்டன.

ஆனால் ஆள் ஒன்றுதான்
மதிப்பு ஒன்றுதான்
சம்பாத்யம் ஒன்றுதான்
செலவு பல

அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்



பெண்களின் படைப்புக்களில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பலவகை அனுபவங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களின் கவிதைகளில் சுட்டப்படும் நிகழ்வுகள், ஆண் படைப்புக்களில் வெளிப்படுத்தப்படும் நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டு முற்றிலும் சுயத்தன்மை உடையனவாக, உண்மைத்தன்மை உடையனவாக விளங்குகின்றன. தற்காலத்தில் இப்பண்புடைய பல பெண்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டுவருவது வரவேற்கத்தக்கது.
அ. வெண்ணிலாவின் (முகவரி- 36,தோப்புத்தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி, 604408) ''நீரில் அலையும் முகம்'' (வெளியீடு தமிழினி பதிப்பகம், 342. டி.டி.சாலை.,சென்னை 14.) (1991) தற்காலத்தில் வந்துள்ள பெண்கவிதையாக்கங்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இக்கவிதைத்தொகுப்பு கன்னிப்பெண், மணப்பெண், குடும்ப பெண், தாய்ப்பெண் ஆகியோரின் மனப்போராட்டாங்களைச் சித்திரித்துச் செல்கின்றது. இத்தொகுப்பில் கவிதைகளுக்கு தலைப்பில்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.
இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தன்மை குறித்துப் பின்வருமாறு இக்கவிஞை எழுதுகின்றார். ''பெண் என்ற அச்சமும் சேர்ந்து கொள்கிறது எழுத்தில். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் அந்த உணர்வை உண்டாக்குகையில் எழுத்தில் வருவதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன்'' என்ற கவிஞையின் கூற்று அவரது கவிதைகளில் பெண்ணியல்பு இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்கின்றது.
இக்கவிதைத் தொகுதியுள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பெண்படும் வதைகளை உணரமுடிகின்றது. கவிஞையின் ஐந்தாண்டு கால வாழ்க்கையில்; ஏற்படுத்திக் கொண்ட (அ) அடைந்துவிட்ட மாற்றங்களின் கலவையாக இத்தொகுப்பு அமைகின்றது. வயதுவந்த பெண்ணின் ஐந்தாண்டுகால வாழ்க்கை அவளை பலபடி நிலைகளுக்கு இழுத்து செல்கின்ற உண்மை, அதில் ஈடுபடும் பெண்ணின் உடல், மனம் ஆகியவற்றின் செயல்பாட்டுத்தன்மை இவற்றின் ஒரு விளக்கப்படமாக இக்கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.
லே ஆப் என்ற பெண்ணியவாதி, ''பெண்களின் வரையறுக்கபட்ட எல்லைகள், அதிகாரமின்மை ஆகியன அவர்களின் படைப்புக்களில் அவர்களைப் பேசவைக்கின்றன'' (The marginality and powerless of women is reflected in ... The ways women are expected to speck) என்று பெண்களின் படைப்பாக்கத்தன்மையைக் காட்டுகின்றார். அவரின் கூற்றுப்படி வெண்ணிலாவின் கவிதைகளில் வரையறுக்கப்பட்ட மரபு எல்லையும், அதிகாரமின்மையும் அவரது பெண் தன்மை படைப்புணர்வைக் காட்டிலும் அதிகமாக வெளிப்பட்டுள்ளமையை படித்துப்பார்கையில் உணரமுடிகின்றது.
படிக்கும் பெண், வயதிற்குவந்து, ஆசிரியையாகி, திருமணமாகி, தாயாகி மாறுகையில், ஒவ்வொரு படிநிலையிலும், ஒவ்வொரு எல்லைக்கோட்டில் அடங்கிப்போய் விடுகின்ற மரபு சார்ந்த கட்டுப்பாடுகளுக்குக் கீழ்பணியும், அதேநேரத்தில் அதிலிருந்து தன்னை, தன்போன்ற மற்றவர்களை விடுதலையாக்கத் தூண்டும் கவிஞையாக வெண்ணிலா இத்தொகுப்பு வழியாக அறியப்படுகின்றார்.
