ஞாயிறு, அக்டோபர் 29, 2006

விடியும் பொழுது

ஒருநாள் போல் ஒருநாள்
இருப்பதில்லை

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாதிரி

இருட்டின் முகட்டில்
வெள்ளிக் கம்பி வானம்

இருள்பாதி ஒளிபாதி
மெல்லப்பரவும் ஒளிக் கீற்று

உடன் மேலெழும் வெளிச்சப் பந்து
இப்படி நாளுக்குநாள்
மாறும் நேர விளையாட்டு

கண்களின் பதிவில் நிற்க
மறுக்கும்
பகல், காலை, இரவு

ஒவ்வொரு பொழுதுக்கும்
ஒவ்வொரு முகம்
ஒவ்வொரு நாளுக்கும்

ஒரு நொடிக்கு
ஒருநொடிவித்தியாசம்

மரணம் பிறப்பு
எல்லாம் ஒரு கண நேர நிகழ்ச்சிதான்

அடுத்த பொழுது
உறக்கமாக இருக்கலாம்
என்வசதி அப்படி
அடுத்தவர் வசதி
எனக்கு மாறாய் இருக்கலாம்

அடுத்தது என்ன என்பதின்
கேள்வியிலேயே உலகம் சுழலும்

இணைய உலகம் என்ற புதிய நூல்

இணைய உலகம் என்ற புதிய நூல் ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளேன். இந்நூலில் மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் இணையம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளேன்.
குறிப்பாக இணைய நூலகம், இணைய வழிக் கடிதப் பரிமாற்றம் முதலியன எளிமையான தமி¢ழில் விளக்கம் பெற்றுள்ளன. இதன்விலை ரூ.30மாணவர்களுக்கு எளிமையான அறிமுகமாக இந்நூல் அமையும் தற்போது தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இணையம் குறித்து ஒரு பாடம் அமைக்கப் படுகிறது. அதற்கு இந்நூல் பெரிதும் துணைபுரியும்.
வேண்டுவோர் மு. பழனியப்பன் 25 லெட்சுமி நகர் அரிமழம் சாலை புதுக்கோட்டை என்ற முகவரியில் பெறலாம்.

வெள்ளி, அக்டோபர் 27, 2006

ஏற்கனவே சொல்லப்பட்டவை

இது இப்படித் தான் இவன் இப்படித்தான் இவையெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவை
புதிதாக ஒன்றும் புறப்படப் போவதில்லை
பழைய செய்திகள் பழைய தத்துவங்கள் பழையன புதிதாக ஒன்றும் உருவாவதில்லை
ஓடும் நீரில் அருந்தும் போது மட்டும் சுவை தெரிகிறது அதனால் அது புதுமையுடையதாகிறது
நூலகப் புத்தகங்களைப்போல பழைய வாசனை புதிதாய் எதுவும் இல்லை
நமக்குத் தெரிந்து கொள்ளும் எல்லாம் நமக்குப் புதிது ஆனால் பழையது
வேண்டும்போதெல்லாம் பழையதை புதுப்பித்துக் கொள்கிறோம்
அதுவே பழமையின் புது வடிவம

