வெள்ளி, மார்ச் 31, 2006

தமிழகக் குடும்ப வாழ்க்கை


குடும்பம் என்பதற்கு உறவு, ஒரு குடியிலுள்ளோர், வீடு என தமிழ் மொழியகராதி பொருள் கொள்ளுகிறது. வாழ்க்கை என்பதற்கு ஜீவிப்பு எனப் பொருள் கொள்ளலாம். குடும்ப வாழ்க்கை என்பதற்கு ஒரு வீட்டின் ஜீவிப்பு என்று நேரடியாகப் பொருள் கொள்வோம்.
நேற்றையக் குடும்ப வாழ்க்கை
சென்னைத் தொலைக்காட்சியில் 1992 தீபாவளி அன்று ஒரு பட்டிமண்டபம் ஒளிபரப்பப்பட்டது. அதன் தலைப்பு எது சிறப்பு? தனிக்குடும்பமா-கூட்டுக் குடும்பமா? என்பதாகும். நடுவர் கோ. சாரங்கபாணி வாதங்களைப் பரிசீலித்து விட்டுத் தனிக்குடும்பமே சிறந்தது அதுவே தேவையும் கூட என முடிவு சொன்னார். அடுத்த வார ’’எதிரொலியில்’’ (வாசகர் கடிதப்பகுதி ) வந்திருந்த, வாசிக்கப்பட்ட, 31 கடிதங்களும் இத்தலைப்பின் முடிவைப் பற்றி விமர்சனம் செய்திருந்தன, அனைத்துக் கடிதங்களும், தனிக்குடும்ப முடிவு தவறான முடிவு, கூட்டுக் குடும்பமே தமிழகத்தின் மரபு, அதுவே தேவை எனக் கூறியிருந்தன.நேற்றைய தமிழகத்தை, அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கிற போது தனிக்குடும்பம் ஒரு சோதனை முயற்சிக்காக ஏற்று நடத்தப்படிருக்கின்றது என்பதைக் காணமுடிகின்றது. திருமணம் ஆனவர்கள் எவ்வாறு தன் வாழ்வை நடத்திக் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளும், சோதனை முயல்வாக தனிக் குடும்ப முயல்வு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தலைவனும், தலைவியும், தனி குடும்ப வாழ்வில் இன்பங்கண்டனர் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கான பல சான்றுகளை சங்க இலக்கியப் பாடல்கள் தருகின்றன. சங்க காலத்தில் ஒரு கணவனும், மனைவியும் இனிய வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக, தாயொருத்தி பகலெல்லாம் நடந்து வந்து மாலை நேரத்தில் இவர்களின் வீட்டிற்கு வருகின்றாள்.அப்போது அவள் கண்ட காட்சி, அவள் பிள்ளையின் வீட்டின் முன் ஒரு மலர்த்தோட்டம் இருந்தது. அங்கே ஒரு அகலமான மேடை, அம்மேடை அருகில், முல்லைக்கொடி அடர்ந்து படர்ந்து, மலர்களைச் சுமந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் பாணர் முல்லையாழில் முல்லை நிலத்து இன்னிசையை மீட்டிக் கொண்டிருந்தனர். கணவன் மேடையின் மேல் முகமலர்ச்சியுடன் அமர்ந்து, எதிரேயிருக்கும் தன் மகனை எடுத்துத் தன் தொடையின் மேலே அமர்த்தி, அக்குழந்தையின் இரு குழந்தை கைகளையும் பிடித்து, யாழின் இசைக்கு ஏற்பத் தாளம்கொட்டுமாறு செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான். வேறொரு புறத்திலே மனைவி முல்லை மலரைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள். பின்பு தான் தொடுத்த மாலை ஒன்றினைக் கணவன் மடிமேல் தாளம் கொட்டிக்கொண்டிருந்த சிறுவனுக்குச் சூட்டி, மற்றொன்றை, தனக்கும் சூட்டிக் கொண்டாள். கணவன் மனைவியின் அழகை அப்போது, பருகிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தாய் வீட்டிற்கு வர, இந்நிகழ்வையெல்லாம், தாய் கண்டு மகிழ்ந்தாள்(1).இதைப் போல பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் தனிக்குடும்ப நிலையை விளக்கிக் காட்டியுள்ளன. சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த இலக்கியங்களிலும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையைக் காணமுடிகிறது. கோவலனும் கண்ணகியும், மணம் முடித்த பின் ’’மனையறம் படுத்த காதை’’ வழியாக தனிக் குடும்பம் நடத்த முனைகின்றனர்(2). குடும்ப விளக்கில் பாரதிதாசனார், பெற்றோர்களை விடுத்த தனிக்குடும்பத்தினை தலைவன் நடத்தும் நிலையை ’’இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்’’ என வெளிப்படுத்துகின்றார் (3).இத்தகைய சான்றுகளின் மூலம் தனிக் குடும்ப நிலை வழிவழியாகத் தமிழகத்தில் நடை பெற்றிருப்பதை அறியலாம். ஆனாலும் தனிக்குடும்ப வாழ்வில் சுற்றத்தாருக்கும், பெற்றோர்க்கும் உரிய தொடர்பு தரப் பெற்றிருந்தது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்.தமிழ் மரபில் களவு, கற்பு என்ற இரண்டு நிலைகள் உண்டு. களவென்பது காதல் வாழ்க்கை. கற்பு என்பது மணவாழ்க்கை. கற்பு வாழ்க்கையே குடும்ப வாழ்க்கை எனக் கொள்ளப்படுகின்றது.’’தலைவனும், தலைவியும் இவ்வுலகத்தில் ஒன்றாய்ப் பிணைந்து, சுற்றத்தாரோடும், மக்களோடும் கூடி இல்லறம் நிகழ்த்தும் பொழுது உலகத்தில் நுகர வேண்டிய நுகர்வுகளை எல்லாம் ஒவ்வொன்றாய் நுகர்ந்து அவை நிலையில்லாதன என அறிந்து தௌ¤வு பெற்று நிலையான வீட்டின்பத்தை விரும்பி வாழ்தல் தான் குடும்ப வாழ்வின் பயன்’’ என்கிறார்’’ தொல்காப்பியர்(4). வையத்துள் வாழ்வாங்கு வாழும் இம்முறையே குடும்ப வாழ்வின் சிறப்பாகும்.இல்வாழ்வில் தலைவியும் தலைவனும், உடல் உயிராகவும், உயிர்- உடல் ஆகவும் வாழ்ந்திருக்கின்றனர். இன்பம் நுகர்வதற்கும், இல்லறக் கடன்களைச் செய்வதற்கும், இருவராக பிரிந்து நின்றே செயலாற்ற வேண்டியிருப்பதால் இவ்வுலகில், ஆணும் பெண்ணும் இருவராய்ப் பிறக்கின்றனர். கடன்களைப் பொறுப்புடன் செய்யும் போது இடையிடையே ஆணும் பெண்ணும் பிரிதல் வேண்டியிருக்கிறது. தலைவனும் தலைவியும் அப்பிரிவை பூ இடைப்பட்டலும், ஆண்டு கழிந்ததைப்போல் உணரும் மகன்றில் பறவையின் பிரிவைப் போலக் கருதியுள்ளனர்(5). ஒருவர் பிரிய நேரின் மற்றவர் இறக்கக் கருதியுள்ளனர். உயிரின்றி உடல் இயங்கல் இல்லை போல, தலைவன் தலைவியரின் இல்லற வாழ்வு இணைந்தே நடைபெற்றிருக்கின்றது.குடும்பத்தில் தலைவியின் பங்கினைக் குறுந்தொகைப் பாடலொன்று அழகாக விளக்குகின்றது. ஒரு இலக்கியக் குடும்பம் அது. கணவனுக்கு முதன்முதலாக, தானே சமைத்து உணவிட மனைவி விரும்புகிறாள். தயிரைப் பிசைந்து மோர்க்குழம்பு ஆக்குகிறாள். தயிர் கட்டி பட்டிருக்கின்றது. அதனைத் தன் காந்தள் விரல் நோகத் தலைவி பிசைகின்றாள். பிசைந்த போது விரல்களின் இடுக்கில் தயிர்த்துளிகள் ஒட்டிக் கொள்கின்றன. பின் அதனைத் தக்கவாறு பாகம் செய்ய அடுப்பில் ஏற்றுகிறாள். அப்போது ஆடை சிறிது நெகிழ அதனையும் தன் கையால் எடுத்துச் சொருகிக் கொள்கிறாள். இப்போது ஆடையில் தயிர் துளிகள் பின் தாளிப்பதற்காக பாகங்களை எடுத்து அடுப்பில் வைக்கிறாள். கண்நோக புகை படிய, பார்த்துப் பாரத்துத் தாளிக்கின்றாள். ஒரு வழியாய் மோர்க்குழம்பு வைத்துவிட்டுத் தன் கணவனுக்கு உணவிடுகிறாள். கணவன் அதனை இனிதாய் இருக்கின்றது என உண்கின்றானாம். இந்தப் பெருமைப் பேச்சு, அவளின் துன்பத்தையெல்லாம் கரைத்து, அவளை நாணிப் போகச் செய்து விடுகிறது(6). அப்படிப்பட்ட இலக்கிய வாழ்வை நேற்றை தமிழகத்தோர் வாழ்ந்திருக்கிறார்கள்.குடும்பத்தின் பயன்இவ்வளவு பெருமை பெற்ற குடும்ப வாழ்விற்கு பயன் என்ன என்ற வினாவிற்கு விடை - மக்கட் பேறாகும். ’’குறுகக் குறுக நடந்து சிறிய கையினை நீட்டி, உணவுக் கலத்தில் கிடந்ததைத் தரையிலே இட்டும். கீழே கொட்டியும், தோண்டியும், வாயிற் கவ்வியும், கையால் துழாவியும், நெய்யுடைச் சோற்றை - உடம்பில் சிதறியும் எனப் பல விதங்களில் உணவினை உண்ணும் மக்களைப் பெறாதவரின் வாழ்க்கை, பயனில்லாத வாழ்க்கை’’(7) எனப் புறநானூறு பேசுகிறது. மகவின் சிறுகை அளாவிய கூழ்போல வேறொரு அமுதம் உலகில் இல்லை என்கிறது திருக்குறள்.குடும்பத்தின் பயன் என வருகிறபோது, மக்கட் பேறுதான் அதில் முதலிடம் வகிக்கின்றது. தாய் மகனைப் பெறலும், தந்தை சான்றோனாக அம்மகனை ஆக்கலும் கடனாகக் கொண்டு சங்கத் தமிழர் வாழ்ந்திருக்கின்றனர்(8). குடும்பத்தின் கடமைகள்சங்க காலத் தமிழ்க் குடும்பங்களுக்கு, கடமை என்ற ஒன்று இருந்திருக்கிறது. இல்லறத்தான் என்பான் இயல்புடைய மூவர்க்குத் துணையாக வாழ்தல் வேண்டும்(9). அதுவே அவனின் கடமையாகும். துறவறத்தோர், விருந்தினர், சுற்றத்தார் என்ற மூவர்க்கும் துணையாக இல்வாழ்வினர் அமைய வேண்டும்.விருந்தினர் என்பார், முன்பின் அறியாதவராய்ப் பசித்து வரும் இல்லற நிலையினர். நற்றொழில் காரணமாக இடம் பெயரக் கருதும்போது, தமக்கு வேண்டிய உணவு கருதி முன்பின் அறியாதவரின் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள் விருந்தினர்கள். இவர்களை உபசரித்தலை சங்ககாலக் குடும்பத்தினர் கடமையாகக் கொண்டனர்.