கன்னிப்பெண்ணுக்கான எல்லை
''பிறப்பின் வாசம், உடலெங்கும் பரவி நிற்க , ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும் , நடுங்கும் கால்களோடும், சாய்ந்து கொள்ளத் துழாவுகிறோம், தொடாதே தள்ளி நில், என்கிறாள் அம்மாவும்'' (ப. 18)
என்ற இக்கவிதை கன்னிப் பெண்கள்படும் மாதவிலக்கு சிக்கலை கண்முன் நிறுத்துகிறது. அம்மாவின் அரவணைப்பினை வேண்டும் அந்தப் பொழுதில் அம்மாவும் ''தொடாதே தீட்டு'' எனச் சொல்லும் சோகம், அம்மா அப்பண்பைப் பெறாதவளாள, பெற்றிருந்தவள் என்றாலும்,; அந்தச் சிக்கலை எண்ணி ஏன் ஒதுக்(ங்)கவேண்டும்? , பெற்றவள் கூட தள்ளி நிற்கும் அளவிற்கான இவ்வரையறையை யார் ஏற்படுத்தியது என்ற எண்ணங்களை மேற்கண்ட வரிகள் எழுப்புகின்றன.
மேலும் இக்கவிதை பின்வருமாறு முடிகின்றது. ''எறும்புக்கும், நாய்க்கும், எப்படியோ இந்த அவஸ்தை'' என்ற முடிப்புவரிகள், உலக உயிர்களின், குறிப்பாக பெண் உயிர்களின் உடல் வருத்தத்தை வெளியிடுவதாகவும், அதே நேரத்தில் பெண் எறும்பையும், பெண் நாயையும் தள்ளி வைத்துவிடாத சூழலில் மனிதர்கள் மட்டும் தள்ளிவைக்கும் நாகரீகம் கொண்டது ஏனோ- என்ற கேள்வியை முன் வைப்பதாகவும் உள்ளன.
தலைவாரி வகிடு எடுப்பதை மற்றொரு கவிதை கேலிசெய்கிறது. ''சட்டென்று பிரியுமாம், புத்தி தௌ¤வானவர்களுக்கு , அனுபவம் கூறினாள் தோழி '' (ப. 12) எனவரும் கவிதைவரிகளில் தலைவாரி பூச்சூட முனையும் செய்கையில் கூட பெண்களுக்கென வைக்கப்பட்டுள்ள அனுபவ வரையறை சொல்லப் பெற்றுள்ளது. ஆனால் முடிப்புவரிகளில்,
சரிதானென்று தோன்றியது , பாதையாய் பிரிந்து கிடக்கும் , குரங்கின் வகிடு பார்த்து எனக் குறித்திருப்பது குரங்கைக் கேலி செய்கிறாரா?, அல்லது பெண்களை கேலி செய்கிறாரா-? என்பதற்கு சிந்தித்து முடிவு காணவேண்டியுள்ளது. தலை வகிடு எடுப்பதும் அது விலகாமல் அந்த நாளின் இறுதிவரை அழகாய் இருக்க முயலும் பெண் படும் எச்சரிக்கை விநோதங்களை இவ்வரிகள் விமர்சிக்கின்றன.
தலையில் பூ சூட்ட வேண்டாம் என மற்றொரு கவிதை மலருகின்றது. சுவரில் சாயாமல், எதிலும் தலை அழுந்தாமல், தூங்,கப் போனாலும் மல்லாந்து படுக்காமல், எப்போதும் கவனம் அதிலேயே'' (ப. 44) என்ற கவனக் கண்காணிப்பால் பூக்களைத் தலையில் இக்கவிதையில் வரும் தலைவி சூடுவதேயில்லையாம். செடிகளில் மலர்ந்து கீழே விழுவதைக் கவனிப்பதே போதும் என்பது அத்தலைவியின் சமாதானமாகும்.
தலைவாரி, பூச்சூட்டிடும் கன்னிப்பெண்களின் கவனம் கூந்தலிலும், சூடும் பூவிலும், வகிடு எடுப்பதிலும் இருக்கும்போது இந்த நினைவுகளைத் தாண்டி எப்படி அதிகார இயல்பிற்கு, வெளியுலக ஆளுமைப்பண்பிற்கு பெண்கள் வர இயலும் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை.