வெள்ளி, அக்டோபர் 13, 2006

பெண் மொழி ≠ ஆண் மொழி


எழுதும் எழுத்துகளில் வேறுபாடு இல்லை. ஆனால் எழுத்துகள் கூடி உருவாகும் படைப்பில் பால்வேறுபாடு காண இயலும். ஆண்கள் எழுதும் படைப்புகளில் அவர்களின் தனித்த மேலாதிக்க நிலையையும், பெண்கள் எழுதும் படைப்புகளில் பெண்களின் சொந்த உணர்வு வெளிப்பாட்டு நிலையையும் இனம் காண முடியும். இனம் காணப்படும் பெண் எழுத்துகளுக்களின் சிறப்புக் கூறுகள் பெண் மொழியின் அடிப்படைகளாக அமைந்து அவை மேலும் வளர்த்தெடுக்கப்படும் சூழலில் தனித்த மொழியாக ஆண் உட்புகமுடியாத மொழியாக ஆண் சார்பற்ற மொழியாக பரிணமிக்க இயலும். இந்தப் பரிமாணத்தின் மூலம்¢ பன்னெடுங்காலமாக இருந்து வந்த ஒரு தலை பக்க இலக்கிய படைப்பு, திறனாய்வு முயற்சி உடையும். பெண்ணுக்கான கட்டற்ற மொழி உருவாகும்.
இவ்வகையில் உலகஅளவில் பெண் மொழி¢ இருந்ததற்கான ஒரு காட்டு இருக்கிறது. சீனா நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலப்பரப்பு ‘‘ஜியாங்காங்’’ என்பதாகும். இங்கு பெண்கள் மட்டுமே பேசும் ஒரு மொழி உண்டு. அதற்குப் பெயர் ‘‘நுஷ¨’’ ( NUSHU) என்பதாகும். பெண்மொழி அல்லது பெண்பிரதி என்பது இதன் பொருள். இது பெண்கள் தமக்குள்ளே ரகசியமாகப் பேசிக் கொள்ளும் மொழியாகும். ஆண்கள் இதனை அறிந்து கொள்ள முடியாது. படிக்க முடியாது. பயில முடியாது. சீன மொழியோடு தொடர்புடைய ஆனால் அதிலிருந்து மாறுபட்ட ஒரு மொழி இம்மொழி. இது தோன்றுவதற்கு அங்கு நிலவிய சூழல் காரணமாக இருந்தது. இம்மொழி காலம் காலமாக பெண்களிடம் ஒரு தலைமுறையினரால் மறு தலைமுறைக்குப் பரவியது. இந்த மொழி பற்றிய ஆராய்ச்சி 1982 ஆம் ஆண்டில் ‘‘கோங்ஜிமிங்’’ என்ற சீன மொழி ஆசிரியரால் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. ஆனால் இந்த காலத்திலேயே இம்மொழி அழியும் நிலையை எட்டிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் கல்விப் பரவல் இந்த ரகசிய மொழியைத் தடைசெய்து பொதுமொழிக்குப் பெண்களை அழைத்துச் சென்றுவிட்டது.
இந்த பெண்மொழிச் சோக வரலாற்றைக் கேட்கையில் தமிழ் மொழி குறித்தும் பலவகையில் எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மொழியில் உள்ள தடைப்பட்ட பெண் இலக்கிய மரபு தனக்குள் சொல்ல வேண்டிய பெண்செய்திகள் பலவற்றை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. சங்ககாலம், அதனைத் தொடர்ந்து பக்தி காலம் அதனைத் தொடர்ந்து நவீன இலக்கிய காலம் என்று வளர்ந்த சில பெண் படைப்புக் கள மிளிரல்களில் காணலாகும் பெண்மொழிக் கூறுகள், அவை மறைவாகத் தத்தமக்குள் சொல்லிக் கொள்ளும் பொருள்கள் இவற்றை இனம் காணவேண்டிய ஆராய்ச்சி இக்காலத்தில் தேவை என்பதை மேற்காணும் பெண்மொழிச் சான்று தமிழ் பெண் மொழி ஆய்வாளர்களுக்கு உணர்த்துகிறது.
சீனா மொழியின் அடிப்படையிலேயே இருந்து கொண்டு அதிலிருந்து வேறுபட்டுச் செய்யப் பட்ட நுஷ¨ மொழி போலவே தமிழ் மொழியில் இருந்து வேறுபடும் பெண்மொழி இயல்பு அடிப்படைகளை இனம் காணும் போக்கிற்குத் தற்போதைய பெண்ணியத் திறனாய்வுகள் வளரவேண்டும். இந்த ஆய்வால் தலைமுறை தலைமுறையாக தடைபட்டாலும் அழியாமல் வளர்ந்து வந்த பெண் இலக்கிய மரபை, பெண் மொழி இயல்பை காண இயலும்.
இவ்வகையில் பெண் மொழி இயல்பைச் சற்றே உரசிப் பாரப்பதாக இக்கட்டுரை அமைகிறது. பாவைப் பாடல்கள் என்ற இலக்கிய வகைமை பெண்கள் மட்டுமே பாடிக் கொள்ளக் கூடிய இலக்கிய வகைமை ஆகும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய ஒரு வாழ்க்கை முறையும் ஆகும். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளை முன்வைத்து எடுக்கப் பட்ட இந்நோன்பு முறை பெண்கள் தமக்குள் இணைந்து கொள்ளக் கூடிய நன்முறையை உடையது. ஆண்டாளால் படைக்கப் பெற்ற திருப்பாவை இவ்வகைமையுள் தலையாயது.
மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இவ்வகைப் பட்டது என்றாலும் பாடியவர், பாடிய பாடல்களின் எண்ணிக்கை இவற்றால் இது முற்றிலும் மாறுபட்டது. இப்பிரதியில் பெண்ணுக்குரிய வகைமையை ஓர் ஆண் தன் கையகப்படுத்திக் கொள்கிறார். திங்கள் முழுவதும் பாடப்படவேண்டிய முப்பது பாடல்களுக்குப் பதிலாக இருபதை இவர் படைத்துக் குறைத்துக் கொண்டுள்ளார். திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைத் தற்போது இந்தப் பத்து நாட்களுக்கும் பாடும் முறைமை உள்ளது.
பொதுவாக இலக்கிய வரலாறுகள் கருதும் காலமுறைப்படி ஆண்டாள் முன்னவராகவும், மாணிக்கவாசகர் பின்னவராகவும் கொள்ளப்படு¢கின்றனர். இதன்வழி ஆண்டாளை நோக்கி மாணிக்கவாசகர் பாவைப் பாடல்களைப் புனைந்திருக்கலாம். ஆண்டாளின் வாழ்¢க்கை முறை அதாவது கடவுளை அடைந்த முறை இவரைப் பெரிதும் கவர்ந்ததின் மூலம் அதே வாழ்க்கை முறையை இவரும் கைக்கொள்ளக் கருதி¢ இறைவனை நாயக நாயகி பாவத்தில் காணும் போக்¢கில் இவர் பெண்ணாய் தன்னை உருவகப் படுத்திக் கொண்டு படைப்புகளை புனைந்திருக்கவேண்டும் என்ற கருத்து மாணிக்கவாசகர் படைப்புகளைக் காணுகையில் ஏற்படும் பொதுக் கருத்தாக உள்ளது. இவ்வகையில் பெண் பாடிய திருப்பாவை, ஆண் பாடிய திருவெம்பாவை என்ற இரண்டையும் இணைத்து ஆய்வு மேற்கொண்டால் இருவர் பாடிய செய்யுள் மொழியில் வேறுபாட்டைக் காண முடியும். இந்த வேறுபாடு பால்வேறுபாடாக அமைந்து பெண்மொழிக் கூறுகளை வெளிப்படுத்தும்.
இதனடிப்படையில் இரண்டு பிரதிகளில் இருந்தும் ஒவ்வொரு பாடல் மட்டும் இக்கட்டுரையில் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
( திருப்பாவை.29)
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்¢கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