தலைவன் ஒருவன் தான் சந்தித்த தலைவியிடம் ஒரு உறுதி செய்து தருகிறான். தலைவியே உன்னை நான் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி, வரும் விருந்தினருக்கு உணவளித்து அவர்கள் உண்ட மிச்சிலை நான் உனக்களித்து உண்பேன் என்னை ஏற்பதிலே உனக்கு ஒரு குறையும் இருக்காது(10)’’ என உறுதி கூறுகிறான். எனவே நேற்றைய தமிழகத்தில் விருந்து புரத்தல் சிறப்பாகக் கருதப்பட்டுள்ளது என அறியலாம். ’’செல்விருந்து பார்த்து வருவிருந்து நோக்கிய’’ (11) அக்கால நிலையை வள்ளுவரும் குறிப்பிடுகிறார். சுற்றமெனப்படுவர் - உடம்பின் தொடர்பாலும், பிறவற்றாலும், சூழ்ந்து நிற்பவர் ஆவர். இவரன்றி இடத்தின் தொடர்பாலும், அலுவல் தொடர்பாலும் சுற்றம் ஏற்படலாம். துணையற்ற பெண்டீர்க்கும், ஏழைச் சிறுவர், சிறுமியர்க்கும், உண்டி உணவு கொடுத்தல்- தலைவன் தலைவியர் வாழ்வில் ஒரு கடனாகக் கருதப்பட்டது. ஒளவையாரை அதியமான் புரந்ததும், பாரி, கபிலர் முதலியவரைப் புரந்ததும் இப்பாற்பட்டதாகும். துறந்தோர் என்போர் அனைத்தையும் துறந்தவராவர். எனவே அவர்களின் வாழ்வும் இல்லற வாழ்வில் திகழ்வோரின் நிலையை எண்ணியே வாழ வேண்டிய அவசியம் இருந்தது. எனவே இவை மூன்றும் சங்ககால இல்லறத்தார் கடமை என உணரலாம்.பரத்தைஇல்லற வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தலைவன் தலைவியை விட்டுப் பிரியக் கூடிய சூழல் ஏற்படலாம். இப்பிரிவிற்கு ஆறு காரணங்களை இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். ’’பரத்தை, ஓதல், காவல், தூது, துணை, பொருள் வயிற்பிரிவு’’ என பிரிவு அறுவகைப்படும். இதில் பரத்தை மட்டுமே- தலைவனின் மாறுபட்ட ஒழுக்கம் கருதிய பிரிவாகும். மற்ற ஐந்தும் கடமை கருதியதாகும். பரத்தைபால் பிரிதல் என்றே இதனைத் தனியாக வகுத்து அதற்குரிய காலமும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வொழுக்கம் மன்னர் முதல் அனைவருக்கும் ஏற்கப்பட்டிருந்தது.பேகன் என்ற மன்னன், தன் மனைவியை விடுத்து பரத்தை பால் சார்ந்திருந்தான். அதனை இடித்துரைத்து அரிசில்கிழார் போன்ற புலவர்கள், அவனை திருந்திய வாழ்விற்கு அழைத்து வருகின்றனர்(12) பேகன் பரத்தை ஒழுக்கம் கொள்ளினும் அவனின் மனைவி கண்ணகி, அவனையே நினைத்து வாழ்ந்திருத்தலைச் சிறப்பு எனச் சங்க கால புலவர் கருதினர். ஆடவன் மாறினும் மனையுறை மகளிர்க்கு (13) ஆடவரே உயிர் என வாழ்தலே சிறப்பாக, அக்கால சமுதாயம் கருதியிருக்கிறது.காப்பிய காலத்தில் இற்பரத்தையைச் சார்தல் என்ற நிலை வளர்வு பெற்று அதுவே கதையம்சமாகத் திகழ்ந்திருப்பதை- சிலப்பதிகாரம் காட்டுகின்றது. கோவலன் மாதவியின்பால் ஏற்பட்ட கலையன்பில் உள்ளங்கொண்டு அவளைச் சார்கின்றான். இருப்பினும் கண்ணகி அவனையே நினைத்து வாழ்ந்து, இறுதியில் அவனின் உயர்விற்காகப் போராடிய திறம் சிறப்பாகும்.சிலம்பின் ஒரு பகுதியில் தேவந்தி கணவனால் கைவிடப்பட்ட கண்ணகியைப் பார்த்துச் ’’சோமகுண்டம், சூரியகுண்டம் மூழ்கின் உன் கணவன் கிடைப்பான்’’ எனக் கூற (14) ’பீடன்று’ எனக் கண்ணகி ஒதுக்குகிறாள். கண்ணகியின் இந்நிலையைக் காணுகின்ற போது, கணவன் இன்பமே, தன் இன்பம், கணவன் எங்கு இன்பம் காணுகின்றானோ அங்கே காணட்டும். எம் வணங்குதலால் அவன் இங்குவரின் இன்பம் குறையலாம் எனக் கருதி கண்ணகி அப்படிச் சொல்லியிருக்கலாம் என உணர முடிகின்றது.பெரிய புராணத்தில், இந்நிலையினின்று சற்று மேம்பட நிலையைக் காணமுடிகின்றது. திருநீலகண்டர் என்ற நாயன்மார் சிற்றின்ப மிகுதியால் பரத்தையிடம் சென்று விட்டு வீட்டிற்கு வருகின்றார். வந்ததும் அவரின் நிலையறிந்த மனைவி ’’என்னைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்’’ (15) எனச் சொல்லி உடல் இன்பத்தினை அவரிடமிருந்து பெறுதலை வெறுத்ததோடு உள்ள அன்போடு மட்டும் வாழ்ந்தார். பரத்தை ஒழுக்கம் கடிந்த பெண்ணாக இவரைச் சேக்கிழார் படைத்துள்ளார். எனவே ஒரு காலத்தில் பரத்தை ஒழுக்கம் மறைவான ஒழுக்கம் எனக் கருதப்பட்டிருப்பினும் அதனை ஏற்றுக் கொண்ட மனைவியர், பின்பு அவ்வொழுக்கத்தினை கடிந்தவராக வளர்ந்து வந்துள்ளமையை அறிய முடிகின்றது.வீரம்ஒருபுறம் சுக வாழ்வில் இன்புற்றிருந்த தமிழர்கள், மறுபுறம் வீரவாழ்வில் வெற்றியையே துணையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். ’’உன் மகன் எங்குள்ளான்’’என ஒரு சங்க இலக்கியத் தாயிடம் கேட்டால் அவள் சொல்கிறாள்- ’’என்மகன் எங்குள்ளான் என யான் அறியேன். ஆனால் புலிவந்து சற்று நேரம் படுத்துக் கொண்டிருந்து பின் வெளிப்பட்டுப் போன மலைக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு இதுவாகும். அவன் பெரும்பாலும் போர்க் களத்தில் காண்பபடுவான்’’- எனக் கூறுகிறாள்(160).அந்த அளவிற்கு வீரர்கள் வாழ்ந்த உலகாக, அக்காலத்தில் தமிழகம் திகழ்ந்திருக்கின்றது. மற்றொரு தாய், போருக்குச் செல்ல யாரும் இல்லாத போது தன் ஒரே மகனை, பாலகனை அழைத்து அவன் குடுமிக்கு, எண்ணெய் தடவி, கையில் வேலைக் கொடுத்து போர் முரசு கேட்டதும் அனுப்பி வைத்தாளாம்(16. அ). குழவி இருப்பினும், ஊன் தடி பிறப்பினும், அதனை வாளினால் அறுத்துப் புதைத்த வீரபரம்பரையினைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் (17). முல்லை நிலத்தில் நடந்த அடலேறு தழுவலும் வீரத்தின் அடிப்படையே ஆகும். இதன் வழி திருமணங்களும் நிகழ்ந்தன. கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையிலும் எண்ணாள் முல்லை நிலப்பெண். இதனுடைய வளர்ச்சி பின்னாளில் போட்டிகளின் வாயிலாகப் பெண்களை மணத்தல் என்பதாக நிகழ்ந்தது. சீவக சிந்தாமணியில் சீவகனுக்கு வைக்கப்படும் போட்டிகளும், பாண்டியன் பரிசில் ஏற்படும் அன்னத்திற்கான - பேழை- போட்டியும், இவ்வகை நிகழ்வின் அடிப்படையே எனலாம். எனவே சங்க இலக்கியகாலம், இல்வாழ்வை, அன்பும், அறனும், வீரமும் செறிந்ததாகக் கொண்டு வாழ்ந்த காலம் என்பதில் ஐயமில்லை.பக்தி இலக்கிய காலத்தில், குடும்ப வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. எல்லாமே இறைவன் எனக் கருதப்பட்டது. சுற்றமும், விருந்தும் அவனே. அதனால் தான் வணங்கும் இறைவனை அப்பனாய், அம்மையாய் சேயனாய், அன்புடைய மாமனாய், மாமியாய், ஓப்புடைய மாதருமாய், சுற்றமுமாய், எல்லாமாய் நாவுக்கரசர் கண்டார்(18). ’’அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’’ என்று மாணிக்கவாசகரும் பாடுகின்றார்.இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் ஆண்டாள் இறைவனையே, தன் கணவனாகப் பாவித்து அவனன்றி வேறு மானிடர் எவர்க்கேனும், என் உடல் பேச்சுப்படில் உயிர் வாழேன் என்று கூறுகிறாள்(19). சங்ககால சமுதாயத்தில் கணவனும் மனைவியும் உயிரும் உடலுமாய் ஒன்றியிருந்த வாழ்க்கை இக்காலக் கட்டத்தில் கடவுள்- மனிதத் தொடர்பு என்ற நிலையில் உயர்த்திப் பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இல்லற வாழ்விற்கு எக்குறையும் ஏற்படவில்லை. பெரிய புராணத்து மெய்யடியார்கள், பலர் இல்லற நெறியில் நின்று இறைவனைக் கண்டுள்ளனர். இல்லறக் கடமையான, துறவறத்தாரைக் காத்தல், விருந்து சுற்றம் காத்தல் போன்றவற்றை குறைவறச் செய்திருக்கிறலீர்கள் என்பது உண்மை. பாரதியின் கண்ணன் பாடல்களும், இதன் வழிவந்தனவே எனலாம். தோழனாக , தாயாக , தந்தையாக , சேவகனாக , அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, காதலன் - காதலியாக, பாங்கியாக, ஆண்டானாக, குல தெய்வமாக, விளையாட்டுப் பிள்ளையாகப் பாரதி- கண்ணனைப் பாடியதும் இதன் வளர்நிலை என்றே கருதலாம். பக்தி இலக்கிய கால கட்டத்திற்கு பின் எழுந்த 96 வகை சிற்றிலக்கியங்களின் முதல் தலைமுறை நூல்கள் கடவுளைப் பாடுபொருளாக்கின. அடுத்த தலைமுறைச் சிற்றிலக்கியங்கள் மனிதர்களை, மன்னர்களைப் பாடின. கடவுள் தமிழர்களின் வாழ்வில் இவ்வாறு நீங்கா நிலைத்த இடம் பெறுகிறார் என்றாலும் இல்லற நெறியின் வலுவூட்டலாகவே கடவுள் படைப்பும் கடவுள் இலக்கியப் படைப்புகளும் அமைந்தன என்பது கவனிக்கத் தக்கது.19, 20நூற்றாண்டுகளில் எழுந்த விடுதலைப் போராட்ட உணர்வு , மற்றும் மேலை நாட்டுத் தாக்கம் போன்றன தமிழிலக்கியத்தை புதிய வடிவ நிலைக்குக் கொண்டு போயின. இலக்கியக் களத்திற்கு புதிய பாடு பொருள்கள் கிடைத்தன. சமுதாய நலனோடு இலக்கியங்கள் அணுகப்பட்டன. எனினும் குடும்ப வாழ்வில் அதே அளவு அன்பு, பற்று, பாசங்கள் பின்பற்றப்பட்டன.தாயன்பு குறித்துப் பாரதிதாசன் அற்புதமான காட்சி ஒன்றைக் காட்டுகிறார். ஒரு தாய் தன் குழந்தையோடு கட்டிலில் படுத்திருக்கின்றா¦ள். சிறிதே அவள் புரண்டு படுத்தாலும், தாயின் உடல் அக்குழந்தையின் மீது படிந்து விடும். இதை அறிந்த அந்தத் தாய் தன் வலக்கையினைத் தலையணையின் மீதும் இடக்கையினை கூடாரம் போல் குழந்தையின்மீது பாடமலும் வைத்துப் படுத்திருந்தாள். இவளை எழுப்ப அவளின் கணவன் நினைக்கின்றான். பக்கதில் கிடந்த பூச்செண்டிலிருந்து ஒரு மலரை எடுத்து அவளின் திங்கள் போன்ற முகம் மீது இட்டான். எவ்வித அசைவும் அவளிடம் ஏற்படவில்லை. ஒரு மலரிதழை எடுத்துக் குழந்தையின் மீது இட்டான். இப்போது அந்தத் தாயினது கரம் இதழ் விழுந்த இடத்தைத் துடைத்து விட்டுச் சென்றது (20). நேற்று வரை, அன்பும், அறமும் உடையவர்களாக வாழ்ந்த தமிழ் மக்களின் நிலை இன்று எப்படியுள்ளது என இனி ஆய்வோம்.
இன்றைய தமிழகம்