மணப்பெண்ணுக்கான எல்லை
மணப்பெண்ணிற்கு மணநாளன்று அணியப்பெறும் முக்கிய அணிகலன்கள் அவளை இறுகிக் கிடந்தாலும், அவற்றை அணிவதில் பெருமையை அப்பெண் கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே பிற ஆண்களின் விகாரப் பார்வையினின்று காக்கும் கேடயங்களாக விளங்குகின்றன. இவற்றைப் பின்வரும் கவிதை ''உறுதியாகத்தான் இருந்தேன், சடங்குகளை அணிவதில்லையென்று, அப்பா அம்மாக்கள், அக்கம் பக்கம் என்பதோடு, சுற்றி மேயும் கண்களுக்கு, அணுங்கீகாரம் பெற்ற அடையாளம் காட்ட, கொடி போன்ற சங்கிலி அணிவிக்கப்பட்டது,.... காலுக்கு மோதிரம் போட்டாவது, பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, சடங்குகளை., பிணைக்கயிற்றை நொந்தென்ன, காலம் சுமந்த கனத்தோடு, அழுத்துகின்றன நுகத்தடிகள்(ப. 15) என்றவாறு வலியுறுத்துகின்றது. அணிகள் அலங்காரங்கள் என்பது மாறி மணமானதற்கு அடையாளங்களாகி அவையே ஆண்களின் பார்வைக்குக் காவலாகி நின்றிட, அணிகலன்களை விரும்பாத பெண்களுக்கும் அணிய வேண்டிய சூழலை உருவாக்கிவிட்ட முறைமை மேற்கவிதையால் தெரியவருகின்றது.
காதல் மணம் கொண்ட காதலர்களானாலும், அவர்களின் குடும்ப வாழ்க்கையும் இக்கால நெருக்கடியில் வெகுசாதாரணமான தம்பதிகளாக அவர்களை மாற்றிவிடுகின்றது. மடியில் புரண்டது, கட்டிக் கொண்டது, எல்லாம் தாண்டி, இன்று, எல்லாத் தொடுதலும், அதில் போய்தான் நிற்கிறது., எனக்காகவும், உனக்காகவும் அன்றி அதற்காக(ப. 41) என்ற கவிதைவரிகள்- ஆண், பெண் இணைவுக்கான மூலம் அன்பு அல்ல; வேறொன்றின் தேவை என்பதை இக்கவிதை சுட்டுகின்றது.
குடும்பப் பெண்ணுக்கான எல்லை
குடும்பம் என்ற கட்டமைப்பு, புகுந்த வீடு வந்த பெண்களின் சார்பால் நிலைகொள்ளுகின்றது. இருப்பினும் அவ்வமைப்பு அவர்களுக்கு முழு உரிமையை, விடுதலையை, அதிகாரத்தை அளிப்பதில்லை.
பார்த்துப் பார்த்து வாங்கினோம் , விதவிதமாய் சமைத்தோம், பணிவாய் பரிமாறினோம், கைகழுவிய தட்டைக் கழுவினோம், வாய் துடைக்கக் கூட, முந்தானை கொடுத்தோம், எல்லாம் செய்துவிட்டு, ஏனோ, பசித்திருக்கிறோம், என்றோ ஒருநாள், அருகருகே அமர்ந்து, அவசரமில்லாமல் சாப்பிட்டுவர, விருந்துக்கு வந்தால், ஆண் பந்தி முந்தி என்று, அங்கேயும், அடுக்களையும் காத்திருக்கச் சொல்கிறீர்கள். ( ப.22) என்ற கவிதை வீட்டிற்குள்ளும், வெளியிலும் அதிகாரம் பெறமுடியா மரபு வேலிகளில் பெண்கள் சிக்கியிருப்பதை உணர்த்துகின்றது.