எம்கை உனக்குஅல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப்¢ பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை.19)
இவ்விரண்டு பாடல்களும் ஏறக்குறைய ஒரு பொருளின. பாவை நோன்பின் முடிவில் அருள் வேண்டும் திறத்தன. இவற்றை ஒப்புநோக்கிக் காணும் போது சில பால் வேறுபாட்டு எழுத்துகள் இருப்பதை உணரமுடியும்.
1. தன்னைக் காத்துக் கொள்கிற தொடர்கள், 2, அடக்கத் தொடர்கள், 3. தொடர் கேள்விகள், 4. சாய்வுக் கூற்று முறை (நேர் கூற்றாகக் கூறாமை), 5.செயற்கை பெயரடை, 6. தூய்மையான இலக்கணம் பிறழாத சொல்லாட்சி, 7. நகைப்பண்பு இல்லாமல் இயல்பாய்க் கூறும் முறை, 8. சிறப்பான தனித்த சொல்லாட்சிகள், தொடர்கள் முதலான பண்புகள் பெண்படைப்புகளுக்கு உரிய பண்புகள் என்று ஓர் ஆய்வாளர்[1]¢ காட்டுகிறார்.
சிறப்பான சொல்லாட்சிகள் என்ற பண்பு பெண்மொழிக்குரிய பண்பாகும். மற்றையவை ஆண்களில் இருந்து பெண் படைப்பை வேறுபடுத்துவன என்றாலும் அவை பெண்ணை அவளின் படைப்பை ஒரு வரையறைக்குள் அடக்கத் தக்கன. இவ்வாறு அடக்கமான மொழியைப் பெண்கள் படைப்பு மொழியாகக் கையாளுவதற்கு அவர்கள் வாழ்ந்துவரும் சூழல் மிக முக்கிய காரணமாகும்.
‘‘எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம்’’ என்ற ஆணின் உரிமைக் குரலைப் பெண் எழுத்தில் காண இயலாது. ‘‘சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் ’’ என்று அடக்கியே வாசிக்க வேண்டிய கட்டாயம் பெண் வாழ் சூழலாக இருந்ததால் அவள் உரிமையோடு கடவுளைக் கேட்க முடியவில்லை. போற்றும் காரணம், போற்றிப் பெறப்போகும் வரம் என்றெல்லாம் கேட்காமல் பொருள் எனக் கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
‘‘சேரற்க, செய்யற்க, காணற்க’’ என்ற வாழ்க்கைக் கட்டளைகளை ஒரு பெண் நேரடியாக அறிவிக்க இயலாது. இங்கு மாணிக்கவாசகர் பெண் உருவில் வந்த ஆண் என்பதால் அவரால் கட்டளையிட்டுத் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடிகிறது. சூரியன் எத்திசையில் உதித்தால் என்ன இவை நல்கினால் போதும் என்ற அளவில் இயற்கையைக் கூட அவரால் எடுத்தெரிந்து பேசிவிட முடிகிறது. ‘‘எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ’’ என்று தயவான முறையில் இறைவன் ஏற்றாலும் ஏற்கா விட்டாலும் பணி செய்வது தம் கடமை என ஆண்டாள் பாடியுள்ளார்.
பெண் படைப்பின் அடையாளமாகக் காட்டப் பெற்ற மற்ற இயல்புளும் ஆண்டாளின் பாடலில்¢ காணப்படுகின்றன. என்றாலும் பெண்பாலுக்குரிய தனித்த சொல்லாட்சிகள் தொடர்கள் சிலவும் உள்ளன. ‘‘மற்றை நம் காமங்கள்’’ என்ற தொடராட்சி அவ்வகையில் சிறந்தது. காமம் என்ற சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி தரும் பொருள்கள் பின்வருமாறு[2] அன்பு, ஆசை, புணர்¢ச்சி இன்பம், சிற்றின்ப ஆசை, விருப்பம், ஆசைப் படும் பொருள், குடி, கிராமம் போன்ற பல. இ¢வையனைத்தையும் தாங்கி நிற்கிறது இந்தச் சொல். இதில் எந்தப் பொருள் கொண்¢¢டு இங்கு ஆளப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டியுள்ளது. இதற்கு உரையாசிரியர்கள் விருப்பங்கள்¢ என்ற மேலோட்ட பொருளைச் சொல்லிவிடுவார்கள். உரையாரிசியர்கள், அகராதியாளர் சொல்லும் எல்லாப் பொருளையும் தாண்டி ஆண்டாள் கொண்ட பொருள் வேறானது.
காமம் என்பதற்காகன காமங்கள் என்ற பன்மைமுடிவு தமிழ் மரபில் புதியது. ‘‘மற்¢றை நம் காமங்கள் ’’ என்ற குறிப்பும் இங்கு எண்ணத்தக்கது. பன்மைகள் என்பது பெண் எழுத்தில் காணப்படும் பொதுப்பண்பாகும்.[3] காமம் என்ற சொல்லை ஒரு ஆண் சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் பெண் சொல்லத் தயங்¢குவாள். அப்படிப்பட்ட நிலையி¢ல் தனக்கான காமங்கள்¢ என்பதைவிட நம்எல்லார்க்குமான காமங்கள் என்ற சொல்லாட்சியை ஆண்டாள் பயன்படுத்தியிருப்பது மிகவும் வேறுபட்ட ஒன்றாகும். உனக்கு நாங்கள் ஆளாவோம். அடிமைத் தொழில் செய்வோம் என்ற தொடரின் முடிவாய் இதனோடு உன்னைக் கணவனாகப் பெற்று உன்னோடு நாங்கள் வாழும் வாழ்க்கை அனைத்தையும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையில் உரைப்பதாக இத்தொடர் உள்ளது. இத்தொடரின் இச்சிறப்பு கருதி இது பெண் மொழியின் சிறப்புக்கூறாகக் கொள்ளலாம்.
முடிவாக திருப்பாவை, திருவெம்பாவை இவையிரண்டும் பெண் மொழி ஆண்மொழி என்பதற்கான ஒப்பீட்டுக் களமாக விளங்குகிறது என்பது தௌ¤வு. மேலும் திருப்பாவை பெண்இலக்கியம் என்றநிலையிலும், வகையாலும், வடிவாலும் முழுமையும் நிறைவும் பெற்று பெண்மொழிக்கூறுகள் அடங்கியதாகவும் உள்ளது. ஆண்மொழி பெண்மொழி இவையிரண்டும் சமமானவை அல்ல. ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை.
குறிப்புகள்
--------------------------------------------------------------------------------
[1] The following ten features have been identified as "Women's Language" (based on: Lakoff 1975): Hedges, polite forms, Tag questions, Speaking in italics, Empty adjectives, Hypercorrect grammar and pronunciation, Lack of a sense of humour, irect quotations, Special vocabulary, Question intonation in declarative contexts
[2] கழகத் தமிழ் அகராதி, ப.323
[3] Key, Mary. "Linguistic Behavior of Male and Female." In Readings in Applied Linguistics , 3rd ed., ed. Harold B. Allen and Michael Linn. New York : Alfred A. Knopf, 1982. 284.Mary Key cites Roger Shuy's finding that women are less likely to use syntactic features which are "indicators of lower status: multiple negation, pronominal apposition, plurals, non-standard third person singular verb inflections, and possessives" ("Behavior" 284).
palaniappan

தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்


தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
அறிவிப்பு
தொடரும் என்ற இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது. இதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பதில்கள், சிற்பி பால சுப்பிரமணியத்தின் பேட்டி (நிறைவுப் பகுதி), வழிகாட்டும் நேபாளம் (கட்டுரை), சாயுச்சியம் அல்லது அழிச்சாட்டியம் (கதை), தற்காலப் பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் ஆய்வு (கட்டுரை), உயிர்த்தெழும் சிற்பங்கள் ( கவர் ஸ்டோரி ) ஆகியன இடம் பெற்றுள்ளன.
படைப்புகளையும் கீழ்க் காணும் முகவரிகளுக்கு அனுப்பலாம்.
வேண்டுவோர் தொடர்பு கொள்க
தொடரும்,
கண்ணன் அச்சகம்,
சிங்கம்புணரி
மு. பழனியப்பன்,
25 லெட்சுமி நகர் அரிமழம் சாலை புதுக்கோட்டை , 622 001
muppalam2003@yahoo.co.in
--

புதன், அக்டோபர் 04, 2006

இலவசமாய் ஒரு மடல்


பைசா செலவில்லாமல் ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். முடியுமா? என்று யாராவது சவால் விட்டால் முடியும் என்று நாமும் திருப்பி அவர்களுக்குச் சவால் விடலாம். அப்படி பைசா செலவில்லாமல் இலவசமாய் மடல்களை அனுப்ப, பெற உதவுகிறது மின்னஞ்சல்.

அஞ்சல் நிலையத்திற்குச் சென்று காசு கொடுத்து அஞ்சல் முத்திரை வாங்கி அதனை ஒட்டி அது போய்ச் சேரும்வரை காத்திருந்து அதன்பின்னர் பெற்றவர் பதில் எழுதி அது வரும் வரை காத்திருந்து என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. உடனே உலகத்தின் எந்த மூலைக்கும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் மடல் சென்று சேரவும் , சேர்ந்த இடத்தில் மடலைப் பார்த்தார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவும் வசதி மின்னஞ்சலில் உண்டு. எனவே மின்னஞ்சல்கள் தற்போது விரைவு தபால் வசதி என்பதில் ஐயமில்லை.

இத்தகைய விரைவுத் தபாலை அதன் வசதியைப் பெறுவது குறித்துச் சில செய்திகளை இக்கட்டுரை விளக்குகிறது.

மின்னஞ்சல்களின் தனித்துவம் இன்னும் பல சிறப்புகள் மின்னஞ்சல்களுக்கு உண்டு. மின்னஞ்சல்களின் தனி¢த்துவம் ஒரு வரி மட்டுமே உள்ள அதன் முகவரிதான். உலகம்¢ முழுவதற்கும் அந்த ஒரு வரி முகவரி தனித்து ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்க்கு உரிய உலக முகவரியாக அது விளங்குகிறது. எனவே இந்த முகவரியால் குழப்பம் ஏற்படுவதில்லை. இந்த முகவரியைத் தற்போது பெயரட்டைகளி¢லும் ( visiting card) பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். எனவே மனிதன் ஓர் உலக உறுப்பினன் என்பதை மின்னஞ்சல் முகவரி உறுதி செய்கிறது. குறிப்பிட்ட ஒருவருக்கு வரும் மின்னஞ்சல்களை வேறு யாரும் பிரித்துப் பார்த்துவிட இயலாது. ஏனெனில் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட ஒருவரின் கடவுச் சொல்லைப் ( pass word) பெற்று உள்ளன . இதன்மூலம் அவர் ஒருவர் மட்டுமே இதனைப் பார்க்க முடியும். பதில் அளிக்க முடியும். பிரிக்க முடியும்.

மின்னஞ்சல்களாக கடிதம் மட்டும் அல்லாமல், படங்கள், கோப்புகள் முதலானவற்றையும் அனுப்பலாம். இது மிக முக்கியமான இன்றியமையாத வசதி.

இவ்வாறு நாடு மாறினாலும் வீடு மாறினாலும் மாறத முகவரியைப் பெற்றுத் தருகிறது மி¢ன்னஞ்சல்.

இதன் பயன்பாட்டைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். இதன் செயல்பாட்டைச் சற்று பார்ப்போம்.

மின்னஞ்சல் உருவாக்கம் மின்னஞ்சல் முகவரிகளைப் பெற பல வழிகள் உண்டு. பல சேவை நிறுவனங்கள் இதற்காக செயல்பட்டு வருகின்றன. இணைய இணைப்பு ( web mail) என்ற வகைப்பட்டனவாக இவற்றைக் கொள்ளலாம். யாகூ (Yahoo), ஹாட்மெயில் (hot mail), ரீடிப்மெயில் (rediffmail), ஜீமெயில் ( g.mail ) போன்றன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் ஜீமெயில் சற்று வேறுபட்டது. இதில் முகவரி பெற முன்னர் முகவரி பெற்ற ஒருவர் உங்களுக்கு வரவேற்பு மடல் அனுப்ப வேண்டும். அதன் பின்னரே நீங்கள் இந்த நிறுவனம் வழியாக மின்னஞ்சல் முகவரியைப் பெறமுடியும். மற்றவற்றிற்கு நாமாகவே சென்று முகவரிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வகை தவிர மற்றொரு வழியும் உண்டு. இணைய இணைப்பு பெறும் ஒவ்வொருவருக்கும் இணைய இணைப்பைத் தரும் ஒவ்வொரு நிறுவனமும் மின்னஞ்சல் வசதியைப் செய்து தருகின்றன. தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனம் இவ்வகையில் சிறந்ததாக உள்ளது.
முகவரியை அமைத்துக் கொள்ளும் போது சிலவற்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். முகவரியின் ஒரு வார்த்தை என்பது இப்படித்தான் இருக்கும். Karthi2004@ yahoo.co.in இ¢ந்தவகையில் தான் முகவரி இருக்கும். இவ்வாறு அமைக்கும் போது குறிப்பிடத்தகுந்தவரின் பெயர் என்ற அளவில் அமைத்துக் கொண்டால் மின்னஞ்சலைப் பெறுபவர்கள் உடன் உணர்ந்து கொள்ள இயலும். பெயருக்குப் பின்னுள்ள ஆண்டு இந்தப் பெயரைப் பலரும் கொண்டிருக்கும் வேளையில் அதிலிருந்து இப்பெயரை வேறுபடுத்தும் நோக்கத்¢தில் அமைக்கப் பெற்றுள்ளது. மற்றவை எல்லாம் மின்னஞ்சலின் பொது அமைப்புகள்.