சங்ககாலத்தில் பின்பற்றப்பட்ட மூவகைக் கடமைகளும், இக்காலத் தமிழர்களாலும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. ஆனால் அன்பு , வீரம் என்ற இரு தலையாய கொள்கைகளும் மாறுபட்டு அழிந்து போகுமளவிற்கு இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் குடும்ப நிலை அமைந்து வருகின்றது.திருமணம் என்பது அன்பின் வெளிப்பாடாக, காதலின் முடிவாக, குடும்ப வாழ்வின் வாயிலாக நேற்று வரை கருதப்பட்டது. ஆனால் இன்றைய திருமணங்கள் பொருளாசை மிக்கதாக, வாழ்வின் முடிவினைத் தரும் முடிவு நிலையாகக் கூட மாறிவிட்டன.இன்றைய பெரும்பாலான திருமணங்கள், பொருளாதாரக் காரணங்கள் கொண்டே ஆய்ந்து நிச்சயிக்கப் படுகின்றன. வரதட்சணை என்ற பெயரில் பொருளாதாரக் கொடுமைகள் நடக்க திருமணங்கள் வழி வகை செய்கின்றன. வரன்- தட்சணை- பெண்ணை மணந்து கொள்ளப்போகும் வரனுக்கு பெண் வீட்டார் தட்சணை கொடுக்க வேண்டும். இவ்வொப்பந்தமே இரு மனங்களின் வாழ்வினை நிச்சயிக்கின்றது. திருமணங்கள் அன்புச் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் மாறி ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காலம் இன்று தமிழகத்தில் நிகழ்கின்றது. ’’எனக்கு இராமன் வேண்டாம் தூக்கி கொண்டு போகும் இராவணன் கிடைத்தால் போதும்’’ என்று ஏங்குகின்ற கன்னி கழியாத பெண்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர்.வரதட்கணையைத் தருவதாகச் சொல்லிவிட்டு சில தந்தையர் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு பின்னால் கொடுக்க முடியாது போனபோது, அவர்களின் மகள் மாப்பிள்ளை வீட்டாராலேயே கொலை செய்யப்படும் கொடுமையான நிகழ்வுகளும் தமிழகத்தில் இன்று தினசரிகளின் செய்திகளாகிவிட்டன. ஸ்டவ் வெடிப்புதான் வரதட்சணைக் கொடுமையின் இறுதி ஆயுதம். ஒரு புதுக் கவிஞன் பாடினான் மருமகள் ஏற்றுகிற ஸ்டவ் மட்டும் வெடிக்கிறதே மாமியார் ஏற்றும் ஸ்டவ் வெடிப்பதில்லையோ என்ற அவனின் வரிகள், வரதட்சணைக் கொடுமையை -படம் பிடிப்பதாகும். குடும்ப வாழ்வின் இன்பமான அன்பு நிலை அடித்தளத்தை மறந்து விட்டு இன்றைய தமிழகம் வாழ்கின்றது. அன்பை விலை பொருளாக்கிக் விலை கூவும் நிலை தமிழகக் குடும்ப அவல நிலையின் ஒரு கொடுமையான பகுதியாகும். வரதட்சணைக் கொடுமையினின்று வீறு பெற்று எழுந்த பெண்களும் உண்டு. அதனால் சாம்பலாகிப் போனவர்களும் உண்டு.மக்கட்பேறு எவ்வளவு இனிமை எனக் கருதப்பட்டதோ அவ்வளவிற்கும் இழிவானதாக மக்கட் பேற்றினை ( அதுவும் பெண் மக்கட் பேற்றினை ) கருதுகிற நிலையை இன்றைய தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. பெண் குழந்தைகளைச் சாகடிக்கும் கொடுமை, தமிழகத்தின் உட்பகுதிகளில் நடைபெறுகின்றது. பிறந்த பெண் குழந்தையின் வாயில் நெல்லைப் போட்டுவிட, அது மூச்சுத் திணறி இறந்து படுகிறது. இப்படி ஆயிரம், ஆயிரம் குழந்தைகள் இந்நிலையைச் சந்தித்து மண்ணாய்ப் போயுள்ளன. இவைகளைத் தடுக்க தமிழக அரசு, இப்போது ஒரு புது முடிவை எடுத்தது. ஒவ்வொரு ஊரிலும் தொட்டில் வைக்கப்பட்டது. இதற்கு அரசாங்கத் தொட்டில் என்று பெயர். இதனுள் பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தையை இட்டு விடலாம். அக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினை அரசாங்கமும் சில பொது நிறுவனங்களும் ஏற்றுள்ளன. இது எந்த அளவிற்கு நடைமுறைக்குச் சரியாகும் என்பது போக போகத்தான் தெரியும். இதைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு புதுக் கவிஞன் பாடினான். தொட்டிலில் போடப்பட்ட குழந்தை ஒன்று இரண்டானது. மூன்று நான்கு நூறானது. ஆனால் இதை கவனிக்கும் ஆயா மட்டும் ஒருவரே, குழந்தையின் அழுகைக்குள் ஆயாவின் தாலாட்டு மறைந்து போனது என்று(21).பரத்தை இன்றுஅடுத்து இன்றைய நிலையில் பரத்தையர்- ஓழுக்கம் பற்றி ஆராய்வோம். இன்றைய நிலையில் தமிழகத்தில் பரத்தை ஒழுக்கம் என்பது கேவலமான ஒழுக்கமாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலான ஆண்கள் இவ்வொழுக்கத்தில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டால் எந்தப் பெண்ணும் கண்ணகி போல் சாந்தமாக இருப்பதில்லை, அவள் அவனைப் பல்வேறு முறைகளில் தண்டிக்கின்றாள்.இது ஒரு புறம் இருக்க, பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிகளைப் பற்றிச் சற்று முந்தைய காலத்தில் ஒரு செய்தி பேசப்பட்டது. அங்கு உள்ள பரத்தையரில் பாதிக்கு மேல் தமிழ்ப் பெண்கள் என்பது கணக்கிடப்பட்டது. பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் ஏமாற்றப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இதைத் தடுக்க தமிழக அரசு ஒரு எக்ஸ்பிரஸ் திட்டத்தை அறிவித்தும் எவ்வித பலனுமில்லை.குடும்ப நிலையைப் பொறுத்த வரையில், இவ்வொழுக்கம் களையப் பட்டிருப்பினும், திருமணமாகாத, குடும்ப நிலை சாராத பெரும்பாலான இளைய சமுதாயம், இதனை இன்ப நிலைக்காக ஏற்றுக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாததாகும். இதன் விபரீதத்தை உணர்த்தும் அவர்கள் ஈடுபடுவது முரண்பட்ட போக்குதான். எனவே இன்றைய தமிழகம் அன்பு வாழ்வினை மறந்து போலி அன்போடு வாழ்கின்றது என்பது தௌ¤வு.
நாளைய தமிழகம்
தமிழகத்தின் எதிர்கால நினைப்பினை நினைக்கும் போது ஒரு மகிழ்வு ஏற்படத் தான் செய்கின்றது. நாளையாவது விடியுமா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும், பம்பாய், இலங்கை, தமிழகத் தமிழர்களின் குடும்ப நிலை நாளை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். இதோ ஒரு கற்ப்னை விடியல்.இந்த ஆய்வை எழுத்தாளர் சுஜாதா ’’என் இனிய இயந்திரா’’ என்ற நாவலின் மூலம் சிந்தித்துப் பார்க்கிறார். ’’பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே வாழும் சமுதாயம், பெயர் இரண்டெழுத்தில் இருக்க வேண்டும். குழந்தையை கூட கேட்டுதான் பெற வேண்டும் என்ற நியதி, இவைகளுக்குத் தலைவனான ஜீவா என்ற சர்வாதிகாரி, 50 வயதுக்குப் பின் முதியவர்களுக்குக் கட்டாய சாவு ’’ என பல முரண்பட்ட நிலைகளை அந்நாவல் முன் வைத்திருக்கிறது.இதைப்போல ஒரு கட்டாய வாழ்க்கைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிடுமா இயந்திரவாழ்வு அங்கீகரிக்கப்படுமா ஓரளவு இப்போது ஒட்டிக்கொண்டிருக்கும் அன்பெனும் தத்துவமும் அழிபட்டு விடுமா எது போனாலும், தமிழனின் விருந்தோம்பல் பண்பும், சுற்றம் துறவறம் போற்றும் பண்பும் மாறலீதுங மாறக் கூடாது. இவை தமிழனின் தனித்த பண்புகளாம்.
----------------------------------------------------------------------------------------------குறிப்புகள்1. பாணர் முல்லை பாடச் சுடரிழைவாணு¦த லரிவை முல்லை மலைய இனிதிருந் தனனே நெடுந்தகை துளிதீர் கொள்கைத் தன்புதல்வனொடு பொலிந்தே. ஐங்- 4082. சிலம்பு ,மனையறம் படுத்த காதை3. இனித்திட இனித்திடத் தான்எழில் நகை முத்தினோடுதனித்தறம் நடாத்துதற்குத்தனியில்லம் கொண்டான்.-பாரதிதாசன் குடும்ப விளக்கு. ப. 50(3, 4, 5)4. ’’காமஞ்¢ சான்ற கடைகோட் காலைஏமஞ்சான்ற மக்களொடு துவன்றிஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’தொல் கற்பியல்-515. பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்னநீருரை மகன்றிற் புணர்ச்சி போலப்பிரிதரி தாகிய தண்டாக் காமமொடுஉடனுயிர்போக தில்ல கடனறிந்துஇருவேமாகிய உலகத்தொருவே மாகிய புன்மைநா முயற்கே. -குறுந்தொகை6. முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇத்குவளையுண் கண் குய்ப்புகை கமழத்தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்இனிதெனக் கணவ னுண்டலின்நுண்ணிதின் மகிழ்ந்தன்றெண்ணுதன் முகனே- குறுந் 1677. படைப்புபல படைத்து பலரோடு உண்ணும் உடைப்பெரும்¢ செல்வராயினுமிடைபடகுறுகுறு நடந்து சிறுகை நீட்டிஇட்டுந் தொட்டும் கவ்வியுந் துழந்தும்நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குரை யில்லைத் தாம் வாழுநாளே- புறம் 188.8. ஈன்றுபுறந்தருதல் எந்தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே -புறம் 3129. குறள்-4110. விருந்து உண்டு எஞ்¢சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும்புரைவது -குறிஞ்சிப்பாட்டு -வரி 20611. குறள் -8612. புறநாநூறு- 14613. குறுந்தொகை 13514. சிலம்பு கனாத்திறம் உரைத்த காதை15. பெரிய புராணம். திருநீலகண்டர் புராணம் 16. புறநானூறு-8616. அ. புறநானூறு- 27917. புறநாநூறு-7418. அப்பர் தேவாரம்19. நாச்சியார் திருமொழி20. பாரதிதாசன் குடும்ப விளக்கு (3, 4, 5 மக்கட்பேறு . பக் . 80)21. தொட்டிலைத் தேடும் பெண் சிசுக்கள் பெற்றவர்களே தொட்டிலில் போட்டு விட்டு பேட்டி கொடுக்கும் பெருமிதம்,இன்று ஒன்று அழுகிறது. நாளை ஒன்பதாய் மறுநாளில் நூறாய் ஓரே அழுகை இத்தனை சிசுக்களுக்கும் தாலாட்டுப் பாட ஓரே ஒரு ஆயா, ஆயாவின் தாலாட்டும் அலரலாய் மாற. . . - தொடரும் (சிற்றிதழ்), அக்- டிச, 1992 வெளியீடு- கிருங்கை சேதுபதி- கிருகாக்கோட்டை muppalam2003@yahoo.co.in