இத்தோடு காலையில் அயர்ந்து தூங்கும் குடும்பப்பெண்ணை எழுப்பிட, முத்தமிட்டு எழுப்பலாம், தலையை வருடி எழுப்பலாம், நெட்டி எடுத்து எழுப்பலாம் என வகைவகையாய் எழுப்ப வழி இருந்தாலும் குடும்பப் பெண்ணை, இவ்வளவையும் விடுத்து, என் கால் தீண்டி, போகிறபோக்கில், எழுப்பிப் போகிறாய் ( ப.48) என அசட்டையாய் எழுப்பும் கணவன், அதனால் ஏற்பட்ட அலுப்புடன் வேலைகளைச் செய்யப் போகும் மனைவி இந்த எல்லைக் கோடுகள் பெண்களின் நீங்காத மரபுசார் எல்லைக் கோடுகளாகிவிடுகின்றன.
தாய்ப்பெண்ணுக்கான எல்லை
தாய்மை என்பது அருமையான அனுபவம். ஆனால் அவ்வனுபவத்திற்கான உயர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத உலகமாக இவ்வுலகம் விளங்குகிறது. அதிலும் வேலைக்குப் போகும் தாய்படும் சிரமம்,; குழந்தையை கவனிக்க முடியாமல் அலுவலகம் சென்று, அலுவலையும் சரியாகச் செய்யாமல் குழந்தையை எண்ணி ஏங்கும் பெண்ணின் உள்ளம் இருபக்கத் தாழ்வை ஏற்பதாக உள்ளது.
தலைவாருகிறேன், புடவை மாற்றுகிறேன், வேகவேகமாக பைக்குள் பொருட்களை அடைக்கிறேன், இவையெல்லாம், குழந்தைக்குச் சொல்கின்றன, என்பிரிவை (ப. 49) என்ற கவிதைவரிகள் பிள்ளை பெற்ற தாயின் அலுவலகப் பிரிவாரம்பத்தை, அவசரத்தை அவலமாகச் சொல்லும்.
அலுவலகம் செல்வதால், குழந்தையை வேறுஒருவரிடம் ஒப்படைத்து விட்டு போகும் ஒரு தாயால், குழந்தைக்குத் தாய்ப்பால் சரிவரக் கொடுக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தவிப்பை,
மணமிக்க, பூச்சூடிக் கொள்கிறேன், கூடுதலாய், முகப்பவுடரும், புடவைகளுக்குக்கூட, வாசனை திரவியம் ,பூசி வைத்துள்ளேன்., வியர்வையை, கழுவிக்கழுவி, சுத்தமாய் வைத்திருப்பதாய், நினைத்துக் கொள்கிறேன், என்னை, அத்தனையும் மீறி, ஆடைகளுக்குள்ளிருந்து, தாயின் வாசம், சொட்டு சொட்டாய், கோப்புகளில் இறங்குகிறது, அவசரமாய், அலுவலக கழிப்பறையில் நுழைந்து, பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது, பசியைத் தின்று அலறும், குழந்தையின் அழுகுரல் ( ப.47) என்ற கவிதை சித்திரிக்கிறது.
குழந்தையைப் பெற்றெடுக்கும், தாய்மைப்பண்பின் பெருமைகளை அருமைகளை உணரா ஆண் உலகத்தைப் பார்த்து, தாய்மையின் இன்னலை அறிந்து கொள்ளா ஆணைப்பார்த்து, கருசுமந்து குழந்தைத்தவம் இருக்கும் பெண்களைச் சுமக்க , எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை எனக் கேள்வி கேட்கிறது ஒரு கவிதை. இவ்வரிகளில் ஆண்களுக்குப் பிள்ளைப் பெற்றுத்தரும் உடல்கூறு இல்லை என்பதையும், அதனைப் பெற்றுள்ள பெண்களைத் தாங்கும் ஆதரவு, மனக்கூறு கூட ஆண்களிடம் இல்லை என்பதையும் கவிஞை உணர்த்தி விடுகின்றhர்.
அதே நேரத்தில் தாய்மை ஏற்படுத்திய உடல் விகாரங்களை இன்னொரு கவிதை உறவின் அடையாளத்தை, உறுப்புக்கள் தாங்கியுள்ளன., மார்புக் காம்புகளும், வயிற்றுச் சுருக்கங்களும், சொல்லும், என் பிள்ளை பிறப்பின், அடையாளத்தை , பிறகெதற்கு எதிர்பார்க்கிறீர்கள், என் அடையாளத்தை, தாலிக் கயிற்றிலும், கால் மெட்டியிலும், வகிடு சிவப்பிலும்.(ப. 55) என எடுத்துக்காட்டுகின்றது.