இவ்வகையில் முகவரி பெறும்போது சொந்த தகவல்கள் சிலவற்றை நாம் அதற்கான விண்ணப்பத்தில் நிரப்ப வேண்டும். இவற்றில் மிக முக்கியமான பகுதி கடவுச் சொல் என்பதாகும். இந்த கடவுச் சொல் என்பது பெரும்பாலும் ஆறு எழுத்துகள் அல்லது எண்கள் என்பதாக அதற்கு மேம்பட்டதாக அமைய வேண்டும் என்பது ஒரு நியதி. இந்தக் கடவுச் சொல்லை அமைக்கும்போது அது எளிதில் மற்றவரால் உணரப்படாத அளவில் இருக்கவேண்டும். அதே நேரத்தில் மறந்துவிடக் கூடாததாக இருக்க வேண்டும். பிறந்தநாட்களின் எண்கள், பிறந்த இடத்தின் பெயர் முதலானவையாக இவற்றை அமைத்துக் கொள்வது சிறப்பு. சிலர் 123456 என்ற அளவில் மிக எளிதாகக் கடவுச் சொல்லை அமைத்துக் கொள்வார்கள். இதனைச் சிலர் வேறுவகையில் பயன்படுத்திக் கொள்ள இயலும். எனவே கடவுச் சொல்லில் கவனம் தேவை.
அடுத்து கல்வித் தகுதி, பால், நாடு, தொலைபேசி எண், முகவரி முதலானவை கேட்கப் பெற்றிருக்கும். இவற்றிற்கு உறுதியான உண்மையான தகவல்களை அளிப்பது நல்லது. இவ்வளவும் செய்த பிறகு மின்னஞ்ல் முகவரிகயைப் பெறலாம். முகவரியைப் பெற்றபின் முதல் ம்¤ன்னஞ்சல் நீங்கள் பதிவு செய்து கொண்ட நிறுவத்தில் இருந்து வரும். அதில் தாங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பதிந்து கொண்டமைக்காகப் பாராட்டு தெரிவிக்கப் பெற்று இருக்கும்.

இம்மின்னஞ்சல் முகவரியும் ஒரு மதிப்பாக தற்போது கருதப் படுகிறது. ஜீமெயில் வைத்திருப்பவர்களின் மதிப்பு தற்போது சற்று கூடுதலாக மதிக்கப்படுகிறது. எனவே மின்னஞ்சல் முகவரி என்பது வெறும் முகவரி மட்டுமல்ல. அதில் ஒவ்வொருவரின் மதிப்பும் உள்ளது என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ளவேண்டி உள்ளது.

மின்னஞ்சல் அனுப்புவோம் மின்னஞ்சல்கள் மிகவும் பயன்படக் கூடியவை. ஆனால் மின்னஞ்சல் உடைய நண்பர்களிடத்தில் மட்டுமே இவை பயன்படும் என்பது ஒரு குறை. இருப்பினும் இதில் உள்ள நிறைகள் கருதி நம் நண்பர்களை மின்னஞ்சல் உருவாக்கிக் கொள்ளத் தூண்டுவோம்.

இவ்வாறு தூண்டி மின்னஞ்சல் முகவரி உள்ள நண்பர்களை உலக அளவில் நாம் பெற்றுக் கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதன்பின் மின்னஞ்சல்களை நாள்தோறும் அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

மின்னஞ்சல் பகுதிக்கு முகவரி, கடவுச் சொல் இவற்றைத் தந்து அதன்பின் செல்லவேண்டும். இது ஒவ்வொரு முறையும் செய்யவேண்டிய செயல். அதுபோல் மின்னஞ்சல் பயன்பாடு முடிந்தபின் அதில் இருந்து முற்றிலும் வெளிவந்துவிடவேண்டும். அதற்கு லாக்அவுட் ( logout) என்ற அமைப்பு உதவி புரியும்.

பொதுவான இணைய மையங்களில் நாம் மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்கும்போது இந்த லாக்அவுட் முறையைக் காட்டாயம் பின்பற்றவேண்டும். ஏனெனில் அவ்வாறு லாக்அவுட் ஆகாமல் வெளியேறினால் அடுத்துப் பயன்படுத்தும் பயன்படுத்துநர் நம் மின்னஞ்சலில் நுழைந்து செயல்புரிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே ஒவ்வொரு முறையும் முழு வெளியேற்றம் செய்து கொள்வது சிறப்பானது. நல்லது.

மின்னஞ்சலை அனுப்ப முதலில் செய்ய வேண்டியது அதற்கான அமைப்பைத் தேர்தல்¢ ஆகும். ஹாட்மெயி¢லில் இதற்காக நியூ மெயில் என்ற அமைப்பு உண்டு. யாஹ¨வில் இதற்காக கம்போஸ் என்ற அமைப்பு உண்டு. இவற்றைச் சொடுக்கினால் சிறிதுநேரத்தில் இன்னொரு சன்னல் திறக்கும்.