திங்கள், மார்ச் 27, 2006

சி,கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரிய புராண உரைத்திறன்


என் நான்காம் நூல் மே 10 அன்று வெளிவர இருக்கிறது. அதன் தலைப்பு சி,கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரிய புராண உரைத்திறன் என்பதாகும். இது தமிழகத்தில் திருச்சிக்கு அருகில் உள்ள காரைக்குடி நகரத்திற்கு அடுத்துள்ள புதுவயல் என்ற என் சொந்த கிராமத்தில் வெளியிடப் பட இருக்கிறது. விரைவில் அழைப்பை அனுப்புவேன்.

விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்


என் மூன்றாம் புத்தகம் விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் இது இந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் வாழ்ந்த படைத்த 22 பெண்படைப்பாசிரியர்களைப் பற்றித் தெளிவு படுத்தும் நூல். இதில் மொத்தம் 43 நாவல்கள் அலசப்படுகின்றன. இந்த நாவல்களைச் சமூக ஆவணங்களாகக் கொண்டு அக்காலத் தமிழகத்தை அக்காலப் பெண்களின் நிலையை தெளியமுடிகிறது. இந்த நூலின் விலை ரூ 125என்னிடம் இந்த நூல் கிடைக்கிறது

பெண்ணிய வாசிப்பு


என் இரண்டாம் புத்தகம் பெண்ணிய வாசிப்புஇது தமிழ் இலக்கியங்களில் சிலவற்றைப் பெண்ணுக்குச் சாதகமாக வாசிக்கத் தலைப்பட்டுள்ளது. அதனோடு பெண் எழுத்துக்களைத் தனித்த திறனாய்வு நோக்கில் அலசவும் செய்கிறது. இது காவ்யா வெளியீடாகும். சென்னை - கோடம்பாக்கத்தில் உள்ள காவ்யா பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கிறது. விலை ரூ 80Add Image

பெரியபுராணத்தில் பெண்கள் ஓர் ஆய்வு

என் முதல் புத்தகம் பெரியபுராணத்தில் பெண்கள் ஓர் ஆய்வு என்பதாகும். இது பெரிய புராணத்தில் உள்ள 34 பெண்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இது என் முதுகலைத் தமிழ்க் கல்விக்காகச் செய்யப்பெற்ற ஆய்வேடு ஆகும். இதன் விலை 35 ரூபாய். இது என்னிடம் கிடைக்கிறது

வெள்ளி, மார்ச் 24, 2006

தோற்றம் நிலக்குப் பொறை


நில்லாமல் சுழல்கின்ற உலகம் ஈதாம்
நீங்காமல் இரவுபகல் வந்து போகும்
பல்வகையாம் உயிரினங்கள் மறையும் தோன்றும்
எண்ணற்ற மாற்றங்கள் ஆகும் போகும்
நல்லவையும் தீயவையும் நிற்கும் மாறும்
நிலையாக எதுவுமில்லை சுழலும் மண்ணில்
நில்லாமை எனும்தத்துவம் ஒன்றே நிற்கும்
நீடுபுகழ் அதனோடு சேர்ந்தே வாழும் 1


கடிகாரக் கால்கள் நிற்காது ஓடும்
கவனமாய்ப் போட்டியிடும் மனித உள்ளம்
அடிமையாய்ப் பணமிருக்கும் இடத்தை நாடும்
ஆனாலும் அரைக்காசு காணா துண்மை
அடிமுடியாய்த் தேடியோடி கிடைக்கும் காசு
அப்படியே குவிக்கமனம் திட்டம் போடும்
முடிவொன்றே இல்லாமல் சேர்க்கும் காசு
முடிவிலா பூதம்காக்கும் புதையல் ஆகும் 2


பெட்டிபெட்டியாய்ப் பணஞ்சேர்த்துப் பயனும் என்ன?
பெருமையால் பிறருக்கு ஈதல் வேண்டும்
வட்டிக்கு வட்டிகூட்டி பயனும் என்ன?
வாழ்க்கைக்கு வசதிபெருக உதவ வேண்டும்
பூட்டுமேலே பூட்டிட்டு பயனும் என்ன?
பிள்ளைகள் வாழ்க்கைக்கு ஆக வேண்டும்
கட்டுக்கட்டாய் பணமிருந்தும் பயனும் என்ன?
கவலையின்றி அனுபவிக்க மனந்தான் வேண்டும் 3


எண்ணியெண்ணிக் காசுகளை முடிந்து வைத்தால்
ஏக்கங்கள் கூடிவிடும் மகிழ்ச்சி ஏது?
கண்போலே சேர்த்திட்ட காசை எல்லாம்
கணக்காகச் செலவழித்தால் இன்பம் உண்டு
மண்வாங்கி மனைகட்ட வசதி சேரும்
மகிழ்வுந்து பயணத்தால் மகிழ்ச்சி கிட்டும்
பெண்மணந்து பிள்ளைபெறப் பேறு உண்டு
பணமிருந்தால் இவையெல்லாம் நமது ஆகும் 4


ஆனிப்பொன் அணிசெய்தால் பூண்பது அழகு
அணைந்தபொருள் அனுபவித்தல் அழகிற் கழகு
இனிப்பென்றால் தந்துண்பது நல்ல இன்பம்
ஈகையே உலகினர்க்கு இன்பத்து ளின்பம்
கனிமரமாய் ஊருக்குள் நிற்றல் மேன்மை
கருதாது அளிப்பது மேன்மைக்கு மேன்மை
தனியாக வாழ்வது யாருக்கும் வன்மை
தளராது ஈதலே வன்மைக்கு வன்மை 5


முப்பாலீந்த முழுப்புலவர் வள்ளுவ ஆசான்
முறையாகச் சொல்லிட்டார் அதனைக் கேளீர்
முப்போதும் பொருள்சேர்த்துத் தானும் உண்ணாது
மகிழ்வாகப் பிறர்க்கும் கொடாத செல்வம்
எப்போதும் அதுநன்றியில் செல்வம்? என்றார்
எளிமையாய் வாழ்ந்தாலும் பிறர்க்குத் தந்துத்
தப்பாது வாழ்ந்திருத்தல் இன்ப வாழ்வாம்
வறுவது பூமிக்கு எடையாம்? ஓரீர். 6