தாய் என்னும் நிலையில் தன் உடலை அங்ககீனப்படுத்திக்கொண்டு, குழந்தையை வளர்க்கவும் முடியாமல் - வளர்க்காமல் விட்டுவிடவும் முடியாமல், செய்யும் அலுவலகப் பணியைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் தவிக்கும் தாயுள்ளம் எப்போது விடுதலை பெற்று குழந்தைக்கு உற்ற தாயாக, அலுவலகத்திற்கு உற்ற அலுவலாளியாக, தன் உடலுக்கு உள்ள அழகை அவளுக்காகக் காத்துக்கொள்பவளாக மாற முடியும் என்ற தீராத கேள்விக்கு இக்கவிதைகள் உற்ற துணையாகின்றன.
வெண்ணிலாவின் மேற்கண்ட கவிச்சிந்தனைகளின் மூலம் ஒரு பெண் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு படிநிலையிலும் தனக்கு ஒத்துவராத ஒரு பாத்திரத்தை சமூக நலன் கருதியும், குடும்ப நலன் கருதியும் ஏற்கவேண்டியவளாக உள்ளாள் என்பது தெரியவருகிறது. இவற்றில் இருந்து விடுபட எண்ணுவதே, அவற்றைக் குறித்த தன் கவலைகளைப் படைப்புக்களாக மாற்றுவதே இந்நூற்றாண்டில் பெண் தனக்கான அதிகாரத்தை எண்ணிப்பார்ப்பதற்கான ஊற்றுக்கண்ணாகின்றது

வெள்ளி, டிசம்பர் 08, 2006

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருதரங்கம்- 11/12/2006

புதுக்கோட்டை மா, மன்னர் கல்லூரியில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் 11. 12. 2006 திங்கள் அன்று நடைபெற உள்ளது. பல தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பெறும் இக்கருத்தரங்கில் மொத்தம் 31 ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்க உள்ளனர். அழைப்பைக் காண தலைப்பை மீண்டும் சொடுக்குங்கள்

தமிழன் (கி . மு . 2, கி . பி . 20)



ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தின் முற்கால நிலையையும், பிற்காலநிலையையும் ஒப்பீட்டறிவது என்பது எளிதான செயல் அன்று. அதற்கு அக்குமுகாயத்தின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் இலக்கியம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஆராய வேண்டும். இவ்வனைத்துத் துறைகளையும் அறிந்த, துறைபோகிய ஒருவர், மேற்கண்ட இருநிலைகளையும் ஒப்பீட்டு ஆராய்கையில் அக்குமுகாயத்தின் எழுச்சி, வீழ்ச்சி தெரியவரும்.

பாவாணர் வரலாறு, மொழியியல், பண்பாடு, நாகரீகம், இலக்கியம் முதலான பல்துறையறிவு கொண்ட பெருமகனார். அவர் அக்காலத் தமிழனையும், இக்காலத் தமிழனையும் இணைத்துக் கவிதை ஒன்றைப் படைத்துள்ளார். அக்கவிதையுள் கி . மு . 2000 தமிழனையும், கி . பி . 2000 தமிழனையும் கண்டுள்ளார். அக்கவிதை அவரின் நெறிகளைக் கூறுவதாகவும், இக்காலத் தமிழனை எழுச்சிபெறச் செய்வதாகவும் உள்ளது.
பாவாணர் படைத்தளித்துள்ள உரைவிருந்தான திருக்குறள் தமிழ்மரபுரையின் பின்னிணைப்பின் இறுதியில் திருவள்ளுவர் ஈராயிரவாண்டை விழாச் செய்தி என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதையில் கி. மு. 2000 தமிழரான வள்ளுவரை முன்வைத்து தி (கி) . பி . 2000 தமிழனுக்குப் பல சொல்லி மகிழ்ந்துள்ளார் பாவாணர்.