இந்த சன்னலில் பெரும்பாலும் நான்கு அல்லது மூன்று பகுதிகள் இருக்கும். அவற்றி¢ல் மிக முக்கியமான பகுதி பெறுபவரின் முகவரியைத் தரக் கூறும் ‘‘ to ’’ என்ற பகுதிதான். இதில் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியைத் தரவேண்டும். அதன்பின் பொருள் ( subject), நகல் ( cc- carbon copy) என்பனவற்றை நிரப்ப வேண்டும். பொருள் என்ற இடத்தில் கடிதத்தின் பொருளைக் குறிப்பிடவேண்டும். நகல் என்ற இடத்தில் இந்த மடலின் நகல் மற்ற யார் யாருக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டால் அந்த அந்த ஆட்களுக்கு அது சென்று சேர்ந்துவிடும். பெறுபர் முகவரி, நகல் முகவரி முதலானவை ஒன்றுக்கு மேற்பட்டுப் பலவாக அமையலாம். அவ்வாறு அமைக்கும் போது தொடர்குறியீட்டை (கமா அதாவது , ) என்பதை மட்டும் இட்டால் போதுமானது.அதன்பின் கடிதத்தின் உடல் பகுதிக்கு வரவேண்டும். இதில் தட்டச்சு செய்து செய்தியைத் தெரிவிக்கலாம். இப்பகுதியில் வண்ணங்கள், எழுத்துவடிவங்கள் மாற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. இவ்வகையில் வண்ணங்கள், எழுத்துகள் மாற்றி வடிவமைக்கும்போது கடிதம் அழகாக இருக்கும். ஆனாலும் இதில் ஓரளவு நல்ல வண்ணங்களையும், கண்களை உறுத்தாத வடிவங்களையும் பயன்படுத்துவது நல்லது.

இதன்பின் ஏதேனம் புகைப்படங்களை இதனுடன் இணைத்து அனுப்பவோ, அல்லது கோப்புகளை இணைத்து அனுப்பவோ வழிகள் உண்டு. பெறுதல் முகவரிக்குக் கீழே இந்த வசதி பெரும்பாலும் தரப் பெற்றிருக்கும். அட்டாச்மெண்ட் (attachment) என்ற பிரிவில் அடங்கும் இதைச் சொடுக்கினால் மற்றொரு சன்னல் திறக்கும். இதனுள் படங்கள் அல்லது கோப்பு இருக்கும் பகுதிகளைத் தேர்ந்து பொருத்தவேண்டும். இதற்கு பிரவுஸ் ( brows) என்ற தொடர்¢பு பயன்படும். இதனுள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை, கோப்புகளைச் சேர்க்க முடியும். படங்களைப் பெரும்பாலும் ஜேபிஜி அமைப்புகளாக வைத்துக் கொண்டால் விரைவில் வலையில் ஏறும்.

இதன்பின் சென்ட்( send) என்ற பிரிவைச் சொடுக்கினால் மின்னஞ்சல் செல்ல ஆரம்பிக்கும். சென்று சேர்ந்ததும் செய்தி அனுப்பப் பட்டது என்ற குறிப்பு வரும் சன்னல் தோன்றும். செய்தி சென்று சேர்ந்தது இப்போது உறுதியாகிவிட்டது.

இதன்பின் செய்தி அனுப்பப்பட்ட முகவரிகளை நாம் முகவரிகள் என்ற பிரிவில் இணைத்துக் கொள்ளமுடியும். அப்படி இணைத்துக் கொள்வதன் மூலம் நாம் நமக்கான ஒரு முகவரிக் கோப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இதன்பின் முகவரிப் பக்கத்தில் ஏதேனும் ஒரு எழுத்தைச் சொடுக்கியதும் அந்த எழுத்தில் ஆரம்பமாகும் முகவரிகளைக் கண்டு அவற்றில் தே¬வாயனதைச் சொடுக்கி நாம் முகவரியை இறக்கம் செய்து கொள்ளலாம்.
சில சிறப்பு அனுப்புதல்கள் பிறந்தநாள், மணநாள் அல்லது இதுபோன்ற குறிப்பிடத்தக்க நாள்களில் வாழ்த்து தெரிவிக்க சில சிறப்பு மின்னஞ்சல்கள் உள்ளன. இவற்றிற்கு வாழ்த்து அட்டைகள்( Greeeting card) என்று பெயர். இந்த மின்னட்டைகளை பல நிறுவனங்கள் இலவசமாக அளிக்¢கின்றன. இவற்றைத் தேர்ந்து செய்திகளை எழுதி அனுப்பலாம். இவை அனுப்பும் போது எந்த நாளில் அனுப்பவேண்டும் என்று ஒரு வாய்ப்பு கேட்கப் பெற்றிருக்கும். அதில் குறிப்பிட்ட நாளைச் சுட்டி அனுப்பினால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்று சேர்பவருக்கு அந்த மின்னஞ்சல் கிடைக்கும். இது ஒரு சிறப்ப அனுப்புதலாகும்.

இதன்மூலம் நம் மறதி தவிர்க்கப் படுகிறது. என்றைக்கு நல்ல நாளோ அன்றைக்கு நாம் வாழ்த்து சொல்லமுடிகிறது.

மின்னஞ்சலைப் பெறுபோம், பார்ப்போம் மின்னஞ்சல் முகவரியைப் பெற்றாகிவிட்டது. அதனை மின்னஞ்சல் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து மடல்கள் அனுப்பிவிட்டோம். அவர்களும் திரும்ப நம்முடன் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மடல்களை எவ்வாறு பார்வையிடுவது? அதுவும் மிக எளிதான முறையே.

மின்னஞ்சலைத் திறக்க தக்க ஏற்பாடுகளைச் செய்த கொள்ளவேண்டும். அதாவது முகவரியை இட்டு கடவுச் சொல்லைத் தந்து மின்னஞ்சல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவேண்டும். உள் நுழைந்தபின் யாஹ¨ வாக இருந்தால் இன்பாக்ஸ் என்ற தொடர்பில் நமக்கு வந்த மடல்களின் எண்ணிக்கையை அது காட்டும். அந்த எண்ணிக்கையில் அழுத்தினால் வந்த மடல்களின் விவரம் அனுப்பியவர்¢ பெயர், பொருள் ஆகியவற்றை வரிசைபடக் காட்டும். இவற்றில் சுட்டியை வைத்து அழுத்த மடலைப் பார்க்கலாம். படிக்கலாம்.