காற்று வற்றிய காரணம்


விதம் விதமாய் மனிதர்கள்
மளிகைக் கடையில்
பொறுப்போடு பொருள் வாங்கி
வெளியில் வந்தால்
ஏறிவந்த இருசக்கர வண்டி
காற்று வற்றிக் கிடந்தது

உடன் வந்த மனைவி
முணுமுணுக்கிறாள்.
நீங்களும் சரி
உங்கள் வண்டியும் சரி
சரியான நேரத்திற்கு உதவாது என்று

காற்று வற்றிப்போனதற்கான
காரணம் என்ன
என மனம் தேடியபடி
எங்களின் ஊர்வலம்

வண்டி,
வண்டியைத் தள்ளியபடி நான்,
என் பின்னால்
குழந்தையைத் தூக்கியபடி மனைவி,

புதிய பள்ளங்களைத்
தோண்டிப்போடும் கூலியாட்கள்
பள்ளங்களின் வெளிப்பாட்டில்
வீதிக்கு வந்த கற்கள் யாரை நோவது
காற்று வற்றியதன் காரணம்

மளிகைக்கடை வாசலில்
பார்க்க வினோதமாய்
ஒரு சிறுவன்
வெளிவந்த
எங்களின் அசைவையே
உற்றுக் கவனித்த
அவனின் சிறப்பு கவனம்
அவன்தான் ஏதோ செய்திருக்க வேண்டும்

கடை அடைந்து
காற்று வற்றிய காரணம்
கண்டுபிடிக்க முயல
கடைக்காரர் கேட்டார்
யாருக்காவது இடைஞ்சலாக
வண்டியை நிறுத்தினீர்களா?
காற்றைப் பிடுங்கி விட்டிருக்கிறார்கள்

சரி
சரி
சரி செய்த வண்டியோடு பயணம்
நல்லவேளை
டயர் டியுப்க்குப் பழுதில்லை
muppalam2003@yahoo.co.in
http://www.vaarppu.com/

தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்


மார்ச் 8. உலக மகளிர் தினம். மகளிர் தமக்கான வாழ்க்கையை, கல்வியை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை, மொழியை, இன்னும் எவை எல்லாம் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் எவ்விதத் தடையுமில்லாமல் ஏற்படுத்திக்கொள்ள, அனுபவிக்க, ஆய்வு செய்ய விழிப்புணர்வு தரும் ஒரு தினமாக இந்த மகளிர் தினத்தை மகளிர் எடுத்துக் கொள்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் இந்த விழிப்புணர்வு உள்ளதா? ஏற்பட்டுவிட்டதா? அல்லது இந்த விழிப்புணர்வு அடையப்பட்டு விட்டதா? என்பது அறியப்பட இத்தினம் ஒருவகையில் உதவி செய்யலாம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் மகளிர் தினம் என்பது குறித்த விழிப்புணர்ச்சி ஓரளவிற்கு உள்ளது என்பதை 2006 மார்ச் 8 உணர்த்துகிறது. இத்தினம் கருதி பல கருத்தரங்குகள், கூட்டங்கள், செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக படித்த பெண்கள் ஓரளவிற்கு விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இந்த வளர்ச்சி போதுமா? போதாதா? என்றெல்லாம் கண்டுபிடித்து இவ்வளர்ச்சி போதாது எனக்கருதி அதனைக் கட்டாயமாக வளர்த்தெடுக்கப் பாடுபடுவது என்பதெல்லாம் நடைபெறவேண்டிய செயல்கள்தாம். அது ஒரு பக்கம். . இதனைத் தாண்டி தமிழகப் பெண்கள் நிலை ஓரளவிற்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது ஏற்க வேண்டிய கருத்தாகும். கல்வி, வேலைவாய்ப்பு முதலிய துறைகளில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி தமிழ்நாட்டுச் சூழலில் வியக்கத்தக்கதாக உள்ளது. இதனை அடைவதற்குப் பெண்களும் முயன்றுள்ளனர். ஆண்களும் முயன்றுள்ளனர்.

பாரதியார் இந்த முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளி ஆவார். அவரின் கூற்றுப்படிப் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்டார்கள். இதற்கு அடுத்த நிலை என்ன என்றபோது பாரதியைத் தாண்டி சிந்திக்க வேண்டியுள்ளது. பெரியார் இதற்கான ஒரு வளர்புள்ளி. அவரின் பெண் குறித்த புதிய எண்ணங்களைப் படித்த, கேட்ட பெண்களைக் கவர்ந்தன. அவ்வெண்ணங்கள் புதிய சிந்தனைகளைத் தூண்டின என்றால் அது மிகையாகாது.

பாரதியார், பெரியார் ஆகிய ஆண்களின் செயல்பாடுகள் ஒருபுறம். இவர்கள் காலத்திலேயே பெண்களின் விடுதலைக்காகப் போராடிய பெண்களும் உண்டு. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் சுப்புலெட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் பெயர் தெரிந்த தெரியாத பெண்களும் உண்டு.

இந்த வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமுதாய வளர்ச்சி என்றே அக்காலத்தில் கருதப்பட்டது. இந்த ஒட்டுமொத்தச் சமுதாய வளர்ச்சியிலிருந்துப் பிரிந்துத் காலப்போக்கில் தனித்துப் பெண்வளர்ச்சி என்பது வளர்ந்தது.இந்த 2006ஆம் ஆண்டை ஒரு எல்லையாக வைத்துப் பார்த்தால் அதன் பின்னோக்கிய இருபது ஆண்டுப்பயணம் தமிழ்ப் பெண்ணியத்தின் தனித்த தொடக்கக் காலப்பகுதியாகக் கொள்ளலாம்,.
இந்த இருபது ஆண்டுகளில் பெண்களை முன்வைத்து, இலக்கியங்களை முன்வைத்துத் தமிழ் உலகில் பெண்ணின் நிலைப்பாடு, பெண்ணின் அடையாளம் ஆகியன அறியப்பட்டன. இந்தப் புரிதலில் ஒட்டிய பெண்படைப்பாளர்கள், ஒட்டாத பெண்படைப்பாளர்கள் படைப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. பெண்திறனாய்வாளர்கள் பெண்ணிய விழிப்புணர்வோடு ஆய்வு செய்யத் தலைப்பட்ட்னர். மேல்நாட்டுப் பெண்ணியக் கொள்கைகளின் தாக்கத்தால் ஓரளவிற்கு பெண்ணியத்திறனாய்வுகள் தமிழில் கிளைத்தன. இந்த வருகை தமிழிலக்கியத்தின் புதிய பக்கங்களைத் திறந்தன,

இதன்விளைவால் கீழ்க் கண்ட முக்கிய மாற்றங்கள் தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்தன.

1, தமிழ் மொழியின் நீண்ட இலக்கியப் பரப்பில் பெண்படைப்பாளிகள் இனம் காணப்பட்டனர்.
2, புதிய பெண்படைப்பாளிகள் எழுதத் துவங்கினர். அவர்களுக்கிருந்த எழுத்துத் தடைகள் சற்று விலகின. பெண்களின் படைப்புகளை வெளியிட ஆண்வயப்பட்ட வெளியீட்டுலகம் முன்வந்தது. அவர்களின் படைப்புகளை விமர்சிக்கவும் ஆண்உலகம் வந்தது பெண்படைப்பு என்பதற்கு ஒரு தனி மதிப்பு வந்தது. பெண்படைப்பாளர்களுக்கு மட்டுமான போட்டிகள் வைக்கப்பெற்றன.
3. பெண்படைப்பாளிகளின் வாழ்க்கை தெரியவந்தது. இதற்கு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் உதவின.

பெண்ணிய விழிப்புணர்வால் பெண் படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட விடுதலை வழிகள். இந்த வழியை ராஜபாட்டையாக்க தற்காலப் பெண்படைப்பாளிகள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதே இருபதாண்டு சூழலில் பெண்ணின் சமுதாய இருப்பும் சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது கவனிக்கத்தக்கது. பெண்களின் பள்ளிக்கூடம், கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. பெண்கள் மட்டும் வேலை பார்க்கும் அலுவலகங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக மகளிர் காவல் நிலையங்கள். இது தவிர பெண்கள் மட்டுமே வேலை பார்க்கும் வங்கிகள் உருவாகியுள்ளன. பெண்களின் கூட்டமைப்புகள் உருவாகியுள்ளன. மகளிர் சுய முன்னேற்ற உதவிக்குழுக்கள். இந்தக் குழுக்களை வளமையாக்க மாநில அரசோ மத்திய அரவோ உதவிய செய்தியில் அரசியல் இருந்தாலும் கடன் பெற்று அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுடையது என்பது குறிக்கத்தக்கது.

பெண்ணாசிரியர்களால் நடத்தபப்டும் பெண்களுக்கான பத்திரிக்கைகள், பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஊடகங்களிலும் குறிப்பிடத்தக்க இடம் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதையும் எண்ணிப்பார்க்கலாம். பெண்களின் அரசியல் பங்கேற்பில் ஆண்களைச் சார்தல் என்ற பண்பு அதிகம் இருந்தாலும் இதனையும் ஒரு முன்னேற்றப் படியாகவே கொள்ளவேண்டும்.. இந்த அளவிற்கு வளமை பெற்ற இக்காலத்திலும் தினத்தாள்களில் நாள்தோறும் பெண்ணிழிவுச் செய்திகள் வராமல் இல்லை. முன்னேற்றம் ஒரு புறம் பின்னேற்றம் ஒரு புறம் என்ற ஏற்ற இறக்கத்திற்கு என்ன பதில் சொல்வது? எப்படி பதில் சொல்வது என்பதை பெண்ணியவாதிகள் சிந்திக்க வேண்டும்,
இந்த வளர்ச்சியில் கண்ணுக்குத் தெரிந்த மிகப் பெரிய மாற்றம் பெண்களின் ஆடை அணிகலன்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும், நகரத்தில் பரவலாகி வந்த இந்த மாற்றங்கள் தற்போது கிராமங்களிலும் புகுந்து விட்டன, இதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்த ஆடை அணிகலன் மாற்றங்களினால் பெண்களின் சமுதாயக் கட்டுப்பாடு சற்று தளர்ந்திருக்கிறது. பெண்களின் உடலை இறுக்கிய ஆடைகள் சற்று இறுக்கம் தவிர்த்து இருக்கின்றன. இறுக்கம் தவிர்த்தல் என்ற இந்த வசதி பெண்களுக்கு வசதி அளித்ததோ இல்லையோ ஆண்களின் கண்களுக்கு புதுக்கவர்ச்சியை உண்டு செய்து இருக்கின்றன. ஆண்களின் கண்கள் ’’ ஆடை அணிகளிலே இவ்வளவு நெகிழ்வுத் தன்மை உள்ளதென்றால் ஆண்களிடம் பழகுவதிலும் இத்தகைய நெகிழ்வை எதிர்பார்க்கலாம் ’’ என்ற எண்ணத்திலேயே பெண்களைக் கவனிக்கின்றன. இச்சூழலில் பெண்களுக்கு வசதி தரும் ஆடைகள் அதே நேரத்தில் ஆண்களின் கண்களைக் கவராத ஆடைகள், அணிகள் இவற்றை பெண்ணியவாதிகள் முன்வைக்கலாம், ஆண்கள் அணிகளைத் தவிர்த்ததுபோல (குடுமி, காதுகடுக்கண், கழல்) பெண்களும் அணிகளைத் தவிர்த்துவிடலாம், இதனால் இழப்பு ஏதுமில்லை. பல திருட்டுகளைத் தவிர்க்கலாம். இது குறித்துப் பெண்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது தேவை.