திருவள்ளுவர் காலம் கி . மு . 2- ஆம் நூற்றாண்டென்று கொள்வதே பொருத்தமாம என வள்ளுவரின் காலத்தை, தமிழ்மரபுரையின் முன்னுரையில் வரையறை செய்கின்றார் பாவாணர். எனவே கி. மு. 2000 முதல் கி. பி. 2000 வரையான நீண்ட வரலாறு கொண்ட தமிழன், அக்குறிப்பிட்ட காலத்தில் பல ஏற்றங்களையும், தாழ்ச்சிகளையும், மாற்றங்களையும், ஏமாற்றங்களையும் கண்டிருக்கக்கூடும். அவற்றை மதிப்பீடு செய்யும் வண்ணமாக பாவணரின் இக்கவிதை அமைந்திருப்பதை எண்ணுகையில் அவரின் முக்கால அறிவு புலனாகின்றது.
நூற்றியெட்டு வரிகளைக் கொண்டு, நேரிசை ஆசிரியப்பா யாப்பில், யாக்கப் பெற்ற இக்கவிதை கூறவரும் இன்றியமையாக் கருத்து இது தமிழகமே, இதில் தலை தமிழே என்பதாகும்.
தமிழனின்பழம் பெருமை.
தமிழினத்தீரே எனத் தொடங்கும் இக்விதையின் முதற்பகுதி, தமிழனின் பழம்பெருமையை நிலைநாட்டுவதாக உள்ளது.
முதற்றனித் தாய்மொழி வளர்த்தனர் யாரே
பல்துறை இலக்கியம் பாவினி யன்றபின்
பொருளிலக் கணமும் புணர்ந்தவர் யாரே
முத்தமிழ் எனவே இயலிசைக் கூத்துடன்
ஒத்த மடிமொழி யுணர்த்தினர் யாரே
சோவென் அரண்மேற் சொல்லரும் பல்பொறிக்
காவல் முதன்முதற் கண்டாற் யாரேஸஸ்ராஸ்ரா (8-14)
எனத் தொடரும் இவ்வரிகள் பாவணர் முதன்முதலாகக் கண்டறிந்து உலகிற்கு எடுத்துரைத்த தமிழனின் பெருமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தனித் தாய்மொழி அரணிடத்து பொறி கண்டமை முதலானவை தமிழனின் தலையாய கண்டுபிடிப்பு என்பது பாவணரின் உயிர்க்கருத்துகளாகும்.
சிவனியம் மாலியம் எனுமிரு மதங்¢களும்
செந்தமி ழோரே கண்ட நெறியாம் (46-47)
என்று இடைக்காலத்தமிழனின் வளர்ச்சியையும் காட்டி, நவீனகாலத் தமிழனை விண்கலம் ஏவச்சொல்லி, அவனைப் பின்வருமாறு பாவாணர் தட்டி எழுப்புகின்றார்.
உங்களைப் போன்றே உடலும் உறுப்பும்
உள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தி
திங்¢கள் சென்று திரும்பினர் பன்முறை
....
முதன்முதல் பொறிவினை முகிழ்த்தனர் நும்முனோர்
மதிநீர் முதற் சென்றிருத்தல் வேண்டும் (50-56)
அமெரிக்கருக்கு முன்பே தமிழர் பொறிவினை முகிழ்த்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஏன் செயலாற்ற மறந்தாய் மறுத்தாய் தமிழா எனக் கேள்விக் கேட்டு தமிழன் உயரத் தக்கவினை புரிகின்றார் பாவாணர்.
தமிழன் உயர்வு விரிவாகப் பேசப்படும் இக்கவிதையில், அவன் ஏன் தாழ்விற்கு உள்ளானான் என்பதும் காட்டப்பெற்றுள்ளது.
தமிழன் தாழ்விற்குக் காரணம்.
தமிழன் தாழ்விற்கு முக்கிய காரணம் அவன் ஆரிய அடிமையாகத் திகழ்வதே என ஆணித்தரமாக இக்கவிதையில் பாவாணர் எடுத்துரைக்கின்றார்.