ஹாட்மெயிலாக இருந்தால் மெயில் என்ற இணைப்பில் இது தெரியவரும். இதனுள் இன்னொரு கூடுதல் வசதியும் உண்டு. அதாவது நமக்குத் தெரிந்தவர் கடிதங்கள், ஒட்டு மொத்தக் கடிதங்கள் என்ற சில பிரிவுகள் இதனுள் உண்டு. அதில் எது நமக்கு வேண்டுமோ அதை அழுத்தி¢ நாம் வேண்டும் கடிதங்களைப் படிக்கலாம்.

படித்த கடிதங்களுக்கு உடன் பதில் தரவும் வாய்ப்பு உண்டு. அது திருப்பி அனுப்பல் ( reply) என்ற இணைப்பில் வழியாகக் கிடைக்கிறது. இதனைத் தொடர்பு படுத்தினால் முன்னர் சொன்ன கடித வரைவு சன்னல் போன்ற ஒன்றே திறக்கும். இதில் பெறுபவரது முகவரி தானகவே இடம் பெற்றிருக்கும். இது ஒரு கூடுதல் வசதியாகும்.

வந்த மடல்கள் சொந்த மடல்களா? மடல்கள் பல நம் முகவரிக்கு வந்து கொண்டே இருக்கும். இது நல்லதும் கூட. கெட்டதும் கூட. ஏனெனில் சில மடல்களில் கணினியின் உள்கட்டமைப்பை அழித்துவிடக் கூடிய வைரஸ்கள் இருக்கலாம். இதனால் எல்லா மடல்களையும் பிரித்துப் பார்ப்பது நமக்குத் தேவையற்ற வேலையாகிவிடும்.

எனவே அவற்றைத் தவிர்க்கப் பல வழிகள் உண்டு. யாஹ¨ என்ற அமைப்பில் ஸ்பாம் ( spam) என்ற அமைப்பு உண்டு. இதில் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைக் குறியிட்டுச் சேர்த்துவிட்டால் அவை மீண்டும் நமக்குத் தெரியவராது.

தேவையற்ற மடல்களை அவ்வப்போது அழித்துவிடுவது நல்லது. அதற்கு மடல்களைக் குறியிட்டு டெலிட் ( delete ) என்ற தொடர்பை அழுத்தி நீக்கிவிடலாம்.

எனவே வந்த மடல்கள் நமக்குச் சொந்தமானவையாக இருந்தால் பிரிக்கலாம். சொந்தமடல்களாக இல்லாத நிலையில் நீக்கிவிடலாம்.
இவைபோன்ற இன்னும் பல பயன்கள் உள்ளன. தேவையான சில மட்டுமே இங்கு விரித்துரைக்கப் பெற்றுள்ளன. மற்றவை நீங்கள் உள்ளே சென்று தேடிப் பெறலாம்.

மின்னஞ்சல்களின் வேறுபயன்பாடுகள் மின்னஞ்சல் முகவரிகள் கணினி வழி உரையாடலுக்கும், சில தளங்களில் பதிந்து கொள்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வகையில் மின்னஞ்சல் என்பது இணைய உலகில் பாதி இடத்தை வகிக்கிறது என்று கூறினால் மிகையாகாது.

தமிழில் மின்னஞ்சல்கள் தற்போது தமி¢ழில் மின்னஞ்சல்கள் அனுப்பும் முறை வந்துவிட்டது. மேற்கூறிய முறைப்படி தமி¢ழில் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் போது தமிழ் எழுத்துருக்களையும் இணைப்பாக இணைத்து அனுப்ப வேண்டும். இதன்மூலம்¢ பெறுபவர் அந்த எழுத்துருவைப் பெற்றுப்பின் அதனை வாசிப்பார்.

வேறு ஒருமுறையிலும் தமிழ் அஞ்சல் அனுப்பலாம். இதற்க முரசு அஞ்சல் என்ற தனி அமைப்பே உள்ளது. இது சிங்கப்பூர் தமிழ் நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு முரசு அஞ்சல் அனுப்புவரிடத்தி¢லும் பெறுபவரிடத்திலும்¢ இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை என்றாலும் இலவசமாக இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு தரப் பெற்றுள்ளது.

தற்போது யுனிகோட் என்ற எழுத்து முறை பரவலாக்கம் பெற்றுள்ளது. இதன்வழியாக தமிழ் அனைத்து கணினிகளில் சிப் எனப்படும் உயிர்ப்பகுதிகளில் சேமிக்கப் பெற்றுள்ளது. இவ்வகை எழுத்துருக்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் கடிதங்கள் தமிழில் படிக்கத்தக்கனவாக உள்ளன.
எனவே பைசா செலவில்லாமல் கடிதம் அனுப்பவும் கடிதம் பெறவும் முடியும் என்பது உண்மைதானே...

செவ்வாய், அக்டோபர் 03, 2006

திருவரங்குளம்



புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி செல்லும் தார்ச்சாலையில் உள்ள முக்கியமான இடம் திருவரங்குளம். திருவும், நீரும் நிறைந்து நிற்கிற இந்த ஊரின் குளக்கரையில் அருங்குளத்தார் -பெரிய நாயகி கோயில் அமைந்துள்ளது. இது சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெய்வ நகரம்.