பெண்களின் சமுதாய வாழ்வில் காதல், திருமணம் இவற்றில் தற்போது சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துவரின் ஒத்துவருவதாகவும், ஒத்து வராவிடில் ஒத்துவராததாகவும் வாழும் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொள்ளப் பெண்கள் தயாராக உள்ளனர். இந்த வாழ்க்கை முறை குறித்துப் பிறர் கருத்து என்பதைவிட தன்கருத்து என்ற அளவில் பெண்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்தத் தயாராகுதலுக்கும் இந்தச் சிந்திப்புக்கும் பெண்கள் வந்திருப்பது ஒரு முக்கயமான மாற்றமே ஆகும், வழக்கு மன்றங்களில் வரும் பெண்களுக்கு எதிரான பெண்களுக்குச் சாதகமான வழக்குகள், தினத்தாள்களில் வரும் பெண்களுக்கு எதிரான செய்திகள் சாதகமான செய்திகள் இவை பெண்களின் விழிப்புணர்விற்குச் சான்றுகள். இவற்றில் இடம் பெறும் உண்மை நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் திரிக்கப் படுவது ஏன் என்று எண்ணிப்பார்க்கையில் வழக்கு மன்றங்கள் ஆனாலும் சரி தினத்தாள்கள் ஆனாலும் சரி இவற்றில் வேலை பார்ப்பவர்கள் முற்றிலும் பெண்கள் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் பெண்கள் மட்டுமே பெண்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களை நடத்தும் நிலை ஏற்படும்வரை இந்தச் சாதக பாதகங்கள் தொடரும்.

இச்சூழலில் பெண்களுக்கு எதிரான நச்சுக்காற்றைச் சுட்டிக்காட்டும் விலக்கும் நிறுவனங்கள் தேவை. அவற்றின் தன்னலமற்ற பெண்குல விழிப்புணர்ச்சிச் செயல்கள் மேலும் பெண்களை முன்னேற்றும். அதற்குத் தக்க தருணம் இதுவே. அதுவரை மார்ச் 8 என்பது ஒரு குறியீட்டுத் தினமே அன்றி வேறு இல்லை.

புதன், மார்ச் 22, 2006

வால்மீகி X கம்பன்


வால்மீகி ராமாயணம் பற்றித் தெரிந்து கொள்ள வலைப்பக்கங்களைத் தேடினேன். கிடைத்தது ஒரு முகவரி இதனுள் வால்மீகி முனிவர் எழுதிய வடமொழி வடிவத்தின் ஆங்கில ஒலிபெயர்ப்பும் அதன்கீழ் ஆங்கில மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது. அகல்யை கதை கம்பரால் எவ்வளவு நாகரீகமாக எழுதப்பட்டுள்ளது என்பதற்குக் கீழ்க்காணும் வரிகள் சான்று. புதிதாக வால்மீகி ராமாயணம் பற்றி ஒரு வலைப்பதிவு வர இருப்பதாக தேன்கூடு மூலமாக அறிந்தேன்.. அவரின் இடுகைகளுக்கும் இது உதவலாம். அகல்யை சூழல் காரணமாகவும் தானே விரும்பியும் இந்திரனை ஏற்றதாக வால்மீகி எழுதியுள்ளார், ஆனால் கம்பர் நெஞ்சில் தவறு இல்லாதவளாக அகல்யைப் படைத்துள்ளார்.

http://www.valmikiramayan.net/

R^itu kaalam pratiikSante na arthinaH susamaahite sa.ngamam tu aham icChaami tvayaa saha sumadhyame 1-48-18
I, desire.
" 'Oh, finely limbed lady, indulgers do not watch out for the time to conceive, as such oh, slender-waisted one, I desire copulation with you. [1-48-18]
Vividly: 'Oh, Ahalya, Brahma crafted you so well that all your limbs are symmetrically conjoined, so who in the universe will not yearn to have intercourse with you... and on seeing your slender waist and thickset hips I wish to copulate with you now itself... and let there be no fear of safe period or unsafe period for I do not wish to have any progeny of mine from you...

muni veSam sahasraakSam vij~naaya raghuna.ndana matim cakaara durmedhaa deva raaja kutuuhalaat 1-48-19

"Oh, Rama, the legatee of Raghu, though knowing him as the Thousand-eyed Indra in the guise of her husband Gautama, she is inclined to have intercourse ill-advisedly, only to satisfy the impassion of the King of Gods. [1-48-19]

Her thinking is: 'This is none but Indra in the guise of my husband, for my husband never asks me like this nor he violates times... I heard that Indra is seeking me for a long time... and when King of Gods expresses such a desire, it cannot be refused... let him have it?

திங்கள், மார்ச் 20, 2006

சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்


திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியது ஒன்பதாம் திருமுறை. அகத்துறை சார்ந்த திருக்கோவையாரின் சாயல் இத்திருமுறையில் உண்டு. ஏறக்குறைய பத்துப் பதிகங்கள் அகத்துறை சார்ந்தன என்பது மேற்கருத்திற்கு அரண் சேர்க்கும். இத்திருமுறையுள் சேந்தனார் மொத்தம் நான்குப் பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றுள் மூன்று திருவிசைப்பாவில் அடங்கும். ஒன்று திருப்பல்லாண்டு ஆகும். இவற்றுள் இரண்டு திருவிசைப்பாக்கள் அகப்பொருள் அடிப்படையில் அமைவன. திருவாவடுதுறை இறைவனைக் காதலித்த மங்கை ஒருத்தியைப் பற்றித் தாய் கூறுவதாகவும், திருவிடைக்கழி முருகனைக் காதலித்தப் பெண் ஒருத்தியைப் பற்றித் மற்றோர் தாய் கூறுவதாகவும் இவ்விரு பதிகங்கள் அமைந்துள்ளன. திருமுறை வரிசையில் திருவிடைக்கழி முருகனைப் பற்றிச் சேந்தனார் ஒரு பதிகத்தைப் பாடியிருப்பது முற்றிலும் புதுமையானது. இதுவரை எவரும் பாடாதது. இதற்கு முன்னுள்ள திருமுறைகளில் சிவன் பற்றிய செய்திகளே இடம் பெற்றிருக்க இத்திருமுறை அவற்றில் இருந்து இவ்வழியால் மாறுபடுகின்றது. மேலும் இத்திருமுறையில் சேந்தனார் பாடிய பல்லாண்டும் குறிப்பிடத் தகுந்த மாற்றம் உடையதாகும். ஆண்டவனுக்கே பல்லாண்டு வாழ வாழ்த்தும் தன்மையதான இம்முறை வைணவ நடைமுறைக்குச் சரிசமமானது என்பது கருதத்தக்கது. இவ்வாறு ஒன்பதாம் திருமுறை வேறுபட்ட பல கருத்து மாறுபாடுகளுக்கு இடமளித்து மற்ற திருமுறைகளில் இருந்து வேறுபட்டு நிற்கிறது என்பது போற்றத் தக்க உண்மையாகும். இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள சேந்தனாரின் இரு அகச்சார்பு பதிகங்களும் தம்முள் வேறுபட்டமைகின்றன. சிவனைக் காதலித்த தலைவியின் காதல் மறைமுகமாகவும், நாகரீகமாகவும், எல்லை கடவாததாகவும் அவளின் தாயால் வெளியிடப் பெற்றுள்ளது. முருகனைக் காதலித்த தலைவியின் காதல் - காதல் என்ற எல்லையைக் கடந்து காமம் என்ற எல்லையைத் தொட்டுவிடுகிறது. இவளின் காதல் இவளின் தாயால் வெளிப்படையாக, நேர்முகமாக, காதல் எல்லை கடந்ததாக வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. மேலும் சிவனைக் காதலித்தவள் வயதில் மூத்தவளாக விளங்குகிறாள். முருகனைக் காதலித்தவள் வயதில் இளையவள். சேந்தனார் பாடிய இவ்விரு அகம் சார் பதிகங்;களில் எதற்காக இவ்வேறுபாடு பின்பற்றப் பட்டுள்ளது என்பதை அறியத் தூண்டுவதாக இப்பதிகங்;கள் உள்ளன. அவற்றை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகிறது. சிவனைக் காதலித்தவள்வயது இவள் அரிவை பருவத்தினள். அதாவது இருபத்தைந்து வயதை அடைந்தவள்(68). இவள் தையல் (63) என்றும், இளமான் (65) என்றும், சேந்தனாரால் குறிப்பிடப் பெறுகிறாள். இவளின் இயல்பு இவள் திலக நுதலி(61). இவள் வெண்ணீறு அணிபவள். அஞ்¢செழுத்து அன்றி வேறு பேசாதவள். இவளின் காதல் வருத்தம் இவள் சிவபெருமானின் நெடிய திண்தோளைப் புணர எண்ணும் காதல் நோக்கினள்(59). இவளின் அழகும், வளையல்களும் காதல் மெலிவால் இவளை விட்டு நெகிழ்ந்தன(66). இவளின் எதிர்பார்ப்பு இவள் சிவபெருமானின் கொன்றை மலர் மாலையைப் பெற்று அணிய விரும்புகிறாள்(60). இவள் சிவபெருமானின் அருளை எண்ணி அழிகிறாள்(58). இவள் சிவபெருமானின் திருவிளையாடல்களை ஓயாமல் சொல்லிய வண்ணம் உள்ளாள். இவ்வாறு சிவனைக் காதலிப்பவள் சிவவழிபாட்டுச் சிந்தனை மிக்கவளாக உள்ளாள். இப்பதிகத்தின் அடுத்து அமைவது முருகனைப் பற்றிய பதிகம். அதில் காணப் பெறும் காதலி இவளிலிருந்து மாறுபட்டவள். முருகனைக் காதலித்தவள்வயது இவள் மடந்தைப் பருவத்தினள் (73). அதாவது அரிவைக்குச் சிறியவள். சிறுமி(73), மெல்லியல் (69) என்ற இவளைப் பற்றிய வயதுக் குறிப்புகள் இப்பதிகத்துள் காட்டப் பெற்றுள்ளன. இவளின் இயல்பு இவள் வெருளும் மானின் விழிகளைப் போன்ற விழிகளை உடையவள்(76). கொவ்வைப் பழம் போன்ற இதழ்களை உடையவள்(73). துடி போன்ற இடையை உடையவள். சுடரோ, மதியோ, மின்னலோ, பவளத்தின் குழவியோ, சித்திரமோ, மணித்திரளோ, சுந்தரத்து அரசோ என இவள் முருகனைக் காண்கிறாள். இவளின் பார்வை முருகனின் புறஅழகு சார்ந்து அமைந்துள்ளது. இவளின் காதல் வருத்தம் இவள் காதல் வருத்த மேலீட்டால் பசலை நோயைத் தன் தனங்களில் பெற்றாள்(70). இவளின் இடையில் இருந்த மேகலை இவளின் மெலிவாள் நீங்;கியது(71). மேலும் இவள் காதல் வருத்தத்தால் மடல் ஏறவும் துணிந்தாள்(76). மடல் ஏற முயன்றாலும் இவளைக் கண்கொண்டு முருகன் பார்க்கவில்லை(77). இவளின் எதிர்பார்ப்பு முருகவேள் தனக்கு அருளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவளிடம் இருந்தது. மேற்கண்ட இருபெண்களில் அதிக காதல் வருத்தம் கொண்டவளாக முருகனைக் காதலித்தவள் காணப் பெறுகிறாள். சிவன் - முருகன் இருவரையும் தந்தை மகன் என்ற உறவுமுறை அமைப்பில் காணும் முறைமையின் பாற்பட்டதாக இப்பதிகங்கள் அமைந்துள்ளன. இவர்களைக் காதலிப்பதாகப் பதிகவழி அறியலாகும் இரு பெண்களும் வயது, காதல் திறம், வருத்தம் ஆகியவற்றால் வேறுபடுத்தப் பெற்று காட்டப் பெற்றுள்ளார்கள். இதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. சிவன், முருகன் ஆகிய இரு தெய்வங்களுக்கு இடையே உள்ள உறவு முறை வயது வேறுபாடு, அருளலில் உள்ள எளிவந்த தன்மை, பக்தர்கள் அணுகும் முறை ஆகியனவே இவற்றிற்குக் காரணங்களாக அமைகின்றன. இவ்வேறுபாடுகளின் அடிப்படையில் சில முடிவுகளுக்கும் வரமுடிகின்றது. சிவபெருமானின் பக்தர்கள் பக்தியில் முதிர்வு நிலையை அடைந்தவர்கள் என்றும், முருகனின் பக்தர்கள் பக்தியில் இளமைநிலையில இருப்பவர்கள் என்பதும் இப்பதிக வேறுபாட்டின் மூலம் பெறக் கூடிய இன்றியமையாத முடிவாகும். மேலும் தெய்வம் கருதிய காதல் பாடல்களைப் படைக்கும்போது அந்தத் தெய்வங்;களின் தன்மைக் கேற்ப மாறுபாடு கொண்டு பாடல்கள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றுள்ளன என்பதும் தெரியவருகிறது. இவ்வழியில் சேந்தனார் என்ற படைப்பாளர் ஒரே நிலையில் இருபதிகங்களை வரையப் புகுந்தாலும் அவற்றில் சில மாறுபாடுகளைப் புகுத்தி அதன் மூலம் சில கருத்துக்களை பதிய வைக்க முனைந்துள்ளார் என்பது தௌவு.