பகுத்தறிவைப் பயன்படுத்தாது வைத்தே
மதவியற் பித்தமும் மடவியற் கொடையும்
பழங்குடிப் பிறப்பொடு பேதமை யூட்ட
நிலத்தே வரென்னும் நெடும்பொய் நம்பி
அடிமைப் பட்டும், மிடிமைப் பட்டும்
அஃறிணை யாயினிர் (20-25)
இவ்வரிகளில் வரலாற்றுச் செய்தியொன்றைச் சான்றாக்குகின்றார் பாவாணர். அன்று ... மூவேந்தரே, ஆரிய உவச்சனை நிலத்தேவனென்று நம்பி நெடுஞ்¢சான்கடையாய் விழுந்து வணங்கியபோது அவர் கட்டளை வழிநிற்கும் பேதைக்குடிகள் எங்ஙனம் மீறி நடக்க வொண்ணும் என்று மூவேந்தரின் அந்தணப்பணிவை குறைகூறி, அன்றிலிருந்து தொடங்கிய அந்தணர் ஆளுகை இன்னும் குறைந்தபாடில்லை என வருந்துகின்றனர். ஆ,ங்கிலேயரை விட, அந்தணரே தமிழர்க்கு அதிகம் தீங்குபுரிந்தவர்கள் என்பது அன்னாரின் கருத்து.
ஆங்கிலராட்சிக் காலத்தில் எங்ஙனம் ஓர் ஆங்கிலேயனைக் காணினும் ஆயிரக்கணக்கான இந்தியர் அல்லது தமிழர் அஞ்சியடங்கி நின்றனரோ, அங்ஙனமே ஆரியனைக் கண்ட போதும் நின்றனர். இம்மையில் உடலை மட்டும் தாக்கிய ஆங்கில மாந்தன் அதிகாரம் அத்துனை வல்லமையுள்ளதெனின் இம்மையிலும், மறுமையிலும், உடம்பையும் ஆதனையும் (ஆன்மாவையும்) ஒருங்கே தாக்கும் நிலத்தேவன் எத்துணை வல்லமையுள்ளதாயிருக்கும் என்ற கருத்தை உள்வாங்கிப் பின்வரும் வரிகள் உருவாகியுள்ளன.
பிரித்தானியத்தினும், பிராமணீயம்
பன்மடி கொடிதே, பகரவுங்கொடிதே
முன்ன தொருவ னுடலையே பிணித்தது
பின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும் (88-91)
இதன் மூலம் பிராமண ஆதிக்கத்தை வன்மையாகப் பாவாணர் கண்டித்துள்ளார். ஆரியர்களே முதல், இடைச் சங்க நூல்களைத் தமது மொழியாக்கிய பின் ஒழித்தனர் என்பதும் அவரது கருத்தாகும்.
முதலிரு கழக நூல்கள் எதுவும்
இதுபோது உண்டோ ஏனிலை ஆய்மின்
ஆரிய மொழியில் அனைத்து மொழிபெயர்த்தபின்
அருந்தமிழ் முதநூல் அழியுண்டவே (28-31)
என்ற இக்கருத்து இன்னும் ஆராய்தற்குரியதாகும்.
சூத்திரர் என்று தமிழரை ஆரியர் வீழ்த்திய சூழ்ச்சியையும் சொல்லி, தமிழர் தாழ்விற்குக் காரணங்களைக் காட்டிய பாவாணர் அவற்றிலிருந்து மீளவும் வழி சொல்கின்றார். அதற்காக வள்ளுவரை முன்நிறுத்தியுள்ளார்.
வள்ளுவரும், வாழும் தமிழரும்
ஆரியர்கள் நூல்கள் வருணபேதத்தினை முன்வைத்து வேதங்களைச் செய்ய, அதனை மறுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனமுழங்கி வள்ளுவர் திருக்குறளினைச் செய்தார். அவர் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கடந்தபின்னும் கூட தமிழன் வருணபேதத்தை விடவில்லை. மாறாக சாதிகளின் எண்ணிக்கை, பிரிவை, சாதிச்சங்கங்களின் திறப்பினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றான். அதனை
திருவள்ளு வராயிர வாண்டைப்
பெருவிளம் பரமாய்ப் பேணிக் கொண்டாடினீர்
அதனா லெதும்பய னானது முண்டோ
எள்ளளவும் அவர் சொல்லேற்றீரோ
பிறப்பொடு தொடுத்த குலப்பிரி வினையாற்
கூண்டுள் விலங்குகள் போன்றடை பட்டே
ஒற்றுமை குலைந்தும் உரனை யிழந்தும்
இனவுணர் வழிந்து, மொழியுயர் வின்றிச்
சிறுமை நிலையிற் பெருமை கொண்டீர் (57-65)
என இழித்துப்பேசுகின்றார் பாவாணர். கி . மு . 2000 ல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பேசிய தமிழன், கி . பி . 2000 உயிர்க்கொரு சாதி காண்பது, சாதி அடிப்படையில் கட்சி வளர்ப்பது மிகப்பெரிய தாழ்வல்லவா இதனை மாற்ற இனி மேலாவது தமிழன் முயல்வானாள என்ற பாவாணரின் சிந்தனை வலம்வரின் தமிழகம் எழும். வள்ளுவத்தமிழரும், வாழும்தமிழரும் ஒன்றாவர்.