அருங்குளநாதர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இவரைச் சுற்றிப் பரிவார தெய்வங்கள் உள்ளன. அவர்களுள் முக்கியமானவர் வீணையை ஏந்தி இருக்கும் தட்சிணாமூர்த்தி. வீணாதர தட்சிணாமூர்த்தி என்றே இவர் அழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் அணிவகுப்பு உள்ளது. இவற்றைக் கடந்து போகும் வழியில் ஒரு நினைவுக் கல் உள்ளது. அதில் ஓர் அரசன் குதிரையில் வர அவனைச் சுற்றி அவனின் பரிவாரம் வரும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இதன்மேல் தமிழ் எழுத்துக்களாலான இருவரித் தொடர் உள்ளது. அரசன் வருகையைக் குறித்ததாக இது அமைந்திருக்கலாம்.
வெளிப்புறத்தில் பெரிய நாயகி சன்னதி உள்ளது. கோயில் மேல் விதானத்தில் ஓவியங்கள் உள்ளன. இதில் ஓர் ஓவியம் பால் விற்பவர் ஒருவர் அருங்குளநாதரை வழிபடுவதாகவும், அவருக்குப் பின்னால் அரசன் நிற்பதாகவும், அதற்குப் பின்னால் தேவதரு நிற்பதாகவும் வரையப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு வாய்வழிக் கதை உள்ளது.
கோயில் தோன்றுவதற்கு முன்னால் இப்பகுதி காடாக இருந்ததாகவும், இவ்வழியே பால்விற்கப் போன ஒருவரின் பால் பாத்திரம் இந்தக் காட்டின் குறிப்பிட்ட பகுதியில் தினம் சிந்துவதாகவும் அந்த வாய்வழிக் கதை தொடங்குகிறது. இது ஏன் இப்படி நடக்கிறது என சந்தேகம் உற்ற அந்தப் பால் வியாபாரி ஒரு நாள் இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கிறார். அப்போது கல் ஒன்று தட்டுப்பட அதன்மீது இவரின் தோண்டல்பட ரத்தம் கசிகிறது. உடனே பயமுற்ற அவர் ஊராரிடம் சொல்லி, கோயில் கட்ட வைத்தார் என்ற இந்தக் கதையின் சான்றாக மேல் விதானப் படம் அமைகிறது. இதன்பின்னர் அரசரும் வந்து வழிபட்டனர் என்பதாக அந்த நினைவுக்கல் பகுதியையும் சேர்த்தும் வருவித்துக் கொள்ளலாம்.


கோயிலின் ஒரு மூலையில் ஒரு கல்தூண் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பனைமரம். அதில் தொங்கும் பனம்பழங்கள், பக்கத்தில் ஒரு முத்தலை சூலம் ஆகியன வடிக்கப்பட்டுள்ளன. இதற்கும் ஒரு கதை உள்ளது. வேடன் ஒருவன் காட்டில் ஓர் அதிசய பனைமரத்தைக் கண்டானாம். அது தரும் பழங்கள் மற்ற பழங்களைவிட சற்று வேறுபட்டிருந்தனவாம். இதை உணர்ந்த அவன் இப்பழங்களை விற்க முடிவு எடுத்தான். குறிப்பிட்ட ஒரு செட்டியாரிடம் பழங்களைத் தினம் விற்றுத் தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, மிளகாய் முதலியவற்றைப் பெற்று வந்தான். இறுதியில் அந்தப் பனைமரம் இற்று விழப்போகும் நேரத்தில் ஒரு பழம் தந்தது. அந்தப் பழம் சற்றுச் சிறியதாகச் சூம்பிப்போய் இருந்தது. இதனை எடுத்த வேடன் இதனை உடைத்துப் பார்க்க ஆசைப்பட்டான். உடைத்துப் பார்த்தால் அந்தப் பழத்தில் முழுவதும் வைரம், வைடூர்யம் ஆகியன மாதுளம் பழ முத்துக்கள் போல இருந்தன. இந்தப் பழத்தின் மேன்மை அறிந்த வேடன் இதுவரை செட்டியாரிடம் தந்த பழங்கள் குறித்து யோசித்தான். ""ஓஹோ, இந்தச் செட்டியார் நம்மிடம் வெறும் உப்பு, புளி, மிளகாய் தந்து விட்டு பொன் பொருளை அள்ளிக்கொண்டார்'' என்பதாக உணர்ந்தான். அவரிடம் வேடனுக்காகப் பலர் சென்று நியாயம் கேட்டனர். இச்செய்தி ஊர் முழுவதும் பரவி அப்போதிருந்த அரசன் காதிற்கும் சென்றது. அரசன் வந்தான். பொன் பொருள் தரும் பொன் பனைமரத்தைப் பார்க்க விரும்பினான். எல்லோரும் சென்று பார்க்கும்போது அந்த மரம் இருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்ததாம். இந்தச் சுயம்பு லிங்கத்திற்கு, பிறகு கோயில் கட்டப்பட்டதாம். செட்டியாரிடம் சென்று அரசன் பொன் பொருள் பற்றி விசாரிக்க அவர் இது என்னுடையது அல்ல என்பதால் நான் அவற்றை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்துள்ளேன். இதோ இவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார். பொன் பனம்பழங்கள் அரசு சொத்தாயின. இக்கதைக்கு மேலே சொன்ன கல்தூண் சான்று கூறுகிறது.
இவ்வாறு வாய்வழிக் கதைகள் பல இக்கோயில் பற்றி உலவுகின்றன. பெரிய நாயகி பற்றியும் பல வாய்வழிக் கதைகள் உள்ளன. ஆசையாய் பெற்ற பெண்ணை கோயிலுக்குத் தருவதாகச் சொன்ன தாய் வார்த்தை மாறியதால் பெரியநாயகியாக அந்தப் பெண் தெய்வநிலை சேர்ந்தாள் என்பன போன்ற பல கதைகள் இந்த அம்மனுக்கும் உண்டு. இவற்றில் மெய் இல்லாமல் இல்லை. பொய் கலவாமல் இல்லை. இவை யுகம் தோறும் இறைவன் போலவே தொடரத்தக்கன.


கோயிலின் வெளி மண்டபம், இராச கோபுரம் முதலியன கோயிலின் பெருமைக்குச் சான்றாவன. அருங்குளநாதர் குளத்தின் கரையில் வீற்றிருப்பதால் குளத்தின் குளுமையும் அதன் அருளும் அவரிடம் எப்போதும் உண்டு. அருள் தருவதற்காகவும் பெறுவதற்காகவும், பெற வருபவர்கள் தங்குவதற்காகவும் பல சத்திரங்கள் இங்கு உள்ளன. இவற்றில் தங்கி நாமும் வழிபடலாம்