புதன், மார்ச் 15, 2006

உ.வே.சா உரைநடை நூல்கள் வெளியீடு

11.3.2006 சனிக்கிழமை மாலை சென்னை பாரதீய வித்யாபவன் சிற்றரங்கில் நடைபெற்ற உ. வே. சாவின் உரைநடை நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். குறித்த நேரத்தில் தொடங்கிய விழா. பல தமிழறிஞர்களால் நிறைந்த விழா, நிறைவான விழா.

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள உ. வே. சா நூல்நிலையத்தில் பாதுகாக்கப் பட்டு வரும் 61 கட்டு சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளை குறுவட்டுகளாகச் சேமித்துத் தந்துள்ளார்கள். இதன் வெளியீட்டுவிழாவும் இதனோடு நடைபெற்றது. இவ்வட்டுக்களில் சாமிநாதையர் நூல்நிலையத்தில் உள்ள சுவடிகள் மின்படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்படி எடுப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பிரெஞ்சு நிறுவனத் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் இவான் என்ற பெண்மணி எடுத்துரைத்தார். அவர் திரையில் கணினி வழி காட்டிய ஏட்டுப்பிரதிகள் செல்லரித்துப் போயிருந்தன. உடைந்து செல்லோடேப் இடப்பட்டு படி எடுக்கப் பட்டிருந்தன. இது போன்ற பல இடர்பாடுகள். இவற்றை அழியாமல் காத்த பெருமையை புதுவை நிறுவனத்திற்கு உரியது. அதன் இயக்குநர் ஒரு கணினியையும் அன்பளிப்பாக நூலகத்திற்கு அளித்தார். வாழிய தமிழ்.

மேலும் புதுவை பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய நாட்டு ஆகம ஏட்டுப்பிரதிகள் யுனெஸ்கோ நிறுவனத்தால் மிகப் பழமையான ஏட்டுச்சுவடிப் பதிவுகள் எனப் பாராட்டப் பட்டுள்ளன.

உ.வே.சா பல தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். தமிழ்த்தாத்தா எனப் புகழப்படுபவர். இவரின் இலக்கியத்தேடல் அனுபவங்கள் பல இவரது உரைநடை நூல்களில் வெளியிடப்பெற்றுள்ளன.
இவரது உரைநடைக்கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் கும்பகோணம் கல்லூரியும், சென்னை பிரஸிடென்சி கல்லூரியும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

வெளியீட்டுவிழாவில் உ.வே. சா உரைநடை நூல் தொகுப்புகள் (நான்கு தொகுதிகள்) ரூபாய் 350க்குக் கிடைத்தது. அதன் விலை 475நானும் அங்கு இங்கு கடன் வாங்கி வாங்கிவிட்டேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.

புதன், மார்ச் 08, 2006

பெண்கவி 2

பெண்ணே!
நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்

சந்திரவதனா - 8.3.02 --

நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி.
உனது என்ற சொல்லாடலில் ஓரளவிற்கு மறைந்து கிடக்கிறது பெண் எழுத்து.

இருந்தாலும் எழுதிய பெண் கவிஞர் உனது எனக் குறிப்பிடும்போது விலக்கப்படுகிறது நமது........................
பெண்மையின் பொதுமை விலக்கப்படும் உனதை நீக்கி நமதாய் கவிதை வாசித்தால்.......................

நமது இருப்பு
நமது விருப்போடு
நமதாய் இருக்கட்டும்

என்று இருப்பின் பெருமையாய் இருககுமோ

பெண்கவி 1

மகளிர் தினத்திற்காக சில மகளிர் கவிதைகளை இங்கு உங்களுக்காகத் தர உள்ளேன். அவற்றில் ஒன்று. அவற்றைக் காணுங்கள், படியுங்கள், அதன் சிறப்பை உணருங்கள், முதல்கவிதை பழைய இலக்கியமான குறுந்தொகையில் இருந்து அள்ளுர் நன்முல்லையார் என்பவர் எழுதிய ஒரு பாடல், பாடலுக்குச் செல்லும் முன் அதன் பொருளை நீங்கள் அறியுங்கள்,,,,,
தலைவி ஒருத்தியின் பாடல் இது. தலைவியோடு தலைவன் சிறிது காலம் குடும்பம் நடத்தி வந்தான். அதன்பின் ஏதோ ஒரு காரணமாகத் தலைவன் வேறு ஒரு பெண்ணை நாடிச் சென்றுவிட்டான். நாடிச் சென்ற அவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகிறான். ஆனால் தலைவி அவனை வரவேற்காமல் முகம் கோணுகிறாள். இதைப்பார்த்த பக்கத்துவீட்டுத்தோழி நீ இவ்வாறு செய்யக்கூடாது. கணவனிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறாள். ஆனால் தலைவி என்னைவிட்டு அவர் சென்றுவிட்டார். சென்றுவிட்ட காலங்களில் என்அழகை ருசித்துப் பார்க்க அவர் இல்லை. என் நலம் அவர் இல்லாததால் ஊர் முழுவதும் சிரிப்பாய் சிரித்துவிட்டது. இருந்தாலும் அழகு போய் குடும்ப நலம் போய் என் உயிர் போகின்ற சூழலில் அது எவ்வாறு போகின்றது என்பதைக் காணுவதற்காக அவர் வந்துள்ளாரா? அவரைப் போகச் சொல் வேண்டாம் அவர் இங்க வரவேண்டாம் இந்த குடும்பத்தை வளர்க்க அவர் வரவேண்டாம்
அவர் நமக்கு அன்னையும் தந்தையும் போன்றவர். அவரிடம் கணவருக்கான தகுதி இல்லை. காதல் இல்லை. ஒரு குழந்தைக்கு அம்மாவிடம் இருக்கும் அப்பாவிடம் இருக்கும் பிள்ளை அன்பு இருக்கிறதே தவிர மனைவி மீது கணவன் வைத்திருக்கும் காதல் அன்பு காமவின்பம் இல்லை. அவரிடம் சண்டை போட்டும் என்ன,,,,, அந்த சண்டையை நீ தீர்த்து வைத்தும் என்ன,,,,,,,,,,, வரச்சொல் அவர் அப்பாவாக என்பிள்ளைகளுக்கு இருக்கட்டும். இந்தக் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நான் அம்மாவாக மட்டும் இருந்து இந்த வாழ்க்கை நிறைவு பெறட்டும்.
இந்தக்கவிதையில் மற்றொரு பெண்ணைத் தொட்டவன் அனுபவித்தவன் தன்னை அவளோடு ஒப்பு வைத்தோ அவளை என்னோடு ஒப்பு வைத்தோ அவன் அனுபவித்திருக்கக் கூடும். அந்த அனுபவிப்பில் மனதில் ஒருத்தியும் உடலளவில் ஒருத்தியும் அவளோடு செயல் பரிந்திருப்பார்கள் இதனால் சிந்தையால் ஒரு மாதையும் உடலால் ஒரு மாதையும் தொடும் சூழலை உண்டாக்கிய தலைவன் தவறு செய்தவனாகிறான். இவன் தவறை மெல்லக் காட்டும் பாட்டு நேயம் பெண்களுடையது.