தமிழன் உயர வழிகள்
தாழ்வுகளை மட்டும் சுட்டிச் செல்வது அனைவராலும் இயலும். ஆனால் அவற்றிலிருந்து மீளும் வழிகூற அறிஞர்களால் மட்டுமே இயலும். பாவாணர் தமிழன் மீண்டெழ பின்வரும் வழிகளை இக்கவிதையுள் எடுத்துரைக்கின்றார். புத்தாயிரத்தின் புதிய ஆரம்பத்தில் கால்பதித்துள்ள நம் தமிழர் இதனை ஏற்றால் ஏற்றம் பெறலாம்.
1) எஞ்¢சியிருப்பது செஞ்சொல் தமிழே
அதனை யேனும் அழியாது காப்பீர் (26-27)
2) ஆரியமென்னும் பூரிய மொழியை
அகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர் (40-41)
3) கோயில் வழிபாடும் கொண்டாடு மணமும்
வாயில் மொழி தமிழ்வழங்குதல் வேண்டும் (42-43)
4) என்ன பெயரும் இன் தமிழாக்கிக்
கன்னித் தமிழின் கற்பைக் காமின் (48-49)
5) ஒன்றே குலம் உடன்பிறப்பனை வரும்
நிலத்தேவ ரென்றொரு குலத்தோரிங்கில்லை(70-71)
6) குடிமதிப்பிலும் பிற குறிப்புகளிலும்
தமிழன் என்றே தன்குலம் குறிக்க (72-73)
என்ற இத்தமிழாணைகளை இன்றைய தமிழர் ஏற்பாரானால் உலக முதண்மை பெற இயலும். இவற்றுள் எக்கருத்தும், ஏற்க முடியாததல்ல. ஆற்ற முடியாததுமல்ல. ஆற்றி வெற்றிபெற முடியாததுமல்ல. இவற்றினை ஏற்று நடத்திட உறுதி வேண்டும். அந்த உறுதி உடனே வந்திடக்கூடியதல்ல. அனைத்துத் தமிழரும் அறிந்து ஒன்று கூடினால், ஒரே சிந்தனையில் களமிறங்கினால் போதும். வெற்றி கிட்டிடும். இதனைச் சாதிக்க ஓரினமாகத் தமிழர் கூடி, ஒரே சிந்தனை என்னும் ஒருகுடையின் கீழ் வந்திட்டால் பசி , பிணி, பகை நீங்கி தமிழ் ஆட்சி பெறும்,; தமிழன் உடலாலும், உள்ளத்தாலும் இருதிற ஆட்சி பெறுவான் எனக் கருதுகின்றார் பாவாணர். அத்தகைய தமிழ் உலகிற்கு வாழ்த்து கூறுவதாக இக்கவிதை முடிவு பெறுகின்றது.
ஓரினமாகி உலகத்துயர்க
பசியும் பிணியும் பகையும் நீங்கி
இருதிற உடமை ஆட்சியும்
ஒருகுடை நீழல் ஓங்குக உலகே
இக்கவிதையின் மூலம் பாவாணரின் ஆய்வறிவுடன் கூடிய கவிப்புலமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதனை அவரின் தமிழ்நெறிகள் அடங்கிய பெட்டகமாக தமிழ்உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.
muppalam2003@yahoo.co.in
palaniappan