இதோ இப்போது உங்களுக்குப் பாடல்

நன்னலம் தொலைய நலம் மிகச் சாஅய்

இன்னுயிர்க் கழியினும் உரையல் அவர்நமக்கு

அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

புலவியது எவனோ அன்பிலங்கடையே

மகளிர்தின வலைப்பூ வாழ்த்துக்களும் அதன் எதிர்வினைகளும்

பெண்கள்தினம் குறித்து விழிப்புணர்ச்சி வலைப்பூக்களிலும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.
என் நேற்றைய பதிவிற்கு சில பதில்கள் வந்துள்ளன.

பெண்கள் தினத்திற்கான வாழ்த்தாக இட்லி வடை வலைப்பூக்காரர் ஒரு கவிதை தந்துள்ளார்.
ஐயா,
பெண்கள் தினத்தில் வாழ்த்துச் சொல்ல ஒரு நல்ல கவிதை கிடைக்கவில்லையா? பெண் இரண்டு எழுத்து மூன்றெழுத்து நான்கெழுத்து எழுத்தெண்ணிப்பாடும் ஆண்கவிதைதான் கிடைத்ததா? எதை ஏத்துவது எதை ஏத்தி அபபுறம் எதை ஏத்துவது? வாலியின் கவிதை அவ்வளவு நன்றாக இல்லையே
நல்ல பெண்கவிதை ஒன்றைத் தாருங்கள்

செவ்வாய், மார்ச் 07, 2006

March 8 - is the simbal for female growth?

மார்ச் 8
இது பெண்களின் தினம்
இந்தத் தினத்தில் எப்பொழுதும் கேட்கப் படுகிற ஒரு கேள்வி. பெண்களுக்கு என ஒரே ஒரு தினம் மட்டும் தானா ? மற்ற தினங்கள் எல்லாம் ஆண்களுக்கானதுதானே! என்பதுதான்.

இது பெண்கள் கேட்கிற கேள்வி! ஆனால் ஆண்கள் இதனைச் சற்று மாற்றி ஒரு கேள்வி கேட்பார்கள். இந்த ஒரு நாளவது பெண்கள் தினம் என்று கொண்டாடப் படுகிறதே! எங்களுக்கு என்று ஒரு தினம்கூட கொண்டாடப் படுவதில்லையே என்பது

எது எப்படி இருந்தாலும் பெண்கள் தினம் கொண்டாடப்படுவதன் விளைவுகள் பல. சில பெண்கள் கல்லூரிகளில் மகளிர் தினக் கருத்தரங்குகள் கொண்டாடப்படுகின்றன. (சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பெண்கவிஞர்கள் பலர் பங்கேற்கும் ஒரு கூட்டம் மார்ச் 8 அன்று நடைபெறுவதாக தினமணி வழியாக அறிந்தேன். போக ஆசை. ஆனால் ஆண்களை உள்ளே விடுவார்களா என்ற அச்சம் தலையெடுப்பதன் வாயிலாகச் செல்ல மனமில்லை.)

எது எப்படியானாலும் ஒரு ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் பெண்கள் பல அடிதூரம் வளர்ந்திருக்கிறார்கள். கல்வி அளவில் அவர்கள் எட்டியுள்ள தூரம் அதிகம் எனத் தௌ¤வாகத் தெரிகிறது. வேலைவாய்ப்பில் அதே வெற்றி தொடர்கிறது. வாகனங்கள் ஓட்டுவது, வெகுஐன ஊடகங்களில் பெண் அறிவிப்பாளர்கள் பெண் பத்திரிக்கையாளர்கள் இவர்கள் தனியாகக் கண்டறியப்படுகின்றனர். மகளிர் இதழ்கள் மகளிர் நிகழ்ச்சிகள் மகளிர்மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இவை வளர்ந்து வருகின்றன.
ஓரளவிற்குப் பெண்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆனால் சமூகக் கட்டுப்பாடுகள், சமூகமதிப்புகள் இவற்றில் அவர்கள் நிலை இன்னமும் விடுதலை பெறவில்லை என்பது என் கருத்து, இதில் மாறுதல் இருந்தால் வேறுபாடு இருந்தால் தெரிவுயுங்கள்,

ஆனால் மகளிர் நிகழ்ச்சிகள் என்று புது அவதாரம் எடுத்திருக்கும் மகளிர்க்கான நிகழ்ச்சிகளின் வாசகர்கள் யார். இதன் இயக்குநர் யார் இதன் காட்சித் தொகுப்பாளர்யார் இவர்கள் எல்லாம் பெண்களா? பெண்களின் நிகழ்ச்சிகள் என்று நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஏன் ஆண்களும் பார்க்க ஏற்ற வகையில் ஒளிபரப்பப் படுகின்றன. இவை நீளும் கேள்விகள்
சரி மகளிர்தினம் கொண்டாடுவோம். என்மனைவிக்கு வாழ்த்து சொல்ல ஒரு நாள் கிடைத்தது. வாசிக்க ஒரு பெண் படைப்பைத் தேடுகிறேன். இவ்வளவும் மகளிர் தினத்தின் விளைவுகள்,,,,,

பெண் வளர்ச்சிக்கான குறியீடா மகளிர்தினம்

புதன், மார்ச் 01, 2006

Ecs அதாவது எழவெடுக்கும் சிக்கலான சிஸ்டம்


இது ஒரு நல்ல முறை என்று நான் தேர்ந்தேன். சென்னையில் குடியேற ஒரு நான்கடுக்கு வீடு. இதனை வாங்க படாத பாடு பட்டு கடன் வாங்கினேன். இந்தக் கடனை மாதந்தோறும் செலுத்த என் சேமிப்புவங்கிக் கணக்கு உள்ள வங்கியில் எழவெடுக்கும் சிக்கலான சிஸ்டத்தில் சேர்ந்தேன். பத்து மாதங்கள் எல்லாம் ஒழுங்காய்த்தான் இருந்தது. நடந்தது. கடன் வாங்கிய நிறுவனத்திற்கு மாதம் 10ம் தேதியானதும் பணம் போய்ச் சேர்ந்தது. ஆனால் இந்த வரி மாதம் இருக்கிறதே அதாவது பிப்ரவரி இன்கம்டாக்ஸ் வரி மாதம் இந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் தொலைபேசி அபாய மணி அடித்தது.

கடன் வாங்கிய நிறுவத்தில் இருந்து ஒரு பெண் குரல். சார் நீங்க இந்த மாதம் பணம் கட்டடலையா. என்று கேட்டது அந்தப் பெண்குரல். இல்லையே கட்டிவிட்டேனே. நேற்று கூட ஏடிஎம் சிறு அறிக்கையில் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாகக் காட்டப்பட்டதே என்று அதிர்ந்தேன். அந்தப் பெண் அப்படியா உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்துவிட்டு பணம் எடுக்கப்பட்டு இருந்தால் அதனை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மெயின் ஆபிஸ் சென்று பாருங்கள் என்றார். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதைத்தது.
நானும் திங்கட்கிழமை காலையில் அலுவலகத்தில் பர்மிசன் வாங்கிக் கொண்டு வங்கி சென்றேன், அங்கே பணம் டெபிட் ஆயிருந்தது. அதனை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மேற்படி கடன் தந்த நிறுவனத்திடம் சென்று காட்டினேன், அவர்கள் சார் எங்களுக்குப் பணம் வரவில்லை, இதோ பாருங்கள் என்று கடன் கட்டாதவர் பட்டியலில் என்பெயர் இருப்பதை ஜெராக்ஸ் தந்தார்கள். ஆகா ஜெராக்ஸ் வசதி வந்தாலும் வந்தது. எல்லோரும் சான்று தருகிறார்கள். ஆகா இதுவல்லவோ மகத்தான உலகம்
சரி என்று மீண்டும் வங்கிக்குப் படையெடுத்தேன். அங்க சென்றதும் அவர்கள் ஆமாம் சார் பிப் 10ம் தேதியில் ஒரு தொகை மட்டும் திருப்பி எங்களுக்கே வந்துவிட்டது. அது உங்கள் தொகையாக இருக்கலாம் என்று கூறினார்கள். பிடித்தது ஏழரை நாட்டுச் சனி, அது என் பணமே தான். கூடுதலாக அனுப்பிவிட்டதாக சர்வீஸ் பிரான்ஜ் திருப்பி அனுப்பியிருந்தது. அதனை மீண்டும் ஒரு பையில் கட்டி மேற்படி வங்கி சர்வீஸ் பிரான்ஜ்க்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. சரிதான். இப்போ பணம் எங்கே இது யாருக்குத் தெரியும்

எனக்கு நேரே போன் பேசினார்கள் சண்டை போட்டார்கள் ,,,, ஆனால் பணம் அவ்வளவுதான்யார் மேல் தவறு தெரியாது நான் எழுதித்தந்தேன்.

அதற்குள் கடன் தந்த உயிரைக் காப்பீடு செய்யும் நிறுவனத்தின் சகோதரி நிறுவனம் என் உயிரையும் என் மனைவியின் உயிரையும் சேர்த்து வாங்க போன் மேல் போன் பேசியது. அலுத்துப் போய் கடன் வாங்கி பிப் மாதத் தொகையையும் அதற்கு தண்டமாக ரூ 321 ஐயும் கட்டி என் உயிரையும் மனைவி உயிரையும் காப்பாற்றினேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ECS வழங்கும் வங்கிக்குக் கட்டணமாக ருபாய் 120 தண்டம் கட்டியிருக்கிறேன்.
இன்னும் எனக்குப் பிப்ரவரி மாதத்தவணை என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. யாராவது பையில் பணம் பார்த்தால் என் கையில் தாருங்கள். இந்தத் தொல்லையைத் தந்தது பேர் போன ஒரு வங்கி. அந்த வங்கி மாநில வங்கி. மைசுர் ஹைதராபத் போன்ற மாநில பெயரில் துணை வங்கிகளும் அதற்கு உண்டு
நாட்கள் நகர்ந்தபின் கன்சுயுமர் கோர்ட் செல்ல வேண்டும். கன்சுயுமர் கோர்ட்டில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் இமெயில் செய்யுங்கள்
ஆனாலும் இன்னும் பணம் அவ்வளவுதான்